படிப்புக் கட்டுரை 7
சாந்த குணத்தைக் காட்டுங்கள் யெகோவாவைப் பிரியப்படுத்துங்கள்
“பூமியில் குடியிருக்கிற சாந்தமான ஜனங்களே, . . . யெகோவாவைத் தேடுங்கள், . . . மனத்தாழ்மையைத் தேடுங்கள்.”—செப். 2:3, அடிக்குறிப்பு.
பாட்டு 95 ‘யெகோவா நல்லவரென்று ருசித்துப் பாருங்கள்’
இந்தக் கட்டுரையில்...a
1-2. (அ) மோசே எப்படிப்பட்டவர், அவர் என்னவெல்லாம் செய்தார்? (ஆ) சாந்த குணத்தை வளர்த்துக்கொள்ள எது நம்மைத் தூண்டுகிறது?
“பூமியிலுள்ள எல்லா மனிதர்களையும்விட மோசே மிகவும் சாந்தமானவராக இருந்தார்” என்று பைபிள் சொல்கிறது. (எண். 12:3, அடிக்குறிப்பு) அப்படியென்றால், அவர் பலவீனமானவராக, தீர்மானங்கள் எடுக்கப் பயப்படுபவராக, எதிரிகளைப் பார்த்து பின்வாங்குபவராக இருந்தாரா? சாந்த குணமுள்ளவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று சிலர் நினைக்கலாம். ஆனால், அது உண்மை கிடையாது. மோசே பலமானவராகவும், உறுதியோடு தீர்மானங்கள் எடுப்பவராகவும், தைரியமுள்ள கடவுளுடைய ஊழியராகவும் இருந்தார். யெகோவாவின் உதவியோடு பலம்படைத்த எகிப்திய அரசனை நேருக்கு நேர் சந்தித்தார். கிட்டத்தட்ட 30 லட்சம் ஜனங்களை வனாந்தரம் வழியாக வழிநடத்தினார். எதிரிகளைத் தோற்கடிக்க இஸ்ரவேல் தேசத்துக்கு உதவினார்.
2 மோசேக்கு வந்த அதே சவால்கள் இன்று நமக்கு வருவதில்லை. ஆனால், சாந்த குணத்தைக் காட்டுவதைக் கடினமாக்குகிற மக்களையோ சூழ்நிலைகளையோ ஒவ்வொரு நாளும் நாம் சந்திக்க வேண்டியிருக்கிறது. இருந்தாலும், இந்தக் குணத்தை வளர்த்துக்கொள்ள எது நம்மைத் தூண்டுகிறது? “சாந்தமானவர்கள் இந்தப் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள்” என்று யெகோவா கொடுத்திருக்கிற வாக்குறுதிதான்! (சங். 37:11, அடிக்குறிப்பு) இப்போது உங்கள் விஷயத்துக்கு வரலாம். ‘நான் சாந்தமானவன்’ என்று உங்களால் சொல்ல முடியுமா? மற்றவர்கள் உங்களைப் பற்றி அப்படிச் சொல்வார்களா? இந்தக் கேள்விகளுக்குப் பதில்களைப் பார்ப்பதற்கு முன்பு, சாந்த குணம் என்றால் என்ன என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
சாந்த குணம் என்றால் என்ன?
3-4. (அ) சாந்த குணம் எதைப் போன்றது? (ஆ) சாந்தமாக இருக்க எந்த நான்கு குணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும், ஏன்?
3 சாந்த குணம்b ஓர் அழகான ஓவியம் போன்றது. எப்படி? ஓர் அழகான ஓவியத்தை வரைவதற்கு, நிறைய வண்ண வண்ண நிறங்களை ஒன்றோடு ஒன்று சேர்த்து ஓர் ஓவியர் பயன்படுத்துவார். அதேபோல், சாந்த குணமுள்ளவராக இருப்பதற்கு நிறைய நல்ல நல்ல குணங்களை நாம் வெளிக்காட்ட வேண்டும். அந்தக் குணங்களில், மனத்தாழ்மை, கீழ்ப்படிதல், மென்மை மற்றும் தைரியம் போன்ற குணங்கள் முக்கியமானவை. யெகோவாவைப் பிரியப்படுத்த இந்தக் குணங்கள் ஏன் தேவை?
4 மனத்தாழ்மையானவர்கள் மட்டும்தான் கடவுளுடைய விருப்பத்துக்குக் கீழ்ப்படிவார்கள். நாம் மென்மையாக நடந்துகொள்ள வேண்டும் என்பது கடவுளுடைய விருப்பத்தில் ஒன்று! (நீதி. 29:11; 2 தீ. 2:24) நாம் கடவுளுடைய விருப்பத்தைச் செய்யும்போது, சாத்தான் பயங்கரமாகக் கோபப்படுகிறான். நாம் மனத்தாழ்மையாகவும் சாந்தமாகவும் நடந்துகொண்டால்கூட, இந்தச் சாத்தானுடைய உலகத்தில் இருக்கிற நிறைய பேர் நம்மை வெறுக்கிறார்கள். (யோவா. 15:18, 19) அதனால், சாத்தானை எதிர்த்து நிற்க நமக்குத் தைரியம் தேவை.
5-6. (அ) சாந்த குணமுள்ளவர்களை சாத்தான் ஏன் வெறுக்கிறான்? (ஆ) எந்தக் கேள்விகளுக்கான பதில்களை இப்போது பார்ப்போம்?
5 சாந்தமாக இல்லாத ஒருவர், அகங்காரம் பிடித்தவராகவும் கட்டுப்படுத்த முடியாதளவுக்குக் கோபப்படுகிறவராகவும் யெகோவாவுக்குக் கீழ்ப்படியாதவராகவும் இருக்கிறார். சாத்தான் அப்படிப்பட்டவன்தான்! அதனால்தான், அவன் சாந்த குணமுள்ளவர்களை வெறுக்கிறான். அவனிடம் இல்லாத நல்ல குணங்களை வெளிக்காட்டுவதன் மூலம் அவன் ரொம்பவே மோசமானவன் என்பதைச் சாந்த குணமுள்ளவர்கள் நிரூபிக்கிறார்கள். அதுமட்டுமல்ல, அவன் ஒரு பொய்யன் என்பதையும் நிரூபிக்கிறார்கள். எப்படி? தன்னுடைய சொல்லாலும், செயலாலும் சாத்தான் தங்களைத் தடுத்து நிறுத்த முயற்சி செய்தாலும், அவர்கள் தொடர்ந்து யெகோவாவுக்குச் சேவை செய்கிறார்கள்.—யோபு 2:3-5.
6 சாந்த குணத்தைக் காட்டுவது நமக்கு எப்போது சவாலாக இருக்கலாம்? அந்தக் குணத்தை நாம் ஏன் தொடர்ந்து வளர்த்துக்கொள்ள வேண்டும்? இந்தக் கேள்விகளுக்குப் பதில்களைத் தெரிந்துகொள்ள, மோசேயின் உதாரணத்தையும் பாபிலோனுக்குச் சிறைபிடித்துக் கொண்டுபோகப்பட்ட மூன்று எபிரெய வாலிபர்களுடைய உதாரணத்தையும் பார்க்கலாம். அதோடு, இயேசுவின் உதாரணத்தையும் பார்க்கலாம்.
சாந்த குணத்தைக் காட்டுவது எப்போது சவாலாக இருக்கிறது?
7-8. மரியாதைக் குறைவாக நடத்தப்பட்டபோது மோசே என்ன செய்தார்?
7 அதிகாரம் கொடுக்கப்படும்போது: அதிகாரத்தில் இருக்கும் ஒருவருக்கு சாந்த குணத்தைக் காட்டுவது சவாலாக இருக்கலாம். அதுவும், தன்னுடைய கண்காணிப்பின் கீழ் இருப்பவர்கள் தனக்கு மரியாதை கொடுக்கவில்லை என்றாலோ, தான் எடுக்கும் தீர்மானங்களைப் பற்றி கேள்வி எழுப்பினாலோ சாந்த குணத்தைக் காட்டுவது சவாலாக இருக்கலாம். இதுபோன்ற சூழ்நிலைகளை நீங்கள் எப்போதாவது சந்தித்திருக்கிறீர்களா? குடும்பத்தில் இருக்கிற ஒருவர் அப்படிச் செய்தால் என்ன செய்வது? அப்போது நீங்கள் எப்படி நடந்துகொள்வீர்கள்? இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் மோசே என்ன செய்தார் என்று பார்க்கலாம்.
8 இஸ்ரவேல் தேசத்துக்குத் தலைவராக மோசேயை யெகோவா நியமித்தார். அந்தத் தேசத்துக்கான சட்டங்களைப் பதிவு செய்யும் பெரிய பாக்கியத்தையும் அவருக்குக் கொடுத்தார். யெகோவாவின் ஆதரவு மோசேக்கு இருந்ததில் எந்தச் சந்தேகமும் இல்லை. அப்படியிருந்தும், அவருடைய சொந்த அக்காவான மிரியாமும் அவருடைய அண்ணனான ஆரோனும் அவருக்கு எதிராகப் பேசினார்கள். மோசே தன் மனைவியைத் தேர்ந்தெடுத்த விஷயத்தைப் பற்றி கேள்வி எழுப்பினார்கள். மோசேயின் இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் என்ன நடந்திருக்கலாம்? அவர்கள் கோபப்பட்டிருக்கலாம் அல்லது பழிவாங்கவும் முயற்சி செய்திருக்கலாம். ஆனால் மோசே அப்படிச் செய்யவில்லை. அவர் சட்டென புண்பட்டுவிடவில்லை. ஏன், தொழுநோய் பிடித்திருந்த மிரியாமைக் குணப்படுத்தும்படிகூட யெகோவாவிடம் கெஞ்சினார். (எண். 12:1-13) அவரால் எப்படி அவ்வளவு சாந்தமாக நடந்துகொள்ள முடிந்தது?
9-10. (அ) எதைப் புரிந்துகொள்ள மோசேக்கு யெகோவா உதவினார்? (ஆ) குடும்பத் தலைவர்களும் மூப்பர்களும் மோசேயிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?
9 யெகோவா கொடுத்த பயிற்சியை மோசே ஏற்றுக்கொண்டார். சுமார் 40 வருஷங்களுக்கு முன்பு, எகிப்திய அரச குடும்பத்தில் இருந்தபோது, அவருக்குச் சாந்த குணம் இருக்கவில்லை. சொல்லப்போனால், ஒருவன் அநியாயமாக நடந்துகொண்டதாக நினைத்து, அவனைக் கொலை செய்தார்; அந்தளவுக்கு முன்கோபக்காரராக இருந்தார். தன்னுடைய செயல்களை யெகோவா ஏற்றுக்கொள்வார் என்றுகூட மோசே நினைத்தார். ஆனால், இஸ்ரவேலர்களை வழிநடத்த, தைரியத்தைவிட சாந்த குணம் மிக முக்கியம் என்பதை அவருக்குப் புரியவைப்பதற்கு 40 வருஷங்களை யெகோவா செலவழித்தார். சாந்தமானவராக இருக்க, மனத்தாழ்மையும், மனப்பூர்வமான கீழ்ப்படிதலும் மோசேக்குத் தேவைப்பட்டது. அதோடு, மென்மையாகவும் நடந்துகொள்ள வேண்டியிருந்தது. யெகோவா கற்றுக்கொடுத்த பாடத்தை மோசே நன்றாகப் புரிந்துகொண்டார்; பிறகு, மிகச் சிறந்த ஒரு தலைவராக ஆனார்.—யாத். 2:11, 12; அப். 7:21-30, 36.
10 இன்று, குடும்பத் தலைவர்களும் மூப்பர்களும் மோசேயின் உதாரணத்தைப் பின்பற்ற வேண்டும். யாராவது உங்களை மரியாதைக் குறைவாக நடத்தினால், சீக்கிரத்தில் புண்பட்டுவிடாதீர்கள். உங்களிடம் இருக்கிற தவறுகளை மனத்தாழ்மையோடு ஒத்துக்கொள்ளுங்கள். (பிர. 7:9, 20) பிரச்சினைகளைச் சமாளிப்பதற்குத் தேவையான வழிநடத்துதல்களை யெகோவா கொடுக்கும்போது, அதற்கு மனப்பூர்வமாகக் கீழ்ப்படியுங்கள். எப்போதும் சாந்தமாகப் பதில் சொல்லுங்கள். (நீதி. 15:1) இப்படிச் சாந்தமாகப் பதில் சொல்கிற குடும்பத் தலைவர்களும் கண்காணிகளும் யெகோவாவைப் பிரியப்படுத்துகிறார்கள், சமாதானத்துக்கு வழிசெய்கிறார்கள், சாந்தமாக இருக்கும் விஷயத்தில் நல்ல முன்மாதிரிகளாக இருக்கிறார்கள்.
11-13. மூன்று எபிரெயர்கள் நமக்கு எப்படி நல்ல முன்மாதிரிகளாக இருக்கிறார்கள்?
11 துன்புறுத்தப்படும்போது: மனித ஆட்சியாளர்கள் யெகோவாவின் மக்களைத் துன்புறுத்தியிருப்பதைச் சரித்திரம் காட்டுகிறது. அவர்கள் நம்மீது பல “குற்றங்களை” சுமத்தலாம். ஆனால், அவர்கள் கோபப்படுவதற்கு உண்மையான காரணம், நாம் அவர்களுக்குக் கீழ்ப்படிவதைவிட ‘கடவுளுக்குக் கீழ்ப்படிவதுதான்’! (அப். 5:29) நாம் கேலி செய்யப்படலாம், சிறையில் அடைக்கப்படலாம் அல்லது துன்புறுத்தப்படலாம். ஆனால், யெகோவாவின் உதவியோடு நாம் எப்போதும் அமைதியாக இருப்போம்; பதிலடி கொடுக்க மாட்டோம்.
12 பாபிலோனுக்குச் சிறைபிடித்துக் கொண்டுபோகப்பட்ட அனனியா, மீஷாவேல், அசரியா ஆகிய மூன்று எபிரெயர்கள் நமக்கு நல்ல முன்மாதிரிகளாக இருக்கிறார்கள்.c (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) ஒரு பெரிய தங்கச் சிலையின் முன்பாக விழுந்து வணங்க வேண்டும் என்று பாபிலோன் ராஜா அவர்களுக்குக் கட்டளையிட்டார். ஆனால், அவர்கள் அதை வணங்க முடியாததற்கான காரணத்தை ராஜாவிடம் சாந்தமாக விளக்கினார்கள். அதை வணங்கவில்லை என்றால் எரிகிற நெருப்புச் சூளையில் வீசப்படுவார்கள் என்று ராஜா பயமுறுத்தியும் அவர்கள் தொடர்ந்து கடவுளுக்கு மட்டுமே மனப்பூர்வமாகக் கீழ்ப்படிந்தார்கள். அவர்களை உடனடியாகக் காப்பாற்ற வேண்டும் என்று யெகோவா முடிவு செய்தார். ஆனால், தங்களை யெகோவா காப்பாற்றுவார் என்று எதிர்பார்த்து அவர்கள் யெகோவாவுக்குக் கீழ்ப்படியவில்லை. அதற்குப் பதிலாக, யெகோவா எதை அனுமதித்தாலும் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்தார்கள். (தானி. 3:1, 8-28) சாந்த குணமுள்ளவர்கள் உண்மையிலேயே தைரியமானவர்கள் என்பதை அவர்கள் நிரூபித்தார்கள். எந்த ராஜாவோ, எந்த மிரட்டலோ, எந்தத் தண்டனையோ தங்களுடைய தீர்மானத்தை, அதாவது யெகோவாவை “மட்டும்தான் வணங்க வேண்டும்” என்ற தீர்மானத்தை, மாற்ற முடியாது என்பதை நிரூபித்தார்கள்.—யாத். 20:4, 5.
13 நம்முடைய உண்மைத்தன்மை சோதிக்கப்படும்போது, இந்த மூன்று எபிரெயர்களை நாம் பின்பற்றுகிறோம். எப்படி? நாம் மனத்தாழ்மையாக இருக்கிறோம், யெகோவா நம்மைப் பார்த்துக்கொள்வார் என்று நம்புகிறோம். (சங். 118:6, 7) நம்மீது குற்றம்சாட்டுகிற ஆட்களிடம் சாந்தமாகவும், மரியாதையாகவும் பேசுகிறோம். (1 பே. 3:15) நம் பரலோகத் தந்தையிடம் இருக்கிற பந்தத்தைக் கெடுக்கிற எந்தவொரு விஷயத்தையும் செய்யக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
14-15. (அ) நாம் மனஅழுத்தத்தில் இருக்கும்போது என்ன நடக்கலாம்? (ஆ) ஏசாயா 53:7, 10-ன்படி, மனஅழுத்தத்தின் மத்தியிலும், சாந்த குணத்தைக் காட்டுவதில் இயேசுதான் மிகச் சிறந்த முன்மாதிரி என்று ஏன் சொல்லலாம்?
14 மனஅழுத்தத்தில் இருக்கும்போது: பல காரணங்களுக்காக நாம் ஒவ்வொருவரும் மனஅழுத்தத்தில் இருக்கலாம். பள்ளியில் பரீட்சை எழுதுவதற்கு முன்போ, வேலை செய்யும் இடத்தில் ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்வதற்கு முன்போ நாம் மனஅழுத்தத்தில் இருந்திருக்கலாம். அல்லது, நமக்குத் தேவைப்படுகிற ஒரு சிகிச்சையை நினைத்து நாம் மனஅழுத்தத்தில் மூழ்கிவிடலாம். மனஅழுத்தத்தில் இருக்கும்போது, சாந்தமாக நடந்துகொள்வது சவாலான ஒரு விஷயம்தான்! அதுவரை நமக்குக் கஷ்டமாகத் தெரியாத விஷயங்கள்கூட அப்போது நம்மை எரிச்சலூட்ட ஆரம்பிக்கலாம். நாம் மற்றவர்களிடம் கடுகடுப்பாகப் பேசிவிடலாம் அல்லது அன்பற்ற விதத்தில் நடந்துகொள்ளலாம். நீங்கள் எப்போதாவது மனஅழுத்தத்தில் இருந்திருக்கிறீர்களா? அப்படியென்றால், இயேசுவின் உதாரணத்தைக் கவனியுங்கள்.
15 பூமியில் தான் வாழ்ந்த கடைசி சில மாதங்களில், இயேசு கடுமையான மனஅழுத்தத்தில் இருந்தார். தன்னைக் கொலை செய்வார்கள் என்றும், பயங்கரமான வேதனையை தான் அனுபவிக்க வேண்டியிருக்கும் என்றும் அவருக்குத் தெரிந்திருந்தது. (யோவா. 3:14, 15; கலா. 3:13) இறப்பதற்குக் கொஞ்ச மாதங்களுக்கு முன்பு, தான் மனவேதனையில் இருப்பதாகச் சொன்னார். (லூக். 12:50) இறப்பதற்குச் சில நாட்களுக்கு முன்பு, “என் மனம் கலங்குகிறது” என்று சொன்னார். ஜெபத்தில் தன்னுடைய உணர்ச்சிகளைக் கொட்ட இயேசு பயன்படுத்திய வார்த்தைகள், அவர் மனத்தாழ்மையோடு இருந்ததையும், கடவுளுக்குக் கீழ்ப்படிய மனமுள்ளவராக இருந்ததையும் நிரூபித்தன. “தகப்பனே, இந்தச் சோதனையிலிருந்து என்னைக் காப்பாற்றுங்கள். இருந்தாலும், நான் இந்தச் சோதனையை எதிர்ப்பட்டே ஆக வேண்டும். தகப்பனே, உங்களுடைய பெயரை மகிமைப்படுத்துங்கள்” என்று அவர் ஜெபம் செய்தார். (யோவா. 12:27, 28) நேரம் வந்தபோது, கடவுளுடைய எதிரிகளிடம் தன்னைத் தைரியமாக ஒப்படைத்தார். அவர்கள் அவரைப் பயங்கரமாகச் சித்திரவதை செய்தார்கள், ரொம்பவே இழிவாக நடத்தினார்கள், கடைசியில் கொலையும் செய்தார்கள். மனஅழுத்தத்தில் இருந்தபோதிலும், கடுமையான துன்பத்தை அனுபவித்தபோதிலும், அவர் சாந்தமாக இருந்தார்; கடவுளுடைய விருப்பத்தைச் செய்தார். இதிலிருந்து இயேசுவைப் பற்றி என்ன சொல்லலாம்? மனஅழுத்தத்தில் இருந்தபோதிலும், சாந்த குணத்தைக் காட்டுவதில் அவர் மிகச் சிறந்த முன்மாதிரி வைத்திருக்கிறார் என்று உறுதியாகச் சொல்லலாம்!—ஏசாயா 53:7, 10-ஐ வாசியுங்கள்.
16-17. (அ) இயேசுவின் நெருங்கிய நண்பர்கள் நடந்துகொண்ட விதம் அவருடைய சாந்த குணத்துக்கு எப்படிச் சோதனையாக இருந்தது? (ஆ) நாம் எப்படி இயேசுவைப் போல நடந்துகொள்ளலாம்?
16 தான் பூமியில் வாழ்ந்த கடைசி ராத்திரி அன்று, தன்னுடைய நெருங்கிய நண்பர்கள் நடந்துகொண்ட விதம் இயேசுவுடைய சாந்த குணத்தைச் சோதித்தது. அந்த ராத்திரி, இயேசு எந்தளவு மனஅழுத்தத்தில் இருந்திருப்பார் என்பதைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். மரணம்வரை அவர் உண்மையோடு இருப்பாரா? கோடிக்கணக்கான மக்களின் உயிர் அவருடைய உண்மைத்தன்மையைச் சார்ந்தே இருந்தது. (ரோ. 5:18, 19) அதைவிட முக்கியமாக, அவருடைய அப்பாவின் நற்பெயரும் அதில் சம்பந்தப்பட்டிருந்தது. (யோபு 2:4) ஒருசமயம், தன் நெருங்கிய நண்பர்களோடு, அதாவது அப்போஸ்தலர்களோடு, அவர் கடைசியாகச் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது, “தங்களில் யார் மிக உயர்ந்தவர் என்பதைப் பற்றி அவர்களுக்குள் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.” இந்த விஷயத்தில் தன்னுடைய நண்பர்களை அவர் நிறைய தடவை திருத்தியிருக்கிறார், அதுவும் அந்தச் சாயங்காலத்தில்கூட அவர்களைத் திருத்தியிருந்தார்! அப்படியிருந்தும், இயேசு எரிச்சலடையாமல் இருந்ததும் சாந்தமாக நடந்துகொண்டதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். அவர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதைக் கனிவாகவும், அதேசமயத்தில் உறுதியாகவும் மறுபடியும் விளக்கினார். பிறகு, தனக்கு உண்மையோடு இருந்து, தன்னை ஆதரித்து வருவதற்காக அவர்களைப் பாராட்டினார்.—லூக். 22:24-28; யோவா. 13:1-5, 12-15.
17 அதேபோன்ற ஒரு சூழ்நிலையில் நீங்கள் இருந்திருந்தால், என்ன செய்திருப்பீர்கள்? மனஅழுத்தத்தில் இருந்தாலும், நாம் இயேசுவைப் போல நடந்துகொள்ளலாம், சாந்தமாக இருக்கலாம். “தொடர்ந்து ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொள்ளுங்கள்” என்ற யெகோவாவின் கட்டளைக்கு மனப்பூர்வமாகக் கீழ்ப்படியுங்கள். (கொலோ. 3:13) நம்முடைய சொல்லாலும் செயலாலும் நாமும் மற்றவர்களை எரிச்சல்படுத்துகிறோம் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொண்டால், இந்தக் கட்டளைக்கு நாம் கீழ்ப்படிவோம். (நீதி. 12:18; யாக். 3:2, 5) மற்றவர்களிடம் இருக்கும் நல்ல குணங்களுக்காக, அவர்களைப் பாராட்டுங்கள்.—எபே. 4:29.
தொடர்ந்து சாந்தமாக இருந்தால் என்ன நன்மை?
18. சரியான தீர்மானங்களை எடுக்க சாந்த குணமுள்ளவர்களுக்கு யெகோவா எப்படி உதவுகிறார், அதற்கு அவர்கள் என்ன செய்ய வேண்டும்?
18 சரியான தீர்மானங்களை எடுப்போம். கஷ்டமான தீர்மானங்களை எடுக்க வேண்டிய சூழ்நிலைகளில், சரியான தீர்மானங்களை எடுக்க யெகோவா உதவுவார். ஆனால், நாம் சாந்தமாக இருந்தால் மட்டுமே உதவுவார்! “சாந்தமானவர்களின் வேண்டுதலை” கேட்பதாக அவர் வாக்குக் கொடுத்திருக்கிறார். (சங். 10:17, அடிக்குறிப்பு) கேட்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் அவர் வேறொன்றையும் செய்வதாக பைபிள் வாக்குக் கொடுக்கிறது. அதாவது, “அவர் சாந்தமானவர்களை நேர்வழியில் நடத்துவார். சாந்தமானவர்களுக்கு தன்னுடைய பாதையைக் காட்டுவார்” என்று வாக்குக் கொடுக்கிறது. (சங். 25:9, அடிக்குறிப்பு) பைபிள், பைபிள் பிரசுரங்கள்d (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) மற்றும் “உண்மையும் விவேகமும் உள்ள அடிமை” தயாரிக்கிற நிகழ்ச்சிகளின் மூலம் யெகோவா இந்த வழிநடத்துதலைக் கொடுத்துவருகிறார். (மத். 24:45-47) நம்முடைய பங்கில், யெகோவாவுடைய உதவி நமக்குத் தேவை என்பதை நாம் மனத்தாழ்மையோடு ஒத்துக்கொள்ள வேண்டும். அதற்கு, யெகோவா தருகிற இவை எல்லாவற்றையும் நன்றாகப் படிக்க வேண்டும், படித்த விஷயங்களை வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும்.
19-21. காதேசில் மோசே என்ன தவறு செய்தார், அதிலிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்கிறோம்?
19 தவறுகள் செய்வதைத் தவிர்ப்போம். மோசேயைப் பற்றி மறுபடியும் யோசித்துப்பாருங்கள். நிறைய வருஷங்களாக, அவர் சாந்தமாக இருந்தார்; யெகோவாவுக்குப் பிரியமாக நடந்துகொண்டார். ஆனால், இஸ்ரவேலர்கள் வனாந்தரத்தில் சுற்றித்திரிந்த கஷ்டமான அந்த 40 வருஷ பயணம் முடிவுக்கு வரவிருந்த சமயத்தில், மோசே சாந்த குணத்தைக் காட்டத் தவறினார். எகிப்தில் அவருடைய உயிரைக் காப்பாற்றிய அவருடைய அக்கா கொஞ்சம் முன்புதான் இறந்துபோயிருந்தார், பிறகு காதேசில் அடக்கம் செய்யப்பட்டிருந்தார். தாங்கள் சரியாகக் கவனிக்கப்படவில்லை என்று இஸ்ரவேலர்கள் மறுபடியும் குறை சொன்னார்கள். இந்தத் தடவை, தண்ணீர் கிடைக்காததால் அவர்கள் “மோசேயோடு வாக்குவாதம்” செய்தார்கள். யெகோவா தந்த சக்தியால் மோசே நிறைய அற்புதங்களைச் செய்திருந்தும், சுயநலமில்லாமல் அத்தனை காலமாக அவர் இஸ்ரவேலர்களை வழிநடத்தியிருந்தும், அந்த மக்கள் மோசேக்கு விரோதமாக முணுமுணுத்தார்கள். தண்ணீர் கிடைக்காததைப் பற்றி மட்டுமல்ல, மோசேயைப் பற்றியும் அவர்கள் குறை சொன்னார்கள். அவர்கள் தாகமாக இருப்பதற்கு ஏதோ மோசேதான் காரணம் என்பதுபோல் முணுமுணுத்தார்கள்.—எண். 20:1-5, 9-11.
20 பயங்கர கோபம் வந்ததால், மோசே சாந்த குணத்தைக் காட்டத் தவறினார்; யெகோவா கொடுத்த கட்டளையின்படி செய்யாமல் போய்விட்டார். விசுவாசத்தோடு கற்பாறையைப் பார்த்துப் பேசுவதற்குப் பதிலாக மக்களிடம் கோபமாகப் பேசினார். தான் ஓர் அற்புதத்தைச் செய்யப் போவதாகச் சொன்னதன் மூலம் தனக்குப் புகழ் சேர்த்துக்கொண்டார். பிறகு, கற்பாறையை இரண்டு தடவை அடித்தார்; உடனே அதிலிருந்து தண்ணீர் பாய்ந்து வந்தது. மோசே மிகப் பெரிய பாவத்தைச் செய்வதற்குப் பெருமையும் கோபமும்தான் காரணம். (சங். 106:32, 33) அந்த ஒருசமயத்தில் சாந்த குணத்தைக் காட்டத் தவறியதால், வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்துக்குள் போக மோசே அனுமதிக்கப்படவில்லை.—எண். 20:12.
21 இந்தச் சம்பவத்திலிருந்து, நாம் முக்கியமான பாடங்களைக் கற்றுக்கொள்கிறோம். முதலாவதாக, தொடர்ந்து சாந்த குணத்தைக் காட்ட நாம் உழைத்துக்கொண்டே இருக்க வேண்டும். சாந்த குணத்தை ஒரு கணத்துக்கு இழந்துவிட்டால்கூட நமக்குக் கர்வம் வந்துவிடலாம்; பிறகு, முட்டாள்தனமாக எதையாவது பேசிவிடலாம் அல்லது செய்துவிடலாம். இரண்டாவதாக, மனஅழுத்தத்தில் இருக்கும்போது சாந்த குணத்தைக் காட்டுவது நமக்குக் கஷ்டமாக இருக்கலாம். அதனால், அழுத்தத்தில் இருந்தாலும், சாந்த குணத்தைக் காட்ட கடினமாகப் போராட வேண்டும்.
22-23. (அ) நாம் ஏன் தொடர்ந்து சாந்த குணத்தைக் காட்ட வேண்டும்? (ஆ) செப்பனியா 2:3-ல் இருக்கிற வார்த்தைகளின் அர்த்தம் என்ன?
22 பாதுகாக்கப்படுவோம். சீக்கிரத்தில், இந்தப் பூமியிலிருந்து பொல்லாத மக்களை யெகோவா நீக்கிவிடுவார். அப்போது, சாந்த குணமுள்ளவர்கள் மட்டும்தான் இருப்பார்கள். பூமி முழுவதும் சமாதானம் இருக்கும். (சங். 37:10, 11) அந்தச் சாந்த குணமுள்ளவர்களில் நீங்களும் ஒருவராக இருப்பீர்களா? செப்பனியா தீர்க்கதரிசியின் மூலம் யெகோவா கொடுத்திருக்கிற அழைப்பை ஏற்றுக்கொண்டு அதன்படி செய்தால், நீங்களும் அவர்களில் ஒருவராக இருக்க முடியும்.—செப்பனியா 2:3-ஐ வாசியுங்கள்.
23 செப்பனியா 2:3-ல், “நீங்கள் அநேகமாகப் பாதுகாக்கப்படலாம்” என்று ஏன் சொல்லப்பட்டிருக்கிறது? யெகோவாவை நேசிக்கிறவர்களையும் அவரால் நேசிக்கப்படுகிறவர்களையும் பாதுகாக்க அவருக்குச் சக்தி இல்லை என்பது இதன் அர்த்தம் கிடையாது. நாம் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால், நம்முடைய பங்கில் நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்பதே இதன் அர்த்தம். சாந்தமாக நடந்துகொள்ளவும், யெகோவாவைப் பிரியப்படுத்தவும் நாம் கடினமாக முயற்சி செய்தால், யெகோவாவுடைய ‘கோபத்தின் நாளில்’ தப்பிப்பிழைக்கவும், என்றென்றும் வாழவும் நமக்கு வாய்ப்பு இருக்கிறது!
பாட்டு 82 கிறிஸ்துவைப் போல் சாந்தமாய் இருங்கள்
a நாம் யாருமே சாந்த குணத்தோடு பிறப்பதில்லை. அதை நாம்தான் வளர்த்துக்கொள்ள வேண்டும். சமாதானத்தைக் காத்துக்கொள்கிற மக்களோடு பழகும்போது சாந்த குணத்தைக் காட்டுவது சுலபமாக இருக்கலாம். ஆனால், தலைக்கனம் பிடித்தவர்களோடு பழகும்போது அந்தக் குணத்தைக் காட்டுவது கஷ்டமாக இருக்கலாம். இந்த அருமையான குணத்தை வளர்த்துக்கொள்வதில் நமக்கு என்னென்ன சவால்கள் இருக்கின்றன என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
b வார்த்தைகளின் விளக்கம்: சாந்தம். சாந்த குணமுள்ளவர் மற்றவர்களோடு பழகும்போது மென்மையாக நடந்துகொள்வார்; யாராவது கோபப்படுத்தினாலும் அமைதியாக இருப்பார். மனத்தாழ்மை. மனத்தாழ்மையாக இருப்பவர்களிடம், கர்வமோ ஆணவமோ துளிகூட இருக்காது; மற்றவர்களைத் தங்களைவிட உயர்ந்தவர்களாக நினைப்பார்கள். யெகோவாவின் விஷயத்தில், மனத்தாழ்மை என்பது, தன்னைவிட தாழ்வாக இருக்கும் எல்லாரிடமும் அவர் அன்போடும் இரக்கத்தோடும் நடந்துகொள்வதைக் குறிக்கிறது.
c இந்த மூன்று எபிரெயர்களுக்கு சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்ற பெயர்களை பாபிலோனியர்கள் வைத்தார்கள்.—தானி. 1:7.
d உதாரணத்துக்கு, ஏப்ரல் 15, 2011 காவற்கோபுரத்தில் வெளிவந்த “நம் தீர்மானங்கள் கடவுளுக்குப் புகழ் சேர்க்க...” என்ற கட்டுரையைப் பாருங்கள்.
e படங்களின் விளக்கம்: தங்களில் யார் மிக உயர்ந்தவர் என்பதைப் பற்றி இயேசுவின் சீஷர்கள் வாக்குவாதம் செய்தபோது, இயேசு சாந்தமாக இருக்கிறார், அவர்களை அமைதியாகத் திருத்துகிறார்.