பொய் மதம் வேசியாக செயல்படுகிறது
சிலர் வேசி, விலைமாதர் அல்லது பரத்தையருடையதை மிகப் பழமையானத் தொழில் என்பதாக அழைக்கின்றனர். வழக்கமாக பயன்படுத்தப்படுகிறபடி, இந்த எல்லா வார்த்தைகளும் ஒரே பொருளுடையவையாக, தன் உடலை ஆண்களுக்கு விற்பதற்காக பயன்படுத்தும் ஓர் ஒழுக்கமற்ற பெண்ணையே குறிப்பிடுகின்றவையாக இருக்கின்றன. என்றபோதிலும் இது மதிப்புக்குரிய அழைப்பாக கருதப்பட்ட ஒரு காலமிருந்தது!
2 பூர்வ பாபிலோனின் ஆசாரியத்துவத்தைப்பற்றி பேசுகையில், பைபிளோடு சம்பந்தப்பட்ட புதைப்பொருள் ஆராய்ச்சியில் நிபுணரான பேராசிரியர் S.H. ஹுக் சொன்னார்: “ஆசாரியத்துவம் ஆண்களுக்கு மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கவில்லை. ஆனால் பெரிய ஆலய பணியாட்களில் பெண்கள் இடம் பெற்றிருந்தனர். பெண் ஆசாரியர்களின் குழுவைச் சேர்ந்தவர்களாயிருப்பது மதிப்புக்குரிய ஒன்றாகக் கருதப்பட்டது. ஆசாரிய அழைப்புக்குத் தங்கள் குமாரத்திகளை அர்ப்பணித்த பல அரசர்களைப்பற்றி நாம் கேள்விப்படுகிறோம். . . . அவர்களுடைய முக்கிய கடமை முக்கியமான விழாக் காலங்களின் போது பரிசுத்தமான விலைமாதராகப் பணிபுரிவதே ஆகும். . . . இஷ்டார் ஆலயத்தில் (கருவளத்துக்கும் செழுமைக்கும் போருக்குமுரிய பெண் தெய்வத்தின் ஆலயத்தில்) இயற்கையாகவே இப்படிப்பட்ட பெண்கள் அநேகர் இருந்தனர்.”
3 இது இஸ்ரவேல் ஜனம் யெகோவா தேவனுக்கு செலுத்த வேண்டியிருந்த வணக்கத்துக்கு நேர் எதிர்மாறாக இருந்தது. சட்டம் தெளிவாகச் சொன்னதாவது: “இஸ்ரவேல் குமாரத்திகளில் ஒருத்தியும் வேசியாயிருக்கக்கூடாது; இஸ்ரவேலின் குமாரரில் ஒருவனும் ஆண்புணர்ச்சிக்காரனாயிருக்கக்கூடாது. வேசிப்பணயத்தையும் நாயின் கிரயத்தையும் எந்தப் பொருத்தனையினாலாகிலும் உன் தேவனாகிய யெகோவாவின் ஆலயத்திலே கொண்டுவராயாக; அவைகள் இரண்டும் உன் தேவனாகிய யெகோவாவுக்கு அருவருப்பானவைகள்.” (உபாகமம் 23:17,18) இதன் காரணமாக ஒரு வேசியின் ஊதியம் கடவுளுடைய பரிசுத்த ஸ்தலத்தில் ஒரு நன்கொடையாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. எந்தவித மத சம்பந்தமான தொடர்புமில்லாத வேசித் தொழிலும்கூட வெட்கக் கேடானதாகும். இஸ்ரவேலர் இவ்விதமாகக் கட்டளையிடப்பட்டனர்: “தேசத்தார் வேசித்தனம் பண்ணி தேசமெங்கும் முறைகேடான பாவம் நிறையாதபடிக்கு உன் குமாரத்தியை வேசித்தனம் பண்ணவிடுகிறதினாலே பரிசுத்தக் குலைச்சலாக்காயாக.” “அருவருப்பான காரியம்” என்பதாக வருணிக்கப்படும் வேசித் தொழிலுக்கும் ஓரினப்புணர்ச்சிக்கும் எதிரான சட்டங்கள் ஆவிக்குரிய விதத்திலும் சரீரப்பிரகாரமாயும் தேசத்துக்கு ஒரு பாதுகாப்பாக இருந்தன.—லேவியராகமம் 19:29; 20:13.
ஆவிக்குரிய வேசித்தனம் அதைவிட மோசமானது
4 ஆனால் கடவுளுடைய நோக்குநிலையிலிருந்து பார்க்கையில் அதைவிட மோசமான ஒருவித வேசித்தனம் இருக்கிறது—ஆவிக்குரிய வேசித்தனம் அல்லது மெய்க்கடவுளை வணங்குவதாக உரிமைப்பாராட்டிக் கொண்டு மற்ற தெய்வங்களுக்கு வணக்கத்தையும் பாசத்தையும் கொடுப்பதாக இது இருக்கிறது. பூர்வ எருசலேம் தன் வேசித்தனத்தை இன்னும் ஒரு படி மேலே கொண்டுசென்றாள். அவள் தன்னோடு ஆவிக்குரிய வேசித்தனஞ் செய்த தேசங்களுக்கு வெகுமதிகளைக் கொடுத்து மெய்வணக்கத்தின் தூய்மையை கெடுத்துவிட்டாள்.—எசேக்கியேல் 16:34.
5 இந்த 20-ம் நூற்றாண்டிலும்கூட, ஆவிக்குரிய வேசித்தனம் உலகின் மத அமைப்புகளில் மிகச் சாதாரணமாகக் காணப்படுகிறது. அந்த அமைப்பில் கிறிஸ்தவமண்டலம் ஒரு பிரதான பாகமாக இருந்து வருகிறது. அந்த அமைப்பை “மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய்” என்பதாக பைபிள் அழைக்கிறது.—வெளிப்படுத்துதல் 17:5.
6 ஆனால் மகா பாபிலோனின் முடிவான கதி என்ன? அந்த இறுதி விளைவு உங்களையும் உங்களுக்கு அன்பானவர்களையும் எவ்விதமாக பாதிக்கும்? பூர்வ இஸ்ரவேலில் கடவுள் வேசிக்குச் சாதகமில்லாத நியாயத்தீர்ப்பை வழங்கினாரேயானால், நவீன கால ஆவிக்குரிய வேசித்தனத்தைப் பற்றி அவர் என்ன செய்வார்? பின்வரும் கட்டுரைகள் இந்தக் கேள்விகளையும் இதோடு சம்பந்தப்பட்டவைகளையும் ஆராயவிருக்கிறது. (w89 4⁄15)
[கேள்விகள்]
1.வேசித் தொழில் பலரால் எவ்விதமாகக் கருதப்பட்டு வந்திருக்கிறது?
2, 3.பூர்வ பாபிலோனில் பெண் ஆசாரியர்கள் வகித்தப் பங்கு, ஆண்களும் பெண்களும் வேசித்தனம் செய்வது குறித்து இஸ்ரவேலுக்குக் கொடுக்கப்பட்ட யெகோவாவின் சட்டத்துக்கு எவ்விதமாக நேர் எதிர்மாறாக இருந்தது?
4.மிக மோசமான வகையான வேசித்தனம் எது?
5, 6.இந்த 20-ம் நூற்றாண்டில் ஆவிக்குரிய வேசித்தனஞ் செய்வது யார்? இது என்ன கேள்விகளுக்கு வழிநடத்துகிறது?