யெகோவாவுக்கு உகந்த இருதயத்தை பெறுங்கள்
“தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்.”—சங்கீதம் 51:10.
1, 2. நாம் ஏன் நமது இருதயத்தில் அக்கறை காண்பிக்க வேண்டும்?
அவன் உயரமாகவும், பார்ப்பதற்கு அழகாகவும் இருந்தான். அவனை பார்த்தவுடன் தீர்க்கதரிசியான சாமுவேலுக்கு மிகவும் பிடித்துவிட்டதால், ஈசாயின் மூத்த குமாரனாகிய இவனையே சவுலுக்கு பிறகு ராஜாவாக்க கடவுள் தெரிவு செய்திருப்பதாக அவர் முடிவு செய்துவிட்டார். ஆனால் யெகோவா இவ்வாறு கூறினார்: “நீ இவனுடைய [இந்த மகனுடைய] முகத்தையும், இவனுடைய சரீர வளர்ச்சியையும் பார்க்க வேண்டாம்; நான் இவனைப் புறக்கணித்தேன்; . . . மனுஷன் முகத்தைப் பார்ப்பான்: கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்.” ஈசாயின் இளைய குமாரனாகிய தாவீதையே யெகோவா தெரிவு செய்தார், அவன் அவருடைய ‘இருதயத்திற்கு உகந்தவனாக’ இருந்தான்.—1 சாமுவேல் 13:14, NW; 16:7.
2 கடவுளால் மனிதர்களின் இருதயத்தில் உள்ளதை வாசிக்க முடியும். இதை அவரே பின்னர் தெளிவாக்கினார்: “கர்த்தராகிய நானே ஒவ்வொருவனுக்கும், அவனவன் வழிகளுக்கும் செய்கைகளின் பலன்களுக்கும் தக்கதைக் கொடுக்கும்படிக்கும், இருதயத்தை ஆராய்கிறவரும் உள்ளிந்திரியங்களைச் சோதித்தறிகிறவருமாயிருக்கிறேன்.” (எரேமியா 17:10) ஆம், “யெகோவாவோ இருதயங்களைப் பரீட்சிப்பவர்.” (நீதிமொழிகள் 17:3, தி.மொ.) ஆனால், யெகோவா சோதிக்கும் மனிதனின் அந்த இருதயம் எது? அவருக்கு உகந்த இருதயத்தை நாம் எவ்வாறு பெற முடியும்?
‘இருதயத்தில் மறைந்திருக்கிற குணம்’
3, 4. பைபிளில் ‘இருதயம்’ என்ற வார்த்தை முக்கியமாக என்ன கருத்தில் உபயோகிக்கப்பட்டுள்ளது? உதாரணங்கள் கொடுங்கள்.
3 ‘இருதயம்’ என்ற வார்த்தை பரிசுத்த பைபிளில் சுமார் ஆயிரம் தடவை காணப்படுகிறது. அது பெரும்பாலான சமயங்களில் அடையாள அர்த்தத்தில்தான் உபயோகிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, தீர்க்கதரிசி மோசேயிடம் யெகோவா இவ்வாறு கூறினார்: “இஸ்ரவேல் புத்திரர் எனக்குக் காணிக்கையைக் கொண்டுவரும்படி அவர்களுக்குச் சொல்லு; மனப்பூர்வமாய் உற்சாகத்துடன் [“இருதய தூண்டுதலுடன்,” NW] கொடுப்பவன் எவனோ அவனிடத்தில் எனக்குக் காணிக்கையை வாங்குவீர்களாக.” பிறகு, “எவர்களை அவர்கள் இருதயம் எழுப்பி”யதோ அவர்கள் காணிக்கை கொடுத்தார்கள். (யாத்திராகமம் 25:2; 35:21) தெளிவாகவே, அடையாளப்பூர்வ இருதயத்தின் ஒரு அம்சம் தூண்டுதலாகும்; அது செயல்பட தூண்டுவிக்கும் உள்ளான சக்தியாகும். நமது அடையாளப்பூர்வ இருதயம் நம் மனக்கிளர்ச்சிகள், உணர்ச்சிகள், விருப்பங்கள், ஆசாபாசங்கள் ஆகியவற்றையும் வெளிப்படுத்துகிறது. ஓர் இருதயம் கோபத்தால் கொதித்தெழலாம், பயத்தால் பீடிக்கப்படலாம், துயரத்தால் துவண்டு போகலாம், அல்லது சந்தோஷத்தால் குதூகலிக்கலாம். (சங்கீதம் 27:3; 39:3; யோவான் 16:22; ரோமர் 9:2, NW) அது பெருமை அல்லது தாழ்மை, அன்பு அல்லது வெறுப்பு நிறைந்ததாகவும் இருக்கலாம்.—நீதிமொழிகள் 16:5; மத்தேயு 11:29; NW; 1 பேதுரு 1:22.
4 ஆகவே, ‘இருதயம்’ என்பது பெரும்பாலும் தூண்டுதலோடும் உணர்ச்சிகளோடும் சம்பந்தப்பட்டது, ‘மனம்’ என்பதோ முக்கியமாக அறிவாற்றலோடு சம்பந்தப்பட்டது. வேதவசனங்களில் இந்த இரண்டு வார்த்தைகளும் ஒரே சூழமைவில் பயன்படுத்தப்படுகையில் அவற்றை இவ்வாறுதான் புரிந்துகொள்ள வேண்டும். (மத்தேயு 22:37; பிலிப்பியர் 4:7, NW) ஆனால் மனமும் இருதயமும் ஒன்றுக்கொன்று தொடர்பற்றவை அல்ல. உதாரணமாக, மோசே இஸ்ரவேலரை இவ்வாறு ஊக்குவித்தார்: “கர்த்தரே தேவன், . . . என்பதை . . . உன் மனதிலே [அல்லது “உள்ளத்தில்,” பொது மொழிபெயர்ப்பு] சிந்தி”க்க வேண்டும். (உபாகமம் 4:39) தமக்கு எதிராக திட்டம் தீட்டிய வேதபாரகரிடம் இயேசு இவ்வாறு கூறினார்: “நீங்கள் உங்கள் இருதயங்களில் பொல்லாதவைகளைச் சிந்திக்கிறதென்ன?” (மத்தேயு 9:4) “புரிந்துகொள்ளுதல்,” “அறிவு,” “நியாயங்காட்டுதல்” ஆகியவையும் இருதயத்தோடு சம்பந்தப்பட்டிருக்கலாம். (1 இராஜாக்கள் 3:12; நீதிமொழிகள் 15:14; மாற்கு 2:6; NW) ஆகவே, அடையாளப்பூர்வ இருதயம் நமது அறிவாற்றலையும்கூட—எண்ணங்களையும் அல்லது புரிந்துகொள்ளுதலையும்கூட—உட்படுத்தலாம்.
5. அடையாளப்பூர்வ இருதயம் எதைக் குறிக்கிறது?
5 ஒரு புத்தகத்தின்படி அடையாளப்பூர்வ இருதயம், “பொதுவாக முக்கிய பகுதியை, உள்ளானவற்றை [குறிப்பதால்], ஒரு மனிதனுடைய பல்வேறு நடவடிக்கைகள், ஆசைகள், பாசங்கள், உணர்ச்சிகள், பேரார்வங்கள், நோக்கங்கள், எண்ணங்கள், புலனுணர்வுகள், கற்பனைகள், அவனுடைய ஞானம், அறிவு, திறமை, நம்பிக்கைகள், நியாயவிவாதங்கள், அவனுடைய நினைவு மற்றும் உணர்வாற்றல் ஆகியவற்றில் வெளிப்படும் உள்ளான மனுஷனை குறிக்கிறது.” அதாவது, உள்ளே நாம் உண்மையில் எப்படிப்பட்டவர்கள் என்பதை, “இருதயத்தில் மறைந்திருக்கிற குண”த்தை அது குறிக்கிறது. (1 பேதுரு 3:4) யெகோவா அதைத்தான் பார்க்கிறார், சோதிக்கிறார். ஆகவேதான் தாவீதால் இவ்வாறு ஜெபிக்க முடிந்தது: “தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்.” (சங்கீதம் 51:10) நாம் எவ்வாறு சுத்த இருதயத்தை பெற முடியும்?
கடவுளுடைய வார்த்தையை “உங்கள் உள்ளத்தில் இருத்துங்கள்”
6. மோவாபிய சமவெளியில் இருக்கையில் இஸ்ரவேலருக்கு மோசே என்ன அறிவுரை கொடுத்தார்?
6 வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் நுழைவதற்கு முன்பு மோவாபிய சமவெளியில் கூடியிருந்த இஸ்ரவேலர்களை மோசே இவ்வாறு எச்சரித்தார்: “உங்களுக்கு எதிரான சான்றாக நான் இன்று உரைத்த வார்த்தைகள் எல்லாவற்றையும் உங்கள் உள்ளத்தில் இருத்துங்கள். அப்போதுதான் இத்திருச்சட்டத்தின் வார்த்தைகள் அனைத்தையும் கருத்தாய்க் கடைப்பிடிக்குமாறு நீங்கள் உங்கள் மக்களுக்கு கட்டளையிடுவீர்கள்.” (உபாகமம் [இணைச் சட்டம்] 32:46, பொ.மொ.) இஸ்ரவேலர்கள் “நன்கு கவனம் செலுத்த” வேண்டும். (க்னாக்ஸ்) கடவுளுடைய கட்டளைகளை அவர்கள் முழுமையாக அறிந்திருந்தால்தான் தங்கள் பிள்ளைகளில் அவற்றை ஆழ பதிய வைக்க முடியும்.—உபாகமம் 6:6-8.
7. கடவுளுடைய வார்த்தையை ‘உள்ளத்தில் இருத்துவதில்’ என்ன உட்பட்டுள்ளது?
7 கடவுளுடைய சித்தத்தையும் நோக்கங்களையும் பற்றிய திருத்தமான அறிவை பெறுவதே சுத்தமான இருதயத்தைப் பெற முக்கியமாக தேவைப்படுகிறது. அந்த அறிவிற்கு ஒரேவொரு ஊற்றுமூலமே உள்ளது, அதுவே ஏவப்பட்ட கடவுளுடைய வார்த்தை. (2 தீமோத்தேயு 3:16, 17) ஆனாலும், யெகோவாவை பிரியப்படுத்தும் இருதயத்தை வளர்க்க, வெறுமனே அறிவை சேகரித்து வைத்திருப்பது மட்டுமே போதாது. உள்ளே நாம் உண்மையில் எப்படிப்பட்டவர்களாய் இருக்கிறோம் என்பதை அறிவு மாற்ற வேண்டுமென்றால் நாம் கற்றுக்கொள்வதை ‘உள்ளத்தில் இருத்த’ அல்லது “இருதயத்தில் ஏற்க” வேண்டும். (உபாகமம் 32:46, அன் அமெரிக்கன் டிரான்ஸ்லேஷன்) இதை எப்படி செய்யலாம்? சங்கீதக்காரன் தாவீது பின்வருமாறு விளக்குகிறார்: “பூர்வநாட்களை நினைக்கிறேன், உமது செய்கைகளையெல்லாம் தியானிக்கிறேன்; உமது கரத்தின் கிரியைகளை யோசிக்கிறேன்.”—சங்கீதம் 143:5.
8. படிக்கையில் நாம் என்ன கேள்விகளை சிந்திக்கலாம்?
8 நாமும்கூட யெகோவாவின் செயல்களை போற்றுதலோடு தியானிக்க வேண்டும். பைபிளை அல்லது பைபிள் பிரசுரங்களை வாசிக்கையில் பின்வரும் கேள்விகளை சிந்திக்க வேண்டும்: ‘யெகோவாவைப் பற்றி இது எனக்கு என்ன சொல்கிறது? யெகோவாவின் என்ன குணங்கள் இங்கே வெளிப்படுத்தப்படுகின்றன? யெகோவாவின் விருப்பு வெறுப்புகளைப் பற்றி இது என்ன கூறுகிறது? யெகோவா விரும்புகிற அல்லது வெறுக்கிற வழியை பின்பற்றுவதால் வரும் பின்விளைவுகள் என்ன? நான் ஏற்கெனவே அறிந்தவற்றோடு இந்த தகவல் எவ்வாறு பொருந்துகிறது?’
9. தனிப்பட்ட படிப்பும் தியானமும் எந்தளவுக்கு முக்கியம்?
9 அர்த்தமுள்ள படிப்பும் தியானமும் எவ்வளவு முக்கியம் என்பதை மதித்துணர ஆரம்பித்ததைப் பற்றி 32 வயது லீசa கூறுகிறார்: “1994-ல் முழுக்காட்டுதல் பெற்ற பிறகு சுமார் இரண்டு வருடங்களுக்கு சத்தியத்தில் முழு ஈடுபாடு கொண்டிருந்தேன். கிறிஸ்தவ கூட்டங்கள் எல்லாவற்றிற்கும் சென்றேன், வெளி ஊழியத்தில் மாதத்திற்கு 30 முதல் 40 மணிநேரம் செலவழித்தேன், உடன் கிறிஸ்தவர்களோடு கூட்டுறவை அனுபவித்தேன். அதற்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பித்தேன். கடவுளுடைய சட்டத்தை மீறுமளவுக்கு அவ்வளவு கேவலமான நிலைமைக்கு சென்றுவிட்டேன். ஆனால் புத்தி வந்தபோது என் வாழ்க்கையில் மாற்றங்கள் செய்ய தீர்மானித்தேன். என் மனந்திரும்புதலை யெகோவா அங்கீகரித்து என்னை மறுபடியும் ஏற்றுக்கொண்டதற்காக எவ்வளவு சந்தோஷப்படுகிறேன்! ‘ஏன் வழிவிலகினேன்?’ என்பதை பற்றி அடிக்கடி யோசித்திருக்கிறேன். அர்த்தமுள்ள படிப்பையும் தியானத்தையும் அசட்டை செய்ததுதான் காரணம் என்பதே திரும்பத் திரும்ப என் மனதிற்கு வரும் பதிலாகும். பைபிள் சத்தியம் என் இருதயத்தை எட்டவில்லை. இனிமேல் தனிப்பட்ட படிப்பும் தியானமும் என் வாழ்க்கையின் முக்கிய அம்சங்களாக இருக்கும்.” யெகோவா, அவருடைய குமாரன், அவருடைய வார்த்தை ஆகியவற்றைப் பற்றிய நமது அறிவு அதிகரிக்கையில் அவற்றைக் குறித்து அர்த்தமுள்ள விதத்தில் சிந்திக்க நேரத்தை ஒதுக்குவது எவ்வளவு முக்கியம்!
10. தனிப்பட்ட படிப்பிற்கும் தியானத்திற்கும் நேரம் ஒதுக்க வேண்டியது ஏன் அவசரம்?
10 இந்த அவசர உலகில் படிப்பதற்கும் தியானிப்பதற்கும் நேரத்தை கண்டுபிடிப்பது உண்மையில் கடினம்தான். ஆனால் இன்று கிறிஸ்தவர்கள், ஓர் அருமையான வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தின் நுழைவாயிலில் நிற்கின்றனர், அதுவே கடவுளுடைய நீதியுள்ள புதிய உலகம். (2 பேதுரு 3:13) ‘மகா பாபிலோனின்’ அழிவு, “மாகோகு தேசத்தானான கோகு” யெகோவாவின் மக்களை தாக்குவது போன்ற வியப்பூட்டும் சம்பவங்கள் வெகு சீக்கிரத்தில் நிகழவிருக்கின்றன. (வெளிப்படுத்துதல் 17:1, 2, 5, 15-17; எசேக்கியேல் 38:1-4, 14-16; 39:2) எதிர்காலத்தில் நிகழவிருப்பவை யெகோவாவுக்கான நம் அன்பை சோதிக்கலாம். ஆக, இப்பொழுதே நேரத்தை வாங்கி கடவுளுடைய வார்த்தையை நம் உள்ளத்தில் இருத்த வேண்டும்!—எபேசியர் 5:15, 16.
‘கடவுளுடைய வார்த்தையை ஆராய உங்கள் இருதயத்தைப் பக்குவப்படுத்துங்கள்’
11. நம் இருதயத்தை எவ்வாறு நிலத்திற்கு ஒப்பிடலாம்?
11 அடையாளப்பூர்வ இருதயத்தை, சத்திய விதைகளை விதைக்கும் நிலத்திற்கு ஒப்பிடலாம். (மத்தேயு 13:18-23) பயிர் செழிப்பாக வளருவதை உறுதி செய்ய நிலம் பொதுவாக பண்படுத்தப்படும். அதைப் போலவே, கடவுளுடைய வார்த்தையை ஏற்கும்படி இருதயமும் தயார் செய்யப்பட வேண்டும். ஆசாரியன் எஸ்றா “கர்த்தருடைய வேதத்தை ஆராயவும், அதின்படி செய்யவும், . . . தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தா[ர்].” (எஸ்றா 7:10) நமது இருதயத்தை நாம் எவ்வாறு தயார்படுத்தலாம்?
12. படிப்பிற்காக இருதயத்தை தயார்படுத்த எது உதவும்?
12 இருதயப்பூர்வமாக ஜெபிப்பதே, கடவுளுடைய வார்த்தையை வாசிக்கையில் நம் இருதயத்தை தயார்படுத்துவதற்கான மிகச் சிறந்த வழி. உண்மை வணக்கத்தாரின் கிறிஸ்தவ கூட்டங்கள் ஜெபத்தோடு ஆரம்பித்து, ஜெபத்தோடு நிறைவு பெறுகின்றன. ஆகவே, தனிப்பட்ட விதமாக பைபிளை படிக்கும் ஒவ்வொரு முறையும் உள்ளப்பூர்வமான ஜெபத்தோடு ஆரம்பித்து, அந்த படிப்பு முடியும் வரை ஜெப சிந்தையோடிருப்பது எவ்வளவு பொருத்தமாக இருக்கும்!
13. யெகோவாவுக்கு உகந்த இருதயத்தை பெற நாம் என்ன செய்ய வேண்டும்?
13 முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட கருத்துகளை நீக்கிவிடுவதன் மூலமும் அடையாளப்பூர்வ இருதயத்தை தயார்படுத்த வேண்டும். இயேசுவின் நாளிலிருந்த மதத்தலைவர்கள் இதை செய்ய தயாராய் இல்லை. (மத்தேயு 13:15) மறுபட்சத்தில், இயேசுவின் தாயாகிய மரியாள் தான் கேள்விப்பட்டிருந்த சத்தியங்கள் அடிப்படையில் தன் “இருதயத்திலே” தீர்மானங்களை செய்தார். (லூக்கா 2:19, 51) அவர் இயேசுவின் உண்மையுள்ள சீஷியானார். தியத்தீராவை சேர்ந்த லீதியாள், பவுல் சொன்னவற்றை கேட்டார்; “கர்த்தர் அவள் இருதயத்தைத் திறந்தருளினார்.” அவரும் விசுவாசியானார். (அப்போஸ்தலர் 16:14, 15) நாமும் தனிப்பட்ட கருத்துகளை அல்லது விருப்பமான கொள்கைகளை பிடிவாதமாக பற்றிக்கொள்ளாதிருப்போமாக. மாறாக, “தேவனே சத்தியபரர் என்றும், எந்த மனுஷனும் பொய்யன் என்றும்” ஏற்றுக்கொள்ள தயாராய் இருப்போமாக.—ரோமர் 3:4.
14. கிறிஸ்தவ கூட்டங்களில் செவிசாய்க்க நம் இருதயத்தை எவ்வாறு தயார்படுத்தலாம்?
14 கிறிஸ்தவ கூட்டங்களில் சொல்பவற்றை கேட்பதற்கும் நம் இருதயத்தை தயார்படுத்துவது மிக முக்கியம். கவனச்சிதறல்கள், பேசப்படும் விஷயத்திலிருந்து நம் கவனத்தை திசை திருப்பலாம். அன்று நிகழ்ந்தவற்றை அல்லது அடுத்த நாள் நிகழப்போகிறவற்றை பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தால் நாம் கேட்கும் விஷயங்களினால் நமக்கு பயனேதும் இருக்காது. சொல்லப்படுகிறவற்றிலிருந்து பயனடைய வேண்டுமென்றால் செவிசாய்க்கவும் கற்றுக்கொள்ளவும் நாம் திடத்தீர்மானமாக இருக்க வேண்டும். விளக்கப்படும் வேதவசனங்களை புரிந்துகொள்ளவும் அதற்கு தரப்படும் அர்த்தத்தை அறிந்துகொள்ளவும் நாம் தீர்மானமாயிருந்தால் எவ்வளவு நன்மைகளை பெறுவோம்!—நெகேமியா 8:5-8, 12.
15. நாம் மேலும் கற்பிக்கப்படத்தக்கவர்கள் ஆவதற்கு தாழ்மை நமக்கு எவ்வாறு உதவும்?
15 நிலத்தை இன்னும் வளமிக்கதாக்க பொருத்தமான பொருட்கள் சேர்க்கப்பட வேண்டும். அதைப் போலவே தாழ்மை, ஆவிக்குரிய காரியங்களுக்கான பசியார்வம், நம்பிக்கை, தேவ பயம், கடவுளுக்கான அன்பு ஆகியவை நம் அடையாளப்பூர்வ இருதயத்தை மேலும் வளமுள்ளதாக்கும். தாழ்மை நம் இருதயத்தை மென்மையாக்கி, நம்மை மேலும் கற்பிக்கப்படத்தக்கவர்களாக்கும். யூத அரசன் யோசியாவிடம் யெகோவா இவ்வாறு கூறினார்: “நான் . . . சொன்னதை நீ கேட்டபோது, உன் இருதயம் இளகி, நீ கர்த்தருக்கு முன்பாக உன்னைத் தாழ்த்தி, உன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, எனக்கு முன்பாக அழுதபடியினால் நானும் உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்.” (2 இராஜாக்கள் 22:19) யோசியாவின் இருதயம் தாழ்மையாகவும் ஏற்றுக்கொள்ளும் திறனுடையதாகவும் இருந்தது. இயேசுவின் சீஷர்கள் ‘படிப்பறியாதவர்களாகவும் பேதைமையுள்ளவர்களாகவும்’ இருந்தபோதிலும் ‘ஞானிகளும் கல்விமான்களும்’ புரிந்துகொள்ள முடியாத ஆவிக்குரிய சத்தியங்களை புரிந்துகொள்ளவும் பின்பற்றவும் தாழ்மையே அவர்களுக்கு உதவியது. (அப்போஸ்தலர் 4:13; லூக்கா 10:21) யெகோவாவுக்கு உகந்த இருதயத்தை பெற முயலுகையில் ‘நம் தேவனுக்கு முன்பாக நம்மையே தாழ்த்துவோமாக.’—எஸ்றா 8:21.
16. ஆவிக்குரிய உணவிற்காக பசியார்வத்தை வளர்த்துக்கொள்ள ஏன் முயற்சி தேவைப்படுகிறது?
16 “ஆவிக்குரிய தேவையை குறித்து உணர்வுள்ளவர்கள் சந்தோஷமுள்ளவர்கள்” என இயேசு கூறினார். (மத்தேயு 5:3, NW) ஆவிக்குரிய தன்மைக்கான திறமை நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிற போதிலும் இந்த பொல்லாத உலகின் அழுத்தங்கள் அல்லது சோம்பேறித்தனம் போன்ற குணங்கள் நம் தேவை பற்றிய உணர்வை மழுங்கச் செய்யலாம். (மத்தேயு 4:4) ஆவிக்குரிய உணவிற்காக நல்ல பசியார்வத்தை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். ஆரம்பத்தில், பைபிள் வாசிப்பிலும் தனிப்பட்ட படிப்பிலும் நமக்கு விருப்பமில்லாதிருக்கலாம்; ஆனால் அதை தொடர்ந்து செய்கையில், ‘அறிவு நம் ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும்’ என்பதைக் காண்போம், படிப்பதற்கான நேரத்தை ஆவலோடு எதிர்பார்ப்போம்.—நீதிமொழிகள் 2:10, 11.
17. (அ) நம் முழு நம்பிக்கைக்கும் யெகோவா ஏன் பாத்திரர்? (ஆ) கடவுளில் நாம் எவ்வாறு நம்பிக்கையை வளர்க்கலாம்?
17 “உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிரு” என அரசன் சாலொமோன் அறிவுறுத்தினார். (நீதிமொழிகள் 3:5) யெகோவா தம்முடைய வார்த்தையின் வாயிலாக கேட்கும் அல்லது கூறும் எதுவுமே எப்போதும் சரியானது என்பதை அவர் மேல் நம்பிக்கை வைத்திருக்கும் இருதயம் அறியும். (ஏசாயா 48:17) நமது முழு நம்பிக்கைக்கும் யெகோவா பாத்திரமானவரே. அவருடைய நோக்கங்கள் அனைத்தையும் அவரால் நிறைவேற்ற முடியும். (ஏசாயா 40:26, 29) அவருடைய பெயரின் அர்த்தமே “ஆகும்படி செய்கிறவர்” என்பதால் வாக்கு கொடுத்திருப்பவற்றை நிறைவேற்ற அவருக்கு இருக்கும் திறமையில் நம் நம்பிக்கை அதிகரிக்கிறது! அவர் “தமது வழிகளிலெல்லாம் நீதியுள்ளவரும், தமது கிரியைகளிலெல்லாம் கிருபையுள்ளவருமாயிருக்கிறார்.” (சங்கீதம் 145:17) பைபிளிலிருந்து கற்றுக்கொள்பவற்றை நம் வாழ்க்கையில் கடைப்பிடித்து, அதனால் வரும் நன்மைகளை பற்றி சிந்தித்து பார்ப்பதன் மூலம் “கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பா”ர்த்தால் அவர் மேலுள்ள நம் நம்பிக்கை வளரும்.—சங்கீதம் 34:8.
18. கடவுளுடைய வழிநடத்துதலை ஏற்றுக்கொள்ள தேவ பயம் நமக்கு எவ்வாறு உதவும்?
18 தெய்வீக வழிநடத்துதலை ஏற்க நம் இருதயத்தை பக்குவப்படுத்தும் மற்றொரு குணத்தை பற்றி சாலொமோன் இவ்வாறு குறிப்பிட்டார்: “கர்த்தருக்குப் பயந்து, தீமையை விட்டுவிலகு.” (நீதிமொழிகள் 3:7) பூர்வ இஸ்ரவேலரை பற்றி யெகோவா இவ்வாறு கூறினார்: “அவர்களும் அவர்கள் பிள்ளைகளும் என்றென்றைக்கும் நன்றாயிருக்கும்படி, அவர்கள் எந்நாளும் எனக்குப் பயந்து, என் கற்பனைகளையெல்லாம் கைக்கொள்வதற்கேற்ற இருதயம் அவர்களுக்கு இருந்தால் நலமாயிருக்கும்.” (உபாகமம் 5:29) ஆம், கடவுளுக்கு பயப்படுவோர் அவருக்கு கீழ்ப்படிவர். “தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்”ணவும் தமக்கு கீழ்ப்படியாதவர்களை தண்டிக்கவும் யெகோவாவுக்கு சக்தியுண்டு. (2 நாளாகமம் 16:9) கடவுளை பிரியப்படுத்தாமல் போய்விடுவோமோ என்ற மரியாதை கலந்த பயம் நம் சிந்தனைகள், செயல்கள், உணர்ச்சிகள் அனைத்தையும் வழிநடத்துவதாக.
‘உங்கள் முழு இருதயத்தோடும் யெகோவாவில் அன்புகூருங்கள்’
19. யெகோவாவின் வழிநடத்துதலை ஏற்க நம் இருதயத்தை தயார்படுத்துவதில் அன்பு என்ன பங்கை வகிக்கிறது?
19 யெகோவாவின் வழிநடத்துதலை ஏற்றுக்கொள்ள மற்ற எல்லா குணங்களையும்விட அன்பே நம் இருதயத்தை உண்மையில் தயார்படுத்துகிறது. கடவுளுக்கான அன்பு நிறைந்த இருதயம், அவருக்கு பிரியமானதையும் பிரியமில்லாததையும் அறிந்துகொள்ள ஒருவரை தூண்டுகிறது. (1 யோவான் 5:3) “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக” என இயேசு கூறினார். (மத்தேயு 22:37) அவருடைய நற்குணத்தை பற்றி சிந்திப்பதை பழக்கமாக்கிக் கொண்டு, நெருக்கமான நண்பரோடு பேசுவதுபோல அவரோடு எப்போதும் பேசி, மற்றவர்களிடம் அவரை பற்றி ஆர்வத்தோடு சம்பாஷிப்பதன் மூலம் அவர் மேலுள்ள நமது அன்பை அதிகரிப்போமாக.
20. யெகோவாவுக்கு உகந்த இருதயத்தை நாம் எவ்வாறு பெறலாம்?
20 மறுபார்வையாக, யெகோவாவுக்கு உகந்த இருதயத்தைப் பெற, கடவுளுடைய வார்த்தை நம் உள்ளான மனிதனில், அதாவது இருதயத்தில் மறைந்திருக்கும் குணத்தில் மாற்றங்கள் செய்ய அனுமதிக்க வேண்டும். அர்த்தமுள்ள தனிப்பட்ட படிப்பும் மதித்துணர்வு கலந்த தியானமும் அவசியம். தயார்படுத்தப்பட்ட இருதயத்தோடுதான் இதை நன்றாக செய்ய முடியும்; அதாவது, முன்தீர்மானிக்கப்பட்ட எண்ணங்கள் இல்லாத, நம்மை மேலும் கற்பிக்கப்படத்தக்கவர்களாக்கும் குணங்கள் நிறைந்த இருதயம் தேவை! ஆம், யெகோவாவின் உதவியோடு அவருக்கு உகந்த இருதயத்தை பெறலாம். ஆனால் நம் இருதயத்தை பாதுகாக்க நாம் என்ன செய்யலாம்?
[அடிக்குறிப்பு]
a பெயர் மாற்றப்பட்டுள்ளது.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
• யெகோவா ஆராயும் அடையாளப்பூர்வ இருதயம் எது?
• கடவுளுடைய வார்த்தையை எவ்வாறு நம் ‘உள்ளத்தில் இருத்தலாம்’?
• கடவுளுடைய வார்த்தையை ஆராய நம் இருதயத்தை எவ்வாறு தயார்படுத்த வேண்டும்?
• இந்த கட்டுரையை சிந்தித்த பிறகு, என்ன செய்ய நீங்கள் தூண்டப்படுகிறீர்கள்?
[பக்கம் 17-ன் படம்]
தாவீது ஆவிக்குரிய காரியங்களை போற்றுதலோடு தியானித்தார். நீங்களும் தியானிக்கிறீர்களா?
[பக்கம் 18-ன் படம்]
கடவுளுடைய வார்த்தையை படிப்பதற்கு முன்பு உங்கள் இருதயத்தை தயார்படுத்துங்கள்