சாலைகள்—நாகரிகத்தின் இரத்த நாளங்கள்
தொன்றுதொட்டே, மக்கள் ஒருவரோடொருவர் தொடர்பு கொள்ள, ஒத்தையடிப் பாதைகளையும் மண்ரோடுகளையும் நெடுஞ்சாலைகளையும் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். பிரயாணம் பண்ணவேண்டும், வியாபாரம் செய்யவேண்டும், போரிட்டு சாம்ராஜ்யங்களை நிறுவவேண்டும் என்று மனிதனுக்கு உள்ளூர அநேக ஆசைகள் இருந்தனவென்பதை இச்சாலைகள் பறை சாற்றுகின்றன. என்றபோதிலும், இதே சாலைகள் மனிதனின் மறுபக்கத்தையும் காண உதவுகின்றன. அவனுடைய தீய எண்ணங்களையும் கேடான சிந்தைகளையும் அவை மறைமுகமாக சுட்டிக்காட்டுகின்றன.
மனித காலடிகளும் குதிரைக் குளம்புகளும் ஒத்தையடிப் பாதைகளை ஏற்படுத்தின. ஆனால் இந்த நவீன யுகத்திலோ, அதிவிரைவு பலதட (multi-lane) சாலைகள் உள்ளன. ஒத்தையடிப் பாதை காலம் முதல் நவீன யுகம் வரையான சாலைகளின் சரித்திரத்தை தெரிந்துகொள்வது கடந்த காலத்திற்கு செல்லும் வெறும் மன சுற்றுலா அல்ல. அது மனிதனுடைய மனோநிலையையும் குணங்களையும் படம் பிடித்துக்காட்டுவதாகவும் இருக்கிறது.
பண்டைய கால சாலைகள்
“வெகு கடினமாக உழைத்து, முதன்முதலாக சாலைகள் அமைத்தவர்கள் மெசபத்தோமியர்களாகத்தான் இருக்கவேண்டும்” என்று த நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா கூறுகிறது. டைகிரீஸ், யூப்ரடீஸ் நதிப்பகுதிகளில் இவர்கள் வாழ்ந்து வந்தனர். பவனி வருவதற்காக “சுட்ட செங்கல், கரும் கற்பாளங்களில் நிலக்கீலும் சுண்ணாம்பும் சேர்ந்த கலவை பூசி நடைபாதைகளை அமைத்தனரென” அப்புத்தகம் கூறுகிறது. இந்த விளக்கம் பைபிளில் சொல்லியிருப்பதை நினைப்பூட்டுகிறது. பூர்வ கட்டுமானப் பொருட்களை குறித்து பைபிள் இவ்வாறு விவரிக்கிறது: “அவர்கள் செங்கல்லைக் கல்லாகவும் கீலைக் காரையாகவும் பயன்படுத்தினர்.”—ஆதியாகமம் 11:3, பொது மொழிபெயர்ப்பு.
பூர்வ இஸ்ரவேலர்கள் தங்கள் மத கடமைகளை நிறைவேற்ற சாலைகள் மிக அத்தியாவசியமானவையாய் இருந்தன. இயேசு பிறப்பதற்கு முன் சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முன்பு, இஸ்ரவேலர்கள் இவ்விதம் கட்டளையிடப்பட்டனர்: ‘வருஷத்தில் மூன்றுதரம் உன் ஆண்மக்கள் எல்லாரும் உன் தேவனாகிய கர்த்தர் [“யெகோவா,” NW] தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலே [மதப் பண்டிகையை கொண்டாட], அவர் சந்நிதிக்கு முன்பாக வந்து காணப்படக்கடவர்கள்.’ (உபாகமம் 16:16) இப்பண்டிகையைக் கொண்டாட அவர்கள் செல்லவேண்டிய இடம் எருசலேம். சந்தோஷமான கோலாகலமான இந்த நிகழ்ச்சிகளை பெரும்பாலும் குடும்பமாக சென்று அனுபவித்தனர். எனவே, நல்ல சாலைகள் அவர்களுக்குத் தேவைப்பட்டன.
இதன் காரணமாக, நாகரிகத்தின் உயிர்நாடியான இந்த இரத்தநாளங்கள் நன்கு அமைக்கப்பட்டிருந்தன. கிறிஸ்து பிறப்பதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் அரசாண்ட சாலொமோனைப் பற்றி யூத சரித்திராசிரியர் ஃப்ளேவியஸ் ஜோஸிஃபஸ் சொன்னார்: “சாலைகளை பராமரிக்கும் பணியை அவர் புறக்கணிக்கவில்லை. எருசலேம் வரைக்கும் கருங்கற்களாலான நெடுஞ்சாலைகளை அமைத்தார்.”
இஸ்ரவேலில் இருந்த ஆறு அடைக்கல பட்டணங்கள், கைப்பிசகாய் கொலை செய்தவனுக்கு அடைக்கலம் தந்தன. இப்பட்டணங்களுக்கு செல்லும் பாதைகள் செப்பனிடப்பட்டு நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வந்தன. ஒவ்வொரு சாலை சந்திப்புகளிலும், அருகிலுள்ள அடைக்கலப் பட்டணத்திற்கு செல்ல கைகாட்டி மரங்கள் வைக்கப்பட்டிருந்தனவென யூத பாரம்பரியம் சுட்டிக்காட்டுகிறது.—எண்ணாகமம் 35:6, 11-34.
வணிக வளர்ச்சியில் சாலைகள் பெரும்பங்கு வகித்தன. பண்டைய காலங்களில் அனைவரும் விரும்பிய பொருட்களில் ஒன்று பட்டு. பட்டுப்பூச்சியின் நூலில் இருந்து பட்டு தயாரிக்கும் முறையை சீனர்கள்மட்டுமே அறிந்திருந்தனர். அதாவது, இஸ்ரவேலர்கள் ஒரு தேசமாக உருவாகுவதற்கு வெகு காலத்திற்கு முன்னரே அவர்கள் அதை அறிந்திருந்தனர் என சொல்லப்படுகிறது; இயேசுவின் பிறப்பிற்கு பிறகும்கூட, பட்டு தயாரிக்கும் முறையை இரகசியமாகவே வைத்திருந்தனர். ஆனால், இயேசு பிறப்பதற்கு முன்னரே, மேற்கத்திய நாடுகளில் பட்டு மிகவும் பிரபலமாக இருந்தது. பட்டு அந்தளவுக்கு பிரசித்தமடைந்து இருந்ததால், அரசாணைகள் மூலம் “பட்டாடைகளை ஆண்கள் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டது. அது ஆண்மைக்கு அழகில்லை என்று கருதப்பட்டதாலேயே” என ஜெஃப்ரீ ஹிண்ட்லீயின் சாலைகளின் சரித்திரம் (ஆங்கிலம்) புத்தகம் கூறுகிறது.
சீனாவிலிருந்து மற்ற இடங்களுக்கு பட்டு பயணப்பட்ட பாதையே பட்டு சாலை என அறியப்பட்டிருந்தது. 1,400 வருடங்களாக புழக்கத்தில் இருந்த இச்சாலையில்தான் மார்கோ போலோ பொ.ச. 13-ம் நூற்றாண்டில் பிரயாணம் செய்தார். இச்சாலை, உலகிலேயே மிக நீளமான சாலையாக 2,000 வருடங்களுக்கும் மேலாக விளங்கியது. இதனுடைய நீளம் சுமார் 12,800 கிலோமீட்டர். பட்டுக்கு பிறப்பிடமாகிய சீனாவிலுள்ள ஷாங்காயையும் ஸ்பெய்னில் உள்ள கேட்ஸையும் (தற்போது காடிஸ்) இணைக்கும் பாலமாய் இச்சாலை அமைந்தது.
இராணுவ நடவடிக்கைக்கு
சாம்ராஜ்யங்களை நிறுவவேண்டும் என்கிற பேராசையே சாலைகள் அமைப்பதற்கு முன்னோடியாய் விளங்கியது. உதாரணமாக, ரோமப் பேரரசர்களின் சாம்ராஜ்யத்தில், ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு முழுவதையும் சென்றெட்ட சாலைகள் இருந்தன. அவை, கிட்டத்தட்ட 80,000 கிலோமீட்டர் நீளமுள்ளவை. ரோம இராணுவ வீரர்கள் போரில்லாத காலங்களில், சாலைகள் அமைத்தல், செப்பனிடுதல் முதலான வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
போர்களின் வெற்றிகளில் சாலைகளுக்கும் பங்கு உண்டு. இது, சமீப காலங்களில் வெகு அழகாக சித்தரித்துக் காட்டப்பட்டுள்ளது. மற்ற மக்களை அடக்கியாளும் ஹிட்லரின் ஆதிக்கவெறிக்கு, சாலைகள் அமைத்தல் தூபம் போட்டன. அவன் 1934-ல் ஆரம்பித்து வைத்த ஜெர்மானிய பலதட சாலைகள் அவனுடைய இலட்சியத்தை நிறைவேற்ற கைகொடுத்தன. இவை ஜெர்மனியில் “உலகின் முதல் பலதட வாகன சாலைகள்” பிறக்க வழிவகுத்தன என்று சரித்திராசிரியர் ஹிண்ட்லீ குறிப்பிடுகிறார்.
சாலை அமைக்கும் கலை
ரோம சர்வேயர்கள், சாலைகள் அமைக்க க்ரோமா என்றழைக்கப்படும் கருவியை உபயோகித்தனர். அம்புபோல் நேராக சாலைகள் போடுவதற்கு இக்கருவி உதவியது. மைல் கற்களை கொத்தனார்கள் வடிவமைத்தனர். சாலைகள் இந்தளவுக்குத்தான் பளு தாங்கும் என்று சரக்குகளுக்கு கட்டுப்பாட்டினை பொறியியலாளர்கள் அமைத்தனர். அஸ்திவாரம் போட்டு சாலைகளை அமைத்தனர். அதன் மேல்தளம் நீடித்து உழைக்கும்படி அமைத்தனர். ஆனால், அவை நீண்ட நாள் உழைப்பதின் இரகசியம் வடிகால்களின் அமைப்பையே சார்ந்திருந்தது. சாலைகளின் மத்திய பாகம் சற்றே உயர்ந்து ஓர் அரை வட்டம் போல் அமைத்ததும், அருகில் இருந்த நில மட்டத்தைவிட சற்று உயரமாக சாலைகளை அமைத்ததும் இதற்கு உதவின. இதிலிருந்தே “நெடுஞ்சாலை” என்ற பதம் வந்தது. சாலை மேப்புகள் கடைகளில் விற்கப்பட்டன.
“சாலை அமைப்பதில் ரோமர்களே தலைசிறந்து விளங்கினர். இதனை ஆஹா, ஒஹோவென பாராட்டி விவரிப்பதை தவிர ஒரு எழுத்தாளனுக்கு வேறு வழியில்லை. இத்தாலியின் சாலைகள் நீடித்த பயனளித்தன. மனிதனின் கடந்தகால சரித்திரத்தின் நினைவு சின்னமாக இன்று வரை தொடர்ந்து உபயோகத்தில் இருக்கிறது என்று குறிப்பிட்டுச் சொல்ல இதைப் போல் வேறே ஏதும் இருக்கிறதா என்பதே சந்தேகம்தான்” என்று சரித்திராசிரியர் ஒருவர் கூறுகிறார்.
அப்பியன் பாதை என்பது ரோமில் இருந்து தெற்காக செல்லும் சாலை. இதுவே, “மேற்கத்திய மனிதனின் சரித்திரத்தில் முதன்முதலாக தளம் பாவிய நடைபாதை” என்று சாலைகளின் சரித்திரம் புத்தகம் குறிப்பிடுகிறது. பிரபலமான இந்நெடுஞ்சாலையின் அகலம் சராசரியாக 6 மீட்டர். இச்சாலை எரிமலைப் பாறைப் பாளங்களால் அமைக்கப்பட்டது. சிறைக்கைதியாக ரோமுக்கு கொண்டு செல்லப்படும்போது, அப்போஸ்தலனாகிய பவுல் இந்த சாலையில்தான் பிரயாணம் செய்தார். இச்சாலையின் ஒருசில பகுதிகள் இன்றும் உபயோகிக்கப்படுகின்றன.—அப்போஸ்தலர் 28:15, 16.
தென் அமெரிக்க இந்தியர்களும் சாலைகள் அமைப்பதில் சளைத்தவர்கள் அல்ல. வியத்தகு திறமைகள் அவர்களுக்கு இருந்ததை அநேகர் ஒத்துக்கொள்கின்றனர். கி.பி. 1200 முதல் 1500 வரையான காலப்பகுதியில், இன்கா இனத்தவர் 16,000 கிலோமீட்டர் நீளத்திற்கு சாலைகளை அமைத்தனர். இச்சாலைகள், 1,00,00,000 ஜனத்தொகை கொண்ட அத்தேசத்தை இணைத்தன. இச்சாலைகள், கற்பனைகூட செய்து பார்க்க முடியாத கரடுமுரடான தரிசு நிலங்களின் வழியாகவும், பாலைவனங்கள் மற்றும் மழைக்காடுகளின் குறுக்கேயும், ஏன் உயர்ந்து நிற்கும் பெருவின் ஆண்டிஸ் மலைத்தொடர்களையும்கூட கடந்து செல்லுகின்றன!
இப்படிப்பட்ட ஒரு சாலையைப் பற்றிய வர்ணனையை சற்று கவனியுங்களேன். “ஆண்டிஸ் மலைப்பாதை மிக நேர்த்தியான ஒன்று. அது 7.5 மீட்டர் அகலமுடையது. உயரமான மலைத்தொடரில் வளைந்து, வளைந்து செல்லுகிறது. ஆபத்தான, செங்குத்தான இறக்கங்களை அல்ல, பாதுகாப்பான இறக்கங்களைக் கொண்டவை. மலையைக் குடைந்து செல்லும் குறுகலான பாதைகளையும் அவற்றைத் தாங்கும் நூற்றுக்கணக்கான அடிகள் நீளமான பலமான பக்கச்சுவர்களையும் கொண்டவை. மலைகளுக்கிடையே உள்ள ஆழமான பள்ளத்தாக்குகளை கடக்க கற்களால் மிக உயரமாகக் கட்டப்பட்ட பிரமாண்டமான பாதைகளையும், அகலமான மலை நீரோடைகளைக் கடக்க கயிறு அல்லது நார் பயன்படுத்தப்பட்ட தொங்கு பாலங்களையும் கொண்டவை. அநேக பாகங்களில் மேல்தளம் கற்களால் ஆனவை; ஆஸ்பால்ட் என்ற ஒருவிதமான தார் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டதென” த நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா அறிவிக்கிறது.
குதிரைகளைப் பற்றி இன்கா இனத்தவர் அறியாதிருந்தனர். ஆனால், அவர்களுடைய சாலைகள் “அரச தூதுவர்கள் ஓடுவதற்கான அசல் ஓட்டத்தடம்” என்றழைக்கப்பட்டது. “வழிநெடுக, சுமார் ஒவ்வொரு 2 கிலோமீட்டர் இடைவெளியிலும் பல ஓய்விடங்கள் இருந்தன. அவை ஒவ்வொன்றிலும் ஒரு சிறிய காவற்படையும் மாறி மாறி ஓடுவதற்கு தயார் நிலையில் இருக்கும் திறமையான மாற்று ஓட்டக்காரர்களும் இருந்தனர். இப்படிப்பட்டவர்கள் மின்னல் வேகத்தில் ஓடி கடக்கக்கூடிய அளவுக்கு மிகக் குறுகிய தூரமே இந்த ஓய்விடங்களுக்கு இடையே இருந்தது. இரவு, பகல் பாராமல் 24 மணிநேரமும் இவை இயங்கின. குஸ்கோவின் தலைநகரத்தில் இருந்து சுமார் 2,000 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கீடோ நகரத்தை செய்திகள் ஐந்தே நாட்களில் எட்டின. கடல் மட்டத்திற்கு மேல் 4,000 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் அமைக்கப்பட்ட சாலைகளில், சராசரியாக ஒருமணி நேரத்திற்கு 15 கிலோமீட்டர் வேகத்தில் இவர்கள் ஓடிக் கடந்தனர். ரோம அரசாங்க அஞ்சல் துறை கனவிலும் எட்டமுடியாத வேகம்!”
சோகங்களின் உறைவிடம்
இரத்த நாளங்கள் மனிதனின் உயிர்நாடி. இவற்றில் அடைப்புகள் ஏற்பட்டால், அதோகதிதான். அதே போன்று, சாலைகளே மனிதனின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் உயிர்நாடி. இவற்றிலும் அடைப்புகள் ஏற்பட்டால் அவை மனித வாழ்க்கையையே நாசமாக்கிவிடும். மழைக்காடுகள், பாலைவனங்கள், அடர்ந்த புதர்க்காடுகள், இயற்கைப் பூங்காக்கள் வழியாக போடப்படும் சாலைகள் அநேக விலங்கினங்களின் உயிரைப் பறித்து விடுகின்றன. காடுகளே தங்கள் வீடுகளென வாழ்பவர்களையும் அவர்களது சுற்றுப்புறத்தையும்கூட இவை வெகுவாக பாதிக்கின்றன. “வளர்ச்சி எனும் போர்வையில் ஆரம்பிக்கப்பட்ட ட்ரான்ஸ்-அமேசானியன் நெடுஞ்சாலை, பெரும்பாலான மழைக்காடுகளை கபளீகரம் செய்துவிட்டது. காடுகளையே நம்பி வாழ்ந்த அநேக மக்களின் வயிற்றிலடித்து அவர்களை முற்றிலும் நாசமாக்கியது” என சாலைகளை நாம் எப்படி அமைக்கிறோம் (ஆங்கிலம்) என்ற புத்தகம் சொல்லுகிறது.
நகர வாழ்க்கையையும் சாலைகள் அலங்கோலமாக்கி இருக்கின்றன. ஒவ்வொரு வருடமும் ஏராளமான வாகனங்கள் இச்சாலைகளில் நெரிசலை உண்டாக்குகின்றன. இந்த நெரிசல், சாலைகளில்—இரத்த நாளங்களில்—அடைப்புகளை ஏற்படுத்துகின்றன. ஓரளவு நிதிவசதி இருந்தால், ஓர் அதிவிரைவு பலதட சாலை அமைக்கப்படுகிறது. ஆனால், காலப்போக்கில் இவ்விதமான சாலைகள் வாகனங்களின் போக்குவரத்தை அதிகரித்து, தூய்மைக்கேட்டை ஏற்படுத்துகின்றன. இது, வியாதிகளை பெருக்கி லட்சக்கணக்கானோரை பலி வாங்குகின்றன. மேலும், உலகம் முழுவதும் ஆண்டுக்கு சுமார் 5,00,000 பேர் சாலை விபத்துகளில் சாவதாக கணக்கிடப்பட்டுள்ளது. அதோடுமட்டுமா, இன்னும் ஒரு கோடியே ஐம்பது லட்சம் பேர் காயமடைகின்றனர்; பிழைத்தெழுவார்களா என்று சந்தேகப்படும் அளவுக்கு இவர்களில் சிலர் படுகாயமடைகின்றனர். சாலை விபத்துகளில் உயிர் இழந்தோரின் எண்ணிக்கை, முதல் உலக யுத்தத்தில் உயிர்ச்சேதம் அடைந்தோரின் எண்ணிக்கையையும் மிஞ்சி விட்டது. முதல் உலக யுத்தம் தொண்ணூறு லட்சம் வீரர்களின் உயிரை கொள்ளைகொண்டது. போர் நிறுத்தப்பட்டது, உயிர்ச்சேதம் முடிவுக்கு வந்தது. ஆனால், சாலை விபத்துகளில் ஏற்படும் மரணம் தவணை முறையில் வரும் ஒரு தொடர்கதையாகவே இருக்கிறது. ஒரு நாளைக்கு 1,000-க்கும் அதிகமானோர் சாகின்றனர்; பொழுது போய் பொழுது விடிந்தால், மரணம் மரணம் மரணம்தான்!
ஆம், சாலைகள் பல வழிகளில் நம்மைப் பற்றி சூசகமாக தெரிவிக்கும் நினைவுச் சின்னங்களாக இருக்கின்றன. நம்முடைய பலத்தையும் பலவீனங்களையும் நிறுத்துக்காட்டும் தராசாக இவை இருக்கின்றன. நம் கையில் நம்பகமாக ஒப்படைக்கப்பட்ட ஜொலிக்கும் இந்த அழகிய கோளத்தை நாம் எந்த கதியில் வைத்திருக்கிறோம் என்பதை வெட்டவெளிச்சமாக்கும் அளவுகோலாகவும் இருக்கின்றன.
[பக்கம் 21-ன் படம்]
தற்போதும் உபயோகத்தில் இருக்கும், பவுல் பிரயாணம் செய்த அப்பியன் பாதை
[பக்கம் 22-ன் படம்]
உலகம் முழுவதும் ஆண்டுக்கு சுமார் 5,00,000 பேர் சாலை விபத்துகளில் சாகின்றனர்