ஊக்கந்தளராத முயற்சி—எப்போது யெகோவா பலனளிக்கிறார்?
“நா ன் போகட்டும், பொழுது விடிகிறது.”
“நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன்.”
“உன் பேர் என்ன?”
“யாக்கோபு.”
“உன் பேர் இனி யாக்கோபு என்னப்படாமல் இஸ்ரவேல் என்னப்படும். தேவனோடும் மனிதரோடும் போராடி மேற்கொண்டாயே.”—ஆதியாகமம் 32:26-28.
இது 97 வயதான யாக்கோபு விளையாட்டு வீரராக தன் திறமையை மிகவும் பிரமாதமாய் வெளிக்காட்டியதால் கிடைத்த பலனைப் பற்றிய ஒரு சுவாரஸியமான உரையாடல். பைபிள் அவரை விளையாட்டு வீரர் என்று வருணிக்காவிட்டாலும், அவர் ஓர் இரவு முழுக்க தூதன் ஒருவரோடு போராடினார். ஏன்? தனது முற்பிதாவுக்கு யெகோவா கொடுத்திருந்த வாக்குறுதியின் மீது—தனது ஆஸ்தியின் மீது—யாக்கோபு ஆழ்ந்த அக்கறை காட்டினார்.
பல ஆண்டுகளுக்கு முன், யாக்கோபின் சகோதரனாகிய ஏசா ஒரு கோப்பை கூழுக்காக தன் சேஷ்டபுத்திர பாகத்தை இவருக்கு விற்றிருந்தார். இப்போது, ஏசா 400 பேருடன் தன்னை சந்திக்க வரும் செய்தியை யாக்கோபு கேள்விப்படுகிறார். யாக்கோபின் கவலையை புரிந்துகொள்ள முடிகிறது. ஆகவே தன்னுடைய குடும்பம் யோர்தானுக்கு அக்கரையில் உள்ள தேசத்தில் யெகோவாவின் வாக்குறுதிப்படி செழிப்புடன் வாழும் என்ற உறுதியை பெற விரும்புகிறார். தான் ஜெபித்ததற்கு ஏற்ப யாக்கோபு திட்டவட்டமான நடவடிக்கை எடுக்கிறார். தன்னை சந்திக்க வரும் ஏசாவுக்கு எக்கச்சக்கமான வெகுமதிகளை முதலாவதாக அனுப்பி வைக்கிறார். வரும்முன் காப்போம் என்பதன் அடிப்படையில் தன்னிடம் உள்ள அனைத்தையும் இரண்டு பரிவாரங்களாக பிரிக்கிறார், தன் மனைவிகளையும் பிள்ளைகளையும் யாப்போக்கு என்கிற ஆற்றின் துறையைக் கடந்து போக பண்ணுகிறார். விடாமுயற்சியோடும் மிகுந்த கண்ணீரோடும் ஒரு தேவதூதனோடு இரவு முழுவதும் போராடி ‘அவர் அருளை வேண்டிக்கொள்ள’ மேலுமான முயற்சியில் ஈடுபடுகிறார்.—ஓசேயா 12:4, பொது மொழிபெயர்ப்பு; ஆதியாகமம் 32:1-32.
இதற்கு முன் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை எடுத்துக்கொள்ளுங்கள். யாக்கோபின் இரண்டாவது மனைவியும் அவருடைய நேசத்துக்குரியவளுமே ராகேல். யாக்கோபை ஆசீர்வதிப்பதாக யெகோவா அளித்திருந்த வாக்குறுதியை ராகேல் நன்கு அறிந்திருந்தாள். அவளுடைய சகோதரியாகிய யாக்கோபின் முதல் மனைவி லேயாளுக்கு நான்கு மகன்கள் இருக்கின்றனர், ராகேலோ மலடியாயிருக்கிறாள். (ஆதியாகமம் 29:31-35) சுய பச்சாதாபத்தில் தளர்ந்துவிடாமல் அவள் யெகோவாவிடம் தொடர்ந்து மன்றாடினாள், மேலும் தன் ஜெபங்களுக்கு இசைவாக திட்டவட்டமான நடவடிக்கையும் எடுத்தாள். அவளுக்கு முன்னோராக இருந்த சாராள் ஆகாரிடம் செயல்பட்டது போலவே, ராகேல் தன் வேலைக்காரியாகிய பில்காளை யாக்கோபு இரண்டாந்தரமான மனைவியாக கொண்டு அவள் மூலம் ‘தன் மடிக்குப் பிள்ளைகளைப் பெற்றுத்’ தர வேண்டும் என்று சொன்னாள்.a தாண், நப்தலி என்ற இரண்டு மகன்களை யாக்கோபுக்கு பில்காள் பெற்றுக்கொடுத்தாள். நப்தலி பிறந்தபோது ராகேல் எந்தளவுக்கு உணர்ச்சிப்பூர்வமாக போராடினாள் என்பதை சொல்கிறாள்: “நான் மகா போராட்டமாய் என் சகோதரியோடே போராடி மேற்கொண்டேன்.” யோசேப்பு பென்யமீன் என்ற இரண்டு குமாரர்களைப் பெற்று ராகேல் மேலும் ஆசீர்வதிக்கப்படுகிறாள்.—ஆதியாகமம் 30:1-8; 35:24.
யாக்கோபும் ராகேலும் எடுத்த சரீர மற்றும் உணர்ச்சிப்பூர்வமான முயற்சிகளை யெகோவா ஏன் ஆசீர்வதித்தார்? அவர்கள் யெகோவாவின் சித்தத்திற்கே முதலிடம் கொடுத்து தங்களுடைய ஆவிக்குரிய ஆஸ்தியை பெரிதும் மதித்தார்கள். அவர்களுடைய வாழ்க்கையில் அவருடைய ஆசீர்வாதத்துக்காக விடாமுயற்சியுடன் ஜெபித்தார்கள், கடவுளுடைய சித்தத்துக்கும் தங்களுடைய வேண்டுதல்களுக்கும் இசைய தேவையான நடவடிக்கை எடுத்தார்கள்.
யாக்கோபையும் ராகேலையும் போலவே, யெகோவாவின் ஆசீர்வாதத்தைப் பெற ஊக்கம் தளராத முயற்சி அவசியம் என்பதை இன்றும் அநேகர் ஆமோதிப்பர். அவர்களுடைய முயற்சிகளோடுகூட பெரும்பாலும் கண்ணீரும் மனச்சோர்வும் ஏமாற்றமும் சேர்ந்தே இருக்கும். நீண்ட கால இடைவெளிக்குப்பின், மறுபடியுமாக தவறாமல் கிறிஸ்தவ கூட்டங்களுக்குச் செல்வதற்கு எப்படி விடாமுயற்சி தேவைப்பட்டது என்பதை பற்றி ஒரு கிறிஸ்தவ தாய் நினைவுபடுத்தி சொல்கிறாள். விசுவாசத்தில் இல்லாத கணவரோடு வாழ்ந்துகொண்டு ஐந்து சிறு மகன்களை வைத்துக்கொண்டு ராஜ்ய மன்றத்துக்கு 30 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்வது பெரிய சவாலாக இருந்தது. “கூட்டங்களுக்கு தவறாமல் செல்ல பெருமளவு சுயகட்டுப்பாடு தேவைப்பட்டது, இது எனக்கும் என் மகன்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பது எனக்குத் தெரியும். இதுவே சிறந்த பாதை என்பதை புரிந்துகொள்ள அவர்களுக்கு இது உதவியது.” யெகோவா அவளுடைய முயற்சிகளை ஆசீர்வதித்தார். கிறிஸ்தவ சபையில் ஆர்வத்துடன் செயல்படும் அவளுடைய மூன்று மகன்களில் இருவர் முழுநேர ஊழியர்கள். அவர்கள் செய்திருக்கும் ஆன்மீக முன்னேற்றத்தைப் பார்த்து ஆனந்தப்படும் தாய் இவ்வாறு சொல்கிறாள்: “ஆன்மீக வளர்ச்சியில் அவர்கள் என்னை மிஞ்சிவிட்டார்கள்.” ஊக்கந்தளராத முயற்சிக்கு எப்பேர்ப்பட்ட பலன்!
யெகோவா ஆசீர்வதிக்கும் ஊக்கந்தளராத முயற்சி
ஊக்கந்தளராத முயற்சியும் கடின உழைப்பும் இருந்தால் பலன்கள் நிச்சயம். ஒரு வேலையில் நாம் எந்தளவுக்கு விடாமுயற்சியுடன் ஈடுபடுகிறோமோ அந்தளவுக்கு மனநிறைவைப் பெறுவோம். அந்த விதமாகவே யெகோவா நம்மை படைத்திருக்கிறார்: “மனுஷர் யாவரும் புசித்துக் குடித்து தங்கள் சகலப் பிரயாசத்தின் பலனையும் அனுபவிப்பது தேவனுடைய அநுக்கிரகம்” என்று சாலொமோன் ராஜா எழுதினார். (பிரசங்கி 3:13; 5:18, 19) ஆனால் கடவுளிடமிருந்து ஆசீர்வாதத்தைப் பெற, சரியான திசையில் நாம் விடாமுயற்சியுடன் செயல்படுவதை நிச்சயப்படுத்திக் கொள்ள வேண்டும். உதாரணமாக, ஆவிக்குரிய காரியங்கள் இரண்டாவது இடத்தை ஏற்றிருக்கும் வாழ்க்கை முறையில் யெகோவாவின் ஆசீர்வாதத்தை எதிர்பார்ப்பது நியாயமானதாக இருக்குமா? விசுவாசத்தைப் பலப்படுத்தும் கூட்டுறவையும் கிறிஸ்தவ கூட்டங்களின் போதனைகளையும் வழக்கமாக தவறவிட நேரும் ஒரு வேலையை அல்லது பதவி உயர்வை ஏற்றுக்கொள்ளும் ஒப்புக்கொடுத்த கிறிஸ்தவர் ஒருவர் யெகோவாவின் அங்கீகாரத்தை பெறலாம் என்று எதிர்பார்க்க முடியுமா?—எபிரெயர் 10:23-25.
ஆன்மீக காரியங்கள் எதிலும் ஈடுபடாமல், உலகப்பிரகாரமான வேலைக்காக அல்லது பொன்னையும் பொருளையும் சேர்ப்பதற்காக வாழ்நாள் முழுவதும் மாடாய் உழைத்தாலும் அதற்கான ‘பலனை அனுபவிக்க’ முடியும் என்று உறுதியாக சொல்வதற்கில்லை. தவறான திசையில் செய்யப்படும் முயற்சியின் பலனை விதைக்கிறவனுடைய உவமையில் இயேசு விளக்கினார். “முள்ளுள்ள இடங்களில்” விதைக்கப்பட்ட விதைகளைக் குறித்து, “வசனத்தைக் கேட்கிறவனாயிருந்தும், உலக கவலையும் ஐசுவரியத்தின் மயக்கமும் வசனத்தை நெருக்கிப்போடுகிறதினால், அவனும் பலனற்றுப்போவான்” என்று சொன்னார். (மத்தேயு 13:22) பவுலும்கூட இதே ஆபத்தைக் குறித்து எச்சரித்த பின்னர், பணக்காரராக விரும்புகிறவர்கள் “சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள்” என்றும் கூறினார். ஆன்மீக வாழ்க்கையை நாசப்படுத்தும் இப்படிப்பட்ட வாழ்க்கை முறைக்கு பரிகாரம்தான் என்ன? பவுல் தொடர்ந்து இவ்வாறு கூறுகிறார்: ‘இவைகளை விட்டோடி, நிலையற்ற ஐசுவரியத்தின்மேல் நம்பிக்கை வையாமலும், நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைக்க வேண்டும்.’—1 தீமோத்தேயு 6:9, 11, 17, 19.
நம்முடைய வயது என்னவாக இருந்தாலும் அல்லது நாம் எவ்வளவு காலம் யெகோவாவை சேவித்திருந்தாலும் யாக்கோபையும் ராகேலையும் போல் ஊக்கந்தளராத முயற்சியோடு இருந்தால் பயனடையலாம். கடவுளுடைய அங்கீகாரத்தை நாடியபோது அவர்களுடைய சூழ்நிலைமைகள் எந்தளவுக்கு அச்சமூட்டுவதாக அல்லது ஏமாற்றமளிப்பதாக இருந்த போதிலும் தங்கள் ஆவிக்குரிய ஆஸ்தியிலேயே அவர்கள் குறியாக இருந்தார்கள். அதைப் போலவே இன்று நாம் எதிர்ப்படும் அழுத்தங்களும் கஷ்டங்களும் அச்சமூட்டுவதாக, ஏமாற்றமளிப்பதாக அல்லது மனச்சோர்வடையச் செய்வதாக இருக்கலாம். எதற்கு இந்தப் போராட்டம் என சலிப்படைந்து சாத்தானின் தாக்குதலில் இன்னொரு பலியாள் ஆகிவிடும் சோதனையை எதிர்ப்படுவோம். தன் வசமிருக்கும் எந்த தந்திரத்தையும் சாத்தான் பயன்படுத்தலாம். இது அவன் தன் காரியத்தை சாதித்துக்கொள்ள பயன்படுத்தும் பொழுதுபோக்கு, விளையாட்டு, விருப்ப வேலை, வாழ்க்கைப்பணி, பொருளாதார செழுமை ஆகியவற்றில் எதுவாகவும் இருக்கும். சிறந்த பலன்கள் கிடைக்குமென பெரும்பாலும் வாக்குறுதிகளே அளிக்கப்படுகின்றன, ஆனால் அவை பெறப்படுவதில்லை. இப்படிப்பட்ட காரியங்களில் வஞ்சிக்கப்படுகிறவர்கள் அல்லது வசீகரிக்கப்படுகிறவர்கள் அநேகமாக ஏமாற்றத்தையே அடைகிறார்கள். பூர்வத்தில் வாழ்ந்த யாக்கோபையும் ராகேலையும் போலவே விடாமுயற்சியுடன் போராடும் ஒருவரின் மனநிலையை வளர்த்து சாத்தானின் தந்திரங்களை வெற்றிகரமாக சமாளிப்போமாக.
சாத்தானின் விருப்பமெல்லாம் தோல்வியை நாம் ஒப்புக்கொண்டு ‘நிலைமை கைமீறி போய்விட்டது, இனி ஒன்றும் செய்ய முடியாது, முயற்சி செய்வதில் அர்த்தமே இல்லை’ என்று நினைக்க வேண்டும் என்பதே. எனவே, ‘யாருக்கும் என்மீது அன்பில்லை’ ‘யெகோவா என்னை மறந்துவிட்டார்’ என்று எண்ணி விரக்தியடையும் மனநிலை வளராமல் நம்மைக் காத்துக்கொள்வது எவ்வளவு அவசியம். இப்படி எண்ணினால் நம்மை நாமே அழித்துக்கொள்வோம். நாம் சோர்ந்துபோய் ஆசீர்வாதத்தைப் பெறும் வரை போராடப்போவதில்லை என முயற்சியை கைவிட்டுவிட்டதை இது அர்த்தப்படுத்துமா? யெகோவா நம்முடைய ஊக்கந்தளராத முயற்சியை ஆசீர்வதிக்கிறார் என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்.
யெகோவாவின் ஆசீர்வாதத்தைப் பெற தொடர்ந்து போராடுங்கள்
யெகோவாவின் ஊழியராக நம்முடைய வாழ்க்கை சம்பந்தமாக இரண்டு அடிப்படை உண்மைகளை புரிந்துகொள்வதில்தான் நம்முடைய ஆன்மீக ஆரோக்கியம் பெருமளவு சார்ந்திருக்கிறது. (1) பிரச்சினைகளால், வியாதியால், அல்லது வாழ்க்கையில் கடினமான சூழ்நிலைமைகளால் அல்லல்படுவது எந்தவொரு தனி நபர் மட்டுமே இல்லை. (2) உதவியையும் ஆசீர்வாதத்தையும் பெறும்படிக்கு தம்மிடம் விடாமுயற்சியுடன் மன்றாடுகிறவர்களின் கூக்குரலுக்கு யெகோவா செவிசாய்க்கிறார்.—யாத்திராகமம் 3:7-10; யாக்கோபு 4:8, 10; 1 பேதுரு 5:8, 9.
நீங்கள் எவ்வளவு கஷ்டமான சூழ்நிலைமையில் இருந்தாலும் அல்லது எந்தளவுக்கு இயலாமையை உணர்ந்தாலும், “நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவ”மாகிய விசுவாசக் குறைவுக்கு இடம் கொடுத்துவிடாதீர்கள். (எபிரெயர் 12:1) ஆசீர்வாதத்தைப் பெறும் வரை தொடர்ந்து போராடுங்கள். இரவு முழுவதும் ஆசீர்வாதத்துக்காக போராடிய வயதான யாக்கோபை நினைத்து பொறுமையோடிருங்கள். வசந்த காலத்தில் விதை விதைத்துவிட்டு அறுவடைக்காக காத்திருக்கும் விவசாயியைப் போல, உங்கள் ஆன்மீக செயல்கள் எந்தளவுக்கு குறைவானதாக இருப்பதாய் நீங்கள் கருதினாலும் அவற்றின்மீது யெகோவாவின் ஆசீர்வாதத்துக்காக பொறுமையோடு காத்திருங்கள். (யாக்கோபு 5:7, 8) சங்கீதக்காரனின் வார்த்தைகளை எப்போதும் உங்கள் நினைவில் வையுங்கள்: “கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள்.” (சங்கீதம் 126:5; கலாத்தியர் 6:9) உறுதியாக இருங்கள், தொடர்ந்து போராடுகிறவர்களில் ஒருவராக நிலைத்திருங்கள்.
[அடிக்குறிப்பு]
a நியாயப்பிரமாண உடன்படிக்கை செய்யப்படுவதற்கு முன்பே பல மனைவிகளை வைத்திருக்கும் பழக்கம் இருந்து வந்தது. அது ஏற்றுக்கொள்ளப்பட்டு, நியாயப்பிரமாணத்தால் ஒழுங்குபடுத்தப்பட்டுமிருந்தது. கடவுள் ஏதேன் தோட்டத்தில் தாம் ஏற்படுத்தியிருந்த ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்ற நியதியை இயேசு கிறிஸ்து வருவதற்கு முன்பு மீண்டும் நிலைநாட்டுவதை பொருத்தமான சமயமாக கருதவில்லை. ஆனால் மறுமனையாட்டியை சட்டங்களின் மூலம் பாதுகாத்தார். பலதார மணம் இஸ்ரவேலர் எண்ணிக்கையில் விரைவாக பெருகுவதற்கு வழிவகுத்தது.