பாவம் இல்லாமல் போகையில்
“பிறப்பின்போது நாம் பாவமுள்ளவர்களாக இருக்கிறோமா?” அந்தக் கேள்வி, அமெரிக்காவில் பட்டதாரி படிப்பு படித்துக்கொண்டிருந்த ஒரு மாணவருக்கு, பைபிளைப் படிக்க ஆரம்பித்தவுடன் குழப்பத்தை ஏற்படுத்தியது. அவர் இந்து மத பின்னணியிலிருந்து வந்த காரணத்தால், சுதந்தரிக்கப்பட்ட பாவம் பற்றிய கருத்து அவர் அறிந்திராத ஒன்றாக இருந்தது. ஆனால் பாவம் நிச்சயமாகவே சுதந்தரிக்கப்பட்டதாக இருக்கிறதென்றால், அது இருப்பதை மறுதலிப்பதோ அசட்டை செய்வதோ பயனற்றது என்பதாக அவர் யோசித்தார். இந்தக் கேள்விக்கு ஒருவர் எவ்விதமாக பதிலைக் கண்டுபிடிக்க முடியும்?
பாவம் சுதந்தரிக்கப்பட்டதென்றால், அதற்கு கட்டாயமாக ஒரு ஆரம்பம் இருக்கவேண்டும். முதல் மனிதன் தீய குணங்களைத் தன் பிள்ளைகளுக்கு கடத்தும்விதமாக பொல்லாதவனாக படைக்கப்பட்டானா? அல்லது அந்தக் குறைபாடு பின்னால் ஏற்பட்டதா? சரியாக பாவம் எப்போது ஆரம்பமானது? மறுபட்சத்தில், பாவம் என்பது புறம்பே இருக்கும், தனிவேறான தீய வஸ்துவாக அல்லது கொள்கையாக மாத்திரமே இருக்கிறதென்றால், அதிலிருந்து எப்போதாவது விடுதலையடைவோம் என்று நாம் எதிர்பார்க்க முடியுமா?
இந்து மத நம்பிக்கையின்படி, துன்பமும் தீமையும் படைப்போடு இணைந்தே வருபவை. “துன்பம் [அல்லது தீமை] தீராத வாயு பிடிப்பைப் போல, ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு இடம் பெயர்ந்து செல்கிறதே தவிர அதை முழுமையாக ஒழித்துவிட முடியாது” என்பதாக ஒரு இந்துமத கல்விமான் குறிப்பிடுகிறார். தீமை நிச்சயமாகவே பதிவுசெய்யப்பட்ட சரித்திரம் முழுவதிலுமாக மனிதவர்க்க உலகின் பாகமாக இருந்துவந்திருக்கிறது. மனிதனின் வரலாறு பதிவுசெய்யப்பட ஆரம்பிப்பதற்கு முன்பாக இது இருந்ததென்றால் அதன் ஆரம்பத்தைப் பற்றிய நம்பத்தகுந்த பதில்கள் மனிதனைவிட உயர்ந்த ஒரு ஊற்றுமூலத்திலிருந்தே கட்டாயமாக வரவேண்டும். பதில்கள் கடவுளிடமிருந்து வரவேண்டும்.—சங்கீதம் 36:9.
மனிதன்—பாவம் இல்லாமல் படைக்கப்பட்டான்
வேதங்களில் மனிதரின் படைப்பைப் பற்றி கொடுக்கப்பட்டுள்ள விளக்கங்கள் அடையாள அர்த்தமுள்ளவை என்று இந்து மத தத்துவஞானி நிக்கிலானந்தா ஒப்புக்கொள்கிறார். அதேவிதமாகவே, பெரும்பாலான கிழக்கத்திய மதங்கள் படைப்பைக் குறித்து பொய்யான ஆதாரமற்ற விளக்கங்களை மாத்திரமே அளிக்கின்றன. இருந்தபோதிலும், முதல் மனிதன் படைக்கப்பட்டதைப் பற்றிய பைபிள் பதிவை நம்புவதற்கு நியாயமான மற்றும் அறிவியல் பூர்வமான காரணங்கள் உள்ளன.a அதன் முதல் அதிகாரமே பின்வருமாறு சொல்கிறது: “தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.”—ஆதியாகமம் 1:27.
‘தேவசாயலில்’ படைக்கப்படுவது எதை அர்த்தப்படுத்துகிறது? இதைத்தான்: நீதி, ஞானம் மற்றும் அன்பு போன்ற தெய்வீக குணங்களைக் கொண்டவனாய் கடவுளின் சாயலில் மனிதன் உண்டாக்கப்பட்டான்; இது அவனை விலங்குகளிலிருந்து வேறுபடுத்தியது. (கொலோசெயர் 3:9, 10-ஐ ஒப்பிடுக.) இந்தப் பண்புகள் நல்லதை அல்லது கெட்டதை தெரிவு செய்யும் திறமையை அவனுக்கு அளித்து, தெரிவு செய்யும் சுயாதீனமுள்ளவனாய் அவனை ஆக்கிற்று. முதல் மனிதனில் பாவம் எதுவும் இருக்கவில்லை, அவன் படைக்கப்பட்ட போது எந்தத் தீமையும் அல்லது துன்பமும் அவனுடைய வாழ்க்கையில் இருக்கவில்லை.
மனிதனாகிய ஆதாமுக்கு யெகோவா தேவன் பின்வரும் இந்தக் கட்டளையைக் கொடுத்தார்: “நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆனாலும் நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய்.” (ஆதியாகமம் 2:16, 17) கீழ்ப்படிய தெரிவுசெய்வதன் மூலம், ஆதாமும் அவன் மனைவி ஏவாளும் தங்கள் படைப்பாளருக்கு துதியையும் கனத்தையும் கொண்டுவந்து, பாவமின்றி இருக்கலாம். மறுபட்சத்தில், கீழ்ப்படியாமையின் ஒரு செயல் கடவுளுடைய பரிபூரணமான தராதரங்களைப் பூர்த்திசெய்வதில் அவர்களுக்குத் தோல்வியைக் குறிப்பதாய் இருந்து அவர்களை அபூரணராக—பாவமுள்ளோராக—ஆக்கிவிடும்.
ஆதாமும் ஏவாளும் தெய்வீக தன்மையுடன் படைக்கப்படவில்லை. இருந்தபோதிலும், ஓரளவு தெய்வீக குணங்களைப் பெற்றவர்களாய் தார்மீக தீர்மானங்களைச் செய்ய திறமையுடையவர்களாய் அவர்கள் இருந்தனர். கடவுளுடைய படைப்பாக இருந்த காரணத்தால் அவர்கள் பாவமில்லாதவர்களாய் அல்லது பரிபூரணராய் இருந்தனர். (ஆதியாகமம் 1:31; உபாகமம் 32:4) ஆதாமும் ஏவாளும் படைக்கப்பட்டதால், கடவுளுக்கும் சர்வலோகத்துக்கும் இடையே அப்போதுவரை பல யுகங்களாக இருந்துவந்த ஒத்திசைவு குலைந்துவிடவில்லை. அப்படியென்றால், பாவம் எவ்வாறு ஆரம்பமானது?
பாவத்தின் ஆரம்பம்
பாவம் முதலில் ஆவி மண்டலத்தில் ஆரம்பமானது. பூமியையும் மனிதனையும் படைப்பதற்கு முன்பாக, புத்திக்கூர்மையுள்ள ஆவி சிருஷ்டிகளாகிய தேவதூதர்களைக் கடவுள் படைத்தார். (யோபு 1:6; 2:1; 38:4-7; கொலோசெயர் 1:15-17) இந்தத் தூதர்களில் ஒரு தூதன் தன்னுடைய சொந்த அழகையும் அறிவையும் பற்றி மிக உயர்வாக எண்ணிக்கொண்டான். (எசேக்கியேல் 28:13-15-ஐ ஒப்பிடுக.) கடவுள் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் கொடுத்த கட்டளையிலிருந்து, வெகு சீக்கிரத்தில் முழு பூமியும் நீதியுள்ள மனிதர்களால் நிரப்பப்படும், அவர்கள் அனைவரும் கடவுளை வணங்கிக்கொண்டிருப்பார்கள் என்பதை இந்தத் தூதனால் காணமுடிந்தது. (ஆதியாகமம் 1:27, 28) இந்த ஆவி சிருஷ்டி, வணக்கத்தை தான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பினான். (மத்தேயு 4:9, 10) இந்த ஆசையைப் பற்றியே தொடர்ந்து எண்ணிக்கொண்டிருந்தபோது, தவறான பாதைக்கு அது அவனை வழிநடத்தியது.—யாக்கோபு 1:14, 15.
சர்ப்பத்தின் மூலமாக ஏவாளிடம் பேசுகிறவனாய், நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிப்பதை தடைசெய்வதன் மூலம், கடவுள் அவள் பெற்றிருக்க வேண்டிய அறிவை கொடுக்காமல் வைத்திருக்கிறார் என்பதாக கலகக்கார தூதன் சொன்னான். (ஆதியாகமம் 3:1-5) அவ்விதமாகச் சொல்வது வெறுக்கத்தக்க ஒரு பொய்யாக, பாவச் செயலாக இருந்தது. இந்தப் பொய்யைச் சொல்வதன் மூலமாக, தேவதூதன் தன்னை ஒரு பாவியாக ஆக்கிக்கொண்டான். அதன் விளைவாக, அவன் பிசாசு, அதாவது பழிதூற்றுபவன் என்றும், சாத்தான், அதாவது கடவுளின் எதிரி என்றும் அழைக்கப்படலானான்.—வெளிப்படுத்துதல் 12:9.
சாத்தானின் சொல்வன்மையுள்ள விவாதம் ஏவாளின்மீது தீங்கான பாதிப்பை ஏற்படுத்தியது. சோதனைக்காரனின் வார்த்தைகளை நம்பி, அவள் வஞ்சிக்கப்பட தன்னை அனுமதித்து விலக்கப்பட்ட விருட்சத்தின் கனியைச் சாப்பிட்டுவிட்டாள். அவளுடைய கணவன் ஆதாம் அந்தக் கனியைப் புசிப்பதில் தன் மனைவியோடு சேர்ந்துகொண்டான், இவ்விதமாக இருவரும் பாவிகளானார்கள். (ஆதியாகமம் 3:6; 1 தீமோத்தேயு 2:14) கடவுளுக்கு கீழ்ப்படியாமல் போவதைத் தெரிவுசெய்வதன் மூலம், நம்முடைய முதல் பெற்றோர் பரிபூரணத்தின் குறியைத் தவறவிட்டு பாவிகளானார்கள்.
ஆதாம் ஏவாளின் பிள்ளைகளைப் பற்றி என்ன? பைபிள் விளக்குகிறது: “ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்தது.” (ரோமர் 5:12) மரபியல் சட்டம் ஏற்கெனவே செயல்பட்டுக்கொண்டிருந்தது. ஆதாம் தன்னிடம் இல்லாததை தன் பிள்ளைகளுக்கு கடத்தமுடியாது. (யோபு 14:4) பரிபூரணத்தை இழந்துவிட்ட காரணத்தால், பிள்ளைகள் பிறக்கவிருக்கையில் முதல் தம்பதி பாவிகளாக இருந்தார்கள். இதன் விளைவாக விதிவிலக்கு எதுவுமில்லாமல், நாமனைவருமே பாவத்தைச் சுதந்தரித்துக்கொண்டிருக்கிறோம். (சங்கீதம் 51:5; ரோமர் 3:23) முறையே, பாவம் தீமையையும் துன்பத்தையுமே அன்றி வேறு எதையும் கொண்டுவரவில்லை. மேலுமாக, அதன் காரணமாகவே நாமனைவரும் முதுமை அடைந்து இறந்துபோகிறோம், ஏனென்றால் “பாவத்தின் சம்பளம் மரணம்.”—ரோமர் 6:23.
மனச்சாட்சி ‘குற்றமுண்டு’ அல்லது ‘குற்றமில்லை’ என்று தீர்க்கிறது
முதல் மானிட ஜோடியின் நடத்தையைப் பாவம் எவ்வாறு பாதித்தது என்பதைப் பற்றிகூட சிந்தித்துப்பாருங்கள். அவர்கள் தங்களை மூடிக்கொண்டு கடவுளிடமிருந்து தங்களை ஒளித்துக்கொள்ள முற்பட்டார்கள். (ஆதியாகமம் 3:7, 8) இவ்விதமாக பாவம், குற்றமுள்ளவர்களாகவும் கவலையாகவும் வெட்கமாகவும் அவர்களை உணரச்செய்தது. மனிதவர்க்கத்துக்கு இந்த உணர்ச்சிகள் இன்று மிகவும் பரிச்சயமானதாகவே இருக்கின்றன.
தேவையிலிருக்கும் எவரோ ஒருவருக்குத் தயவு காண்பிக்கத் தவறியதால் அசெளகரியமான உணர்வுகளை அல்லது சொல்லக்கூடாத வார்த்தைகளைச் சொல்லிவிட்டதால் மன உறுத்தலை அனுபவிக்காதவர் உண்டோ? (யாக்கோபு 4:17) நமக்கு ஏன் இந்தக் கலக்கமான உணர்வுகள் ஏற்படுகின்றன? ‘நியாயப்பிரமாணம் இருதயங்களில் எழுதியிருக்கிறது’ என்பதாக அப்போஸ்தலன் பவுல் விளக்குகிறார். நம்முடைய மனச்சாட்சி கடினமாகிவிட்டிருந்தாலொழிய சட்டத்தை எவ்வகையிலும் மீறுவது அடிமனதில் ஒரு கலக்கத்தையே உண்டுபண்ணுகிறது. மனச்சாட்சியின் குரல் ‘குற்றமுண்டு’ அல்லது ‘குற்றமில்லை’ என்று நம்மைத் தீர்க்கிறது. (ரோமர் 2:15; 1 தீமோத்தேயு 4:2; தீத்து 1:15) நாம் அதை உணர்ந்தாலும் உணராவிட்டாலும், தவறைப்பற்றிய, பாவத்தைப் பற்றிய ஒரு உள்ளுணர்வு நமக்கு இருக்கிறது!
பவுல், பாவமுள்ள தன் மனச்சாய்வுகளை நன்றாகவே அறிந்திருந்தார். “நன்மை செய்ய விரும்புகிற என்னிடத்தில் தீமையுண்டென்கிற ஒரு பிரமாணத்தைக் காண்கிறேன்” என்பதாக அவர் ஒப்புக்கொண்டார். “உள்ளான மனுஷனுக்கேற்றபடி தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்மேல் பிரியமாயிருக்கிறேன். ஆகிலும் என் மனதின் பிரமாணத்துக்கு விரோதமாய்ப் போராடுகிற வேறொரு பிரமாணத்தை என் அவயவங்களில் இருக்கக் காண்கிறேன்; அது என் அவயவங்களில் உண்டாயிருக்கிற பாவப்பிரமாணத்துக்கு என்னைச் சிறையாக்கிக்கொள்ளுகிறது.” ஆகவே, “இந்த மரணசரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்?” என்பதாக பவுல் கேட்டார்.—ரோமர் 7:21-24.
பாவத்திலிருந்து விடுதலை—எவ்வாறு?
“இந்து மத பாரம்பரியத்தில் விடுதலை என்பது திரும்பத்திரும்ப நிகழும் பிறப்பு மற்றும் இறப்பிலிருந்து விடுதலை” என்பதாக கல்விமான் ஒருவர் சொல்லுகிறார். அதேவிதமாகவே, புத்த மதம், நிர்வாணா—வீடு பேற்று நிலையை பரிகாரமாக சுட்டிக்காட்டுகிறது. சுதந்தரிக்கப்பட்ட பாவம் பற்றிய கருத்தை கிரகித்துக்கொள்ளாத காரணத்தால், இந்து மதம் வாழ்விலிருந்து தப்பித்துக்கொள்வதை மாத்திரமே வாக்களிக்கிறது.
மறுபட்சத்தில், விடுதலை பெறுவதற்கான பைபிளின் வழிமூலம், பாவமுள்ள நிலைமை உண்மையில் நீக்கப்படும்படியாகச் செய்கிறது. பாவத்திலிருந்து தான் எவ்விதமாக விடுவிக்கப்பட முடியும் என்பதாக கேட்டுவிட்டு அப்போஸ்தலன் பவுல் தொடர்ந்து இவ்விதமாக பதிலளிக்கிறார்: “நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துமூலமாய் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.” (ரோமர் 7:25) ஆம், விடுதலை கடவுளிடமிருந்து இயேசு கிறிஸ்துவின் மூலமாக வருகிறது.
மத்தேயுவின் சுவிசேஷத்தின்படி, ‘மனுஷகுமாரனாகிய’ இயேசு கிறிஸ்து “அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்க[வும்] வந்தார்.” (மத்தேயு 20:28) 1 தீமோத்தேயு 2:6-ல் பதிவு செய்யப்பட்டுள்ளபடி, இயேசு ‘எல்லாரையும் மீட்கும்பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்தார்.’ “மீட்கும் பொருள்” என்ற வார்த்தை கைதிகளின் மீட்புக்காக செலுத்தப்படும் விலையைக் குறிக்கிறது. அது இணையான மீட்கும்பொருள் என்ற உண்மை, நீதித் தராசின் தட்டுகளை சமமாக நிற்கச்செய்வதில் அதனுடைய மதிப்பின் பயனை வலியுறுத்துகிறது. ஆனால் ஒரு மனிதனுடைய மரணம் எவ்வாறு ‘எல்லாருக்குமான மீட்கும் பொருளாக’ கருதப்பட முடியும்?
ஆதாம் நம்மையும் உட்பட எல்லா மனிதவர்க்கத்தையும் பாவத்துக்குள்ளும் மரணத்திற்குள்ளும் விற்றுப்போட்டான். அவன் செலுத்திய விலை அல்லது அபராதம் அவனுடைய பரிபூரண மனித உயிராக இருந்தது. இதை மூடுவதற்கு மற்றொரு பரிபூரண மனித உயிர்—சம மதிப்புள்ள மீட்கும்பொருள்—செலுத்தப்பட வேண்டியதாக இருந்தது. (யாத்திராகமம் 21:23; உபாகமம் 19:21; ரோமர் 5:18, 19) எந்த அபூரணமான மனிதனும் இந்த மீட்கும் பொருளை அளிக்க முடியாத காரணத்தால், கடவுள் எல்லையில்லாத தம்முடைய ஞானத்தில் இந்தச் சங்கடமான நிலைமையிலிருந்து வெளியேற ஒரு வழியைத் திறந்துவைத்தார். (சங்கீதம் 49:6, 7) பரலோகங்களிலிருந்த தம்முடைய ஒரே பேறான மகனின் பரிபூரணமான உயிரை பூமியிலிருந்த ஒரு கன்னியின் கருப்பைக்கு மாற்றி, அவரை பரிபூரணமான ஒரு மனிதனாக பிறக்க வைத்தார்.—லூக்கா 1:30-38; யோவான் 3:16-18.
மனிதவர்க்கத்தை மீட்கும் இந்த வேலையைச் செய்து முடிப்பதற்கு, இயேசு பூமியில் வாழ்ந்த காலமெல்லாம் தம்முடைய உத்தமத்தைக் காத்துக்கொள்ள வேண்டியதாக இருந்தது. இதை அவர் செய்தார். பின்பு அவர் பலிக்குரிய ஒரு மரணத்தை அடைந்தார். இவ்விதமாக பரிபூரணமான ஒரு மனித உயிரின்—அவருடைய சொந்த உயிரின்—மதிப்பு மனிதவர்க்கத்தை விடுவிப்பதற்கு ஒரு மீட்கும் பொருளாக செலுத்தப் பயன்படுவதை இயேசு நிச்சயப்படுத்திக் கொண்டார்.—2 கொரிந்தியர் 5:14; 1 பேதுரு 1:18, 19.
கிறிஸ்துவின் மீட்கும் பொருள் நமக்கு என்ன செய்யக்கூடும்
இயேசுவின் மீட்கும் பலி இப்பொழுதே நமக்கு நன்மை தருவதாய் இருக்கக்கூடும். அதில் விசுவாசத்தைக் காண்பிப்பதன் மூலம், நாம் கடவுளுக்கு முன்பாக ஒரு சுத்தமான நிலைநிற்கையை அனுபவித்து யெகோவாவின் அன்பான, கனிவான கவனிப்பின்கீழ் வரமுடியும். (அப்போஸ்தலர் 10:43; ரோமர் 3:21-24) நாம் செய்திருக்கக்கூடிய பாவங்களைப் பற்றிய குற்றவுணர்வில் மூழ்கிவிடுவதற்குப் பதிலாக, மீட்கும் பொருளின் அடிப்படையில் கடவுளிடமிருந்து மன்னிப்பை நாம் தாராளமாகப் பெறலாம்.—ஏசாயா 1:18; எபேசியர் 1:7; 1 யோவான் 2:1, 2.
பாவத்தினால் மனிதவர்க்கத்துக்கு உண்டான நோயுற்ற நிலைமை முழுமையாக குணமடைவதை மீட்கும் பொருள் எதிர்காலத்தில் சாத்தியமாக்கும். பைபிளின் கடைசி புத்தகம் கடவுளுடைய சிங்காசனத்திலிருந்து புறப்பட்டு வரும் ‘ஜீவத்தண்ணீருள்ள நதியை’ விவரிக்கிறது. நதியின் இருகரையிலும் “ஜனங்கள் ஆரோக்கியமடைகிறதற்கு ஏதுவான” இலைகளையுடைய கனிதரும் விருட்சங்கள் ஏராளமாக உள்ளன. (வெளிப்படுத்துதல் 22:1, 2) அடையாள அர்த்தத்தில், பைபிள் இங்கே இயேசுவின் மீட்கும் பலியின் அடிப்படையில் மனிதவர்க்கத்தை பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் என்றுமாக விடுவிப்பதற்கு படைப்பாளர் செய்யும் மகத்தான ஏற்பாட்டைப் பற்றி பேசுகிறது.
வெளிப்படுத்துதல் புத்தகத்தின் தீர்க்கதரிசன காட்சிகள் வெகு சீக்கிரத்தில் நிறைவேற்றமடையும். (வெளிப்படுத்துதல் 22:6, 7) அப்போது எல்லா நேர்மையான இருதயமுள்ள ஆட்களும் பரிபூரணராகி, ‘அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்படுவர்’. (ரோமர் 8:20, 21) இது யெகோவா தேவனைப் பற்றியும் மீட்கும் பொருளாக ஆன அவருடைய பற்றுமாறாத மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றியும் அதிகத்தைக் கற்றுக்கொள்ள நம்மைத் தூண்ட வேண்டாமா?—யோவான் 17:3.
[அடிக்குறிப்பு]
a உவாட்ச்டவர் பைபிள் அண்டு டிராக்ட் சொஸைட்டி வெளியிட்டுள்ள உயிர்—எப்படி இங்கே வந்தது? பரிணாமத்தினாலா படைப்பினாலா? என்ற ஆங்கில புத்தகத்தைப் பார்க்கவும்.
[பக்கம் 6-ன் படம்]
ஆதாம் மனிதவர்க்கத்தின்மீது பாவத்தையும் மரணத்தையும் கொண்டுவந்தான்
[பக்கம் 7-ன் படம்]
இயேசுவின் மீட்கும் பலி பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுதலையைக் கொண்டுவருகிறது