‘நடக்கப்போவதை முன்னரே காணும்’ ஞானம்
“அவர்கள் புத்திகெட்டவர்கள், புரிந்துகொள்ளுதல் இல்லாதவர்கள். அவர்களுக்கு ஞானம் இருந்தால், இதைப் புரிந்துகொண்டு, நடக்கப்போவதை முன்னரே காண்பார்கள்.”—உபாகமம் 32:28, 29, பெக்.
இஸ்ரவேலர் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தின் வாசலில் இருந்தபோது அவர்களிடம் மோசே சொன்ன வார்த்தைகளே இவை. யெகோவாவை விட்டுவிட்டு தங்களுடைய செயல்களின் விளைவை உணராமல் இருக்கப்போகும் ஒரு காலத்தைப் பற்றி மோசே முன்னுரைத்துக் கொண்டிருந்தார். பின்வந்த நூற்றாண்டுகளில், இஸ்ரவேலர்—அநேக ராஜாக்கள் உட்பட—கடவுளுடைய எச்சரிக்கைகளை அசட்டை செய்தனர்.
உதாரணமாக, யெகோவாவை அன்றி வேறே தேவர்களை வழிபடுவோரை வாழ்க்கை துணையாக வைத்துக்கொள்ளக் கூடாது என்பது தெய்வீக கட்டளை; இதை சாலொமோனும் அறிந்திருந்தார். (உபாகமம் 7:1-4) ஆனால் அதற்கு செவிசாய்த்தாரா? பைபிள் பதிவை கவனியுங்கள்: ‘அந்நிய ஜாதியாரான அநேகம் ஸ்திரீகளை’ வைத்துக்கொண்டார். விளைவு? பைபிள் பதிவு தொடர்கிறது: “சாலொமோன் வயதுசென்றபோது, அவனுடைய மனைவிகள் அவன் இருதயத்தை அந்நிய தேவர்களைப் பின்பற்றும்படி சாயப்பண்ணினார்கள்; அதினால் அவனுடைய இருதயம் அவன் தகப்பனாகிய தாவீதின் இருதயத்தைப்போல, தன் தேவனாகிய கர்த்தரோடே உத்தமமாயிருக்கவில்லை.” (1 இராஜாக்கள் 11:1, 4) ஞானியாக இருந்தபோதிலும், ‘நடக்கப்போவதை முன்னரே காணும்’ நல்ல புத்தி அவருக்கு இல்லையே.
நம்மைப் பற்றியென்ன? வாழ்க்கையில் தீர்மானங்கள் எடுக்கும் முன்னரே ஆற அமர செய்தால் அநேக அல்லல்களைத் தவிர்க்கலாம். உதாரணமாக, ‘மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொள்ளும்படி’ கிறிஸ்தவர்களுக்கு புத்திமதி கூறப்படுகிறது. (2 கொரிந்தியர் 7:1) இது ஞானமானது, ஆனால் பவுலின் புத்திமதியை புறக்கணித்தால் என்ன நடக்கும் என்பதை முன்னரே காணும் நல்ல புத்தி அநேகருக்கு கிடையாது. உதாரணமாக, புகைபிடிப்பதால் இளைஞர்கள் பலர் தங்களுடைய உடல்நலத்தை கெடுத்துக்கொள்கின்றனர். அது, எல்லாம் தெரிந்த ஞானிகளாகவும் பெரிய மனுஷன்களாகவும் தங்களை காட்டுவதாக நினைத்துக்கொள்கின்றனர். ஆனால் பிற்காலத்தில், இருதய கோளாறுகள், நுரையீரல் புற்றுநோய், அல்லது காற்றேற்ற விரிவு (emphysema) போன்ற நோய்களால் அநேகர் அவதியுறுகின்றனர்.
நம்முடைய தீர்மானங்கள் மற்றும் செயல்களின் பின்விளைவுகளுக்கு ஆழ்ந்த கவனம் செலுத்துவது இன்றியமையாதது. “மோசம்போகாதிருங்கள், மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான்” என்று பவுல் சொன்னதிலும் அர்த்தமுள்ளது.—கலாத்தியர் 6:7, 8.