மூன்றாம் அதிகாரம்
‘விசுவாசிக்கிற அனைவருக்கும் தகப்பன்’
1, 2. நோவாவின் நாள்முதல் உலகம் எந்தளவு மாறியிருந்தது, அதைக் குறித்து ஆபிராம் எப்படி உணர்ந்தார்?
ஆபிராம் தன்னுடைய தலையைச் சற்று உயர்த்திப் பார்க்கிறார்.a அவருடைய சொந்த நகரத்தில்... ஊர் நகரத்தில்... சிக்குராட்டு கோயில் கோபுரம் உயர்ந்தோங்கி நிற்கிறது. அங்கிருந்து பெரும் ஆரவாரம் கேட்கிறது, புகை மேல்நோக்கி எழும்புகிறது. சந்திர தெய்வத்தின் பூசாரிகள் அங்கே பலிகள் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். இப்போது அப்படியே உங்களுடைய கற்பனையில் காணுங்கள்: அந்தக் கோயிலைப் பார்க்கவே ஆபிராமுக்கு அருவருப்பாக இருக்கிறது. சட்டென முகத்தைத் திருப்பிக்கொள்கிறார். விறுவிறுவெனத் தன் வீட்டை நோக்கி நடந்துசெல்கிறார். மக்கள் அலைமோதிக் கொண்டிருக்கும் வீதிகளில் அவர் செல்கையில், ஊர் நகரமே சிலை வழிபாட்டில் ஊறிப்போயிருப்பதை நினைத்து அங்கலாய்க்கிறார். பொய் வழிபாடு நோவாவின் நாள்முதல் உலகெங்கும் எவ்வளவாய்ப் பரவியிருக்கிறது!
2 ஆபிராம் பிறப்பதற்கு இரண்டே ஆண்டுகளுக்கு முன்புதான் நோவா இறந்தார். பெருவெள்ளத்திற்குப் பின்பு நோவா தன் குடும்பத்தாருடன் பேழையிலிருந்து வெளியே வந்தபோது யெகோவா தேவனுக்குப் பலி செலுத்தினார், அப்போது யெகோவா வானவில்லைத் தோன்றச் செய்தார். (ஆதி. 8:20; 9:12-14) அந்தச் சமயத்தில், இந்த உலகத்திலிருந்த ஒரே வழிபாடு உண்மை வழிபாடு. ஆனால் இப்போது நோவாவிலிருந்து பத்தாம் தலைமுறை பூமியெங்கும் பரவியிருக்கிறது, உண்மை வழிபாடு அபூர்வமாகிவிட்டது. எங்குமுள்ள மக்கள் புறமத தெய்வங்களை வழிபட்டு வருகிறார்கள். ஏன், ஆபிராமின் அப்பா தேராகுவும்கூட உருவச்சிலைகளை வழிபட்டு வருகிறார்; ஒருவேளை அவற்றை உருவாக்கியும் வந்திருக்கலாம்.—யோசு. 24:2.
விசுவாசத்திற்கு ஆபிராம் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கியது எப்படி?
3. ஆபிராமின் வாழ்க்கைப் பயணம் தொடரத் தொடர, எந்தக் குணம் அவரிடம் பளிச்சிட்டது, அதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்வோம்?
3 ஆனால் ஆபிராம் வித்தியாசமானவராய் விளங்குகிறார். அவருடைய வாழ்க்கைப் பயணம் தொடரத் தொடர... அவரது விசுவாசம் மேன்மேலும் பளிச்சிடுகிறது, இதனால் அவர் தனித்தன்மைமிக்கவராய்த் திகழ்கிறார். சொல்லப்போனால், ‘விசுவாசம் வைக்கிற . . . அனைவருக்கும் . . . தகப்பன்’ என அவரைப் பற்றிக் கடவுளுடைய சக்தியால் அப்போஸ்தலன் பவுல் பிற்பாடு எழுதினார். (ரோமர் 4:11-ஐ வாசியுங்கள்.) ஆபிராமின் விசுவாசம் தொடர்ந்து வளர எது உதவியது என நாம் பார்க்கலாம். இதன் மூலம், நம் விசுவாசத்தை எப்படி வளர்த்துக்கொள்ளலாம் என்பதைப் பற்றி நிறைய விஷயங்களை கற்றுக்கொள்வோம்.
பெருவெள்ளத்திற்குப்பின் யெகோவாவின் வழிபாடு
4, 5. யெகோவாவைப் பற்றி யாரிடமிருந்து ஆபிராம் கற்றிருக்கலாம், நாம் ஏன் இந்த முடிவுக்கு வரலாம்?
4 யெகோவா தேவனைப் பற்றி ஆபிராம் எப்படித் தெரிந்துகொண்டார்? அவருடைய காலத்தில் யெகோவா தேவனுக்கு விசுவாசமுள்ள ஊழியர்கள் இருந்தார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் சேம். நோவாவின் மூன்று மகன்களில் அவர் மூத்தவர் அல்ல, என்றாலும் அவரே பெரும்பாலும் முதலில் குறிப்பிடப்படுகிறார்; விசுவாசத்திற்குப் பேர்போனவராக இருந்ததால் அவர் முதலில் குறிப்பிடப்பட்டிருக்கலாம்.b யெகோவா தேவனுக்கும் உண்மை வழிபாட்டுக்கும் சேம் மரியாதை காட்டினார்; அதனால்தான், பெருவெள்ளம் வந்து சில காலம் கழித்து, ‘சேமுடைய தேவன்’ என யெகோவாவை நோவா குறிப்பிட்டார்.—ஆதி. 9:26.
5 ஆபிராமுக்கு சேமைப் பற்றித் தெரியுமா? தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஆபிராமை ஒரு சிறுபையனாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். நான்கு நூற்றாண்டு சரித்திரத்தைக் கண்கூடாகக் கண்ட மூதாதை சேம் இன்னும் உயிருடன் இருப்பதை அறிந்துகொண்டபோது அந்தச் சிறுவன் எவ்வளவு மலைத்துப்போயிருப்பான்! பெருவெள்ளத்திற்கு முன்பு நிகழ்ந்த பொல்லாத செயல்களை... தீமையைத் துடைத்தழித்த ஜலப்பிரளயத்தை... மனிதர் பெருகியபோது தோன்றிய முதல் தேசங்களை... பாபேல் கோபுரம் கட்டி நிம்ரோது செய்த கலகத்தை... சேம் பார்த்திருந்தார். இருந்தாலும் அந்தக் கலகத்திலிருந்து சேம் விலகியிருந்தார்; அதனால்தான், கோபுரம் கட்டுகிறவர்களின் மொழியை யெகோவா குழப்பியபோது, சேமும் அவருடைய குடும்பத்தாரும் பேசிய மொழி மாறவில்லை; மனிதரின் ஆதி மொழியையே... நோவாவின் மொழியையே... அவர்கள் தொடர்ந்து பேசினார்கள். யெகோவாவுக்கு சேம் உண்மையாய் இருந்ததால், அந்தக் குடும்பத்தில் வந்த ஆபிராமுக்குச் சிறுவயது முதற்கொண்டே அவர்மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் இருந்திருக்கும். அதைவிட முக்கியமாக, ஆபிராம் வாழ்ந்த நீண்ட காலப்பகுதியில் பெரும்பாலான காலம் சேம் உயிரோடு இருந்தார். ஆகவே, யெகோவாவைப் பற்றி சேமிடமிருந்து ஆபிராம் கற்றிருக்கலாம்.
6. (அ) பெருவெள்ளம் கற்றுத்தந்த முக்கியமான பாடம் தன் இதயத்தில் பதிந்திருப்பதை ஆபிராம் எப்படிக் காட்டினார்? (ஆ) ஆபிராமும் சாராயும் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தார்கள்?
6 எப்படியிருந்தாலும் சரி, பெருவெள்ளம் கற்றுத்தந்த முக்கியமான பாடத்தை ஆபிராம் தன் இதயத்தில் பதித்துக்கொள்கிறார். கடவுளுடைய வழியில் நோவா நடந்ததுபோல் இவரும் நடக்க முயற்சி செய்கிறார். அதனால்தான், சிலை வழிபாட்டை அருவருக்கிறார்; ஊர் நகரத்தில்... ஒருவேளை தன்னுடைய சொந்த குடும்பத்தார் மத்தியில்... மாறுபட்ட மனிதராய் நிற்கிறார். இப்படிப்பட்ட சூழலிலும், யெகோவாவை வழிபடுகிற ஒரு பெண்ணைக் கண்டுபிடிக்கிறார். அழகில் மட்டுமல்ல விசுவாசத்திலும் தனிப்பொலிவுடன் விளங்கும் சாராயை வாழ்க்கைத் துணைவியாய் ஆக்கிக்கொள்கிறார்.c அந்தத் தம்பதியருக்குக் குழந்தை பாக்கியம் இல்லாவிட்டாலும், யெகோவாவை ஒருமித்து வழிபடுவதில் மிகுந்த மகிழ்ச்சி காண்கிறார்கள். அநாதையாக இருக்கும் லோத்துவை... அதாவது ஆபிராமின் அண்ணன் மகனை... வளர்க்கிறார்கள்.
7. இயேசுவின் சீடர்கள் எப்படி ஆபிராமின் முன்மாதிரியைப் பின்பற்றலாம்?
7 ஆபிராம் யெகோவாவை விட்டுவிட்டு உருவ வழிபாட்டுக்கு ஒருபோதும் மாறவில்லை. உருவ வழிபாட்டில் மூழ்கிக்கிடக்கும் ஊர் நகரத்தில், ஆபிராமும் சாராயும் வித்தியாசமானவர்களாய் இருக்க தயங்கவில்லை. உண்மையான விசுவாசத்தை வளர்த்துக்கொள்ள வேண்டுமென்றால், நாமும் வித்தியாசமாய் இருக்க தயங்கக்கூடாது. தம் சீடர்கள் ‘இந்த உலகத்தின் பாகமாய் இருக்க மாட்டார்கள்’ என்றும் இந்த உலகம் அவர்களை வெறுக்கும் என்றும் இயேசு சொன்னாரே. (யோவான் 15:19-ஐ வாசியுங்கள்.) நீங்கள் யெகோவாவைச் சேவிக்கத் தீர்மானித்ததால் உங்களுடைய குடும்பத்தினரோ சமுதாயத்தினரோ உங்களை ஒதுக்கிவிட்டார்களா? அதனால் நீங்கள் மிகுந்த வேதனையை அனுபவிக்கிறீர்களா? அப்படியென்றால், நீங்கள் தனிமையில் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆபிராம் சாராயைப் போல் நீங்களும் கடவுளோடு நடக்கிறீர்கள், அவர்களுடைய சிறந்த முன்மாதிரியைப் பின்பற்றுகிறீர்கள்.
‘உன் தேசத்தைவிட்டுச் செல்’
8, 9. (அ) ஆபிராமுக்குக் கிடைத்த மறக்கமுடியாத அனுபவம் என்ன? (ஆ) ஆபிராமுக்கு யெகோவாவிடமிருந்து கிடைத்த செய்தி என்ன?
8 ஒருநாள், மறக்கமுடியாத ஓர் அனுபவம் ஆபிராமுக்கு உண்டாகிறது. யெகோவா தேவனிடமிருந்து அவருக்குச் செய்தி கிடைக்கிறது! எப்படிக் கிடைக்கிறது? இதைப் பற்றி பைபிள் நமக்கு விலாவாரியாகச் சொல்வதில்லை, என்றாலும் அவருக்குமுன் “மகிமையுள்ள கடவுள்” தோன்றினார் என்று மட்டும் சொல்கிறது. (அப்போஸ்தலர் 7:2, 3-ஐ வாசியுங்கள்.) ஒருவேளை ஒரு தேவதூதரின் மூலம், சர்வலோகப் பேரரசருடைய மாமகிமையில் சிறுதுளியை அவர் கண்டிருப்பார். அப்போது, உயிருள்ள கடவுளுக்கும் உயிரற்ற சிலைகளுக்கும் உள்ள வித்தியாசத்தைப் பார்த்து ஆபிராம் எந்தளவு மெய்சிலிர்த்துப் போயிருப்பார்!
9 யெகோவாவிடமிருந்து ஆபிராமுக்குக் கிடைத்த அந்தச் செய்தி என்ன? “நீ உன் தேசத்தையும் உன் உறவினர்களையும்விட்டு நான் காண்பிக்கப்போகும் தேசத்தில் குடியேறு” என்பதே அந்தச் செய்தி. ஆபிராம் எந்தத் தேசத்திற்குச் செல்ல வேண்டுமென யெகோவா சொல்லவில்லை, அந்தத் தேசத்தைக் காண்பிப்பதாக மட்டும்தான் சொன்னார். ஆனால், முதலில் ஆபிராம் தன்னுடைய சொந்த ஊரையும் உறவையும்விட்டுப் புறப்பட வேண்டும். அன்றைய மத்திய கிழக்குக் கலாச்சாரத்தில், குடும்பமும் உறவுகளும் மிக மிக முக்கியம். ஒருவர் தன்னுடைய உறவினரை விட்டுவிட்டு வெகு தூரம் செல்கிறார் என்றால், அது ஓர் அவலநிலை என்று பெரும்பாலோர் நினைத்தார்கள்; அது சாவைவிட மிகக் கொடுமையான விஷயம் என்றுகூட சிலர் நினைத்தார்கள்!
10. ஆபிராமையும் சாராயையும் பொறுத்தவரை, ஊர் நகரத்தைவிட்டுப் புறப்படுவது ஏன் ஒரு தியாகம் என்று சொல்லலாம்?
10 சொந்த தேசத்தைவிட்டுப் புறப்படுவது என்றால் உண்மையிலேயே பெரும் தியாகம்தான். ஊர் நகரம் சந்தடிமிக்க நகரமாக... செல்வச்செழிப்பான நகரமாக... விளங்கியது. (“ஆபிராமும் சாராயும் விடைகொடுத்த நகரம்” என்ற பெட்டியைக் காண்க.) பூர்வ ஊர் நகரத்தில் சகல வசதிகளும் நிறைந்த வீடுகள் இருந்ததாக அகழாய்வுகள் காட்டுகின்றன. சில வீடுகளில் குடும்ப அங்கத்தினருக்கும் வேலைக்காரருக்கும் சேர்த்து பன்னிரெண்டு அல்லது அதற்கும் அதிகமான அறைகள் இருந்தன; இவையெல்லாம் தளம் பாவப்பட்ட உள்முற்றத்தைச் சுற்றி அமைந்திருந்தன. தண்ணீர் வசதி, கழிவறை வசதி போன்ற சுகாதார வசதிகளும் இருந்தன. ஆபிராமும் சாராயும் வாலிப வயதை எப்போதோ கடந்துவிட்டார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்; அவர் ஒருவேளை 70-களிலும் அவள் ஒருவேளை 60-களிலும் இருந்திருக்கலாம். சாராயை ஓரளவு சௌகரியமாய் வாழ வைக்க வேண்டும்... அவளை நன்கு கவனித்துக்கொள்ள வேண்டும்... என்றெல்லாம் ஆபிராம் விரும்பியிருப்பார்; ஒரு நல்ல கணவர் தன்னுடைய மனைவிக்காக வேறென்ன விரும்புவார்? கடவுளுடைய கட்டளை சம்பந்தமாக தங்கள் மனதில் உதிக்கிற கேள்விகளையும் கவலைகளையும் பற்றி இருவரும் பேசுவதைக் கற்பனை செய்து பாருங்கள். சொந்த ஊரைவிட்டுப் போகும் சவாலை சாராய் முழுமனதோடு ஏற்றுக்கொள்கிறாள். ஆபிராமைப் போல், எல்லாச் சுகங்களையும் விட்டுவிட்டு வர மனமுள்ளவளாய் இருக்கிறாள். இதைக் கண்டு ஆபிராம் எவ்வளவு ஆனந்தப்பட்டிருப்பார்!
11, 12. (அ) ஊர் நகரத்தைவிட்டுச் செல்வதற்கு முன்பு என்ன வேலைகளையும் தீர்மானங்களையும் ஆபிராம் செய்ய வேண்டியிருந்தது? (ஆ) காலைப்பொழுதில் அவர்கள் புறப்பட்டுச் சென்றதை எப்படிக் கற்பனை செய்து பார்க்கலாம்?
11 ஊரைவிட்டுச் செல்ல முடிவு எடுத்ததும் ஆபிராமும் சாராயும் நிறைய வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது. மூட்டை முடிச்சுகளைத் தயார்படுத்துவது, மற்றெல்லா காரியங்களையும் ஒழுங்குபடுத்துவது போன்ற பல்வேறு வேலைகள் இருக்கின்றன. முன்பின் தெரியாத இடத்திற்குப் போகும்போது எதையெல்லாம் எடுத்துச் செல்வார்கள், எதையெல்லாம் விட்டுச் செல்வார்கள்? மிக முக்கியமாக, தங்களுடன் வசிப்பவர்களை என்ன செய்வார்கள்? தள்ளாத வயதிலிருக்கிற தேராகுவை என்ன செய்வார்கள்? அவரை அழைத்துச் செல்லவும் வாழ்நாள் முழுக்க கவனித்துக்கொள்ளவும் தீர்மானிக்கிறார்கள். அவரும் மனப்பூர்வமாய்ச் சம்மதம் தெரிவித்ததாகத் தெரிகிறது; ஏனென்றால், இந்த மூதாதைதான் ஊர் நகரத்தைவிட்டுத் தன் குடும்பத்தை அழைத்துச் சென்றார் என்று சொல்லி பைபிள் அவரைக் கௌரவிக்கிறது. சிலை வழிபாட்டை அவர் விட்டுவிட்டார் என்பதில் சந்தேகமே இல்லை. ஆபிராமின் அண்ணன் மகன் லோத்துவும் அவர்களுடைய பயணத்தில் இணைந்துகொள்வார்.—ஆதி. 11:31.
12 அவர்கள் புறப்பட வேண்டிய காலைப்பொழுது புலருகிறது. ஊர் நகரத்தின் மதிற்சுவர்களுக்கும் அகழிக்கும் வெளியே அவர்கள் எல்லோரும் கூட்டமாக வந்து நிற்பதை மனத்திரையில் ஓடவிடுங்கள். ஒட்டகங்கள் மீதும் கழுதைகள் மீதும் சுமைகள் ஏற்றப்பட்டிருக்கின்றன... ஆடுகள் கூட்டம்கூட்டமாய் நிற்கின்றன... ஆபிராமின் குடும்பத்தாரும் வேலைக்காரரும் வந்து நிற்கிறார்கள்... இப்போது அவர்கள் அனைவரின் மனதிலும் ஒரு பரபரப்பு!d எல்லோருடைய கண்களும் ஆபிராம் மீதே பதிந்திருக்கின்றன... புறப்படச் சொல்லி அவர் சைகை காட்டும் அந்தத் தருணத்தை எல்லோரும் எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள். கடைசியில், அந்தத் தருணம் வருகிறது; அவர்கள் ஊர் நகரத்திற்கு விடைகொடுத்துச் செல்கிறார்கள்.
13. ஆபிராமும் சாராயும் காட்டிய அதே மனநிலையை இன்று எப்படிக் கடவுளுடைய ஊழியர்கள் பலர் காட்டுகிறார்கள்?
13 இன்று, யெகோவாவின் ஊழியர்கள் பலர் தேவை அதிகமுள்ள இடங்களுக்கு மாறிச் செல்கிறார்கள்... ஊழியத்தில் அதிகமாய் ஈடுபடுவதற்காகப் புதிய மொழியைக் கற்றுக்கொள்கிறார்கள்... அல்லது தங்களுக்குப் பழக்கமில்லாத புதுப்புது முறைகளில் பிரசங்கிக்கிறார்கள். இதற்கெல்லாம் பொதுவாகத் தியாகங்கள் செய்ய மனமுள்ளவர்களாய் இருக்கிறார்கள், அதாவது சௌகரியங்களை விட்டுவிட மனமுள்ளவர்களாய் இருக்கிறார்கள். இது பாராட்டத்தக்க மனநிலை, இதுதான் ஆபிராமும் சாராயும் காட்டிய மனநிலை! அவர்களைப் போல் விசுவாசத்தைக் காட்டினால், நாம் யெகோவாவுக்குக் கொடுப்பதைவிட பன்மடங்கு அவர் நமக்கு கொடுப்பார். விசுவாசமுள்ளவர்களுக்குப் பலனளிக்க அவர் ஒருபோதும் தவறுவதில்லை. (எபி. 6:10; 11:6) ஆபிராமுக்கு அவர் பலனளித்தாரா?
ஐப்பிராத்து நதியைக் கடக்கிறார்கள்
14, 15. ஊர் நகரம்முதல் ஆரான் நகரம்வரை பயணம் எப்படி இருந்தது, ஆரானில் சிலகாலம் தங்குவதற்கு ஏன் ஆபிராம் தீர்மானித்திருக்கலாம்?
14 கொஞ்சம் கொஞ்சமாக... அந்தக் கூட்டம் பயணிக்கப் பழகிக்கொள்கிறது. நாம் கற்பனை செய்து பார்க்கலாம்: கொஞ்ச நேரம் சவாரி... கொஞ்ச நேரம் நடை... என ஆபிராமும் சாராயும் பயணிக்கிறார்கள். அவர்கள் பேசிக்கொண்டே போகையில் மிருகங்களின் கழுத்தில் தொங்கும் மணிகளின் ஓசை இடையிடையே ஸ்வரம் சேர்க்கிறது. நாட்கள் உருண்டோட உருண்டோட, அந்தக் கூட்டத்தில் இருக்கிற அனுபவமற்ற பயணிகளும்கூட கூடாரம் போடவும் பிரிக்கவும் கற்றுக்கொள்கிறார்கள்; வயதான தேராகுவை ஒட்டகத்திலோ கழுதையிலோ வசதியாக உட்கார வைக்கவும் பழகிக்கொள்கிறார்கள். அவர்கள் வடமேற்கு திசையை நோக்கிச் செல்கிறார்கள், ஐப்பிராத்து நதியோரமாகப் பயணம் செய்கிறார்கள். நாட்கள் வாரங்களாக வளர்கின்றன, காடுகரைகள் மெதுமெதுவாகப் பின்னோக்கி நகர்கின்றன.
15 கடைசியில், சுமார் 900 கிலோமீட்டர் கடந்தபின் ஆரானை வந்தடைகிறார்கள்; அது கிழக்கு-மேற்கு வணிகச் சாலைகள் சங்கமிக்கும் செழிப்பான நகரம். அங்குள்ள தேன்கூடு வடிவ குடில்களை வந்தடைந்ததும் தங்கள் பயணத்தை நிறுத்தி சில காலம் தங்குகிறார்கள். ஒருவேளை பயணம் செய்ய முடியாதளவு தேராகு பலவீனமாய் ஆகியிருக்கலாம்.
16, 17. (அ) எந்த ஒப்பந்தத்தை எண்ணி ஆபிராம் பூரித்துப்போனார்? (ஆ) ஆரானில் தங்கியிருந்த சமயத்தில் ஆபிராமை யெகோவா எப்படி ஆசீர்வதித்தார்?
16 தேராகு 205 வயதில் காலமாகிறார். (ஆதி. 11:32) அப்போது, ஆபிராமுக்கு யெகோவா மீண்டும் செய்தி அனுப்புகிறார்; தகப்பனை இழந்து தவிக்கும் இந்தக் காலக்கட்டத்தில், இது அவருக்கு மிகுந்த ஆறுதல் அளிக்கிறது. ஊர் நகரத்தில் தந்த கட்டளைகளை மீண்டும் கடவுள் அவருக்குக் கொடுக்கிறார். தாம் கொடுத்த வாக்குறுதிகளைக் குறித்து கூடுதல் தகவல்களைத் தருகிறார். ஆபிராம் மூலம் ஒரு மாபெரும் தேசம் உருவாகும்... அவரால் பூமியில் உள்ள அனைத்து குடும்பங்களும் ஆசி பெறும்... என்று கூறுகிறார். (ஆதியாகமம் 12:2, 3-ஐ வாசியுங்கள்.) தனக்கும் கடவுளுக்கும் இடையிலான இந்த ஒப்பந்தத்தை எண்ணி ஆபிராம் பூரித்துப் போயிருப்பார்; இப்போது பயணத்தைத் தொடர அவருக்கு ஓர் உத்வேகம் கிடைக்கிறது.
17 ஆனால், இந்தத் தடவை மூட்டை முடிச்சுகள் நிறையச் சேர்ந்துவிடுகின்றன. ஏனென்றால், ஆரானில் ஆபிராம் தங்கியிருந்த காலத்தில் யெகோவா அவரை ஆசீர்வதித்திருந்தார். ‘ஆரானிலே அவர்கள் சேர்த்துவைத்த எல்லாப் பொருள்களுடனும், சம்பாதித்த வேலைக்காரர்களுடனும் கிளம்பினார்’ என்று பதிவு சொல்கிறது. (ஆதி. 12:5, NW) ஒரு தேசமாக ஆவதற்கு, ஆபிராமுக்குப் பொருள் வளங்களும் வேலை ஆட்களும் தேவை. யெகோவா எல்லாச் சமயத்திலும் தமது ஊழியர்களைச் செல்வந்தர்களாய் ஆக்குவதில்லை, ஆனால் அவரது சித்தத்தைச் செய்வதற்குத் தேவையான அனைத்தையும் அருளுகிறார். மறுபடியும்... ஆபிராம் தனது பரிவாரங்களோடு ஊர்பேர் தெரியாத இடத்துக்குப் புறப்படுகிறார்.
18. (அ) கடவுளுடைய மக்களின் சரித்திரத்தில் ஒரு மைல்கல் எது? (ஆ) பிற்காலத்தில் நிசான் 14-ல் நிகழ்ந்த முக்கியமான சம்பவங்கள் யாவை? (“பைபிள் சரித்திரத்தில் ஒரு முக்கியத் தேதி” என்ற பெட்டியைக் காண்க.)
18 ஆரானிலிருந்து பல நாட்கள் பயணம் செய்தபின் அவர்கள் கர்கேமிஸை அடைகிறார்கள்... அங்குதான் பொதுவாக பயணிகள் ஐப்பிராத்தைக் கடந்து செல்வார்கள். ஆபிராம் ஐப்பிராத்தைக் கடந்து செல்லும் அந்த நாள் கடவுளுடைய மக்களின் சரித்திரத்தில் ஒரு மைல்கல். கி.மு. 1943-ஆம் ஆண்டில், நிசான் எனப் பிற்பாடு அழைக்கப்பட்ட மாதத்தின் 14-ஆம் நாளில், ஆபிராம் தனது பரிவாரங்களோடு அந்த ஆற்றைக் கடந்திருக்கலாம். (யாத். 12:40-43) ஆபிராமுக்குக் காட்டுவதாக யெகோவா வாக்குக் கொடுத்திருக்கிற தேசம் அந்த ஆற்றின் தெற்கே அமைந்திருக்கிறது. ஆபிராமுடன் கடவுள் செய்திருந்த ஒப்பந்தம் அந்த நாளில்தான் அமலுக்கு வருகிறது.
19. ஆபிராமுக்கு யெகோவா இந்த முறை வாக்குறுதி கொடுத்தபோது எதைப் பற்றிக் குறிப்பிட்டார், அப்போது ஆபிராம் எதை நினைத்துப் பார்த்திருக்கலாம்?
19 ஆபிராம் தெற்கு நோக்கிப் பயணத்தைத் தொடருகிறார்... சீகேமுக்கு அருகில் மோரேயின் பெரிய மரங்களுக்குப் பக்கத்தில் அந்தப் பயணக் கூட்டம் வந்து நிற்கிறது. இங்கே ஆபிராமிடம் மறுபடியும் யெகோவா பேசுகிறார். ஆபிராமின் சந்ததி இந்தத் தேசத்தைச் சொந்தமாக்கிக்கொள்ளும் எனக் கடவுள் இந்த முறை வாக்குறுதி அளிக்கிறார். ஏதேனில் யெகோவா சொன்ன தீர்க்கதரிசனத்தை... ஒரு “வாரிசு” இந்த மனிதகுலத்தை ஒருநாள் மீட்கும் என்று சொன்ன தீர்க்கதரிசனத்தை... ஆபிராம் நினைத்துப் பார்க்கிறாரா? (ஆதி. 3:15, NW; 12:7) ஒருவேளை நினைத்துப் பார்த்திருக்கலாம். யெகோவாவின் மகத்தான நோக்கத்தில் தானும் பங்கு வகிப்பதை ஆபிராம் ஓரளவு புரிந்துகொள்ள ஆரம்பித்திருக்கலாம்.
20. யெகோவா தந்த பாக்கியத்திற்கு ஆபிராம் எப்படி நன்றியுள்ளவராய் இருந்தார்?
20 யெகோவா தந்திருக்கிற இந்தப் பாக்கியத்திற்கு ஆபிராம் ஆழ்ந்த நன்றியுள்ளவராய் இருக்கிறார். அந்தத் தேசத்தில் அவர் தொடர்ந்து பயணம் செய்கிறார், கானானியர் குடியிருப்பதால் கவனமாய்ப் பயணம் செய்கிறார்; முதலில் மோரேயின் பெரிய மரங்களுக்குப் பக்கத்திலும் பின்பு பெத்தேலுக்கு அருகிலும் பயணத்தை நிறுத்தி யெகோவாவுக்குப் பலிபீடங்கள் அமைக்கிறார். யெகோவாவின் பெயரைத் தொழுதுகொள்கிறார், அதாவது போற்றிப் புகழ்கிறார். எப்படி? வரப்போகும் தன்னுடைய சந்ததிக்கு அந்தத் தேசம் கிடைக்கப்போவதை நினைத்து யெகோவாவுக்கு இதயப்பூர்வமான நன்றி தெரிவித்திருக்கலாம். அதோடு, அங்கு வசிக்கிற கானானியருக்கு யெகோவாவைப் பற்றிப் பிரசங்கித்திருக்கலாம். (ஆதியாகமம் 12:7, 8-ஐ வாசியுங்கள்.) அதேசமயத்தில், வாழ்க்கைப் பயணத்தில் ஆபிராமின் விசுவாசத்திற்குப் பெரும் சவால்கள் வருகின்றன. இருந்தாலும், ஊர் நகரத்தில் விட்டுவந்த வீட்டையோ சொகுசு வாழ்க்கையையோ அவர் பின்னோக்கிப் பார்ப்பதில்லை; ஞானமாகவே முன்னோக்கிப் பார்க்கிறார். “கடவுளே கட்டியமைத்த உறுதியான அஸ்திவாரங்கள் உள்ள நகரத்திற்காக அவர் காத்திருந்தார்” என்று எபிரெயர் 11:10 சொல்கிறது.
21. ஆபிராமுடன் ஒப்பிடுகையில் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி நமக்கு என்னவெல்லாம் தெரியும், நீங்கள் என்ன செய்யத் தூண்டப்படுகிறீர்கள்?
21 அடையாள அர்த்தமுடைய அந்த நகரத்தைப் பற்றி... அதாவது கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி... ஆபிராமைவிட இன்று நாம் அதிகம் அறிந்திருக்கிறோம். அந்த அரசாங்கம் பரலோகத்தில் ஆட்சி செய்து வருகிறது... விரைவில் இந்தப் பொல்லாத உலகத்திற்கு முடிவுகட்டப் போகிறது... வாக்குப்பண்ணப்பட்ட ஆபிராமின் வாரிசாகிய இயேசு கிறிஸ்து, அந்த அரசாங்கத்தில் இப்போது அரசராக இருக்கிறார்... என்பதையெல்லாம் நாம் அறிந்திருக்கிறோம். ஆபிராம் மீண்டும் வாழும் காலத்தை, ஆம், தெய்வீக நோக்கத்தை அவர் முழுமையாகப் புரிந்துகொள்ளும் காலத்தை, நாம் விரைவில் காண்போம். அது நமக்கு எப்பேர்ப்பட்ட பாக்கியம்! யெகோவா தமது வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவதைக் காண ஆவலாய் இருக்கிறீர்களா? அப்படியானால், ஆபிராம் செய்ததைத் தொடர்ந்து செய்யுங்கள். அதாவது, சுயதியாக மனப்பான்மையையும் கீழ்ப்படிதலையும் காட்டுங்கள்... யெகோவா தரும் பொறுப்புகளுக்கு ஜெபத்தில் நன்றி சொல்லுங்கள். ‘விசுவாசிக்கிற அனைவருக்கும் தகப்பனாக’ விளங்குகிற ஆபிராமின் விசுவாசத்தை நீங்கள் பின்பற்றும்போது, ஒரு கருத்தில் அவர் உங்களுக்கும் தகப்பனாக ஆவார்!
a பல வருடங்களுக்குப்பின், ஆபிராமின் பெயரை ஆபிரகாம் எனக் கடவுள் மாற்றினார்; இந்தப் பெயரின் அர்த்தம், ‘அநேக தேசத்தாருக்குத் தகப்பன்.’—ஆதி. 17:5, NW.
b அது போலவே, தேராகுவின் மகன்களில் ஆபிராமே பெரும்பாலும் முதலில் குறிப்பிடப்படுகிறார், ஆனால் அவர் எல்லோருக்கும் மூத்தவர் அல்ல.
c பிற்பாடு, சாராய் என்ற பெயரை சாராள் எனக் கடவுள் மாற்றினார், அதன் அர்த்தம் “இளவரசி.”—ஆதி. 17:15.
d ஆபிராம் காலத்தில் ஒட்டகங்கள் வீட்டில் வளர்க்கப்பட்டனவா என்பதைக் குறித்து அறிஞர்கள் சிலர் கேள்வியெழுப்புகிறார்கள். ஆனால், அவர்களுடைய ஆட்சேபணைகளுக்குத் தகுந்த ஆதாரங்கள் இல்லை. ஆபிராமின் உடைமைகளில் ஒட்டகங்களும் இருந்ததாக பைபிள் பல தடவை குறிப்பிடுகிறது.—ஆதி. 12:16; 24:35.