நம்முடைய மகத்தான போதகரிடமிருந்து நீங்கள் கற்றுக்கொள்கிறீர்களா?
“ஸ்பெய்னிலுள்ள மிகச் சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றில் நான் ஐந்து வருடங்களாக சட்டவியலைப் படித்தேன். ஆனால் நான் பைபிளைப் படிக்க ஆரம்பித்தபோது என்ன கற்றுக்கொண்டேனோ அது மிகவும் மேம்பட்டதாக இருந்தது. எப்படிப் படிக்கவேண்டும் என்று பல்கலைக்கழகம் எனக்குக் கற்றுக்கொடுத்தது; எப்படி வாழவேண்டும் என்று பைபிள் எனக்குக் கற்றுக்கொடுத்தது,” என்று கூலியோ விவரித்தார்.
பைபிளின் வாயிலாக நாம் கடவுளுடைய எண்ணங்களை, அவருடைய நியமங்களை, அவருடைய போதனைகளைத் தெரிந்துகொள்ள முடிகிறது. வேத எழுத்துக்கள் யெகோவாவை “மகத்தான போதகர்,” என்று விவரிக்கின்றன, ஏனென்றால் அவரே பிரபஞ்சத்தில் மிகச் சிறந்த போதகராக இருக்கிறார். (ஏசாயா 30:20, NW) சொல்லர்த்தமாக, எபிரெய பதிவு அவரை “போதகர்கள்” என்பதாக—மகத்துவத்தைக் குறிக்கும் வண்ணம் பலர்பாலில்—அழைக்கிறது. யெகோவாவால் போதிக்கப்படுவது, எந்தவொரு ஆசிரியருக்குக்கீழ் படிப்பதைவிடவும் மிகவும் மேம்பட்டதாக இருக்கிறது என்பதை இது நமக்கு நினைவுபடுத்தவேண்டும்.
யெகோவாவிடமிருந்து நடைமுறையான ஞானம்
தெய்வீக போதனை ஏன் அவ்வளவு பயனுள்ளதாக இருக்கிறது? முதலாவதாக, விலைமதிக்க முடியாத அதன் பொருளடக்கத்தின் காரணமாகவே. யெகோவாவின் போதனை நமக்கு ‘நடைமுறையான ஞானத்தை’ தருகிறது. மேலுமாக, கடவுளால் கொடுக்கப்பட்ட ஞானம், அதை நடைமுறையில் கடைப்பிடிப்பவர்களுக்கு “ஜீவனைத் தரும்.”—நீதிமொழிகள் 3:21, 22; பிரசங்கி 7:12.
சங்கீதம் 119-ஐ இயற்றியவர், யெகோவாவின் ஞானம் தன் வாழ்க்கை முழுவதும் தன்னைப் பாதுகாத்திருந்ததாக உணர்ந்தார். உதாரணமாக, அவர் பாடினார்: “அநேகமாயிரம் பொன் வெள்ளியைப்பார்க்கிலும், நீர் விளம்பின வேதமே எனக்கு நலம். உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், என் துக்கத்திலே அழிந்துபோயிருப்பேன். நீர் உம்முடைய கற்பனைகளைக் கொண்டு என்னை என் சத்துருக்களிலும் அதிக ஞானமுள்ளவனாக்குகிறீர்; அவைகள் என்றைக்கும் என்னுடனே இருக்கிறது. உம்முடைய சாட்சிகள் என் தியானமாயிருக்கிறபடியால், எனக்குப் போதித்தவர்களெல்லாரிலும் அறிவுள்ளவனாயிருக்கிறேன்.”—சங்கீதம் 119:72, 92, 98, 99.
யெகோவாவுடைய சட்டம் இல்லாதிருந்தால் ‘தன் துக்கத்திலேயே அழிந்துபோயிருப்பது’ சங்கீதக்காரன் ஒருவர் மட்டுமே அல்ல. ஸ்பெய்னைச் சேர்ந்த இளம் பெண்ணான ரோஸா, தெய்வீக நியமங்களைப் பொருத்திப் பிரயோகித்ததனாலேயே தன் உயிர் காக்கப்பட்டதாக உறுதியாக நம்புகிறாள். “26 வயதிற்குள், ஏற்கெனவே இரு முறை தற்கொலை செய்ய நான் முயன்றிருந்தேன்,” என்று அவள் நினைவுகூருகிறாள்.
ரோஸா வேசித்தனத்திலும், அதோடு மதுபானம் மற்றும் போதைப்பொருள் துர்ப்பிரயோகத்திலும் ஈடுபட்டிருந்தாள். “ஒரு நாள், மிக ஆழ்ந்த மனச்சோர்வு நிலையில் நான் இருந்தபோது, நம்முடைய பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண பைபிள் எப்படி உதவிசெய்ய முடியும் என்று ஒரு சாட்சி தம்பதி என்னிடம் பேசினார்கள். நான் கடவுளுடைய வார்த்தையைப் படிக்க ஆரம்பித்தேன்; அது என்னை ஈர்ப்பதாகக் கண்டேன். ஒரு மாதத்திற்குள், வாழ்க்கையில் ஒரு சுத்தமான, புதிய ஆரம்பத்தைக் கொண்டிருக்க எனக்கு பெலன் இருந்தது. இப்போது, வாழ்க்கையில் எனக்கு ஒரு நோக்கம் இருந்ததால், மதுபானம் அல்லது போதைப்பொருட்களின் உதவி எனக்கு இனிமேலும் தேவைப்படவில்லை. மேலும், நான் அந்தளவிற்கு யெகோவாவின் நண்பராக இருக்கவேண்டும் என்று விரும்பியதால், அவருடைய தராதரங்களுக்கு ஏற்ப வாழும்படி தீர்மானமாய் இருந்தேன். கடவுளுடைய வார்த்தையின் நடைமுறையான ஞானம் இல்லாதிருந்திருந்தால், இப்போதெல்லாம், என் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவந்திருப்பேன்,” என்று அவள் சொல்கிறாள்.
உண்மையிலேயே, யெகோவாவிடமிருந்து வரும் ஞானம் உயிரைப் பாதுகாப்பதாய் இருக்கிறது. ஆகவே, தெய்வீக போதனையின் விலைமதிக்க முடியாத பொருளடக்கத்திலிருந்து மட்டுமல்லாமல், யெகோவா தம்முடைய ஊழியர்களைப் போதிப்பதற்காகப் பயன்படுத்தும் வழிமுறையிலிருந்தும் பயனடையலாம். நாம் போதகர்களாகவும் சீஷரை உண்டாக்குபவர்களாகவும் இருக்கவேண்டும் என்று கடவுளுடைய மகனாகிய இயேசு கிறிஸ்து கட்டளையிட்டிருப்பதால், போதனையை அளிப்பதற்கான மிகத் திறம்பட்ட முறைகளை நாம் கற்றுக்கொள்ள விரும்புகிறோம்.—மத்தேயு 28:19, 20.
யெகோவா உவமைகளைப் பயன்படுத்தியவிதம்
“உவமைகளினாலேயன்றி [இயேசு] அவர்களுக்கு ஒன்றும் சொல்லவில்லை,” என்று மாற்கு சுவிசேஷம் சொல்கிறது. (மாற்கு 4:34) இயேசுவின் போதனையில் இந்தக் குறிப்பிடத்தக்க அம்சம் ஆச்சரியத்திற்குரியதல்ல. இஸ்ரவேல் தேசத்திற்கு யெகோவாவின் தீர்க்கதரிசன செய்திகள் தெரியப்படுத்தப்பட்ட வழிகளில் ஒன்றை அவர் வெறுமனே பின்பற்றினார். இவை எண்ணற்ற தெளிவான உவமைகளைக் கொண்டிருக்கின்றன.—ஏசாயா 5:1-7; எரேமியா 18:1-11; எசேக்கியேல் 15:2-7; ஓசியா 11:1-4.
உதாரணமாக, விக்கிரகங்கள் பயனற்றவை என்பதை நமக்குப் போதிப்பதற்காக யெகோவா எப்படி ஒரு சிறந்த விளக்கத்தைப் பயன்படுத்துகிறார் என்று கவனியுங்கள். ஏசாயா 44:14-17 குறிப்பிடுகிறது: “அவன் தனக்குக் கேதுருக்களை வெட்டுகிறான்; ஒரு மருதமரத்தையாவது ஒரு கர்வாலிமரத்தையாவது, தெரிந்துகொண்டு, காட்டுமரங்களிலே பெலத்த மரத்தை . . . அல்லது அசோக மரத்தை நடுகிறான், . . . மனுஷனுக்கு அவைகள் அடுப்புக்காகும்போது, அவன் அவைகளில் எடுத்துக் குளிர்காய்கிறான்; நெருப்பை மூட்டி அப்பமும் சுடுகிறான்; அதினால் ஒரு தெய்வத்தையும் உண்டுபண்ணி, அதைப் பணிந்துகொள்ளுகிறான்; ஒரு விக்கிரகத்தையும் அதினால் செய்து, அதை வணங்குகிறான். அதில் ஒரு துண்டை அடுப்பில் எரிக்கிறான்; ஒரு துண்டினால் இறைச்சியைச் சமைத்துப் புசித்து, பொரியலைப் பொரித்துத் திருப்தியாகி, . . . அதில் மீதியான துண்டைத் தனக்கு விக்கிரகதெய்வமாகச் செய்து, அதற்குமுன் விழுந்து, அதை வணங்கி: நீ என் தெய்வம், என்னை இரட்சிக்கவேண்டும் என்று அதை நோக்கி மன்றாடுகிறான்.” நேர்மை இருதயமுள்ள ஆட்கள் விக்கிரக ஆராதனையையும் பொய் கோட்பாடுகளையும் நிராகரிப்பதற்கு உதவ இதுபோன்ற உவமைகள் சிறந்த உபகரணங்களாக இருக்கின்றன.
உள்ளத்தை ஊடுருவும் கேள்விகள்
எண்ணத்தைத் தூண்டும் கேள்விகள் மூலமாக யெகோவா எப்படித் தம்முடைய ஊழியர்கள் சிலரின் சிந்தனாமுறையை மாற்றியமைத்தார் என்பதைக் குறித்தும் பைபிள் உதாரணங்களைக் கொண்டிருக்கிறது. இவர்களில் ஒருவர் கோத்திரப் பிதாவாகிய யோபு. கடவுளோடு ஒப்பிடுகையில் தன்னுடைய சொந்த கீழான நிலையை மதிப்பிடுவதற்கு யெகோவா அவருக்குப் பொறுமையாக உதவி செய்தார். இது ஒரு கேள்வித் தொடரின் மூலமாகச் செய்யப்பட்டது; அவற்றிற்குப் பதிலளிக்க நம்பிக்கையற்றவிதத்தில் யோபு தகுதியற்றவராக இருந்தார்.
யெகோவா யோபிடம் கேட்டார்: “நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கேயிருந்தாய்? . . . சமுத்திரம் புரண்டுவந்தபோது, அதைக் கதவுகளால் அடைத்தவர் யார்? அறுமீன் நட்சத்திரத்தின் சுகிர்த சம்பந்தத்தை நீ இணைக்கக்கூடுமோ? அல்லது மிருகசீரிஷத்தின் கட்டுகளை அவிழ்ப்பாயோ? . . . தேவனுடைய புயத்தைப்போல் உனக்குப் புயமுண்டோ?” தாழ்மைப்படுத்தக்கூடிய இந்த வினவுதல், இந்த மிக முக்கியமான கேள்வியை உள்ளடக்கியது: “நீ உன்னை நீதிமானாக்கிக் கொள்ளும்படிக்கு என்மேல் [யெகோவாவின்மேல்] குற்றஞ்சுமத்துவாயோ?”—யோபு 38:4, 8, 31; 40:8, 9.
யோபு புரிந்துகொள்ளுதல் இல்லாமல் பேசிவிட்டார் என்பதை இந்த ஊடுருவும் கேள்விகள் உணர வைத்தன. எனவே, அவர் தன் தவறை ஏற்றுக்கொண்டு மனந்திரும்பினார். (யோபு 42:6) இந்தச் சம்பவத்தில் ஏற்பட்டதுபோலவே, நம்முடைய பிள்ளைகள் அல்லது பைபிள் மாணாக்கர்களின் பாகத்தில் தவறான சிந்தனாமுறையை சரிப்படுத்த நன்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகள் உதவக்கூடும்.
நம்பிக்கையை வளர்த்தல்
தகுதியற்றவராக அல்லது திறமையற்றவராக உணரும் ஒருவருக்கு உதவவேண்டுமானால் நாம் என்ன செய்யலாம்? யெகோவாவுக்கும் அவருடைய தீர்க்கதரிசியாகிய மோசேக்கும் இடையில் நடந்த ஒரு உரையாடல் இதன் சம்பந்தமாக நமக்கு உதவியாக இருக்கும். பார்வோனுக்கும் இஸ்ரவேலருக்கும் முன்பாக கடவுளின் சார்பாக பேசுகிறவராக மோசேயை அவர் நியமித்தபோது, அந்த வேலையைக் கையாள திறமையற்றவராக அந்தத் தீர்க்கதரிசி கருதினார். “நான் திக்குவாயும் மந்த நாவும் உள்ளவன்,” என்று அவர் சொன்னார். என்றபோதிலும், கடவுள் இவ்வாறு பதிலளித்தார்: “மனுஷனுக்கு வாயை உண்டாக்கினவர் யார்? . . . கர்த்தராகிய நான் அல்லவா? ஆதலால், நீ போ; நான் உன் வாயோடே இருந்து, நீ பேசவேண்டியதை உனக்குப் போதிப்பேன்.”—யாத்திராகமம் 4:10-12.
மோசேயின் சகோதரனாகிய ஆரோனை அவர் சார்பாகப் பேசும்படி யெகோவா நியமித்தார்; அவர்கள் எகிப்தில் தங்கள் வேலையை நிறைவேற்ற ஆரம்பித்தனர். (யாத்திராகமம் 4:14-16) முதன்முதலாக வீட்டுக்கு வீடு ஊழியத்திலோ தெரு ஊழியத்திலோ ஈடுபடுகையில், யெகோவாவின் அநேக சாட்சிகள் மோசேயுடையதைப் போன்ற தகுதியற்ற உணர்ச்சிகளைப் பகிர்ந்திருக்கின்றனர். மோசேயுடைய காரியத்தில் சம்பவித்ததைப் போலவே, யெகோவாவின் பக்க ஆதரவை நாம் கொண்டிருப்போம் என்றும், அனுபவமுள்ள ஒரு ஊழியர் நம்மோடுகூட இருப்பார் என்றும் அறிந்திருப்பது நம் தயக்கத்தை மேற்கொள்ள நமக்கு உதவும். உபாகமம் என்னும் பைபிள் புத்தகம் முழுவதிலும் காணப்படும் வல்லமையான பேச்சுக்களைக் கொடுக்கும் அளவிற்கு மோசேயால் நம்பிக்கையை வளர்க்க முடிந்ததுபோலவே, நாமும் யெகோவாவின் உதவியால் நம்முடைய பேசும் திறமையை வளர்க்க முடியும்.
பொருளுணர்த்தும் பாடம்
மற்றவர்களுக்கு உதவும்படியான ஒரு உண்மையான விருப்பமும் இன்றியமையாததாய் இருக்கிறது. இந்தக் குணத்தில்தான் தீர்க்கதரிசியாகிய யோனா குறைவுபட்டார். நினிவே பட்டணத்திற்கு வரப்போகும் அழிவைப்பற்றி மக்களுக்கு எச்சரிக்கும்படி யெகோவா யோனாவை நியமித்தார். வியப்பிற்குரியவிதத்தில், நினிவே பட்டணத்தார் மனந்திரும்பினார்கள். (யோனா 3:5) அதன் விளைவாக, யெகோவா பேரழிவைத் தள்ளிவைத்தார். என்றபோதிலும், தன்னுடைய பிரசங்க ஊழியத்தின் வெற்றியைக் குறித்து அளவுகடந்த சந்தோஷமடைவதற்கு மாறாக, தன்னுடைய முன்னறிவிப்பு நிறைவேற்றப்படாமல் போகும் என்பதால் யோனா கோபமடைந்தார். சரியான நோக்குநிலையைக் கொண்டிருக்கும்படி யெகோவா அவருக்கு எப்படி உதவினார்?
மற்றவர்கள்மீது அக்கறை கொண்டிருப்பதன் முக்கியத்துவத்தை யோனாவுக்குக் கற்றுக்கொடுக்க யெகோவா ஒரு ஆமணக்குச் செடியைப் பயன்படுத்தினார். அந்தச் செடி ஒரே இராத்திரியில் ஆச்சரியகரமாக வளர்ந்து, நினிவேயின் புறநகர் பகுதிகளில் தனக்காகக் குடிசை போட்டிருந்த யோனாவுக்கு இதமாக நிழல் தந்தது. இந்த எளிய செடியைக் குறித்து யோனா ‘மிகவும் சந்தோஷப்பட’ ஆரம்பித்தார். ஆனால் பின்னர் யெகோவா அது காய்ந்துபோகும் வண்ணமாக ஒரு பூச்சி அதைத் தாக்கும்படி கட்டளையிட்டார். வெயிலிலும் உஷ்ணமான காற்றிலும் விடப்பட்டவராய், யோனா கோபப்பட்டு இவ்வாறு சொன்னார்: “நான் உயிரோடிருக்கிறதைப் பார்க்கிலும் சாகிறது நலமாயிருக்கும்.” (யோனா 4:5-8) இவை யாவற்றிலும் உள்ள பாடம் என்ன?
யெகோவா யோனாவோடு பேசி இவ்வாறு சொன்னார்: “நீ பிரயாசப்படாததும், நீ வளர்க்காததும், ஒரு இராத்திரியிலே முளைத்ததும், ஒரு இராத்திரியிலே அழிந்துபோனதுமான ஆமணக்குக்காகப் பரிதபிக்கிறாயே. வலதுகைக்கும் இடதுகைக்கும் வித்தியாசம் அறியாத லட்சத்து இருபதினாயிரம்பேருக்கு அதிகமான மனுஷரும் அநேக மிருகஜீவன்களும் இருக்கிற மகா நகரமாகிய நினிவேக்காக நான் பரிதபியாமலிருப்பேனோ என்றார்.”—யோனா 4:9-11.
என்னே ஓர் வல்லமையான பொருளுணர்த்தும் பாடம்! ஆயிரக்கணக்கான மக்களைவிட ஆமணக்குச் செடியின்மீது யோனா அதிக அக்கறையுள்ளவராக இருந்தார். கடவுளுடைய சிருஷ்டிப்பின் எந்தப் பகுதியின்மீது அக்கறை காண்பிப்பதும் போற்றத்தக்கதாகவே இருந்தாலும், மக்களுடைய உயிரைக் காக்க உதவுவது நம்முடைய மிக முக்கியமான வேலையாக இருக்கிறது.
பொறுமையோடு போதித்தல்
யோனா கண்டறிந்தபடி, நம்முடைய ஊழியத்தை நிறைவேற்றுவது எப்போதுமே சுலபமானதல்ல. (2 தீமோத்தேயு 4:5) என்றபோதிலும், மற்றவர்களிடமாக ஒரு பொறுமையான மனோபாவம் உதவி செய்யும்.
உங்களுடைய பைபிள் மாணாக்கரில் ஒருவர் புரிந்துகொள்வதில் மந்தமாக அல்லது ஒருவிதத்தில் நியாயத்தன்மையற்றவராக இருந்தால் நீங்கள் எப்படிப் பிரதிபலிக்கிறீர்கள்? அப்படிப்பட்ட ஒரு பிரச்சினையை எப்படிக் கையாளுவது என்று நம்முடைய மகத்தான போதகர் நமக்குப் போதிக்கிறார். சோதோம் கொமோராவின்மீது வரவிருந்த நியாயத்தீர்ப்பைக் குறித்து ஆபிரகாம் தொடர்ந்து கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்தபோது அவர் அளவுக்கதிகமான பொறுமையைக் காண்பித்தார். ஆபிரகாம் கேட்டார்: “துன்மார்க்கனோடே நீதிமானையும் அழிப்பீரோ?” ஆபிரகாம் மேலும் கெஞ்சினார்: “பட்டணத்துக்குள்ளே ஒருவேளை ஐம்பது நீதிமான்கள் இருப்பார்கள், அதற்குள் இருக்கும் அந்த ஐம்பது நீதிமான்கள்நிமித்தம் இரட்சியாமல் அந்த ஸ்தலத்தை அழிப்பீரோ?” யெகோவாவின் பதில், அந்த எண்ணிக்கையை பத்தாகக் குறைக்கும் வரையாக தொடர்ந்து மன்றாடும்படி ஆபிரகாமைத் தூண்டியது. லோத்தின் குடும்பம் மட்டுமே விட்டுவைக்கப்படுவதற்குப் பாத்திரமானது என்று யெகோவா அறிந்திருந்தார்; அதற்காக ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது. ஆனால் யெகோவாவின் இரக்கத்துடைய அளவை புரிந்துகொள்ளும்வரையாக ஆபிரகாம் தொடர்ந்து தம்மிடம் கேள்வி கேட்கும்படி கடவுள் பொறுமையாக அனுமதித்தார்.—ஆதியாகமம் 18:20-32.
ஆபிரகாமின் குறைந்தளவு புரிந்துகொள்ளுதலுக்கும் அக்கறைக்குரிய உணர்ச்சிகளுக்கும் யெகோவா இடமளித்தார். நம்முடைய மாணாக்கரின் வரம்புகளை நாமும் புரிந்துகொண்டோமானால், ஒரு குறிப்பிட்ட கோட்பாட்டைப் புரிந்துகொள்வதற்கோ ஆழமாகப் பதிந்துள்ள ஒரு பழக்கத்தை மேற்கொள்வதற்கோ அவர் போராடுகையில் நாம் பொறுமையைக் காண்பிப்பதற்கு உதவி செய்யும்.
யெகோவாவிடமிருந்து தொடர்ந்து கற்றுக்கொண்டிருங்கள்
கேள்விக்கிடமின்றி, யெகோவா தேவன் மகத்தான போதகராக இருக்கிறார். உவமைகள், கேள்விகள், பொருட்பாடங்கள் போன்ற முறைகளால் அவர் பொறுமையாக புரிந்துகொள்ளுதலை அளிக்கிறார். அவருடைய போதனா முறைகளை எந்த அளவிற்குப் பயன்படுத்துகிறோமோ, அந்த அளவிற்கு நாம்தாமே சிறந்த போதகர்களாவோம்.
மற்றவர்களுக்குப் போதிப்பவர்கள் தங்களுக்குத் தாங்களே போதிப்பதை அசட்டை செய்துவிடக் கூடாது என்பதால் நாம் தொடர்ந்து ‘யெகோவாவால் போதிக்கப்பட’ வேண்டும். (ஏசாயா 54:13, NW) ஏசாயா எழுதினார்: “உன் கண்கள் உன் மகத்தான போதகரைக் காணும் கண்களாகும். மக்களாகிய நீங்கள் வலது பக்கம் அல்லது இடது பக்கமாகச் சென்றால், ‘வழி இதுவே, மக்களே இதில் நடவுங்கள்,’ என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லப்படும் வார்த்தையை உங்கள் சொந்த காதுகள் கேட்கும்.” (ஏசாயா 30:20, 21, NW) யெகோவாவின் வழியில் தொடர்ந்து நடப்பதன் மூலமும் அவ்வாறு செய்யும்படி மற்றவர்களுக்கு உதவுவதன் மூலமும், என்றென்றுமாக நம்முடைய மகத்தான போதகரிடமிருந்து கற்றுக்கொள்ளும் ஈடற்ற சிலாக்கியத்தை நாம் கொண்டிருக்கலாம்.
[பக்கம் 28-ன் படம்]
யெகோவா யோபிடம் கேட்டார்: “உன் கற்பனையினாலே கழுகு உயரப் பறந்து, உயரத்திலே தன் கூட்டைக் கட்டுமோ?”
[பக்கம் 28-ன் படம்]
மக்களைக் குறித்து அதிக அக்கறை உள்ளவர்களாக இருக்கவேண்டும் என்று ஆமணக்குச் செடியின் மூலமாக யெகோவா யோனாவுக்குக் கற்றுக்கொடுத்தார்