அதிகாரம் 25
தற்புணர்ச்சிப் பழக்கம்—அது எவ்வளவு வினைமையானது?
“தற்புணர்ச்சிப் பழக்கம் கடவுளுடைய பார்வையில் தவறாக இருக்குமோவென்று நான் யோசிக்கிறேன். எதிர்காலத்தில் நான் எப்போதாவது விவாகம் செய்துகொண்டால் அது என்னுடைய உடல் ஆரோக்கியத்தை மற்றும்/அல்லது மன ஆரோக்கியத்தை அல்லது இரண்டையுமே பாதிக்குமா?”—பதினைந்து வயது மெலிசா.
இந்த எண்ணங்களால் அநேக இளைஞர்கள் வாதிக்கப்பட்டிருக்கிறார்கள். காரணம்? தற்புணர்ச்சிப் பழக்கம் பரவலாக காணப்படுகிறது. அறிக்கைகளின்படி, சுமார் 97 விழுக்காடு ஆண்களும் 90 விழுக்காடு மேலான பெண்களும் 21 வயதிற்குள்ளாக தற்புணர்ச்சிப் பழக்கத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். மேலுமாக, இந்தப் பழக்கம் எல்லா விதமான நோய்களுக்கும் காரணம் என்பதாக குற்றஞ் சாட்டப்பட்டிருக்கிறது—பாலுண்ணி மற்றும் சிவப்பு ஆமை நோய் முதற்கொண்டு வலிப்புநோய் மற்றும் மனநோய் வரை.
இருபதாம் நூற்றாண்டு மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் இனிமேலும் இத்தகைய பயமுறுத்தும் எச்சரிப்புகளைச் செய்வதில்லை. உண்மையில், இன்று மருத்துவர்கள் தற்புணர்ச்சிப் பழக்கம் மூலமாக எந்த ஒரு சரீர பிரகாரமான நோயும் உண்டாவதில்லை என்று நம்புகிறார்கள். ஆராய்ச்சியாளர்களான வில்லியம் மாஸ்டர்ஸ் மற்றும் வெர்ஜீனியா ஜான்சன் ஆகியோர் கூறுகிறார்கள்: “தற்புணர்ச்சிப் பழக்கம், அது எவ்வளவு அடிக்கடி செய்யப்பட்டாலும், மனக்கோளாறு ஏற்படுத்துவதாக மருத்துவ ஆதாரம் கிடையாது.” இருப்பினும், வேறு கெடுதலான பாதிப்புகள் இருக்கின்றன! அநேக கிறிஸ்தவ இளைஞர்கள் இந்தப் பழக்கத்தைக் குறித்து கவலைக்கொள்கிறார்கள். “நான் அதில் [தற்புணர்ச்சிப் பழக்கத்தில்] ஈடுபட்டபோது, நான் யெகோவா எதிர்பார்க்கும் விதத்தில் நடக்கத் தவறினவனாக உணர்ந்தேன்” என்று ஓர் இளைஞன் எழுதினான். “நான் சில சமயங்களில் அதிகமாகச் சோர்ந்துபோனேன்.”
தற்புணர்ச்சிப் பழக்கம் என்பது என்ன? அது எவ்வளவு வினைமையானது, மற்றும் ஏன் பெரும்பாலான இளைஞர்கள் விலக்குவதற்கு கடினமான ஒரு பழக்கமாக இதைக் காண்கிறார்கள்?
இளைஞர்கள் ஏன் பலவீனமுள்ளவர்களாக இருக்கிறார்கள்?
தற்புணர்ச்சிப் பழக்கம் என்பது பாலுறவு சம்பந்தமான கிளர்ச்சியை உண்டாக்க வேண்டுமென்றே செய்யும் சுய தூண்டுதலாகும். இளமைப் பருவத்தின்போது, பாலுறவு சம்பந்தமான ஆசைகள் தீவிரமாகின்றன. இனவிருத்தி செய்யக்கூடிய உறுப்புகளை பாதிக்கும் சக்திவாய்ந்த சுரப்பு நீர்கள் விடுவிக்கப்படுகின்றன. இவ்வாறாக ஓர் இளைஞன் இந்த உறுப்புகள் இன்பமான உணர்வுகளை உண்டாக்கக்கூடியவையாக இருப்பதாக அறிகிறான். சில சமயங்களில் பாலுறவைக் குறித்து சிந்திக்காமலேயே ஓர் இளைஞன் பாலுறவு சம்பந்தமாக கிளர்ச்சியடையலாம்.
உதாரணமாக, பல்வேறான சஞ்சலத்தினாலோ, பயங்களினாலோ, அல்லது ஏமாற்றங்களினாலோ உண்டாக்கப்பட்ட உணர்ச்சிகள் ஒரு வாலிபனின் உணர்ச்சி சம்பந்தமான நரம்பு மண்டலத்தைப் பாதித்து, பாலுறவு சம்பந்தமான கிளர்ச்சியை உண்டாக்கக்கூடும். ஆண் விந்து உண்டாகியிருப்பதானது அவனைப் பாலுறவு சம்பந்தமாக கிளர்ச்சியூட்டப்பட்டவனாக விழிக்கும்படிச் செய்யலாம். அல்லது சாதாரணமாக பாலுறவு சம்பந்தமான ஒரு கனவோடேகூட இராப்பொழுது இந்திரிய வெளியேற்றத்தை இது உண்டாக்கலாம். இதேபோன்று, சில இளம் பெண்கள் தற்செயலாகத் தூண்டப்பட்டவர்களாக தங்களைக் காணலாம். அநேகர் அவர்களுடைய மாதவிடாய் காலத்திற்குச் சற்று முன்பாகவோ அல்லது பின்பாகவோ அதிகளவான பாலுறவு சம்பந்தமாக ஆவல் கொள்கிறார்கள்.
ஆகவே அத்தகைய தூண்டுதல்களை நீ அனுபவித்திருந்தால், உன்னில் தவறு ஒன்றும் இல்லை. அது இளம் சரீரத்தின் இயல்பான பிரதிபலிப்பே. அத்தகைய உணர்ச்சிகள், அவை தீவிரமாக இருந்தபோதிலும், தற்புணர்ச்சிப் பழக்கத்தைப் போன்றவையல்ல; ஏனென்றால் அவை பெரும்பாலும் தானாகவே சம்பவிக்கின்றன. நீங்கள் வளர்ந்துவரும்போது, இந்தப் புதிய உணர்ச்சிகளின் தீவிரம் தணிந்துவிடும்.
இருப்பினும், தெரிந்துகொள்ளும் ஆர்வமும் இந்தப் புதிய உணர்ச்சிகளின் விசித்திரமும் தங்களுடைய பாலுறுப்புகளை வேண்டுமென்றே தூண்டிவிட, அல்லது அவற்றோடு விளையாட சில இளைஞர்களை வழிநடத்தியிருக்கிறது.
‘மனதிற்கான எரிபொருள்’
ஓர் ஒழுக்கங்கெட்ட பெண்ணைச் சந்திக்கும் ஓர் இளைஞனைப் பற்றி பைபிள் விவரிக்கிறது. அவள் அவனை முத்தமிட்டு, “வா . . . இன்பங்களினால் பூரிப்போம்” என்று சொல்கிறாள். பிறகு என்ன நடக்கிறது? “உடனே அவன் அவள் பின்னே சென்றான்; ஒரு மாடு அடிக்கப்படும்படிச் செல்வதுபோல்.” (நீதிமொழிகள் 7:7-22) தெளிவாகவே, இந்த இளைஞனின் காம உணர்ச்சிகள் அவன் பார்த்த மற்றும் கேட்ட காரியங்களினால் தூண்டப்பட்டதேயல்லாமல் வெறுமென அவனுடைய சுரப்பு நீர்களால் மட்டும் அல்ல.
அதேபோன்று, ஓர் இளைஞன் ஒப்புக்கொள்கிறான்: ‘என்னுடைய தற்புணர்ச்சிப் பிரச்னை முழுவதும் என்னுடைய மனதிற்குள் நான் எதை உட்கொண்டிருந்தேன் என்பதில் அடங்கியிருந்தது. ஒழுக்கங்கெட்ட நடத்தைகளை உட்படுத்திய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும், சில சமயங்களில் நிர்வாணக் காட்சிகளைக் கொண்ட ஆபாச நிகழ்ச்சிகளையும் பார்ப்பதுண்டு. அவை ஒருவருடன் நிலைத்திருக்குமளவுக்கு அதிர்ச்சியூட்டும் காட்சிகள். அவை மீண்டும் என் மனதுக்கு வந்து, தற்புணர்ச்சிப் பழக்கத்தில் ஈடுபட மனதிற்கு எரிபொருளாயிருந்தன.’
ஆம், அநேக சமயங்களில் ஒருவர் வாசிக்கிற, பார்க்கிற அல்லது கவனித்துக் கேட்கிற காரியங்களும், ஒருவர் பேசுகிற அல்லது தியானிக்கிற காரியங்களும் தற்புணர்ச்சிப் பழக்கத்தைத் தூண்டிவிடுகின்றன. 25 வயது பெண் ஒருத்தி ஒப்புக்கொண்டாள்: “நான் அந்தப் பழக்கத்தை நிறுத்த முடியாததுபோல் தோன்றியது. இருப்பினும், நான் காதல் கதைகளைப் படிப்பதுண்டு, இதுவே பிரச்னைக்குக் காரணமாயிருந்தது.”
ஒரு “மயக்க மருந்து”
இந்தப் பழக்கத்தை விலக்குவது ஏன் இவ்வளவு கடினமாக இருக்கிறது என்பதற்கான மிகப் பிரதான காரணத்தை அந்த இளம் பெண்ணின் அனுபவம் வெளிக்காட்டுகிறது. அவள் தொடர்ந்து கூறுகிறாள்: “மன அழுத்தம், பதட்ட நிலை அல்லது கவலையை விடுவிப்பதற்கு நான் தற்புணர்ச்சிப் பழக்கத்தில் ஈடுபட்டேன். பறந்துபோகும் அந்த இன்பம், எரிச்சலான நிலையில் தன்னை அமைதிப்படுத்த குடிகாரன் அருந்தும் மதுபானத்தைப் போன்றிருந்தது.”
ஆராய்ச்சியாளர்களாகிய சூஸேன் மற்றும் இர்விங் சர்னாஃப் ஆகியோர் எழுதுகிறார்கள்: “சிலருடைய காரியத்தில், தாங்கள் எதிர்க்கப்படுகையில் அல்லது ஏதாவது ஒரு காரியத்தில் ஏமாற்றமடைகையில் தற்புணர்ச்சிப் பழக்கம் அவர்கள் ஆறுதலுக்காக திரும்பும் ஒரு பழக்கமாகிவிடலாம். ஆனால் மற்றவர்கள், மிகவும் கடுமையான உணர்ச்சிப்பூர்வமான அழுத்தத்தின் கீழ் இருக்கையில் மாத்திரமே இவ்விதமாக விலகிக் கொள்கிறார்கள்.” தெளிவாகவே, மற்றவர்களும் இதேபோன்று மன அமைதி இழக்கும்போது, மனச்சோர்வடையும்போது, தனிமையாக உணரும்போது, அல்லது கடுமையான அழுத்தத்தில் இருக்கும்போது இந்தப் பழக்கத்தை நாடுகிறார்கள்; இது அவர்களுடைய பிரச்னைகளை நீக்குவதற்கான ஒரு “மயக்க மருந்தாக” ஆகிவிடுகிறது.
பைபிள் என்ன சொல்கிறது?
ஓர் இளைஞன் கேட்டான்: “தற்புணர்ச்சிப் பழக்கம் மன்னிக்க முடியாத பாவமா?” தற்புணர்ச்சிப் பழக்கம் பைபிளில் குறிப்பிடப்படவில்லை.a இந்தப் பழக்கம் பைபிள் காலத்தில் கிரேக்க மொழி பேசும் உலகத்தில் சாதாரணமாக இருந்தது; இந்தப் பழக்கத்தை விவரிக்க அநேக கிரேக்க வார்த்தைகள் உபயோகிக்கப்பட்டன. ஆனால் இந்த வார்த்தைகளில் ஒன்றும் பைபிளில் உபயோகிக்கப்படுவதில்லை.
தற்புணர்ச்சிப் பழக்கம் பைபிளில் நேரடியாக கண்டிக்கப்படாததன் காரணமாக, இது தீங்கற்றது என்பதை அர்த்தப்படுத்துகிறதா? நிச்சயமாக இல்லை! வேசித்தனம் போன்ற பெரிய பாவங்களோடு இது வகைப்படுத்தப்படாதபோதிலும், தற்புணர்ச்சிப் பழக்கம் நிச்சயமாகவே ஓர் அசுத்தமான பழக்கமாகும். (எபேசியர் 4:19) இந்த அசுத்தமான பழக்கத்தை உறுதியாக விலக்குவதன் மூலமாக நீங்கள் “பிரயோஜன”மடையுங்கள் என்று கடவுளுடைய வார்த்தையின் நியமங்கள் குறிப்பிடுகின்றன.—ஏசாயா 48:17.
“பாலுறவு பசியார்வத்தைத்” தூண்டுதல்
“பாலுறவு பசியார்வத்தை உண்டுபண்ணுகிற உங்கள் அவயங்களை அழித்துப்போடுங்கள்” என்று பைபிள் துரிதப்படுத்துகிறது. (கொலோசெயர் 3:5, NW) “பாலுறவு பசியார்வம்” என்பது சாதாரண பாலுறவு உணர்வுகளைக் குறிப்பதில்லை, கட்டுப்படுத்த முடியாத தீவிர காம உணர்ச்சியைக் குறிக்கிறது. இத்தகைய “பாலுறவு பசியார்வ”மானது ரோமர் 1:26, 27-ல் பவுல் விவரித்த விதமான ஒழுக்கக்கேடான செயல்களில் ஒருவர் ஈடுபடுவதற்கு வழிநடத்தக்கூடும்.
ஆனால் தற்புணர்ச்சிப் பழக்கம் இத்தகைய ஆவல்களை “அழித்துப்போடுகிறதல்லவா?” இல்லை. அதற்கு மாறாக, ஓர் இளைஞன் ஒப்புக்கொண்ட விதமாக இருக்கிறது. “நீங்கள் தற்புணர்ச்சிப் பழக்கத்தில் ஈடுபடும்போது, மனதின் பிரகாரமாக தவறான ஆசைகளில் ஆழ்ந்திருப்பீர்கள்; அவை அனைத்தும் அவைகளுக்கான உங்களுடைய பசியார்வத்தையே அதிகரிக்கிறது.” அநேக சமயங்களில் பாலுறவு இன்பத்தை அதிகரிக்க ஒழுக்கக்கேடான விதத்தில் கற்பனைச் செய்யப்படுகிறது. (மத்தேயு 5:27, 28) ஆகவே, சரியான சந்தர்ப்பங்கள் அளிக்கப்படும்போது, ஒருவர் சுலபமாக ஒழுக்கக்கேட்டில் விழுந்துவிடக்கூடும். இதுவே ஓர் இளைஞனுக்குச் சம்பவித்தது. அவன் ஒப்புக்கொள்கிறான்: “ஒரு சமயத்தில், தற்புணர்ச்சிப் பழக்கமானது ஒரு பெண்ணோடு என்னை, ஈடுபடுத்தாமலேயே என்னுடைய மனவேதனையிலிருந்து விடுபட முடியும் என்று நான் எண்ணினேன். இருப்பினும் அதில் ஈடுபடவே நான் மேலான ஆசையை வளர்த்தேன்.” தற்புணர்ச்சிப் பழக்கத்தில் ஈடுபட வயது வந்தவர்களில் பெரும்பான்மையோர் வேசித்தனமும்கூட செய்திருக்கிறார்கள் என்று ஒரு தேசீய அளவிலான ஆய்வு வெளிப்படுத்தியிருப்பதில் ஆச்சரியமேதுமில்லை. அவர்கள் கற்புள்ளவர்களாக இருந்தவர்களின் எண்ணிக்கைக்கும் 50 விழுக்காடு மிஞ்சியிருக்கிறார்கள்!
மனதின் பிரகாரமாகவும் உணர்ச்சிப் பிரகாரமும் அசுத்தப்படுத்துதல்
தற்புணர்ச்சிப் பழக்கம் மனதின் பிரகாரமாக கறைப்படுத்தும் சில எண்ணங்களையும்கூட மனதில் பதியச் செய்கிறது. (ஒப்பிடுக 2 கொரிந்தியர் 11:3.) தற்புணர்ச்சிப் பழக்கத்தில் ஈடுபடும்போது, ஒருவர் அவனுடைய அல்லது அவளுடைய சொந்த சரீரப் பிரகாரமான உணர்வுகளிலேயே மூழ்கியிருப்பார்—முற்றிலும் சுயநலமுள்ள ஒன்று. பாலுறவு அன்பிலிருந்து பிரிக்கப்பட்டு, தீவிர உணர்ச்சியை வெளிப்படுத்தும் ஓர் அணிச்சைச் செயலாக மாற்றப்படுகிறது. ஆனால் கடவுள் பாலுறவு சம்பந்தமான ஆசைகள் பாலுறவு சம்போகங்களிலேயே திருப்தியாக்கப்பட வேண்டும் என்று நோக்கங்கொண்டார்—ஒரு மனிதனுக்கும் அவனுடைய மனைவிக்கும் இடையேயான அன்பின் வெளிப்பாடு.—நீதிமொழிகள் 5:15-19.
தற்புணர்ச்சிப் பழக்கத்தில் ஈடுபடும் ஒருவர் எதிர் பாலினரை வெறுமென பாலுறவு வஸ்துக்களாக, பாலுறவு சம்பந்தமாக திருப்தியடைவதற்கான கருவிகளாக மட்டுமே நோக்கும் போக்குடையவராக இருக்கலாம். இவ்விதமாக தற்புணர்ச்சிப் பழக்கத்தால் கற்பிக்கப்படுகிற தவறான எண்ணங்கள் ஒருவருடைய “ஆவியை,” அல்லது பிரதான மனச் சாய்வை மாசுபடுத்துகிறது. சிலருடைய விஷயத்தில், தற்புணர்ச்சிப் பழக்கத்தால் உண்டாக்கப்பட்ட பிரச்னைகள் விவாகத்திற்குப் பின்பாகவும்கூட நிலைத்திருக்கின்றன! நல்ல காரணத்தோடே கடவுளுடைய வார்த்தைத் துரிதப்படுத்துகிறது: “பிரியமானவர்களே, மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொள்வோம்.”—2 கொரிந்தியர் 7:1.
குற்ற உணர்வு பற்றியதில் ஒரு சமநிலையான நோக்கு
பெரும்பாலான இளைஞர்கள், இந்தக் கெட்ட பழக்கத்தை மேற்கொள்வதில் வெற்றி காண்பவர்களாக இருந்தபோதிலும், சில சமயங்களில் அதற்கு இடங்கொடுத்துவிடுகிறார்கள். அதிர்ஷ்டவசமாக, கடவுள் மிகுந்த இரக்கமுள்ளவராக இருக்கிறார். “ஆண்டவரே [யெகோவாவே, NW], நீர் நல்லவரும், மன்னிக்கிறவருமாக இருக்கிறீர்,” என்று சங்கீதக்காரன் சொன்னான். (சங்கீதம் 86:5) ஒரு கிறிஸ்தவன் தற்புணர்ச்சிப் பழக்கத்துக்கு இணங்கிவிடும்போது, அநேக சமயங்களில் அவனுடைய இருதயம் அவனைக் கண்டனஞ் செய்யும். இருப்பினும், “தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவராயிருந்து சகலத்தையும் அறிந்திருக்கிறார்” என்று பைபிள் விவரிக்கிறது. (1 யோவான் 3:20) கடவுள் நம்முடைய பாவங்களைக் காட்டிலும் அதிகத்தைப் பார்க்கிறார். அவருடைய அறிவின் மேன்மையானது மன்னிப்பிற்கான நம்முடைய ஊக்கமான வேண்டுதல்களுக்கு இரக்கத்தோடே செவிகொடுப்பதை அவருக்குக் கூடிய காரியமாக்குகிறது. ஓர் இளம் பெண் எழுதினாள்: “நான் ஓரளவிற்கு குற்றமுள்ளவளாக உணர்ந்தேன்; ஆனால் யெகோவா எப்பேர்ப்பட்ட அன்பான தேவனாக இருக்கிறார் என்பதையும் என்னுடைய இருதயத்தையும், என்னுடைய எல்லா முயற்சிகள் மற்றும் விருப்பங்களையும் அவரால் அறிய முடியும் என்பதையும் அறிவதானது நான் எப்போதாவது தவறுகையில் அதிகமாக மனச்சோர்வடைவதிலிருந்து என்னை விலக்குகிறது.” நீ தற்புணர்ச்சிப் பழக்கத்தில் ஈடுபடுவதற்கான ஆவலை எதிர்த்து போராடுவாயானால், வேசித்தனம் என்ற வினைமையான பாவத்தைப் பெரும்பாலும் செய்யமாட்டாய்.
செப்டம்பர் 1, 1959 ஆங்கில காவற்கோபுரம் விவரித்தது: “நாம் எதிர்பார்த்ததற்கும் மேலாக நம்முடைய பழைய வாழ்க்கைப் போக்கில் ஆழமாக புகுந்துவிட்ட ஒரு கெட்ட பழக்கத்தில் நாம் அநேக முறைகள் இடறிவிழுவதைக் காணக்கூடும். . . . நம்பிக்கையிழந்துவிடாதீர்கள். நீங்கள் மன்னிக்க முடியாத பாவத்தைச் செய்துவிட்டிருக்கிறீர்கள் என்று தீர்மானித்துவிடாதீர்கள். இவ்விதமாகச் சிந்திக்கும்படிதானே சாத்தான் விரும்பக்கூடியவனாக இருக்கிறான். நீங்கள் துக்கப்பட்டு வருந்தினீர்கள் என்ற உண்மைத்தானே நீங்கள் வெகுதூரத்துக்கும் சென்றுவிடவில்லை என்பதற்கு அத்தாட்சியாக இருக்கிறது. மனத்தாழ்மையோடும் ஊக்கத்தோடும் கடவுளிடத்திற்குத் திரும்பி, அவருடைய மன்னிப்பையும் சுத்திகரித்தலையும், உதவியையும் நாடுவதில் ஒருபோதும் சோர்ந்துவிடாதீர்கள். ஒரு குழந்தைப் பிரச்னையிலிருக்கும்போது தன்னுடைய தகப்பனிடமாகச் செல்வதுபோல அவரிடம் செல்லுங்கள். ஒரேவிதமான பலவீனத்தைக் குறித்து எவ்வளவு அடிக்கடி சென்றாலும் பரவாயில்லை. யெகோவா அவருடைய தகுதியற்ற தயவினால் இரக்கத்தோடே உங்களுக்கு உதவியளிப்பார். நீங்கள் உண்மையுள்ளவர்களாக இருப்பீர்களானால், ஒரு சுத்திகரிக்கப்பட்ட மனச்சாட்சியின் உணர்வை உங்களுக்குத் தருவார்.”
“சுத்திகரிக்கப்பட்ட மனச்சாட்சியை” எப்படி அடையக்கூடும்?
[அடிக்குறிப்புகள்]
a ஓனான் ‘தன் விந்தைத் தரையிலே விழவிட்ட’தற்காக கடவுள் அவனைத் தண்டித்தார். இருப்பினும், அது தற்புணர்ச்சிப் பழக்கம் அல்ல, இடைமறிக்கப்பட்ட உடலுறவே உட்பட்டிருந்தது. மேலுமாக, தன்னுடைய நோய்வாய்ப்பட்ட சகோதரனின் வம்ச வழி தொடர்ந்திருக்கும் பொருட்டு மைத்துனன் விவாகத்தை நடத்த தவறிய சுயநலப் போக்கிற்காக ஓனான் தண்டிக்கப்பட்டான். (ஆதியாகமம் 38:1-10) லேவியராகமம் 14:16-18-ல் குறிப்பிடப்பட்டுள்ள “இந்திரியம் கழிதல்” என்பதைப் பற்றி என்ன? தெளிவாகவே இது தற்புணர்ச்சிப் பழக்கத்தை அல்ல, இராப்பொழுது இந்திரிய வெளியேற்றத்தையும் விவாக சம்பந்தமான பாலுறவுகளையும் குறிக்கிறது.
கலந்துபேசுவதற்கான கேள்விகள்
◻தற்புணர்ச்சிப் பழக்கம் என்பது என்ன? அதைக் குறித்த பிரபலமான தவறான கருத்துகள் சில யாவை?
◻இளைஞர்கள் அடிக்கடி அதிக தீவிரமான பாலுணர்வு ஆசையை உணருவது ஏன்? இது தவறு என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
◻என்ன காரியங்கள் தற்புணர்ச்சிப் பழக்கத்தில் ஈடுபடுவதற்கான ஆசைக்கு எரிபொருளாக இருக்கக்கூடும்?
◻தற்புணர்ச்சிப் பழக்கம் ஓர் இளைஞனுக்கு ஏதாவது தீங்கு செய்யுமா?
◻தற்புணர்ச்சிப் பழக்கம் எவ்வளவு வினைமையான தவறு என்பதாக நீங்கள் உணருகிறீர்களா? இந்தப் பழக்கத்தை மேற்கொள்வதில் பிரச்னைகள் இருந்தபோதிலும், இதற்கு எதிராக போராடிக்கொண்டிருக்கும் ஓர் இளைஞனை யெகோவா எப்படி நோக்குகிறார்?
[பக்கம் 200-ன் சிறு குறிப்பு]
சிலர் அழுத்தத்தின் கீழிருக்கையில் அல்லது விறைப்பாக, தனிமையாக அல்லது சோர்வாக இருக்கும்போது தற்புணர்ச்சிப் பழக்கத்தில் ஈடுபடுவதற்கான தூண்டுதலை உணருகிறார்கள்
[பக்கம் 202-ன் சிறு குறிப்பு]
‘என்னுடைய தற்புணர்ச்சிப் பிரச்னை முழுவதும் என்னுடைய மனதிற்குள் நான் எதை உட்கொண்டிருந்தேன் என்பதில் அடங்கியிருந்தது’
[பக்கம் 204-ன் சிறு குறிப்பு]
“நான் அதில் [தற்புணர்ச்சிப் பழக்கத்தில்] ஈடுபட்டபோது யெகோவா தேவன் எதிர்பார்க்கும் விதத்தில் நடக்கத் தவறினவனாக உணர்ந்தேன்”
[பக்கம் 198-ன் படம்]
தற்புணர்ச்சிப் பழக்கம், தீவிரமான குற்ற உணர்வுகளை ஏற்படுத்தியபோதிலும், கடவுளுடைய மன்னிப்புக்காக மனமார்ந்த ஜெபமும், பழக்கத்தை எதிர்க்க கடினமாக உழைப்பதும் ஒருவருக்கு நல் மனச்சாட்சியைக் கொடுக்கக்கூடும்
[பக்கம் 203-ன் படம்]
காமம் சார்ந்த திரைப்படங்களும், புத்தகங்களும், டெலிவிஷன் நிகழ்ச்சிகளும் தற்புணர்ச்சிப் பழக்கத்துக்கு ‘மனதிற்கு எரிபொருளாக’ பெரும்பாலும் இருக்கின்றன