கரயய்ட்களும்—சத்தியத்தைக் கண்டுபிடிக்க அவர்கள் நாட்டமும்
“என்னுடைய கருத்தைச் சார்ந்திராமல், [வேதவார்த்தைகளை] முழுமையாகத் தேடுங்கள்.” பொ.ச. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரபல கரயய்ட் தலைவர் ஒருவரால் இந்த வார்த்தைகள் சொல்லப்பட்டன. கரயய்ட்கள் யார்? அவர்களுடைய உதாரணத்திலிருந்து மதிப்புள்ள எதையாவது நாம் கற்றுக்கொள்ள முடியுமா? இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்காக, நாம் வரலாற்றில் பின்நோக்கிச் சென்று, கரயய்ட் இயக்கத்திற்கு வழிநடத்திய நெடுநாள் சர்ச்சையைச் சிந்திப்போம்.
அந்தச் சர்ச்சை எவ்வாறு தொடங்கியது?
பொது சகாப்தத்திற்கு முன்னான கடைசி நூற்றாண்டுகளில், யூத மதத்தினுள் ஒரு புதிய தத்துவம் உருவானது. எழுதப்பட்டது ஒன்றும் வாய்மொழியாக மற்றொன்றுமாக இரண்டு நியாயப்பிரமாணங்களைக் கடவுள் சீனாய் மலையில் கொடுத்தார் என்ற கருத்தே அதுவாகும்.a பொ.ச. முதல் நூற்றாண்டில், இந்தப் புதிய போதனையை ஏற்றுக்கொண்டவர்களுக்கும் அதை ஏற்க மறுத்தவர்களுக்கும் இடையில் கடுமையான தர்க்கங்கள் நடந்தன. பரிசேயர்கள் அதற்கு ஆதரவளிப்பவர்களாக இருந்தனர்; சதுசேயர்களும் எசனேயர்களும் எதிர்ப்பவர்கள் மத்தியில் இருந்தார்கள்.
இந்தத் தொடர்ச்சியான சர்ச்சையின் மத்தியில், நாசரேத்தைச் சேர்ந்த இயேசு, வாக்குப்பண்ணப்பட்ட மேசியாவாக வந்தார். (தானியேல் 9:24, 25; மத்தேயு 2:1-6, 22, 23) யூதர்களின் முரண்பட்ட தொகுதிகள் அனைத்தையும் இயேசு எதிர்ப்பட்டார். அவர்களுடன் நியாயவாதம் செய்கையில், அவர்களுடைய பாரம்பரியத்தின் காரணமாகக் கடவுளுடைய வார்த்தையை வீணாக்கிப்போடுவதைக் கண்டனம் செய்தார். (மத்தேயு 15:3-9) மேசியாவுக்கு மட்டுமே சாத்தியமான முறையில் இயேசு ஆவிக்குரிய சத்தியங்களையும் போதித்தார். (யோவான் 7:45, 46) மேலுமாக, இயேசுவை உண்மையாகப் பின்பற்றியவர்கள் மட்டுமே, கடவுளின் உதவியைப் பெற்றிருந்ததற்குச் சான்றளித்தார்கள். அவர்கள் கிறிஸ்தவர்கள் எனப்படலானார்கள்.—அப்போஸ்தலர் 11:26.
பொ.ச. 70-ல் எருசலேமிலுள்ள ஆலயம் அழிக்கப்பட்டபோது, பரிசேயர் மதப்பிரிவு மட்டுமே முழுமையாகத் தப்பியது. இப்போது ஆசாரியத்துவம், பலிகள், ஆலயம் ஆகியவை இல்லாமல், பரிசேய யூதமதம், இவையனைத்திற்கும் மாற்றீடுகளைக் கண்டுபிடிக்க முடிந்தது; பாரம்பரியமும் பொருள்விளக்கமும் எழுதப்பட்ட நியாயப்பிரமாணத்திற்கு மேலாக முக்கியத்துவம் பெற அனுமதித்தது. புதிய “பரிசுத்த புத்தகங்கள்” எழுதப்படுவதற்கு இது வாய்ப்பளித்தது. வாய்மொழி பிரமாணத்துக்கு பிற்சேர்ப்புகளுடனும் பொருள்விளக்கங்களுடனும் முதலாவதாக மிஷ்னா வந்தது. பின்னர், எழுதப்பட்டவற்றின் மற்ற தொகுப்புகளும் சேர்க்கப்பட்டு டால்முட் என்று அழைக்கப்பட்டது. அதேநேரத்தில், விசுவாசதுரோக கிறிஸ்தவர்கள் இயேசுவின் போதனைகளிலிருந்து வழிவிலக ஆரம்பித்தனர். இரு தொகுதிகளுமே—ரபீனித்துவ அதிகாரம் ஒரு பக்கம், சர்ச் அதிகாரம் மறு பக்கம் என—சக்திவாய்ந்த மத அமைப்புகளை உருவாக்கின.
புறமத ரோமுடனும் பின்னர் “கிறிஸ்தவ” ரோமுடனும் ஏற்பட்ட யூத சச்சரவுகளின் காரணமாக, யூதமதத்தின் மையம் முடிவில் பாபிலோனுக்கு மாற்றப்பட்டது. டால்முட்டில் எழுதப்பட்டவை மிக முழுமையான உருவில் அங்குதான் தொகுக்கப்பட்டன. டால்முட், கடவுளுடைய சித்தத்தை அதிக முழுமையாக வெளிப்படுத்துகிறது என்று ரபீக்கள் உரிமைபாராட்டினபோதிலும், ரபீனித்துவ அதிகாரத்திற்கு அதிகரித்துவந்த செல்வாக்கை அநேக யூதர்கள் உணர்ந்தனர்; மோசே மற்றும் தீர்க்கதரிசிகளின் மூலமாக அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட கடவுளுடைய வார்த்தைக்காக அவர்கள் ஏங்கினார்கள்.
பொ.ச. எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், ரபீனித்துவ அதிகாரத்தையும், அவர்களுடைய வாய்மொழி பிரமாணத்தை நம்புவதையும் எதிர்த்த, பாபிலோனில் இருந்த யூதர்கள், ஆனான் பென் டேவிட் என்ற கற்றறிந்த தலைவனுக்குச் சாதகமாகப் பிரதிபலித்தனர். ரபீனித்துவ பொருள்விளக்கத்தையோ டால்முட்டையோ பொருட்படுத்தாமல், உண்மை மதத்தின் ஒரே ஊற்றுமூலமாக எபிரெய வேத எழுத்துக்களை கட்டுப்பாடுகள் எதுவுமின்றி படிப்பது ஒவ்வொரு யூதனின் உரிமையாக இருக்கிறது என்று அவர் அறிவித்தார். ஆனான் போதித்தார்: “என்னுடைய கருத்தைச் சார்ந்திராமல், டோராவை [கடவுளின் எழுதப்பட்ட நியாயப்பிரமாணத்தை] முழுமையாகத் தேடுங்கள்.” வேதவார்த்தைக்கு இந்த அழுத்தம் கொடுக்கப்பட்டதன் காரணமாக, ஆனானைப் பின்பற்றியவர்கள் க்வாராயிம் (Qa·ra·ʼimʹ) என்று அழைக்கப்படலாயினர்; “வாசகர்கள்” என்று அர்த்தங்கொள்ளும் எபிரெய பெயர் இது.
கரயய்ட்களும் ரபீகளும் முரண்படுகின்றனர்
ரபீனித்துவ வட்டாரங்களில் திண்டாட்டத்தை உண்டாக்கிய கரயய்ட் போதனைகளுக்குச் சில உதாரணங்கள் யாவை? இறைச்சியையும் பாலையும் சேர்த்து சாப்பிடுவதை ரபீக்கள் தடைசெய்தனர். “வெள்ளாட்டுக்குட்டியை அதின் தாயின் பாலிலே சமைக்கவேண்டாம்,” என்று யாத்திராகமம் 23:19-ல் சொல்லப்பட்டிருப்பதன் வாய்மொழி பிரமாணத்துடைய விளக்கம் என்பதாக அவர்கள் அதைக் கூறினார்கள். மறுபட்சத்தில், அந்த வசனம் எதைச் சொன்னதோ அதை மட்டுமே அர்த்தப்படுத்தியது—கூடுதலாகவோ குறைவாகவோ இல்லை—என்று கரயய்ட்கள் போதித்தனர். ரபீனித்துவ கட்டுப்பாடுகள் மனிதனால் உருவாக்கப்பட்டவை என்று அவர்கள் வாதாடினர்.
உபாகமம் 6:8, 9-ன் பொருள்விளக்கத்தின்படி, டிஃபிலனை அணிந்துகொண்டு ஜெபிக்கவேண்டும் என்றும், வீட்டுநிலை ஒவ்வொன்றிலும் ஒரு மஸுஸா வைக்கப்படவேண்டும் என்றும் ரபீக்கள் வலியுறுத்தினார்கள்.b இந்த வசனங்களுக்கு உருவகமான அல்லது அடையாளப்பூர்வமான அர்த்தமே இருப்பதாக கரயய்ட்கள் கருதினார்கள்; அதன் காரணமாக அப்படிப்பட்ட ரபீனித்துவ கட்டளைகளை ஏற்க மறுத்தார்கள்.
மற்ற காரியங்களில் கரயய்ட்கள், ரபீகளைவிட அதிக வரையறைகளை உடையவர்களாய் இருந்தார்கள். எடுத்துக்காட்டாக, “ஓய்வுநாளில் உங்கள் வாசஸ்தலங்களில் எங்கும் நெருப்பு மூட்டாதிருப்பீர்களாக,” என்பதாக வாசிக்கும் யாத்திராகமம் 35:3-ஐப் பற்றிய அவர்களுடைய கருத்தைக் கவனியுங்கள். ஓய்வுநாளுக்கு முன்பாகக் கொளுத்தப்பட்ட விளக்கு அல்லது ஒளியாக இருந்தால்கூட அதை ஓய்வுநாளில் எரியும்படி விடுவதைக் கரயய்ட்கள் தடைசெய்தார்கள்.
குறிப்பாக, ஆனான் இறந்தபிறகு, ஒருசில வரையறைகளின் அளவையும் இயல்பையும் குறித்து, கரயய்ட் தலைவர்கள் அடிக்கடி கருத்துவேறுபாடுகளைக் கொண்டிருந்தனர்; மேலும் அவர்களுடைய செய்தி எப்போதும் தெளிவாக இருக்கவில்லை. கரயய்ட்கள், ரபீனித்துவ பாணியான அதிகாரத்திற்கு எதிர்மாறாக இருந்து, ஒரு தனி தலைவரை ஏற்றுக்கொள்ளாமல், வேதவார்த்தைகளைத் தனிப்பட்டவிதமாக வாசிப்பதையும் விளக்குவதையும் அழுத்திக்கூறியதால், அவர்களில் ஒற்றுமை இருக்கவில்லை. இவ்வாறு இருந்தபோதிலும், கரயய்ட் இயக்கம் பாபிலோனிலிருந்த யூத சமுதாயத்தையும் கடந்து மத்திய கிழக்கு முழுவதும் பரவி, பிரபலமாகி செல்வாக்குச் செலுத்தியது. எருசலேமில்கூட பெரிய கரயய்ட் மையம் ஒன்று நிறுவப்பட்டது.
பொ.ச. ஒன்பது மற்றும் பத்தாம் நூற்றாண்டுகளின்போது, கரயய்ட் அறிஞர்கள் மீண்டுமாக எபிரெய மொழியைப் படிப்பதில் சிறந்து விளங்கி, ஒருவிதமான பொற்காலத்தை அனுபவித்தார்கள். எழுதப்பட்டுள்ள எபிரெய வேதவசன பதிவை பரிசுத்தமாகக் கருதினார்கள்; ஆனால் வாய்மொழிவந்த பாரம்பரியங்களை அவ்வாறு கருதவில்லை. சில கரயய்ட்கள், எபிரெய வேதவசனங்களைக் கவனமாகப் பார்த்து எழுதுபவர்களானார்கள். உண்மையில், கரயய்ட்கள் எடுத்துக்கொண்ட இந்தச் சவால்தான், எல்லா யூதர்கள் மத்தியிலும் வேதவசனங்களைப்பற்றிய மஸோரெட்டிக் படிப்பைத் தூண்டுவித்தது; இன்று மிகத் துல்லியமாக பாதுகாக்கப்பட்ட பைபிள் பதிவைக் கிடைக்கச் செய்திருப்பது அதுவே.
இந்த விரைவான வளர்ச்சியின் காலப்பகுதியில், கரயய்ட் யூதமதம், மற்ற யூதர்களின் மத்தியில் வெளிப்படையான மிஷனரி வேலையில் ஈடுபட்டது. ரபீனித்துவ யூத மதத்துக்கு இது தெளிவான அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.
ரபீக்கள் எவ்வாறு பிரதிபலித்தனர்?
ரபீகளின் எதிர்த்தாக்குதல் ஆவேசமிக்க சொற்போராக இருந்தது; அதில் தந்திரமான வளைந்துகொடுத்தலும் போதனையை மாற்றியமைத்தலும் இருந்தது. ஆனானின் தாக்குதலுக்கு அடுத்துவந்த நூற்றாண்டின்போது, ரபீனித்துவ யூதமதம் பல கரயய்ட் முறைகளை ஏற்றுக்கொண்டது. தங்கள் சொல்வன்மை மிக்க பேச்சுக்களில், கரயய்ட் பாணியையும் முறையையும் சேர்த்துக்கொண்டு, வேதவசனங்களை மேற்கோள் காட்டுவதில் ரபீக்கள் கைதேர்ந்தவர்களானார்கள்.
கரயய்ட்டுகளுடனான இந்தச் சொற்போட்டியில் ஏற்கப்பட்ட தலைவர் சாடியா பென் ஜோஸெஃப்; இவர் பொ.ச. பத்தாம் நூற்றாண்டின் முதற்பகுதியில் பாபிலோனிலிருந்த யூத சமுதாயத்தின் தலைவராக ஆனார். சாடியாவின் பெரிய படைப்பாகிய நம்பிக்கைகள் மற்றும் கருத்துக்களின் புத்தகம் என்பது சாம்யல் ரோஸன்பிலாட்டால் ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டது; அவர் தன் முகவுரையில் இவ்வாறு சொன்னார்: “அவருடைய காலத்தில், டால்முட்டில் நிபுணராக . . . இருந்தபோதிலும், அவர் [சாடியா] யூத பாரம்பரியத்தின் இந்த மூலத்தை, ஒப்பிடுகையில் அரிதாகவே பயன்படுத்துகிறார்; எழுதப்பட்ட நியாயப்பிரமாணம் மட்டுமே செல்லுபடியாகும் என்பதாக ஏற்றுக்கொண்ட கரயய்ட்களை அவர்களுடைய சொந்த ஆயுதங்களாலேயே வீழ்த்த விரும்பியதன் காரணமாக அவ்வாறு செய்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.”
சாடியாவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, ரபீனிய யூதமதம், முடிவில் அதிக அதிகாரத்தையும் செல்வாக்கையும் பெற்றது. கரயய்ட் வாதங்களிலுள்ள பலமான அத்தாட்சியை எடுத்துப்போடுவதற்குத் தேவையான அளவிற்கு மாற்றியமைத்துக்கொள்வதன் மூலம் இதை நிறைவேற்றியது. 12-ம் நூற்றாண்டின் டால்முடிய அறிஞரான மோசஸ் மைமானடிஸால் கடைசி தீர்வு வழங்கப்பட்டது. எகிப்தில் அவர் கரயய்ட்களுடன் குடியிருந்திருந்தார்; அவர்களிடமாக அவர் கொண்டிருந்த பொறுத்துக்கொள்ளும் தன்மையுடனும், நம்பவைக்கும் அவருடைய அறிவுப்பூர்வ பாணியுடனும், அவர் அவர்களுடைய பாராட்டைச் சம்பாதித்து, அவர்களுடைய சொந்த தலைமைத்துவ நிலையை பலம்குன்ற செய்தார்.
கரயய்ட் இயக்கம் வேகத்தை இழக்கிறது
ஒற்றுமையின்மை மற்றும் நன்கு ஒத்திசைவிக்கப்பட்ட எதிர்ப்பின்மை காரணமாக கரயய்ட் இயக்கம் வேகத்தையும் பின்பற்றுகிறவர்களையும் இழந்தது. காலம் கடந்துசென்றபோது, கரயய்ட்கள் தங்கள் கருத்துக்களையும் நியமங்களையும் திருத்தி அமைத்துக்கொண்டார்கள். கரயய்ட் இயக்கத்தைப் பற்றிய எழுத்தாசிரியர் ஒருவரான லியான் நீமாய் இவ்வாறு எழுதுகிறார்: “டால்முட், நடைமுறையில் தடைசெய்யப்பட்டதாகவே இருந்தாலும், டால்முட்டிலுள்ள அதிகப்படியான விஷயங்கள் மறைமுகமாக கரயய்ட் நடைமுறையின் சட்டம் மற்றும் பழக்கத்தில் சேர்க்கப்பட்டன.” மொத்தத்தில், கரயய்ட்கள் தங்கள் ஆதி நோக்கத்தை இழந்து, அதிகப்படியாக ரபீனித்துவ யூத மதக் கொள்கைகளை ஏற்றுக்கொண்டனர்.
இஸ்ரேலில் இன்னும் சுமார் 25,000 கரயய்ட்கள் இருக்கின்றனர். மற்ற சமுதாயங்களிலும், பெரும்பாலும் ரஷ்யாவிலும் ஐக்கிய மாகாணங்களிலும், இன்னும் சில ஆயிரம் பேர் காணப்படலாம். என்றபோதிலும், தங்கள் சொந்த வாய்மொழி பாரம்பரியங்களைக் கொண்டிருப்பதால், அவர்கள் ஆரம்ப கரயய்ட்களிலிருந்து வேறுபடுகிறார்கள்.
கரயய்ட்களின் வரலாற்றிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? ‘பாரம்பரியத்தினால் தேவனுடைய வார்த்தையை செல்லாததாக்குவது’ ஒரு பெரிய தவறு என்பதைக் கற்றுக்கொள்ளலாம். (மத்தேயு 15:6) மனிதரின் பாரமான பாரம்பரியங்களிலிருந்து விடுபடுவதற்கு வேதவசனங்களைப்பற்றிய திருத்தமான அறிவு தேவை. (யோவான் 8:31, 32; 2 தீமோத்தேயு 3:16, 17) ஆம், கடவுளுடைய சித்தத்தை அறிந்துகொண்டு, அதைச் செய்ய நாடுகிறவர்கள் மனிதரின் பாரம்பரியங்களைச் சார்ந்து இருப்பதில்லை. அதற்குப் பதிலாக, அவர்கள் பைபிளை ஊக்கமாக ஆராய்ந்து, கடவுளுடைய ஏவப்பட்டெழுதப்பட்ட வார்த்தையிலுள்ள பயனுள்ள போதனையைப் பொருத்திப் பிரயோகிக்கிறார்கள்.
[அடிக்குறிப்புகள்]
a வாய்மொழி பிரமாணத்தைப்பற்றிய விளக்கத்திற்கு, உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்ட போரில்லாத ஓர் உலகம் எப்போதாவது இருக்குமா? என்ற ஆங்கில சிற்றேட்டில், பக்கங்கள் 8-11-ஐக் காண்க.
b டிஃபிலன் என்பது வேத வாசகங்கள் பொறிக்கப்பட்டிருக்கும் தோல் ஏடுகளின் பாகங்களைக் கொண்டிருக்கும் இரு சிறிய சதுர தோற்பேழைகள். இந்தப் பேழைகள் பாரம்பரியமாக இடது கையின் மேற்பக்கத்திலும் தலையிலும் வார நாட்களின் காலை ஜெபங்களின்போது அணிந்துகொள்ளப்பட்டன. மஸுஸா என்பது, உபாகமம் 6:4-9 மற்றும் 11:13-21 பொறிக்கப்பட்டு ஒரு சிறிய பேழையினுள் வைக்கப்பட்டு வீட்டுநிலையில் பொருத்தப்பட்டுள்ள சிறிய தோல் சுருளாகும்.
[பக்கம் 30-ன் படம்]
கரயய்ட்களின் தொகுதி ஒன்று
[படத்திற்கான நன்றி]
From the book The Jewish Encyclopedia, 1910