யெகோவாவின் வார்த்தை ஜீவனுள்ளது
ஆதியாகம புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்—II
முதல் மனிதனாகிய ஆதாமின் ஜனனம் முதற்கொண்டு யாக்கோபின் குமாரனாகிய யோசேப்பின் மரணம் வரையிலான 2,369 வருட காலப்பகுதியில் நடந்த சம்பவங்கள் ஆதியாகமப் புத்தகத்தில் அடங்கியுள்ளன. முதல் அதிகாரம் ஒன்றாம் வசனத்திலிருந்து பதினோராம் அதிகாரம் ஒன்பதாம் வசனம் வரையிலும் படைப்பு முதற்கொண்டு பாபேல் கோபுரம் கட்டப்படுவது வரையான விஷயங்கள் அடங்கியுள்ளன; அவை இப்பத்திரிகையின் முந்தின இதழில் ஆராயப்பட்டன.a மீதமுள்ள அதிகாரங்களின் சிறப்பு குறிப்புகளை இந்தக் கட்டுரையில் கவனிக்கலாம். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு ஆகியோரிடம் கடவுள் தொடர்பு கொண்ட விஷயங்கள் இந்த அதிகாரங்களில் உள்ளன.
ஆபிரகாம் கடவுளுக்கு நண்பராகிறார்
ஜலப்பிரளயத்திற்கு சுமார் 350 வருடங்களுக்குப் பிறகு, நோவாவின் குமாரனாகிய சேமின் சந்ததியில் ஒருவர் பிறக்கிறார். அவர் கடவுளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு நபராக ஆகிறார். அவர்தான் ஆபிராம்; அவரது பெயர் பிற்பாடு ஆபிரகாம் என மாற்றப்பட்டது. கடவுள் கட்டளையிட்டவுடன் ஊர் என்ற கல்தேய பட்டணத்தை விட்டு ஆபிராம் கிளம்புகிறார். தனக்கும் தன் சந்ததிக்கும் கொடுப்பதாக யெகோவா வாக்குறுதி அளித்த தேசத்தில் ஒரு கூடாரவாசியாக வாழ்கிறார். ஆபிரகாம் விசுவாசத்தோடு கீழ்ப்படிந்து நடப்பதால் ‘தேவனுடைய சிநேகிதன்’ என அழைக்கப்படுகிறார்.—யாக்கோபு 2:23.
சோதோமிலும் அதன் அருகேயுள்ள பட்டணங்களிலும் இருக்கிற துன்மார்க்க ஜனங்களுக்கு எதிராக யெகோவா நடவடிக்கை எடுக்கிறார்; ஆனால் லோத்தும் அவருடைய மகள்களும் பாதுகாக்கப்படுகிறார்கள். ஈசாக்கு பிறந்ததும் ஆபிரகாமுக்கு கடவுள் கொடுத்த ஒரு வாக்குறுதி நிறைவேறுகிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த மகனை பலி கொடுக்கும்படி ஆபிரகாமிடம் யெகோவா கேட்கிறார்; அப்போது அவருடைய விசுவாசம் சோதிக்கப்படுகிறது. ஆபிரகாம் அதற்கு உடனடியாக கீழ்ப்படிகிறார், ஆனால் ஒரு தேவதூதன் மூலமாய் அந்தக் காரியம் தடுக்கப்படுகிறது. ஆபிரகாம் விசுவாசமுள்ள ஒரு மனிதன் என்பது தெளிவாகி விடுகிறது. ஆகவே, அவருடைய வித்துவின் மூலம் சகல தேசத்தாரும் தங்களை ஆசீர்வதித்துக் கொள்வார்கள் என்ற உறுதி அவருக்கு அளிக்கப்படுகிறது. தன்னுடைய அருமை மனைவி சாராள் மரிக்கையில் ஆபிரகாம் மிகுந்த துக்கமடைகிறார்.
வேதப்பூர்வ கேள்விகளுக்கு பதில்கள்:
12:1-3—ஆபிரகாமிய உடன்படிக்கை எப்போது அமலுக்கு வந்தது, அது எவ்வளவு காலத்திற்கு அமலில் இருந்தது? “பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும்” என ஆபிராமிடம் யெகோவா செய்த உடன்படிக்கை கானானுக்கு செல்வதற்காக ஆபிராம் ஐப்பிராத்தை கடந்த சமயத்தில் அமலுக்கு வந்ததாக தோன்றுகிறது. அது நிசான் 14, பொ.ச.மு. 1943-ல், அதாவது எகிப்திலிருந்து இஸ்ரவேலர் விடுவிக்கப்படுவதற்கு 430 ஆண்டுகளுக்கு முன்பு அமலுக்கு வந்திருக்க வேண்டும். (யாத்திராகமம் 12:2, 6, 7, 40, 41) ஆபிரகாமிய உடன்படிக்கை ஒரு “நித்திய உடன்படிக்கையாக” இருக்கிறது. பூமியின் குடிகள் ஆசீர்வதிக்கப்படுவதும், கடவுளுடைய எதிரிகள் அனைவரும் அழிக்கப்படுவதும் நிறைவேறும் வரையில் இது அமலில் இருக்கும்.—ஆதியாகமம் 17:7; 1 கொரிந்தியர் 15:23-26.
15:13—ஆபிராமின் சந்ததியைக் குறித்து முன்னறிவிக்கப்பட்ட 400 வருட கால உபத்திரவம் எப்போது நிறைவேறியது? இந்த உபத்திரவ காலம் பொ.ச.மு. 1913-ல், அதாவது ஆபிரகாமின் குமாரனாகிய ஈசாக்கு சுமார் ஐந்து வயதில் பால் மறந்த சமயத்தில், அதோடு 19 வயதுடைய அவரது ஒன்றுவிட்ட சகோதரன் இஸ்மவேல் அவரை “பரியாசம்” செய்த சமயத்தில் ஆரம்பமானது. (ஆதியாகமம் 21:8-14; கலாத்தியர் 4:29) பொ.ச.மு. 1513-ல் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேலர் விடுவிக்கப்பட்டதோடு இந்தக் காலம் முடிவடைந்தது.
16:2—சாராய் தன் அடிமைப் பெண்ணாகிய ஆகாரை ஆபிராமுக்கு மனைவியாகக் கொடுத்தது சரியா? சாராய் அப்படி செய்தது அன்றைய காலத்துப் பழக்கமாக இருந்தது; அதாவது மலடியான ஒரு மனைவி வாரிசை பெறுவதற்காக தன் கணவனுக்கு ஒரு மறுமனையாட்டியை கொடுக்க கடமைப்பட்டிருந்தாள். பலதார மணம்புரியும் பழக்கம் முதலில் காயீனின் சந்ததியிலிருந்தே ஆரம்பமானது. பிற்பாடு, அது ஒரு பொதுவான பழக்கமாக மாறியது, யெகோவாவை வணங்குவோர் சிலரும் அதைப் பின்பற்றினர். (ஆதியாகமம் 4:17-19; 16:1-3; 29:21-28) என்றாலும், ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஆதி தராதரத்தை யெகோவா ஒருபோதும் கைவிடவில்லை. (ஆதியாகமம் 2:21, 22) ‘பலுகிப் பெருகி பூமியை நிரப்பும்படியான’ கட்டளை மீண்டுமாக நோவாவுக்கும் அவருடைய குமாரருக்கும் கொடுக்கப்பட்டது; அவர்கள் எல்லாருமே ஒருவனுக்கு ஒருத்தி என்ற தராதரத்தையே பின்பற்றினர். (ஆதியாகமம் 7:7; 9:1; 2 பேதுரு 2:5) இந்தத் தராதரத்தையே இயேசு மீண்டும் வலியுறுத்தினார்.—மத்தேயு 19:4-8; 1 தீமோத்தேயு 3:2, 12.
19:8—லோத்து தன் மகள்களை சோதோம் ஜனத்தாரின் கையில் விட்டுவிட முன்வந்தது தவறு இல்லையா? கிழக்கத்திய பழக்கத்தின்படி விருந்தினருக்கு பாதுகாப்பு அளிப்பது உபசரிப்பவரின் பொறுப்பாகும்; தேவை ஏற்பட்டால் உயிரே பறிபோனாலும்கூட அவர்களுக்கு பாதுகாப்பளிக்க வேண்டும். அதைச் செய்ய லோத்து தயாராக இருந்தார். அவர் தைரியமாக வெளியே சென்று கதவை அடைத்து தன்னந்தனியாக அந்த கலகக் கூட்டத்தாரிடம் பேசினார். தன் மகள்களை அவர்களுக்கு கொடுக்க முன்வந்தார். அதற்கு காரணம் தன்னிடம் வந்திருக்கும் விருந்தாளிகள், கடவுள் அனுப்பிய தூதுவர்கள் என லோத்து உணர்ந்திருக்கலாம்; தனது சித்தியாகிய சாராளை எகிப்தில் கடவுள் காப்பாற்றிய விதமாக தன் மகள்களையும் காப்பாற்றுவார் என லோத்து நினைத்திருக்கலாம். (ஆதியாகமம் 12:17-20) உண்மையில், லோத்துவுக்கும் அவருடைய மகள்களுக்கும் எந்த ஆபத்தும் ஏற்படாதவாறு அந்த இக்கட்டான சூழ்நிலை மாறியது.
19:30-38—லோத்து குடித்து வெறித்ததையும் அவரது இரண்டு மகள்களின் குமாரருக்கு தகப்பனானதையும் யெகோவா கண்டும் காணாமல் விட்டுவிட்டாரா? முறைதகா புணர்ச்சியையும் குடிவெறியையும் யெகோவா கண்டும் காணாமல் விட்டுவிடுபவரல்ல. (லேவியராகமம் 18:6, 7, 29; 1 கொரிந்தியர் 6:9, 10) உண்மையில், சோதோமின் குடிகளுடைய “அக்கிரமக் கிரியைகளைக்” கண்டு லோத்து மனம் நொந்துபோனார். (2 பேதுரு 2:6-8) லோத்துவின் மகள்கள் தங்கள் தகப்பனுக்கு அதிகமாக குடிக்கக் கொடுத்ததற்கு காரணம், அவர் இயல்பான நிலையில் இருக்கும்போது தங்களோடு உறவுகொள்ள சம்மதிக்க மாட்டார் என்பதை அறிந்திருந்ததே. ஆனால், அந்நிய தேசத்தில் இருந்ததால், தங்களுடைய குடும்பம் அற்றுப் போகாமல் இருப்பதற்கு ஒரே வழி இதுதான் என்று அவருடைய மகள்கள் உணர்ந்தார்கள். மோவாபியரும் (மோவாபிலிருந்து வந்தவர்கள்) அம்மோனியரும் (பென்னம்மியிலிருந்து வந்தவர்கள்) ஆபிரகாமின் சந்ததியாரான இஸ்ரவேலரின் உறவினர் என்பதை காண்பிக்கவே இந்த பதிவு பைபிளில் இருக்கிறது.
நமக்குப் பாடம்:
13:8, 9. கருத்து வேறுபாடுகளை சமாளிப்பதில் ஆபிரகாம் எப்பேர்ப்பட்ட ஒரு சிறந்த முன்மாதிரி! பண ஆதாயம், சொந்த விருப்பங்கள், அல்லது தற்பெருமை காரணமாக நாம் வைத்திருக்கும் சமாதானமான உறவுகளை ஒருபோதும் கெடுத்துக்கொள்ளக் கூடாது.
15:5, 6. ஆபிரகாமுக்கு வயது கடந்த பின்பும் பிள்ளை பிறக்காததால் அந்த விஷயத்தைப் பற்றி அவர் கடவுளிடம் பேசினார். அப்போது யெகோவா அவருக்கு மறுபடியும் உறுதியளித்தார். விளைவு? ஆபிரகாம் ‘யெகோவாவை விசுவாசித்தார்.’ நாமும் மனந்திறந்து யெகோவாவிடம் ஜெபம் செய்து, பைபிளில் அவர் கொடுத்துள்ள வாக்குறுதிகளை ஏற்றுக்கொண்டு, அவருக்குக் கீழ்ப்படிந்தால் நம்முடைய விசுவாசமும் பலப்படும்.
15:16. நான்கு தலைமுறை வரையில் எமோரியரை (அல்லது கானானியரை) யெகோவா தண்டிக்காமல் விட்டுவிட்டார். ஏன்? ஏனெனில் கடவுள் பொறுமையுள்ளவர். அவர்கள் திருந்துவதற்கான நம்பிக்கை அற்றுப்போகும் வரை அவர் பொறுமையோடு காத்திருந்தார். யெகோவாவைப் போல நாமும் பொறுமையோடிருப்பது அவசியம்.
18:23-33. யெகோவா கண்மூடித்தனமாக ஜனங்களை அழித்துவிடுவதில்லை. அவர் நீதிமானை காப்பாற்றுகிறார்.
19:16. லோத்து ‘தாமதித்துக் கொண்டேயிருந்தார்.’ அதனால் அந்த தேவதூதர்கள் அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் பட்டணத்திற்கு வெளியில் கிட்டத்தட்ட இழுத்துக் கொண்டுவரும் நிலை ஏற்பட்டது. இந்தப் பொல்லாத உலகின் முடிவை எதிர்நோக்கியிருப்பதால் நம்முடைய அவசர உணர்வை இழந்துவிடாதிருப்பது நமக்கு ஞானமானது.
19:26. இந்த உலகில் நாம் விட்டுவந்தவற்றை ஆசையோடு திரும்பிப் பார்ப்பது அல்லது அவற்றினால் திசைதிருப்பப்படுவது எவ்வளவு முட்டாள்தனம்!
யாக்கோபின் 12 குமாரர்கள்
யெகோவா மீது விசுவாசமுள்ள பெண்ணாகிய ரெபெக்காளை ஈசாக்குக்கு மணமுடித்துக் கொடுக்க ஆபிரகாம் ஏற்பாடு செய்கிறார். அவளுக்கு ஏசா, யாக்கோபு என்ற இரட்டைக் குழந்தைகள் பிறக்கிறார்கள். ஏசா தன் தலைமகனுரிமையை அவமதித்து அதை யாக்கோபுக்கு விற்றுப்போடுகிறார். பிற்பாடு யாக்கோபு தன் தகப்பனிடமிருந்து ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்கிறார். அவர் பதான்அராமுக்கு தப்பியோடுகிறார், அங்கே லேயாளையும் ராகேலையும் மணமுடிக்கிறார். தன் குடும்பத்தோடு அவ்விடத்தை விட்டு திரும்பி வருவதற்கு முன்பு 20 ஆண்டுகள் தன் மாமனாரின் மந்தைகளை கவனித்துக் கொள்கிறார். லேயாள், ராகேல் மற்றும் அவர்களுடைய இரண்டு அடிமைப் பெண்கள் மூலமாக யாக்கோபுக்கு 12 குமாரர்களும் குமாரத்திகளும் பிறக்கிறார்கள். யாக்கோபு ஒரு தேவதூதனை இறுகப் பிடித்துக்கொண்டு அவரோடு போராடுகிறார். யாக்கோபை அவர் ஆசீர்வதிக்கிறார், அதனால் அவருடைய பெயர் இஸ்ரவேல் என மாற்றப்படுகிறது.
வேதப்பூர்வ கேள்விகளுக்கு பதில்கள்:
28:12, 13—‘ஒரு ஏணியைக்’ குறித்து யாக்கோபு கண்ட சொப்பனத்தின் அர்த்தம் என்ன? இந்த “ஏணி” பார்ப்பதற்கு கற்களாலான படிக்கட்டு போல் இருந்திருக்கலாம்; வானத்திற்கும் பூமிக்கும் இடையே பேச்சுத்தொடர்பு இருந்ததை அது சுட்டிக்காட்டியது. கடவுளுடைய தூதர்கள் அதில் ஏறி இறங்கியது, யெகோவாவுக்கும் அவருடைய அங்கீகாரத்தைப் பெற்ற மனிதருக்கும் இடையே அவர்கள் ஏதோவொரு முக்கியமான வழியில் பணிவிடை செய்ததை காட்டியது.—யோவான் 1:51.
30:14, 15—தூதாயீம் கனிகளுக்காக தன் கணவரோடு உடலுறவு கொள்ளும் வாய்ப்பை ராகேல் ஏன் விட்டுக்கொடுத்தாள்? பூர்வ காலங்களில், தூதாயீம் கனி மயக்க மருந்தாகவும் வலிப்பு நோயைத் தடுக்கவும் அல்லது அதிலிருந்து விடுபடவும் பயன்படுத்தப்பட்டது. பாலியல் ஆசையைத் தூண்டுவதற்கு, கருவளத்தை அதிகரிப்பதற்கு, அல்லது கருத்தரிப்பதில் உதவுவதற்கு அதற்கு சக்தி இருப்பதாகக்கூட நம்பப்பட்டது. (உன்னதப்பாட்டு 7:13) ராகேல் என்ன உள்நோக்கத்துடன் விட்டுக்கொடுத்தாள் என்பதைப் பற்றி பைபிள் சொல்வதில்லை. கருத்தரிப்பதற்கும் அதன் மூலம் மலடி என்ற நிந்தையை போக்குவதற்கும் இந்த தூதாயீம் கனிகள் உதவும் என அவள் ஒருவேளை நினைத்திருக்கலாம். என்றாலும், சில வருடங்களுக்குப் பிறகுதான் யெகோவா ‘அவளை கர்ப்பந்தரிக்கும்படி செய்தார்.’—ஆதியாகமம் 30:22-24.
நமக்குப் பாடம்:
25:23. பிறவா குழந்தையின் மரபியல் அமைப்பை அறிந்துகொள்ளும் திறமை யெகோவாவுக்கு உள்ளது. ஆகவே, தம்முடைய முன்னறிவை பயன்படுத்தி தம் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக முன்கூட்டியே நபர்களை தேர்ந்தெடுக்கிறார். ஆனாலும் தனிநபர்கள் ஒவ்வொருவருக்கும் முடிவில் என்ன நேரிடும் என்பதை அவர் முன்தீர்மானிப்பதில்லை.—ஓசியா 12:3; ரோமர் 9:10-12.
25:32, 33; 32:24-29. தலைமகனுரிமையை பெறுவதில் யாக்கோபு அக்கறை காட்டியதும், ஆசீர்வாதத்தைப் பெற இராமுழுதும் ஒரு தேவதூதனுடன் போராடியதும், பரிசுத்த காரியங்களை அவர் உண்மையிலேயே உயர்வாக மதித்தார் என்பதைக் காட்டுகின்றன. யெகோவா நம்மிடம் அநேக பரிசுத்த காரியங்களை ஒப்படைத்திருக்கிறார். அவற்றில் சில: அவரோடும் அவரது அமைப்போடும் உள்ள உறவு, கிரயபலி, பைபிள், ராஜ்ய நம்பிக்கை. யாக்கோபைப் போல நாமும் அவற்றை உயர்வாக மதிப்போமாக.
34:1,30. யெகோவாவை நேசிக்காத ஜனங்களிடம் தீனாள் நட்பு வைத்துக்கொண்டதால்தான் யாக்கோபை ‘கலங்கப் பண்ணின’ துன்பங்கள் ஆரம்பமாயின. நமது கூட்டாளிகளை நாம் ஞானமாக தேர்ந்தெடுப்பது அவசியம்.
எகிப்தில் யோசேப்பை யெகோவா ஆசீர்வதிக்கிறார்
பொறாமையின் காரணமாக யாக்கோபின் குமாரர்கள் தங்களுடைய சகோதரனாகிய யோசேப்பை ஓர் அடிமையாக விற்றுவிடுகிறார்கள். எகிப்தில் இருக்கும்போது, கடவுளுடைய ஒழுக்க தராதரங்களை உண்மையோடும் தைரியத்தோடும் பின்பற்றுவதால் சிறையில் தள்ளப்படுகிறார். பிற்பாடு, பார்வோன் கண்ட சொப்பனங்களின் அர்த்தத்தை தெரிவிப்பதற்காக சிறையிலிருந்து அவர் வெளியே கொண்டுவரப்படுகிறார். அந்த சொப்பனங்கள் ஏழு வருட செழிப்பான காலத்தையும் அவற்றைத் தொடர்ந்து வரும் ஏழு வருட பஞ்ச காலத்தையும் முன்னறிவிக்கின்றன. அதற்குப் பிறகு எகிப்தின் உணவு நிர்வாகியாக யோசேப்பு நியமிக்கப்படுகிறார். பஞ்சத்தின் காரணமாக அவருடைய சகோதரர்கள் உணவு தேடி எகிப்துக்கு வருகிறார்கள். அவர்களது குடும்பம் மீண்டும் ஒன்றுசேருகிறது; அவர்கள் எல்லாரும் கோசேன் என்ற செழிப்பான நாட்டிலே குடியிருக்கிறார்கள். தன் மரணத்திற்கு சற்று முன்பு யாக்கோபு தன் குமாரரை ஆசீர்வதித்து, ஒரு தீர்க்கதரிசனத்தை உரைக்கிறார். அது எதிர்காலத்தில் கிடைக்கப்போகும் மிகுதியான ஆசீர்வாதங்களுக்கு திடமான நம்பிக்கையை அளிக்கிறது. யாக்கோபின் உடல் கானானில் புதைக்கப்படுவதற்காக எடுத்துச் செல்லப்படுகிறது. யோசேப்பு 110-ம் வயதில் மரிக்கிறார், அவருடைய உடல் எகிப்திய முறைப்படி நறுமணம் பூசி பாதுகாக்கப்படுகிறது; பிற்பாடு வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்கு கொண்டு செல்லப்படுவதற்காக அவ்வாறு செய்யப்படுகிறது.—யாத்திராகமம் 13:19.
வேதப்பூர்வ கேள்விகளுக்கு பதில்கள்:
43:32—எபிரெயர்களுடன் சாப்பிடுவதை எகிப்தியர் ஏன் அருவருப்பானதாக கருதினார்கள்? மத சம்பந்தமான தப்பெண்ணம் அல்லது இனப் பெருமை அதற்கு முக்கிய காரணமாக இருந்திருக்கலாம். மேய்ப்பர்களும்கூட எகிப்தியரின் பார்வையில் அருவருப்பானவர்களாக காணப்பட்டார்கள். (ஆதியாகமம் 46:34) ஏன்? எகிப்தியருடைய ஜாதியின் அடிப்படையில் மேய்ப்பர்கள் மட்டமான நிலையில் இருந்திருக்கலாம். அல்லது, வயல்வெளிகள் குறைவாக இருந்த அந்த தேசத்தில் தங்களுடைய மந்தைகளுக்காக மேய்ச்சலிடங்களைத் தேடிச் சென்றவர்கள்மீது எகிப்தியர் வெறுப்பை காட்டியிருக்கலாம்.
44:5 (NW)—உண்மையில் குறிபார்ப்பதற்காகவா யோசேப்பு பானபாத்திரத்தை பயன்படுத்தினார்? வெள்ளியாலான பானபாத்திரமும் அதைப் பற்றி சொல்லப்பட்டதும் யோசேப்புடைய தந்திரத்தின் பாகமாகவே இருந்தன. யெகோவாவை யோசேப்பு உண்மையோடு வணங்கி வந்தார். ஆகவே, பென்யமீன் அந்தப் பானபாத்திரத்தை திருடியது எப்படி நிஜமில்லையோ அப்படியே குறிபார்க்க யோசேப்பு அதை பயன்படுத்தியதாக சொல்வதும் நிஜமல்ல.
49:10 (NW)—‘செங்கோல்’ மற்றும் ‘நியாயப்பிரமாணிக்கனின் கோல்’ எதை அர்த்தப்படுத்துகின்றன? செங்கோல் என்பது அரசன் கையில் வைத்திருக்கும் குறுந்தடியாகும்; இது அவருடைய அரசுரிமைக்கு அடையாளமாகும். நியாயப்பிரமாணிக்கனின் கோல் என்பது ஒரு நீளமான தடி, இது கட்டளையிடுவதற்கு அரசனுக்கு இருக்கும் அதிகாரத்தை குறிக்கிறது. யாக்கோபு இவற்றைப் பற்றி குறிப்பிட்டது, ஷைலோ வரும் வரை ஓரளவு உரிமையும் அதிகாரமும் யூதா கோத்திரத்தை விட்டு நீங்காது என்பதையே சுட்டிக் காட்டியது. யூதாவின் வம்சத்தில் வந்தவரே இயேசு கிறிஸ்து; இவரிடமே பரலோக ஆட்சியுரிமையை யெகோவா ஒப்படைத்திருக்கிறார். கிறிஸ்து ஆட்சியுரிமையை பெற்றிருக்கிறார், கட்டளையிடுவதற்கான அதிகாரத்தையும் பெற்றிருக்கிறார்.—சங்கீதம் 2:8, 9; ஏசாயா 55:4; தானியேல் 7:13, 14.
நமக்குப் பாடம்:
38:26. விதவையாயிருந்த தன்னுடைய மருமகள் தாமாருக்கு யூதா நியாயம் செய்யவில்லை. என்றாலும், அவள் கர்ப்பமானதற்கு தானே காரணம் என்பதை அறிந்தபோது அவர் தாழ்மையோடு தன் தவற்றை ஒப்புக்கொண்டார். நாமும்கூட நம்முடைய தப்பிதங்களை உடனடியாக ஒப்புக்கொள்ள வேண்டும்.
39:9. போத்திபாருடைய மனைவியின் விஷயத்தில் யோசேப்பு நடந்துகொண்ட விதம், ஒழுக்கம் சம்பந்தப்பட்டதில் அவருக்கு கடவுளுடைய சிந்தையும் கடவுளுடைய நியமங்களின் அடிப்படையிலான மனசாட்சியும் இருந்ததை காட்டுகிறது. சத்தியத்தைப் பற்றிய திருத்தமான அறிவில் வளர்ந்து வருகையில் நாமும் அவரைப் போலவே இருக்க முயல வேண்டாமா?
41:14-16, 39, 40. தமக்கு பயப்படுகிறவர்களின் சூழ்நிலையை தலைகீழாக மாற்ற யெகோவாவால் முடியும். நமக்கு கஷ்டங்கள் நேரிடுகையில் யெகோவா மீது நம்பிக்கை வைத்து அவருக்கு உண்மையாக நிலைத்திருப்பதே ஞானமான செயல்.
அவர்களுக்கு உறுதியான விசுவாசம் இருந்தது
ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு ஆகியோர் உண்மையில் யெகோவாவுக்கு பயந்து நடந்த விசுவாசமுள்ள மனிதர்கள். ஆதியாகம புத்தகத்திலுள்ள அவர்களது வாழ்க்கைப் பதிவு, உண்மையில் நம் விசுவாசத்தை பலப்படுத்துகிறது, மதிப்புமிக்க அநேக பாடங்களையும் கற்பிக்கிறது.
தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் வாராந்தர பைபிள் வாசிப்பு பகுதியை கலந்தாலோசிக்கையில் இந்தப் பதிவிலிருந்து நீங்கள் நன்மை அடையலாம். மேலே சொல்லப்பட்டவற்றை சிந்தித்துப் பார்ப்பது வாசிக்கும் விஷயங்களை கண்முன் நிறுத்த உதவும்.
[அடிக்குறிப்பு]
a ஜனவரி 1, 2004 காவற்கோபுரத்தில் “ஆதியாகம புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்—I” என்ற கட்டுரையைக் காண்க.
[பக்கம் 26-ன் படம்]
ஆபிரகாம் விசுவாசமுள்ள மனிதராக இருந்தார்
[பக்கம் 26-ன் படம்]
யோசேப்பை யெகோவா ஆசீர்வதிக்கிறார்
[பக்கம் 26-ன் படம்]
நீதிமானாகிய லோத்துவும் அவருடைய மகள்களும் பாதுகாக்கப்பட்டார்கள்
[பக்கம் 29-ன் படம்]
யாக்கோபு பரிசுத்த காரியங்களை உயர்வாக மதித்தார். நீங்கள்?