யெகோவாவின் வார்த்தை ஜீவனுள்ளது
எண்ணாகம புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
இஸ்ரவேலர் எகிப்திலிருந்து விடுதலை பெற்று வந்த பின் ஒரு தேசமாக ஒழுங்கமைக்கப்பட்டார்கள். அதன் பிறகு சீக்கிரத்திலேயே வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்கு அடியெடுத்து வைக்க அவர்களுக்கு வாய்ப்பு இருந்தது, ஆனால் அவர்கள் உடனடியாக அங்கு செல்லவில்லை. மாறாக, “பயங்கரமான பெரிய வனாந்திர வழியாய்” கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் அலைந்து திரிய வேண்டியிருந்தது. (உபாகமம் 8:15) ஏன்? என்ன நடந்தது என்பதை எண்ணாகமம் என்ற பைபிள் புத்தகத்திலுள்ள சரித்திரப் பதிவு நமக்கு சொல்கிறது. யெகோவா தேவனுக்கு கீழ்ப்படிவதன் அவசியத்தையும் அவரது பிரதிநிதிகளுக்கு மரியாதை கொடுப்பதன் அவசியத்தையும் இது நம் மனதில் பதிய வைக்க வேண்டும்.
இப்புத்தகம் வனாந்தரத்தில், மோவாப் சமவெளிகளில் மோசேயால் எழுதப்பட்டது; இப்புத்தகத்தில், பொ.ச.மு. 1512 முதல் பொ.ச.மு. 1473 வரை, அதாவது 38 ஆண்டுகளும் 9 மாதங்களும் கொண்ட காலப்பகுதியில் நடந்த சம்பவங்கள் அடங்கியுள்ளன. (எண்ணாகமம் 1:1; உபாகமம் 1:4) சுமார் 38 வருட இடைவெளியில் இஸ்ரவேலரின் தொகை இரண்டு முறை கணக்கெடுக்கப்பட்டது; இதனால் இப்புத்தகத்திற்கு எண்ணாகமம் என்ற பெயர் வந்தது. (அதிகாரங்கள் 1-4, 26) இப்புத்தகத்தில் காணப்படும் விவரங்கள் மூன்று பகுதிகளாக கொடுக்கப்பட்டுள்ளன. முதல் பகுதி, சீனாய் மலையில் நடந்த சம்பவங்களை விளக்குகிறது. இரண்டாம் பகுதி, வனாந்தரத்தில் இஸ்ரவேலர் சுற்றித் திரிந்த சமயத்தில் நடந்தவற்றை குறிப்பிடுகிறது. கடைசி பகுதி, மோவாப் சமவெளிகளில் நடந்த சம்பவங்களை விவரிக்கிறது. இப்புத்தகத்திலுள்ள பதிவை வாசிக்கையில், ஒருவேளை பின்வரும் கேள்விகளை நீங்கள் சிந்தித்துப் பார்க்க விரும்பலாம்: ‘இச்சம்பவங்கள் என்ன பாடத்தை எனக்கு கற்பிக்கின்றன? இன்று எனக்கு பயனளிக்கும் நியமங்கள் இந்த புத்தகத்தில் இருக்கின்றனவா?’
சீனாய் மலையில்
இஸ்ரவேலர் சீனாய் மலையின் அடிவாரத்தில் இருக்கையில்தான் முதல் கணக்கெடுப்பு நடக்கிறது. லேவியர் நீங்கலாக, 20 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதில் இருக்கிற ஆண்களின் எண்ணிக்கை 6,03,550. இந்தக் கணக்கெடுப்பு இராணுவ நோக்கத்திற்காகவே செய்யப்படுகிறது. பெண்கள், பிள்ளைகள், லேவியர் உட்பட பாளயத்தில் இருக்கிறவர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 30 லட்சத்திற்கும் அதிகம்.
கணக்கெடுப்பிற்குப் பின், இஸ்ரவேலர் சில அறிவுரைகளை பெறுகிறார்கள். அதாவது, பயணம் செய்ய வேண்டிய விதம், லேவியரின் கடமை மற்றும் ஆசரிப்புக் கூடார சேவை சம்பந்தப்பட்ட விவரங்கள், தொற்று நோயாளிகளை தனிப்படுத்தி வைப்பது சம்பந்தப்பட்ட கட்டளைகள், பொறாமை கொள்பவர்கள் சம்பந்தப்பட்ட சட்டங்கள், நசரேயர்களுக்கான பொருத்தனைகள் ஆகியவற்றை பெறுகிறார்கள். பலிபீடப் பிரதிஷ்டைக்காக கோத்திர பிரபுக்கள் செலுத்திய பலிகளைப் பற்றிய தகவல் 7-ம் அதிகாரத்தில் உள்ளது. பஸ்கா ஆசரிப்பு பற்றிய விஷயங்களை 9-ம் அதிகாரம் கலந்தாலோசிக்கிறது. கூடாரம் போடுவது, அதைப் பிரிப்பது சம்பந்தப்பட்ட அறிவுரைகளும் இஸ்ரவேல் சபையாருக்கு கொடுக்கப்படுகின்றன.
வேதப்பூர்வ கேள்விகளுக்கு பதில்கள்:
2:1, 2—வனாந்தரத்தில் மூன்று கோத்திரத்தாரும் ‘கொடிகளை’ சுற்றி கூடாரம் போட வேண்டியிருந்தது; அந்தக் ‘கொடிகள்’ யாவை? இந்தக் கொடிகளைப் பற்றி பைபிளில் எந்த விவரமும் காணப்படுவதில்லை. என்றாலும், அவை புனித அடையாளங்களாக கருதப்படவில்லை, அவற்றிற்கு மத ரீதியிலான முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. நடைமுறையான ஒரு நோக்கத்துடனேயே அந்தக் கொடிகள் பயன்படுத்தப்பட்டன, அதாவது பாளயத்தில் ஒருவர் தன்னுடைய இருப்பிடத்தை கண்டுபிடிப்பதற்கு உதவியாக பயன்படுத்தப்பட்டன.
5:27—விபச்சாரம் செய்த ஒரு மனைவியின் “இடுப்பு சூம்பும்” என்பதன் அர்த்தம் என்ன? இனப்பெருக்க உறுப்புகளை குறிப்பதற்காக “இடுப்பு,” அதாவது “அரை” என்ற வார்த்தை இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. (எபிரெயர் 7:5) “சூம்பும்” என்பது அந்த உறுப்புகளின் சக்தி இழக்கப்படுவதை அர்த்தப்படுத்துகிறது; அதனால் கருவுற முடியாமல் போய்விடும்.
நமக்குப் பாடம்:
6:1-7. நசரேயர்கள் திராட்சப்பழத்திலிருந்து செய்யப்பட்ட எந்தவொரு பொருளையும் மதுபானத்தையும் விலக்கி, தன்னலம் துறந்த வாழ்க்கையை நடத்த வேண்டியிருந்தது. அவர்கள் தங்களுடைய தலைமயிரை நீளமாக வளரவிட வேண்டியிருந்தது. அது, பெண்கள் தங்களுடைய கணவருக்கோ தகப்பனுக்கோ கீழ்ப்பட்டிருப்பது போல யெகோவாவுக்கு கீழ்ப்பட்டிருப்பதன் அடையாளமாக இருந்தது. நசரேயர்கள், பிரேதத்திற்கு அருகில், ஏன் நெருங்கிய உறவினருடைய சடலத்திற்கு அருகிலும்கூட செல்லாமல் தங்களை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டியிருந்தது. தன்னலம் துறந்து யெகோவாவுக்கும் அவரது ஏற்பாட்டுக்கும் கீழ்ப்பட்டிருக்கும் விஷயத்தில், இன்று முழுநேர ஊழியர்கள் சுய தியாக மனப்பான்மையைக் காட்டுகிறார்கள். எப்படியெனில், வெகு தொலைவிலுள்ள ஒரு நாட்டில் அவர்கள் சேவை செய்து கொண்டிருக்கலாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில், நெருங்கிய குடும்ப அங்கத்தினருடைய சவ அடக்கத்தில் கலந்துகொள்வதற்காக வீட்டிற்கு வருவது கடினமாக இருக்கலாம் அல்லது வரமுடியாமலே போய்விடலாம்.
8:25, 26. லேவியரின் பொறுப்பை சரிவர நிறைவேற்றுவதற்காகவும் அவர்களுடைய வயதிற்கு கரிசனை காட்டுவதற்காகவும் கட்டாய சேவையிலிருந்து ஓய்வு பெறும்படி முதியவர்களுக்கு கட்டளையிடப்பட்டது. என்றாலும், அவர்கள் தாங்களாகவே மனமுவந்து மற்ற லேவியருக்கு ஒத்தாசை புரியலாம். இன்று ராஜ்ய அறிவிப்பாளர் ஒருவருக்கு பணி ஓய்வு என எதுவும் இல்லாதபோதிலும், ஒரு மதிப்புமிக்க பாடத்தை இச்சட்டத்தின் நியமம் கற்பிக்கிறது. முதிர் வயதின் காரணமாக ஒரு கிறிஸ்தவரால் சில கடமைகளை நிறைவேற்ற முடியாமல் போனாலும் தன்னுடைய சக்திக்குட்பட்ட சேவையில் அவர் ஈடுபடலாம்.
வனாந்தரத்தில் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு
ஆசரிப்புக் கூடாரத்தின் மேலிருக்கும் மேகம் உயரே எழும்பும்போது, இஸ்ரவேலர் அந்த இடத்தை விட்டுக் கிளம்புகிறார்கள். 38 ஆண்டுகளும் ஓரிரு மாதங்களும் கடந்த பிறகு மோவாபின் பாலைவனச் சமவெளியை அவர்கள் அடைவார்கள். யெகோவாவின் சாட்சிகளால் வெளியிடப்பட்ட ‘அந்த நல்ல தேசத்தைப் பாருங்கள்’ என்ற சிற்றேட்டில் பக்கம் 9-ல் உள்ள வரைபட மார்க்கத்தைப் பின்பற்றி அவர்களுடன் செல்வது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கலாம்.
காதேசுக்கு செல்லும் வழியில் பாரான் வனாந்தரத்திலே குறைந்தபட்சம் மூன்று காரியங்களுக்காக முறையிடுகிறார்கள். ஜனத்தில் சிலரை பட்சித்துப் போடுவதற்காக யெகோவா அக்கினியை வருவிக்கிறபோது முதல் முறையீடு முடிவுக்கு வருகிறது. அடுத்து இறைச்சிக்காக இஸ்ரவேலர் முறையிடுகிறார்கள், அப்போது யெகோவா காடையை அளிக்கிறார். மோசேக்கு விரோதமாக மிரியாமும் ஆரோனும் முறையிடுவதன் விளைவாக மிரியாம் தற்காலிகமாக குஷ்டரோகத்தால் பீடிக்கப்படுகிறார்.
காதேசில் கூடாரமிட்டிருக்கையில், வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை வேவு பார்க்க 12 பேரை மோசே அனுப்புகிறார். அவர்கள் 40 நாட்களுக்குப் பிறகு திரும்பி வருகிறார்கள். வேவுகாரரில் பத்து பேர் சொன்ன சாதகமற்ற அறிக்கையை ஜனங்கள் நம்புவதால், மோசேயையும் ஆரோனையும் உண்மையுள்ள வேவுகாரர்களான யோசுவாவையும் காலேபையும் அவர்கள் கல்லெறிய நினைக்கிறார்கள். அந்த ஜனங்களை கொள்ளை நோயினால் வாதிக்கப் போவதாக யெகோவா சொல்கிறார். ஆனால் ஜனங்களுக்காக மோசே பரிந்து பேசுவதால், தொகையிடப்பட்டவர்கள் சாகும் வரையில் அவர்கள் 40 ஆண்டுகள் வனாந்தரத்தில் அலைந்து திரிவார்கள் என கடவுள் அறிவிக்கிறார்.
கூடுதலான விதிமுறைகளை யெகோவா அளிக்கிறார். மோசே மற்றும் ஆரோனுக்கு விரோதமாக கோராகும் மற்றவர்களும் கலகம் செய்கிறார்கள். ஆனால் கலகக்காரர்களை அக்கினி பட்சித்துப் போடுகிறது, அல்லது பூமி விழுங்கிவிடுகிறது. மறுநாளில் சபையார் எல்லாருமே மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுக்கிறார்கள். அதன் விளைவாக, யெகோவா வருவித்த வாதையால் 14,700 பேர் மாண்டு போகிறார்கள். ஆரோனை பிரதான ஆசாரியனாக தேர்ந்தெடுத்ததை தெரியப்படுத்துவதற்காக அவருடைய கோலை கடவுள் துளிர்க்கச் செய்கிறார். அடுத்து, லேவியரின் கடமைகள் மற்றும் ஜனங்களின் சுத்திகரிப்பு சம்பந்தமான கூடுதல் சட்டங்களையும் யெகோவா கொடுக்கிறார். சிவப்பு கிடாரியின் சாம்பலை பயன்படுத்துவது, இயேசுவின் பலி மூலம் சுத்திகரிக்கப்படுவதற்கு அடையாளமாகும்.—எபிரெயர் 9:13, 14.
இஸ்ரவேல் புத்திரர் காதேசுக்கு திரும்பிப் போகிறார்கள், அங்கே மிரியாம் இறந்துவிடுகிறார். மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக சபையார் மீண்டும் முறையிடுகிறார்கள். காரணம்? தண்ணீர் இல்லை என்பதே. அற்புதமாய் தண்ணீர் அளிக்கையில் மோசேயும் ஆரோனும் யெகோவாவின் பெயரை பரிசுத்தப்படுத்த தவறுகிறார்கள். இதனால் அவர்கள் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்கு செல்ல முடியாமல் போகிறது. இஸ்ரவேலர் காதேசிலிருந்து குடிபெயர்கிறார்கள், அதன் பிறகு ஓர் என்ற மலையில் ஆரோன் மரிக்கிறார். ஏதோமைச் சுற்றி செல்கையில் இஸ்ரவேலர் களைப்படைந்து விடுவதால் அவர்கள் கடவுளுக்கும் மோசேக்கும் எதிராக பேசுகிறார்கள். அவர்களைத் தண்டிப்பதற்காக விஷப் பாம்புகளை யெகோவா அனுப்புகிறார். இந்த முறையும் ஜனங்கள் சார்பாக மோசே பரிந்து பேசுகிறார். ஒரு வெண்கல சர்ப்பத்தை உண்டாக்கும்படி கடவுள் அவருக்கு கட்டளையிடுகிறார். கடிபட்டவர்கள் அதைப் பார்ப்பதன் மூலம் குணமடைவதற்காக அதை ஒரு கம்பத்தில் நிறுத்துமாறும் கட்டளையிடுகிறார். இந்த சர்ப்பம், நமது நித்திய நன்மைக்காக இயேசு கழுமரத்தில் அறையப்பட்டதற்கு முன்நிழலாகும். (யோவான் 3:14, 15) எமோரிய ராஜாக்களான சீகோனையும் ஓக்கையும் இஸ்ரவேலர் முறியடித்து அவர்களுடைய தேசத்தை கைப்பற்றுகிறார்கள்.
வேதப்பூர்வ கேள்விகளுக்கு பதில்கள்:
12:1—மோசேக்கு விரோதமாக மிரியாமும் ஆரோனும் ஏன் முறையிட்டார்கள்? அதிக செல்வாக்கை பெறுவதற்காக மிரியாம் ஆசைப்பட்டதே அவர்களுடைய முறையீட்டிற்கு முக்கிய காரணமென தெரிகிறது. மோசேயின் மனைவி சிப்போராள் வனாந்தரத்தில் மீண்டும் அவருடன் சேர்ந்துகொண்டதால், பாளயத்தில் தான் இனி தலைவியாக கருதப்பட மாட்டாள் என மிரியாம் நினைத்திருக்கலாம்.—யாத்திராகமம் 18:1-5.
12:9-11—ஏன் மிரியாம் மட்டும் குஷ்டரோகத்தால் வாதிக்கப்பட்டார்? ஏனெனில் இந்த முறையீட்டிற்கு மிரியாமே முக்கிய காரணமாக இருந்திருக்கலாம்; இந்த விஷயத்தில் தன்னுடன் சேர்ந்துகொள்ளும்படி ஆரோனை அவள் சம்மதிக்க வைத்திருக்கலாம். ஆனால், ஆரோன் பிற்பாடு தான் செய்த தவறை ஒத்துக்கொண்டு, சரியான மனப்பான்மையைக் காட்டினார்.
21:14, 15—இங்கு குறிப்பிடப்பட்டுள்ள புஸ்தகம் எது? பைபிள் எழுத்தாளர்கள் பல்வேறு புத்தகங்களிலிருந்த தகவல்களைப் பயன்படுத்தினதாக வேத வசனங்கள் குறிப்பிடுகின்றன. (யோசுவா 10:12, 13; 1 இராஜாக்கள் 11:41; 14:19, 29) அப்படிப்பட்ட புத்தகங்களில் ஒன்றுதான் ‘கர்த்தருடைய யுத்த புஸ்தகம்.’ யெகோவாவின் ஜனங்கள் தொடுத்த யுத்தங்களைப் பற்றிய சரித்திரப் பதிவு அதில் இருந்தது.
நமக்குப் பாடம்:
11:27-29. யெகோவாவின் சேவையில் மற்றவர்கள் சிலாக்கியங்களைப் பெறும்போது நாம் எப்படி பிரதிபலிக்க வேண்டும் என்பதற்கு மோசே தலைசிறந்த முன்மாதிரி வைக்கிறார். எல்தாதும் மேதாதும் தீர்க்கதரிசனம் சொல்ல ஆரம்பித்தபோது மோசே பொறாமைப்பட்டு தனக்குப் புகழை தேடிக்கொள்வதற்கு பதிலாக சந்தோஷப்பட்டார்.
12:2, 9, 10; 16:1-3, 12-14, 31-35, 41, 46-50. தாம் நியமித்திருக்கும் அதிகாரத்திற்கு தம்முடைய வணக்கத்தார் மரியாதை காட்ட வேண்டுமென யெகோவா எதிர்பார்க்கிறார்.
14:24. தவறு செய்யும்படியான உலக அழுத்தங்களை தவிர்ப்பதற்கு முக்கிய வழி “வேறே ஆவியை,” அதாவது மனப்பான்மையை வளர்ப்பதாகும். அது இந்த உலகத்தின் மனப்பான்மையைப் போல் இருக்கக் கூடாது.
15:37-41. இஸ்ரவேலர் கடவுளை வணங்குவதற்கும் அவருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிவதற்கும் தனியாக பிரித்து வைக்கப்பட்டவர்கள் என்பதை அவர்களுடைய வஸ்திரங்களின் ஓரங்களில் இருந்த விசேஷித்த தொங்கல்கள் நினைப்பூட்டின. நாமும்கூட கடவுளுடைய தராதரங்களின்படி வாழ்ந்து இந்த உலகிலிருந்து வித்தியாசப்பட்டவர்களாக நம்மைக் காட்ட வேண்டாமா?
மோவாப் சமவெளிகளில்
இஸ்ரவேல் புத்திரர் மோவாப் சமவெளிகளில் கூடாரமிட்டிருக்கையில் மோவாபியர் அவர்களைக் கண்டு கலக்கமடைகிறார்கள். இஸ்ரவேலரை சபிக்கும்படி பிலேயாமுக்கு மோவாபின் ராஜாவாகிய பாலாக் கூலி கொடுக்கிறார். ஆனால் அவர்களை ஆசீர்வதிக்கும்படி பிலேயாமை யெகோவா வற்புறுத்துகிறார். அடுத்து, இஸ்ரவேல் ஆண்களை ஒழுக்கக்கேட்டிலும் விக்கிரகாராதனையிலும் சிக்கவைப்பதற்கு மோவாபிய பெண்களும் மீதியானிய பெண்களும் பயன்படுத்தப்படுகிறார்கள். அதன் விளைவாக, தவறிழைத்த 24,000 பேரை யெகோவா அழித்துவிடுகிறார். யெகோவாவுக்கு போட்டியாக செய்யப்படும் எதையும் பொறுத்துக்கொள்ள முடியாது என்பதை பினெகாஸ் நிரூபித்துக்காட்டுகிறார். அப்போதுதான் வாதை முடிவுக்கு வருகிறது.
முதலாம் கணக்கெடுப்பின்போது தொகையிடப்பட்டவர்களில் யோசுவாவையும் காலேபையும் தவிர வேறு யாரும் இப்போது உயிரோடு இல்லை என்பதை இரண்டாம் கணக்கெடுப்பு காட்டுகிறது. மோசே இறந்த பிறகு யோசுவா தலைவராக இருக்கும்படி நியமிக்கப்படுகிறார். பல்வேறு பலிகள் செய்வதற்கான முறைகளையும் பொருத்தனைகள் செய்வதற்கான அறிவுரைகளையும் இஸ்ரவேலர் பெற்றுக்கொள்கிறார்கள். மீதியானியர்களையும் இஸ்ரவேலர் பழிவாங்குகிறார்கள். ரூபன் கோத்திரத்தாரும் காத் கோத்திரத்தாரும் மனாசேயின் பாதி கோத்திரத்தாரும் யோர்தான் நதியின் கிழக்கே குடியிருக்கிறார்கள். யோர்தானை கடந்து தேசத்தை சுதந்தரிப்பது சம்பந்தமாக இஸ்ரவேலர் அறிவுரைகளை பெறுகிறார்கள். தேசத்தின் எல்லைகளைப் பற்றிய முழு விபரமும் கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு கோத்திரத்திற்கும் உரிய இடங்கள் சீட்டுப்போட்டு தீர்மானிக்கப்படுகின்றன. லேவியருக்கு 48 பட்டணங்கள் நியமிக்கப்படுகின்றன; அவற்றில் 6 பட்டணங்கள் அடைக்கலப் பட்டணங்களாக ஒதுக்கப்படுகின்றன.
வேதப்பூர்வ கேள்விகளுக்கு பதில்கள்:
22:20-22—பிலேயாமின் மீது யெகோவா ஏன் கடுங்கோபம் கொண்டார்? இஸ்ரவேலரை சபிக்கக் கூடாதென பிலேயாம் தீர்க்கதரிசியிடம் யெகோவா சொல்லியிருந்தார். (எண்ணாகமம் 22:12) ஆனாலும், இஸ்ரவேலை சபிக்க வேண்டுமென்ற எண்ணத்துடனேயே பாலாக்கின் மனிதரோடு அந்த தீர்க்கதரிசி சென்றார். அவர் மோவாபின் ராஜாவை பிரியப்படுத்தி அவரிடமிருந்து வெகுமதியை பெற்றுக்கொள்ள விரும்பினார். (2 பேதுரு 2:15, 16; யூதா 11) இஸ்ரவேலரை சபிப்பதற்கு பதிலாக அவர்களை ஆசீர்வதிக்கும்படி பிலேயாம் பலவந்தப்படுத்தப்பட்டாலும், இஸ்ரவேல் ஆண்களை கெடுப்பதற்கு பாகால் வணக்கத்தாரான பெண்களை உபயோகிக்கும்படி ஆலோசனை கொடுப்பதன் மூலம் ராஜாவின் ஆதரவை அவர் நாடினார். (எண்ணாகமம் 31:15, 16) ஆக, பிலேயாம் மீது கடவுள் கோபம் கொண்டதற்கு காரணம் அவருடைய கீழ்த்தரமான பேராசையே.
30:6-8—ஒரு கிறிஸ்தவர் தன் மனைவியின் பொருத்தனைகளை ஒதுக்கித் தள்ளலாமா? இன்று பொருத்தனைகளை குறித்ததில், அது தமக்கும் தனிப்பட்ட நபருக்கும் உரிய ஒன்றாக யெகோவா கருதுகிறார். எடுத்துக்காட்டாக, யெகோவாவுக்கு ஒப்புக்கொடுப்பது ஒரு தனிப்பட்ட பொருத்தனையாகும். (கலாத்தியர் 6:5) அப்படிப்பட்ட ஒரு பொருத்தனையை ஒதுக்கித் தள்ளுவதற்கோ நிராகரிப்பதற்கோ ஒரு கணவருக்கு அதிகாரமில்லை. என்றாலும், கடவுளுடைய வார்த்தைக்கு, அல்லது கணவருக்கு செய்ய வேண்டிய கடமைகளுக்கு முரணாக பொருத்தனை செய்வதை ஒரு மனைவி தவிர்க்க வேண்டும்.
நமக்குப் பாடம்:
25:11. யெகோவாவின் வணக்கத்தின் பேரிலுள்ள வைராக்கியத்திற்கு பினெகாஸ் எப்பேர்ப்பட்ட முன்மாதிரி! அப்படியானால், சபையை சுத்தமாக வைக்க வேண்டும் என்ற ஆசை, படுமோசமான ஒழுக்கக்கேட்டை குறித்து நாம் அறிந்திருந்தால் அதை கிறிஸ்தவ மூப்பர்களிடம் தெரிவிக்க நம்மை தூண்ட வேண்டுமல்லவா?
35:9-29. வேண்டுமென்றே கொலை செய்யாத ஒருவன் தன் வீட்டை விட்டு ஓடி சில காலத்திற்கு அடைக்கலப் பட்டணத்தில் தங்க வேண்டியிருந்த விஷயம், உயிர் பரிசுத்தமானது என்பதையும் அதை மதிக்க வேண்டும் என்பதையும் நமக்கு கற்பிக்கிறது.
35:33. குற்றமற்றவர்களுடைய இரத்தத்தினால் கறைபடுத்தப்பட்ட இந்த பூமி அதைச் சிந்தினவர்களுடைய இரத்தத்தாலேயே பாவநிவிர்த்தி செய்யப்படும். ஆகவே, இந்த பூமி ஒரு பரதீஸாக மாற்றப்படுவதற்கு முன்பாக பொல்லாதவர்களை யெகோவா அழித்துப்போடுவார் என்பது எவ்வளவு பொருத்தமானது!—நீதிமொழிகள் 2:21, 22; தானியேல் 2:44.
கடவுளுடைய வார்த்தை வல்லமையுள்ளது
நாம் யெகோவாவுக்கும், அவருடைய மக்கள் மத்தியில் பொறுப்புள்ள ஸ்தானங்களில் நியமிக்கப்பட்டிருப்போருக்கும் மரியாதை காட்ட வேண்டும். எண்ணாகம புத்தகம் இந்த உண்மையை நன்கு வலியுறுத்திக் காட்டுகிறது. இன்று சபையில் சமாதானத்தையும் ஐக்கியத்தையும் கட்டிக்காப்பதற்கு எத்தகைய முக்கியமான ஒரு பாடம் இது!
தங்களுடைய ஆவிக்குரிய தன்மையை அசட்டை செய்வோர் முறுமுறுத்தல், ஒழுக்கக்கேடு, விக்கிரகாராதனை போன்ற தவறான காரியங்களில் வீழ்ந்துவிடுவது எவ்வளவு சுலபம் என்பதை எண்ணாகம புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ள நிகழ்ச்சிகள் காட்டுகின்றன. யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளில் நடத்தப்படும் ஊழியக் கூட்டத்தில் சபை தேவைகள் என்ற பகுதியை கையாளுவதற்கு இந்த பைபிள் புத்தகத்திலுள்ள சில எடுத்துக்காட்டுகளையும் பாடங்களையும் பயன்படுத்தலாம். உண்மையில், “தேவனுடைய வார்த்தையானது” நம் வாழ்க்கையில் ‘ஜீவனும் வல்லமையும் உள்ளது.’—எபிரெயர் 4:12.
[பக்கம் 24, 25-ன் படம்]
இஸ்ரவேலர் கூடாரம் போடுவதற்கும் அதைப் பிரித்து அங்கிருந்து கிளம்புவதற்கும் ஆசரிப்புக் கூடாரத்தின் மேல் அற்புதமாக காணப்பட்ட மேகத்தின் மூலம் யெகோவா வழிநடத்தினார்
[பக்கம் 26-ன் படங்கள்]
நம் கீழ்ப்படிதலை பெற்றுக்கொள்ள யெகோவா பாத்திரர்; அவருடைய பிரதிநிதிகளுக்கு மரியாதை கொடுக்கும்படி நம்மிடம் எதிர்பார்க்கிறார்