கழுகுகளைப் போல் சிறகுகளையடித்து எழும்புதல்
நாசி சித்திரவதை முகாம்களில் ஐந்து வருடங்கள் சகித்துக்கொண்ட பிறகு ஒரு மனிதர் எவ்வாறு உணருவார்? சோர்வடைந்திருப்பாரா? கசப்படைந்திருப்பாரா? பழிவாங்கும் எண்ணமுள்ளவராயிருப்பாரா?
அப்படிப்பட்ட மனிதர் ஒருவர் பின்வருமாறு எழுதியது விசித்திரமாக தோன்றலாம்: “என்னுடைய வாழ்க்கை நான் நினைத்ததற்கும் மேலாக சிறப்பாக்கப்பட்டது.” அவர் ஏன் அவ்வாறு உணர்ந்தார்? அவர் விளக்கினார்: “உன்னதமானவருடைய செட்டைகளின்கீழ் நான் அடைக்கலம் புகுந்தேன், ஏசாயா தீர்க்கதரிசி கூறிய வார்த்தைகளின் நிறைவேற்றத்தை நான் அனுபவித்தேன்: கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.”—ஏசாயா 40:31.
கற்பனை செய்துபார்ப்பதற்கு கடினமாயிருக்கும் அளவுக்கு அதிர்ச்சியூட்டும்விதத்தில் நடத்தப்பட்டதால் சரீரத்தில் கடுமையாக தாக்கப்பட்டிருந்த இந்தக் கிறிஸ்தவ மனிதர், அடையாள அர்த்தத்தில் உயரே பறந்துசெல்வதைப் போன்ற உந்துவிக்கும் மனச்சாய்வை, நாசிக்களின் இரக்கமற்ற கொடுமையால் அடக்கிவிட முடியாத மனச்சாய்வை பெற்றிருந்தார். தாவீதைப் போல் அவர் கடவுளுடைய “செட்டைகளின்” நிழலிலே அடைக்கலம் புகுந்தார். (சங்கீதம் 57:1) இந்தக் கிறிஸ்தவர் ஏசாயா தீர்க்கதரிசி உபயோகித்த உவமையைப் பயன்படுத்தி, தன் ஆவிக்குரிய பலத்தை வானில் உயர உயரப் பறந்துசெல்லும் கழுகினுடையதற்கு ஒப்பிட்டார்.
நீங்கள் எப்போதாவது பிரச்சினைகளால் பாரமடைந்து நெருக்கப்படுவதைப் போல் உணருகிறீர்களா? நீங்களும்கூட மகா உன்னதமானவருடைய செட்டைகளின்கீழ் அடைக்கலம் புகுவதற்கு ‘கழுகுகளைப் போல செட்டைகளை அடித்து எழும்புவதற்கு’ விரும்புவீர்கள். இது எவ்வாறு கூடியகாரியமாகிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கு, கழுகைப் பற்றி சில விஷயங்களை அறிந்துகொள்வது உதவியாயிருக்கும், பைபிளில் கழுகு அடிக்கடி அடையாள அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
கழுகினுடைய சின்னத்தின்கீழ்
பண்டையகால மக்கள் கவனித்த எல்லா பறவைகளிலும், கழுகே அதனுடைய சக்தி, கம்பீரமாக பறக்கும் ஆற்றல் ஆகியவற்றுக்காக மிகவும் அதிகமாக வியந்து பாராட்டப்பட்ட பறவையாக இருந்தது. அநேக பண்டையகால இராணுவப்படைகள், பாபிலோன், பெர்சியா, ரோம் ஆகியவை கழுகுக்கொடிச் சின்னத்தின்கீழ் அணிவகுத்துச் சென்றன. மகா கோரேசின் படை இவற்றில் ஒன்றாக இருந்தது. பாபிலோனிய பேரரசை சூழ்ந்து பாழ்ப்படுத்துவதற்கு கிழக்கிலிருந்து வரும் மாமிசம் புசிக்கும் பறவையைப் போல் இந்தப் பெர்சிய ராஜா இருப்பார் என்று பைபிள் தீர்க்கதரிசனமுரைத்தது. (ஏசாயா 45:1; 46:11) இந்தத் தீர்க்கதரிசனம் எழுதப்பட்டு இருநூறு வருடங்களுக்குப் பிறகு, கோரேசின் படைகள் கழுகுகளின் சின்னங்களையுடைய தங்கள் போர்க்கொடிகளைப் பிடித்துக்கொண்டு, கழுகு தன் இரையைப் பிடிக்கப் பாய்ந்து பறந்தோடி வருவது போல் பாபிலோன் பட்டணத்தின்மீது திடீரெனப் பாய்ந்து தாக்கின.
சமீபத்தில் சார்லிமேன், நெப்போலியன் போன்ற போர்வீரர்களும் ஐக்கிய மாகாணங்கள், ஜெர்மனி போன்ற நாடுகளும்கூட கழுகை தங்கள் தேசியச் சின்னமாக தேர்ந்தெடுத்திருக்கின்றன. கழுகுகள் அல்லது வேறு எந்த உயிரினங்களின் உருவங்களையும் வணங்கக்கூடாது என்று இஸ்ரவேலருக்கு கட்டளையிடப்பட்டது. (யாத்திராகமம் 20:4, 5) இருப்பினும், பைபிள் எழுத்தாளர்கள் தங்கள் செய்தியை விளக்கிக் காண்பிப்பதற்கு கழுகின் தனிச்சிறப்பான பண்புகளை குறிப்பிட்டனர். இவ்வாறு ஞானம், தெய்வீக பாதுகாப்பு, விரைவாக செயல்படுதல் போன்ற பண்புகளை அடையாளப்படுத்திக் காண்பிப்பதற்கு பைபிளில் கழுகு அடிக்கடி பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
கழுகின் கண்
கழுகின் கூர்மையான கண்பார்வை, பலரும் அறிந்த விஷயமாக எப்போதும் இருந்திருக்கிறது. தங்கக் கழுகு ஐந்து கிலோகிராமுக்கும் சிறிது கூடுதலான எடையுள்ளதாய் மட்டுமே இருந்தாலும், உண்மையில் அதன் கண் ஒரு மனிதனுடைய கண்ணைவிட பெரியதாகவும், அதன் கண்பார்வை மிகவும் கூர்மையாகவும் இருக்கிறது. கழுகு தன் இரையைத் தேடுவதற்கான திறமையைப் பெற்றிருப்பது பற்றி யெகோவாதாமே யோபுவிடம் விவரிக்கையில் இவ்வாறு சொன்னார்: “அதின் கண்கள் தூரத்திலிருந்து அதைப் பார்க்கும்.” (யோபு 39:27, 29) அலிஸ் பார்மெலீ என்பவர் பைபிளில் உள்ள எல்லா பறவைகளும் என்ற தன் ஆங்கில புத்தகத்தில், “ஒரு சமயம் கழுகு, ஐந்து கிலோமீட்டர் தள்ளி ஓர் ஏரியில் செத்த மீன் ஒன்று மிதந்துகொண்டிருப்பதைக் கண்டுபிடித்தது, சரியான இடத்துக்கு குறிவைத்து தலைகீழாகப் பாய்ந்தது. மனிதன் காண்பதைவிட மிகவும் தொலைவிலுள்ள சிறிய பொருளை அந்தக் கழுகு காணமுடிந்தது மட்டுமல்லாமல், அந்தப் பறவை அதன் ஐந்து கிலோமீட்டர் பாய்ச்சலிலும் அந்த மீனை நிலையாக குறிவைத்தது” என்று குறிப்பிடுகிறார்.
அதன் கூரிய கண்பார்வையின் காரணமாக, யெகோவாவின் முக்கிய பண்புகளில் ஒன்றாக இருக்கும் ஞானத்துக்கு கழுகு ஒரு பொருத்தமான அடையாளம். (ஒப்பிடுக: எசேக்கியேல் 1:10; வெளிப்படுத்துதல் 4:7.) அது ஏன் அப்படி? நாம் எடுக்கக்கூடிய எந்த நடவடிக்கையின் விளைவுகளையும் முன்னரே காண்பதை ஞானம் உட்படுத்துகிறது. (நீதிமொழிகள் 22:3) இயேசுவின் உவமையில், புயற்காற்று வரும் சாத்தியத்தை முன்னமே அறிந்து தன் வீட்டை கன்மலையின்மேல் கட்டின விவேகமுள்ள மனிதனைப் போல, தொலைதூரம் காணக்கூடிய திறனைக் கழுகு பெற்றிருப்பதால், வெகு தொலைவிலுள்ள ஆபத்தைக் கண்டு முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொள்ளும். (மத்தேயு 7:24, 25) அக்கறைக்குரியவிதமாக, ஸ்பானிய மொழியில், கழுகைப் போல் இருக்கிறார் என்று ஒருவரை விவரிப்பது, அவருக்கு உட்பார்வை அல்லது பகுத்துணர்வு இருப்பதை அர்த்தப்படுத்துகிறது.
ஒரு கழுகை மிக அருகிலிருந்து காண்பதற்கு உங்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்தால், அது தன் கண்களை உபயோகிக்கும் விதத்தைக் கவனியுங்கள். அது உங்களை மேலோட்டமாக நோட்டமிடுவதில்லை; மாறாக, அது உங்கள் தோற்றத்தின் ஒவ்வொரு நுணுக்கத்தையும் கூர்ந்து ஆராய்வதாக தோன்றுகிறது. அதேபோல், ஞானமுள்ள மனுஷன் தன் சொந்த இயல்புணர்வு அல்லது தன் உணர்ச்சிகளை நம்புவதற்கு பதிலாக தீர்மானம் எடுப்பதற்கு முன் ஒரு விஷயத்தை கவனமாக கூர்ந்து ஆராய்கிறார். (நீதிமொழிகள் 28:26) கழுகின் கூர்மையான கண்பார்வை ஞானம் என்ற தெய்வீக பண்புக்குப் பொருத்தமான அடையாளமாக இருந்தாலும், அது நேர்த்தியாக வானில் பறக்கும் விதமும்கூட பைபிள் எழுத்தாளர்களால் அடையாள அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
‘ஆகாயத்தில் கழுகினுடைய வழி’
‘ஆகாயத்தில் கழுகினுடைய வழி,’ குறித்துக்கொடுக்கப்பட்ட பாதை எதையும் பின்பற்றாமலும் அதன் பின் எந்தத் தடமும் விட்டுச்செல்லாமலும் அது பறந்து செல்லும் வேகமும், எவ்வித முயற்சியுமின்றி அது பறந்துசெல்லும் விதமும் காண்பதற்கு கண்ணைக் கவருவதாய் இருக்கிறது. (நீதிமொழிகள் 30:19) கழுகின் வேகமாகச் செல்லும் தன்மை புலம்பல் 4:19-ல் குறிப்பிடப்பட்டிருக்கிறது, அங்கே பாபிலோனிய போர்வீரர்கள் இவ்வாறு விவரிக்கப்பட்டிருக்கின்றனர்: “எங்களைப் பின்தொடர்ந்தவர்கள் ஆகாயத்துக் கழுகுகளைப்பார்க்கிலும் வேகமாயிருந்தார்கள்; பர்வதங்கள்மேல் எங்களைப் பின்தொடர்ந்தார்கள்.” வானில் உயரப் பறந்துகொண்டிருக்கும் கழுகு அதன் இரையை கண்டுபிடித்ததென்றால், அது தன் சிறகுகளை கீழே செங்குத்தாக இறக்கி, தலைகீழாகப் பாய்கிறது, அச்சமயம் அது மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் என்று சில அறிக்கைகள் கூறுகின்றன. பைபிள், கழுகை வேகத்துக்கு இணைபொருட்சொல்லாக பயன்படுத்துகிறது, விசேஷமாக ஓர் இராணுவ படையின் சம்பந்தமாக சொல்வது ஆச்சரியமாயில்லை.—2 சாமுவேல் 1:23; எரேமியா 4:13; 49:22.
மறுபட்சத்தில், ஏசாயா கழுகின் முயற்சியற்ற பறத்தலை குறிப்பிட்டுக் காண்பிக்கிறார். “கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள்; நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.” (ஏசாயா 40:31) கழுகின் மிதக்கும் ஆற்றலுள்ள பறத்தலின் இரகசியம் என்ன? மேலே உயர எழும்புவது சிறிதளவு முயற்சியையே தேவைப்படுத்துகிறது, ஏனென்றால் கழுகுகள் வெப்பக்காற்றோட்டங்களை அல்லது மேலே எழும்பிக்கொண்டிருக்கும் அனலான காற்றலைகளை பயன்படுத்துகின்றன. வெப்பக்காற்றோட்டங்கள் காணமுடியாதவையாய் இருக்கின்றன, ஆனால் கழுகோ அவற்றைக் கண்டுபிடிப்பதில் தேர்ச்சி பெற்றிருக்கிறது. வெப்பக்காற்றோட்டத்தைக் கண்டுபிடித்தவுடன், கழுகு அதன் சிறகுகளையும் வாலையும் விரித்து, அனலான காற்றலைகளுக்குள்ளே வட்டமிடுகிறது, அது கழுகை மேலே உயர உயர சுமந்து செல்கிறது. போதுமான அளவு உயரத்தை எட்டியவுடன், அது அடுத்த வெப்பக்காற்றோட்டத்துக்கு மிதந்து செல்கிறது, அதேவிதமாக திரும்பத் திரும்பச் செய்கிறது. இந்த விதத்தில் கழுகு மிகவும் குறைவான சக்தியைப் பயன்படுத்தி பல மணிநேரங்கள் வானில் மிதக்கமுடியும்.
இஸ்ரேலில், விசேஷமாக செங்கடலின் கரைகளில் உள்ள எஸியன்-கெபரிலிருந்து வடக்கே தாண் வரை கழுகுகள் பொதுவாக காணப்படுகின்றன. அவை விசேஷமாக இளவேனிற்காலத்திலும் இலையுதிர்க்காலத்திலும் இடம் விட்டு இடம் மாறிச்செல்கையில் அதிகமாக காணப்படுகின்றன. சில வருடங்களில் சுமார் 1,00,000 கழுகுகள் எண்ணப்பட்டிருக்கின்றன. காலை நேர சூரியன் காற்றை வெப்பமாக்கும்போது, நூற்றுக்கணக்கான இப்பறவையினம் ரிப்ட் பள்ளத்தாக்கின் எல்லையிலுள்ள மலையின் செங்குத்தான பகுதிகள்மீது பறப்பதை காணலாம்.
நாம் நம்முடைய வேலையைத் தொடர்ந்து செய்வதற்கு எவ்வாறு யெகோவாவின் பலம் ஆவிக்குரியப்பிரகாரமாகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் நம்மைத் தாங்கி உயர்த்தக்கூடும் என்பதற்கு, கழுகின் முயற்சியில்லாத பறத்தல் ஒரு மிகச் சிறந்த உதாரணம். கழுகு தன் சொந்த சக்தியை உபயோகித்து வானளாவ உயரப் பறக்கமுடியாதது போல, நம்முடைய சொந்த திறமைகளின் பேரில் நாமும் சார்ந்திருந்தால் சமாளிக்க முடியாது. “என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு,” என்று அப்போஸ்தலனாகிய பவுல் விளக்கினார். (பிலிப்பியர் 4:13) காணமுடியாத வெப்பக்காற்றோட்டங்களுக்காக ஒரு கழுகு எப்போதும் தேடிக்கொண்டிருப்பது போல, நம்முடைய ஊக்கமான ஜெபங்களின் மூலம் யெகோவாவின் காணக்கூடாத சக்திக்காக நாம் ‘கேட்டுக்கொண்டே’ இருக்கிறோம்.—லூக்கா 11:9, 13.
இடம் விட்டு இடம் செல்லும் கழுகுகள், உயிரினங்களைக் கொன்று தின்னும் மற்ற பறவைகளைக் கவனிப்பதன் மூலம் பெரும்பாலும் வெப்பக்காற்றோட்டங்களைக் கண்டுபிடிக்கின்றன. ஒரு சமயம் 250 கழுகுகளும் பருந்துகளும் ஒரே வெப்பக்காற்றோட்டத்தில் வட்டமிட்டு மேலே சென்றதை கண்டதாக இயற்கைப் பண்பாட்டாளர் டி. ஆர். மாக்கின்டாஷ் அறிக்கை செய்தார். அதேபோல் இன்று கிறிஸ்தவர்கள் மற்ற தேவபக்தியுள்ள ஊழியர்களின் உண்மையுள்ள முன்மாதிரிகளைப் பார்த்து பின்பற்றுவதன் மூலம் யெகோவாவினுடைய பலத்தின்மீது சார்ந்திருக்கக் கற்றுக்கொள்ளலாம்.—1 கொரிந்தியர் 11:1.
ஒரு கழுகினுடைய சிறகுகளின் நிழலில்
ஒரு கழுகினுடைய வாழ்க்கையின் அதிக ஆபத்தான காலப்பகுதிகளில் ஒன்று, அது பறப்பதற்கு கற்றுக்கொள்ளும் சமயமாகும். அவ்வாறு பறக்க முயற்சிசெய்யும்போது அநேக கழுகுகள் செத்துவிடுகின்றன. எகிப்திலிருந்து புறப்பட்டுச் சென்றபோது, பறவைக்குஞ்சு போலிருந்த இஸ்ரவேல் தேசமும்கூட ஆபத்தில் இருந்தது. இவ்வாறு யெகோவா இஸ்ரவேலருக்கு கூறிய வார்த்தைகள் மிகவும் பொருத்தமாய் இருந்தன: “நான் எகிப்தியருக்குச் செய்ததையும், நான் உங்களைக் கழுகுகளுடைய செட்டைகளின்மேல் சுமந்து, உங்களை என்னண்டையிலே சேர்த்துக்கொண்டதையும் நீங்கள் கண்டிருக்கிறீர்கள்.” (யாத்திராகமம் 19:4) இளம் குஞ்சு ஆரம்பத்தில் பறப்பதற்கு முயற்சிகள் எடுக்கையில் விழுந்துவிடாமலிருப்பதற்கு கழுகுகள் அவற்றின் முதுகின்மீது சிறிது காலம் தூக்கிச் செல்வதைப் பற்றிய அறிக்கைகள் இருக்கின்றன. அந்த அறிக்கைகளின் பேரில் ஜி. ஆர். டிரைவர் என்பவர் பலஸ்தீனா ஆய்வுப்பயண காலாண்டு (ஆங்கிலம்) வெளியீட்டில் இவ்வாறு குறிப்பிட்டார்: “[பைபிளின்] இந்த விவரிப்பு வெறும் கற்பனை கருத்தல்ல, ஆனால் நடைமுறையில் உள்ள உண்மையின் பேரில் சார்ந்துள்ளது.”
கழுகுகள் மற்றவிதங்களிலும்கூட பின்பற்றத்தக்க பெற்றோராய் இருக்கின்றன. அவை இளங்குஞ்சுகளுக்கு உணவை ஒழுங்காக அளிப்பது மட்டுமன்றி, ஆண் கழுகு கூட்டுக்குக் கொண்டுவரும் இறைச்சியை குஞ்சுகள் அதை விழுங்குவதற்கு ஏற்றபடி தாய்ப் பறவை கவனமாய் துண்டுகளாக்கி கொடுக்கின்றன. அவை கூடுகளைப் பொதுவாக மலை உச்சியில் அல்லது உயரமான மரங்களில் கட்டுவதால், இளம் பறவைகள் இயற்கைச் சக்திகளால் பாதிக்கப்படுகின்றன. (யோபு 39:27, 28) பெற்றோரின் கவனிப்பு இல்லையென்றால், பைபிள் தேசங்களில் பொதுவாக இருக்கும் பொசுக்குகிற வெயிலினால் இளம் குஞ்சு செத்தும்கூட போய்விடும். பெரிய கழுகு அதன் இளம் குஞ்சுகளுக்கு நிழலளிப்பதற்கென்று சிறகுகளை விரித்து வைக்கிறது, சில சமயங்களில் தொடர்ந்து மணிக்கணக்காக அப்படியே விரித்து வைக்கிறது.
இவ்வாறு தெய்வீக பாதுகாப்புக்கு ஓர் அடையாளமாக கழுகின் சிறகுகள் பைபிளில் பயன்படுத்தப்பட்டிருப்பது பொருத்தமானதாயிருக்கிறது. யெகோவா எவ்வாறு இஸ்ரவேலரை வனாந்தர பயணத்தில் பாதுகாத்தார் என்பதை உபாகமம் 32:9-12 விவரிக்கிறது: “கர்த்தருடைய ஜனமே அவருடைய பங்கு; யாக்கோபு அவருடைய சுதந்தர வீதம். பாழான நிலத்திலும் ஊளையிடுதலுள்ள வெறுமையான அவாந்தரவெளியிலும் அவர் அவனைக் கண்டுபிடித்தார், அவனை நடத்தினார், அவனை உணர்த்தினார், அவனைத் தமது கண்மணியைப் போலக் காத்தருளினார். கழுகு தன் கூட்டைக் கலைத்து, தன் குஞ்சுகளின்மேல் அசைவாடி, தன் செட்டைகளை விரித்து, அவைகளை எடுத்து, அவைகளைத் தன் செட்டைகளின்மேல் சுமந்துகொண்டுபோகிறது போல, கர்த்தர் ஒருவரே அவனை வழிநடத்தினார்.” நாம் யெகோவாவின் பேரில் நம்பிக்கை வைத்திருந்தால் அதேவிதமான அன்புள்ள பாதுகாப்பை அவர் நமக்குத் தருவார்.
தப்பித்துக்கொள்வதற்கான வழி
சில சமயங்களில் நாம் பிரச்சினைகளை எதிர்ப்படும்போது, நம்முடைய பிரச்சினைகள் எல்லாவற்றிலிருந்தும் பறந்தோடிவிடலாம் என்று நாம் விரும்புவோம். தாவீது அவ்வாறுதான் உணர்ந்தார். (ஒப்பிடுக: சங்கீதம் 55:6, 7.) ஆனால் இந்த ஒழுங்குமுறையில் நாம் சோதனைகளையும் துன்பங்களையும் எதிர்ப்படுகையில் நமக்கு உதவிசெய்வதாக யெகோவா வாக்களித்திருக்கிற போதிலும், அவர் முழுமையாக தப்பித்துக்கொள்ளும்படி செய்வதில்லை. நமக்கு பைபிளின் வாக்குறுதி இருக்கிறது: “மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுவதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்.”—1 கொரிந்தியர் 10:13.
‘தப்பித்துக்கொள்ளும்படியான போக்கு’ யெகோவாவின் பேரில் நம்பியிருக்க கற்றுக்கொள்வதை உட்படுத்துகிறது. இதைத்தான் மாக்ஸ் லெப்ஸ்ட்டர் கண்டுபிடித்தார், அவருடைய குறிப்புகள் இக்கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. சித்திரவதை முகாம்களில் இருந்த ஆண்டுகளின்போது அவர் யெகோவாவை அறிந்துகொண்டு அவர் பேரில் சார்ந்திருந்தார். மாக்ஸ் கண்டுபிடித்தபடி, யெகோவா அவருடைய வார்த்தை, அவருடைய ஆவி, அவருடைய அமைப்பு ஆகியவற்றின் மூலம் நம்மைப் பலப்படுத்துகிறார். முகாம்களிலும்கூட சாட்சிகள் உடன் விசுவாசிகளைக் கண்டுபிடித்து ஆவிக்குரிய உதவி அளித்தனர், வேதாகம கருத்துக்களையும் கிடைக்கக்கூடிய பைபிள் பிரசுரங்களையும் பகிர்ந்துகொண்டனர். தப்பித்துக்கொண்ட உண்மையுள்ள நபர்கள், யெகோவா அவர்களுக்கு வலுவூட்டினார் என்பதற்கு திரும்பத் திரும்ப சான்றளித்தனர். “எனக்கு உதவி செய்யும்படி நான் தொடர்ந்து இடைவிடாமல் யெகோவாவிடம் கேட்டுக்கொண்டே இருந்தேன், அவருடைய ஆவி என்னைத் தாங்கி ஆதரித்தது,” என்று மாக்ஸ் விளக்குகிறார்.
நாம் எப்படிப்பட்ட சோதனையை எதிர்ப்பட்டாலும், நாம் தொடர்ந்து பரிசுத்த ஆவிக்காக கேட்டுக்கொண்டே இருந்தால் நாமும் அதன் பேரில் சார்ந்திருக்கலாம். (மத்தேயு 7:7-11) இந்த ‘இயல்புக்கும் மேலான சக்தியின்’ மூலம் உயிர்ப்பூட்டப்பட்டு, நம்முடைய பிரச்சினைகளினால் மூழ்கிப்போய் விடாமல் உயர எழும்புவோம். நாம் தொடர்ந்து யெகோவாவின் வழிகளில் நடப்போம், நாம் சோர்ந்து போகமாட்டோம். நாம் கழுகுகளைப் போல் சிறகுகளையடித்து உயரே எழும்புவோம்.—2 கொரிந்தியர் 4:7, NW; ஏசாயா 40:31.
[பக்கம் 10-ன் சிறு குறிப்பு]
அது உங்களை மேலோட்டமாக நோட்டமிடுவதில்லை
[பக்கம் 9-ன் படத்திற்கான நன்றி]
Foto: Cortesía de GREFA
[பக்கம் 10-ன் படத்திற்கான நன்றி]
Foto: Cortesía de Zoo de Madrid