ஆபிரகாமை போன்ற விசுவாசத்தைக் காட்டுங்கள்!
“விசுவாசத்தைக் கடைப்பிடிப்பவர்கள் எவர்களோ, அவர்களே ஆபிரகாமின் குமாரர்கள்.” —கலாத்தியர் 3:7, NW.
1. கானானில் எதிர்ப்பட்ட புதிய சோதனையை ஆபிராம் எவ்வாறு சமாளித்தார்?
யெகோவாவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து ஆபிராம் ஊர் பட்டணத்தின் சொகுசான வாழ்க்கையை விட்டு புறப்பட்டிருந்தார். அதற்குப் பின்னான வருடங்களில் அவர் அனுபவித்த கஷ்டநஷ்டங்கள் எகிப்தில் அவர் எதிர்ப்படவிருந்த விசுவாச சோதனைக்கு வெறும் ஆரம்பமாகவே இருந்தன. “அத்தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்று” என பைபிள் பதிவு சொல்லுகிறது. தன் சூழ்நிலைமையை எண்ணி மனக்கசப்படைவது ஆபிராமுக்கு எவ்வளவு எளிதாக இருந்திருக்கும்! அதற்கு மாறாக, அவர் குடும்பத்திற்குத் தேவைப்பட்டவற்றை அளிக்க நடைமுறையான விதத்தில் செயல்பட்டார். ‘தேசத்திலே பஞ்சம் கொடிதாயிருந்தபடியால், ஆபிராம் எகிப்து தேசத்திலே தங்கும்படி அங்கு போனார்.’ எகிப்தில், ஆபிராமின் பெரிய குடும்பம் மற்றவர்களின் கண்களில் படாமல் இருந்திருக்க முடியாது. யெகோவா வாக்குறுதி அளித்தபடியே செய்வாரா, தீங்கேற்படாதபடி ஆபிராமை பாதுகாப்பாரா?—ஆதியாகமம் 12:10; யாத்திராகமம் 16:2, 3.
2, 3. (அ) சாராய் தன் மனைவி என்பதை சொல்லாமல் ஏன் ஆபிராம் மறைத்து வைத்தார்? (ஆ) அந்தச் சூழ்நிலையில் ஆபிராம் தன் மனைவியிடம் எப்படி நடந்துகொண்டார்?
2 ஆதியாகமம் 12:11-13-ல் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “அவன் எகிப்துக்குச் சமீபமாய் வந்தபோது, தன் மனைவி சாராயைப் பார்த்து: நீ பார்வைக்கு அழகுள்ள ஸ்திரீ என்று அறிவேன். எகிப்தியர் உன்னைக் காணும்போது, இவள் அவனுடைய மனைவி என்று சொல்லி, என்னைக் கொன்றுபோட்டு, உன்னை உயிரோடே வைப்பார்கள். ஆகையால், உன்னிமித்தம் எனக்கு நன்மை உண்டாகும்படிக்கும், உன்னாலே என் உயிர் பிழைக்கும்படிக்கும், [“தயவுசெய்து,” NW] நீ உன்னை என் சகோதரி என்று சொல் என்றான்.” 65-க்கும் அதிக வயதுள்ளவளாக சாராய் இருந்தபோதிலும், மனதைக் கவரும் வகையில் இன்னும் அழகாகவே இருந்தாள். அது ஆபிராமின் உயிருக்கு ஆபத்தாக இருந்தது.a (ஆதியாகமம் 12:4, 5; 17:17) அதிலும் முக்கியமாக, யெகோவாவின் நோக்கத்துடன் சம்பந்தப்பட்ட விஷயங்கள் ஆபத்தில் இருந்தன. எப்படியெனில், ஆபிராமினுடைய வித்துவின் மூலம் பூமியின் சகல ஜனத்தாரும் தங்களை ஆசீர்வதித்துக் கொள்வார்களென்று அவர் சொல்லியிருந்தார். (ஆதியாகமம் 12:2, 3, 7) ஆனால் ஆபிராமுக்கோ இன்னமும் பிள்ளை இல்லாதிருந்தது; எனவே அவர் உயிரோடிருப்பது மிக முக்கியம்.
3 முன்பே ஒப்புக்கொண்ட ஒரு சூழ்ச்சியைப் பயன்படுத்துவதை, அதாவது அவள் தன்னுடைய சகோதரி என்று சொல்வதைப் பற்றி தன் மனைவியிடம் ஆபிராம் பேசினார். குடும்பத் தலைவன் என்ற பொறுப்பில் இருந்தபோதிலும் அவர் தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தாமல் ஒத்துழைப்பையும் ஆதரவையும் தரும்படி அவளிடம் கேட்டுக் கொண்டதைக் கவனியுங்கள். (ஆதியாகமம் 12:11-13; 20:13) இதில், அன்புள்ள தலைமை வகிப்பைச் செலுத்தும்படி, கணவர்களுக்கு ஆபிராம் சிறந்த முன்மாதிரி வைத்தார். தான் கீழ்ப்பட்டிருப்பதைச் செயல்களில் காட்டுவதன்மூலம் சாராய் இன்று மனைவிகளுக்கு சிறந்த முன்மாதிரியாக திகழ்கிறாள்.—எபேசியர் 5:23-28; கொலோசெயர் 4:6.
4. தங்கள் சகோதரர்களின் உயிர் ஆபத்தில் இருக்கையில் இன்று கடவுளுடைய உண்மை ஊழியர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?
4 ஆபிராமின் சகோதரி என்று சாராய் தன்னை சொல்லிக் கொள்வது பொருத்தமானதே, ஏனெனில் அவள் உண்மையில் அவருடைய ஒன்றுவிட்ட சகோதரியே. (ஆதியாகமம் 20:12) மேலும், தேவையற்ற ஆட்களிடம் தகவல் தெரிவிக்கும் கட்டாயமும் அவருக்கு இருக்கவில்லை. (மத்தேயு 7:6) கடவுளுடைய உண்மையுள்ள தற்கால ஊழியர்கள், நேர்மையாய் இருக்கும்படியான பைபிளின் கட்டளைக்குக் கீழ்ப்படிகிறார்கள். (எபிரெயர் 13:18) உதாரணமாக, நீதிமன்றத்தில் ஆணையிடுகையில் அவர்கள் ஒருபோதும் பொய் சொல்ல மாட்டார்கள். எனினும், துன்புறுத்துதல் அல்லது உள்நாட்டு கலகம் போன்ற சமயங்களில் உடல் ரீதியிலோ அல்லது ஆவிக்குரிய ரீதியிலோ தங்கள் சகோதரர்களின் உயிர் ஆபத்தில் இருக்கையில் “சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களும் புறாக்களைப்போலக் கபடற்றவர்களுமாய் இருங்கள்” என்ற இயேசுவின் அறிவுரைக்குச் செவிசாய்க்கிறார்கள்.—மத்தேயு 10:16; காவற்கோபுரம், நவம்பர் 1, 1996, பக்கம் 18, பாரா 19-ஐக் காண்க.
5. ஆபிராம் கேட்டுக் கொண்டதை செய்ய சாராய் ஏன் மனமுள்ளவளாக இருந்தாள்?
5 ஆபிராம் கேட்டுக் கொண்டதற்கு சாராய் எப்படி பிரதிபலித்தாள்? அவளைப் போன்ற பெண்களை ‘தேவனிடத்தில் நம்பிக்கையாயிருப்பவர்கள்’ என பேதுரு விவரிக்கிறார். எனவே இதில் உட்பட்டிருந்த ஆவிக்குரிய பிரச்சினையை சாராய் புரிந்துகொண்டாள். அதோடுகூட அவள் தன் கணவரை நேசித்தாள், மரியாதை கொடுத்தாள். ஆகையால், சாராய் ‘தன் புருஷனுக்குக் கீழ்ப்படிந்து,’ தனக்கு மணமாகியிருப்பதை மறைத்து வைக்க தீர்மானித்தாள். (1 பேதுரு 3:5) அவ்வாறு செய்வது நிச்சயம் அவளை ஆபத்திற்குள்ளாக்கும். “ஆபிராம் எகிப்திலே வந்தபோது, எகிப்தியர் அந்த ஸ்திரீயை மிகுந்த அழகுள்ளவளென்று கண்டார்கள். பார்வோனுடைய பிரபுக்களும் அவளைக் கண்டு, பார்வோனுக்கு முன்பாக அவளைப் புகழ்ந்தார்கள். அப்பொழுது அந்த ஸ்திரீ பார்வோனுடைய அரமனைக்குக் கொண்டுபோகப்பட்டாள்.”—ஆதியாகமம் 12:14, 15.
யெகோவா காப்பாற்றினார்
6, 7. என்ன இக்கட்டான சூழ்நிலையை ஆபிராமும் சாராயும் எதிர்ப்பட்டார்கள், சாராயை யெகோவா எவ்வாறு விடுவித்தார்?
6 ஆபிராமுக்கும் சாராய்க்கும் இது எவ்வளவு மனவேதனையை அளித்திருக்கும்! சாராய் கற்பழிக்கப்பட இருந்ததாகவே தோன்றியது. மேலும் சாராய்க்கு மணமாகியிருக்கும் உண்மையை அறியாமல் ஆபிராமுக்கு பார்வோன் ஏராளமான பொருட்களைக் கொடுத்தான். இவ்வாறாக, “அவனுக்கு ஆடுமாடுகளும், கழுதைகளும், வேலைக்காரரும், வேலைக்காரிகளும், கோளிகைக் கழுதைகளும், ஒட்டகங்களும் கிடைத்தது.”b (ஆதியாகமம் 12:16) இந்த வெகுமதிகளைக் காணும்போது ஆபிராமுக்கு எப்பேர்ப்பட்ட வெறுப்புணர்ச்சி ஏற்பட்டிருக்கும்! நிலைமை கைமீறியதாக தோன்றியபோதிலும், யெகோவா ஆபிராமை கைவிடவில்லை.
7 “ஆபிராமுடைய மனைவியாகிய சாராயின் நிமித்தம் கர்த்தர் பார்வோனையும், அவன் வீட்டாரையும் மகா வாதைகளால் வாதித்தார்.” (ஆதியாகமம் 12:17) குறிப்பிடப்படாத ஏதோவொரு வகையில் இந்த ‘வாதைகளுக்கான’ உண்மையான காரணம் பார்வோனுக்கு வெளிப்படுத்தப்பட்டது. அவன் உடனடியாக செயல்பட்டான்: “அப்பொழுது பார்வோன் ஆபிராமை அழைத்து: நீ எனக்கு ஏன் இப்படிச் செய்தாய்? இவள் உன் மனைவி என்று நீ எனக்கு அறிவியாமற்போனதென்ன? இவளை உன் சகோதரி என்று நீ சொல்ல வேண்டுவது என்ன? இவளை நான் எனக்கு மனைவியாகக் கொண்டிருப்பேனே; இதோ உன் மனைவி; இவளை அழைத்துக்கொண்டு போ என்று சொன்னான். பார்வோன் அவனைக் குறித்துத் தன் மனுஷருக்குக் கட்டளை கொடுத்தான்; அவர்கள் அவனையும், அவன் மனைவியையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் அனுப்பிவிட்டார்கள்.”—ஆதியாகமம் 12:18-20; சங்கீதம் 105:14, 15.
8. இன்று கிறிஸ்தவர்களுக்கு என்ன வகையான பாதுகாப்பை யெகோவா வாக்குறுதி அளிக்கிறார்?
8 இன்று, யெகோவா தம்முடைய ஊழியர்களாகிய நம்மை மரணம், குற்றச் செயல், பஞ்சம், அல்லது இயற்கை சேதம் போன்றவற்றிலிருந்து பாதுகாப்பதாக உறுதியளிப்பதில்லை. அவருடன் கொண்டுள்ள நம் உறவுக்கு பங்கம் விளைவிக்கும் செயல்களிலிருந்து நம்மை பாதுகாக்க தேவையான ஏற்பாட்டை எப்போதும் செய்வதாக யெகோவா நமக்கு வாக்குறுதி அளித்திருக்கிறார். (சங்கீதம் 91:1-4) தம்முடைய வார்த்தையின் மூலமும், “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” மூலமும் காலத்திற்கேற்ற எச்சரிக்கைகளை கொடுக்கையில் முக்கியமாய் அவ்வாறு செய்கிறார். (மத்தேயு 24:45, NW) துன்புறுத்துதலினால் வரும் மரண பயமுறுத்துதலைக் குறித்து என்ன சொல்லலாம்? மரணத்தை சந்திக்க சிலர் அனுமதிக்கப்பட்டாலும், தம்முடைய ஜனம் பூண்டோடு அழிக்கப்படுவதை கடவுள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார். (சங்கீதம் 116:15) உண்மையுள்ள சிலரை மரணம் தழுவினாலும், அவர்கள் உயிர்த்தெழுப்பப்படுவார்கள் என்று நாம் நம்பிக்கையுடன் இருக்கலாம்.—யோவான் 5:28, 29.
சமாதானம் காக்க செய்யப்படும் தியாகங்கள்
9. கானானில் இருக்கையில் ஆபிராம் இடம்விட்டு இடம் மாறிக்கொண்டே இருந்தார் என்பதை எது காட்டுகிறது?
9 கானானில் பஞ்சம் முடிவடைந்ததும், “ஆபிராம் தன் மனைவியுடனும், தமக்குரிய எல்லாவற்றுடனும் எகிப்திலிருந்து நெகேபை [யூதா மலைகளுக்கு தெற்கேயுள்ள குறைந்த மழை பெறும் பகுதியை] நோக்கிச் சென்றார். அவருடன் லோத்தும் சென்றார்.” “ஆபிராம் மிருகஜீவன்களும் வெள்ளியும் பொன்னுமான ஆஸ்திகளை உடைய சீமானாயிருந்தான்.” (ஆதியாகமம் 13:1, 2; பொ.மொ.) இவ்வாறு உள்ளூர்வாசிகள் அவரை பலமும் செல்வாக்கும் மிக்க பெரும் தலைவராக கருதினார்கள். (ஆதியாகமம் 23:6) அங்கு நிரந்தரமாக குடியேறி, கானானியரின் அரசியலில் உட்பட ஆபிராமுக்கு துளியும் விருப்பமில்லை. அதற்குப் பதிலாக, “தன் பிரயாணங்களிலே தென்னாட்டிலிருந்து [“நெகேபிலிருந்து” பொ.மொ.] பேதேல் மட்டும், பேதேலுக்கும் ஆயிக்கும் நடுவாகத் தான் முன்பு கூடாரம் போட்டதும், தான் முதல் முதல் ஒரு பலிபீடத்தை உண்டாக்கினதுமான ஸ்தலமட்டும் போய்க்கொண்டேயிருந்தான்.” எப்போதும் போலவே சென்ற இடத்திலெல்லாம் யெகோவாவின் வணக்கத்திற்கு ஆபிராம் முதலிடம் கொடுத்தார்.—ஆதியாகமம் 13:3, 4, தி.மொ.
10. ஆபிரகாமின் மேய்ப்பர்களுக்கும் லோத்தின் மேய்ப்பர்களுக்கும் இடையே என்ன பிரச்சினை தலைதூக்கியது, அது உடனடியாக தீர்க்கப்படுவது ஏன் முக்கியமானதாய் இருந்தது?
10 “ஆபிராமுடனே வந்த லோத்துக்கும் ஆடுமாடுகளும் கூடாரங்களும் இருந்தன. அவர்கள் ஒருமித்துக் குடியிருக்க அந்தப் பூமி அவர்களைத் தாங்கக்கூடாதிருந்தது; அவர்களுடைய ஆஸ்தி மிகுதியாயிருந்தபடியால், அவர்கள் ஒருமித்து வாசம்பண்ண ஏதுவில்லாமற்போயிற்று. ஆபிராமுடைய மந்தை மேய்ப்பருக்கும் லோத்துடைய மந்தை மேய்ப்பருக்கும் வாக்குவாதம் உண்டாயிற்று. அக்காலத்திலே கானானியரும் பெரிசியரும் அத்தேசத்தில் குடியிருந்தார்கள்.” (ஆதியாகமம் 13:5-7) ஆபிராமின் மந்தைகளுக்கும் லோத்துவின் மந்தைகளுக்கும் போதுமானளவு தண்ணீரும் மேய்ச்சல் நிலமும் அந்தப் பகுதியில் இல்லை. இதனால், மேய்ப்பர்களுக்கிடையே பகையும் கோபமும் தலைதூக்கின. உண்மை கடவுளை வணங்குவோருக்கு அத்தகைய சண்டை சச்சரவு பொருந்தாது. அந்த சச்சரவு தொடர்ந்தால், நிரந்தர முறிவு ஏற்படலாம். எனவே இந்த நெருக்கடிநிலையை ஆபிராம் எவ்வாறு சமாளிப்பார்? லோத்தின் தகப்பனுடைய மரணத்திற்குப் பின் லோத்தை தன்னுடைய பிள்ளையாக ஆபிராம் ஏற்றிருந்தார், தன் குடும்பத்தில் ஒருவனைப் போலவே அவரை வளர்த்திருந்தார். இவ்விருவரில் பெரியவரான ஆபிராம் மிகச் சிறந்ததைத் தனக்கென எடுத்துக்கொள்ள உரிமையுடையவர் அல்லவா?
11, 12. லோத்துக்கு ஆபிராம் எதை தாராளமாக விட்டுக் கொடுத்தார், லோத்துவின் தெரிவு ஏன் ஞானமற்றதாக இருந்தது?
11 ஆனால், “ஆபிராம் லோத்தை நோக்கி: எனக்கும் உனக்கும், என் மேய்ப்பருக்கும் உன் மேய்ப்பருக்கும் வாக்குவாதம் வேண்டாம்; நாம் சகோதரர். இந்தத் தேசமெல்லாம் உனக்குமுன் இருக்கிறது அல்லவா? நீ என்னைவிட்டுப் பிரிந்துபோகலாம்; நீ இடதுபுறம் போனால், நான் வலதுபுறம் போகிறேன்; நீ வலதுபுறம் போனால், நான் இடதுபுறம் போகிறேன்” என்றார். “பலஸ்தீனாவை நன்கு பார்க்க முடிந்த உயரமான இடங்களில் ஒன்று” அங்கே பெத்தேலுக்கு அருகில் இருக்கிறது. ஒருவேளை அங்கிருந்தே, “லோத்து தன் கண்களை ஏறெடுத்துப் பார்த்து: யோர்தான் நதிக்கு அருகான சமபூமி முழுவதும் நீர்வளம் பொருந்தினதாயிருக்கக் கண்டான். கர்த்தர் [“யெகோவா,” NW] சோதோமையும் கொமோராவையும் அழிக்கும் முன்னே, சோவாருக்குப் போம் வழிமட்டும் அது கர்த்தருடைய தோட்டத்தைப் போலவும் எகிப்து தேசத்தைப் போலவும் இருந்தது.”—ஆதியாகமம் 13:8-10.
12 லோத்துவை “நீதிமான்” என பைபிள் அழைக்கிறபோதிலும், ஏதோ காரணத்தினால் இந்த விஷயத்தில் அவர் ஆபிராமின் விருப்பத்துக்கு இணங்கி போகவில்லை, முதிர்ச்சி வாய்ந்த அவருடைய கருத்தை கேட்டறிய முயன்றதாகவும் தெரியவில்லை. (2 பேதுரு 2:8) “லோத்து யோர்தானுக்கு அருகான சமபூமி முழுவதையும் தெரிந்துகொண்டு, கிழக்கே பிரயாணப்பட்டுப் போனான்; இப்படி அவர்கள் ஒருவரை ஒருவர் விட்டுப் பிரிந்தார்கள். ஆபிராம் கானான் தேசத்தில் குடியிருந்தான்; லோத்து அந்த யோர்தானுக்கு அருகான சமபூமியிலுள்ள பட்டணங்களில் வாசம்பண்ணி, சோதோமுக்கு நேரே கூடாரம் போட்டான்.” (ஆதியாகமம் 13:11, 12) சோதோம் செல்வ செழிப்புமிக்கதாகவும் அநேக பொருளாதார பயன்களை அளிப்பதாகவும் இருந்தது. (எசேக்கியேல் 16:49, 50) பொருளாதார நோக்குநிலையில் லோத்துவின் தெரிவு ஞானமானதாக தோன்றினாலும், ஆவிக்குரிய நோக்குநிலையில் ஞானமற்றதாக இருந்தது. ஏன்? ஏனெனில், “சோதோமின் ஜனங்கள் மிகப் பொல்லாதவர்களும் யெகோவாவின் பார்வையில் மகா பாவிகளுமாயிருந்தார்கள்” என்று ஆதியாகமம் 13:13 (தி.மொ.) சொல்கிறது. அங்கு மாறிச் செல்வதற்கு லோத்து எடுத்த முடிவு அவருடைய குடும்பத்திற்கு மிகுந்த துக்கத்தைக் கொண்டு வரவிருந்தது.
13. பண சம்பந்தமான தகராறுகளில் உட்படும் கிறிஸ்தவர்களுக்கு ஆபிராமின் முன்மாதிரி எப்படி உதவியாக இருக்கும்?
13 தன்னுடைய வித்துவிற்கு முடிவில் அந்த முழு தேசமும் சொந்தமாகும் என்ற யெகோவாவின் வாக்குறுதியில் ஆபிராம் விசுவாசம் வைத்தார். அதில் ஒரு சிறிய பகுதிக்காக அவர் விவாதிக்கவில்லை. “ஒவ்வொருவனும் தன் சுயபிரயோஜனத்தைத் தேடாமல், பிறனுடைய பிரயோஜனத்தைத் தேடக்கடவன்” என்று பின்னர் 1 கொரிந்தியர் 10:24-ல் குறிப்பிடப்பட்ட நியமத்துக்கு இசைவாக தயாள குணத்துடன் நடந்து கொண்டார். சக விசுவாசியோடு பண சம்பந்தமான தகராறுகளில் உட்படுவோருக்கு இது சிறந்த நினைப்பூட்டுதலாகும். மத்தேயு 18:15-17-லுள்ள புத்திமதியைப் பின்பற்றுவதற்குப் பதிலாக, சிலர் தங்கள் சகோதரரை நீதிமன்றம் வரை கொண்டு சென்றிருக்கின்றனர். (1 கொரிந்தியர் 6:1, 7) யெகோவாவின் பெயருக்கு அவமரியாதையை ஏற்படுத்துவதற்கோ கிறிஸ்தவ சபையின் சமாதானத்தைக் கெடுப்பதற்கோ பதிலாக பண சம்பந்தமான இழப்பைச் சகிப்பது மேல் என்பதை ஆபிராமின் முன்மாதிரி சுட்டிக்காட்டுகிறது.—யாக்கோபு 3:18.
14. தன்னுடைய தயாள குணத்திற்காக ஆபிராம் எவ்வாறு ஆசீர்வதிக்கப்படவிருந்தார்?
14 தன்னுடைய தயாள குணத்திற்காக ஆபிராம் ஆசீர்வதிக்கப்படவிருந்தார். “உன் சந்ததியைப் பூமியின் தூளைப்போலப் பெருகப்பண்ணுவேன்; ஒருவன் பூமியின் தூளை எண்ணக்கூடுமானால், உன் சந்ததியும் எண்ணப்படும்” என கடவுள் அறிவித்தார். பிள்ளை பாக்கியமற்ற ஆபிராமுக்கு இந்த வெளிப்படுத்துதல் எவ்வளவு உற்சாகம் அளித்திருந்திருக்கும்! அடுத்து, “நீ எழுந்து தேசத்தின் நீளமும் அகலமும் எம்மட்டோ, அம்மட்டும் நடந்து திரி; உனக்கு அதைத் தருவேன்” என கடவுள் கட்டளையிட்டார். (ஆதியாகமம் 13:16, 17) நகர வாழ்க்கை தரும் சௌகரியத்தில் நிரந்தரமாக தங்குவதற்கு ஆபிராம் அனுமதிக்கப்பட மாட்டார். அவர் கானானியரிலிருந்து எப்போதும் விலகியிருக்க வேண்டும். அதே போலவே, இன்று கிறிஸ்தவர்களும் இந்த உலகத்திலிருந்து எப்போதும் விலகியிருக்க வேண்டும். மற்றவர்களைவிட மேலானவர்களாக தங்களைக் கருதாதபோதிலும் வேதப்பூர்வமற்ற நடத்தையில் ஈடுபடுவதற்கு தந்திரமாக தூண்டுகிறவர்களுடன் அவர்கள் நெருங்கிய கூட்டுறவு வைத்துக் கொள்கிறதில்லை.—1 பேதுரு 4:3, 4.
15. (அ) ஆபிராம் சுற்றி பயணப்பட்டதற்கு என்ன உட்கருத்து இருந்திருக்கலாம்? (ஆ) இன்று கிறிஸ்தவ குடும்பங்களுக்கு ஆபிராம் வைத்த சிறந்த முன்மாதிரி என்ன?
15 பைபிள் காலங்களில், ஒருவன் நிலத்தை வாங்குவதற்கு முன்பு அதைப் பார்வையிட உரிமை பெற்றிருந்தான். இதற்காக சுற்றி பயணப்பட்டது, அந்த நிலம் என்றோ ஒரு நாள் ஆபிராமின் சந்ததியாருக்கு உரியதாகும் என்பதை தொடர்ந்து நினைப்பூட்டியிருக்கலாம். கீழ்ப்படிதலுடன், “[ஆபிராம் தொடர்ந்து கூடாரங்களில் தங்கி வந்தார். பின்னர்,” NW] ஆபிராம் கூடாரத்தைப் பெயர்த்துக்கொண்டுபோய், எபிரோனிலிருக்கும் மம்ரேயின் சமபூமியில் சேர்ந்து குடியிருந்து, அங்கே கர்த்தருக்கு [“யெகோவாவுக்கு,” NW] ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.” (ஆதியாகமம் 13:18) எல்லாவற்றிற்கும் மேலாக வணக்கத்திற்கு முதலிடம் கொடுத்ததை ஆபிராம் மீண்டும் ஒரு முறை நிரூபித்தார். எல்லாவற்றிற்கும் மேலாக, குடும்பப் படிப்பு, குடும்ப ஜெபம், கூட்டத்திற்கு போவது ஆகியவற்றிற்கு உங்கள் குடும்பத்தில் முதலிடம் கொடுக்கப்படுகிறதா?
பகைவனின் தாக்குதல்
16. (அ) ஆதியாகமம் 14:1-லுள்ள தொடக்க வார்த்தைகள் முன்னறிகுறியான தொனியில் இருப்பதேன்? (ஆ) கிழக்கத்திய ராஜாக்கள் நால்வர் படையெடுத்து வந்ததற்கு காரணம் என்ன?
16 “சிநெயாரின் ராஜாவாகிய அம்ராப்பேலும், ஏலாசாரின் ராஜாவாகிய அரியோகும், ஏலாமின்c ராஜாவாகிய கெதர்லாகோமேரும், ஜாதிகளின் ராஜாவாகிய திதியாலும் இருந்த நாட்களில்; அவர்கள் . . . யுத்தம் பண்ணினார்கள்.” மூல எபிரெய மொழியில், இந்த வசனத்தின் தொடக்க வார்த்தைகள் முன்னறிகுறியான தொனியில் உபயோகிக்கப்படுகின்றன, ‘சோதனையின் காலப் பகுதி ஆசீர்வாதத்தில் முடிவடைவதைக் குறிக்கின்றன.’ (ஆதியாகமம் 14:1, 2; NW அடிக்குறிப்பு) இந்த நான்கு கிழக்கத்திய ராஜாக்களும் அவர்களுடைய சேனைகளும் கானானைப் பாழாக்கும் படையெடுப்பை நடத்தியபோது இந்த சோதனை தொடங்கியது. அவர்களுடைய படையெடுப்பின் நோக்கம்? சோதோம், கொமோரா, அத்மா, செபோயீம், பேலா ஆகிய இந்த ஐந்து நகரங்களின் கலகத்தை அடக்கி ஒடுக்குவதே. அந்நகரங்கள் அனைத்தின் எதிர்ப்பையும் இவர்கள் முறியடித்த பின்பு, “இவர்களெல்லாரும் உப்புக்கடலாகிய சித்தீம் பள்ளத்தாக்கிலே கூடினார்கள்.” லோத்தும் அவருடைய குடும்பத்தாரும் அருகில் வாழ்ந்து வந்தார்கள்.—ஆதியாகமம் 14:3-7.
17. லோத்துவை சிறைபிடித்து சென்றது ஏன் ஆபிராமுக்கு விசுவாச பரீட்சையாக இருந்தது?
17 படையெடுத்து வந்தவர்களுடன் கானானிய ராஜாக்கள் கடுமையாய் போரிட்டார்கள், ஆனால் அவர்களுக்கு மிஞ்சியதெல்லாம் பெரும் தோல்வியே. “அப்பொழுது அவர்கள் [“வெற்றி பெற்றவர்கள்” பொ.மொ.] சோதோமிலும் கொமோராவிலுமுள்ள பொருள்கள் எல்லாவற்றையும், போஜனபதார்த்தங்கள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள். ஆபிராமின் சகோதரனுடைய குமாரனாகிய லோத்து சோதோமிலே குடியிருந்தபடியால், அவனையும், அவன் பொருள்களையும் கொண்டுபோய்விட்டார்கள்.” இந்த நாசகரமான சம்பவங்களைப் பற்றிய செய்தி சீக்கிரத்தில் ஆபிராமை எட்டியது. ‘தப்பியோடின ஒருவன் எபிரெயனாகிய ஆபிராமிடத்தில் வந்து அதை அறிவித்தான்; ஆபிராம் தன்னோடே உடன்படிக்கை செய்திருந்த மனிதராகிய எஸ்கோலுக்கும் ஆநேருக்கும் சகோதரனாகிய மம்ரே என்னும் எமோரியனுடைய சம பூமியிலே அப்பொழுது குடியிருந்தான். [“இவ்வாறு,” NW] தன் சகோதரன் சிறையாகக் கொண்டுபோகப்பட்டதை ஆபிராம் கேள்விப்பட்டார்.’ (ஆதியாகமம் 14:8-14) எத்தகைய விசுவாசப் பரீட்சை! தேசத்தின் மிகச் சிறந்த பகுதியை எடுத்துக் கொண்டதற்காக தன்னுடைய சகோதரன் மகன்மீது ஆபிராம் கோபத்தை வளர்த்துக் கொண்டிருந்தாரா? மேலும், படையெடுத்து வந்தவர்கள் அவருடைய தாய் நாடாகிய சிநெயாரிலிருந்து வந்தவர்கள் என்பதையும் நினைவில் வையுங்கள். அவர்களுக்கு விரோதமாக போரிடுவது, வீடு திரும்பும் வாய்ப்பே இல்லாமல் போகச் செய்யலாம். அதுமட்டுமல்லாமல், ஒன்றிணைந்த கானானிய படைகளால் தோற்கடிக்க முடியாத ஒரு படையை எதிர்த்து ஆபிராம் என்ன செய்ய முடியும்?
18, 19. (அ) ஆபிராமால் எவ்வாறு லோத்துவை விடுவிக்க முடிந்தது? (ஆ) அதற்குரிய புகழ் யாருக்கு உரித்தாகியது?
18 யெகோவாவின்மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்ததை ஆபிராம் மறுபடியும் நிரூபித்தார். “தன் வீட்டிலே பிறந்த கைபடிந்தவர்களாகிய முந்நூற்றுப் பதினெட்டு ஆட்களுக்கும் ஆயுதம் தரிப்பித்து, தாண் என்னும் ஊர்மட்டும் அவர்களைத் தொடர்ந்து, இராக்காலத்திலே அவனும் அவன் வேலைக்காரரும் பிரிந்து, பவிஞ்சுகளாய் அவர்கள்மேல் விழுந்து, அவர்களை முறியடித்து, தமஸ்குவுக்கு இடதுபுறமான ஓபாமட்டும் துரத்தி, சகல பொருள்களையும் திருப்பிக் கொண்டுவந்தான்; தன் சகோதரனாகிய லோத்தையும், அவனுடைய பொருள்களையும், ஸ்திரீகளையும், ஜனங்களையும் திருப்பிக்கொண்டுவந்தான்.” (ஆதியாகமம் 14:14-16) யெகோவாவின்மீது அசைக்க முடியாத விசுவாசம் வைப்பவராய் ஆபிராம், மிகவும் சொற்ப ஜனமுள்ள தன் படைகள் வெற்றிவாகை சூட வழிநடத்தினார், லோத்துவையும் அவருடைய குடும்பத்தாரையும் மீட்டு வந்தார். வழியில் சாலேமின் அரசரும் ஆசாரியருமாயிருந்த மெல்கிசேதேக்கை எதிர்ப்பட்டார். “உன்னதமான தேவனுடைய ஆசாரியனாயிருந்த சாலேமின் ராஜாவாகிய மெல்கிசேதேக்கு அப்பமும் திராட்சரசமும் கொண்டுவந்து, அவனை ஆசீர்வதித்து: வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனுடைய ஆசீர்வாதம் ஆபிராமுக்கு உண்டாவதாக. உன் சத்துருக்களை உன் கையில் ஒப்புக்கொடுத்த உன்னதமான தேவனுக்கு ஸ்தோத்திரம் என்று சொன்னான். இவனுக்கு ஆபிராம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான்.”—ஆதியாகமம் 14:18-20.
19 ஆம், வெற்றி யெகோவாவுக்கே உரியது. தன்னுடைய விசுவாசத்தினால் ஆபிராம் மீண்டும் யெகோவா அருளின விடுதலையை அனுபவித்தார். இன்று கடவுளுடைய ஜனங்கள் எந்தப் போரிலும் ஈடுபடுகிறதில்லை, ஆனால் அவர்கள் அநேக பரீட்சைகளையும் சவால்களையும் எதிர்ப்படுகிறார்கள். அவற்றை வெற்றிகரமாக சமாளிக்க ஆபிராமின் முன்மாதிரி எப்படி உதவலாம் என்பதை எமது அடுத்த கட்டுரை விளக்கும்.
[அடிக்குறிப்புகள்]
a வேதாகமத்தின்பேரில் உட்பார்வை (யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது) என்ற ஆங்கில புத்தகத்தின்படி “கண்ணுக்கு அழகான ஒரு பெண்ணை பிடித்த பின்பு அவளுடைய கணவனைக் கொன்றுபோடும்படி ஆயுதந்தரித்த ஆட்களுக்கு கட்டளையிட்ட பார்வோன் ஒருவனைப் பற்றி பூர்வ பப்பைரஸ் ஒன்று சொல்கிறது.” ஆகையால் ஆபிராமின் பயம் நியாயமானதே.
b பின்னர் ஆபிராமின் மறுமனையாட்டியாக ஆன ஆகார், இந்தச் சமயத்தில் ஆபிராமுக்குக் கொடுக்கப்பட்ட வேலைக்காரிகளில் ஒருத்தியாக இருந்திருக்கலாம்.—ஆதியாகமம் 16:1.
c ஏலாமுக்கு சிநெயாரில் அந்தளவு செல்வாக்கு இருக்கவில்லை, கெதர்லாகோமேரின் தாக்குதலைப் பற்றிய விவரப் பதிவு ஜோடிக்கப்பட்டது என விமர்சகர்கள் ஒரு காலத்தில் சொன்னார்கள். பைபிள் விவரப் பதிவை ஆதரிக்கும் தொல்பொருள் ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட அத்தாட்சிக்கு ஆங்கில காவற்கோபுரம், ஜூலை 1, 1989, பக்கங்கள் 4-7-ஐக் காண்க.
நீங்கள் கவனித்தீர்களா?
• கானான் தேசத்தில் உண்டான பஞ்சம் எப்படி ஆபிராமுக்கு விசுவாச பரீட்சையாக அமைந்தது?
• ஆபிராமும் சாராயும் இன்றைய கணவன், மனைவிக்கு எப்படி சிறந்த முன்மாதிரி வைத்தார்கள்?
• தன் ஊழியக்காரருக்கும் லோத்துவின் ஊழியக்காரருக்கும் இடையிலான சண்டையை தீர்த்து வைக்க ஆபிராம் கையாண்ட முறையிலிருந்து என்ன பாடங்களை கற்றுக்கொள்ளலாம்?
[பக்கம் 22-ன் படம்]
ஆபிராம் தன் உரிமைகளை வற்புறுத்தவில்லை, தன்னுடைய அக்கறைகளைவிட லோத்தின் அக்கறைகளையே முன்னாக வைத்தார்
[பக்கம் 24-ன் படம்]
தன் சகோதரன் மகனாகிய லோத்துவை மீட்பதில் ஆபிராம் யெகோவாவில் நம்பிக்கை வைத்தார்