அதிகாரம் 19
‘பரிசுத்த ரகசியத்தில் இருக்கிற கடவுளுடைய ஞானம்’
1, 2. எந்த ‘பரிசுத்த ரகசியம்’ நம் ஆர்வத்திற்குரியதாக இருக்க வேண்டும், ஏன்?
ரகசியங்கள்! அவை ஆர்வத்தைக் கிளறுகின்றன, கவனத்தை ஈர்க்கின்றன, திகைப்பை ஏற்படுத்துகின்றன; அதனால்தான் அவற்றை மனதிற்குள் மறைத்து வைக்க முடியாமல் திண்டாடுகிறார்கள் அநேக மனிதர்கள். இருந்தாலும், “எந்த விஷயத்தையும் ரகசியமாக வைப்பது கடவுளுக்கு மகிமை” என பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 25:2) ஆம், சர்வலோகப் பேரரசராகவும் படைப்பாளராகவும் யெகோவா, சில விஷயங்களை மனிதவர்க்கத்திற்கு சொல்லாமல் ஏற்ற சமயம் வரை உரிமையோடு மறைத்து வைக்கிறார்.
2 இருந்தாலும் ஆர்வத்தைக் கிளறி கவனத்தை ஈர்க்கும் ஓர் ரகசியத்தை யெகோவா தமது வார்த்தையில் வெளிப்படுத்தியிருக்கிறார். அது கடவுளுடைய ‘விருப்பத்தை பற்றிய பரிசுத்த ரகசியம்’ என அழைக்கப்படுகிறது. (எபேசியர் 1:9) அதைப் பற்றி கற்றுக்கொள்வது உங்கள் ஆர்வப்பசியை திருப்தி செய்வதோடு மற்ற பயன்களையும் அளிக்கும். இந்த ரகசியத்தை பற்றிய அறிவு மீட்புக்கு வழிநடத்தும், யெகோவாவின் அளவிட முடியாத ஞானத்தை சற்று விளங்கிக்கொள்ள உதவும்.
படிப்படியாக வெளிப்படுத்தப்படுகிறது
3, 4. ஆதியாகமம் 3:15-ல் பதிவு செய்யப்பட்டிருக்கும் தீர்க்கதரிசனம் எவ்வாறு நம்பிக்கை அளித்தது, அதில் என்ன புரியாத புதிர் அல்லது ‘பரிசுத்த ரகசியம்’ அடங்கியிருந்தது?
3 பூஞ்சோலையான பூமியில் பரிபூரண மனிதர்கள் நிரம்பி இருக்க வேண்டும் என்ற யெகோவாவின் நோக்கம், ஆதாமும் ஏவாளும் பாவம் செய்தபோது குலைக்கப்பட்டதாக தோன்றியிருக்கலாம். ஆனால் கடவுள் பிரச்சினையை சரிசெய்ய உடனடியாக செயல்பட்டார். “உனக்கும் [பாம்பிற்கும்] பெண்ணுக்கும் உன் சந்ததிக்கும் அவள் சந்ததிக்கும் பகை உண்டாக்குவேன். அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்” என்றார்.—ஆதியாகமம் 3:15.
4 அந்த வார்த்தைகள் புரியாத புதிராக இருந்தன. அந்த பெண் யார்? பாம்பு யார்? பாம்பின் தலையை நசுக்கப்போகும் ‘சந்ததி’ யார்? இவற்றை ஆதாம் ஏவாளால் ஊகிக்க மட்டுமே முடிந்தது. இருந்தாலும், விசுவாசமில்லாமல் நடந்துகொண்ட அந்த தம்பதியினரின் சந்ததியில் வரவிருந்த விசுவாசமுள்ள எவருக்கும் கடவுளுடைய வார்த்தைகள் நம்பிக்கை அளித்தன. நியாயம் ஜெயிக்கும். யெகோவாவின் நோக்கம் நிறைவேறும். ஆனால் எப்படி? அதுதான் ரகசியம்! ‘பரிசுத்த ரகசியத்தில் இருக்கிற கடவுளுடைய ஞானம், அதாவது மறைவான ஞானம்,’ என பைபிள் அதை விவரிக்கிறது.—1 கொரிந்தியர் 2:7.
5. யெகோவா தமது ரகசியத்தை படிப்படியாக வெளிப்படுத்தியது ஏன் என்பதை உதாரணத்துடன் விளக்குக.
5 “ரகசியங்களை வெளிப்படுத்துகிற” கடவுளாகிய யெகோவா, இந்த ரகசியத்தின் நிறைவேற்றத்தோடு சம்பந்தப்பட்ட விவரங்களை இறுதியில் வெளிப்படுத்த இருந்தார். (தானியேல் 2:28) ஆனால் அதைப் படிப்படியாக செய்ய இருந்தார். உதாரணத்திற்கு, “அப்பா, நான் எப்படி பிறந்தேன்?” என கேட்கும் சிறுவனிடம் அன்பான தகப்பன் எந்த விதத்தில் பதிலளிப்பார் என சிந்தித்துப் பாருங்கள். ஞானமுள்ள தகப்பன், தன் மகனின் சின்னஞ்சிறு மூளையால் புரிந்துகொள்ள முடிந்ததை மட்டுமே சொல்வார். அவன் வளர்ந்த பிறகு மற்ற விஷயங்களை சொல்வார். அதேவிதமாக, தம் விருப்பத்தையும் நோக்கத்தையும் புரிந்துகொள்வதற்கு தம் மக்கள் எப்போது தயாராக இருப்பார்கள் என்பதை யெகோவா தீர்மானிக்கிறார்.—நீதிமொழிகள் 4:18; தானியேல் 12:4.
6. (அ) ஒப்பந்தத்தின் நோக்கம் என்ன? (ஆ)யெகோவா மனிதர்களோடு ஒப்பந்தம் செய்ய முன்வந்தது ஏன் குறிப்பிடத்தக்கது?
6 யெகோவா எவ்வாறு ரகசியங்களை வெளிப்படுத்தினார்? அவர் தொடர்ச்சியான ஒப்பந்தங்களை ஏற்படுத்தி அதிகமான விஷயங்களை வெளிப்படுத்தினார். என்றாவது ஒரு முறை நீங்கள் ஏதாவதொரு ஒப்பந்தத்தை செய்திருக்கலாம்; ஒருவேளை ஒரு வீட்டை வாங்குவதற்கு அல்லது கடன் வாங்குவதற்கு அல்லது கடன் கொடுப்பதற்கு ஒப்பந்தம் செய்திருக்கலாம். அப்படிப்பட்ட ஒரு ஒப்பந்தம், அதில் உட்பட்டிருக்கும் நிபந்தனைகள் பின்பற்றப்படும் என்பதற்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்கிறது. ஆனால் யெகோவா ஏன் மனிதர்களோடு முறையான ஒப்பந்தங்களை செய்ய வேண்டும்? அவரது வார்த்தையே, அவரது வாக்குறுதிகள் நிறைவேறும் என்பதற்கு போதிய உத்தரவாதம் அளிக்கிறதல்லவா? ஆம் அளிக்கிறது, இருந்தாலும் அநேக சந்தர்ப்பங்களில் கடவுள் தம் வார்த்தையை உறுதிப்படுத்த சட்டப்பூர்வ ஒப்பந்தங்களையும் தயவோடு ஏற்படுத்தியிருக்கிறார். மாறாத இந்த ஒப்பந்தங்கள், யெகோவாவின் வாக்குறுதிகளில் நம்பிக்கை வைப்பதற்கு இன்னும் வலுவான காரணத்தை பாவமுள்ள மனிதர்களுக்கு தருகின்றன.—எபிரெயர் 6:16-18.
ஆபிரகாமோடு ஒப்பந்தம்
7, 8. (அ) ஆபிரகாமோடு யெகோவா என்ன ஒப்பந்தம் செய்தார், பரிசுத்த ரகசியத்தைக் குறித்து எதை வெளிப்படுத்தினார்? (ஆ) வாக்குக் கொடுக்கப்பட்ட சந்ததி வரவிருந்த சந்ததியை யெகோவா எப்படி படிப்படியாக வெளிப்படுத்தினார்?
7 ஏதேன் தோட்டத்திலிருந்து மனிதன் வெளியேற்றப்பட்டு இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிற்பாடு யெகோவா தமது உண்மையுள்ள ஊழியராகிய ஆபிரகாமிடம் இவ்வாறு சொன்னார்: “உன்னுடைய சந்ததியை வானத்திலுள்ள நட்சத்திரங்களைப் போல . . . பெருகப் பண்ணுவேன். . . . நீ என் பேச்சைக் கேட்டதால், உன்னுடைய சந்ததியின் மூலம் பூமியிலுள்ள எல்லா தேசத்தாரும் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வார்கள்” (ஆதியாகமம் 22:17, 18) இது வெறும் ஒரு வாக்குறுதியாக இருக்கவில்லை; யெகோவா இதை ஒரு சட்டப்பூர்வ ஒப்பந்தமாக்கி, அதற்கு ஆதாரமாக தமது உறுதியான ஆணையை அளித்தார். (ஆதியாகமம் 17:1, 2; எபிரெயர் 6:13-15) மனிதவர்க்கத்தை ஆசீர்வதிப்பதாக சர்வலோகப் பேரரசர் உண்மையில் ஒப்பந்தம் செய்தது எவ்வளவு குறிப்பிடத்தக்கது!
‘நான் உன்னுடைய சந்ததியை வானத்திலுள்ள நட்சத்திரங்களைப் போல பெருகப் பண்ணுவேன்’
8 வாக்குப்பண்ணப்பட்ட சந்ததி மனிதராக வருவார் என்பதை ஆபிரகாமிய ஒப்பந்தம் வெளிப்படுத்தியது; ஏனெனில் அவர் ஆபிரகாமின் சந்ததியில் வருவார் என சொல்லப்பட்டது. அப்படியென்றால் அவர் யாராக இருப்பார்? காலப்போக்கில், ஆபிரகாமின் மகன்களில் ஈசாக்கின் வம்சாவளியில் சந்ததி வருவாரென யெகோவா வெளிப்படுத்தினார். பின்பு ஈசாக்கின் இரு மகன்களில் யாக்கோபு தேர்ந்தெடுக்கப்பட்டார். (ஆதியாகமம் 21:12; 28:13, 14) அதன் பின்பு யாக்கோபு தனது 12 மகன்களில் ஒருவரிடம் இந்தத் தீர்க்கதரிசன வார்த்தைகளை சொன்னார்: “ஷைலோ [அதாவது, “உரிமைக்காரர்,” அடிக்குறிப்பு] வரும்வரை யூதாவைவிட்டு செங்கோல் விலகாது, அவன் பாதங்களுக்கு இடையிலிருந்து அதிகாரக்கோலும் விலகாது. ஜனங்கள் எல்லாரும் ஷைலோவுக்குக் கீழ்ப்படிவார்கள்.” (ஆதியாகமம் 49:10) அந்த சந்ததி யூதாவின் வம்சத்தில் வரும் ஒரு ராஜாவாக இருப்பார் என அப்போது தெரிந்தது!
இஸ்ரவேலோடு ஒப்பந்தம்
9, 10. (அ) இஸ்ரவேல் தேசத்தாரோடு யெகோவா என்ன ஒப்பந்தம் செய்தார், அந்த ஒப்பந்தம் என்ன பாதுகாப்பைத் தந்தது? (ஆ)மனிதவர்க்கத்திற்கு மீட்புவிலை தேவை என்பதை திருச்சட்டம் எப்படி காட்டியது?
9 பரிசுத்த ரகசியத்தைப் பற்றி இன்னுமதிகமாக வெளிப்படுத்துவதற்கு வழிவகுத்த ஒரு ஏற்பாட்டை கி.மு. 1513-ல் யெகோவா செய்தார்; அதாவது ஆபிரகாமின் சந்ததியாராகிய இஸ்ரவேல் தேசத்தாரோடு அவர் ஓர் ஒப்பந்தம் செய்தார். மோசேயின் இந்த திருச்சட்ட ஒப்பந்தம் இப்போது அமலில் இல்லையென்றாலும் அப்போது அது வாக்குக் கொடுக்கப்பட்ட சந்ததியை அளிப்பதற்கான யெகோவாவுடைய நோக்கத்தின் ஓர் இன்றியமையாத அம்சமாக இருந்தது. எவ்வாறு? மூன்று விதங்களில். முதலாவதாக திருச்சட்டம் ஒரு பாதுகாப்பு சுவர்போல் இருந்தது. (எபேசியர் 2:14) அதன் நீதியான சட்டதிட்டங்கள் யூதருக்கும் மற்ற தேசத்தாருக்கும் இடையே ஒரு சுவர்போல் இருந்தன. இவ்வாறு, வாக்குக் கொடுக்கப்பட்ட சந்ததி பாதுகாக்கப்பட திருச்சட்டம் உதவியது. அப்படிப்பட்ட பாதுகாப்பினாலேயே, யூதா கோத்திரத்தில் மேசியா தோன்றுவதற்கான கடவுளுடைய ஏற்ற சமயம் வந்தபோது இஸ்ரவேல் தேசம் இன்னமும் நிலைத்திருந்தது.
10 இரண்டாவதாக, மீட்புவிலைக்கான தேவை மனிதர்களுக்கு இருந்ததை திருச்சட்டம் முழுமையாக காட்டியது. பரிபூரண சட்டமாகிய அது, பாவமுள்ள மனிதர்கள் அதை முழுமையாக பின்பற்றுவதற்கு திறன் பெற்றிராததை வெளிப்படுத்தியது. இவ்வாறு, ‘வாக்குறுதி கொடுக்கப்பட்ட சந்ததி வரும்வரை குற்றங்களை வெளிப்படுத்துவதற்கு’ அது உதவியது. (கலாத்தியர் 3:19) மிருக பலிகள் வாயிலாக, திருச்சட்டம் பாவங்களுக்கு தற்காலிக நிவர்த்தி அளித்தது. ஆனால் பவுல் எழுதியபடி, “காளைகள், வெள்ளாடுகள் ஆகியவற்றின் இரத்தத்தால் பாவங்களைப் போக்க முடியாது” என்பதால் இந்தப் பலிகள் கிறிஸ்துவின் மீட்புப் பலிக்கு முன்நிழலாக மட்டுமே இருந்தன. (எபிரெயர் 10:1-4) ஆகவே விசுவாசமுள்ள யூதர்களுக்கு அந்த ஒப்பந்தம் “கிறிஸ்துவிடம் வழிநடத்துகிற பாதுகாவலராக” ஆனது.—கலாத்தியர் 3:24.
11. திருச்சட்டம் இஸ்ரவேலருக்கு என்ன அருமையான எதிர்பார்ப்பை அளித்தது, ஆனால் மொத்தத்தில் அத்தேசம் ஏன் அந்த எதிர்பார்ப்பை இழந்தது?
11 மூன்றாவதாக, அந்த ஒப்பந்தம் இஸ்ரவேல் தேசத்தாருக்கு ஓர் அருமையான எதிர்பார்ப்பை அளித்தது. அந்த ஒப்பந்தத்துக்கு உண்மையுள்ளவர்களாக நிரூபித்தால் அவர்கள் “ராஜாக்களாக ஆட்சி செய்கிற குருமார்களாகவும் என்னுடைய பரிசுத்த ஜனமாகவும்” ஆவார்கள் என யெகோவா சொன்னார். (யாத்திராகமம் 19:5, 6) இறுதியில் மாம்சப்பிரகாரமான இஸ்ரவேலர்கள், ராஜாக்களாகவும் குருமார்களாகவும் இருக்கப்போகிறவர்களில் முதல் அங்கத்தினர்களானார்கள். இருந்தாலும் மொத்தத்தில் இஸ்ரவேலர்கள் திருச்சட்ட ஒப்பந்தத்துக்கு எதிராக கலகம் செய்து, மேசியானிய சந்ததியை நிராகரித்து, அந்த எதிர்பார்ப்பை இழந்தனர். அப்படியென்றால் ராஜாக்களாகவும் குருமார்களாகவும் இருக்கப்போகிறவர்களில் மீதமுள்ள அங்கத்தினர்கள் யாராக இருப்பர்? ஆசீர்வதிக்கப்பட்ட அந்த தேசம் எப்படி வாக்குக் கொடுக்கப்பட்ட சந்ததியோடு சம்பந்தப்பட்டிருக்கும்? பரிசுத்த ரகசியத்தின் அந்த அம்சங்கள் கடவுளுடைய ஏற்ற சமயத்தில் வெளிப்படுத்தப்படவிருந்தன.
தாவீதோடு அரசாங்க ஒப்பந்தம்
12. தாவீதோடு என்ன ஒப்பந்தத்தை யெகோவா செய்தார், கடவுளுடைய பரிசுத்த ரகசியத்தைப் பற்றி அது எதை வெளிப்படுத்தியது?
12 கி.மு. 11-ஆம் நூற்றாண்டில் யெகோவா மற்றொரு ஒப்பந்தம் வாயிலாக பரிசுத்த ரகசியத்தைப் பற்றி மேலுமாக வெளிப்படுத்தினார். ‘நீ இறந்த பின்பு, உன் சந்ததியை ராஜாவாக ஏற்படுத்துவேன். அவனுடைய ஆட்சியை உறுதியாக நிலைநாட்டுவேன். அவனுடைய சிம்மாசனத்தை என்றென்றும் நிலைக்க வைப்பேன்’ என்று தாவீதிடம் சொன்னார். (2 சாமுவேல் 7:12, 13; சங்கீதம் 89:3) இப்போது வாக்குக் கொடுக்கப்பட்ட சந்ததி தாவீதின் சந்ததியில் வருவாரென குறிப்பிடப்பட்டது. ஆனால் சாதாரண மனிதனால் எப்படி என்றென்றைக்கும் ஆள முடியும்? (சங்கீதம் 89:20, 29, 34-36) அப்படிப்பட்ட மனித ராஜாவால் எப்படி மனிதவர்க்கத்தை பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் காப்பாற்ற முடியும்?
13, 14. (அ) சங்கீதம் 110-ன்படி யெகோவா தமது அபிஷேகம் செய்யப்பட்ட ராஜாவிற்கு என்ன வாக்குறுதி அளித்தார்? (ஆ) வரவிருந்த சந்ததியைக் குறித்த என்னென்ன விஷயங்கள் யெகோவாவின் தீர்க்கதரிசிகள் மூலம் வெளிப்படுத்தப்பட்டன?
13 கடவுளுடைய சக்தியால் தூண்டப்பட்டு தாவீது இவ்வாறு எழுதினார்: “யெகோவா என் எஜமானிடம், ‘நான் உன் எதிரிகளை உனக்குக் கால்மணையாக்கிப் போடும்வரை என் வலது பக்கத்தில் உட்கார்ந்திரு’ என்றார். ‘மெல்கிசேதேக்கைப் போலவே நீ என்றென்றும் குருவாக இருக்கிறாய்’ என்று யெகோவா ஆணையிட்டுச் சொல்லியிருக்கிறார். அவர் தன்னுடைய மனதை மாற்றிக்கொள்ள மாட்டார்.” (சங்கீதம் 110:1, 4) தாவீதின் வார்த்தைகள் வாக்குக் கொடுக்கப்பட்ட சந்ததிக்கு, அல்லது மேசியாவிற்கு நேரடியாக பொருந்தின. (அப்போஸ்தலர் 2:35, 36) இந்த ராஜா எருசலேமிலிருந்து அல்ல, ஆனால் பரலோகத்திலிருந்து யெகோவாவின் “வலது பக்கத்தில்” இருந்து ஆட்சி செய்வார். ஆகவே இஸ்ரவேல் தேசத்தின் மீது மட்டுமல்ல, பூமி முழுவதன் மீதும் அவருக்கு அதிகாரம் இருக்கும். (சங்கீதம் 2:6-8) இங்கே இன்னுமதிக விவரம் வெளிப்படுத்தப்பட்டது. மேசியா, ‘மெல்கிசேதேக்கைப் போலவே குருவாக இருப்பார்’ என்று யெகோவா ஆணை அளித்ததை கவனியுங்கள். ஆபிரகாமின் நாளில் ராஜாவாகவும் குருமாராகவும் சேவித்த மெல்கிசேதேக்கைப் போல், வரவிருந்த சந்ததி ராஜாவாகவும் அதேசமயம் குருமாராகவும் கடவுளால் நேரடியாக நியமிக்கப்படுவார்!—ஆதியாகமம் 14:17-20.
14 பல வருடங்களாக, யெகோவா தமது பரிசுத்த ரகசியத்தைக் குறித்து இன்னுமதிகமாக வெளிப்படுத்துவதற்கு தமது தீர்க்கதரிசிகளை பயன்படுத்தினார். உதாரணத்திற்கு அந்த சந்ததி தியாக மரணம் எய்துவார் என ஏசாயா வெளிப்படுத்தினார். (ஏசாயா 53:3-12) மேசியா பிறக்கவிருந்த ஊரை மீகா முன்னறிவித்தார். (மீகா 5:2) சந்ததி எப்போது வருவார், எப்போது இறப்பார் என்ற திட்டவட்டமான காலத்தையும்கூட தானியேல் முன்னறிவித்தார்.—தானியேல் 9:24-27.
பரிசுத்த ரகசியம் வெளிப்படுத்தப்படுகிறது!
15, 16. (அ) யெகோவாவின் மகன் எவ்வாறு ‘ஒரு பெண்ணிடம் பிறந்தார்’? (ஆ) இயேசு தமது மனித பெற்றோரிடமிருந்து எந்த உரிமையை சுதந்தரித்தார், வாக்குக் கொடுக்கப்பட்ட சந்ததியாக எப்போது வந்தார்?
15 இந்தத் தீர்க்கதரிசனங்கள் எவ்வாறு நிறைவேறும் என்பது, சந்ததி உண்மையில் வரும் வரை புதிராகவே இருந்தது. ‘குறித்த காலம் வந்தபோது, கடவுள் தன்னுடைய மகனை இந்த உலகத்துக்கு அனுப்பினார். அந்த மகன் ஒரு பெண்ணிடம் பிறந்தார்’ என கலாத்தியர் 4:4 சொல்கிறது. கி.மு. 2-ஆம் வருடம், யூத கன்னியான மரியாளிடம் ஒரு தேவதூதர் பின்வருமாறு சொன்னார்: “இதோ! நீ கர்ப்பமாகி ஒரு மகனைப் பெற்றெடுப்பாய்; அவருக்கு இயேசு என்று நீ பெயர் வைக்க வேண்டும். அவர் உயர்ந்தவராக இருப்பார்; உன்னதமான கடவுளின் மகன் என்று அழைக்கப்படுவார்; அவருடைய தந்தையான தாவீதின் சிம்மாசனத்தைக் கடவுளாகிய யெகோவா அவருக்குக் கொடுப்பார். . . . கடவுளுடைய சக்தி உன்மேல் வரும்; உன்னதமான கடவுளுடைய வல்லமை உன்மேல் தங்கும். அதனால், உனக்குப் பிறக்கப்போகும் குழந்தை பரிசுத்தமானது என்றும், கடவுளுடைய மகன் என்றும் அழைக்கப்படும்.”—லூக்கா 1:31, 32, 35.
16 பிற்பாடு, யெகோவா தமது மகனின் உயிரை பரலோகத்திலிருந்து மரியாளின் கருப்பைக்கு மாற்றினார்; இவ்வாறு இயேசு ஒரு பெண்ணிடம் பிறந்தார். மரியாள் பாவமுள்ள பெண்ணாக இருந்தபோதிலும் அந்த பாவத்தன்மையை இயேசு சுதந்தரிக்கவில்லை; ஏனெனில் அவர் ‘கடவுளுடைய மகனாக’ இருந்தார். அதேசமயம் இயேசுவின் மனித பெற்றோர் தாவீதின் சந்ததியாராக இருந்ததால், தாவீதின் வாரிசாக இருப்பதற்கு இயற்கையாகவும் சட்டப்பூர்வமாகவும் இயேசு உரிமை பெற்றார். (அப்போஸ்தலர் 13:22, 23) கி.பி. 29-ல் இயேசு முழுக்காட்டப்பட்டபோது யெகோவா அவரை பரிசுத்த சக்தியால் அபிஷேகம் செய்து, “இவர் என் அன்பு மகன்” என அறிவித்தார். (மத்தேயு 3:16, 17) ஆக, இறுதியில் சந்ததி வந்துவிட்டார்! (கலாத்தியர் 3:16) பரிசுத்த ரகசியத்தைக் குறித்து இன்னுமதிகத்தை வெளிப்படுத்துவதற்கு அது சமயமாக இருந்தது.—2 தீமோத்தேயு 1:10.
17. ஆதியாகமம் 3:15-ன் அர்த்தம் எப்படி வெளிப்படுத்தப்பட்டது?
17 இயேசு தமது ஊழியத்தின்போது, ஆதியாகமம் 3:15-ல் சொல்லப்பட்டிருக்கும் பாம்பை சாத்தான் என்றும் அந்த பாம்பின் சந்ததியை சாத்தானின் மக்கள் என்றும் அடையாளங்காட்டினார். (மத்தேயு 23:33; யோவான் 8:44) இவர்கள் எப்படி நிரந்தரமாக அழிக்கப்படுவார்கள் என்பது பிற்பாடு வெளிப்படுத்தப்பட்டது. (வெளிப்படுத்துதல் 20:1-3, 10, 15) அந்த பெண் “மேலான எருசலேம்,” அல்லது கடவுளுடைய மனைவி—அதாவது பரலோகத்தில் இருக்கும் யெகோவாவின் அமைப்பு, என அடையாளம் காட்டப்பட்டது; அங்குதான் ஆவி சிருஷ்டிகள் எல்லாரும் இருக்கிறார்கள்.a—கலாத்தியர் 4:26; வெளிப்படுத்துதல் 12:1-6.
புதிய ஒப்பந்தம்
18. ‘புதிய ஒப்பந்தத்தின்’ நோக்கம் என்ன?
18 இயேசுவின் மரணத்திற்கு முந்திய இரவு வெளிப்படுத்தப்பட்ட ஒன்றுதான் மிகக் குறிப்பிடத்தக்கதாக தோன்றுகிறது; அப்போது இயேசு உண்மையுள்ள தமது சீஷர்களிடம் “புதிய ஒப்பந்தத்தை” பற்றி சொன்னார். (லூக்கா 22:20) முந்தைய ஒப்பந்தமாகிய மோசேயின் திருச்சட்ட ஒப்பந்தத்தைப் போல் இந்தப் புதிய ஒப்பந்தமும் ‘ராஜாக்களாக ஆட்சி செய்கிற குருமார்களை’ உருவாக்கவிருந்தது. (யாத்திராகமம் 19:6; 1 பேதுரு 2:9) இருந்தாலும் இந்த ஒப்பந்தம் ஒரு சொல்லர்த்தமான தேசத்தை அல்ல, ஆனால் ஆவிக்குரிய தேசத்தையே ஸ்தாபிக்கும்; அத்தேசம் கிறிஸ்துவின் பரலோக நம்பிக்கையுள்ள உண்மை ஊழியர்கள் மட்டுமே அடங்கிய ‘கடவுளுடைய இஸ்ரவேலாக’ ஆகும். (கலாத்தியர் 6:16) இந்தப் புதிய ஒப்பந்தத்தில் பங்குபெறுவோர், இயேசுவுடன் சேர்ந்து மனித குலத்தை ஆசீர்வதிப்பர்!
19. (அ) ‘ராஜாக்களாக ஆட்சி செய்கிற குருமார்களை’ உருவாக்குவதில் புதிய ஒப்பந்தம் ஏன் வெற்றி பெறுகிறது? (ஆ) பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் ஏன் ‘புதிய படைப்பு’ என அழைக்கப்படுகின்றனர், பரலோகத்தில் கிறிஸ்துவோடு எத்தனை பேர் ஆட்சி செய்வர்?
19 மனித குலத்தை ஆசீர்வதிக்க ‘ராஜாக்களாக ஆட்சி செய்கிற குருமார்களை’ உருவாக்குவதில் இந்தப் புதிய ஒப்பந்தம் ஏன் வெற்றி பெறுகிறது? ஏனெனில் கிறிஸ்துவின் சீஷர்களை பாவிகளென தீர்ப்பதற்குப் பதிலாக, அவரது பலியின் மூலம் அவர்களது பாவங்களுக்கு அது மன்னிப்பு தருகிறது. (எரேமியா 31:31-34) யெகோவாவிற்கு முன்பு ஒரு சுத்தமான நிலைநிற்கையை அவர்கள் பெற்றவுடன், அவர் தமது பரலோக குடும்பத்தில் அவர்களை தத்தெடுத்து பரிசுத்த சக்தியால் அவர்களை அபிஷேகம் பண்ணுகிறார். (ரோமர் 8:15-17; 2 கொரிந்தியர் 1:21) இவ்வாறு அவர்கள் “புதிய பிறப்பை” எடுக்கிறார்கள். அவர்களுக்கு “இதனால் அசைக்க முடியாத நம்பிக்கை கிடைத்திருக்கிறது.” அவர்களது ஆஸ்தி “பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.” (1 பேதுரு 1:3, 4) அப்படிப்பட்ட உயர்ந்த ஸ்தானம் மனிதர்களுக்கு முற்றிலும் புதியது என்பதால் சக்தியால் பிறப்பிக்கப்பட்ட பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் ‘புதிய படைப்பு’ என அழைக்கப்படுகின்றனர். (2 கொரிந்தியர் 5:17) மீட்கப்பட்ட மனிதவர்க்கத்தை பரலோகத்திலிருந்து ஆட்சி செய்வதில் 1,44,000 பேர் இறுதியில் பங்குகொள்வர் என பைபிள் வெளிப்படுத்துகிறது.—வெளிப்படுத்துதல் 5:9, 10; 14:1-4.
20. (அ) பரிசுத்த ரகசியத்தை பற்றிய என்ன விஷயம் கி.பி 36-ல் வெளிப்படுத்தப்பட்டது? (ஆ) ஆபிரகாமுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்ட ஆசீர்வாதங்களை யார் அனுபவிப்பர்?
20 இயேசுவுடன், பரலோக நம்பிக்கையுள்ள இவர்களும் “ஆபிரகாமின் சந்ததியாக” ஆகிறார்கள்.b (கலாத்தியர் 3:29) முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மாம்சப்பிரகாரமான யூதர்கள். ஆனால் கி.பி. 36-ல் பரிசுத்த ரகசியத்தின் மற்றொரு அம்சம் வெளிப்படுத்தப்பட்டது; அதாவது, யூதர்களல்லாத மற்ற தேசத்தாரும் பரலோக நம்பிக்கையைப் பெற முடியும் என்பது தெரிய வந்தது. (ரோமர் 9:6-8; 11:25, 26; எபேசியர் 3:5, 6) ஆபிரகாமுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்ட ஆசீர்வாதங்களை அனுபவிக்கப்போவது பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் மட்டும்தானா? இல்லை, இயேசுவின் பலி முழு உலகத்திற்கும் பயனளிக்கும். (1 யோவான் 2:2) காலப்போக்கில், எண்ணிலடங்கா ‘திரள் கூட்டமான மக்கள்’ சாத்தானுடைய உலகிற்கு வரவிருக்கும் அழிவில் தப்பிப்பிழைப்பார்கள் என யெகோவா வெளிப்படுத்தினார். (வெளிப்படுத்துதல் 7:9, 14) பூஞ்சோலையில் என்றென்றும் வாழும் எதிர்பார்ப்போடு திரளானவர்கள் உயிர்த்தெழுப்பப்படுவார்கள்!—லூக்கா 23:43; யோவான் 5:28, 29; வெளிப்படுத்துதல் 20:11-15; 21:3, 4.
கடவுளுடைய ஞானமும் பரிசுத்த ரகசியமும்
21, 22. யெகோவாவின் பரிசுத்த ரகசியம் என்ன விதங்களில் அவரது ஞானத்தை வெளிக்காட்டுகிறது?
21 பரிசுத்த ரகசியமானது, ‘பல்வேறு விதங்களில் வெளிப்படுகிற கடவுளுடைய ஞானத்தின்,’ அதிசயிக்கத்தக்க ஒரு வெளிக்காட்டாகும். (எபேசியர் 3:8-10) இந்த ரகசியத்தை உருவாக்குவதிலும் பின்னர் அதை படிப்படியாக வெளிப்படுத்துவதிலும் எப்பேர்ப்பட்ட ஞானத்தை யெகோவா வெளிக்காட்டினார்! மனிதனின் வரம்புகளை அவர் ஞானமாக கருத்தில் எடுத்துக்கொண்டு, உண்மையான இதய நிலையை வெளிக்காட்ட அவர்களை அனுமதித்தார்.—சங்கீதம் 103:14.
22 இயேசுவை ராஜாவாக தேர்ந்தெடுத்ததிலும் யெகோவா ஈடிணையற்ற ஞானத்தை வெளிக்காட்டினார். இந்த சர்வலோகத்திலுள்ள எந்த சிருஷ்டியைக் காட்டிலும் யெகோவாவின் மகனே அதிக நம்பகமானவர். மாம்சமும் இரத்தமும் உள்ள மனிதனாக வாழுகையில் இயேசு அநேக விதமான துன்பங்களை அனுபவித்தார். ஆகவே அவர் மனித பிரச்சினைகளை முழுமையாக புரிந்துகொள்கிறார். (எபிரெயர் 5:7-9) இயேசுவுடன் ஆட்சி செய்யப் போகிறவர்களைப் பற்றி என்ன சொல்லலாம்? கடந்த பல நூற்றாண்டுகளாக எல்லா குலங்களையும் மொழிகளையும் பின்னணிகளையும் சேர்ந்த ஆண்களும் பெண்களும் பரலோக நம்பிக்கையை பெற்றிருக்கிறார்கள். அவர்கள் சந்திக்காத பிரச்சினைகளே இல்லை, மேற்கொள்ளாத கஷ்டங்களே இல்லை. (எபேசியர் 4:22-24) ராஜாக்களாக ஆட்சி செய்கிற இரக்கமுள்ள இந்த குருமார்களுடைய ஆட்சியின் கீழ் வாழ்வது மிகுந்த இன்பமளிக்கும்!
23. யெகோவாவின் பரிசுத்த ரகசியம் சம்பந்தமாக கிறிஸ்தவர்கள் என்ன பாக்கியம் பெற்றிருக்கிறார்கள்?
23 “கடவுளுடைய வார்த்தையில் இருக்கிற பரிசுத்த ரகசியம் கடந்த சகாப்தங்களுக்கும் கடந்த தலைமுறைகளுக்கும் மறைக்கப்பட்டிருந்தது. . . . இப்போது கடவுளுடைய பரிசுத்தவான்களுக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது” என அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினார். (கொலோசெயர் 1:26) ஆம், யெகோவாவின் அபிஷேகம் செய்யப்பட்ட பரிசுத்தவான்கள் பரிசுத்த ரகசியத்தைக் குறித்து அதிகத்தை புரிந்திருக்கிறார்கள், அதை லட்சக்கணக்கான மற்றவர்களுடனும் பகிர்ந்திருக்கிறார்கள். நாம் அனைவரும் எப்பேர்ப்பட்ட பாக்கியம் பெற்றிருக்கிறோம்! யெகோவா நமக்கு “தன்னுடைய விருப்பத்தை பற்றிய பரிசுத்த ரகசியத்தைத் தெரியப்படுத்தினார்.” (எபேசியர் 1:9) இந்த அருமையான ரகசியத்தை நாம் மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டு, யெகோவா தேவனுடைய ஆழங்காண முடியாத ஞானத்தை உற்று நோக்க அவர்களுக்கும் உதவுவோமாக!
a “கடவுள்பக்தியின் பரிசுத்த ரகசியம்” இயேசுவிலும் வெளிப்படுத்தப்பட்டது. (1 தீமோத்தேயு 3:16) பரிபூரண விதத்தில் யெகோவாவிற்கு உத்தமத்தைக் காத்துக்கொள்ள எவராலும் முடியுமா என்பது வெகு காலமாக ரகசியமாய், புதிராய் இருந்தது. இயேசு அந்தப் புதிருக்கு விடையளித்தார். சாத்தான் கொண்டு வந்த எல்லா சோதனைகளின் மத்தியிலும் அவர் உத்தமத்தைக் காத்துக்கொண்டார்.—மத்தேயு 4:1-11; 27:26-50.
b இதே வகுப்பாரோடு இயேசு ‘ஒரு அரசாங்கத்துக்காக ஒப்பந்தமும்’ செய்தார். (லூக்கா 22:29, 30) இவ்வாறு, ஆபிரகாமுடைய சந்ததியின் இரண்டாம் பாகமாக பரலோகத்தில் தம்மோடு ஆட்சி செய்வதற்கு இந்த ‘சிறுமந்தையோடு’ இயேசு ஒப்பந்தம் செய்தார்.—லூக்கா 12:32.