அடைக்கலப்பட்டணங்கள்—கடவுளுடைய இரக்கமுள்ள ஏற்பாடு
“கைப்பிசகாய் ஒருவனைக் கொன்றவன் எவனோ, அவன் அங்கே ஓடிப்போயிருக்கும்படிக்கு, அந்த ஆறு பட்டணங்களும் . . . அடைக்கலப்பட்டணங்களாய் இருக்கவேண்டும்.”—எண்ணாகமம் 35:15.
1. உயிரையும் இரத்தப்பழியையும் பற்றிய கடவுளுடைய கருத்து என்ன?
யெகோவா தேவன் மனித உயிரைப் பரிசுத்தமாகக் கருதுகிறார். உயிரானது இரத்தத்தில் உள்ளது. (லேவியராகமம் 17:11, 14) ஆகையால், பூமியில் முதல் பிறந்த மனிதனாகிய காயீன், தன் சகோதரனான ஆபேலைக் கொலை செய்தபோது இரத்தப்பழிக்கு உட்பட்டவனானான். இதன் காரணமாக, கடவுள் காயீனிடம்: ‘உன் சகோதரனின் இரத்தம் தரையிலிருந்து என்னை நோக்கிக் கூக்குரலிடுகிறது,’ என்று சொன்னார். கொலை நடந்த இடத்தில் தரையைக் கறைப்படுத்தின அந்த இரத்தம், கொடுமையாகக் குறுகச் செய்யப்பட்டிருந்த அந்த உயிருக்கு, அமைதலான, எனினும் திடமான சாட்சி பகர்ந்தது. பழிவாங்கும்படியாக ஆபேலின் இரத்தம் கடவுளை நோக்கிக் கூக்குரலிட்டது.—ஆதியாகமம் 4:4-11.
2. உயிரை யெகோவா மதிப்பதானது, ஜலப்பிரளயத்திற்குப் பின் எவ்வாறு அறிவுறுத்தப்பட்டது?
2 நீதிமானான நோவாவும் அவருடைய குடும்பமும் பூகோள ஜலப்பிரளயத்தைத் தப்பிப் பிழைத்தவர்களாகப் பேழையிலிருந்து வெளிவந்த பின்பு, மனித உயிரைக் கடவுள் மதிப்பது அறிவுறுத்தப்பட்டது. அந்தச் சமயத்தில், மனிதகுல உணவுடன் மிருக மாம்சத்தையும் உள்ளடக்கும்படி யெகோவா விரிவாக்கினார், ஆனால் இரத்தத்தை அல்ல. மேலும் அவர் இவ்வாறு கட்டளையிட்டார்: “உங்களுக்கு உயிராயிருக்கிற உங்கள் இரத்தத்திற்காகப் பழிவாங்குவேன்; சகல ஜீவஜந்துக்களிடத்திலும் மனுஷனிடத்திலும் பழிவாங்குவேன்; மனுஷனுடைய உயிருக்காக அவனவன் சகோதரனிடத்தில் பழிவாங்குவேன். மனுஷன் தேவசாயலில் உண்டாக்கப்பட்டபடியால், மனுஷனுடைய இரத்தத்தை எவன் சிந்துகிறானோ, அவனுடைய இரத்தம் மனுஷனாலே சிந்தப்படக்கடவது.” (ஆதியாகமம் 9:5, 6) கொலைசெய்தவனைக் காண்கையில் அவனைக் கொல்வதற்கான உரிமை, கொலை செய்யப்பட்டவனுடைய மிக நெருங்கிய உறவினனுக்கு இருந்ததை யெகோவா ஒப்புக்கொண்டார்.—எண்ணாகமம் 35:19.
3. உயிரின் பரிசுத்தத் தன்மையின்பேரில் மோசேயின் நியாயப்பிரமாணம் என்ன அழுத்தத்தை வைத்தது?
3 தீர்க்கதரிசியாகிய மோசேயின் மூலமாக இஸ்ரவேலுக்குக் கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணத்தில், உயிரின் பரிசுத்தத் தன்மை திரும்பத்திரும்ப அறிவுறுத்தப்பட்டது. உதாரணமாக, “கொலை செய்யாதிருப்பாயாக,” என்று கடவுள் கட்டளையிட்டார். (யாத்திராகமம் 20:13) உயிருக்கு மதிப்பு கொடுப்பதானது, கர்ப்பவதியான ஒரு பெண்ணுக்கு உண்டாகும் சேதம் சம்பந்தமாக மோசேயின் நியாயப்பிரமாணம் சொன்னதிலும் தெளிவாகத் தெரிகிறது. இரண்டு ஆண்களுக்கிடையில் உண்டான சண்டையின் விளைவாக அவள் அல்லது அவளுடைய இன்னும் பிறவாத குழந்தை தற்செயலாக அடிபட்டு உயிரிழக்க நேரிட்டால், நியாயாதிபதிகள் அந்தச் சந்தர்ப்பங்களையும், வேண்டுமென்றே செய்யப்பட்ட அளவையும் நியாயப்படி கவனித்தறிய வேண்டும். ஆனால் அதற்குத் தண்டனை “ஜீவனுக்கு ஜீவன்” ஆக, அல்லது உயிருக்கு உயிராக இருக்கக்கூடும். (யாத்திராகமம் 21:22-25) எனினும் இஸ்ரவேலனான கொலைபாதகன் தன் வன்முறைச் செயலின் விளைவுகளை எவ்வாறாவது தப்பிக்கொள்ளக் கூடுமா?
கொலைபாதகர்களுக்குப் புகலிடங்களா?
4. முற்காலத்தில், இஸ்ரவேலுக்குப் புறம்பே என்ன புகலிடங்கள் இருந்துவந்தன?
4 இஸ்ரவேல் அல்லாமல் மற்ற தேசங்களில், கொலைபாதகர்களுக்கும் மற்ற குற்றவாளிகளுக்கும் புகலிடம் அளிக்கப்பட்டது. பூர்வ எபேசுவில் அர்த்தமி தேவதையின் கோவில் போன்ற இடங்களில் இவ்வாறிருந்தது. இதைப்போன்ற இடங்களைக் குறித்து இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது: “சில கோவில்கள் குற்றவாளிகளை வளர்க்கும் மனைகளாக இருந்தன, இந்தப் புகலிடங்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துவது அடிக்கடி அவசியமாயிற்று. ஆதன்ஸில் சில புனித இடங்கள் மாத்திரமே அடைக்கலமளிக்கும் இடங்களாக (உதாரணமாக, அடிமைகளுக்கான தீஸியஸ் கோயில்) சட்டத்தால் ஒப்புக்கொள்ளப்பட்டன; திபேரியுவின் காலத்தில் கோயில்களிலிருந்த குற்றவாளிகளின் கூட்டங்கள் அவ்வளவு அதிக அபாயகரமாகிவிட்டதால், புகலிடங்களுக்குரிய உரிமை (22-ம் ஆண்டில்) சில பட்டணங்களுக்கேயென மட்டுப்படுத்தப்பட்டது.” (யூத என்ஸைக்ளோப்பீடியா (ஆங்கிலம்), 1909, தொகுதி II, பக்கம் 256) பின்னால், கிறிஸ்தவமண்டல சர்ச்சுகள் புகலிடங்களாயின. ஆனால் இது அதிகாரத்தை சமுதாய அதிகாரிகளிலிருந்து குருத்துவத்துக்கு மாற்றும் போக்குடையதாகி, தகுந்த நியாய நடைமுறை நிர்வாகத்திற்கு எதிராகச் செயல்பட்டது. இவற்றின் தவறான உபயோகங்கள், கடைசியாக இந்த ஏற்பாட்டை ஒழிப்பதற்கு வழிநடத்தினது.
5. ஒருவர் கொல்லப்பட்டபோது, கவனக்குறைவை இரக்கம் காண்பிப்பதற்குக் காரணமாக நியாயப்பிரமாணம் அனுமதிக்கவில்லை என்பதற்கு என்ன அத்தாட்சி உள்ளது?
5 இஸ்ரவேலருக்குள், வேண்டுமென்றே கொல்லும் கொலைபாதகர்களுக்குப் புனித அரண் அல்லது புகலிடம் அளிக்கப்படவில்லை. கடவுளுடைய பலிபீடத்தில் சேவை செய்யும் லேவிய ஆசாரியனும்கூட, சூழ்ச்சி செய்த கொலைபாதகத்திற்காகக் கொல்லப்படும்படி கொண்டுசெல்லப்பட வேண்டியதாயிருந்தது. (யாத்திராகமம் 21:12-14) மேலும், எவராவது கொல்லப்பட்டபோது, கவனக்குறைவை இரக்கம் காண்பிப்பதற்குக் காரணமாக நியாயப்பிரமாணம் அனுமதிக்கவில்லை. உதாரணமாக, ஒருவன் தன் புதிய வீட்டின் மொட்டைமாடிக்கு கைப்பிடிச்சுவரைக் கட்ட வேண்டியதாயிருந்தது. இல்லையெனில், அந்த மாடியிலிருந்து எவராவது விழுந்து மரித்தால் அந்த வீட்டின்மீது இரத்தப்பழி சுமரும். (உபாகமம் 22:8) மேலும், வழக்கமாய் முட்டுகிற ஒரு மாட்டின் சொந்தக்காரனுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருந்தும் அவன் தன் மிருகத்தைக் காப்பில் வைத்திராமல், அது எவரையாவது முட்டிக் கொன்றுவிட்டால், அந்த மாட்டின் சொந்தக்காரன் இரத்தப்பழியுடையவனாக இருந்தான், அவன் கொல்லப்படக்கூடும். (யாத்திராகமம் 21:28-32) மேலும், எவனாவது ஒரு திருடனை அடித்துக் கொன்றுவிட்டால், அது அவனைக் காணவும் அடையாளம் கண்டுகொள்ளவும் கூடிய பகல் நேரத்தில் நடந்திருந்தால் அவன் இரத்தப்பழியுடையவனாக இருந்தான் என்பதிலும், உயிரைக் கடவுள் உயர்வாக மதிப்பதன் மேலுமான அத்தாட்சி உள்ளது. (யாத்திராகமம் 22:2, 3) அவ்வாறெனில், பரிபூரணமாய்ச் சமநிலைப்பட்ட கடவுளுடைய கட்டளைகள், வேண்டுமென்றே கொலைசெய்த கொலைபாதகர்களை மரணதண்டனைக்குத் தப்புவதற்கு அனுமதிக்கவில்லை என்பது தெளிவாயுள்ளது.
6. பூர்வ இஸ்ரவேலில் ‘உயிருக்கு உயிர்’ என்ற சட்டம் எவ்வாறு நிறைவேற்றப்பட்டது?
6 பூர்வ இஸ்ரவேலில் ஒரு கொலை செய்யப்பட்டால், கொல்லப்பட்டவனுடைய இரத்தத்திற்காக பழிவாங்க வேண்டியதிருந்தது. ‘இரத்தப் பழிவாங்கவேண்டியவனால்’ அந்தக் கொலைபாதகன் கொல்லப்பட்டபோது, ‘உயிருக்கு உயிர்’ என்ற இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. (எண்ணாகமம் 35:19) பழிவாங்கினவன் கொல்லப்பட்ட அந்த ஆளின் மிக நெருங்கிய உறவினனாக இருந்தான். ஆனால் வேண்டுமென்றில்லாமல் கைப்பிசகாய் மனிதனைக் கொன்றவர்களைப் பற்றியதென்ன?
யெகோவாவின் இரக்கமுள்ள ஏற்பாடு
7. வேண்டுமென்றில்லாமல் எவரையாவது கொன்றுவிட்டவர்களுக்கு என்ன ஏற்பாட்டைக் கடவுள் செய்தார்?
7 கைப்பிசகாய் அல்லது வேண்டுமென்றில்லாமல் எவரையாவது கொன்றுவிட்டவர்களுக்காக, அடைக்கலப்பட்டணங்களைக் கடவுள் அன்புடன் ஏற்பாடு செய்தார். இவற்றைக் குறித்து மோசேயினிடம் சொன்னதாவது: “நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் யோர்தானைக் கடந்து, கானான் தேசத்தில் பிரவேசிக்கும்போது, கைப்பிசகாய் [“வேண்டுமென்றில்லாமல்,” NW] ஒருவனைக் கொன்றுபோட்டவன் ஓடிப்போயிருக்கத்தக்க அடைக்கலப்பட்டணங்களாகச் சில பட்டணங்களைக் குறிக்கக்கடவீர்கள். கொலைசெய்தவன் நியாயசபையிலே நியாயம் விசாரிக்கப்படுமுன் சாகாமல், பழிவாங்குகிறவன் கைக்குத் தப்பிப்போயிருக்கும்படி, அவைகள் உங்களுக்கு அடைக்கலப்பட்டணங்களாய் இருக்கக்கடவது. நீங்கள் கொடுக்கும் பட்டணங்களில் ஆறு பட்டணங்கள் அடைக்கலத்துக்காக இருக்கவேண்டும். யோர்தானுக்கு இப்புறத்தில் மூன்று பட்டணங்களையும், கானான்தேசத்தில் மூன்று பட்டணங்களையும் கொடுக்க வேண்டும்; அவைகள் . . . கைப்பிசகாய் ஒருவனைக் கொன்றவன் எவனோ, அவன் அங்கே ஓடிப்போயிருக்கும்படிக்கு . . . அடைக்கலப்பட்டணங்களாய் இருக்கவேண்டும்.”—எண்ணாகமம் 35:9-15.
8. அடைக்கலப்பட்டணங்கள் எங்கே அமைக்கப்பட்டிருந்தன, வேண்டுமென்றில்லாமல் கைப்பிசகாய் மனிதனைக் கொன்றுவிட்டவர்கள் அவற்றிற்குப் போய்ச் சேர எவ்வாறு உதவியளிக்கப்பட்டனர்?
8 வாக்குப்பண்ணப்பட்ட தேசத்துக்குள் இஸ்ரவேலர் பிரவேசித்தபோது, கீழ்ப்படிதலுடன் ஆறு அடைக்கலப்பட்டணங்களை அவர்கள் ஸ்தாபித்தனர். இந்தப் பட்டணங்களில் மூன்று—கேதேஸ், சீகேம், எபிரோன்—யோர்தான் நதிக்கு மேற்கே இருந்தன. கோலான், ராமோத், பேசேர் ஆகிய அடைக்கலப்பட்டணங்கள் யோர்தானுக்குக் கிழக்கே இருந்தன. இந்த அடைக்கலப்பட்டணங்கள் ஆறும் பழுதுபார்த்து நல்ல நிலையில் வைக்கப்பட்ட பாதைகளில் வசதியான இடங்களில் அமைந்திருந்தன. இந்தப் பாதைகளின் ஓரத்தில் பொருத்தமான இடங்களில் ‘அடைக்கலம்’ என்ற சொல்லைக்கொண்ட அறிவிப்புக்குறிகள் இருந்தன. இந்த அறிவிப்புக்குறிகள் அந்த அடைக்கலப்பட்டணத்தின் திசையைச் சுட்டிக்காட்டின. வேண்டுமென்று செய்திராத கொலைபாதகன் மிக அருகிலுள்ள ஒன்றுக்கு, தன் உயிரைக் காப்பதற்காக ஓடினான். இரத்தப் பழிவாங்குபவனிடமிருந்து அவன் அங்கே பாதுகாப்பைக் கண்டடையக் கூடும்.—யோசுவா 20:2-9.
9. அடைக்கலப்பட்டணங்களை யெகோவா ஏன் ஏற்பாடு செய்தார், யாருடைய நன்மைக்காக அவை ஏற்பாடு செய்யப்பட்டன?
9 ஏன் அடைக்கலப்பட்டணங்களைக் கடவுள் ஏற்பாடு செய்தார்? குற்றமற்ற இரத்தத்தால் தேசம் கறைபடாதபடியும், ஜனங்கள்மீது இரத்தப்பழி வராதபடியும் இருப்பதற்காக அவை ஏற்பாடு செய்யப்பட்டன. (உபாகமம் 19:10) யாருடைய நன்மைக்காக இந்த அடைக்கலப்பட்டணங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன? நியாயப்பிரமாணம் இவ்வாறு சொன்னது: “கைப்பிசகாய் ஒருவனைக் கொன்றவன் எவனோ, அவன் அங்கே ஓடிப்போயிருக்கும்படிக்கு, அந்த ஆறு பட்டணங்களும் இஸ்ரவேல் புத்திரருக்கும் உங்கள் நடுவே இருக்கும் பரதேசிக்கும் அந்நியனுக்கும் அடைக்கலப்பட்டணங்களாய் இருக்கவேண்டும்.” (எண்ணாகமம் 35:15) இவ்வாறு, இரக்கத்தை அனுமதிக்கையில், பட்சபாதமின்றியும் நீதிக்குரிய நோக்கங்களைச் சேவிக்கவும், (1) இஸ்ரவேல் புத்திரராயும், (2) இஸ்ரவேலில் பரதேசிகளாயும், அல்லது (3) மற்ற நாடுகளிலிருந்து வந்து தேசத்தில் குடியிருந்த அந்நியராயும் இருந்தவர்களில், வேண்டுமென்று செய்யாத கொலைபாதகர்களுக்கு அடைக்கலப்பட்டணங்களை ஒதுக்கி வைக்கும்படி யெகோவா இஸ்ரவேலருக்குக் கூறினார்.
10. அந்த அடைக்கலப்பட்டணங்கள் கடவுள் செய்த இரக்கமுள்ள ஏற்பாடு என்று ஏன் சொல்லலாம்?
10 ஒருவன் வேண்டுமென்று கொலைசெய்யாதவனாக இருந்தாலும்: “மனுஷனுடைய இரத்தத்தை எவன் சிந்துகிறானோ, அவனுடைய இரத்தம் மனுஷனாலே சிந்தப்படக்கடவது,” என்ற கடவுளுடைய கட்டளையின்படி அவன் கொல்லப்பட வேண்டும் என்பது கவனிக்கத்தக்கது. ஆகவே, யெகோவா தேவனின் இரக்கமுள்ள ஓர் ஏற்பாட்டின் மூலம் மாத்திரமே, வேண்டுமென்று கொலைசெய்யாதவன் அடைக்கலப்பட்டணங்களில் ஒன்றுக்கு ஓடிப்போகக்கூடியவனாக இருந்தான். இரத்தப் பழிவாங்குபவனுக்குத் தப்பியோடும் எவனுக்கும் பொதுவில் ஜனங்கள் பரிவிரக்க உணர்ச்சியுடையோராக இருந்தனரெனத் தோன்றுகிறது. ஏனெனில், தாங்களும் வேண்டுமென்றில்லாமல் தவறி, அதைப்போன்ற குற்றம் செய்து அடைக்கலமும் இரக்கமும் தேவைப்பட நேரிடலாமென அவர்களெல்லாரும் உணர்ந்தனர்.
அடைக்கலத்திற்காகத் தப்பியோடுதல்
11. பூர்வ இஸ்ரவேலில், ஒருவன் தற்செயலாய்த் தன் உடன் வேலையாளன் ஒருவனைக் கொன்றுவிட்டால் அவன் என்ன செய்யலாம்?
11 அடைக்கலத்திற்காகச் செய்த கடவுளின் இரக்கமுள்ள ஏற்பாட்டின்பேரில் உங்கள் மதித்துணர்வை ஒரு விளக்க உதாரணம் மிகைப்படுத்தலாம். நீங்கள் பூர்வ இஸ்ரவேலில் விறகு வெட்டிக்கொண்டிருக்கும் ஒரு மனிதனாக இருப்பதாய்க் கற்பனை செய்துகொள்ளுங்கள். கோடரி முகப்பு திடீரென்று அதன் கைப்பிடி காம்பிலிருந்து கழன்று பறந்து, உடன் வேலையாளன் ஒருவனைத் தாக்கிக் கொன்றுவிட்டதென்று வைத்துக்கொள்வோம். நீங்கள் என்ன செய்வீர்கள்? இதே சந்தர்ப்பநிலைமைக்கு நியாயப்பிரமாணத்தில் ஏற்பாடு இருந்தது. கடவுள் அளித்த இந்த ஏற்பாட்டை நீங்கள் சந்தேகமில்லாமல் பயன்படுத்திக்கொள்வீர்கள்: “கொலைசெய்து அங்கே ஓடிப்போய், உயிரோடிருக்கத்தக்கவன் யாரென்றால்: தான் முன்னே பகைத்திராத பிறனொருவனை மனதறியாமல் கொன்றவன்தானே. ஒருவன் விறகுவெட்ட மற்றொருவனோடே காட்டில் போய், மரத்தை வெட்டத் தன் கையிலிருந்த கோடரியை ஓங்கும்போது, இரும்பானது காம்பை விட்டுக் கழன்று மற்றவன்மேல் பட்டதினால் அவன் இறந்துபோனால், . . . இவன் அந்தப் பட்டணங்கள் ஒன்றில் ஓடிப்போய் உயிரோடிருப்பானாக.” (உபாகமம் 19:4-6) எனினும், அடைக்கலப்பட்டணம் ஒன்றுக்கு நீங்கள் போய்ச் சேர்ந்துவிட்டாலும், நடந்துவிட்ட காரியத்திற்கான எல்லா பொறுப்புக்கும் நீங்கலாக நீங்கள் இருப்பதில்லை.
12. வேண்டுமென்று செய்யாத கொலைபாதகன் ஓர் அடைக்கலப்பட்டணத்திற்கு ஓடிப்போய்ச் சேருகையில் என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?
12 நீங்கள் தயவோடு ஏற்கப்பட்டாலும், உங்கள் சந்தர்ப்பநிலையை அந்த அடைக்கலப்பட்டணத்தின் வாசலிலிருக்கும் மூப்பர்களுக்குக் கூற வேண்டும். அந்தப் பட்டணத்துக்குள் பிரவேசித்தப் பின்பு, கொலை நடந்த பிரதேசத்தின்மீது அதிகாரமுடையோராக, அந்தப் பட்டண வாசல்களில் இஸ்ரவேல் சபையைப் பிரதிநிதித்துவம் செய்யும் மூப்பர்களுக்கு முன்பாக நியாயவிசாரணை செய்யப்படும்படி திரும்ப அனுப்பப்படுவீர்கள். அங்கே நீங்கள் குற்றமற்றிருப்பதை நிரூபிக்க உங்களுக்கு வாய்ப்பிருக்கும்.
மனிதனைக் கொன்றவர்கள் விசாரணை செய்யப்படுகையில்
13, 14. மனிதனைக் கொன்றுவிட்ட ஒருவனின் விசாரணையின்போது மூப்பர்கள் உறுதிப்படுத்திக்கொள்ள விரும்பும் சில காரியங்கள் யாவை?
13 நியாய விசாரணை செய்யப்பட வேண்டிய அந்தப் பட்டண வாசலில் இருக்கும் மூப்பர்களுக்கு முன்பாக விசாரணை செய்யப்படும்போது, உங்கள் முந்தின நடத்தையின்பேரில் மிகுந்த அழுத்தம் வைக்கப்படுவதை நிச்சயமாகவே நன்றியறிதலோடு கவனிப்பீர்கள். கொல்லப்பட்டவனோடு உங்கள் உறவை மூப்பர்கள் கவனமாய்ச் சீர்தூக்கிக் காண்பார்கள். நீங்கள் அந்த மனிதனைப் பகைத்தீர்களா, அவனுக்காகப் பதுங்கிக் காத்திருந்து, வேண்டுமென்றே சாகும்படி அடித்தீர்களா? அவ்வாறெனில், இரத்தப்பழி வாங்குபவனிடம் மூப்பர்கள் உங்களை ஒப்புக்கொடுக்க வேண்டியதிருக்கும், நீங்கள் சாவீர்கள். ‘குற்றமில்லாத இரத்தப்பழியை இஸ்ரவேலை விட்டு விலக்க வேண்டும்’ என்ற நியாயப்பிரமாணக் கட்டளையைப்பற்றி, பொறுப்புள்ள இந்த மனிதர் அறிந்திருப்பார்கள். (உபாகமம் 19:11-13) இதற்கு ஒப்பாக, இன்று ஒரு நியாயவிசாரணை நடவடிக்கையில், கிறிஸ்தவ மூப்பர்கள், தவறுசெய்தவரின் முந்தின மனப்பான்மைக்கும் நடத்தைக்கும் கவனம் செலுத்தி, வேதவசனங்களை நன்றாய் அறிந்து, அவற்றிற்கு ஒத்திசைவாகச் செயல்பட வேண்டும்.
14 நகர மூப்பர்கள், தயவாகக் கூர்ந்து ஆராய்ந்து, அந்தக் கொலைக்கு ஆளானவனை நீங்கள் பதுங்கி பின்சென்று கொன்றீர்களா என்று அறிய விரும்புவார்கள். (யாத்திராகமம் 21:12, 13, NW) ஒரு ஒளிவிடத்திலிருந்து அவனைத் தாக்கினீர்களா? (உபாகமம் 27:24) அந்த ஆளுக்கு விரோதமாக அவ்வளவு அதிகம் கோபமூண்டதால் அவனைக் கொல்வதற்கு ஏதோ தந்திரமான திட்டத்தைத் தேடினீர்களா? அவ்வாறெனில், நீங்கள் மரணத்திற்குத் தகுதியாயிருப்பீர்கள். (யாத்திராகமம் 21:14) முக்கியமாய், உங்களுக்கும் கொலைக்கு ஆளானவருக்கும் இடையே பகைமை அல்லது வெறுப்பு இருந்துவந்ததா என்று மூப்பர்கள் அறிய வேண்டும். (உபாகமம் 19:4, 6, 7; யோசுவா 20:5) மூப்பர்கள் உங்களைக் குற்றமற்றவராகக் கண்டு அடைக்கலப்பட்டணத்துக்குத் திரும்ப அனுப்பினார்கள் என்று வைத்துக்கொள்வோம். காட்டப்பட்ட அந்த இரக்கத்திற்காக எவ்வளவு நன்றியுள்ளவராக இருப்பீர்கள்!
அடைக்கலப்பட்டணத்தில் வாழ்க்கை
15. வேண்டுமென்று செய்யாத கொலைபாதகன் என்ன கட்டளைகளுக்கு உட்படும்படி செய்யப்பட்டான்?
15 வேண்டுமென்றில்லாமல் கைப்பிசகாய்க் கொலைசெய்துவிட்டவன் அடைக்கலப்பட்டணத்துக்குள் அல்லது அதன் மதில்களுக்கு வெளியில் 1,000 முழ (ஏறக்குறைய 1,450 அடி) தூரத்துக்குள் தங்கியிருக்க வேண்டியிருந்தது. (எண்ணாகமம் 35:2-4) அந்த எல்லைக்கு அப்பால் அவன் திரிந்தால், இரத்தப் பழிவாங்குபவனை அவன் எதிர்ப்படக்கூடும். அந்தச் சந்தர்ப்பங்களில், பழிவாங்குபவன் தான் தண்டனைக்கு ஆளாகாமல் அந்தக் கொலைபாதகனைக் கொன்றுபோடலாம். ஆனால் கொலைசெய்தவன் விலங்கிடப்படவில்லை அல்லது சிறையிலடைக்கப்படவில்லை. அடைக்கலப்பட்டணத்தின் குடியிருப்பாளனாக, அவன் ஒரு தொழிலைக் கற்று, வேலைசெய்பவனாக, சமுதாயத்தின் பயனுள்ள ஓர் உறுப்பினனாய்ச் சேவிக்க வேண்டியவனாயிருந்தான்.
16. (அ) வேண்டுமென்று செய்யாத கொலைபாதகன் அடைக்கலப்பட்டணத்தில் எவ்வளவு காலம் இருக்க வேண்டும்? (ஆ) ஏன் பிரதான ஆசாரியனின் மரணம் ஒரு கொலைபாதகன் அடைக்கலப்பட்டணத்தை விட்டுச் செல்வதைக் கூடியதாக்கிற்று?
16 வேண்டுமென்று செய்யாத கொலைபாதகன் எவ்வளவு காலம் அடைக்கலப்பட்டணத்தில் இருக்க வேண்டும்? பெரும்பாலும் அவனுடைய மீதியான வாழ்நாள் முழுவதுமாக இருக்கலாம். எவ்வாறாயினும் நியாயப்பிரமாணம் இவ்வாறு கூறினது: “கொலைசெய்தவன் பிரதான ஆசாரியன் மரணமடையுமட்டும் அடைக்கலப்பட்டணத்திலிருக்க வேண்டும்; பிரதான ஆசாரியன் மரணமடைந்தபின்பு, தன் சுதந்தரமான காணியாட்சிக்குத் திரும்பிப்போகலாம்.” (எண்ணாகமம் 35:26-28) வேண்டுமென்று செய்யாத கொலைபாதகனைப் பிரதான ஆசாரியனுடைய மரணம் ஏன் அடைக்கலப்பட்டணத்தை விட்டுச் செல்வதற்கு அனுமதித்தது? பிரதான ஆசாரியன் அந்த ஜனத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஆட்களுள் ஒருவராக இருந்தார். ஆகையால் அவருடைய மரணம் அத்தகைய கவனிக்கத்தக்க நிகழ்ச்சியாயிருக்குமாதலால் அது இஸ்ரவேலின் எல்லா கோத்திரங்கள் முழுவதிலும் அறியப்படும். அடைக்கலப்பட்டணங்களில் அடைக்கலம் புகுந்தவர்கள் யாவரும் அப்போது, இரத்தப் பழிவாங்குபவரின் கைகளில் அகப்படும் ஆபத்தில்லாமல் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் செல்லக்கூடும். ஏன்? ஏனெனில் கொலைபாதகனைக் கொல்வதற்கு இருந்த பழிவாங்குபவனுடைய வாய்ப்பு, பிரதான ஆசாரியனுடைய மரணத்தோடு முடிந்துவிட்டதென்று கடவுளுடைய நியாயப்பிரமாணம் கட்டளையிட்டிருந்தது, எல்லாரும் இதை அறிந்திருந்தனர். நெருங்கிய உறவினன் அதன்பின் அந்த மரணத்துக்குப் பழிவாங்கினால், அவன் ஒரு கொலைபாதகனாக இருப்பான், கொலைக்கான தண்டனையை முடிவில் பெறுவான்.
நிலையான பயன்கள்
17. வேண்டுமென்று செய்யாத கொலைபாதகன்பேரில் வைக்கப்பட்ட கட்டுப்பாடுகளினால் உண்டாயிருக்கக்கூடிய பயன்கள் யாவை?
17 வேண்டுமென்று செய்யாத கொலைபாதகன்மீது வைக்கப்பட்ட கட்டுப்பாடுகளினால் உண்டாயிருக்கக்கூடிய பயன்கள் யாவை? ஒருவர் மரணமடையும்படி தான் செய்தான் என்பதற்கு ஒரு நினைப்பூட்டுதலாக அவை இருந்தன. மனிதனுடைய உயிர் பரிசுத்தமானதென்று அதன்பின் எப்போதும் அவன் கருதக்கூடும். மேலும், தான் இரக்கமாய் நடத்தப்பட்டிருந்தான் என்பதை அவன் மறக்கவே முடியாது. தனக்கு இரக்கம் காட்டப்பட்டிருக்க, தானும் மற்றவர்களிடம் இரக்கமாயிருக்க நிச்சயமாகவே விரும்புவான். இந்த அடைக்கலப்பட்டணங்களின் ஏற்பாடு அவற்றின் கட்டுப்பாடுகளோடுகூட பொதுவான ஜனங்களுக்கும் நன்மை பயக்கின. எவ்வாறு? மனித உயிரைப்பற்றி தாங்கள் கவனமற்றவர்களாக அல்லது அசட்டையாக இருக்கக்கூடாது என்பதை அவர்கள் மனதில் அது ஆழமாய்ப் பதியச் செய்திருக்கும். தற்செயலான மரணத்தில் விளையக்கூடிய கவனமின்மையைத் தவிர்ப்பதற்கான அவசியத்தைப்பற்றி கிறிஸ்தவர்கள் இதன்மூலம் நினைப்பூட்டப்பட வேண்டும். பின்னும், அடைக்கலப்பட்டணங்களுக்கான கடவுளுடைய இரக்கமுள்ள ஏற்பாடு, தேவைப்படுகையில் இரக்கம் காண்பிக்கும்படி நம்மையும் தூண்டி இயக்குவிக்க வேண்டும்.—யாக்கோபு 2:13.
18. அடைக்கலப்பட்டணங்களுக்கான கடவுளின் ஏற்பாடு என்ன வழிகளில் நற்பயனுடையதாக இருந்தது?
18 அடைக்கலப்பட்டணங்களுக்கான யெகோவா தேவனின் ஏற்பாடு மற்ற வழிகளிலும் நற்பயனுடையதாக இருந்தது. மனித கொலைபாதகன் ஒருவனை, ஆராயமலே அவனுடைய விசாரணைக்கு முன்பாகக் குற்றமுள்ளவனாகக் கருதி, அவனைப் பின்தொடர்ந்து பிடிக்க, நிலவர அமைதிக் காப்புக் குழுக்களை மக்கள் ஏற்படுத்தவில்லை. பதிலாக, அவர்கள் அவனை வேண்டுமென்றே செய்தக் குற்றவாளி அல்லவென்று கருதி, பாதுகாப்புக்கேதுவாக உதவியும் செய்தார்கள். மேலும், கொலைபாதகர்களைச் சிறைகளிலும் சீர்திருத்த சிறைச்சாலைகளிலும் வைத்து, அத்தகைய இடங்களில் பொதுஜன செலவால் அவர்களுக்கு உணவளித்து ஆதரிப்பதும், அங்கே அவர்கள் மற்ற குற்றவாளிகளோடு சேர்ந்த நெருங்கிய கூட்டுறவின் காரணமாக இன்னும் மோசமானக் குற்றவாளிகளாவதுமாகிய, தற்கால ஏற்பாடுகளுக்கு நேர் மாறாகவும் அடைக்கலப்பட்டணங்களின் இந்த ஏற்பாடு இருந்தது. இந்த அடைக்கலப்பட்டண ஏற்பாட்டில், கைதிகள் தப்பியோடவும் முயற்சி செய்யும், பெரும் செலவுண்டாக்குகிற மதில் சூழ்ந்த கம்பித்தடுப்பு சிறைச்சாலைகளைக் கட்டி, பழுதுபார்த்துக் காத்து வருவதற்கு அவசியமில்லை. அடைக்கலப்பட்டணத்தைக் குறித்ததில், கொலைபாதகன் உண்மையில் அந்தச் ‘சிறையை’ நாடி, குறிக்கப்பட்ட அந்தக் காலத்தின்போது அதற்குள் தங்கியிருந்தான். அவன் வேலை செய்பவனாகவும் இருக்க வேண்டியிருந்தது, இவ்வாறு உடன் மனிதருக்கு நன்மை பயக்கும் ஏதோ ஒன்றைச் செய்துகொண்டிருந்தான்.
19. அடைக்கலப்பட்டணங்களைக் குறித்து என்ன கேள்விகள் எழுப்பப்படுகின்றன?
19 வேண்டுமென்று செய்யாத கொலைபாதகர்களின் பாதுகாப்புக்காகச் செய்த, இஸ்ரவேலின் அடைக்கலப்பட்டணங்களுக்குரிய யெகோவாவின் ஏற்பாடு நிச்சயமாகவே இரக்கமுள்ளதாயிருந்தது. உயிருக்கு மதிப்புக் கொடுப்பதை இந்த ஏற்பாடு உண்மையாகவே முன்னேற்றுவித்தது. எனினும், இந்த 20-வது நூற்றாண்டில் வாழும் ஜனங்களுக்கு அந்தப் பூர்வ அடைக்கலப்பட்டணங்கள் உட்கருத்துள்ளவையாக இருக்கின்றனவா? யெகோவா தேவனுக்கு முன்பாக நாம் இரத்தப்பழியுடையோராயும் அவருடைய இரக்கம் நமக்குத் தேவை என்பதை உணராமலும் இருக்கக்கூடுமா? இஸ்ரவேலின் அடைக்கலப்பட்டணங்களில் நமக்குத் தற்கால உட்பொருள் ஏதாவது உள்ளதா?
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻ மனித உயிரை யெகோவா எவ்வாறு கருதுகிறார்?
◻ வேண்டுமென்று செய்யாத கொலைபாதகர்களுக்காக இரக்கமுள்ள என்ன ஏற்பாட்டை யெகோவா செய்தார்?
◻ கொலைபாதகன் ஒருவன் அடைக்கலப்பட்டணத்திற்குள் நுழைவதற்கு எவ்வாறு அனுமதியைப் பெற்றான், அங்கே அவன் எவ்வளவு காலம் இருக்க வேண்டும்?
◻ வேண்டுமென்றில்லாமல் மனிதனைக் கொன்றுவிட்டவன்பேரில் வைக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் உண்டாயிருந்திருக்கக்கூடிய நற்பயன்கள் யாவை?
[பக்கம் 12-ன் வரைப்படம்]
இஸ்ரவேலின் அடைக்கலப்பட்டணங்கள் வசதியான இடங்களில் அமைந்திருந்தன
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
கேதேஸ் யோர்தான் நதி கோலான்
சீகேம் ராமோத்
எபிரோன் பேசேர்