வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்துக்குத் தயாரிக்க தேவையான தகவல்கள்
நவம்பர் 2-8
பைபிளில் இருக்கும் புதையல்கள் | யாத்திராகமம் 39-40
“மோசே ஆலோசனைகளைக் கவனமாகக் கடைப்பிடித்தார்”
யெகோவா உங்களை அறிந்திருக்கிறாரா?
13 கோராகுக்கு நேர்மாறாக மோசே, “பூமியிலுள்ள எந்த மனிதரைவிடவும் மிகுந்த பணிவுள்ளவராக இருந்தார்.” (எண். 12:3, NW) யெகோவாவின் கட்டளைக்கு அப்படியே கீழ்ப்படிந்ததன் மூலம் அவர் பணிவையும் மனத்தாழ்மையையும் காட்டினார். (யாத். 7:6; 40:16) யெகோவா செயல்பட்ட விதம் தவறென மோசே நினைத்ததாக பைபிள் எங்கேயும் சொல்வதில்லை; யெகோவாவின் அறிவுரைகளைப் பின்பற்றுவதைக் குறித்து அவர் எரிச்சலடைந்ததாகவும் எங்கேயும் சொல்வதில்லை. உதாரணமாக, ஆசரிப்புக் கூடாரத்தை அமைக்கும் விஷயத்தில் யெகோவா அவருக்குப் பல நுணுக்கமான விவரங்களைக் கொடுத்திருந்தார்; அதாவது, கூடாரத் துணிகளுக்கு எந்த நிற நூலைப் பயன்படுத்த வேண்டும், அதில் எத்தனை வளையங்கள் போட வேண்டும் போன்ற சிறுசிறு விவரங்களைக்கூட கொடுத்திருந்தார். (யாத். 26:1-6) கடவுளுடைய அமைப்பில் மனித கண்காணி ஒருவர் சிறுசிறு விஷயங்களுக்கும் உங்களுக்கு அறிவுரைகள் கொடுத்தால் நீங்கள் ஒருவேளை எரிச்சலடையலாம். ஆனால், யெகோவா பரிபூரண கண்காணி; அவர் தமது ஊழியர்களுக்கு வேலைகள் தருகிறார், அந்த வேலைகளை அவர்கள் நல்லபடியாக செய்து முடிப்பார்கள் என்று நம்புகிறார். அவர் ஏராளமான விவரங்களைக் கொடுக்கிறார் என்றால், நல்ல காரணத்தோடுதான் அப்படிச் செய்கிறார். யெகோவா ஏகப்பட்ட விவரங்கள் கொடுத்ததற்காக மோசே எரிச்சலடையவில்லை என்பதை நினைவில் வையுங்கள்; யெகோவா தன்னை மதிப்புக்குறைவாக நடத்துவதாகவோ, தன்னுடைய படைப்புத்திறனை அல்லது சுதந்திரத்தை முடக்குவதாகவோ அவர் நினைக்கவில்லை. மாறாக, கடவுள் சொன்னதையெல்லாம் வேலையாட்கள் அப்படியே ‘செய்கிறார்களா’ என்பதை உறுதிப்படுத்திக் கொண்டார். (யாத். 39:32) எவ்வளவு மனத்தாழ்மை அவருக்கு! அது யெகோவாவின் வேலை என்பதையும், தான் யெகோவாவின் கையிலுள்ள வெறும் ஒரு கருவிதான் என்பதையும் மோசே உணர்ந்திருந்தார்.
எல்லாவற்றிலும் உண்மையுள்ளவர்களாய் இருக்கிறீர்களா?
3 ‘மோசே பணிவிடைக்காரராக உண்மையுள்ளவராய் இருந்தார்’ என எபிரெயர் 3:5 குறிப்பிடுகிறது. அவர் உண்மையுள்ளவராய் இருந்தது எப்படி? ஆசரிப்புக் கூடாரத்தை உருவாக்குவதிலும் அதை ஸ்தாபிப்பதிலும், ‘யெகோவா தனக்குக் கற்பித்தபடியெல்லாம் மோசே செய்தார்.’ (யாத்திராகமம் 40:16) யெகோவாவின் வணக்கத்தாராக நாம், கீழ்ப்படிதலோடு அவருக்குச் சேவை செய்வதன் மூலம் உண்மையுள்ளவர்களாய் இருக்கிறோம். கடினமான சோதனைகளை அல்லது பரீட்சைகளை நாம் எதிர்ப்படுகையில் யெகோவாவுக்குப் பற்றுமாறாதவர்களாய் இருப்பதையும் இது நிச்சயம் உட்படுத்துகிறது. என்றாலும், பெரிய சோதனைகளை வெற்றிகரமாகச் சமாளிப்பதை வைத்து மட்டுமே நாம் உண்மையுள்ளவர்கள் என்று தீர்மானித்துவிட முடியாது. “கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான், கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாயிருக்கிறான்” என இயேசு குறிப்பிட்டார். (லூக்கா 16:10) ஆகவே, சிறியதாகத் தோன்றுகிற விஷயங்களில்கூட நாம் உண்மையுள்ளவர்களாய் இருக்க வேண்டும்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-2-E பக். 884 பாரா 3
கடல்நாய்த் தோல்
இஸ்ரவேலர்களுக்கு எங்கிருந்து கிடைத்திருக்கும்? பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் டாகாஷ் (எபிரெய வார்த்தை) ஒருவகை கடல்நாயைக் குறிக்கிறது என்றால், இஸ்ரவேலர்களுக்கு அது எப்படிக் கிடைத்திருக்கும் என்ற கேள்வி வரலாம். கடல்நாய்கள், பொதுவாக ஆர்ட்டிக் அல்லது அன்டார்டிக் பகுதிகளில் காணப்படுகின்றன. இருந்தாலும், சில கடல்நாய்கள் வெப்பமான சீதோஷ்ணத்திலும் வாழ்கின்றன. இன்றும்கூட, சில மான்க் கடல்நாய்கள் மத்தியதரைக் கடல் பகுதியிலும், வெப்பமான மற்ற கடல் பகுதிகளிலும் வாழ்கின்றன. கடந்த நூற்றாண்டுகளில், கடல்நாய்கள் அதிகமாக வேட்டையாடப்பட்டதால் அவற்றின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்திருக்கிறது. ஆனால், பைபிள் காலங்களில் இவை மத்தியதரைக் கடலிலும் செங்கடலிலும் ஏராளமாக இருந்திருக்கலாம். 1832-லும்கூட கால்மெட்டின் டிக்ஷனரி ஆஃப் த ஹோலி பைபிள் (பக். 139) இப்படிச் சொன்னது: “சீனாய் தீபகற்பத்தைச் சுற்றியுள்ள செங்கடலில் இருக்கும் பல சிறிய தீவுகளில் கடல்நாய்கள் காணப்படுகின்றன.”—ஏ. ஜெ. பொல்லாக் (லண்டன்) என்பவரால் எழுதப்பட்ட த டேபர்நேக்கிள்ஸ் டிப்பிக்கல் டீச்சிங், பக். 47.
நீங்கள் செய்யும் வேலையை யாரும் பார்க்கவில்லையா?
ஆசரிப்புக் கூடாரத்தைக் கட்டி முடித்தபோது, “ஒரு மேகம் ஆசரிப்புக்கூடாரத்தை மூடினது; கர்த்தருடைய மகிமை வாசஸ்தலத்தை நிரப்பிற்று” என்று பைபிள் சொல்கிறது. (யாத். 40:34) பெசலெயேல்-அகோலியாப் செய்த வேலையை யெகோவா அங்கீகரித்தார் என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது! அந்த சமயத்தில், அவர்கள் 2 பேரும் எப்படி உணர்ந்திருப்பார்கள்? அவர்கள் உருவாக்கின பொருட்களில் அவர்களுடைய பெயர்கள் பொறிக்கப்படவில்லை என்றாலும் அவர்களுடைய உழைப்பை யெகோவா ஆசீர்வதித்தார் என்ற திருப்தி அவர்களுக்கு இருந்தது. (நீதி. 10:22) அவர்கள் உருவாக்கின பொருட்கள், யெகோவாவுடைய சேவையில் பல வருடங்களுக்குப் பயன்படுத்தப்பட்டன. அதைப் பார்த்து அவர்கள் நிச்சயம் சந்தோஷப்பட்டு இருப்பார்கள். புதிய உலகத்தில் பெசலெயேல்-அகோலியாப் மறுபடியும் உயிரோடு வருவார்கள். அப்போது, உண்மை வணக்கத்துக்காக அவர்கள் செய்த ஆசரிப்புக் கூடாரம் சுமார் 500 வருடங்களுக்குப் பயன்படுத்தப்பட்டது என்பதைத் தெரிந்துகொள்ளும்போது அவர்கள் மெய்சிலிர்த்துப் போவார்கள்.
நவம்பர் 9-15
பைபிளில் இருக்கும் புதையல்கள் | லேவியராகமம் 1-3
“பலிகளைச் செலுத்துவதன் நோக்கம்”
it-2-E பக். 525
பலிகள் மற்றும் காணிக்கைகள்
தகன பலிகள். தகன பலிகள் முழுமையாகக் கடவுளுக்குக் கொடுக்கப்பட்டன. பலி செலுத்துகிறவர், அந்த மிருகத்தின் எந்தவொரு பகுதியையும் தனக்கென்று வைத்துக்கொள்ள மாட்டார். (நியா 11:30, 31, 39, 40-ஐ ஒப்பிட்டுப் பாருங்கள்.) இஸ்ரவேலர் ஒருவர் பாவப் பரிகார பலி செலுத்தும்போது சில சமயங்களில், அந்தப் பலியோடு தகன பலியையும் செலுத்துவார். இது, அவர் செலுத்திய பாவப் பரிகார பலியை ஏற்றுக்கொள்ளும்படி யெகோவாவிடம் வேண்டிக்கொள்வதற்காக அல்லது அதை அவர் ஏற்றுக்கொண்டதைக் காட்டுவதற்காக செலுத்தப்பட்டது. இயேசு கிறிஸ்து, “தகன பலியாக” தன்னையே முழுமையாகக் கொடுத்தார்.
it-2-E பக். 528 பாரா 4
பலிகளும் காணிக்கைகளும்
உணவுக் காணிக்கைகள். சமாதான பலிகள், தகன பலிகள், பாவப் பரிகார பலிகள் போன்ற பலிகளோடு சேர்த்து உணவுக் காணிக்கைகள் கொடுக்கப்பட்டன. முதல் விளைச்சலில் கிடைத்த பொருள்களும் உணவுக் காணிக்கைகளாகக் கொடுக்கப்பட்டன. சில சமயங்களில், இவை தனியாகவும் கொடுக்கப்பட்டன. (யாத் 29:40-42; லேவி 23:10-13, 15-18; எண் 15:8, 9, 22-24; 28:9, 10, 20, 26-28; அதி. 29) தங்களைக் கடவுள் ஏராளமாக ஆசீர்வதித்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டதற்கு அடையாளமாக இவற்றை இஸ்ரவேலர்கள் கொடுத்தார்கள். பெரும்பாலும், உணவுக் காணிக்கையோடு எண்ணெயும் சாம்பிராணியும் கொடுக்கப்பட்டன. நைசான மாவு, வறுத்த தானியம், அல்லது அடுப்பிலோ வட்டக் கல்லிலோ வாணலியிலோ சுடப்பட்ட வட்ட ரொட்டிகள் அல்லது மெல்லிய ரொட்டிகள் ஆகியவை உணவுக் காணிக்கையாகக் கொடுக்கப்பட்டன. உணவுக் காணிக்கையில் கொஞ்சம் தகன பலிக்கான பலிபீடத்தில் போடப்பட்டது. அதில் ஒரு பங்கைக் குருமார்கள் சாப்பிட்டார்கள். சமாதான பலியாகக் கொடுக்கப்படும் உணவுக் காணிக்கையை பலி செலுத்துபவரும் சாப்பிட்டார். (லேவி 6:14-23; 7:11-13; எண் 18:8-11) பலிபீடத்தில் செலுத்தப்பட்ட உணவுக் காணிக்கையில் புளித்த மாவையோ “தேனையோ” (அத்திப் பழப் பாகையோ பழச்சாற்றையோ குறிக்கலாம்) சேர்க்கக் கூடாது.—லேவி 2:1-16.
it-2-E பக். 526 பாரா 1
பலிகளும் காணிக்கைகளும்
சமாதான பலிகள். இந்த பலிகள் யெகோவா ஏற்றுக்கொள்ளும் விதத்தில் இருப்பது, அவருக்கும் பலி செலுத்துபவருக்கும் இடையே சமாதான உறவு இருப்பதைக் காட்டியது. இந்த பலியில் ஒரு பங்கை பலி செலுத்தியவரும் அவருடைய குடும்பத்தாரும் சாப்பிட்டார்கள் (வழிபாட்டுக் கூடாரத்தின் பிரகாரத்தில் அதைச் சாப்பிட்டார்கள். பிரகாரத்தைச் சுற்றிலும் போடப்பட்டிருந்த மறைப்புக்குள்ளே கூடாரங்கள் அமைக்கப்பட்டதாக ஒரு பாரம்பரியம் சொல்கிறது. ஆலயம் கட்டப்பட்ட பிறகு, சாப்பாட்டு அறைகளில் சாப்பிட்டார்கள்). இந்த பலியைச் செலுத்திய குருவுக்கும், அந்தச் சமயத்தில் அங்கே சேவை செய்த குருமார்களுக்கும் அதில் ஒரு பங்கு கிடைத்தது. எரிக்கப்பட்ட கொழுப்பிலிருந்து வந்த வாசனையைத் தனக்குப் பிரியமான வாசனையாக யெகோவா ஏற்றுக்கொண்டார். உயிருக்கு அடையாளமாக இருக்கிற இரத்தம் யெகோவாவுக்கே செலுத்தப்பட்டது. குருமார்களும் பலி செலுத்தியவர்களும் அந்த சமாதான பலியில் ஒரு பங்கைச் சாப்பிடுவது, யெகோவாவோடு சேர்ந்து சாப்பிடுவதுபோல் இருந்தது. இது, யெகோவாவோடு அவர்களுக்குச் சமாதான உறவு இருந்ததைக் காட்டியது. தீட்டுப்பட்ட ஒருவர் (திருச்சட்டத்தின்படி தீட்டாகக் கருதப்படுகிற ஏதாவது ஒரு விஷயத்தால் கறைப்பட்டிருக்கும் ஒருவர்) அதைச் சாப்பிட்டால் அல்லது அனுமதிக்கப்பட்ட நாட்களுக்குப் பிறகு ஒருவர் அந்த இறைச்சியை (வெப்பமான சீதோஷ்ணத்தில் அது கெட்டுவிடும்) சாப்பிட்டால் அவர் கொல்லப்படுவார். தன்னைத் தீட்டுப்படுத்திக்கொள்வதன் மூலம் அல்லது யெகோவாவின் பார்வையில் அருவருப்பாக இருக்கும் ஒன்றைச் சாப்பிடுவதன் மூலம் அவர் அந்த உணவின் புனிதத்தைக் கெடுத்துவிடுகிறார். இப்படிச் செய்வதன் மூலம், யெகோவா பரிசுத்தமாக நினைக்கும் விஷயங்களை அவர் அவமதிக்கிறார்.—லேவி 7:16-21; 19:5-8.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
லேவியராகம புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
2:13—‘படைக்கும் எல்லாவற்றோடும்’ ஏன் உப்பையும் படைக்க வேண்டியிருந்தது? பலிகளின் ருசியைக் கூட்டுவதற்காக அல்ல. உணவுப் பொருட்களை கெடாமல் பாதுகாப்பதற்கு உப்பை உலகெங்கிலும் மக்கள் பயன்படுத்துகிறார்கள். கெட்டுவிடாமலும் அழுகிவிடாமலும் பாதுகாப்பதை இது அர்த்தப்படுத்தியதால் எல்லாவற்றோடு இதையும் படைக்க வேண்டியிருந்தது.
it-1-E பக். 813
கொழுப்பு
இந்தச் சட்டத்துக்கான காரணம். திருச்சட்டத்தின்படி இரத்தமும் கொழுப்பும் யெகோவாவுக்குச் சொந்தமானதாகக் கருதப்பட்டன. இரத்தத்தில் உயிர் இருக்கிறது. அதை யெகோவாவினால் மட்டுமே கொடுக்க முடியும். அதனால், அது அவருக்கே சொந்தமானது. (லேவி 17:11, 14) கொழுப்பு, ஒரு மிருகத்தின் உடலிலுள்ள மிகச் சிறந்த பாகமாகக் கருதப்பட்டது. ஒருவர் அதை பலியாகக் கொடுப்பது, மிகச் சிறந்த பாகங்கள் எல்லாமே, கொடைவள்ளலான யெகோவாவுக்குத்தான் சொந்தம் என்பதை அவர் தெரிந்துவைத்திருப்பதைக் காட்டியது. அதோடு, கடவுளுக்கு மிகச் சிறந்ததைக் கொடுக்க அவர் ஆசைப்படுவதையும் காட்டியது. யெகோவாவுக்கு மிகச் சிறந்ததைக் கொடுக்க வேண்டுமென்ற ஆர்வம் இஸ்ரவேலர்களுக்கு இருந்ததை அது அடையாளப்படுத்தியதால்தான், அதை பலிபீடத்தின் மேல் “உணவாக” எரிக்க வேண்டும் என்றும், அது யெகோவாவுக்கு ‘வாசனையானதாக’ இருக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டது. (லேவி 3:11, 16) அப்படியானால், கொழுப்பைச் சாப்பிடுவது கடவுளுக்கென்று அர்ப்பணிக்கப்பட்டதை அபகரிப்பதாக... அவருடைய உரிமைகளைப் பறிப்பதாக... இருந்தது. கொழுப்பைச் சாப்பிடுகிறவர்களுக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டது. ஆனால், தானாகச் செத்துப்போன மிருகத்தின் கொழுப்பையும் வேறொரு மிருகத்தினால் கொல்லப்பட்ட மிருகத்தின் கொழுப்பையும் மற்ற காரியங்களுக்காகப் பயன்படுத்த முடிந்தது. இருந்தாலும், இரத்தத்தை மட்டும் எந்தவிதத்திலும் பயன்படுத்த முடியாது.—லேவி 7:23-25.
லேவியராகம புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
3:17. மிகச் சிறந்த, அல்லது ஊட்டமிக்க ஒரு பாகமாக கொழுப்பு கருதப்பட்டது. ஆகவே அதைச் சாப்பிடக் கூடாதென தடை செய்யப்பட்டிருந்ததானது, மிகச் சிறந்த பாகம் யெகோவாவுக்கே சேரும் என்பதை இஸ்ரவேலரின் மனதில் தெள்ளத் தெளிவாக பதிய வைத்திருக்கும். (ஆதியாகமம் 45:18) இது மிகச் சிறந்ததை யெகோவாவுக்கு கொடுக்க வேண்டும் என்பதை நமக்கு நினைப்பூட்டுகிறது.—நீதிமொழிகள் 3:9, 10; கொலோசெயர் 3:23, 24.
“‘இரண்டு சிறிய காசுகளின்’ மதிப்பு”
w97 10/15 பக். 16-17 பாரா 16, அடிக்குறிப்பு
முழு ஆத்துமாவோடு செய்யும் உங்கள் சேவையை யெகோவா போற்றுகிறார்
இந்தக் காசுகள் ஒவ்வொன்றும், அந்தச் சமயத்தில் பயன்படுத்தப்பட்ட யூதக் காசுகளில் மிகச் சிறியதான ஒரு லெப்டாவாக இருந்தது. இரண்டு லெப்டாக்கள், ஒரு நாளுக்குரிய கூலியின் 1/64 பாகத்திற்குச் சமமாக இருந்தன. மத்தேயு 10:29-ன்படி, ஒரு அசாரியன் காசுக்கு (எட்டு லெப்டாவுக்களுக்குச் சமமானது), இரண்டு குருவிகளை ஒருவர் வாங்கலாம். இவை உணவாக ஏழைகளால் பயன்படுத்தப்பட்ட மிக மலிவான பறவை வகைகளில் ஒன்றாகும். ஆகையால் இந்த விதவை நிச்சயமாகவே ஏழையாக இருந்தாள், ஏனெனில், ஒரே ஒரு குருவியை வாங்குவதற்குத் தேவைப்பட்ட தொகையில் பாதியளவே அவளிடமிருந்தது; ஒரு வேளை சாப்பாட்டுக்கும் போதியதாக இல்லை.
நவம்பர் 16-22
பைபிளில் இருக்கும் புதையல்கள் | லேவியராகமம் 4-5
“உங்களால் முடிந்த மிகச் சிறந்ததை யெகோவாவுக்குக் கொடுங்கள்”
it-2-E பக். 527 பாரா 9
பலிகளும் காணிக்கைகளும்
குற்ற நிவாரண பலிகள். இதுவும்கூட பாவங்களுக்காகச் செலுத்தப்படும் பலிதான். திருச்சடத்தின்படி, பாவம் செய்கிற ஒருவர் குற்றமுள்ளவராக இருக்கிறார். சில குறிப்பிட்ட பாவங்களுக்காக குற்ற நிவாரண பலிகள் செலுத்தப்பட்டன. மற்ற பாவப் பரிகார பலிகளிலிருந்து இவை கொஞ்சம் வித்தியாசப்பட்டவை. மற்றொருவருக்கு விரோதமாக செய்யப்பட்ட பாவங்களுக்காக குற்ற நிவாரண பலிகள் செலுத்தப்பட்டதாகத் தெரிகிறது. தவறு செய்தவர், யெகோவாவுக்கு எதிராக அல்லது வேறொருவருக்கு எதிராக ஏதாவது பாவம் செய்திருக்கலாம். அவர் மனம் திருந்தி, யெகோவாவுடைய நீதியின்படி நடக்க ஒத்துக்கொள்வதைக் காட்டுவதற்காக அல்லது பாவம் செய்ததால் இழந்துவிட்ட சில ஒப்பந்த உரிமைகளை மறுபடியும் பெற்றுக்கொண்டு, தண்டனையிலிருந்து விடுபடுவதற்காக குற்ற நிவாரண பலியைச் செலுத்த வேண்டியிருந்தது.—ஏசா 53:10-ஐ ஒப்பிட்டுப் பாருங்கள்.
w09 10/1 பக். 32 பாரா 3
கடவுள் நம் வரம்புகளைப் புரிந்துகொள்கிறார்
இல்லை; “ஆட்டுக்குட்டியைக் கொண்டுவர அவனுக்குச் சக்தியில்லாதிருந்தால், அவன் செய்த குற்றத்தினிமித்தம் இரண்டு காட்டுப்புறாக்களையாவது, இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஒன்றைப் பாவநிவாரண பலியாகவும் மற்றொன்றைச் சர்வாங்க தகனபலியாகவும், கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவரக்கடவன்” என்று திருச்சட்டம் குறிப்பிட்டது. (வசனம் 7) இது, யெகோவாவின் கனிவையும் கரிசனையையும் படம்பிடித்துக் காட்டியது. இந்த வசனத்தில், “அவனுக்குச் சக்தியில்லாதிருந்தால்” என்று குறிப்பிடப்பட்டிருப்பதை, “அவனுக்கு வசதியில்லாதிருந்தால்” என்றும் குறிப்பிடலாம். ஓர் இஸ்ரவேலர் ஆட்டைப் பலிசெலுத்த முடியாதளவுக்கு மிகுந்த வறுமையில் இருந்தால், அவருடைய வசதிக்கேற்ப இரண்டு காட்டுப்புறாக்களையோ இரண்டு புறாக்குஞ்சுகளையோ பலிசெலுத்த அனுமதிக்கப்பட்டார்; யெகோவா அதைச் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டார்.
w09 10/1 பக். 32 பாரா 4
கடவுள் நம் வரம்புகளைப் புரிந்துகொள்கிறார்
ஒருவேளை, அந்த இரண்டு பறவைகளைக்கூட பலிசெலுத்த அவருக்கு வசதியில்லாவிட்டால்? ‘பாவநிவாரணத்துக்காக ஒரு எப்பா அளவான [எட்டு அல்லது ஒன்பது கிண்ணங்கள்] மெல்லிய மாவிலே பத்தில் ஒரு பங்கைத் தன் காணிக்கையாகக் கொண்டுவரும்படி’ திருச்சட்டம் குறிப்பிட்டது. (வசனம் 11) பரம ஏழைகளுக்கு யெகோவா விதிவிலக்கு அளித்து, இரத்தமில்லாத பாவநிவாரண பலியைச் செலுத்த அனுமதித்தார். ஆகவே, இஸ்ரவேலில், பாவநிவிர்த்தி செய்துகொள்ளும் வாய்ப்பை அல்லது கடவுளோடு சமாதானமாகும் பாக்கியத்தைப் பெறுவதற்கு ஏழ்மை எவ்விதத்திலும் தடையாக இருக்கவில்லை.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
உண்மையாக இருந்தவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்
14 உங்களாலும் யெகோவாவுக்கு உண்மையாக இருக்க முடியும். அதோடு, மற்றவர்களிடம் கனிவாக நடந்துகொள்வதன் மூலம் அவர்களிடமும் உண்மையாக இருக்க முடியும். உதாரணத்துக்கு ஒரு சகோதரர் பெரிய தவறை செய்துவிடுகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவர் அதைச் செய்ததற்கான அத்தாட்சி உங்களிடம் இருக்கிறது. அவருக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம். அதுவும் அவர் உங்களுடைய நெருங்கிய நண்பராக அல்லது குடும்ப அங்கத்தினராக இருந்தால் அவருக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் யெகோவாவுக்கு உண்மையாக இருப்பதுதான் ரொம்ப முக்கியம் என்று உங்களுக்கு தெரியும். ஒருவேளை அவர் செய்த தவறை நீங்கள் மூடிமறைத்தால் யெகோவாவுக்கு உண்மையாக இருக்கிறீர்கள் என்று சொல்ல முடியுமா? நிச்சயமாக முடியாது! அந்த சமயத்தில் நாத்தானைப் போல் கனிவாக நடந்துகொள்ளுங்கள். அதேசமயம் உறுதியாக இருங்கள். மூப்பர்களிடம் சீக்கிரமாக உதவி கேட்கும்படி அந்த சகோதரரிடம் சொல்லுங்கள். அவர் அப்படிக் கேட்கவில்லை என்றால் நீங்களே போய் மூப்பர்களிடம் சொல்லுங்கள். இப்படிச் செய்யும்போது நீங்கள் யெகோவாவுக்கு உண்மையாக இருப்பீர்கள். அதேசமயம் அந்த சகோதரரிடமும் கனிவாக நடந்துகொள்வீர்கள். ஏனென்றால் அந்த சகோதரர் மறுபடியும் யெகோவாவோடு நெருங்கிய பந்தத்தை அனுபவிக்க மூப்பர்கள் அவருக்கு உதவி செய்வார்கள். அவர்கள் அவரை அன்பாகவும் சாந்தமாகவும் திருத்துவார்கள்.—லேவியராகமம் 5:1; கலாத்தியர் 6:1-ஐ வாசியுங்கள்.
it-1-E பக். 1130 பாரா 2
பரிசுத்தத்தன்மை
மிருகங்களும் விளைபொருள்களும். முதலில் பிறக்கிற காளைக் கன்று, செம்மறியாட்டுக் கடாக் குட்டி, வெள்ளாட்டுக் கடாக் குட்டி ஆகியவை யெகோவாவுக்குப் பரிசுத்தமானதாக இருந்ததால், அவற்றை இஸ்ரவேலர்களால் மீட்க முடியாது. அவற்றை அவர்கள் பலி செலுத்த வேண்டியிருந்தது. அந்த பலிகளில் ஒரு பங்கு, தங்களைப் பரிசுத்தப்படுத்திக் கொண்ட குருமார்களுக்குக் கிடைத்தது. (எண் 18:17-19) பரிசுத்தமான இடத்தின் சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்ட எல்லா பலிகளையும் காணிக்கைகளையும் போலவே, முதல் விளைச்சலும் பத்திலொரு பாகமும் பரிசுத்தமானவை. (யாத் 28:38) யெகோவாவுக்குப் பரிசுத்தமானதாக இருக்கிறவற்றை, யாரும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளவோ அசுத்தமான விதத்தில் பயன்படுத்தவோ கூடாது. பத்திலொரு பாகம் சம்பந்தமான சட்டம் அதற்கு ஒரு உதாரணம். ஒருவர் கோதுமையில் பத்திலொரு பாகத்தைத் தனியாக எடுத்துவைத்திருப்பதாக நினைத்துக்கொள்ளுங்கள். பிறகு, அவரோ அவருடைய வீட்டில் ஒருவரோ தெரியாத்தனமாக அதிலிருந்து கொஞ்சத்தை எடுத்து சமைத்துவிட்டால் அவர் பரிசுத்த காரியங்கள் சம்பந்தமாக கடவுள் கொடுத்த சட்டத்தை மீறிவிட்டார் என்று அர்த்தம். அவர் அதற்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும். எந்தக் குறையுமில்லாத செம்மறியாட்டுக் கடாவைப் பலியாகக் கொடுப்பதோடு, அதன் மதிப்பில் ஐந்திலொரு பாகத்தைச் சேர்த்து கொடுக்க வேண்டும். இப்படி, யெகோவாவுக்குச் சொந்தமான பரிசுத்த காரியங்களுக்கு அதிக மதிப்பு கொடுக்கப்பட்டது.—லேவி 5:14-16.
நவம்பர் 23-29
பைபிளில் இருக்கும் புதையல்கள் | லேவியராகமம் 6-7
“நன்றி தெரிவிப்பது”
லேவியராகமப் புத்தகம் சொல்லித்தரும் பாடங்கள்
9 இரண்டாவது பாடம்: நம் உள்ளத்தில் நன்றி பொங்குவதால் நாம் யெகோவாவுக்குச் சேவை செய்கிறோம். இஸ்ரவேலர்களுடைய உண்மை வழிபாட்டின் இன்னொரு முக்கிய அம்சமாக இருந்த சமாதான பலிகளைப் பற்றி ஆராய்ந்து பார்க்கும்போது, நம்மால் இந்தப் பாடத்தைக் கற்றுக்கொள்ள முடியும். (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) “நன்றி தெரிவிக்கும்” பலியாக இஸ்ரவேலர்கள் சமாதான பலிகளைச் செலுத்தினார்கள் என்று லேவியராகமப் புத்தகத்திலிருந்து கற்றுக்கொள்கிறோம். (லேவி. 7:11-13, 16-18) கட்டாயத்தினால் அல்ல, சொந்த விருப்பத்தால்தான் இஸ்ரவேலர்கள் அந்தப் பலிகளைச் செலுத்தினார்கள். யெகோவாமீது இருந்த அன்பால் மனப்பூர்வமாக அவற்றைச் செலுத்தினார்கள். பலி செலுத்தப்பட்ட மிருகத்தின் இறைச்சியை, பலி செலுத்திய இஸ்ரவேலரும் அவருடைய குடும்பத்தாரும் குருமார்களும் சாப்பிட்டார்கள். ஆனால், அந்த இறைச்சியின் சில பாகங்கள் யெகோவாவுக்கு மட்டும் கொடுக்கப்பட்டன. எந்தெந்த பாகங்கள் அப்படிக் கொடுக்கப்பட்டன?
கடவுளுக்கு உகந்த பலிகள்
15 மனமுவந்து அளிக்கப்பட்ட மற்றொன்று சமாதான பலி ஆகும். இது லேவியராகமம் மூன்றாம் அதிகாரத்தில் விவரிக்கப்படுகிறது. “சமாதானத்திற்காக செலுத்தும் காணிக்கை” எனவும் இதன் பெயரை மொழிபெயர்க்கலாம். எபிரெயுவில், “சமாதானம்” என்ற வார்த்தை, போர் அல்லது அமளி இல்லாமல் இருப்பதை மட்டுமே அர்த்தப்படுத்தவில்லை. “பைபிளில் இவ்வார்த்தை இதையும் குறிக்கிறது, கடவுளுடன் சமாதான நிலையில் அல்லது உறவில் இருப்பது, செழுமை, மகிழ்ச்சி, சந்தோஷம் ஆகியவற்றையும் குறிக்கிறது” என்று ஸ்டடீஸ் இன் த மொசேயிக் இன்ஸ்டிட்யூஷன்ஸ் என்ற புத்தகம் குறிப்பிடுகிறது. ஆகவே, கடவுளைச் சாந்தப்படுத்தி அவருடன் சுமுகமாவதற்காக சமாதான பலிகள் செலுத்தப்படவில்லை. மாறாக, கடவுளால் அங்கீகரிக்கப்படுவோர் தங்கள் ஆசீர்வாதமிக்க சமாதான நிலைக்கு நன்றியை அல்லது போற்றுதலைத் தெரிவிப்பதற்கு அவற்றை செலுத்தினர். இரத்தமும் கொழுப்பும் யெகோவாவுக்குச் செலுத்தப்பட்ட பின்பு, ஆசாரியர்களும் பலி செலுத்தியவரும் அந்தப் பலியில் கொஞ்சத்தை புசித்தனர். (லேவியராகமம் 3:17; 7:16-21; 19:5-8) அடையாள அர்த்தத்தில், பலி செலுத்தியவரும், ஆசாரியர்களும், யெகோவா தேவனும் சேர்ந்து உணவைப் புசித்தனர்; அது, அவர்கள் மத்தியில் நிலவும் சமாதான உறவை அருமையாக படம்பிடித்துக் காட்டியது.
யெகோவாவுக்குப் பிரியமான துதியின் பலிகள்
8 பலி செலுத்துபவருக்கும் தராதரங்கள் இருந்தனவா? யெகோவாவுக்கு முன்பாக வரும் எவரும் சுத்தமாகவும் தீட்டுப்படாமலும் இருக்க வேண்டும் என்று நியாயப்பிரமாணம் குறிப்பிட்டது. ஏதோ காரணத்தினால் ஒருவர் தீட்டுப்பட்டிருந்தால், யெகோவாவுக்கு முன்பாக சுத்தமான நிலையைக் காத்துக்கொள்ள முதலாவது அவர் பாவநிவாரண பலியை அல்லது குற்றநிவாரண பலியை செலுத்த வேண்டும். அப்போதுதான் அவரது சர்வாங்க தகனபலியை அல்லது சமாதானபலியை கடவுள் ஏற்றுக்கொள்வார். (லேவியராகமம் 5:1-6, 15, 17) ஆகையால், எப்போதும் யெகோவாவுக்கு முன்பாக சுத்தமான நிலையைக் காத்துக்கொள்வது எந்தளவுக்கு முக்கியம் என்பதை நாம் மதித்துணருகிறோமா? கடவுள் நம் வணக்கத்தை ஏற்றுக்கொள்ள வேண்டுமென விரும்பினால், கடவுளுடைய சட்டங்களை மீறி நடக்கையில் உடனடியாக நம்மை திருத்திக் கொள்ள வேண்டும். இதில் நமக்கு உதவ ‘சபையின் மூப்பர்களையும்,’ “நம்முடைய பாவங்களை நிவிர்த்திசெய்கிற கிருபாதாரபலி”யாக சேவிக்கும் இயேசு கிறிஸ்துவையும் கடவுள் ஏற்பாடு செய்திருக்கிறார். இவர்களின் உதவியை உடனடியாக நாடினால் நமக்கு நன்மையே.—யாக்கோபு 5:14; 1 யோவான் 2:1, 2.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-1-E பக். 833 பாரா 1
நெருப்பு
வழிபாட்டுக் கூடாரத்திலும் ஆலயத்திலும். வழிபாட்டுக் கூடாரத்திலும், பிற்பாடு ஆலயத்திலும் வணக்கத்துக்காக நெருப்பு பயன்படுத்தப்பட்டது. தலைமைக் குரு ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் தூபபீடத்தில் தூபப்பொருளை எரிக்க வேண்டியிருந்தது. (யாத் 30:7, 8) கடவுள் கொடுத்த சட்டத்தின்படி, தகன பலிக்கான பலிபீடத்தில் நெருப்பு எரிந்துகொண்டே இருக்க வேண்டும். (லேவி 6:12, 13) கடவுள்தான் பலிபீடத்தில் முதன்முதலில் நெருப்பை அற்புதமாக மூட்டிவிட்டார் என்று யூத பாரம்பரியம் சொல்கிறது. இந்தக் கருத்தை நிறைய பேர் நம்பினாலும், இதற்கான ஆதாரம் எதுவும் பைபிளில் இல்லை. மோசேக்கு யெகோவா ஆரம்பத்தில் கொடுத்த ஆலோசனைப்படி, பலிபீடத்தில் பலியை வைப்பதற்கு முன், “ஆரோனின் மகன்கள் பலிபீடத்தின் மேல் தணல் [அதாவது, நெருப்பு] போட்டு அதன்மேல் விறகுக் கட்டைகளை அடுக்கி வைக்க வேண்டும்.” (லேவி 1:7, 8) குருமார்களை முதன்முதலில் நியமித்து அதற்கான பலிகள் செலுத்தப்பட்ட பிறகுதான், யெகோவாவிடமிருந்து நெருப்பு வந்து பலிபீடத்தில் மீதியிருந்தவற்றை விழுங்கியது. இந்த நெருப்பு, வழிபாட்டுக் கூடாரத்துக்கு மேலிருந்த மேகத் தூணிலிருந்து வந்திருக்கலாம். பலிபீடத்திலுள்ள விறகுகளைத் தீமூட்டி விடுவதன் மூலம் அல்ல, ‘பலிபீடத்தின் மேலிருந்த தகன பலியையும் கொழுப்புத் துண்டுகளையும் விழுங்கியதன்’ மூலம்தான் இது அற்புதமாக வந்த நெருப்பு என்பது, தெளிவாகத் தெரிந்தது. அதற்குப் பின், பலிபீடத்தில் ஏற்கெனவே இருந்த நெருப்பும் கடவுளிடமிருந்து வந்த நெருப்பும் சேர்ந்து பலிபீடத்தில் தொடர்ந்து எரிந்திருக்கலாம். (லேவி 8:14–9:24) அதேபோல், ஆலய அர்ப்பணிப்பின்போது சாலொமோன் ஜெபம் செய்து முடித்தவுடனே, யெகோவாவிடமிருந்து வந்த அற்புதமான நெருப்பு பலிகளை விழுங்கியது.—2நா 7:1; அற்புதமான நெருப்பைப் பயன்படுத்தி தன்னுடைய ஊழியர்கள் செலுத்திய பலிகளை யெகோவா ஏற்றுக்கொண்டதற்கான மற்ற உதாரணங்களை இந்த வசனங்களில் பாருங்கள்: நியா 6:21; 1ரா 18:21-39; 1நா 21:26.
si பக். 27 பாரா 15
பைபிள் புத்தக எண் 3—லேவியராகமம்
15 (3) எதேச்சையாக செய்த பாவங்களுக்காக, அல்லது தவறுதலாக செய்துவிட்ட பாவங்களுக்காக பாவநிவாரண பலி தேவைப்படுகிறது. எந்த மிருகம் பலிசெலுத்தப்பட வேண்டுமென்பது, யாருடைய பாவத்திற்காக பரிகாரம் செய்யப்படுகிறது என்பதன் பேரில்தான் சார்ந்துள்ளது. அதாவது, ஆசாரியனுடையதா, முழு ஜனத்தாருடையதா, பிரபுவினுடையதா அல்லது சாதாரண மனிதனுடையதா என்பதன் பேரில்தான் சார்ந்துள்ளது. தனி நபர்கள் தாங்களாக விரும்பி செலுத்தும் தகன மற்றும் சமாதான பலிகளைப் போலிராமல், பாவநிவாரண பலி கட்டாய பலியாக உள்ளது.—4:1-35; 6:24-30.
நவம்பர் 30–டிசம்பர் 6
பைபிளில் இருக்கும் புதையல்கள் | லேவியராகமம் 8-9
“யெகோவாவின் ஆசீர்வாதத்துக்கு அத்தாட்சி”
it-1-E பக். 1207
குருமார்களை நியமித்தல்
ஆரோனையும் அவருடைய மகன்களான நாதப், அபியூ, எலெயாசார், இத்தாமார் ஆகியவர்களையும் பிரகாரத்திலுள்ள செம்புத் தொட்டியிலிருந்த தண்ணீரில் மோசே குளிக்க வைத்தார் (அல்லது, குளிக்கும்படி சொன்னார்). பிறகு, தலைமைக் குருவுக்கான விசேஷ உடைகளை ஆரோனுக்குப் போட்டுவிட்டார். (எண் 3:2, 3) அவர் போட்டிருந்த அழகான உடை அவருடைய சேவைக்கான தகுதிகளையும் பொறுப்புகளையும் அடையாளப்படுத்தியது. அடுத்ததாக, மோசே வழிபாட்டுக் கூடாரத்தையும் அதிலுள்ள எல்லா சாமான்களையும், பாத்திரங்களையும் தகன பலிக்கான பலிபீடத்தையும் தொட்டியையும் அதோடு சம்பந்தப்பட்ட பாத்திரங்களையும் அபிஷேகம் செய்தார். இப்படிச் செய்வதன் மூலம் அவை புனிதப்படுத்தப்பட்டன. அதாவது, கடவுளுடைய சேவைக்காக மட்டுமே பயன்படுத்துவதற்காக ஒதுக்கி வைக்கப்பட்டன. கடைசியில், ஆரோனின் தலையில் எண்ணெய் ஊற்றி மோசே அபிஷேகம் செய்தார்.—லேவி 8:6-12; யாத் 30:22-33; சங் 133:2.
it-1-E பக். 1208 பாரா 8
குருமார்களை நியமித்தல்
எட்டாவது நாளில், குருமார்கள் குருத்துவ சேவைக்கு நியமிக்கப்பட்டார்கள். அந்தச் சேவையைத் தொடங்க அவர்கள் முற்றிலும் தயாராக இருந்தார்கள். அவர்கள் முதல்முறையாக, (மோசேயின் உதவி இல்லாமல்) இஸ்ரவேலர்களுக்காக பாவப் பரிகார பலிகளைச் செலுத்தி குருத்துவ சேவையை ஆரம்பித்தார்கள். இஸ்ரவேலர்களிடம் இயல்பாக இருந்த பாவத்துக்காக மட்டுமல்லாமல், பொன் கன்றுக்குட்டியைச் செய்து யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல் போனதற்காகவும் குருமார்கள் பாவப் பரிகாரம் செய்தார்கள். (லேவி 9:1-7; யாத் 32:1-10) அவர்கள் இந்தச் சேவையைச் செய்து முடித்த பிறகு, அதை ஏற்றுக்கொண்டதற்கு அடையாளமாக யெகோவா நெருப்பை வர வைத்தார். அந்த நெருப்பு, வழிபாட்டுக் கூடாரத்துக்கு மேலிருந்த மேகத் தூணிலிந்து வந்து பலிபீடத்தில் மீதியிருந்தவற்றை விழுங்கியது.—லேவி 9:23, 24.
லேவியராகமப் புத்தகம் சொல்லித்தரும் பாடங்கள்
13 நான்காவது பாடம்: தன்னுடைய அமைப்பின் பூமிக்குரிய பாகத்தை யெகோவா ஆசீர்வதித்துவருகிறார். இதைக் கொஞ்சம் கற்பனை செய்யுங்கள்: கி.மு. 1512, சீனாய் மலையடிவாரம்! வழிபாட்டுக் கூடாரம் அப்போதுதான் அமைக்கப்பட்டிருக்கிறது. (யாத். 40:17) ஆரோனையும் அவருடைய மகன்களையும் குருமார்களாக நியமிக்கும் வேலையை மோசே முன்னின்று செய்துகொண்டிருக்கிறார். முதல் தடவையாக குருமார்கள் தங்களுக்காகப் பலிகளைச் செலுத்துகிறார்கள். இதைப் பார்க்க இஸ்ரவேல் தேசத்தார் எல்லாரும் கூடிவந்திருக்கிறார்கள். (லேவி. 9:1-5) அந்த ஜனங்களை ஆரோனும் மோசேயும் ஆசீர்வதிக்கிறார்கள். அப்போது, யெகோவாவிடமிருந்து நெருப்பு வந்து பலிபீடத்தின் மேல் மீதியிருந்த பலிகளை மொத்தமாக விழுங்குகிறது. இதன் மூலம், புதிதாக ஏற்படுத்தப்பட்ட குருமார் ஏற்பாட்டின் மேல் தன்னுடைய அங்கீகாரம் இருப்பதை யெகோவா காட்டுகிறார்.—லேவியராகமம் 9:23, 24-ஐ வாசியுங்கள்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
நாம் ஏன் பரிசுத்தமாக இருக்க வேண்டும்?
6 இஸ்ரவேலில் இருந்த குருமார்கள் சுத்தமாக இருக்க வேண்டும் என்று யெகோவா சொன்னார். இன்று, நாமும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார். அதனால்தான் நாம் எல்லாவற்றிலும் சுத்தமாக இருக்கிறோம்; சுத்தமான துணிமணிகளை போட்டுக்கொள்கிறோம், நம்முடைய ராஜ்ய மன்றங்களையும் சுத்தமாக வைக்கிறோம். நம்மோடு பைபிள் படிக்கிறவர்கள் இதை எல்லாம் கவனிக்கிறார்கள். அதோடு, நாம் ‘இருதயத்திலும்’ சுத்தமானவர்களாக இருக்க வேண்டும் என்று யெகோவா விரும்புகிறார். (சங்கீதம் 24:3, 4-ஐ வாசியுங்கள்; ஏசா. 2:2, 3.) அதனால், நாம் யெகோவாவுக்கு பிரியமாக வாழ்கிறோமா என்று நம்மையே அடிக்கடி கேட்டுக்கொள்ள வேண்டும். தேவையான மாற்றங்களையும் நாம் செய்ய வேண்டும். (2 கொ. 13:5) உதாரணமாக, ஞானஸ்நானம் எடுத்த ஒருவர் ஆபாச காட்சிகளை வேண்டுமென்றே பார்த்தால், ‘யெகோவாவுக்கு முன்னாடி நான் பரிசுத்தமா இருக்கிறேனா?’ என்று தன்னையே கேட்டுக்கொள்ள வேண்டும். அந்த பழக்கத்தை விட்டுவிட மூப்பர்களிடம் உதவி கேட்க வேண்டும்.—யாக். 5:14.
it-2-E பக். 437 பாரா 3
மோசே
இஸ்ரவேலர்களோடு யெகோவா செய்த திருச்சட்ட ஒப்பந்தத்துக்கு மோசே மத்தியஸ்தராக இருந்தார். புதிய ஒப்பந்தத்தின் மத்தியஸ்தரான இயேசு கிறிஸ்துவைத் தவிர வேறு எந்த மனிதனுமே மோசேயைப் போல கடவுளோடு அந்தளவு நெருக்கமான ஸ்தானத்தில் இருக்கவில்லை. மிருக பலிகளின் இரத்தத்தை ஒப்பந்தப் புத்தகத்தின் மீது மோசே தெளித்தார். இது இரண்டு தரப்பினருக்கு இடையே, அதாவது யெகோவாவுக்கும் மக்களுக்கும் (மக்களின் சார்பாகப் பேசும் பெரியோர்களுக்கும்) இடையே செய்யப்பட்ட ஒப்பந்தத்துக்கு அடையாளமாக இருந்தது. அவர் ஒப்பந்தப் புத்தகத்திலிருந்து ஜனங்களுக்கு வாசித்துக்காட்டினார். அப்போது அவர்கள், “யெகோவா சொன்ன எல்லாவற்றையும் நாங்கள் செய்வோம், அவருடைய பேச்சைக் கேட்டு நடப்போம்“ என்று சொன்னார்கள். (யாத் 24:3-8; எபி 9:19) கடவுள் கொடுத்த மாதிரியின்படியே வழிபாட்டுக் கூடாரம் அமைக்கப்படுவதையும் அதற்குத் தேவையான பொருள்கள் செய்யப்படுவதையும் மேற்பார்வை செய்யும் பாக்கியம் மத்தியஸ்தரான மோசேக்குக் கிடைத்தது. அதோடு, குருமார்களை நியமிப்பது, வழிபாட்டுக் கூடாரத்தையும் தலைமைக் குருவான ஆரோனையும் விசேஷமான முறையில் தயாரிக்கப்பட்ட தைலத்தால் அபிஷேகம் செய்வது போன்ற அருமையான வாய்ப்புகளும் அவருக்குக் கிடைத்தன. பிறகு, புதிதாக நியமிக்கப்பட்ட குருமார்கள் முதன்முதலில் செய்த சேவைகளை மேற்பார்வை செய்யும் பாக்கியமும் அவருக்குக் கிடைத்தது.—யாத் அதி 25-29; லேவி அதி 8, 9.