வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
ஆதியாகமம் 27:18, 19-ல் காண்கிறபடி, ஏசாவைப் போல் யாக்கோபு நடித்தது தவறில்லையா?
இந்தச் சம்பவம் உங்களுக்கு நன்கு தெரிந்திருக்கலாம். “நான் புசிக்கவும், நான் மரணமடையுமுன்னே என் ஆத்துமா உன்னை ஆசீர்வதிக்கவும்” ஏதேனும் மிருகத்தை வேட்டையாடிக் கொண்டுவரும்படி, வயதான காலத்தில் ஈசாக்கு தன் மகன் ஏசாவிடம் சொன்னார். தன் கணவர் சொன்னதைக் கேட்ட ரெபெக்காள் ருசியான உணவைத் தயாரித்தாள்; பின்னர் யாக்கோபிடம், “உன் தகப்பன் தாம் மரணமடையுமுன்னே உன்னை ஆசீர்வதிக்கும்படி அவர் புசிப்பதற்கு நீ அதை [இந்த உணவை] அவரிடத்தில் கொண்டுபோக வேண்டும்” என்று தெரிவித்தாள். பிறகு, ஏசாவின் உடைகளை யாக்கோபு அணிந்துகொண்டார்; தன் கழுத்திலும் கைகளிலும் வெள்ளாட்டுக்குட்டிகளின் தோலோடு, அந்த ருசியான உணவை எடுத்துக்கொண்டு தன் தகப்பனிடம் சென்றார். “நீ யார், என் மகனே” என்று ஈசாக்கு கேட்டபோது, “நான் உமது மூத்த மகனாகிய ஏசா” என்று அவர் பதில் அளித்தார். அவரை ஈசாக்கு நம்பினார், ஆசீர்வதித்தார்.—ஆதியாகமம் 27:1-29.
ரெபெக்காளும் யாக்கோபும் ஏன் அந்த விதமாய் நடந்துகொண்டார்கள் என்பதைப் பற்றிய விவரங்கள் அனைத்தையும் பைபிள் தருவதில்லை; எனினும், திடீரென இத்தகைய சூழ்நிலை எழுந்ததாக அது குறிப்பிடுகிறது. ரெபெக்காளும் யாக்கோபும் செய்ததை கடவுளுடைய வார்த்தை அங்கீகரிக்கவும் இல்லை, கண்டிக்கவும் இல்லை; ஆக, பொய் சொல்வதற்கோ ஏமாற்றுவதற்கோ இச்சம்பவத்தை முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்பதை நாம் மனதில் வைக்க வேண்டும். இருப்பினும், பைபிள் அந்தச் சூழ்நிலையைக் குறித்து தகவல் தருகிறது.
முதலாவதாக, தன் தகப்பனின் ஆசீர்வாதத்தைப் பெற யாக்கோபுக்கு உரிமை இருந்தது, அந்த உரிமை ஏசாவுக்கு இருக்கவில்லையென அந்தப் பதிவு தெளிவாய் காட்டுகிறது. முன்னர், இந்த இரட்டையரில் ஒருவரான ஏசா, ஒரு வேளை உணவுக்காக தன் சேஷ்ட புத்திரபாகத்தை, அதாவது தலைமகன் உரிமையை மதிக்காமல் விற்றுப்போட்டிருந்தார்; அப்போது அதை யாக்கோபு முறைப்படி வாங்கியிருந்தார். ஏசா ‘தன் சேஷ்ட புத்திரபாகத்தை அலட்சியம் பண்ணினார்.’ (ஆதியாகமம் 25:29-34) எனவே, நியாயமாய் தனக்குச் சேர வேண்டிய ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளவே யாக்கோபு தன் தகப்பனை அணுகினார்.
இரண்டாவதாக, தான் யாக்கோபை ஆசீர்வதித்ததை ஈசாக்கு அறிந்தபோது, அதை மாற்றுவதற்கு அவர் முயற்சி செய்யவில்லை. இந்த இரட்டையர்கள் பிறப்பதற்கு முன்பாக ரெபெக்காளிடம், “மூத்தவன் இளையவனைச் சேவிப்பான்” என யெகோவா சொல்லியிருந்ததை ஒருவேளை அவர் நினைவுபடுத்திப் பார்த்திருக்கலாம். (ஆதியாகமம் 25:23) ஆரானுக்குச் செல்ல யாக்கோபு புறப்பட்டபோது முன்பைவிட இன்னும் அதிகமாய் அவரை ஈசாக்கு ஆசீர்வதித்தது கவனிக்க வேண்டிய குறிப்பு.—ஆதியாகமம் 28:1-4.
இறுதியாக, நடந்த எல்லாவற்றையும் யெகோவா கவனித்து வந்தார், அவற்றில் அக்கறை காட்டினார் என்பதையும் நாம் நினைவில் வைக்க வேண்டும். ஈசாக்கு அளித்த அந்த ஆசீர்வாதம், ஆபிரகாமுக்கு கடவுள் கொடுத்த வாக்குறுதியோடு சம்பந்தப்பட்டிருந்தது. (ஆதியாகமம் 12:2, 3) அந்த ஆசீர்வாதத்தை யாக்கோபு பெற்றுக்கொள்ளக் கூடாதென யெகோவா நினைத்திருந்தால் ஏதாவதொரு விதத்தில் அவர் அதில் குறுக்கிட்டிருந்திருப்பார். மாறாக, அதை யாக்கோபுக்கு பின்வருமாறு உறுதிப்படுத்தினார்: “உன் சந்ததிக்குள்ளும் பூமியின் வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும்.”—ஆதியாகமம் 28:10-15.