வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திலிருந்து சாட்சிகள்
பாசான்—ஒரு செழிப்பான பிரதேசம்
பைபிளை வாசிக்கும் போது, நீங்கள் மனதில் கற்பனைசெய்துபார்க்க முடியாத அநேக இடங்களின் பெயர்களைக் கவனித்திருப்பீர்கள் அல்லவா? 1989-ல் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை யெகோவாவின் சாட்சிகள் மீகா முதல் சகரியா மட்டும் வாசித்தார்கள். அந்த அட்டவணையைப் பின்பற்றும்போது, பாசான் மூன்று வசனங்களில் குறிப்பிடப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். (மீகா 7:14; நாகூம் 1:4; சகரியா 11:2) பாசானை உங்கள் மனக்கண்களில் கற்பனைசெய்து பார்க்க முடிந்தால், அந்த வசனங்களும் மற்ற அக்கறைக்குரிய வசனங்களும் உங்களுக்கு அதிகத்தைக் குறித்திடும்.
பாசான் எங்கே இருந்தது? சரி, அதைப் பொதுவாக நீங்கள் தினசரிகளின் நிலவரைப்படங்களில் கோலான் உச்சிகளுடன் அடையாளம் காணலாம். பாசான் கலிலேயாக் கடலுக்கும் மேல் யோர்தான் பள்ளத்தாக்குக்கும் கிழக்கே இருந்தது. அது யார்முக் நதி முதல் (யோர்தானுக்கும் சீரியாவுக்கும் இடையிலான தற்போதைய எல்லையின் ஒரு பகுதி) வடக்கே எர்மோன் மலை வரையாகச் சென்றது.
பூர்வ இஸ்ரவேலர் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் பிரவேசிப்பதற்கு முன் அவர்கள் இராட்சதரில் ஒருவனும் பாசானின் அரசனுமாகிய ஓகின் கானானிய சேனையை முறியடிக்கவேண்டியதாய் இருந்தது. (உபாகமம் 3:1–7, 11, 13; எண்ணாகமம் 32:33; 34:14) இந்தப் பைபிள் பிரதேசம் எப்படிப்பட்டதாய் இருந்தது? அதன் மலைப் பிரதேசங்களில் காடுகள் இருந்த போதிலும், பாசானின் பெரும் பகுதி மேட்டு நிலமாக இருந்தது.
பாசான் அநேக அம்சங்களில் உணவுக் களஞ்சியமாக இருந்தது. இதற்குக் காரணம், அருமையான புல் வெளிகளும் மேய்ச்சல் பகுதிகளும் ஏராளமாக இருந்தன. (எரேமியா 50:19) இங்குக் கொடுக்கப்பட்டிருக்கும் படங்கள் பாசான் பற்றிய சில பைபிள் குறிப்புகளை உங்கள் நினைவுக்குக் கொண்டுவரக்கூடும்.a அநேகர் “பாசான் தேசத்துப் பலத்த எருதுகள்” குறித்து வாசித்திருக்கின்றனர். (சங்கீதம் 22:12) ஆம், பூர்வக் காலங்களில் அந்தப் பிரதேசம் பலத்த எருதுகள் உட்பட அதன் கால்நடைகளுக்குச் சிறந்து விளங்கினது. ஆனால் செம்மறியாடுகள், வெள்ளாடுகள் போன்ற மற்ற கால்நடைகளும் ஏராளமான பால் மற்றும் வெண்ணையை ஈன்றது.—உபாகமம் 32:14.
பாசான் யோர்தானுக்குக் கிழக்கே அமைந்திருந்ததாலும், அது சற்று வறட்சியான பகுதி என்று பலர் கருதுவதாலும் அது அவ்விதமான செழிப்பைக் கொண்டிருக்க எது உதவியது என்று நீங்கள் யோசிக்கக்கூடும். உண்மை என்னவெனில், மேற்கில் அமைந்திருக்கும் கலிலேய மலைகள் தாழ்ந்தவையாதலால், மத்தியதரைப் பகுதியிலிருந்து மேகங்கள் கடந்துசெல்ல முடிந்தது, அதனால் அவை பாசானுக்குப் போதியளவு மழையைக் கொண்டுவந்தன. மேலும், எர்மோன் மலையிலிருந்து ஈரக் காற்றும் ஓடைகளும் வந்தது. அந்த ஈரக் காற்றும் பாசானில் காணப்பட்ட எரிவளம் மிகுந்த மண்ணும் சேருமிடத்து அதன் வளத்தைச் சற்று கற்பனை செய்து பாருங்கள்! அந்தப் பிரதேசம் ஏராளமான தாவரத்தை விளைவித்தது. ரோமருக்கு இந்தப் பிரதேசம் ஓர் உணவுக் களஞ்சியமாக இருப்பதற்கு வெகு காலத்துக்கு முன்பே, பாசான் சாலொமோனின் மேசைகளுக்கு உணவை அளித்தது. அப்படியென்றால் நல்ல காரணத்துக்காகவே, தம்முடைய மீட்கப்பட்ட மக்களுக்குக் கடவுள் செய்த ஏற்பாடு இவ்விதமாகப் பேசப்படலாம்: “பூர்வ காலங்களில் மேய்ந்தது போலவே அவர்கள் பாசானிலும் கீலேயாத்திலும் மேய்வார்களாக.”—மீகா 7:14; 1 இராஜாக்கள் 4:7, 13.
அப்படிப்பட்ட செழிப்பை அறிந்தவர்களாய், கடவுளுடைய கோபம் எதைக் கொண்டுவரும் என்ற நாகூமின் கடுமையான விவரத்தை நீங்கள் போற்றக்கூடும்: “பாசானும் கர்மேலும் [மகா சமுத்திரத்திற்கு அண்மையிலிருந்த பசுமை பொங்கிய மலைகள்] சோர்ந்து, லீபனோனின் செழிப்பு வாடிப்போகும்.”—நாகூம் 1:4.
பாசானைப் பற்றிய இந்த விவரம் பைபிளின் சில நெருங்கிய காட்சிகளை நீங்கள் கற்பனை செய்திட உதவும். உதாரணமாக, பாசானில் ஏராளமாக பயிர் செய்யப்பட்ட கோதுமை போன்ற தானியங்கள் அறுவடை செய்யப்படுவதைக் குறித்து நீங்கள் வாசித்திருக்கக்கூடும். கோதுமை அறுவடை உஷ்ணமாயிருந்த இயார் மற்றும் சீவான் மாதங்களில் (யூதர் நாள்காட்டியில் இந்த மாதங்களுக்கு இணையாக ஏப்ரல் மாதத்தின் பிற்பகுதி, மே மற்றும் ஜூன் மாதத்தின் ஆரம்பப் பகுதி) நடந்தன. இந்தக் காலப்பகுதியில்தான் வாரங்களின் பண்டிகை (பெந்தெகொஸ்தே) ஆசரிக்கப்பட்டது. இதன் ஒரு அம்சமாக, கோதுமை அறுப்பின் முதல் பலனும் ஆட்டுக்குட்டிகளும், காளைகளும், ஆட்டுக்கடாக்களும் பலியாகச் செலுத்தப்பட்டன. அந்த மிருகங்கள் பாசானிலிருந்து கொண்டுவரப்பட்டிருக்கக்கூடுமா?—யாத்திராகமம் 34:22; லேவியராகமம் 23:15–18.
அறுவடைக் காலத்தில் அறுப்பு அறுக்கிறவர்கள் மேலே காணப்படுவதைப் போன்ற பிடி இல்லாத வளைந்த அரிவாளைக் கொண்டு அறுவடை செய்கின்றனர். (உபாகமம் 16:9, 10; 23:25) கதிர்கள் சேர்க்கப்பட்டு போரடிக்கும் களத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு (கீழே கற்கள் மாட்டப்பட்டிருக்கும்) மர வண்டி ஓட்டப்பட்டு கோதுமை மணிகள் கதிரிலிருந்து பிரிக்கப்படுகின்றன. (ரூத் 2:2–7, 23; 3:3, 6; ஏசாயா 41:15) கோலன் உச்சியில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தை நீங்கள் பார்க்கும்போது, கடவுள் கொடுத்த அர்த்தமுள்ள விதியை எண்ணிப்பார்க்கக்கூடும்: “போரடிக்கிற மாட்டை வாய் கட்டாதே.”—உபாகமம் 25:4; 1 கொரிந்தியர் 9:9.
கடைசியாக, பூர்வ பாசான் அடர்த்தியான காடுகளைக் கொண்டிருந்தது என்பதை ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள். இடது பக்கத்தில் காட்டப்பட்டிருக்கிறபடி, அதன் மரங்களில் பல பெரிய கருவாலிமரங்களாக இருந்தன. பேனிக்கேயர் பாசானில் விளைந்த பலமான கருவாலி மரத்தால் துடுப்புகள் செய்தனர். (எசேக்கியேல் 27:6) என்றாலும், “அடர்ந்த காடுகளில் வளர்ந்த பாசானின் கருவாலி மரங்கள்” கூட கடவுளுடைய கோபத்திற்கு எதிராக நிற்க முடியவில்லை. (சகரியா 11:2; ஏசாயா 2:13) அப்படிப்பட்ட மரங்களைக் கொண்ட காடுகள் தப்பியோடும் சேனைக்கு ஏன் பிரச்னையாக இருக்கின்றன என்பதை எளிதில் கற்பனைசெய்துபார்க்க முடிகிறது. மற்றொரு இடத்தில் அப்சலோமுக்கு ஏற்பட்டதுபோல தனிமையாகச் சவாரி செய்யும் ஒருவருங்கூட எளிதில் அதன் கிளைகளில் சிக்கிக்கொள்ளக்கூடும்.—2 சாமுவேல் 18:8, 9.
பைபிள் சம்பவங்கள் பல இடம்பெறாத பாசான் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தின் ஒரு பகுதியாக இருந்தபோதிலும், அந்தப் பிரதேசத்தின் சில காட்சிகள் அதை உட்படுத்திய பைபிள் மேற்கோள்களை நாம் மேன்மையான விதத்தில் புரிந்துகொள்ளச் செய்கின்றன. (w89 5/1)
[அடிக்குறிப்புகள்]
a யெகோவாவின் சாட்சிகளின் 1989 ஆண்டு காலண்டர் பார்க்கவும்.
[பக்கம் 28-ன் படங்களுக்கான நன்றி]
Pictorial Archive (Near Eastern History) Est.
[பக்கம் 29-ன் படங்களுக்கான நன்றி]
Pictorial Archive (Near Eastern History) Est.
Inset: Badè Institute of Biblical Archaeology
Pictorial Archive (Near Eastern History) Est.