“உப்பானது சாரமற்றுப்போனால்”
அதற்காக யுத்தமே நடந்திருக்கிறது. பணமாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பூர்வீக சீனாவில் தங்கத்திற்கு அடுத்ததாக மதிக்கப்பட்டது. அதுதான் உப்பு. உப்பு அதிக பயனுள்ள பொருளாக மனிதர்களால் நீண்டகாலமாகவே கருதப்பட்டது. அதற்கு குணப்படுத்தும் பண்பும் நோய் எதிர்க்கும் பண்பும் இருப்பதாக இன்றுவரை கருதப்படுகிறது. ருசியை அதிகரிப்பதற்கும் பொருட்களை பாதுகாப்பதற்கும்கூட அது உலகமுழுவதிலும் உபயோகிக்கப்படுகிறது.
உப்பிற்கு அநேக அருமையான பண்புகளும் வித்தியாசப்பட்ட உபயோகங்களும் உள்ளன. அதனால் பைபிளில் அடையாளப்பூர்வமாக உபயோகப்படுத்தப்பட்டிருப்பதில் ஆச்சரியமேதுமில்லை. உதாரணமாக, மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படி, யெகோவாவுக்கு பலி செலுத்தப்பட்ட எல்லாவற்றிலுமே உப்பு சேர்க்கப்பட்டது. (லேவியராகமம் 2:13) அந்தப் பலிகளின் ருசியை அதிகரிப்பதற்காக உப்பு சேர்க்கப்படவில்லை. மாறாக, அசுத்தமற்ற அல்லது சீர்கேடற்ற ஒரு நிலையை உப்பு குறிப்பதால் உபயோகப்படுத்தப்பட்டிருக்கலாம்.
பிரபலமாக அறியப்பட்ட இயேசு கிறிஸ்துவின் மலைப்பிரசங்கத்தில் அவர் தம் சீஷர்களிடம், “நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்” என்று கூறினார். (மத்தேயு 5:13) சீஷர்கள் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி பிரசங்கிப்பது, செவிகொடுப்பவர்கள் மீது பாதுகாக்கும் அல்லது உயிர் காக்கும் செல்வாக்காக இருக்கும் என்பதையே அர்த்தப்படுத்தினார். இயேசுவின் வார்த்தைகளுக்கு இசைவாக தங்கள் வாழ்க்கையை நடத்துபவர்கள், எந்தச் சமுதாயத்தில் வாழ்ந்தாலும் வேலைசெய்து வந்தாலும் ஒழுக்க ரீதியாகவும் ஆவிக்குரிய ரீதியாகவும் சீர்கெட்டுப்போவதிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள்.—1 பேதுரு 4:1-3.
இருந்தாலும், “உப்பானது சாரமற்றுப்போனால், . . . வெளியே கொட்டப்படுவதற்கும், மனுஷரால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது” என்ற எச்சரிப்பையும் இயேசு கொடுத்தார். இதைப் பற்றி பைபிள் அறிஞரான ஆல்பர்ட் பார்ன்ஸ் பின்வரும் கருத்தைத் தெரிவித்தார். இயேசுவும் அவருடைய அப்போஸ்தலர்களும் அறிந்திருந்த உப்பு, “அசுத்தமானதாக, தாவர பொருட்களும் மண் துகள்களும் கலந்ததாக” இருந்தது என்று கூறினார். ஆகவே, உப்பு சாரமற்றுப்போனால், “அதில் அதிகளவான மண்ணே” மீந்திருக்கும். “இது எதற்கும் உபயோகப்படாது. . . . சரளைக் கற்களைப்போல சாலையில் அல்லது நடைபாதையில் போட மட்டுமே பிரயோஜனப்படும்” என்று பார்ன்ஸ் கூறினார்.
கிறிஸ்தவர்கள் இந்த எச்சரிப்புக்கு செவிகொடுப்பவர்களாக, பிரசங்க வேலையை நிறுத்திவிடவோ தேவபக்தியற்ற நடத்தையில் மறுபடியும் விழுந்துவிடவோ கூடாது. விழுந்தால், ஆவிக்குரிய விதத்தில் சீரழிந்து ‘சாரமற்ற உப்பைப்போல’ பிரயோஜனமற்ற குப்பையாகிப் போவார்கள்.