நன்மை செய்கிறதில் சோர்ந்துபோகாதிருங்கள்
“நன்மை செய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்.”—கலாத்தியர் 6:9.
1, 2. (அ) கடவுளைச் சேவிக்க சகிப்புத்தன்மை ஏன் தேவை? (ஆ) ஆபிரகாம் எப்படி சகிப்புத்தன்மையை வெளிக்காட்டினார், எது அவருக்கு உதவியது?
கடவுளுடைய சித்தத்தைச் செய்வதில் யெகோவாவின் சாட்சிகளாகிய நாம் மகிழ்ச்சி காண்கிறோம். மேலும், சீஷராயிருப்பதன் “நுகத்தை” ஏற்றிருப்பதில் இளைப்பாறுதலை அனுபவிக்கிறோம். (மத்தேயு 11:29) இருப்பினும், கிறிஸ்துவுடன் சேர்ந்து யெகோவாவைச் சேவிப்பது எப்போதும் எளிதாக இருப்பதில்லை. அப்போஸ்தலன் பவுல் உடன் கிறிஸ்தவர்களை ஊக்குவித்தபோது இதைத் தெளிவுபடுத்தினார்: “நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படி செய்து, வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை [“சகிப்புத்தன்மை,” NW] உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது.” (எபிரெயர் 10:36) கடவுளை சேவிப்பது சவாலை முன்வைப்பதால் சகிப்புத்தன்மை தேவைப்படுகிறது.
2 ஆபிரகாமின் வாழ்க்கை நிச்சயமாகவே அந்த உண்மைக்கு நிரூபணம் அளிக்கிறது. கடினமான தெரிவுகளையும் இக்கட்டான சூழ்நிலைகளையும் அவர் அநேக தடவை எதிர்ப்பட்டார். ஊர் பட்டணத்தில் சௌகரியமான வாழ்க்கையை விட்டு வரும்படி அவர் கட்டளையைப் பெற்றது வெறும் ஆரம்பமே. சீக்கிரத்திலேயே பஞ்சம், அயலாரிடமிருந்து பகைமை, கிட்டத்தட்ட தன் மனைவியை இழக்கும் நிலை, உறவினர்கள் சிலரின் பகைமை, போரின் கொடுமை ஆகிய அனைத்தையும் எதிர்ப்பட்டார். என்றபோதிலும், அவருக்கு பெரிய சோதனைகள் இனிதான் வரவிருந்தன. ஆனால் சரியானதைச் செய்வதிலிருந்து ஆபிரகாம் ஒருபோதும் பின்வாங்கிவிடவில்லை. இன்று நம்மிடம் இருப்பதுபோல் கடவுளுடைய வார்த்தையாகிய முழு பைபிளும் அவரிடம் இருக்கவில்லை என்பதை யோசிக்கையில் இது கவனிக்கத்தக்கது. இருப்பினும், முதல் தீர்க்கதரிசனத்தை அவர் அறிந்திருந்தார் என்பதில் சந்தேகமேயில்லை. அதில், “உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்” என கடவுள் கூறியிருந்தார். (ஆதியாகமம் 3:15) அந்த வித்து ஆபிரகாமின் மூலமாய் வரவிருந்ததால், அவர் சாத்தானின் பகைமைக்கு குறியிலக்கானது இயல்பே. இந்த உண்மையை அவர் புரிந்துகொண்டது தன் சோதனைகளை மகிழ்ச்சியுடன் சகிக்க ஆபிரகாமுக்கு நிச்சயமாகவே உதவியது.
3. (அ) இன்று யெகோவாவின் ஜனங்கள் ஏன் உபத்திரவங்களை எதிர்பார்க்க வேண்டும்? (ஆ) என்ன ஊக்கமூட்டுதலை கலாத்தியர் 6:9 நமக்குக் கொடுக்கிறது?
3 இன்று யெகோவாவின் ஜனங்களும் உபத்திரவங்களை எதிர்பார்க்க வேண்டும். (1 பேதுரு 1:6, 7) சொல்லப்போனால், அபிஷேகம் செய்யப்பட்ட மீதிபேரோடு சாத்தான் ‘யுத்தம் பண்ணுகிறான்’ என்று வெளிப்படுத்துதல் 12:17 நம்மை எச்சரிக்கிறது. அபிஷேகம் செய்யப்பட்டவர்களுடன் நெருங்கிய கூட்டுறவு வைத்திருப்பதால் “வேறே ஆடுகளும்” அவ்வாறே சாத்தானுடைய சீற்றத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள். (யோவான் 10:16) வெளி ஊழியத்தில் கிறிஸ்தவர்கள் சந்திக்கும் எதிர்ப்பு மட்டுமல்லாமல், தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் அவர்கள் சோதனைமிக்க நெருக்கடிகளை அனுபவிக்கலாம். “நன்மை செய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்து போகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்” என பவுல் நமக்கு அறிவுரை கூறுகிறார். (கலாத்தியர் 6:9) ஆம், நம்முடைய விசுவாசத்தை அழித்துப் போடுவதே சாத்தானின் நோக்கமாக இருந்தாலும், விசுவாசத்தில் உறுதிப்பட்டவர்களாய் அவனுக்கு எதிராக நாம் நிலைநிற்கை எடுக்க வேண்டும். (1 பேதுரு 5:8, 9) நாம் உண்மையுடன் வாழ்ந்தால் என்ன பலனைப் பெறுவோம்? யாக்கோபு 1:2, 3 இவ்வாறு விளக்குகிறது: “என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை [“சகிப்புத்தன்மையை,” NW] உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்.”
நேரடி தாக்குதல்
4. கடவுளுடைய ஜனங்களின் உத்தமத்தைத் தகர்க்கும் முயற்சியில் சாத்தான் நேரடி தாக்குதல்களை எவ்வாறு பயன்படுத்தியிருக்கிறான்?
4 இன்று ஒரு கிறிஸ்தவன் எதிர்ப்படும் ‘பலவிதமான சோதனைகளை’ ஆபிரகாமின் வாழ்க்கை உண்மையிலேயே படம்பிடித்துக் காட்டுகிறது. உதாரணமாக, சிநெயாரிலிருந்து படையெடுத்து வந்தவர்களின் தாக்குதலை அவர் சமாளிக்க வேண்டியிருந்தது. (ஆதியாகமம் 14:11-16) துன்புறுத்துதல் வாயிலாக சாத்தான் தொடர்ந்து நேரடி தாக்குதல்களை நடத்தி வருவதில் ஆச்சரியமேதுமில்லை. இரண்டாம் உலகப் போர் முடிந்ததிலிருந்து, யெகோவாவின் சாட்சிகளுடைய கிறிஸ்தவ கல்வி புகட்டும் வேலையின்மீது பல நாடுகள் அரசாங்க தடையுத்தரவை பிறப்பித்திருக்கின்றன. அங்கோலாவிலிருக்கும் கிறிஸ்தவர்கள் பகைவர்களின் கைகளில் சகித்த கொடுமைகளை 2001 யெகோவாவின் சாட்சிகளுடைய வருடாந்தர புத்தகம் (ஆங்கிலம்) அறிக்கை செய்கிறது. அத்தகைய நாடுகளிலுள்ள நம்முடைய சகோதரர்கள் யெகோவாவின்மீது சார்ந்திருந்து சோர்ந்து போகாமல் உறுதியாய் நின்றிருக்கிறார்கள்! வன்முறையிலோ கலகத்திலோ இறங்குவதற்குப் பதிலாக தொடர்ந்து பிரசங்க ஊழியத்தில் விவேகத்துடன் ஈடுபடுவதன் மூலம் அதற்கு பதிலளித்திருக்கிறார்கள்.—மத்தேயு 24:14.
5. கிறிஸ்தவ இளைஞர்கள் பள்ளியில் எப்படி துன்புறுத்துதலுக்கு ஆளாகலாம்?
5 எனினும், துன்புறுத்துதலில் எப்போதும் வன்முறை இருக்கும் என சொல்வதற்கில்லை. முடிவில் ஆபிரகாம், இஸ்மவேல், ஈசாக்கு என்ற இரண்டு குமாரர்களை ஆசீர்வாதமாக பெற்றார். ஒரு சந்தர்ப்பத்தில் இஸ்மவேல் ஈசாக்கைப் ‘பரியாசம் பண்ணினதாக’ ஆதியாகமம் 21:8-12 நமக்குச் சொல்கிறது. இது வெறும் பிள்ளைத்தனமான கேலியல்ல, வினைமையானது என கலாத்தியருக்கு எழுதின நிருபத்தில் பவுல் காட்டுகிறார். எப்படியெனில், ஈசாக்கை இஸ்மவேல் துன்பப்படுத்தியதாக விவரிக்கிறார்! (கலாத்தியர் 4:29) ஆகவே, பள்ளித் தோழர்களின் கேலியையும் கிண்டலையும், எதிர்ப்பவர்களின் சொல்லடியையும் துன்புறுத்துதல் என சொல்வது பொருத்தமானதே. ரையன் என்ற கிறிஸ்தவ இளைஞன் தன் வகுப்பு தோழர்களிடம் அனுபவித்த வேதனையை நினைவுபடுத்தி இவ்வாறு சொல்கிறான்: “பஸ்ஸில் பள்ளிக்குப் போகும்போதும் வரும்போதும் என்னை பரியாசம் எனும் சொல் அம்பால் தாக்கியதால் அந்த 15 நிமிட பயணம் எனக்கு பல மணிநேர பயணம் போல் தோன்றியது. சிகரெட் லைட்டரால் சூடாக்கின காகித கிளிப்புகளால் எனக்குச் சூடு போட்டார்கள்.” இப்படி கொடுமைப்படுத்தியதற்குக் காரணம்? “கடவுளுடைய அமைப்பிலிருந்து நான் பெற்ற பயிற்றுவிப்பு, பள்ளியிலிருந்த மற்ற இளைஞரிலிருந்து என்னை வித்தியாசமானவனாக காட்டியதுதான்.” இருப்பினும், தன் பெற்றோரின் உதவியால் ரையன் உண்மையுடன் சகித்திருக்க முடிந்தது. இளைஞரே, சகாக்களின் கேலிப்பேச்சு உங்களை சோர்வடைய செய்திருக்கிறதா? சோர்ந்து போய்விடாதீர்கள்! உண்மையுடன் சகித்திருந்தால் இயேசுவின் இந்த வார்த்தை நிறைவேறுவதை அனுபவிப்பீர்கள்: “என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்.”—மத்தேயு 5:11.
அன்றாட கவலைகள்
6. இன்று உடன் கிறிஸ்தவர்களுக்கு இடையே உள்ள உறவை என்ன காரியங்கள் கெடுத்துப் போடலாம்?
6 இன்று நாம் எதிர்ப்படும் சோதனைகளில் பெரும்பாலானவை பொதுவாக எதிர்ப்படும் அன்றாட கவலைகளே. ஆபிரகாம்கூட தன் மந்தை மேய்ப்பர்களுக்கும் தன் சகோதரன் மகன் லோத்துவின் மந்தை மேய்ப்பர்களுக்கும் இடையில் எழுந்த சச்சரவை சமாளிக்க வேண்டியிருந்தது. (ஆதியாகமம் 13:5-7) அதைப்போல் இன்று, ஆள்தன்மையில் காணப்படும் வேறுபாடுகளும் அற்ப பொறாமைகளும் உறவுகளை கெடுத்துப் போடலாம், ஏன் சபையின் சமாதானத்திற்கும் அச்சுறுத்தலாய் அமையலாம். “பொறாமையும் விரோதமும் எங்கே உண்டோ அங்கே கலகமும் சகல துர்ச்செய்கைகளுமுண்டு.” (யாக்கோபு 3:16, தி.மொ.) ஆபிரகாம் செய்ததைப் போலவே பெருமை சமாதானத்தைக் கெடுக்க இடமளிக்காமல், மற்றவர்களின் அக்கறைகளுக்கு இடம் கொடுப்பதன் மூலம் நாம் சோர்ந்து போகாமல் இருப்பது எவ்வளவு முக்கியம்!—1 கொரிந்தியர் 13:5; யாக்கோபு 3:17.
7. (அ) உடன் கிறிஸ்தவரால் புண்படுத்தப்பட்டால் ஒருவர் என்ன செய்ய வேண்டும்? (ஆ) மற்றவர்களுடன் சுமுகமான உறவை காத்துக்கொள்வதில், ஆபிரகாம் எப்படி நல்ல முன்மாதிரி வைத்தார்?
7 சக விசுவாசி ஒருவர் நியாயமற்ற முறையில் நம்மை நடத்துகிறார் என உணருகையில் சமாதானம் காப்பது சவாலாக இருக்கலாம். நீதிமொழிகள் 12:18 (பொ.மொ.) இவ்வாறு சொல்கிறது: “சிந்தனையற்ற பேச்சு வாள் போலப் புண்படுத்தும்.” சிந்திக்காமல் பேசப்படும் வார்த்தைகள், கள்ளம்கபடம் இல்லாமல் சொல்லப்பட்டாலும் அதிக வேதனையைத் தரலாம். நம்மீது பழிதூற்றப்பட்டதாக அல்லது நாம் படுமோசமான வீண்பேச்சுக்கு ஆளானதாக உணருகையில், அந்த வேதனை இன்னும் அதிகமாகிறது. (சங்கீதம் 6:6, 7) ஆனால் புண்பட்ட உணர்ச்சிகளின் நிமித்தம் ஒரு கிறிஸ்தவன் சோர்வுக்கு இடமளித்துவிடக் கூடாது! அப்படிப்பட்ட நிலையில் நீங்கள் இருந்தால் புண்படுத்தியவரிடம் சென்று தயவாக பேசி காரியங்களை சரிசெய்ய நீங்களே முதலாவதாக முயற்சி செய்யுங்கள். (மத்தேயு 5:23, 24; எபேசியர் 4:26) அவரை மன்னிக்க மனதுள்ளவராக இருங்கள். (கொலோசெயர் 3:13) கோபத்தை மனதில் வைக்காமல் இருக்கையில், நம்முடைய புண்பட்ட உணர்ச்சியும் சகோதரனுடன் உறவும் சீரடைய வழி கிடைக்கும். லோத்துவிடம் ஒருவேளை ஆபிரகாமுக்கு ஏதாவது கோபம் ஏற்பட்டிருந்தாலும் அதை அவர் எப்போதும் மனதில் வைத்திருக்கவில்லை. சொல்லப்போனால், லோத்துவையும் அவருடைய குடும்பத்தையும் காப்பாற்ற உடனடியாக செயல்பட்டார்!—ஆதியாகமம் 14:12-16.
நாமே வரவழைத்துக்கொள்ளும் சோதனைகள்
8. (அ) கிறிஸ்தவர்கள் எவ்வாறு ‘அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொள்ளலாம்’? (ஆ) பொருளாதார காரியங்களைப் பற்றி சமநிலையான நோக்குடன் இருக்க ஆபிரகாமால் ஏன் முடிந்தது?
8 சில சோதனைகள் நாமே வரவழைத்துக் கொள்பவை என்பது உண்மையே. உதாரணமாக, இயேசு, தம்மைப் பின்பற்றினோருக்கு இவ்வாறு கட்டளையிட்டார்: “பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்க வேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள்.” (மத்தேயு 6:19) எனினும், சில சகோதரர்கள் ராஜ்ய அக்கறைகளுக்கு மேலாக பொருளாதார காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம் “அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக் கொண்டிருக்கிறார்கள்.” (1 தீமோத்தேயு 6:9, 10) கடவுளைப் பிரியப்படுத்துவதற்காக ஆபிரகாம் பொருளாதார சௌகரியங்களை தியாகம் செய்ய மனமுள்ளவராக இருந்தார். “விசுவாசத்தினாலே அவன் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திலே பரதேசியைப்போலச் சஞ்சரித்து, அந்த வாக்குத்தத்தத்திற்கு உடன் சுதந்தரராகிய ஈசாக்கோடும் யாக்கோபோடும் கூடாரங்களிலே குடியிருந்தான்; ஏனெனில், தேவன் தாமே கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்களுள்ள நகரத்துக்கு அவன் காத்திருந்தான்.” (எபிரெயர் 11:9, 10) ஒரு எதிர்கால ‘நகரத்தில்’ அல்லது கடவுளுடைய அரசாங்கத்தில் ஆபிரகாமுக்கு விசுவாசம் இருந்தது ஐசுவரியங்களின்மீது நம்பிக்கை வைக்காதிருக்க அவருக்கு உதவியது. நாமும் அவ்வாறே செய்வது ஞானமாயிருக்கும் அல்லவா?
9, 10. (அ) முதன்மை நிலைக்கான ஆசை எவ்வாறு சோதனையை உண்டாக்கலாம்? (ஆ) இன்று ஒரு சகோதரன் எவ்வாறு தன்னை ‘சிறியவராக’ நடத்திக்கொள்ளலாம்?
9 மற்றொரு அம்சத்தைக் கவனியுங்கள். இந்த உறுதியான புத்திமதியை பைபிள் கொடுக்கிறது: “ஒருவன், தான் ஒன்றுமில்லாதிருந்தும், தன்னை ஒரு பொருட்டென்று எண்ணினால், தன்னைத்தானே வஞ்சிக்கிறவனாவான்.” (கலாத்தியர் 6:3) மேலும், “ஒன்றையும் வாதினாலாவது வீண் பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே” செய்யும்படியும் நாம் ஊக்குவிக்கப்படுகிறோம். (பிலிப்பியர் 2:3) இந்த புத்திமதியைப் பின்பற்ற தவறுவதன்மூலம் சிலர் தங்களுக்கே சோதனைகளை வரவழைத்துக் கொண்டிருக்கிறார்கள். ‘நல்ல வேலையை’ செய்யும்படியான ஆவலால் தூண்டப்படாமல், முதன்மை நிலைக்காக ஆசைப்பட்டு, சபையில் அந்த சிலாக்கியங்கள் கிடைக்காமல் போகையில் அவர்கள் மனச்சோர்வையும் அதிருப்தியையும் அடைகிறார்கள்.—1 தீமோத்தேயு 3:1.
10 “தன்னைக்குறித்து எண்ண வேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல்” இருப்பதில் ஆபிரகாம் சிறந்த முன்மாதிரி வைத்தார். (ரோமர் 12:3) மெல்கிசேதேக்கை ஆபிரகாம் சந்தித்தபோது, கடவுளிடம் தயவு பெற்ற ஸ்தானத்தில் தான் இருந்ததால் மேம்பட்டவர்போல் ஆபிரகாம் நடந்துகொள்ளவில்லை. அதற்கு மாறாக, மெல்கிசேதேக்கிற்கு தசமபாகம் கொடுப்பதன்மூலம் ஆசாரியராக அவருடைய மேம்பட்ட ஸ்தானத்திற்கு மதிப்புக் காட்டினார். (எபிரெயர் 7:4-7) இன்று கிறிஸ்தவர்களும் அவ்வாறே தங்களைச் ‘சிறியவர்களாக’ நடத்திக்கொள்ள மனமுள்ளோராய் இருக்க வேண்டும், பிரபலமான நிலையில் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது. (லூக்கா 9:48) சபையில் முன்நின்று நடத்துபவர்கள், சில சிலாக்கியங்களை உங்களுக்கு அளிக்காததுபோல் தோன்றினால், குணத்தில் அல்லது காரியங்களை கையாளும் விதத்தில் நீங்கள் என்ன முன்னேற்றங்களைச் செய்யலாம் என்பதைத் தெரிந்துகொள்ள நேர்மையாய் சுயபரிசோதனை செய்து பாருங்கள். உங்களுக்கு கிடைக்காத சிலாக்கியங்களைக் குறித்து மனக்கசப்பு அடையாமல், உங்களுக்கு கிடைத்த சிலாக்கியத்தை—யெகோவாவை அறிந்துகொள்ள மற்றவர்களுக்கு உதவும் சிலாக்கியத்தை—முழுமையாய் பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஆம், “ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்.”—1 பேதுரு 5:6.
காணாதவற்றில் விசுவாசம்
11, 12. (அ) சபையிலுள்ள சிலர் ஏன் அவசர உணர்வை இழக்கலாம்? (ஆ) கடவுளுடைய வாக்குறுதிகளின் மீதுள்ள விசுவாசத்தை மையமாக வைத்தே தன் வாழ்க்கையை அமைத்ததில் ஆபிரகாம் எவ்வாறு சிறந்த முன்மாதிரியாக இருந்தார்?
11 இந்தப் பொல்லாத ஒழுங்குமுறையின் முடிவு தாமதிப்பதுபோல் தோன்றுவது மற்றொரு சோதனையாக இருக்கலாம். 2 பேதுரு 3:12-ன் (NW) பிரகாரம் கிறிஸ்தவர்கள், ‘யெகோவாவின் நாளின் வருகைக்காக காத்திருக்கவும் அதை மனதில் நெருங்க வைத்திருக்கவும்’ வேண்டும். எனினும், அநேகர் இந்த ‘நாளுக்காக’ பல ஆண்டுகளாகவும் சிலர் பல பத்தாண்டுகளாகவும் காத்திருக்கின்றனர். இதன் காரணமாக சிலர் உற்சாகமிழந்து, தங்கள் அவசர உணர்வை இழக்கலாம்.
12 மறுபடியுமாக, ஆபிரகாமின் முன்மாதிரியைக் கவனியுங்கள். கடவுளுடைய வாக்குறுதிகள் அனைத்தும் தன் ஜீவிய காலத்தில் நிறைவேறும் சாத்தியம் இல்லாதபோதிலும், அவற்றின் மீதான விசுவாசத்தை மையமாக வைத்தே தன் முழு வாழ்க்கையையும் அமைத்தார். தன் குமாரன் ஈசாக்கு வளர்ந்து பெரியவனாவதைக் காணும் அளவுக்கு போதிய காலம் உயிரோடிருந்தார் என்பது உண்மைதான். ஆனால், ஆபிரகாமின் சந்ததியாரை, ‘வானத்து நட்சத்திரங்களுக்கும்’ அல்லது ‘கடற்கரை மணலுக்கும்’ ஒப்பிடுவதற்கு பல நூற்றாண்டுகள் கடந்து செல்ல வேண்டியிருந்தது. (ஆதியாகமம் 22:17) எனினும், ஆபிரகாம் மனக்கசப்பு அடையவில்லை அல்லது நம்பிக்கை இழக்கவில்லை. ஆபிரகாமையும் மற்ற முற்பிதாக்களையும் பற்றி அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு சொன்னார்: “இவர்களெல்லாரும், வாக்குத்தத்தம் பண்ணப்பட்டவைகளை அடையாமல், தூரத்திலே அவைகளைக் கண்டு, நம்பி அணைத்துக்கொண்டு, பூமியின்மேல் தங்களை அந்நியரும் பரதேசிகளும் [“தற்காலிகக் குடிகள்,” பொ.மொ.] என்று அறிக்கையிட்டு, விசுவாசத்தோடே மரித்தார்கள்.”—எபிரெயர் 11:13.
13. (அ) இன்று கிறிஸ்தவர்கள் எவ்வாறு ‘தற்காலிக குடிகளைப்’ போல் இருக்கிறார்கள்? (ஆ) யெகோவா ஏன் இந்தக் காரிய ஒழுங்குமுறைக்கு முடிவைக் கொண்டுவருவார்?
13 வாக்குறுதிகளின் நிறைவேற்றம் “தூரத்திலே” இருந்தபோதிலும் அவற்றை மையமாக வைத்து தன் வாழ்க்கையை ஆபிரகாமால் அமைக்க முடிந்ததென்றால், இன்று அவற்றின் நிறைவேற்றம் வெகு சமீபத்தில் இருக்கையில் நாம் எவ்வளவு அதிகமாய் அப்படி வாழ வேண்டும்! ஆபிரகாமைப்போல், சாத்தானின் ஒழுங்குமுறையில் நம்மை ‘தற்காலிக குடிகளாக’ கருதி கட்டுப்பாடற்ற சுயவிருப்ப ஈடுபாடுள்ள வாழ்க்கை முறையைத் தவிர்க்க வேண்டும். “எல்லாவற்றிற்கும் முடிவு” சமீபத்தில் இருக்கிறதென்று அல்ல, ஆனால் உடனடியாக வர வேண்டுமென்று விரும்புவது இயல்பே. (1 பேதுரு 4:7) ஒருவேளை நாம் மோசமான வியாதியால் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கலாம். அல்லது பொருளாதார சுமை நம்மை ஒரேடியாக அழுத்தலாம். எனினும், யெகோவா முடிவைக் கொண்டுவருவதன் நோக்கம், துன்பம் தரும் சூழ்நிலைகளிலிருந்து நம்மை விடுவிப்பதற்கு மட்டுமல்லாமல் தம்முடைய பெயரைப் பரிசுத்தப்படுத்துவதற்குமே என்பதை நினைவில் வைக்க வேண்டும். (எசேக்கியேல் 36:23; மத்தேயு 6:9, 10) முடிவு, நமக்குத் தேவைப்படும் சமயத்தில் அல்ல, யெகோவாவின் நோக்கங்கள் நிறைவேறுவதற்கு மிகவும் பொருத்தமான சமயத்தில் வரும்.
14. கடவுளுடைய பொறுமை எவ்வாறு இன்று கிறிஸ்தவர்களுக்கு நன்மையாய் அமைகிறது?
14 மேலும், “தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் [“யெகோவா,” NW] தமது வாக்குத்தத்தத்தைக் குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் [“உங்கள்மேல்,” NW] நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்” என்பதையும் நினைவில் வையுங்கள். (2 பேதுரு 3:9) கடவுள் “உங்கள்மேல்” அதாவது, கிறிஸ்தவ சபையின் அங்கத்தினர்கள் மேல் “நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்” என்பதைக் கவனியுங்கள். “கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படும்படி,” மாற்றங்களையும் சரிப்படுத்துதல்களையும் செய்ய நம்மில் சிலருக்கு ஒருவேளை அதிக காலம் தேவைப்படலாம். (2 பேதுரு 3:14) அப்படியானால், கடவுள் அத்தகைய பொறுமையைக் காட்டியிருப்பதற்காக நாம் நன்றியுள்ளவர்களாய் இருக்க வேண்டுமல்லவா?
இடையூறுகள் மத்தியிலும் மகிழ்ச்சியைக் கண்டடைதல்
15. சோதனைகளின் மத்தியிலும் இயேசு எவ்வாறு தம் சந்தோஷத்தைக் காத்துக்கொண்டார், அவருடைய மாதிரியைப் பின்பற்றுவது இன்று கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு பயனளிக்கிறது?
15 ஆபிரகாமின் வாழ்க்கை இன்று கிறிஸ்தவர்களுக்கு பல பாடங்களைக் கற்பிக்கிறது. அவர் விசுவாசத்தை மட்டுமல்ல, பொறுமை, விவேகம், தைரியம், தன்னலமற்ற அன்பு ஆகியவற்றையும் காட்டினார். தன் வாழ்க்கையில் யெகோவாவின் வணக்கத்திற்கு முதலிடம் கொடுத்தார். எனினும், நாம் பின்பற்றுவதற்கு உகந்த ஒப்பற்ற முன்மாதிரியை இயேசு கிறிஸ்து வைத்தார் என்பதை நினைவில் வைக்க வேண்டும். அவரும்கூட பல சோதனைகளையும் பரீட்சைகளையும் சந்தித்தார், ஆனால் அவை எல்லாவற்றிலும் தம் சந்தோஷத்தை அவர் இழக்கவே இல்லை. ஏன்? ஏனெனில், தம் முன் இருந்த நம்பிக்கையின்மீது தம்முடைய மனதை ஒருமுகப்படுத்தியிருந்தார். (எபிரெயர் 12:2, 3) ஆகவே, “பொறுமையையும் ஆறுதலையும் அளிக்கும் தேவன், கிறிஸ்து இயேசுவினுடைய மாதிரியின்படியே, நீங்கள் ஏகசிந்தையுள்ளவர்களாயிருக்கும்படி உங்களுக்கு அநுக்கிரகஞ்செய்வாராக” என பவுல் ஜெபித்தார். (ரோமர் 15:6) சரியான மனப்பான்மையுடன் இருந்தால், சாத்தான் கொண்டு வரும் இடையூறுகளின் மத்தியிலும் நாம் சந்தோஷத்தைக் கண்டடையலாம்.
16. நம்முடைய பிரச்சினைகள் மலைபோல் தோன்றுகையில் நாம் என்ன செய்யலாம்?
16 எழும் பிரச்சினைகள் மலைபோல் தோன்றுகையில், யெகோவா ஆபிரகாமை நேசித்ததுபோல் உங்களையும் நேசிக்கிறார் என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் சமாளித்து வெற்றி பெறும்படி அவர் விரும்புகிறார். (பிலிப்பியர் 1:5) உங்கள் முழு நம்பிக்கையையும் யெகோவாவில் வைத்து, “உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்” என்ற உறுதியுடன் இருங்கள். (1 கொரிந்தியர் 10:13) கடவுளுடைய வார்த்தையை தினந்தோறும் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். (சங்கீதம் 1:2) ஜெபத்தில் உறுதியாய்த் தரித்திருங்கள், சகித்து நிலைத்திருக்க உதவும்படி யெகோவாவிடம் கேளுங்கள். (பிலிப்பியர் 4:6) அவர், ‘தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பார்.’ (லூக்கா 11:13) பைபிள் பிரசுரங்கள் போன்று ஆவிக்குரிய விதமாய் உங்களை போஷித்து காத்துவர யெகோவா செய்திருக்கும் ஏற்பாடுகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். மேலும், சகோதரர்களின் ஆதரவையும் நாடுங்கள். (1 பேதுரு 2:17) தவறாமல் கிறிஸ்தவக் கூட்டங்களில் கலந்துகொள்ளுங்கள், ஏனென்றால் அங்கு சகித்து நிலைத்திருக்க தேவைப்படும் ஊக்குவிப்பை நீங்கள் பெறுவீர்கள். (எபிரெயர் 10:24, 25) உங்கள் சகிப்புத் தன்மை கடவுளின் அங்கீகாரத்திற்கு வழிநடத்துகிறது, உங்கள் உண்மைத்தவறாமை அவருடைய இருதயத்தைச் சந்தோஷப்படுத்துகிறது என்ற உறுதியில் சந்தோஷப்படுங்கள்!—நீதிமொழிகள் 27:11; ரோமர் 5:3-5, NW.
17. மனம் சோர்ந்துபோக கிறிஸ்தவர்கள் ஏன் இடமளிப்பதில்லை?
17 ஆபிரகாமை தம்முடைய ‘நண்பனாக’ கடவுள் நேசித்தார். (யாக்கோபு 2:23, பொ.மொ.) அப்படியிருந்தும், ஆபிரகாமின் வாழ்க்கையில் அடுக்கடுக்காக பல சோதனைகளும் துன்பங்களும் வந்த வண்ணமிருந்தன. ஆகையால் இந்தப் பொல்லாத “கடைசி நாட்களில்” அதே விதமான பிரச்சினைகளை கிறிஸ்தவர்கள் எதிர்பார்க்கலாம். உண்மையில், “பொல்லாதவர்களும் எத்தர்களுமானவர்கள் மோசம்போக்குகிறவர்களாகவும், மோசம்போகிறவர்களாகவுமிருந்து மேன்மேலும் கேடுள்ளவர்களாவார்கள்” என்று பைபிள் நம்மை எச்சரிக்கிறது. (2 தீமோத்தேயு 3:1, 13) மனம் சோர்ந்துபோக இடமளிக்காமல் நாம் எதிர்ப்படும் கஷ்டங்கள் சாத்தானின் பொல்லாத ஒழுங்குமுறையின் முடிவு சமீபித்திருப்பதற்கு அத்தாட்சி அளிப்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஆனால், “முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்” என்று இயேசு நமக்கு நினைப்பூட்டுகிறார். (மத்தேயு 24:13) ஆகையால், ‘நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருங்கள்!’ ஆபிரகாமின் மாதிரியைப் பின்பற்றுங்கள், ‘வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்களை விசுவாசத்தினாலும் நீடிய பொறுமையினாலும் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களுள்’ ஒருவராக இருங்கள்.—எபிரெயர் 6:11.
நீங்கள் கவனித்தீர்களா?
• இன்று யெகோவாவின் ஜனங்கள் ஏன் பரீட்சைகளையும் கஷ்டங்களையும் எதிர்பார்க்க வேண்டும்?
• என்ன வழிகளில் சாத்தான் நேரடி தாக்குதல்களைப் பயன்படுத்தலாம்?
• கிறிஸ்தவர்கள் தங்கள் மத்தியிலுள்ள தனிப்பட்ட சச்சரவுகளை எவ்வாறு தீர்த்துக்கொள்ளலாம்?
• செருக்கும் தற்பெருமையும் எவ்வாறு சோதனைகளை உண்டாக்கலாம்?
• கடவுளுடைய வாக்குறுதிகளின் நிறைவேற்றத்திற்காக காத்திருப்பதில் ஆபிரகாம் எப்படி நல்ல முன்மாதிரி வைத்தார்?
[பக்கம் 26-ன் படம்]
கிறிஸ்தவ இளைஞர் பலர் தங்கள் சகாக்களின் சொல்லடியால் துன்புறுத்தப்படுகிறார்கள்
[பக்கம் 29-ன் படம்]
ஆபிரகாமின் நாளில் கடவுளுடைய வாக்குறுதிகளின் நிறைவேற்றம் “தூரத்திலே” இருந்தபோதிலும், அவற்றை சுற்றியே அவர் தன் வாழ்க்கையை அமைத்தார்