பாடம் 44
எல்லா கொண்டாட்டங்களும் கடவுளுக்குப் பிடிக்குமா?
வாழ்க்கையில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் இருக்க வேண்டுமென்று நாம் நினைப்பது சகஜம்தான். சொல்லப்போனால், நாம் அப்படி சந்தோஷமாக வாழ வேண்டும் என்றுதான் யெகோவா விரும்புகிறார். ஆனால், எல்லா கொண்டாட்டங்களும் விழாக்களும் பண்டிகைகளும் யெகோவாவுக்குப் பிடிக்குமா? யெகோவாமேல் அன்பு வைத்திருப்பதை இந்த விஷயத்தில் நாம் எப்படிக் காட்டலாம்?
1. ஏன் நிறைய கொண்டாட்டங்கள் யெகோவாவுக்குப் பிடிப்பதில்லை?
நிறைய கொண்டாட்டங்கள் பைபிள் போதனைகளுக்கு எதிராக இருக்கின்றன அல்லது பொய் மதங்களிலிருந்து வந்திருக்கின்றன. சில கொண்டாட்டங்கள் ஆவியுலகத் தொடர்போடு அல்லது ஆத்துமா அழியாது என்ற நம்பிக்கையோடு சம்பந்தப்பட்டிருக்கின்றன. இன்னும் சில கொண்டாட்டங்கள் மூடநம்பிக்கையோடு அல்லது அதிர்ஷ்டத்தோடு சம்பந்தப்பட்டிருக்கின்றன. (ஏசாயா 65:11) இதெல்லாம் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், “பிரிந்துபோங்கள், அசுத்தமானதைத் தொடாதீர்கள்” என்று யெகோவா எச்சரிக்கிறார்.—2 கொரிந்தியர் 6:17.a
2. மனிதர்களை அளவுக்கு அதிகமாகக் கவுரவப்படுத்துகிற கொண்டாட்டங்களைப் பற்றி யெகோவா என்ன நினைக்கிறார்?
‘அற்ப மனுஷனை . . . நம்புவது’ ஆபத்தானது என்று யெகோவா எச்சரிக்கிறார். (எரேமியா 17:5-ஐ வாசியுங்கள்.) சில கொண்டாட்டங்கள் அரசியல் தலைவர்களை, ராணுவ வீரர்களை, அல்லது தேசியச் சின்னங்களைக் கவுரவப்படுத்துகின்றன. நிறைய நாடுகளில் சுதந்திர தினமும் கொண்டாடப்படுகிறது. (1 யோவான் 5:21) அரசியல் அல்லது சமூகநல அமைப்புகளைக் கவுரவப்படுத்துகிற கொண்டாட்டங்களும் இருக்கின்றன. ஆனால், ஒரு தனி மனிதனையோ ஒரு அமைப்பையோ நாம் அளவுக்குமீறி கவுரவப்படுத்தினால் யெகோவா என்ன நினைப்பார்? அதுவும் அவருக்குப் பிடிக்காத விஷயங்களை அவர்கள் செய்கிறார்கள் என்றால்?
3. கொண்டாட்டங்களில் கும்மாளம் போடுவதை யெகோவா விரும்புவாரா?
‘குடித்து வெறிப்பதையும், குடித்துக் கும்மாளம் போடுவதையும், போட்டி போட்டுக்கொண்டு குடிப்பதையும்’ பைபிள் கண்டனம் செய்கிறது. (1 பேதுரு 4:3) சில கொண்டாட்டங்களில் ஒழுக்கமும் கட்டுப்பாடும் காற்றில் பறந்துவிடுகின்றன. நாம் யெகோவாவின் நண்பர்களாக இருக்க வேண்டுமென்றால், அப்படிப்பட்ட ஒழுக்கங்கெட்ட விஷயங்களிலிருந்து ஒரேயடியாக ஒதுங்கியிருக்க வேண்டும்.
ஆராய்ந்து பார்க்கலாம்!
கொண்டாட்டங்கள் சம்பந்தப்பட்ட விஷயத்தில் நீங்கள் எப்படி யெகோவாவுக்குப் பிடித்த முடிவுகளை எடுக்கலாம் என்று பார்க்கலாம்.
4. யெகோவாவை அவமதிக்கும் கொண்டாட்டங்களை ஒதுக்கிவிடுங்கள்
எபேசியர் 5:10-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
ஒரு கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதற்குமுன் எதை நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும்?
உங்கள் பகுதியில் என்னென்ன கொண்டாட்டங்கள் பிரபலமாக இருக்கின்றன?
அந்தக் கொண்டாட்டங்கள் யெகோவாவுக்குப் பிடிக்குமா?
உதாரணத்துக்கு, பிறந்தநாளைக் கொண்டாடுவது கடவுளுக்குப் பிடிக்குமா என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? யெகோவாவை வணங்கிய யாருமே பிறந்தநாளைக் கொண்டாடியதாக பைபிள் சொல்வதில்லை. ஆனால், அவரை வணங்காத இரண்டு பேர் அதைக் கொண்டாடியதாகச் சொல்கிறது. ஆதியாகமம் 40:20-22-ஐயும் மத்தேயு 14:6-10-ஐயும் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
இந்த இரண்டு பிறந்தநாள் கொண்டாட்டங்களிலும் இருக்கும் பொதுவான விஷயங்கள் என்ன?
இந்தப் பதிவுகளை வைத்துப் பார்க்கும்போது, பிறந்தநாள் கொண்டாட்டங்களைப் பற்றி யெகோவா என்ன நினைக்கிறார் என்று தெரிகிறது?
ஆனாலும், ‘நான் எந்தெந்த கொண்டாட்டத்துல கலந்துக்குறேனு கடவுள் பார்த்துட்டா இருக்கப்போறாரு?’ என்று நீங்கள் யோசிக்கலாம். யாத்திராகமம் 32:1-8-ஐப் படியுங்கள். பிறகு, வீடியோவைப் பார்த்துவிட்டு, கீழே இருக்கும் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்.
ஒரு கொண்டாட்டம் யெகோவாவுக்குப் பிடிக்குமா என்று உறுதி செய்துகொள்வது ஏன் முக்கியம்?
அதை எப்படிச் செய்யலாம்?
ஒரு கொண்டாட்டம் கடவுளுக்குப் பிடிக்குமா என்று கண்டுபிடிக்க...
அது பைபிள் போதனைகளுக்கு எதிராக இருக்கிறதா? அது எப்படி ஆரம்பமானது என்று கண்டுபிடியுங்கள்.
அது தனி மனிதனையோ அமைப்பையோ தேசியச் சின்னத்தையோ அளவுக்குமீறி கவுரவப்படுத்துகிறதா? நாம் யெகோவாவையே கவுரவப்படுத்துகிறோம். பிரச்சினைகளை அவர்தான் தீர்த்துவைப்பார் என்று நம்புகிறோம்.
கொண்டாட்டத்தில் நடக்கிற விஷயங்கள் பைபிளின் ஒழுக்கநெறிகளுக்கு எதிராக இருக்கிறதா? ஒழுக்கங்கெட்ட விஷயங்களை நாம் ஒதுக்க வேண்டும்.
5. மற்றவர்கள் உங்கள் நம்பிக்கையை மதிக்கும்படி நடந்துகொள்ளுங்கள்
யெகோவாவுக்குப் பிடிக்காத கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளச் சொல்லி மற்றவர்கள் வற்புறுத்தும்போது, முடியாது என்று சொல்வது கஷ்டம்தான். ஆனால், உங்கள் நம்பிக்கையைப் பற்றி பொறுமையாகவும் சாதுரியமாகவும் எடுத்துச் சொல்லுங்கள். இதை எப்படிச் செய்யலாம் என்று ஒரு உதாரணத்தின் மூலம் தெரிந்துகொள்ள, வீடியோவைப் பாருங்கள்.
மத்தேயு 7:12-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
யெகோவாவை வணங்காத உங்கள் குடும்பத்தாரிடம் ஒரு பண்டிகையைக் கொண்டாடக் கூடாது என்று நீங்கள் சொல்லலாமா? இந்த வசனத்திலிருந்து என்ன தெரிந்துகொண்டீர்கள்?
நீங்கள் கொண்டாட மாட்டீர்கள் என்றாலும் உங்கள் குடும்பத்தாரை நேசிப்பதையும் மதிப்பதையும் எப்படி அவர்களுக்குப் புரியவைக்கலாம்?
6. நம் சந்தோஷம் கடவுளுக்கும் சந்தோஷம்
குடும்பத்தாரோடும் நண்பர்களோடும் சேர்ந்து நாம் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்று யெகோவா விரும்புகிறார். பிரசங்கி 8:15-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
நாம் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்று யெகோவா விரும்புவதை இந்த வசனம் எப்படிக் காட்டுகிறது?
யெகோவா, தன் மக்கள் ஒன்றுசேர்ந்து சந்தோஷமாகவும் ஜாலியாகவும் இருக்க வேண்டுமென்று விரும்புகிறார். சர்வதேச மாநாடுகளில் இதை நாம் கண்ணாரப் பார்க்க முடியும். வீடியோவைப் பாருங்கள்.
கலாத்தியர் 6:10-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
மற்றவர்களுக்கு ‘நன்மை செய்வதற்காக’ நாம் பண்டிகைகளைக் கொண்டாட வேண்டுமா?
பண்டிகைக்காக ஒரு பரிசைக் கொடுத்தாக வேண்டுமே என்று கொடுப்பது சந்தோஷம் தருமா அல்லது எப்போது வேண்டுமானாலும் மனதாரக் கொடுப்பது சந்தோஷம் தருமா?
நிறைய யெகோவாவின் சாட்சிகள் அவ்வப்போது தங்கள் பிள்ளைகளுக்கென்றே சில பொழுதுபோக்குகளை ஏற்பாடு செய்கிறார்கள். பரிசுகளையும் கொடுத்து ஆச்சரியப்படுத்துகிறார்கள். உங்கள் பிள்ளைகளுக்காக நீங்கள் விசேஷமாக என்னென்ன செய்யலாம்?
சிலர் இப்படிச் சொல்கிறார்கள்: “ஒரு கொண்டாட்டம் எப்படி ஆரம்பிச்சிருந்தா என்ன? குடும்பத்தோடயும் ஃப்ரெண்ட்ஸோடயும் ஜாலியா இருக்குறதுதான முக்கியம்!”
நீங்கள் என்ன சொல்வீர்கள்?
சுருக்கம்
குடும்பத்தாரோடும் நண்பர்களோடும் சேர்ந்து நாம் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்று யெகோவா விரும்புகிறார். அதேசமயத்தில், அவருக்குப் பிடிக்காத கொண்டாட்டங்களைத் தவிர்க்க வேண்டுமென்று சொல்கிறார்.
ஞாபகம் வருகிறதா?
ஒரு கொண்டாட்டம் யெகோவாவுக்குப் பிடிக்குமா பிடிக்காதா என்று கண்டுபிடிக்க என்ன கேள்விகளை நாம் கேட்டுக்கொள்ளலாம்?
நாம் ஏன் ஒரு கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதில்லை என்று குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் எப்படிப் புரிய வைக்கலாம்?
நாம் சந்தோஷமாகவும் ஜாலியாகவும் இருக்க வேண்டுமென்று யெகோவா நினைப்பது நமக்கு எப்படித் தெரியும்?
அலசிப் பாருங்கள்
என்னென்ன கொண்டாட்டங்களில் கிறிஸ்தவர்கள் கலந்துகொள்ள மாட்டார்கள் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
“யெகோவாவின் சாட்சிகள் ஏன் சில பண்டிகைகளைக் கொண்டாடுவதில்லை?” (ஆன்லைன் கட்டுரை)
என்ன நான்கு காரணங்களுக்காகப் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் கடவுளுக்குப் பிடிக்காது என்று தெரிந்துகொள்ளுங்கள்.
“யெகோவாவின் சாட்சிகள் ஏன் பிறந்தநாளைக் கொண்டாடுவதில்லை?” (ஆன்லைன் கட்டுரை)
யெகோவாவை நேசிக்கும் இளம் பிள்ளைகள், பண்டிகைகள் சமயத்தில் எப்படி ஞானமாக நடந்து அவரைச் சந்தோஷப்படுத்தலாம் என்று பாருங்கள்.
லட்சக்கணக்கான கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாடக் கூடாது என்று முடிவு செய்திருக்கிறார்கள். அதைப் பற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள்?
a பண்டிகை சமயங்களில் நாம் எப்படி நடந்துகொள்ளலாம்? பதில்: பின்குறிப்பு 5.