வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திலிருந்து காட்சிகள்
சீனாயில் அவர் இஸ்ரவேலுக்கு தேவையானவைகளை அளித்தார்
ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள், பிள்ளைகள் “கொள்ளிவாய்ச் சர்ப்பங்களும் தேள்களும், தண்ணீரில்லாத வறட்சியுமுள்ள பயங்கரமான பெரிய வனாந்தரவழியாய்,” செல்வதை கற்பனைச் செய்து பாருங்கள்!
எகிப்திலிருந்து இஸ்ரவேலர்கள் வெளியே வந்து சீனாய் வனாந்தரத்துக்குள் அணிவகுத்துச் செல்கையில் அவர்களுக்கு முன் மலைப்பாகத் தோன்றிய பயணத்தை உபாகமம் 8:15-ல் காணப்படும் அந்தக் கடவுளுடைய வார்த்தைகள் கவனத்துக்குக் கொண்டு வருகின்றன. ஒரு கடினமான பிரச்னை: போதுமான உணவும் நீரும் யார் கொடுப்பது?
இஸ்ரவேலர்கள் நைல் கழிமுகத்தில் அடிமைகளாக இருந்தனர். ஆனால் அவர்களுக்கு எந்தக் குறையும் இல்லாமல் இருந்தது. திராட்சைகள், முலாம் பழங்கள், மற்ற பயிர்கள், மீன், பறவைகள் போன்ற பலவகைப்பட்ட உணவை பண்டைய கல்லறைகளில் இருக்கும் சுவர் ஓவியங்கள் காட்டுகின்றன. வனாந்தரத்தில் அவர்கள் ஏக்கத்தோடு கூறிய குறை எவ்வளவு திருத்தமாக இருக்கிறது: “நமக்கு இறைச்சியைப் புசிக்கக் கொடுப்பவர் யார்? நாம் எகிப்திலே கிரயமில்லாமல் சாப்பிட்ட மச்சங்களையும், வெள்ளரிக்காய்களையும், கொம்மட்டிக் காய்களையும், கீரைகளையும், வெண்காயங்களையும், வெள்ளைப்பூண்டுகளையும் நினைக்கிறோம்.”—எண்ணாகமம் 11:4, 5; 20:5.
இஸ்ரவேலர்கள் சிவந்த சமுத்திரத்தைக் கடந்தபின்பு, உண்மையில் சீனாய் எவ்வாறு இருந்தது என்பதை அவர்கள் விரைவில் புரிந்து கொண்டனர். வடக்கு பகுதிக்குச் செல்ல பயணத்திற்குரிய வர்த்தக மார்க்கம் வழியாக செல்லாமல், முக்கோண வடிவ தீவகற்பத்தின் முனையை நோக்கி திரும்பினர். வனாந்தரத்தின் வழியாக அவர்கள் ஏறக்குறைய 80 கிலோமீட்டர் தூரம் செல்வதற்குள் தண்ணீருக்கு மிகவும் நெருக்கடியான நிலை ஏற்பட்டது போல தோன்றியது. அவர்களுக்கு கிடைத்த தண்ணீரை அவர்களால் குடிக்க முடியவில்லை. ஏனென்றால் அது கசப்பாகவும் நோய்கள் உண்டாக்கும் தண்ணீராகவும் இருந்தது. “என்னத்தைக் குடிப்போம்” என்று அவர்கள் அழுதனர். கடவுள் குறுக்கிட்டார். தண்ணீரை இனிப்பாக மாற்றினார்.—யாத்திராகமம் 15:22-25.
மேலே இருக்கும் ஒட்டக வரிசையின் தோற்றத்தைக் கவனியுங்கள். சீனாய் மலையை நோக்கி வனாந்தரத்தின் வழியாய் இஸ்ரவேல் எவ்வாறு தொடர்ந்து செல்ல முடியும் என்ற கேள்வியை நீங்கள் போற்றக்கூடும். உயிரோடிருப்பதற்கு தங்களுக்கும் தங்களுடைய மாட்டு மந்தைக்கும், ஆட்டு மந்தைக்கும் தேவையான போதுமான தண்ணீரையும், உணவையும் அவர்கள் எவ்வாறு தொடர்ந்து கண்டுபிடிப்பர்?—யாத்திராகமம் 12:38.
அவர்கள் தெற்கு நோக்கி நெடுந்தூரம் கடந்தவுடன் ஏலிம் என்ற இடத்தில் புத்துணர்ச்சி தரும் தண்ணீரையும் உணவையும் கண்டனர். (யாத்திராகமம் 15:27) என்றபோதிலும், அது அவர்கள் போய்ச் சேர வேண்டிய இடமாக இல்லை. “தேவபர்வதமாகிய” சீனாய் மலையை நோக்கி அவர்கள் சென்று கொண்டிருந்தனர். (யாத்திராகமம் 3:1; 18:5; 19:2; 24:12-18) அது 120 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது—கரடுமுரடான, வறண்ட நிலமாக இருந்தது.
இந்த மிகப் பெரிய கூட்டமான ஜனங்கள் சீனாய் மலையை நோக்கி முன்னேறிச் செல்கையில், ஃபேரன் என்றழைக்கப்பட்ட பெரிய பாலைவனச்சோலை அருகே வந்தனர். அங்கே அவர்கள் தங்கினர். எதிர்ப்பக்கத்தில் இருக்கும் புகைப்படத்தில் அதனுடைய ஒரு சிறு பகுதியை காணலாம்.a அது வனாந்தரத்தில் இருக்கும் ஒரு வாய்க்கால் வழியே சிவந்த சமுத்திரத்தை நோக்கி செல்கிறது (சூயஸ் வளைகுடா). அவர்கள் அங்கே எப்படிப்பட்ட இளைப்பாறுதலை பெற்றனர்!
சீனாய் வனாந்தரம் “பயங்கரமான பெரிய வனாந்தரம்,” என்ற விவரிப்புக்கு பொதுவாக பொருத்தமாக இருந்தாலும், ஃபேரன் பாலைவனச்சோலையில் இஸ்ரவேலர்கள் கம்பீரமான பனைமரங்கள், மேலும் மற்ற பல மரங்களின் நிழலை அனுபவிக்கக்கூடும். அங்கு அவர்களுக்கு இனிப்பான பேரீச்சம் பழம் கிடைக்கும். உடனடியாக அது அந்த இடத்தில் அவர்களுக்கு உணவாக அமையும். அதை அவர்கள் தங்களோடு எடுத்துச் செல்லவும் முடியும்.
ஃபேரனில் நிலத்தடி தண்ணீர் தரைமட்டம் வரை உயர்ந்ததால் இவையனைத்தும் கூடிய காரியமாயிற்று. பாலைவன வனாந்தரத்தில் நீங்கள் இருக்கையில் திடீரென துப்புரவான தண்ணீரை கண்டால் நீங்கள் எவ்வாறு உணருவீர்கள் என்பதை கற்பனைச் செய்து பாருங்கள்! சீனாயிலும்கூட தண்ணீர் கிடைக்கும் இடங்கள் உள்ளன என்பதை இது எடுத்துக்காட்டுகிறது. சில சமயங்களில் ஒரு கிணறு ஆழமாக தோண்டப்பட வேண்டும். அப்பொழுது விசேஷமாக ஆட்டு மந்தைக்கும் மாட்டு மந்தைக்கும் தண்ணீர் காட்ட வேண்டியிருந்தால், வாளிகள் அல்லது ஜாடிகள் நிறைய இன்றியமையாத இந்தத் திரவத்தை மொண்டெடுப்பது வேலையாக இருக்கும். இன்று வரையாகவும் தங்களுக்கும் தங்கள் ஒட்டகங்களுக்கும் தண்ணீர் மொண்டெடுத்துக்கொள்ளக்கூடிய கிணறுகளிடமாக சீனாயைச் சேர்ந்த பெடோயினர் கவர்ந்திழுக்கப்படுகிறார்கள்.—ஆதியாகமம் 24:11-20; 26:18-22 ஒப்பிடவும்.
ஆம், சமாளிக்க முடியாத அளவு குறைபாடு இருப்பதைப் போன்று தோன்றிய சமயங்களில் அவர்கள் முணுமுணுத்தபோதிலும்கூட, இஸ்ரவேலர்களுக்கு தண்ணீரும் உணவும் இருந்தது. சில சமயங்களில் கடவுள் அவைகளை அற்புதகரமாக அளித்தார். (யாத்திராகமம் 16:11-18, 31; 17:2-6) மற்ற சமயங்களில் அவர் அவர்களை “இளைப்பாறும் ஸ்தலத்துக்கு,” வழிகாட்டினார். அங்கு அவர்களுடைய உண்மையான தேவைகள் இயற்கையான பொருள்கள் மூலம் திருப்தி செய்யப்பட்டன. (எண்ணாகமம் 10:33-36) வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் உண்மையுள்ளோருக்கு காத்திருந்த மிகுதியை அவர்கள் முன் எப்போதும் அவர் வைத்திருந்தார்.—உபாகமம் 11:10-15.
[அடிக்குறிப்புகள்]
a புகைப்படம் பெரிய அளவில் 1992 யெகோவாவின் சாட்சிகளுடைய நாட்காட்டி-யில் இருக்கிறது.
[பக்கம் 24-ன் படத்திற்கான நன்றி]
Pictorial Archive (Near Eastern History) Est.
[பக்கம் 24-ன் படத்திற்கான நன்றி]
Pictorial Archive (Near Eastern History) Est.
[பக்கம் 24, 25-ன் படத்திற்கான நன்றி]
Pictorial Archive (Near Eastern History) Est.
[பக்கம் 25-ன் படத்திற்கான நன்றி]
Pictorial Archive (Near Eastern History) Est.