2013-ல் வெளியிடப்பட்ட ஆங்கில புதிய உலக மொழிபெயர்ப்பு
இத்தனை வருஷங்களில் ஆங்கில புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளை பலமுறை திருத்தி அமைத்திருக்கிறார்கள். ஆனால், 2013-ல் வெளிவந்த பைபிளில்தான் இதுவரை இல்லாத அளவுக்கு நிறைய மாற்றங்களை செய்திருக்கிறார்கள். உதாரணத்துக்கு, நிறைய வார்த்தைகளை குறைத்திருக்கிறார்கள். முக்கியமான பைபிள் வார்த்தைகளை எளிமையாக்கி இருக்கிறார்கள். சில அதிகாரங்களை கவிதை நடையில் மாற்றியிருக்கிறார்கள். தெளிவாகப் புரிந்துகொள்ள அடிக்குறிப்புகளை கொடுத்திருக்கிறார்கள். இந்த பைபிளில் செய்யப்பட்ட எல்லா மாற்றங்களையும் இந்தக் கட்டுரையில் விளக்க முடியாது. இருந்தாலும், ஒருசில மாற்றங்களை இப்போது நாம் பார்க்கலாம்.
பைபிளில் இருக்கும் என்ன முக்கியமான வார்த்தைகளை மாற்றியிருக்கிறார்கள்? முந்தைய கட்டுரையில் பார்த்ததுபோல் “ஷியோல்,” “ஹேடீஸ்,” “ஆத்துமா” போன்ற வார்த்தைகளையும் இன்னும் நிறைய வார்த்தைகளையும் மாற்றியிருக்கிறார்கள்.
உதாரணத்துக்கு, “அன்புள்ள தயவு” என்பதை “மாறாத அன்பு” என்று சரியாக மொழிபெயர்த்திருக்கிறார்கள். பைபிளில் இந்த வார்த்தை “உண்மையாக இருப்பது” என்ற வார்த்தைக்கு இணையான அர்த்தத்தையும் தருகிறது.—சங். 36:5; 89;1.
எபிரெய மற்றும் கிரேக்க மொழிகளிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட “வித்து” என்ற வார்த்தை விவசாயத்தோடு சம்பந்தப்பட்ட வார்த்தை. அந்த வார்த்தைக்கு “வாரிசு” என்ற இன்னொரு அர்த்தமும் இருக்கிறது. அதனால் முன்பிருந்த புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளில் ‘வாரிசை’ குறிப்பதற்கு “வித்து” என்ற வார்த்தையை எல்லா இடத்திலும் பயன்படுத்தினார்கள். உதாரணத்துக்கு, ஆதியாகமம் 3:15-லும் இந்த வார்த்தையைத்தான் பயன்படுத்தினார்கள். ஆனால், இப்போது “வித்து” என்ற ஆங்கில வார்த்தையை “வாரிசு” என்ற அர்த்தத்தில் யாரும் பயன்படுத்துவதில்லை. அதனால் புதிய பைபிளில், ஆதியாகமம் 3:15-லும் அதோடு சம்பந்தப்பட்ட மற்ற வசனங்களிலும் “வாரிசு” என்ற வார்த்தையைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். (ஆதி. 22:17, 18; வெளி. 12:17) மற்ற இடங்களில் சூழமைவுக்கு ஏற்ற விதத்தில் மொழிபெயர்த்து இருக்கிறார்கள்.—ஆதி. 1:11; சங். 22:30; ஏசா. 57:3.
ஏன் நிறைய இடங்களில் வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்க்கவில்லை? நல்ல பைபிள் மொழிபெயர்ப்பு எப்படி இருக்க வேண்டும் என்று 2013-ல் வெளியிடப்பட்ட பைபிளின் A1 பிற்சேர்க்கை இப்படி சொல்கிறது: “வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்க்கும்போது அதன் அர்த்தம் மாறினாலோ புரியவில்லை என்றாலோ அதன் சரியான அர்த்தத்தை மொழிபெயர்க்க வேண்டும்.” சிலசமயம் எபிரெய மற்றும் கிரேக்க மொழியில் இருக்கிற மரபுத்தொடர்களை (idioms) வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்க்கும்போது அதன் அர்த்தம் மாறாமல் இருக்கலாம். உதாரணத்துக்கு, வெளிப்படுத்துதல் 2:23-ல் “இருதயங்களை . . . ஆராய்ந்து பார்க்கிறவர்” என்ற வார்த்தைகளை அப்படியே மொழிபெயர்க்கும்போது நிறைய மொழிகளில் அதன் அர்த்தம் மாறவில்லை. அதனால், அதை நாம் அப்படியே மொழிபெயர்க்கலாம். ஆனால், அதே வசனத்தில் “உள்ளிந்திரியங்களை (அதாவது “சிறுநீரகங்களை”) ஆராய்ந்து பார்க்கிறவர்” என்பதை அப்படியே மொழிபெயர்த்தால் நிறையப் பேருக்கு புரியாது. அதனால், “சிறுநீரகங்கள்” என்ற வார்த்தைக்கு பதிலாக “உள்ளார்ந்த எண்ணங்கள்” என்ற வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்த விதத்தில் அதன் அர்த்தத்தை மொழிபெயர்த்து இருக்கிறார்கள். இப்படி நிறைய எபிரெய வார்த்தைகளை புதிதாக வெளியிடப்பட்ட பைபிளில் எளிமையாகவும் தெளிவாகவும் மொழிபெயர்த்து இருக்கிறார்கள்.
ஆங்கில பைபிளில் “இஸ்ரவேல் மகன்கள்” என்பதை “இஸ்ரவேலர்கள்” என்றும் “தகப்பனில்லாத மகன்கள்” என்பதை “தகப்பனில்லாத பிள்ளைகள்” என்றும் ஏன் மொழிபெயர்த்து இருக்கிறார்கள்? எபிரெய மொழியில் ஆண்களையும் பெண்களையும் குறிப்பதற்கு தனித்தனி வார்த்தைகள் இருக்கின்றன. சிலசமயம், ஆண்களை குறிப்பதற்கு பயன்படுத்தும் வார்த்தைகள் ஆண்-பெண் என இருவரையுமே குறிக்கும். உதாரணத்துக்கு, பைபிளில் “இஸ்ரவேல் மகன்கள்” என்ற வார்த்தை சில இடங்களில் ஆண்-பெண் என இருவரையுமே குறிக்கிறது. அதனால், புதிய பைபிளில் இந்த வார்த்தையை “இஸ்ரவேலர்கள்” என்று மொழிபெயர்த்து இருக்கிறார்கள்.—யாத். 1:7; 35:29; 2 இரா. 8:12.
அதேபோல் எபிரெய மொழியில் ஆதியாகமம் 3:16-ல் இருக்கும் “மகன்கள்” என்ற வார்த்தையை முன்பிருந்த புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளில் “பிள்ளைகள்” என்று மொழிபெயர்த்தார்கள். ஆனால், இதே எபிரெய வார்த்தையை யாத்திராகமம் 22:24-ல் “மகன்கள்” என்று மொழிபெயர்த்திருந்தார்கள். என்றாலும் புதிய பைபிளில் இந்த வசனத்தை, “உங்கள் பிள்ளைகள் [எபிரெயுவில், “மகன்கள்”] தகப்பனில்லாமல் இருப்பார்கள்” என்றே மொழிபெயர்த்து இருக்கிறார்கள். இதேபோல் மற்ற இடங்களிலும் “தகப்பனில்லாத மகன்கள்” என்ற வார்த்தையை “தகப்பனில்லாத பிள்ளைகள்” அல்லது “அநாதைகள்” என்று மொழிபெயர்த்து இருக்கிறார்கள்.—உபா. 10:18; யோபு 6:27.
நிறைய அதிகாரங்களை ஏன் கவிதை நடையில் மாற்றியிருக்கிறார்கள்? பைபிளில் நிறைய அதிகாரங்கள், ஆரம்பத்தில் கவிதை நடையில்தான் எழுதப்பட்டது. இப்போது இருக்கும் கவிதைகளில் பெரும்பாலும் வரிகள் ஒரேமாதிரியான ஓசையில் முடிகிறது. ஆனால் எபிரெய மொழியில், கவிதைகள் அப்படி இருக்காது. அதில் பெரும்பாலும், முதல் வரியில் வரும் கருத்தும் அடுத்த வரியில் வரும் கருத்தும் ஒரேமாதிரி (parallelism) இருக்கும். அல்லது, முதல் வரியில் இருக்கும் கருத்தை அடுத்த வரியில் இருக்கும் கருத்து வேறுபடுத்திக் (contrast) காட்டும். ஒரேமாதிரியான ஓசைகள் உள்ள வார்த்தைகளால் எபிரெய மொழி கவிதைகள் எழுதப்படவில்லை, அதற்குப் பதிலாக கருத்துக்களை அடிப்படையாக வைத்துத்தான் எழுதினார்கள்.
பாடுவதற்கும் மனப்பாடம் செய்வதற்கும் வசதியாக இருக்க யோபு புத்தகமும் சங்கீத புத்தகமும் ஆரம்பத்தில் கவிதை நடையில் எழுதப்பட்டது. அதனால், முன்பிருந்த புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளில் இந்த புத்தகங்களை கவிதை நடையில் மொழிபெயர்த்திருந்தார்கள். இந்த நடை, முக்கியமான கருத்துக்களை வலியுறுத்துவதற்கு உதவியாக இருந்தது. மனப்பாடம் செய்வதும் சுலபமாக இருந்தது. நீதிமொழிகள் புத்தகத்தையும் உன்னதப்பாட்டு புத்தகத்தையும் தீர்க்கதரிசன புத்தகங்களில் உள்ள நிறைய அதிகாரங்களையும் பைபிள் எழுத்தாளர்கள் கவிதை நடையில் எழுதியிருந்தார்கள். அதனால், 2013-ல் வெளியிடப்பட்ட பைபிளிலும் இந்த அதிகாரங்களை கவிதை நடையில் மொழிபெயர்த்து இருக்கிறார்கள். உதாரணத்துக்கு ஏசாயா 24:2-ஐ எடுத்துக்கொள்ளுங்கள். கடவுளுடைய நியாயத்தீர்ப்பிலிருந்து யாராலும் தப்பிக்க முடியாது என்ற குறிப்பை இந்த வசனம் வலியுறுத்துகிறது. இந்த வசனத்தில் ஒவ்வொரு வரியிலும் ஒரு சொல்லும் அதன் எதிர்ச்சொல்லும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதோடு ஒவ்வொரு வரியும் அடுத்த வரியோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. பைபிள் எழுத்தாளர் இந்த வசனத்தை கவிதை நடையில் எழுதியிருப்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான், அவர் வெறுமனே ஒரு கருத்தை திரும்பத் திரும்ப சொல்வதற்காக அல்ல, ஆனால் ஒரு முக்கியமான விஷயத்தை வலியுறுத்துவதற்காகத்தான் கவிதை நடையை பயன்படுத்தியிருக்கிறார் என்பதை புரிந்துகொள்ள முடியும்.
எபிரெய மொழியில், கவிதை நடையில் எழுதப்பட்ட பகுதிகளுக்கும் உரைநடையில் எழுதப்பட்ட பகுதிகளுக்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தை சிலசமயம் கண்டுபிடிக்க முடியாது. அதனால்தான், இந்த பகுதிகளை ஒவ்வொரு பைபிள் மொழிபெயர்ப்பும் வித்தியாசமாக மொழிபெயர்த்திருக்கின்றன. இருந்தாலும், எது உரைநடை எது கவிதை நடை என்பதை மொழிபெயர்ப்பாளர்கள்தான் தீர்மானிக்க வேண்டும். இதை தீர்மானிப்பது ரொம்ப கஷ்டம். ஏனென்றால், முக்கியமான விஷயங்களை புரியவைப்பதற்காக உரைநடையிலுள்ள சில பகுதிகளை கவிதை நயத்தோடு எழுதியிருக்கிறார்கள். வார்த்தை ஜாலங்களையும் சொல்லோவியங்களையும் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
பைபிளில் இருக்கும் ஒவ்வொரு புத்தகத்துக்கு முன்பும் முக்கிய குறிப்புகள் (Outline of Contents) என்ற புதிய பகுதி இருக்கிறது. உன்னதப்பாட்டு போன்ற புத்தகத்தில் கவிதை நடையில் இருக்கும் வசனங்களில் யார் பேசுகிறார்கள் என்பதை புரிந்துகொள்ள இந்த பகுதி உதவியாக இருக்கிறது.
எபிரெய மற்றும் கிரேக்க கையெழுத்துப் பிரதிகளை ஆராய்ச்சி செய்தது எப்படி உதவியாக இருந்தது? எபிரெய மஸோரெட்டிக் பிரதிகளையும் (Masoretic text) வெஸ்ட்காட் மற்றும் ஹார்ட் (Westcott and Hort) தயாரித்த கிரேக்க பிரதிகளையும் வைத்துதான் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளை முதல் முதலில் மொழிபெயர்த்தார்கள். பழமையான கையெழுத்துப் பிரதிகளை இன்னும் நன்றாக ஆராய்ச்சி செய்ததால், பைபிளில் இருக்கும் சில வசனங்களை தெளிவாக புரிந்துகொள்ள முடிந்தது. சவக்கடல் சுருள்கள் நிறைய கண்டுபிடிக்கப்பட்டது. நிறைய கிரேக்க கையெழுத்துப் பிரதிகள் ஆராய்ச்சி செய்யப்பட்டது. அதிகம் ஆராய்ச்சி செய்யப்படாத சில கையெழுத்துப் பிரதிகளும் இப்போது கம்ப்யூட்டர் ஃபார்மாட்டில் (format) கிடைக்கிறது. அதனால், அந்த பிரதிகளை மற்ற பிரதிகளோடு ஒப்பிட்டு பார்க்கவும் அதில் இருக்கும் வித்தியாசங்களை தெரிந்துகொள்ளவும் இது உதவியாக இருந்தது. அதோடு எந்த எபிரெய மற்றும் கிரேக்க கையெழுத்துப் பிரதி சரியாக இருக்கிறது என்று தெரிந்துகொள்ளவும் முடிந்தது. இந்த எல்லா விஷயங்களும் புதிய உலக மொழிபெயர்ப்பு குழுவுக்கு உதவியாக இருந்தது. அவர்கள் இதையெல்லாம் பயன்படுத்தி ஆராய்ச்சி செய்ததால், பைபிளில் சில வசனங்களில் மாற்றம் செய்திருக்கிறார்கள்.
உதாரணத்துக்கு, கிரேக்க செப்டுவஜின்ட்டில் 2 சாமுவேல் 13:21 இப்படி சொல்கிறது: “ஆனாலும் அம்னோன் மனதை அவர் புண்படுத்த விரும்பவில்லை; அவன் அவருடைய மூத்த மகனாய் இருந்ததால், அவனை நேசித்தார்.” எபிரெய மஸோரெட்டிக் பிரதிகளில் இந்த வார்த்தைகள் இல்லாததால் முன்பிருந்த புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளில் இந்த வார்த்தைகள் இல்லை. ஆனால், சவக்கடல் சுருள்களில் இந்த வார்த்தைகள் இருந்ததால் 2013-ல் வெளியிடப்பட்ட பைபிளில் இது சேர்க்கப்பட்டிருக்கிறது. அதேபோல் ஒன்று சாமுவேல் புத்தகத்தில் கடவுளுடைய பெயர் புதிதாக 5 இடங்களில் சேர்க்கப்பட்டிருக்கிறது. கிரேக்க பிரதிகளை ஆராய்ச்சி செய்ததால் மத்தேயு 21:29-31-ல் இருக்கும் சில வரிகளை முன்னும் பின்னுமாக இடம் மாற்றியிருக்கிறார்கள். வெஸ்ட்காட் மற்றும் ஹார்ட் தயாரித்த கிரேக்க பிரதிகளை மட்டுமே வைத்து முடிவு செய்வதற்கு பதிலாக பல முக்கியமான கையெழுத்துப் பிரதிகளை வைத்து இந்த மாற்றங்களை செய்திருக்கிறார்கள்.
புதிதாக வெளியிடப்பட்ட பைபிளில் செய்யப்பட்ட இந்த மாற்றங்கள், கடவுளுடைய வார்த்தையை சுலபமாக வாசிக்கவும் நன்றாகப் புரிந்துகொள்ளவும் உதவுகிறது. யெகோவா பேசுவதை கேட்க விரும்பும் எல்லாருக்கும் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள் ஒரு தலைசிறந்த பரிசு!