கிறிஸ்தவர்களே—நீங்கள் யார் என்பதில் பெருமிதம் கொள்ளுங்கள்!
“பெருமிதம் கொள்கிறவன் யெகோவாவில் பெருமிதம் கொள்ளட்டும்.”—1 கொரிந்தியர் 1:31, NW.
1. மதத்திடம் ஜனங்களுக்கு எப்படிப்பட்ட மனப்பான்மை இருப்பது தெளிவாகத் தெரிகிறது?
“அலட்சியவாதம்.” இந்த வார்த்தையை மத நடவடிக்கைகள் சம்பந்தமாக ஒரு குறிப்புரையாளர் பயன்படுத்தினார்; மதத்திடம் அநேகர் காட்டும் மனப்பான்மையை வருணிக்க அதைப் பயன்படுத்தினார். “மதத்தில் இன்று, மதம் சம்பந்தமாக அல்ல, ஆனால் ‘அலட்சியவாதம்’ என வருணிக்கப்படும் மனப்பான்மை சம்பந்தமாகவே மாபெரும் வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது” என்றார் அவர். அந்த வார்த்தையை மேலும் விவரிப்பவராய், “ஒருவர் தன் மதத்தில் ஈடுபாடில்லாதிருப்பதை அது குறிக்கிறது” என்றார். அநேகருக்கு “கடவுள் நம்பிக்கை இருக்கிறது . . . ; ஆனால் அவரிடம் ஈடுபாடில்லை” என அவர் குறிப்பிட்டார்.
2.(அ) ஆன்மீக விஷயத்தில் மக்களின் அலட்சிய போக்கு ஏன் அதிர்ச்சியளிப்பதில்லை? (ஆ) உண்மை கிறிஸ்தவர்கள் அலட்சியமாக இருப்பது ஏன் ஆபத்தானது?
2 இப்படிப்பட்ட அலட்சியப் போக்கைக் கண்டு பைபிள் மாணாக்கர் அதிர்ச்சியடைவதில்லை. (லூக்கா 18:8) ஏனெனில் மதத்தைப் பொறுத்தவரை இத்தகைய போக்கு எதிர்பார்க்கத்தக்கதே. ஆண்டாண்டு காலமாய் பொய் மதம் மனிதரைத் தவறாக வழிநடத்தி வந்திருக்கிறது, ஏமாற்றத்தையும் அளித்திருக்கிறது. (வெளிப்படுத்துதல் 17:15, 16) எனவே மதத்திடம் ஈடுபாடில்லாதிருக்கும் போக்கு எங்கும் நிலவுகிறது; இத்தகைய போக்கு உண்மை கிறிஸ்தவர்களுக்கு ஆபத்தானது. நம்முடைய நம்பிக்கையைக் குறித்து அலட்சிய மனப்பான்மை தலைதூக்கி, கடவுளைச் சேவிப்பதிலும் பைபிள் சத்தியத்திலும் உள்ள ஆர்வம் தணிந்துபோனால் விபரீத விளைவுகளைச் சந்திப்போம். அத்தகைய ஏனோதானோவென்ற மனப்பான்மையைக் குறித்து, அதாவது வெதுவெதுப்பாய் இருப்பதைக் குறித்து லவோதிக்கேயாவிலிருந்த முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களை இயேசு இவ்வாறு எச்சரித்தார்: ‘நீ குளிருமல்ல அனலுமல்ல; நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும். நீ வெதுவெதுப்பாயிருக்கிறாய்.’—வெளிப்படுத்துதல் 3:15-18.
நாம் யார் என்பதைப் புரிந்துகொள்ளுதல்
3. எந்தெந்த அம்சங்களில் கிறிஸ்தவர்கள் தங்களுடைய அடையாளத்தைக் குறித்து பெருமிதம் கொள்ளலாம்?
3 ஆன்மீகத்தில் அலட்சிய போக்கை தவிர்ப்பதற்கு, கிறிஸ்தவர்கள் தாங்கள் யார் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும், தங்களுடைய பிரத்தியேக அடையாளத்தைக் குறித்ததில் நியாயமான அளவில் பெருமிதம் கொள்ள வேண்டும். யெகோவாவின் ஊழியர்களாகவும் கிறிஸ்துவின் சீஷர்களாகவும், நம் அடையாளத்தைப் பற்றிய விவரிப்புகளை பைபிளில் காண்கிறோம். பிறரிடம் ‘சுவிசேஷத்தை’, அதாவது நற்செய்தியை அறிவிப்பதில் நாம் மும்முரமாக ஈடுபடும்போது யெகோவாவின் ‘சாட்சிகளாகவும்,’ ‘தேவனுக்கு உடன் வேலையாட்களாகவும்’ இருக்கிறோம். (ஏசாயா 43:10; 1 கொரிந்தியர் 3:9; மத்தேயு 24:14) நாம் ‘ஒருவரிலொருவர் அன்பாயிருக்கிற’ ஜனங்களாக இருக்கிறோம். (யோவான் 13:34) உண்மை கிறிஸ்தவர்களாகிய நாம், ‘நன்மை தீமையின்னதென்று பயிற்சியினால் பகுத்தறிகிறவர்களாய்’ இருக்கிறோம். (எபிரெயர் 5:14) இந்த ‘உலகத்திலே சுடர்களாக’ இருக்கிறோம். (பிலிப்பியர் 2:14) ‘புறஜாதியாருக்குள்ளே [நாம்] நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ள’ முயலுகிறோம்.—1 பேதுரு 2:12; 2 பேதுரு 3:11, 14.
4. யெகோவாவை வணங்கும் ஒருவர் தான் யார் அல்ல என்பதை எப்படித் தீர்மானிக்க முடியும்?
4 அதோடு, யெகோவாவின் உண்மை வணக்கத்தார் தாங்கள் யார் அல்ல என்பதையும் அறிந்திருக்கிறார்கள். தங்களுடைய தலைவரான இயேசு கிறிஸ்து இந்த உலகத்தின் பாகமாய் இல்லாதிருந்தது போல ‘அவர்களும் உலகத்தின் பாகமானவர்கள் அல்ல.’ (யோவான் 17:16, NW) ‘புத்தியில் அந்தகாரப்பட்டு தேவனுடைய ஜீவனுக்கு அந்நியராய் இருக்கும் புறஜாதிகளிடமிருந்து’ அவர்கள் விலகியிருக்கிறார்கள். (எபேசியர் 4:17, 18) இதனால், ‘அவபக்தியையும் லெளகிக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்த புத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாய் இவ்வுலகத்திலே ஜீவனம் பண்ணுகிறார்கள்.’—தீத்து 2:12.
5. ‘யெகோவாவில் பெருமிதம் கொள்ளும்படியான’ அறிவுரை எதை அர்த்தப்படுத்துகிறது?
5 நம்முடைய அடையாளத்தைத் தெளிவாகப் புரிந்திருப்பதும், சர்வலோக ஆட்சியாளரான யெகோவாவுடன் நமக்குள்ள பந்தமும் ‘அவரில் பெருமிதம் கொள்ள’ நம்மைத் தூண்டுகின்றன. (1 கொரிந்தியர் 1:31, NW) அது எப்படிப்பட்ட பெருமிதம்? உண்மை கிறிஸ்தவர்களாக நாம் யெகோவாவை நம் கடவுளாக ஏற்றுக்கொண்டிருப்பதில் பெருமிதம் கொள்கிறோம். பின்வரும் இந்த அறிவுரையை நாம் பின்பற்றுகிறோம்: “மேன்மை பாராட்டுகிறவன் [அதாவது பெருமிதம் கொள்கிறவன்] பூமியிலே கிருபையையும் நியாயத்தையும் நீதியையும் செய்கிற கர்த்தர் நான் என்று என்னை அறிந்து உணர்ந்திருக்கிறதைக் குறித்தே மேன்மை பாராட்டக்கடவன் [அதாவது பெருமிதப்படக்கடவன்].” (எரேமியா 9:24) கடவுளை அறிந்திருப்பதற்கும் பிறருக்கு உதவ அவர் நம்மை பயன்படுத்துவதற்கும் பாக்கியம் பெற்றிருப்பதால் நாம் ‘பெருமிதம் கொள்கிறோம்.’
ஆனால் ஒரு சவால்
6. கிறிஸ்தவர்களாக நாம் பெற்றிருக்கும் பிரத்தியேக அடையாளத்தைக் குறித்து எப்போதும் நினைவில் வைப்பது ஏன் சிலருக்குப் பெரும் பிரச்சினையாக இருந்திருக்கிறது?
6 கிறிஸ்தவர்களாக நாம் பெற்றிருக்கும் பிரத்தியேக அடையாளத்தை எப்போதும் நினைவில் வைத்திருப்பது எளிதல்ல என்பது ஒத்துக்கொள்ள வேண்டிய விஷயமே. கிறிஸ்தவ நெறியில் வளர்க்கப்பட்ட ஓர் இளைஞன், கொஞ்ச காலம் ஆன்மீக ரீதியில் பலவீனமடைந்தான்; அதைப் பற்றி இவ்வாறு கூறினான்: “நான் ஏன் யெகோவாவின் சாட்சியாக இருக்கிறேன் என்று சில சமயங்களில் எனக்கே புரியாமல் குழம்பியிருக்கிறேன். குழந்தையிலிருந்தே எனக்கு சத்தியம் கற்றுக்கொடுக்கப்பட்டது. சில சமயங்களில், மற்ற மதங்களைப் போல இதுவும் ஒன்று என நினைத்தேன்.” இந்த உலகத்தின் பொழுதுபோக்குகளும், மீடியாக்களும், கடவுள் வெறுக்கும் வாழ்க்கை முறையும் தங்களுடைய அடையாளத்தை செதுக்க சிலர் இடமளித்திருக்கலாம். (எபேசியர் 2:2, 3) இன்னும் சில கிறிஸ்தவர்கள் அவ்வப்போது தன்னம்பிக்கை இழந்து, தங்களுடைய மதிப்பீடுகளையும் இலட்சியங்களையும் மறுபரிசீலனை செய்யலாம்.
7. (அ) கடவுளுடைய ஊழியர்களுக்கு எப்படிப்பட்ட சுயபரிசோதனை பொருத்தமானது? (ஆ) ஆனால் என்ன செய்வது ஆபத்தானது?
7 அவ்வப்போது நம்மையே ஓரளவுக்கு துருவி ஆராய்வது தவறா? தவறே இல்லை. தங்களை எப்போதும் துருவி ஆராயும்படி கிறிஸ்தவர்களை அப்போஸ்தலன் பவுல் ஊக்குவித்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். “நீங்கள் விசுவாசமுள்ளவர்களோவென்று உங்களை நீங்களே சோதித்து அறியுங்கள்; உங்களை நீங்களே பரீட்சித்துப் பாருங்கள்” என அவர் ஊக்குவித்தார். (2 கொரிந்தியர் 13:5) இங்கே அவர், ஆன்மீக பலவீனம் ஏதேனும் நம்மிடம் தென்படுகிறதா என்பதைக் கண்டுபிடித்து அதை சரிசெய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை சமநிலையோடு எடுக்கும்படி உற்சாகப்படுத்தினார். ஒரு கிறிஸ்தவர், விசுவாசத்தில் நிலைத்திருப்பதை பரிசோதித்துப் பார்க்கையில் தன்னுடைய சொல்லும் செயலும் தன்னுடைய மத நம்பிக்கைக்கு ஏற்ப இருக்கிறதா என்பதைக் கண்டறிய வேண்டும். என்றாலும், தவறான விதத்தில் செய்யப்படும் சுயபரிசோதனை, யெகோவாவுடைய பந்தத்துடன் தொடர்பில்லாத அல்லது கிறிஸ்தவ சபைக்கு இணக்கமாயில்லாத வழிகளில் நாம் யார் என்பதைக் கண்டறியும்படி அல்லது பதில்களைத் தேடும்படி தூண்டினால் இது அர்த்தமற்றதாக இருக்கும், நம் ஆன்மீக அழிவுக்கு வழிநடத்தும்.a நம் ‘விசுவாசமாகிய கப்பலைச் சேதப்படுத்த’ நாம் ஒருபோதும் விரும்ப மாட்டோம்.—1 தீமோத்தேயு 1:19.
நமக்கும் பிரச்சினைகள் வரும்
8, 9. (அ) தனக்குத் தன்னம்பிக்கை இல்லாததை மோசே எப்படி வெளிக்காட்டினார்? (ஆ) தகுதியற்றவராக உணர்ந்த மோசேயிடம் யெகோவா என்ன சொன்னார்? (இ) யெகோவா அளித்துள்ள நம்பிக்கையூட்டும் வார்த்தைகள் உங்களை எப்படி உணரச் செய்கின்றன?
8 எப்போதாவது தன்னம்பிக்கையை இழந்துவிடும் கிறிஸ்தவர்கள் தங்களை எதற்கும் தகுதியற்றவர்களாக உணர வேண்டுமா? அப்படி உணருவது துளியும் சரியல்ல. மாறாக, அப்படிப்பட்ட உணர்ச்சிகள் ஒன்றும் புதிதல்ல என்பதை அறிந்து அவர்கள் ஆறுதல் பெறலாம். பூர்வத்தில் வாழ்ந்த கடவுளுடைய உண்மையுள்ள சாட்சிகளும் அத்தகைய பிரச்சினைகளை எதிர்ப்பட்டிருக்கிறார்கள். உதாரணத்திற்கு மோசேயை எடுத்துக்கொள்ளுங்கள்; அவர் மிகுந்த விசுவாசமும் பற்றுறுதியும் பக்தியும் உள்ளவராக இருந்தார். மலை போன்று பெரிய பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்ட போது, தன்னம்பிக்கை இல்லாமல், அதற்கு “நான் எம்மாத்திரம்” என்று கேட்டார். (யாத்திராகமம் 3:11) உண்மையில், ‘நான் ஒன்றுமேயில்லை!’ அல்லது ‘எனக்குத் தகுதியே இல்லை!’ என்றே அவர் நினைத்தார். அப்படி அவர் உணருவதற்கு அவருடைய பின்னணி காரணமாக இருந்திருக்கலாம்: அவர் அடிமைகளாயிருந்த ஜனத்தாரைச் சேர்ந்தவர். அந்த ஜனத்தாராகிய இஸ்ரவேலரால் புறக்கணிக்கப்பட்டவர். சரளமாகப் பேசத் தெரியாதவர். (யாத்திராகமம் 1:13, 14; 2:11-14; 4:10) எகிப்தியர் அருவருப்பாக கருதிய மேய்ப்பு வேலையை செய்தவர். (ஆதியாகமம் 46:34) எனவே, அடிமைகளாக இருந்த கடவுளுடைய ஜனங்களை விடுவிக்கும் பொறுப்பை ஏற்பதற்கு அவர் தன்னை தகுதியற்றவராக உணர்ந்ததில் ஆச்சரியமேதுமில்லை.
9 வலிமைமிக்க இரண்டு வாக்குறுதிகளை அளிப்பதன் மூலம் மோசேக்கு யெகோவா நம்பிக்கையூட்டினார்: “நான் உன்னோடே இருப்பேன்; நீ ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்து வந்தபின், நீங்கள் இந்த மலையில் தேவனுக்கு ஆராதனை செய்வீர்கள்; நான் உன்னை அனுப்பினேன் என்பதற்கு இதுவே அடையாளம்.” (யாத்திராகமம் 3:12) மனத் தயக்கத்தோடு இருந்த தம் ஊழியனுடன் எப்போதும் கூடவே இருப்பதாக யெகோவா சொன்னார். அதுமட்டுமல்ல, தம் ஜனங்களைக் கண்டிப்பாக விடுதலை செய்யப் போவதாகவும் குறிப்பிட்டார். பக்கபலமாய் இருப்பதாகச் சொல்லி இதுபோன்ற வாக்குறுதிகளை காலங்காலமாகவே அவர் அளித்திருக்கிறார். உதாரணமாக, வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் நுழைவதற்குச் சற்று முன்பு மோசே மூலமாக இஸ்ரவேலரிடம் இவ்வாறு சொன்னார்: “பலங்கொண்டு திடமனதாயிருங்கள், . . . உன் தேவனாகிய கர்த்தர்தாமே உன்னோடேகூட வருகிறார்; அவர் உன்னை விட்டு விலகுவதும் இல்லை, உன்னைக் கைவிடுவதும் இல்லை.” (உபாகமம் 31:6) யோசுவாவுக்கும்கூட யெகோவா இவ்வாறு உறுதியளித்தார்: “நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை; நான் . . . உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.” (யோசுவா 1:5) கிறிஸ்தவர்களுக்கும் அவர் இவ்வாறு வாக்குறுதி அளிக்கிறார்: “நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.” (எபிரெயர் 13:5) இப்படிப்பட்ட வலுவான ஆதரவைப் பெற்றிருப்பதால் கிறிஸ்தவர்களாய் இருப்பதைக் குறித்து நாம் பெருமிதப்பட வேண்டும்!
10, 11. யெகோவாவுக்குச் செய்யும் சேவை பயனுள்ளது என்ற மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள லேவியனாகிய ஆசாப் எப்படி உதவி பெற்றார்?
10 மோசேக்குப் பிறகு, அதாவது சுமார் 500 ஆண்டுகளுக்குப் பிறகு வாழ்ந்தவர் ஆசாப்; உண்மையுள்ள லேவியனாக இருந்த இவர், நேர்மையாக நடப்பது உண்மையிலேயே பயனளிக்குமா என்பதன் பேரில் தனக்கு எழுந்த சந்தேகங்களைப் பற்றி ஒளிவுமறைவின்றி எழுதினார். சோதனைகள், சபலங்கள் மத்தியில் அவர் கஷ்டப்பட்டு கடவுளுக்குச் சேவை செய்து வந்தார். அதே சமயத்தில், கடவுளைக் கேலி செய்த சிலர் பேரும் புகழோடும், செல்வச் செழிப்போடும் வாழ்வதைக் கண்டார். இது அவரை எப்படிப் பாதித்தது? “என் கால்கள் தள்ளாடுதலுக்கும், என் அடிகள் சறுக்குதலுக்கும் சற்றே தப்பிற்று” என அவர் ஒப்புக்கொண்டார். “துன்மார்க்கரின் வாழ்வை நான் காண்கையில், வீம்புக்காரராகிய அவர்கள்மேல் பொறாமை கொண்டேன்” என்றும் அவர் சொன்னார். யெகோவாவின் வணக்கத்தானாக இருப்பதில் பயனுண்டோவென சந்தேகிக்கத் தொடங்கினார். ‘நான் விருதாவாகவே என் இருதயத்தைச் சுத்தம் பண்ணி, குற்றமில்லாமையிலே என் கைகளைக் கழுவினேன். நாள்தோறும் நான் வாதிக்கப்படுகிறேன்’ என அவர் சொன்னார்.—சங்கீதம் 73:2, 3, 13, 14.
11 மனதை அலைக்கழித்த இந்த உணர்ச்சிகளை ஆசாப் எப்படி சமாளித்தார்? அவற்றை ஒத்துக்கொள்ள மறுத்தாரா? மறுக்கவில்லை. 73-ம் சங்கீதத்தில் பார்க்கிறபடி, கடவுளிடம் ஜெபத்தில் அவற்றைத் தெரியப்படுத்தினார். ஆலயத்தின் பரிசுத்த ஸ்தலத்துக்கு அவர் சென்றதே அவரது மனப்பான்மையில் மாற்றத்தை ஏற்படுத்தியது. தேவபக்திக்கு ஈடிணை வேறெதுவுமில்லை என்பதை அவர் அங்கு சென்றபோது புரிந்துகொண்டார். யெகோவாவுக்குச் சேவை செய்வது பயனுள்ளதென்பதை அவர் மறுபடியும் உணர்ந்தார். யெகோவா தீமையை வெறுக்கிறார் என்பதையும் உரிய காலத்தில் பொல்லாதவர்களைத் தண்டிப்பார் என்பதையும்கூட ஆசாப் புரிந்துகொண்டார். (சங்கீதம் 73:16-19) இந்தப் புதிய மனநிலையோடு, யெகோவாவின் மதிப்புமிக்க ஊழியராக தான் யார் என்ற அடையாளத்தை மனதில் நன்கு ஊன்ற வைத்தார். “நான் எப்பொழுதும் உம்மோடிருக்கிறேன்; என் வலது கையைப் பிடித்துத் தாங்குகிறீர். உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர்” என கடவுளிடம் சொன்னார். (சங்கீதம் 73:23, 24) ஆசாப் மீண்டும் தன் கடவுளில் பெருமிதம் கொள்பவரானார்.—சங்கீதம் 34:2.
தாங்கள் யார் என்பதை மனதில் நன்கு பதிய வைத்திருந்தார்கள்
12, 13. யெகோவாவோடு தங்களுக்கிருக்கும் பந்தத்தைக் குறித்து பெருமிதம் கொண்ட பைபிள் கதாபாத்திரங்களுக்கு உதாரணம் கொடுங்கள்.
12 கிறிஸ்தவ அடையாளத்தைக் குறித்த உணர்வு எப்போதும் நம் மனதில் இருப்பதற்கு ஒரு வழி, கஷ்டங்களின் மத்தியிலும் கடவுளோடு வைத்திருந்த பந்தத்தில் மகிழ்ச்சி கண்ட உண்மையுள்ள வணக்கத்தாரைப் பற்றி ஆராய்ந்து அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுவதாகும். யாக்கோபின் மகனான யோசேப்பைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். இளம் வயதில் அவர் அன்பற்ற விதத்தில் ஓர் அடிமையாக விற்கப்பட்டார்; நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவிலுள்ள எகிப்துக்குக் கொண்டு போகப்பட்டார். இவ்வாறு தெய்வ பயமுள்ள தன் அப்பாவிடமிருந்தும் அன்பும் ஆதரவும் நிறைந்த வீட்டுச் சூழலிலிருந்தும் முற்றிலும் பிரிக்கப்பட்டு வித்தியாசப்பட்ட ஓர் இடத்திற்குக் கொண்டுபோகப்பட்டார். கடவுளுடைய ஆலோசனையைக் கேட்டுத் தெரிந்துகொள்வதற்கு எகிப்தில் அவருக்கு யாரும் இருக்கவில்லை, சவால்மிக்க சந்தர்ப்பங்களையும் அவர் சந்திக்க வேண்டியிருந்தது; அவை அவருடைய ஒழுக்கத் தராதரங்களையும் கடவுள் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையையும் சோதித்தன. என்றாலும், கடவுளுடைய ஊழியராக தன் அடையாளத்தைக் காத்துக்கொள்ள அவர் ஊக்கமாக முயன்றார்; அதோடு சரியென தான் அறிந்திருந்தவற்றை உண்மையோடு பின்பற்றினார். ஆபத்தான ஒரு சூழ்நிலையிலும்கூட யெகோவாவின் வணக்கத்தாராக இருப்பதில் பெருமைப்பட்டார், தன் மனதிலிருந்ததை வெளிப்படுத்த அவர் வெட்கப்படவும் இல்லை.—ஆதியாகமம் 39:7-10.
13 எட்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகு வாழ்ந்த ஓர் இஸ்ரவேல் சிறுமியின் உதாரணத்தைக் கவனிக்கலாம்; இவள் சிறைபிடித்துச் செல்லப்பட்டு சீரிய படைத்தலைவனான நாகமானின் அடிமையானாள்; இருந்தும் யெகோவாவின் வணக்கத்தாளாக தன் அடையாளத்தை அவள் மறந்துவிடவில்லை. சந்தர்ப்பம் கிடைத்தபோது, உண்மை கடவுளின் தீர்க்கதரிசியாகிய எலிசாவைப் பற்றி குறிப்பிடுவதன் மூலம் யெகோவாவின் சார்பாக தைரியமாய் சாட்சி கொடுத்தாள். (2 இராஜாக்கள் 5:1-19) அதற்கும் பல ஆண்டுகளுக்குப் பிறகு வாழ்ந்த இளம் யோசியா ராஜா, சீர்கெட்ட சூழ்நிலையின் மத்தியிலும் வணக்கம் சம்பந்தமாக தொடர்ந்து பல சீர்திருத்தங்களைச் செய்தார், கடவுளுடைய ஆலயத்தைப் புதுப்பித்தார், ஜனங்களை மீண்டும் யெகோவாவின் பக்கம் திருப்பினார். தன்னுடைய விசுவாசத்தையும் வணக்கத்தையும் குறித்து அவர் பெருமிதப்பட்டார். (2 நாளாகமம் 34, 35 அதிகாரங்கள்) தானியேலும் அவரது மூன்று எபிரெய தோழர்களும் பாபிலோனில் இருக்கையில் யெகோவாவின் ஊழியர்கள் என்ற தங்கள் அடையாளத்தை ஒருபோதும் மறக்கவில்லை. நெருக்கடியிலும் சோதனையிலும் அவர்கள் தொடர்ந்து உத்தமத்தோடு இருந்தார்கள். இவர்கள் எல்லாருமே யெகோவாவின் ஊழியர்களாக இருப்பதில் பெருமிதம் கொண்டார்கள் என்பது இதிலிருந்து தெளிவாகிறது.
நீங்கள் யார் என்பதில் பெருமிதம் கொள்ளுங்கள்
14, 15. நம் கிறிஸ்தவ அடையாளத்தைக் குறித்து பெருமை கொள்வதில் என்ன உட்பட்டுள்ளது?
14 இந்த ஊழியர்கள் கடவுளுக்கு முன் தங்கள் நிலைநிற்கையைக் குறித்து சரியான விதத்தில் எப்போதும் பெருமிதம் கொண்டதே, எதையும் சமாளிக்க அவர்களுக்குக் கைகொடுத்தது. இன்று நம்மைப் பற்றி என்ன சொல்லலாம்? நம் கிறிஸ்தவ அடையாளத்தைக் குறித்து பெருமிதம் கொள்வதில் என்ன உட்பட்டுள்ளது?
15 மிக முக்கியமாக, யெகோவாவின் ஆசீர்வாதத்தையும் அங்கீகாரத்தையும் பெற்றவராக, அவருடைய பெயர் தாங்கிய ஜனத்தாரில் ஒருவராக இருப்பதற்கு நாம் ஆழ்ந்த போற்றுதல் காட்டுவதை உட்படுத்துகிறது. தம்முடையவர்கள் யார் என்பதைக் குறித்ததில் கடவுளுக்கு எள்ளளவும் சந்தேகமில்லை. மத குழப்பங்கள் தலைவிரித்தாடிய காலத்தில் வாழ்ந்த அப்போஸ்தலன் பவுல், ‘கர்த்தர் தம்முடையவர்களை அறிவார்’ என எழுதினார். (2 தீமோத்தேயு 2:19; எண்ணாகமம் 16:5) ‘தம்முடையவர்களைக்’ குறித்து யெகோவா பெருமை கொள்கிறார். ஆகவேதான், ‘உங்களைத் தொடுகிறவன் என் கண்மணியைத் தொடுகிறான்’ என அவர் அறிவித்தார். (சகரியா 2:8, NW) அவர் நம்மை நேசிக்கிறார் என்பதில் சந்தேகமேயில்லை. அதற்கு கைமாறாக, அவரோடுள்ள நம் பந்தமும்கூட அவர் மீதுள்ள ஆழமான அன்பின் அடிப்படையில் அமைய வேண்டும். “தேவனில் அன்புகூருகிறவனெவனோ, அவன் தேவனால் அறியப்பட்டிருக்கிறான்” என பவுல் குறிப்பிட்டார்.—1 கொரிந்தியர் 8:3.
16, 17. கிறிஸ்தவ சிறியோரும் பெரியோரும் தங்களுடைய ஆன்மீக சொத்தைக் குறித்து ஏன் பெருமிதம் கொள்ளலாம்?
16 யெகோவாவின் சாட்சிகளாக வளர்க்கப்பட்ட இளைஞர்கள், யெகோவாவுடன் உள்ள தனிப்பட்ட பந்தத்தின் அடிப்படையில் தங்களுடைய கிறிஸ்தவ அடையாளம் நாளுக்கு நாள் வலுப்பெறுகிறதா என்பதை ஆராய்வது அவசியம். அவர்கள் வெறுமனே தங்களுடைய பெற்றோரின் விசுவாசத்தை சார்ந்திருக்க முடியாது. கடவுளுடைய ஊழியர்கள் ஒவ்வொருவரையும் குறித்து பவுல் இவ்வாறு எழுதினார்: “அவன் நின்றாலும் விழுந்தாலும் அவனுடைய எஜமானுக்கே அவன் உத்தரவாதி.” ஆகவே, “நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக் குறித்து தேவனுக்குக் கணக்கொப்புவிப்பான்” என்றும் அவர் சொன்னார். (ரோமர் 14:4, 12) அப்படியானால், பெற்றோர் யெகோவாவை வணங்குகிறார்கள் என்பதற்காக அரைமனதோடு அதையே செய்யும்போது யெகோவாவுடன் நெருக்கமான, நீடித்த பந்தத்தை வைத்துக்கொள்ள முடியாது.
17 காலம் காலமாக யெகோவாவுக்குச் சாட்சிகளாக அநேகர் இருந்து வந்திருக்கிறார்கள். அதாவது சுமார் 60 நூற்றாண்டுகளுக்கு முன்பு உண்மையுடன் வாழ்ந்த ஆபேல் முதற்கொண்டு இன்றுள்ள ‘திரள் கூட்டத்தார்’ வரை சாட்சிகளாக அநேகர் இருக்கிறார்கள்; அதோடு அவரை வணங்குவோர் இன்னும் திரள் திரளாக வந்துகொண்டிருக்கிறார்கள். இவர்கள் எல்லாரும் முடிவற்ற வாழ்வை அனுபவித்து மகிழ்வார்கள். (வெளிப்படுத்துதல் 7:9; எபிரெயர் 11:4) நாம் இந்த உண்மை வணக்கத்தாரின் நீண்ட வரிசையில் சமீபத்தில் சேர்ந்திருக்கிறோம். எப்பேர்ப்பட்ட அருமையான ஆன்மீக ஆஸ்தியை நாம் சுதந்தரமாகப் பெற்றிருக்கிறோம்!
18. நம்முடைய மதிப்பீடுகளும் தராதரங்களும் இந்த உலகிலிருந்து நம்மை எப்படி பிரித்து வைக்கின்றன?
18 நம்மை கிறிஸ்தவர்களாக அடையாளம் காட்டும் மதிப்பீடுகளும் பண்புகளும் தராதரங்களும் குணாதிசயங்களும்கூட நம் கிறிஸ்தவ அடையாளத்தில் உட்பட்டுள்ளன. அந்த அடையாளமே, ஜீவனுக்கும் கடவுளைப் பிரியப்படுத்துவதற்கும் வழிநடத்தும் ஒரே சிறந்த வழி அல்லது ‘மார்க்கம்.’ (அப்போஸ்தலர் 9:2; எபேசியர் 4:22-24) கிறிஸ்தவர்கள் ‘எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து நலமானதைப் பிடித்துக்கொள்கிறார்கள்.’ (1 தெசலோனிக்கேயர் 5:21) கிறிஸ்தவத்துக்கும் கடவுளிடமிருந்து விலகியிருக்கும் உலகத்துக்கும் இடையே உள்ள பெரும் வித்தியாசத்தை நாம் தெள்ளத் தெளிவாக அறிந்திருக்கிறோம். மெய் வணக்கத்திற்கும் பொய் வணக்கத்திற்கும் இடையிலான வித்தியாசத்தை யெகோவா தெளிவாகக் காட்டியிருக்கிறார். மல்கியா தீர்க்கதரிசி மூலம் அவர் இவ்வாறு அறிவித்தார்: “நீங்கள் நீதிமானுக்கும் துன்மார்க்கனுக்கும், தேவனுக்கு ஊழியஞ்செய்கிறவனுக்கும் அவருக்கு ஊழியஞ்செய்யாதவனுக்கும் இருக்கிற வித்தியாசத்தைத் திரும்பவும் காண்பீர்கள்.”—மல்கியா 3:18.
19. உண்மை கிறிஸ்தவர்கள் ஒருபோதும் எதற்கு அடிபணிய மாட்டார்கள்?
19 குழப்பம் நிறைந்த, திக்குத் தெரியாத இவ்வுலகில் யெகோவாவில் பெருமிதம் கொள்வது மிக முக்கியம்; ஆகவே எப்போதும் அப்படிப்பட்ட பெருமிதம் கொள்வதற்கும் கிறிஸ்தவ அடையாளத்தை எப்போதும் நம் மனதில் வைத்திருப்பதற்கும் எது நமக்கு உதவும்? அடுத்தக் கட்டுரையில் இதற்கான பயனுள்ள ஆலோசனைகளைக் காணலாம். அவற்றைச் சிந்திக்கையில், உண்மை கிறிஸ்தவர்கள் ஒருபோதும் ‘அலட்சியவாதத்திற்கு’ அடிபணிய மாட்டார்கள் என்பதைக் குறித்து நீங்கள் நிச்சயமாய் இருக்கலாம்.
[அடிக்குறிப்பு]
a ஆன்மீக அடையாளத்தைப் பற்றியே இங்கு கலந்தாலோசிக்கப்படுகிறது. மனநல பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட சிலருக்கு மருத்துவ உதவி தேவைப்படலாம்.
நினைவிருக்கிறதா?
• கிறிஸ்தவர்கள் எப்படி ‘யெகோவாவில் பெருமிதம் கொள்ளலாம்’?
• மோசே, ஆசாப் ஆகியோரின் உதாரணங்களிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?
• கடவுளுக்குச் செய்த சேவையைக் குறித்து பெருமிதப்பட்ட பைபிள் கதாபாத்திரங்கள் யாவர்?
• நம் கிறிஸ்தவ அடையாளத்தைக் குறித்து பெருமிதம் கொள்வதில் எவை உட்பட்டுள்ளன?
[பக்கம் 14-ன் படம்]
மோசே சில காலம் தன்னம்பிக்கை இழந்திருந்தார்
[பக்கம் 15-ன் படங்கள்]
யெகோவாவின் பூர்வ கால ஊழியர் பலரும் தங்களுடைய பிரத்தியேக அடையாளத்தைக் குறித்து பெருமிதம் கொண்டனர்