அதிகாரம் 31
ஓய்வுநாளில் கதிர்களைப் பறிக்கலாமா?
மத்தேயு 12:1-8 மாற்கு 2:23-28 லூக்கா 6:1-5
சீஷர்கள் ஓய்வுநாளில் கதிர்களைப் பறிக்கிறார்கள்
இயேசு “ஓய்வுநாளுக்கு எஜமானாக” இருக்கிறார்
இயேசுவும் அவருடைய சீஷர்களும் கலிலேயாவுக்குப் போவதற்காக வடக்கு நோக்கிப் பயணம் செய்கிறார்கள். இந்தச் சமயத்தில், வயல்களில் கதிர்கள் செழித்து வளர்ந்திருக்கின்றன. சீஷர்கள் பசியாக இருப்பதால், கதிர்களைப் பறித்துச் சாப்பிடுகிறார்கள். ஆனால், அது ஓய்வுநாள். அவர்கள் செய்வதைப் பரிசேயர்கள் பார்க்கிறார்கள்.
கொஞ்ச நாட்களுக்கு முன்புதான், இயேசு ஓய்வுநாள் சட்டத்தை மீறிவிட்டார் என்று குற்றம்சாட்டி, எருசலேமிலிருந்த யூதர்கள் அவரைக் கொல்ல நினைத்தார்கள். இப்போது, அவருடைய சீஷர்கள் செய்வதைப் பார்த்து பரிசேயர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். “ஓய்வுநாளில் செய்யக்கூடாத காரியத்தை உன்னுடைய சீஷர்கள் செய்கிறார்கள்!” என்று அவரிடம் சொல்கிறார்கள்.—மத்தேயு 12:2.
கதிர்களைப் பறிப்பதும், சாப்பிடுவதற்காகக் கைகளில் தேய்ப்பதும் அறுவடை செய்து, போரடிப்பதற்குச் சமம் என்று பரிசேயர்கள் சொல்கிறார்கள். (யாத்திராகமம் 34:21) ஓய்வுநாள் சந்தோஷமான நாளாக, கடவுளுடன் மக்களுக்கு இருக்கிற பந்தத்தைப் பலப்படுத்துகிற நாளாக இருக்க வேண்டும். ஆனால், வேலை சம்பந்தமாகப் பரிசேயர்கள் போடுகிற கெடுபிடியான சட்டங்களால் ஓய்வுநாளைக் கடைப்பிடிப்பது மக்களுக்குக் கஷ்டமாக இருக்கிறது. ஓய்வுநாள் சட்டத்தை இப்படியெல்லாம் கடைப்பிடிக்க வேண்டும் என்று கடவுள் நினைக்கவே இல்லை. பரிசேயர்கள் தங்களுடைய தவறான எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று காட்டுவதற்காக இயேசு சில உதாரணங்களைச் சொல்கிறார்.
அதில் ஒன்றுதான் தாவீதையும் அவருடைய ஆட்களையும் பற்றிய உதாரணம். அவர்கள் பசியாக இருந்தபோது, வழிபாட்டுக் கூடாரத்துக்குப் போய் படையல் ரொட்டிகளைச் சாப்பிட்டார்கள். யெகோவாவின் முன்னால் புதிய ரொட்டிகள் வைக்கப்படும்போது, பழைய ரொட்டிகள் அங்கிருந்து எடுக்கப்படும். பொதுவாக, குருமார்கள்தான் இந்த ரொட்டிகளைச் சாப்பிடுவார்கள். ஆனாலும் இந்தச் சூழ்நிலையில், தாவீதும் அவருடைய ஆட்களும் இவற்றைச் சாப்பிட்டதற்காகத் தண்டிக்கப்படவில்லை.—லேவியராகமம் 24:5-9; 1 சாமுவேல் 21:1-6.
அடுத்தது, குருமார்களைப் பற்றிய உதாரணத்தை இயேசு சொல்கிறார். “ஆலயத்தில் இருக்கிற குருமார்கள் ஓய்வுநாட்களில் வேலை செய்தாலும் குற்றமற்றவர்களாகவே இருக்கிறார்கள் என்பதைப் பற்றித் திருச்சட்டத்தில் நீங்கள் வாசிக்கவில்லையா?” என்று இயேசு கேட்கிறார். ஏனென்றால், ஓய்வுநாட்களிலும்கூட குருமார்கள் பலிக்கான மிருகங்களை வெட்டுகிறார்கள், ஆலயத்தில் மற்ற வேலைகளைச் செய்கிறார்கள். “ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், ஆலயத்தைவிட மேலானவர் இங்கே இருக்கிறார்” என்று இயேசு சொல்கிறார்.—மத்தேயு 12:5, 6; எண்ணாகமம் 28:9.
தான் சொல்ல வந்த விஷயத்தைத் தெளிவுபடுத்துவதற்காக இயேசு மறுபடியும் வேதவசனங்களை எடுத்துக்காட்டுகிறார். “‘பலியை அல்ல, இரக்கத்தையே நான் விரும்புகிறேன்’ என்பதன் அர்த்தத்தை நீங்கள் புரிந்திருந்தால், குற்றமற்றவர்களைக் கண்டனம் செய்திருக்க மாட்டீர்கள்” என்று சொல்கிறார். கடைசியாக, “மனிதகுமாரன் ஓய்வுநாளுக்கு எஜமானாக இருக்கிறார்” என்று அவர்களிடம் சொல்கிறார். சமாதானம் தவழும் அவருடைய ஆயிர வருஷ ஆட்சியைப் பற்றியே இயேசு இங்கே குறிப்பிடுகிறார்.—மத்தேயு 12:7, 8; ஓசியா 6:6.
சாத்தானுடைய பிடியில் இருக்கிற இந்த உலகத்தில், மனிதர்கள் பல காலமாக கஷ்டத்தை அனுபவித்துவருகிறார்கள். வன்முறையாலும் போர்களாலும் நிலைமை கட்டுக்கடங்காமல் போயிருக்கிறது. ஆனால், நாம் எல்லாரும் ஏங்குகிற, நம் எல்லாருக்கும் மிகவும் தேவைப்படுகிற ஓய்வு கிறிஸ்துவின் ஆட்சியில் கிடைக்கும். அது மிகப் பெரிய ஓய்வுநாளைப் போல இருக்கும்! எப்பேர்ப்பட்ட நிம்மதி!