அவர்கள் யெகோவாவின் சித்தத்தைச் செய்தார்கள்
ஈசாக்குக்கு ஒரு மனைவியைக் கண்டடைதல்
கிணற்றருகில் உட்கார்ந்திருந்த வயதான அந்த ஆள் களைப்புற்றிருந்தார். அவரும் அவருடன் வந்தவர்களும், தங்கள் பத்து ஒட்டகங்களுடன் பெயெர்செபா பிரதேசத்திலிருந்து வட மெசொப்பொத்தாமியா வரையாக அவ்வளவு தூரம்—800-க்கு மேற்பட்ட கிலோமீட்டர்கள் தூரம்—பயணப்பட்டு வந்திருந்தனர்.a இப்போது அவர்கள் தாங்கள் சேரவேண்டிய இடத்துக்கு வந்து சேர்ந்திருந்ததனால், களைப்புற்ற இந்தப் பயணி, தான் அனுப்பப்பட்ட கடினமான வேலை பொறுப்பைப்பற்றி சிந்திக்கச் சற்று அமர்ந்தார். இந்த ஆள் யார், இந்தக் கடும் பயணத்தை இவர் ஏன் மேற்கொண்டார்?
அந்த ஆள் ஆபிரகாமின் ஊழியக்காரனாக இருந்தார், ‘தன் (ஆபிரகாமின்) வீட்டிலுள்ளவர்களில் வயதில் மூத்தவர்.’ (ஆதியாகமம் 24:2) இந்த விவரத்தில் பெயர் குறிப்பிடப்படாதபோதிலும், இவர் தெளிவாகவே எலியேசராக இருக்கலாம், இவரை, “என் வீட்டிலே பிறந்த பிள்ளை” என்று ஆபிரகாம் ஒருசமயம் குறிப்பிட்டார். ‘தனக்குச் சுதந்தரவாளியாய் இருக்கிறவன்’ என்று இவரைப் பற்றி ஆபிரகாம் சொன்னார். (ஆதியாகமம் 15:2, 3) நிச்சயமாகவே, அது ஆபிரகாமும் சாராளும் பிள்ளையில்லாதவர்களாக இருந்தபோதாகும். இப்போது அவர்களுடைய குமாரன், ஈசாக்கு, 40 வயதானவராக இருந்தார்; எலியேசர் முதன்மையான சுதந்தரவாளியாக இனிமேலும் இராதபோதிலும், அவர் இன்னும் ஆபிரகாமின் ஊழியக்காரனாக இருந்தார். ஆகையால், ஆபிரகாம் ஒரு கடினமானக் காரியத்தைச் செய்யும்படி கேட்டுக்கொண்டபோது, அதைச் செய்வதற்கு உடன்பட்டார். அது என்ன?
கடினமான ஒரு வேலை பொறுப்பு
ஆபிரகாமின் நாளில் ஒரு விவாகம், அந்தக் குடும்பத்தை மட்டுமல்ல, அந்தக் கோத்திரம், அல்லது கோத்திரத் தலைவரின் சமுதாயம் முழுவதையுமே பாதித்தது. ஆகையால் பெற்றோரே தங்கள் பிள்ளைகளுக்கு விவாகத் துணையைத் தெரிந்தெடுப்பது வழக்கமாக இருந்தது. எனினும், தன் குமாரன் ஈசாக்குக்காக ஒரு மனைவியைத் தேடுவதில், ஆபிரகாம் ஓர் இரண்டக நிலையை எதிர்ப்பட்டார், அவ்விடத்து கானானியரின் தேவபக்தியற்ற வழிகள் அவர்களில் ஒருவருக்கு விவாகம் செய்து கொடுப்பதைச் சிந்திக்கவும் முடியாததாக்கிற்று. (உபாகமம் 18:9-12) ஓர் ஆள் தன் சொந்தக் கோத்திரத்தினுள் விவாகம் செய்வது வழக்கமாயிருந்தபோதிலும், ஆபிரகாமின் உறவினர் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரத்திலுள்ள வட மெசொப்பொத்தாமியாவில் வாழ்ந்தனர். ஈசாக்கு அங்கே சென்று குடியேறும்படி அவர் செய்விக்க முடியாது, ஏனெனில், “உன் சந்ததிக்கு இந்த [கானான்] தேசத்தைத் தருவேன்,” என்று யெகோவா ஆபிரகாமுக்கு வாக்கருளியிருந்தார். (ஆதியாகமம் 24:7) ஆகையால், ஆபிரகாம் எலியேசரிடம்: ‘நீ என் தேசத்துக்கும் என் இனத்தாரிடத்துக்கும் போய், என் குமாரனாகிய ஈசாக்குக்குப் பெண்கொள்,’ என்று சொன்னார்.—ஆதியாகமம் 24:4.
அந்த நீண்ட பயணத்தை முடித்தபோது, எலியேசர், தான் அனுப்பப்பட்ட வேலை பொறுப்பைப் பற்றி சிந்தனை செய்துகொண்டு அந்தக் கிணற்றண்டை அமர்ந்திருந்தார். இரவுக்குத் தேவைப்படும் தண்ணீரை மொள்ள, பெண்கள் அந்தக் கிணற்றுக்குச் சீக்கிரத்தில் வருவார்கள் என்பதை அவர் உணர்ந்தார். ஆகையால் யெகோவாவிடம் இவ்வாறு மன்றாடி கேட்டுக்கொண்டார்: “நான் குடிக்க உன் குடத்தைச் சாய்க்கவேண்டும் என்று நான் சொல்லும்போது: குடி என்றும், உன் ஒட்டகங்களும் குடிக்கும்படி வார்ப்பேன் என்றும் சொல்லும் பெண் எவளோ, அவளே நீர் உம்முடைய ஊழியக்காரனாகிய ஈசாக்குக்கு நியமித்தவளாயிருக்கவும், என் எஜமானுக்கு அநுக்கிரகம் செய்தீர் என்று நான் அதினாலே அறியவும் செய்தருளும்.”—ஆதியாகமம் 24:14.
அவர் இன்னும் ஜெபித்துக்கொண்டிருக்கையில், ரெபெக்காள் என்று பெயருடைய கவர்ச்சிகரமான ஓர் இளம் பெண் அங்கு வந்தாள். “உன் குடத்திலிருக்கிற தண்ணீரில் கொஞ்சம் குடிக்கத் தரவேண்டும்,” என்று எலியேசர் அவளிடம் சொன்னார் ரெபெக்காள் அவ்வாறே செய்து, பின்பு: “உம்முடைய ஒட்டகங்களும் குடித்துத் தீருமட்டும் அவைகளுக்கும் மொண்டு வார்ப்பேன்,” என்று சொன்னாள். இது மிகத் தயாளமான ஓர் அளிப்பு, ஏனெனில் தாகமுள்ள ஓர் ஒட்டகம், பத்து நிமிடங்களுக்குள்தானே 95 லிட்டர் தண்ணீர் குடித்துவிடக்கூடும். எலியேசரின் ஒட்டகங்கள் அவ்வளவு தாகமாக இருந்தனவோ இல்லையோ, தான் செய்ய முன்வந்த சேவை கடும் முயற்சிக்குரியதென்று அவள் அறிந்திருக்க வேண்டும். உண்மையிலேயே, அவள் “சீக்கிரமாய்த் தன் குடத்துத் தண்ணீரைத் தொட்டியிலே ஊற்றிவிட்டு, இன்னும் மொண்டுவரத் துரவண்டையில் ஓடி, அவனுடைய ஒட்டகங்களுக்கெல்லாம் மொண்டு வார்த்தாள்.”—ஆதியாகமம் 24:15-20.
யெகோவாவின் வழிநடத்துதலை உணர்ந்து, எலியேசர் ரெபெக்காளுக்கு ஒரு பொன் மூக்குத்தியையும் இரண்டு பொற் கடகங்களையும் கொடுத்தார், அவை இன்றைய மதிப்புகளில் ஏறக்குறைய 50,000 ரூபாய் மதிப்பானவை. தான் ஆபிரகாமின் சகோதரனாகிய நாகோரின் பேத்தி என்று ரெபெக்காள் அவரிடம் சொன்னபோது, எலியேசர் ஜெபித்து கடவுளுக்கு நன்றிகூறினார். “யெகோவா என் எஜமானின் சகோதரர் வீட்டுக்கு நடத்திக்கொண்டு வந்தாரே,” என்று அவர் சொன்னார். (ஆதியாகமம் 24:22-27, தி.மொ.) எலியேசர் ரெபெக்காளின் குடும்பத்தினிடம் அழைத்துச் செல்லப்பட்டார். உரிய காலத்தில், ரெபெக்காள் ஈசாக்கின் மனைவியானாள்; மேலும் மேசியாவாகிய இயேசுவின் ஒரு மூதாதையாகும் சிலாக்கியம் அவளுக்கு இருந்தது.
நமக்குப் பாடங்கள்
கடவுள் பயமுள்ள ஒரு விவாகத் துணையை ஈசாக்குக்கு கண்டுபிடிக்க ஜெபத்தோடு செய்த எலியேசரின் முயற்சியை யெகோவா ஆசீர்வதித்தார். எனினும், ஈசாக்கின் விவாகம், ஆபிரகாமின் மூலமாய் ஒரு வித்தைப் பிறப்பிக்கும்படியான கடவுளுடைய நோக்கத்தோடு நேரடியாகச் சம்பந்தப்பட்டிருந்ததென்பதை நினைவில் வையுங்கள். ஆகையால், விவாகத் துணைக்காக ஜெபிக்கிற ஒவ்வொருவருக்கும் ஒரு விவாகத் துணை அற்புதமாய்க் கொடுக்கப்படுமென்ற முடிவுக்குவர இந்த விவரம் நம்மை வழிநடத்தக்கூடாது. இருப்பினும், யெகோவாவின் நியமங்களை நாம் கடைப்பிடித்தால், வாழ்க்கையில் சந்தர்ப்பநிலை—மணமாகிய அல்லது மணமாகாத—எதுவாயினும் அதோடு வருகிற சவால்களைச் சகிக்க அவர் நமக்குப் பலன் தருவார்.—1 கொரிந்தியர் 7:8, 9, 28; ஒப்பிடுக பிலிப்பியர் 4:11-13.
காரியங்களை யெகோவாவின் வழியில் செய்வதற்கு எலியேசர் மிகுந்த முயற்சி எடுக்க வேண்டியிருந்தது. யெகோவாவின் தராதரங்களுக்குப் பொருந்தியவாறு செயல்படுவது எப்போதும் எளிதாக இருப்பதில்லை என்று நாமுங்கூட காணலாம். உதாரணமாக, தேவராஜ்ய நடவடிக்கைக்கு இடையூராக இராத வாழ்க்கைத்தொழிலை, தேவபக்தியுள்ள ஒரு மணத்துணையை, கட்டியெழுப்பும் பாங்குடைய தோழர்களை, இழிதரமில்லாத பொழுதுபோக்கு இன்பத்தைக் கண்டடைவது கடினமாயிருக்கலாம். (மத்தேயு 6:33; 1 கொரிந்தியர் 7:39; 15:33; எபேசியர் 4:17-19) எனினும், பைபிள் நியமங்களை மீறுவதற்கு மறுத்துவிடுவோரை யெகோவா தாங்கி நடத்த முடியும். பைபிள் இவ்வாறு வாக்களிக்கிறது: “உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் [யெகோவாவில்] நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.”—நீதிமொழிகள் 3:5, 6.
[அடிக்குறிப்புகள்]
a ஒட்டகங்களின் சராசரி வேகத்தைக் கவனித்தால், அந்தப் பயணத்தை முடிக்க 25-க்கு மேற்பட்ட நாட்கள் எடுத்திருக்கலாம்.