பாடம் 14
கடவுள் விரும்பும் வணக்கம்
முந்தின பாடத்தில் நாம் பார்த்ததுபோல், எல்லா மதங்களையும் கடவுள் ஏற்றுக்கொள்வது இல்லை. ஆனால், அவர் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் அவரை வணங்க கண்டிப்பாக நம்மால் முடியும். அப்படியென்றால், எப்படிப்பட்ட ‘வழிபாட்டை [அல்லது மதத்தை]’ கடவுள் ஏற்றுக்கொள்கிறார்? (யாக்கோபு 1:27, அடிக்குறிப்பு) பைபிள் என்ன சொல்கிறதென்று பாருங்கள்.
1. நாம் ஏன் பைபிள் சொல்கிறபடி கடவுளை வணங்க வேண்டும்?
ஏனென்றால், “உங்களுடைய வார்த்தைதான் சத்தியம்” என்று கடவுளிடம் இயேசு சொன்னார். (யோவான் 17:17) சில மதங்கள் கடவுளுடைய வார்த்தை சொல்லும் உண்மைகளை ஒதுக்கிவிட்டு மனித போதனைகளையும் பாரம்பரியங்களையும் சொல்லித்தருகின்றன. இதுபோல் ‘கடவுளுடைய கட்டளையைச் சாமர்த்தியமாக ஒதுக்கிவிடுகிறவர்களை’ யெகோவா வெறுக்கிறார். (மாற்கு 7:9-ஐ வாசியுங்கள்.) ஆனால், பைபிள் சொல்வதுபோல் நாம் அவரை வணங்கும்போது அவர் சந்தோஷப்படுகிறார்.
2. நாம் யெகோவாவை எப்படி வணங்க வேண்டும்?
யெகோவாதான் நம்மைப் படைத்தவர் என்பதால் நாம் அவருக்கு முழு பக்தியைக் கொடுக்க வேண்டும். (வெளிப்படுத்துதல் 4:11) அதாவது, அவர்மேல் அன்புவைத்து அவரை மட்டும் வணங்க வேண்டும். சிலை, படம், சின்னம் போன்ற எதையும் பயன்படுத்தக் கூடாது.—ஏசாயா 42:8-ஐ வாசியுங்கள்.
நம் வணக்கம் ‘பரிசுத்தமாகவும் கடவுளுக்குப் பிரியமானதாகவும்’ இருக்க வேண்டும். (ரோமர் 12:1) அப்படியென்றால், அவர் சொல்கிறபடி நாம் வாழ வேண்டும். உதாரணமாக, யெகோவாவை நேசிப்பவர்கள் திருமணம் சம்பந்தமாக அவர் தந்திருக்கிற கட்டளைகளை மதித்து நடக்கிறார்கள். அதோடு புகையிலை, பாக்கு, போதைப்பொருள், குடிவெறி போன்ற மோசமான பழக்கங்களைத் தவிர்க்கிறார்கள்.a
3. ஏன் சபையோடு சேர்ந்து யெகோவாவை வணங்க வேண்டும்?
வாராவாரம் நடக்கிற கூட்டங்களுக்கு நாம் போகும்போது ‘சபையில் யெகோவாவைப் புகழ்வதற்கு’ வாய்ப்புகள் கிடைக்கும். (சங்கீதம் 111:1, 2) உதாரணத்துக்கு, யெகோவாவைப் புகழ்ந்து பாட முடியும். (சங்கீதம் 104:33-ஐ வாசியுங்கள்.) அவர் நம்மேல் அன்பு வைத்திருப்பதால்தான் கூட்டங்களுக்கு வரச் சொல்கிறார். அதோடு, நாம் என்றென்றும் சந்தோஷமாக வாழ்வதற்குக் கூட்டங்கள் உதவும் என்று அவருக்குத் தெரியும். அங்கு போகும்போது மற்றவர்களையும் உற்சாகப்படுத்த முடியும், நமக்கும் உற்சாகம் கிடைக்கும்.
ஆராய்ந்து பார்க்கலாம்!
உருவங்களை வைத்து வணங்குவதை யெகோவா ஏன் ஏற்றுக்கொள்வதில்லை? என்னென்ன முக்கியமான வழிகளில் நாம் யெகோவாவைப் புகழலாம்? இப்போது பார்க்கலாம்.
4. உருவ வழிபாட்டைக் கடவுள் விரும்புவதில்லை
அது நமக்கு எப்படித் தெரியும்? வீடியோவைப் பார்த்துவிட்டு, கீழே இருக்கும் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்.
கடவுளுடைய மக்கள் சிலர் ஒரு சிலையைச் செய்து அவரை வணங்கியபோது என்ன நடந்தது?
உருவங்களை வைத்து வணங்கினால் கடவுளிடம் நெருங்கிப் போக முடியும் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால், உருவங்களை வைத்து வணங்கினால் உண்மையிலேயே கடவுளிடம் நெருங்கிப்போவோமா அல்லது அவரைவிட்டு விலகிப்போவோமா? யாத்திராகமம் 20:4-6-ஐயும் சங்கீதம் 106:35, 36-ஐயும் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
மக்கள் என்னென்ன உருவங்களை அல்லது சிலைகளை வணங்குவதை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்?
உருவங்களை வைத்து வணங்குவதைப் பற்றி யெகோவா என்ன நினைக்கிறார்?
உருவங்களை வணங்குவதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
5. யெகோவாவை மட்டும் வணங்கினால் பொய் நம்பிக்கைகளிலிருந்து விடுதலையாவோம்
யெகோவா ஏற்றுக்கொள்கிற விதத்தில் அவரை வணங்கும்போது பொய் நம்பிக்கைகளிலிருந்து நமக்கு எப்படி விடுதலை கிடைக்கிறதென்று பாருங்கள். வீடியோவைப் பாருங்கள்.
சங்கீதம் 91:14-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
நாம் முழு அன்போடு யெகோவாவை மட்டுமே வணங்கும்போது, நமக்கு என்ன செய்வதாக அவர் வாக்குக் கொடுக்கிறார்?
6. சபைக் கூட்டங்களில் நாம் கடவுளை வணங்குகிறோம்
சபைக் கூட்டங்களில் நாம் பாடல்கள் பாடும்போதும் பதில்கள் சொல்லும்போதும் யெகோவாவைப் புகழ்கிறோம், அதோடு ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்துகிறோம். சங்கீதம் 22:22-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
கூட்டங்களில் மற்றவர்கள் பதில் சொல்வதைக் கேட்கும்போது உங்களுக்கு சந்தோஷமாக இருக்கிறதா?
நீங்களும் ஒரு பதிலைத் தயாரித்துச் சொல்ல ஆசைப்படுகிறீர்களா?
7. நாம் கற்றுக்கொள்வதை மற்றவர்களிடம் சொல்லும்போது யெகோவா சந்தோஷப்படுகிறார்
பைபிளில் இருக்கிற உண்மைகளைப் பற்றி மற்றவர்களிடம் பேசுவதற்கு நிறைய வழிகள் இருக்கின்றன. சங்கீதம் 9:1-ஐயும் 34:1-ஐயும் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
நீங்கள் பைபிளில் கற்றுக்கொண்ட எந்த விஷயத்தைப் பற்றி மற்றவர்களிடம் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
சிலர் இப்படிச் சொல்கிறார்கள்: “கடவுள் நம்ம மனசதான் பார்க்குறாரு. அதனால அவரை எப்படி வணங்குனாலும் ஏத்துப்பாரு.”
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
சுருக்கம்
நாம் கடவுளை மட்டும்தான் வணங்க வேண்டும், கூட்டங்களில் அவரைப் புகழ வேண்டும், கற்றுக்கொண்டதை மற்றவர்களிடம் சொல்ல வேண்டும். அப்போது அவர் சந்தோஷப்படுவார்.
ஞாபகம் வருகிறதா?
நாம் ஏன் பைபிள் சொல்கிறபடி கடவுளை வணங்க வேண்டும்?
நாம் ஏன் யெகோவாவை மட்டும்தான் வணங்க வேண்டும்?
கடவுளுடைய மக்களோடு சேர்ந்து அவரை வணங்குவது ஏன் முக்கியம்?
அலசிப் பாருங்கள்
“இனியும் நான் சிலைகளுக்கு அடிமை இல்லை” என்ற அனுபவத்தில், உருவ வழிபாட்டை விட்டுவிட்டதைப் பற்றி ஒரு பெண் என்ன நினைக்கிறார் என்று படித்துப் பாருங்கள்.
சபைக் கூட்டத்தில் பதில் சொல்ல உங்களுக்கு எது உதவியாக இருக்கும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
கூட்டத்துக்குப் போவது ஒருவருக்குக் கஷ்டமாக இருந்தது. ஆனாலும், அப்படிப் போனதால் அவருக்கு என்ன நன்மை கிடைத்தது என்று பாருங்கள்.
சிலுவை என்பது கிறிஸ்தவ மதச் சின்னம் என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். ஆனால், சிலுவையை நாம் வணக்கத்தில் பயன்படுத்தலாமா?
“யெகோவாவின் சாட்சிகள் ஏன் சிலுவையைப் பயன்படுத்துவதில்லை?” (ஆன்லைன் கட்டுரை)
a இந்த விஷயங்களைப் பற்றிப் பிற்பாடு வரும் பாடங்களில் நாம் பார்ப்போம்.