எதற்கெடுத்தாலும் உங்களுக்கு பைபிள் சட்டம் தேவையா?
நீங்கள் சின்ன பிள்ளைகளாக இருந்தபோது, அப்பா அம்மா உங்களுக்கு நிறைய சட்டங்கள் போட்டிருக்கலாம். உங்கள் மீது அவர்கள் எவ்வளவு அன்பும் அக்கறையும் வைத்திருந்தார்கள் என்பதை பெரியவர்களான பின்பே தெரிந்துகொள்கிறீர்கள். இப்போது நீங்கள் அப்பா அம்மாவின் கட்டுப்பாட்டில் இல்லாவிட்டாலும் உங்கள் மனதில் அவர்கள் விதைத்த நியமங்களின்படியே வாழ்ந்து வருகிறீர்கள்.
இதேபோல நம்முடைய பரலோக தகப்பனாகிய யெகோவாவும் தமது வார்த்தையாகிய பைபிள் மூலம் நேரடியான பல சட்டங்களை நமக்கு தந்திருக்கிறார். உதாரணமாக, விக்கிரக வழிபாடு, வேசித்தனம், விபச்சாரம், திருட்டு ஆகியவற்றில் ஈடுபடக் கூடாது என சட்டம் போட்டிருக்கிறார். (யாத்திராகமம் 20:1-17; அப்போஸ்தலர் 15:28, 29) நாம் ஆன்மீக ரீதியில் ‘எல்லாவற்றிலேயும் வளரும்போது’ நம்மீது யெகோவா எவ்வளவு அன்பும் அக்கறை வைத்திருக்கிறார் என்பதையும் அவரது சட்டங்கள் நம்மை அநாவசியமாக கட்டுப்படுத்துவதில்லை என்பதையும் தெரிந்துகொள்கிறோம்.—எபேசியர் 4:15; ஏசாயா 48:17, 18; 54:13.
இருந்தாலும், சில விஷயங்களுக்கு பைபிளில் நேரடியான சட்டங்கள் இல்லை. ஆகவே, நேரடியான பைபிள் சட்டம் இல்லாதபோது தங்கள் விருப்பப்படி எது வேண்டுமானாலும் செய்யலாம் என சிலர் நினைக்கிறார்கள். ஏதாவதொரு விஷயம் முக்கியம் என கடவுள் நினைத்திருந்தால், அதற்கு ஒரு சட்டம் கொடுத்திருக்கலாமே என அவர்கள் வாதிடுகிறார்கள்.
இப்படி சிந்திப்பவர்கள் பெரும்பாலும் ஞானமற்ற தீர்மானங்களை எடுக்கிறார்கள், அதனால் பிற்பாடு மிகவும் வருந்துகிறார்கள். பைபிளில் கடவுளுடைய சட்டங்கள் மட்டுமல்ல, கடவுளுடைய சிந்தையை வெளிப்படுத்தும் குறிப்புகளும் அடங்கியிருப்பதை அவர்கள் காண தவறுகிறார்கள். காரியங்களை கடவுள் எப்படி நோக்குகிறார் என்பதை பைபிளை படித்து அறிந்து கொள்ளும்போது, பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சியை நாம் பெறுகிறோம், அவருடைய சிந்தையை பிரதிபலிக்கும் தீர்மானங்களையும் எடுக்க முடிகிறது. அவ்வாறு செய்யும்போது நாம் அவருடைய இருதயத்தை மகிழ்விக்கிறோம், ஞானமான தீர்மானங்களை எடுப்பதால் வரும் பலன்களையும் பெறுகிறோம்.—எபேசியர் 5:1.
ஒப்பற்ற பைபிள் உதாரணங்கள்
பூர்வ காலத்தில் வாழ்ந்த கடவுளின் ஊழியர்களைப் பற்றிய பைபிள் பதிவுகளை வாசிக்கும்போது, அவர்கள் நேரடியான சட்டங்களின் கீழ் இல்லாதபோதிலும்கூட சில விஷயங்களில் யெகோவாவின் சிந்தையை கருத்தில் எடுத்துக்கொண்டதை காண்கிறோம். யோசேப்பின் உதாரணத்தை கவனியுங்கள். போத்திபாரின் மனைவி அவருக்கு பாலியல் தொல்லைகள் கொடுத்த சமயத்தில், விபச்சாரம் கூடாது என்ற கடவுளுடைய சட்டம் எதுவும் எழுத்தில் இல்லை. நேரடியான ஒரு சட்டம் இல்லாதபோதிலும் அது தன்னுடைய மனசாட்சிக்கு விரோதமான பாவம் மட்டுமல்ல, ‘தேவனுக்கு விரோதமான’ பாவமும்கூட என்பதை அவர் உணர்ந்தார். (ஆதியாகமம் 39:9) ஏதேனில் கடவுள் சொன்னதை வைத்துப் பார்க்கையில், விபச்சாரம் செய்வது கடவுளுடைய சிந்தைக்கும் சித்தத்திற்கும் விரோதமானது என்று யோசேப்பு புரிந்திருக்க வேண்டும்.—ஆதியாகமம் 2:24.
மற்றொரு உதாரணத்தை கவனியுங்கள். தீமோத்தேயுவை தன்னுடன் மிஷனரி பயணத்தில் சேர்த்துக்கொள்வதற்கு முன்பாக பவுல் அவருக்கு விருத்தசேதனம் பண்ணினார் என்பதை அப்போஸ்தலர் 16:3-லிருந்து நாம் அறிந்துகொள்கிறோம். ஆனால், அதற்கு பிறகு பவுலும் தீமோத்தேயுவும் பட்டணங்கள்தோறும் பயணித்து “எருசலேமிலிருக்கும் அப்போஸ்தலராலும் மூப்பராலும் விதிக்கப்பட்ட சட்டங்களை” அறிவித்தார்கள் என நான்காம் வசனத்தில் வாசிக்கிறோம். அந்தச் சட்டங்களில் ஒன்று, கிறிஸ்தவர்கள் இனி விருத்தசேதனம் பண்ண வேண்டியதில்லை என்பதே! (அப்போஸ்தலர் 15:5, 6, 28, 29) தீமோத்தேயுவுக்கு விருத்தசேதனம் அவசியம் என பவுல் ஏன் நினைத்தார்? ஏனெனில், ‘தீமோத்தேயுவின் தகப்பன் ஒரு கிரேக்கன் என்று அவ்விடங்களிலிருந்த யூதர்களெல்லாரும் அறிந்திருந்தார்கள்.’ ஆகவே அவர்கள் தேவையில்லாமல் இடறலடைவதற்கு இடமளிக்கக் கூடாது என அவர் நினைத்தார். கிறிஸ்தவர்கள் ‘தேவனுக்கு முன்பாக எல்லா மனுஷருடைய மனசாட்சிக்கும் தங்களை உத்தமரென்று விளங்கப் பண்ண’ வேண்டும் என்பதில் அவர் கவனமாக இருந்தார்.—2 கொரிந்தியர் 4:2; 1 கொரிந்தியர் 9:19-23.
இப்படித்தான் பவுலும் தீமோத்தேயுவும் எப்போதும் சிந்தித்தார்கள். ரோமர் 14:15, 20, 21-ஐயும், 1 கொரிந்தியர் 8:9-13; 10:23-33 போன்ற வசனங்களையும் வாசித்துப் பார்த்து, மற்றவர்களுடைய ஆன்மீக நலனில் பவுல் எந்தளவு கரிசனை காட்டினார்—முக்கியமாக ஒரு விஷயம் தவறாக இல்லாதிருந்தாலும் அதைக் குறித்து இடறல் அடைபவர்களின் நலனில் எந்தளவு கரிசனை காட்டினார்—என்பதை தெரிந்து கொள்ளுங்கள். தீமோத்தேயுவைப் பற்றி பவுல் இவ்வாறு எழுதியதையும் கவனியுங்கள்: “உங்கள் காரியங்களை உண்மையாய் விசாரிக்கிறதற்கு என்னைப்போல மனதுள்ளவன் அவனையன்றி வேறொருவனும் என்னிடத்திலில்லை. மற்றவர்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குரியவைகளைத் தேடாமல், தங்களுக்குரியவைகளையே தேடுகிறார்கள். தகப்பனுக்குப் பிள்ளை ஊழியஞ்செய்வதுபோல, அவன் என்னுடனேகூட சுவிசேஷத்தினிமித்தம் ஊழியஞ் செய்தானென்று அவனுடைய உத்தம குணத்தை அறிந்திருக்கிறீர்கள்.” (பிலிப்பியர் 2:20-22) இந்தக் கிறிஸ்தவர்கள் இருவரும் இன்று வாழும் நமக்கு எத்தகைய சிறந்த மாதிரி வைத்திருக்கிறார்கள்! திட்டவட்டமான சட்டம் இல்லாதபோது தங்களுடைய வசதிக்கு அல்லது விருப்பத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், தங்களுடைய தனிப்பட்ட தீர்மானங்கள் பிறரை ஆன்மீக ரீதியில் எப்படி பாதிக்கலாம் என்பதை சிந்திப்பதன் மூலம் யெகோவாவும் அவருடைய குமாரனும் காண்பித்த அன்பை வெளிக்காட்டினார்கள்.
நமக்கு மிகச் சிறந்த முன்மாதிரியாக விளங்கும் இயேசு கிறிஸ்துவை சிந்தித்துப் பாருங்கள். கடவுளுடைய சட்டங்களின் உட்கருத்தை புரிந்துகொள்பவர், நேரடியாக கட்டளையிடப்படாத அல்லது தடைசெய்யப்படாத விஷயங்களுக்கும் கீழ்ப்படிவார் என மலைப்பிரசங்கத்தில் அவர் தெளிவாக விளக்கினார். (மத்தேயு 5:21, 22, 27, 28) கடவுளால் கொடுக்கப்பட்ட திட்டவட்டமான சட்டம் எதுவும் இல்லாதபோது ஒருவர் தன் விருப்பப்படி செய்யலாம் என்ற நியாய விவாதத்தை இயேசுவோ பவுலோ தீமோத்தேயுவோ அல்லது யோசேப்போ ஏற்றுக்கொள்ளவில்லை. இவர்கள் கடவுளுடைய சிந்தைக்கு இசைவாக, இயேசு குறிப்பிட்ட இரண்டு பிரதான கற்பனைகளின்படி வாழ்ந்தார்கள்; அதாவது கடவுளையும் பிறனையும் நேசித்தார்கள்.—மத்தேயு 22:36-40.
இன்று கிறிஸ்தவர்களைப் பற்றியதென்ன?
ஒரு சட்டப் புத்தகத்தைப் போல் பைபிள் எல்லாவற்றிற்கும் விலாவாரியான சட்டங்களை தர வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கக் கூடாது என்பது இதிலிருந்து தெளிவாகிறது. நம்முடைய போக்கைக் குறித்து எடுத்துரைக்கும் திட்டவட்டமான சட்டம் இல்லாதபோதிலும் யெகோவாவுடைய சிந்தையைப் பிரதிபலிக்கும் வண்ணம் நடந்துகொள்ள தீர்மானிக்கையில் அது அவருடைய இருதயத்தை மிகவும் மகிழ்விக்கிறது. வேறு வார்த்தையில் சொன்னால், எதற்கெடுத்தாலும் கடவுளிடமிருந்து நேரடியான சட்டம் வேண்டும் என எதிர்பார்ப்பதற்கு பதிலாக நாம் ‘யெகோவாவுடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளலாம்.’ (எபேசியர் 5:17; ரோமர் 12:2) இது யெகோவாவை ஏன் மகிழ்விக்கிறது? ஏனெனில், நம்முடைய சொந்த விருப்பங்களையும் உரிமைகளையும்விட யெகோவாவை பிரியப்படுத்துவதிலேயே நாம் அதிக கவனமாக இருக்கிறோம் என இது காட்டுகிறது. அவருடைய அன்பை பின்பற்ற விரும்பும் அளவுக்கு அதைப் போற்றுவதன் மூலம் நம்மை உந்துவிக்கும் சக்தியாக அதை ஆக்குகிறோம் என்பதையும் இது காட்டுகிறது. (நீதிமொழிகள் 23:15; 27:11) அதுமட்டுமல்ல, வேதவசனங்களின் அடிப்படையிலான செயல்கள் ஆன்மீக ஆரோக்கியத்திற்கும் பெரும்பாலும் சரீர ஆரோக்கியத்திற்கும் பங்களிக்கின்றன.
தனிப்பட்ட விஷயங்களில் இந்த நியமத்தை எப்படி பின்பற்றலாம் என்பதை நாம் பார்க்கலாம்.
பொழுதுபோக்கை தேர்ந்தெடுத்தல்
ஒரு குறிப்பிட்ட இசை ஆல்பத்தை ஓர் இளைஞன் வாங்க விரும்புவதாக வைத்துக்கொள்ளுங்கள். அந்த ஆல்பத்தின் பாடல்கள் அவனுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஆனால் அதன் பின்பக்க அட்டையை பார்க்கையில் பாடல் வரிகள் செக்ஸை அப்பட்டமாயும் இழிவாயும் விவரிப்பது தெரிய வருகிறது; ஆகவே அவனுக்கு குழப்பமாக இருக்கிறது. அது மட்டுமல்ல, அந்த இசைக் கலைஞரின் பெரும்பாலான பாடல்கள் ஆவேசமான, வெறித்தனமான தொனி உடையவை என்பதும்கூட அவனுக்குத் தெரியும். அவன் யெகோவாவை நேசிக்கும் இளைஞனாக இருப்பதால், இந்த விஷயத்தில் யெகோவாவின் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் தெரிந்துகொள்ள விரும்புகிறான். இது சம்பந்தமாக அவருடைய சித்தம் என்ன என்பதை அவன் எப்படி உணர்ந்துகொள்ள முடியும்?
அப்போஸ்தலன் பவுல் கலாத்தியருக்கு எழுதிய கடிதத்தில், மாம்சத்தின் கிரியைகளையும் கடவுளுடைய ஆவியின் கனியையும் பட்டியலிட்டுள்ளார். கடவுளுடைய ஆவியின் கனியில் என்னென்ன பண்புகள் உள்ளன என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்: அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், சாந்தம், விசுவாசம், இச்சையடக்கம். ஆனால் மாம்சத்தின் கிரியைகளைக் குறிக்கும் செயல்கள் யாவை? “மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன; அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்” என பவுல் எழுதுகிறார்.—கலாத்தியர் 5:19-23.
அந்தப் பட்டியலின் முடிவில் ‘முதலானவை’ என கொடுக்கப்பட்டிருப்பதைக் கவனியுங்கள். மாம்சத்தின் கிரியைகள் அனைத்தையுமே பவுல் இந்தப் பட்டியலில் கொடுக்கவில்லை. ஆகவே, ‘பவுலின் பட்டியலில் இடம்பெறாத மாம்ச பிரகாரமான காரியங்களில் ஈடுபட எனக்கு பைபிள் அனுமதி அளிக்கிறது’ என ஒருவர் காரணம் காட்ட முடியாது. மாறாக, அந்தப் பட்டியலில் இல்லாத ஆனால், ‘முதலானவை’ என்பதில் உட்பட்டுள்ள காரியங்களை அடையாளம் கண்டுகொள்ள வாசிப்போர் தங்களுடைய புரிந்துகொள்ளும் ஆற்றலை பயன்படுத்த வேண்டியிருக்கலாம். அக்காரியங்களில் சற்றும் மன உறுத்தலின்றி ஈடுபடுகிறவர்கள் கடவுளுடைய ராஜ்ய ஆசீர்வாதங்களை சுதந்தரிக்க மாட்டார்கள்.
ஆகவே, யெகோவாவின் கண்களுக்கு வெறுப்பூட்டும் காரியங்கள் எவையென நாம் பகுத்துணர்வது, அதாவது புரிந்துகொள்வது அவசியம். இது கடினமா? பழங்களையும் காய்கறிகளையும் அதிகமாக சாப்பிட வேண்டும், ஆனால் ஜிலேபி, ஐஸ்கிரீம் முதலியவற்றை சாப்பிடக் கூடாது என்று டாக்டர் உங்களிடம் சொல்கிறார் என வைத்துக்கொள்ளுங்கள். கேக்கை எந்த லிஸ்ட்டில் சேர்ப்பது என்பது உங்களுக்கு கடினமாக இருக்குமா? இப்போது மறுபடியும் கடவுளுடைய ஆவியின் கனியையும் மாம்சத்தின் கிரியைகளையும் வாசித்துப் பாருங்கள். மேலே குறிப்பிட்ட இசை ஆல்பத்தை எந்த லிஸ்ட்டில் சேர்ப்பீர்கள்? அன்பு, நற்குணம், இச்சையடக்கம் அல்லது கடவுளுடைய ஆவியின் கனியோடு சம்பந்தப்பட்ட எந்தவொரு பண்புடனும் அது நிச்சயமாகவே ஒத்துப்போவதில்லை. இவ்வகை இசை கடவுளுடைய சிந்தைக்கு ஏற்றதல்ல என்பதை ஒருவர் புரிந்துகொள்வதற்கு நேரடியான சட்டம் எதுவும் அவசியமில்லை. வாசிக்கும் விஷயங்கள், திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள், கம்ப்யூட்டர் கேம்ஸ், வெப் சைட்டுகள் போன்ற பல காரியங்களுக்கும் இதே நியமங்களே பொருந்துகின்றன.
தகுதியான தோற்றம்
உடை மற்றும் அலங்காரம் சம்பந்தமாகவும் பைபிள் சில நியமங்களை அளிக்கிறது. பொருத்தமான, இனிய தோற்றத்திற்கு இவை ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் உதவுகின்றன. இந்த விஷயத்திலும்கூட யெகோவாவை நேசிக்கும் ஒருவர் தன்னுடைய விருப்பம்போல் நடந்துகொள்ளாமல் பரலோக தகப்பனை மகிழ்விக்கும் விதத்தில் நடந்துகொள்கிறார். நாம் ஏற்கெனவே பார்த்த விதமாக ஒரு காரியத்திற்கு திட்டவட்டமான விதிமுறைகளை யெகோவா கொடுக்காததால் ஜனங்கள் எப்படி நடந்துகொண்டாலும் அதை அவர் கவனிக்க மாட்டார் என்று அர்த்தமில்லை. ஸ்டைல்கள் இடத்துக்கு இடம் வேறுபடுகின்றன, ஏன் ஒரே இடத்திலும்கூட அடிக்கடி மாறிவிடுகின்றன. என்றாலும், அடிப்படை நியமங்களை கடவுள் தருகிறார்; எந்த இடத்திலும் சரி எந்த சமயத்திலும் சரி, அவையே அவருடைய மக்களை வழிநடத்த வேண்டும்.
உதாரணமாக, “ஸ்திரீகளும் மயிரைப் பின்னுதலினாலாவது, பொன்னினாலாவது, முத்துக்களினாலாவது, விலையேறப்பெற்ற வஸ்திரத்தினாலாவது தங்களை அலங்கரியாமல், தகுதியான வஸ்திரத்தினாலும், நாணத்தினாலும், தெளிந்த புத்தியினாலும், தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே நற்கிரியைகளினாலும், தங்களை அலங்கரிக்க வேண்டும்” என 1 தீமோத்தேயு 2:9, 10 வசனங்கள் சொல்கின்றன. ஆகவே, தாங்கள் வாழும் பகுதியிலுள்ள ஆட்கள், ‘தேவபக்தியுள்ளவர்களிடமிருந்து’ எத்தகைய தோற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் என்பதற்கு கிறிஸ்தவ பெண்களும் ஆண்களும் கவனம் செலுத்துவது அவசியம். தான் கொண்டு செல்லும் பைபிள் செய்தியைப் பற்றி தன்னுடைய தோற்றம் மற்றவர்கள் மீது என்ன அபிப்பிராயத்தை ஏற்படுத்தும் என்பதற்கு ஒரு கிறிஸ்தவர் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியமானது. (2 கொரிந்தியர் 6:3) முன்மாதிரியான ஒரு கிறிஸ்தவர் தன்னுடைய சொந்த விருப்பங்களுக்கும் உரிமைகளுக்கும் அதிக கவனம் செலுத்த மாட்டார். மாறாக, மற்றவர்களை திசைதிருப்பாதிருக்க அல்லது இடறலடைய செய்யாதிருக்கவே கவனமாக இருப்பார்.—மத்தேயு 18:6; பிலிப்பியர் 1:11.
தன்னுடைய ஸ்டைல் மற்றவர்கள் குறை காணும் விதமாக அல்லது மற்றவர்களை இடறலடையச் செய்யும் விதமாக இருப்பதாய் ஒரு கிறிஸ்தவர் உணர்ந்தால் அவர் அப்போஸ்தலன் பவுலின் மாதிரியை பின்பற்றலாம். பவுல் தன்னுடைய விருப்பங்களைவிட மற்றவர்களுடைய ஆன்மீக நலனுக்கே கவனம் செலுத்தினார். “நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறது போல, நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள்” என அவர் சொன்னார். (1 கொரிந்தியர் 11:1) ‘கிறிஸ்துவும் தமக்கே பிரியமாய் நடக்கவில்லை’ என இயேசுவைக் குறித்து பவுல் எழுதினார். ஆகவே, கிறிஸ்தவர்கள் எல்லாருக்கும் பவுல் கொடுக்கும் புத்திமதி தெளிவாக உள்ளது: “பலமுள்ளவர்களாகிய நாம் நமக்கே பிரியமாய் நடவாமல், பலவீனருடைய பலவீனங்களைத் தாங்க வேண்டும். நம்மில் ஒவ்வொருவனும் பிறனுடைய பக்திவிருத்திக்கேதுவான நன்மையுண்டாகும்படி அவனுக்குப் பிரியமாய் நடக்கக்கடவன்.”—ரோமர் 15:1-3.
பகுத்துணரும் ஆற்றலை கூர்மைப்படுத்துதல்
ஒரு விஷயத்தின் பேரில் திட்டவட்டமான வழிமுறையை யெகோவா கொடுக்காதபோதிலும்கூட அவரைப் பிரியப்படுத்துவது எப்படி என்பதை அறிந்துகொள்ள நமது பகுத்துணரும் ஆற்றலை எவ்வாறு வளர்க்கலாம்? அவருடைய வார்த்தையை தினமும் வாசித்து, தவறாமல் படித்து, அதன் பேரில் தியானித்தால் நம்முடைய பகுத்துணரும் ஆற்றலில் வளருவோம். இந்த வளர்ச்சி சட்டென்று ஏற்பட்டுவிடுவதில்லை. ஒரு பிள்ளையின் சரீர வளர்ச்சியைப் போலவே, ஆன்மீக வளர்ச்சியும் மெதுவாகவே ஏற்படுகிறது, அதை எளிதில் உணர்ந்துகொள்ள முடிவதில்லை. ஆகவே பொறுமை அவசியம், விரைவில் முன்னேற்றம் காணாததை நினைத்து விரக்தி அடைந்துவிடக் கூடாது. மறுபட்சத்தில், காலம் கடந்துபோவதுதானே நமது பகுத்துணரும் ஆற்றலை கூர்மைப்படுத்தி விடாது. மேலே குறிப்பிட்ட விதமாக, அந்தக் காலப்பகுதியில் கடவுளுடைய வார்த்தையை தவறாமல் சிந்திப்பது அவசியம்; அதுமட்டுமல்ல, நம்முடைய திறனுக்கு ஏற்ப சிறந்த விதத்தில் அந்த வார்த்தையை வாழ்க்கையில் கடைப்பிடிப்பதும் அவசியம்.—எபிரெயர் 5:14.
நம்முடைய கீழ்ப்படிதலை கடவுளுடைய சட்டங்கள் சோதிக்கின்றன என்றால், நமக்கு ஆன்மீக தன்மை எந்தளவு உள்ளது என்பதையும் அவரைப் பிரியப்படுத்த வேண்டுமென்ற ஆவல் எந்தளவு உள்ளது என்பதையும் அவரது நியமங்கள் சோதிக்கின்றன என்று சொல்லலாம். நாம் ஆன்மீக தன்மையில் வளர வளர, யெகோவாவையும் அவருடைய குமாரனையும் பின்பற்றுவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்போம். வேதவசனங்களில் குறிப்பிட்டுள்ளபடி, கடவுளுடைய சிந்தையின் அடிப்படையில் தீர்மானங்களை எடுக்க நாம் ஆவலாய் இருப்போம். நம் பரலோக தகப்பனை மகிழ்விக்கும் வண்ணம் எல்லா காரியங்களையும் செய்யும்போது, நம் மகிழ்ச்சியும் பொங்கி பெருகுவதை காண்போம்.
[பக்கம் 23-ன் படங்கள்]
உடை உடுத்தும் பாணிகள் இடத்துக்கு இடம் வேறுபட்டாலும், பைபிள் நியமங்களின் அடிப்படையில் நாம் அவற்றை தேர்ந்தெடுக்க வேண்டும்