“தரமான நேரம்” குறைந்த அளவுகளில் பங்கிடப்படுகிறது
இந்நாட்களில் சில பெற்றோரே தங்கள் பிள்ளைகளுக்குப் போதிய நேரம் கொடுக்கின்றனர். அநேகர் ஒற்றையாக இருந்து ஒரு துணைவரின் உதவியில்லாமலேயே தங்களுடைய பிள்ளைகளைப் பராமரிக்க போராடிக்கொண்டிருக்கின்றனர். சீரழிந்துகொண்டிருக்கும் பொருளாதார நிலைமையின் காரணமாக, குடும்பத்திற்குச் சரியாக போதுமான பணவசதியை மட்டும் கொண்டிருக்க தந்தை மற்றும் தாய் இருவருமே வீட்டிற்கு வெளியே வேலைசெய்யவேண்டியிருப்பதைத் திருமணமான அநேக பெற்றோர் காண்கின்றனர். ஆகவே, தரமான நேரம் என்ற கருத்து வளர்ந்திருக்கிறது என்பதில் ஆச்சரியமொன்றுமில்லை.
பொதுவாக புரிந்துகொள்ளப்படுவதைப்போல, தரமான நேரம் என்பது வழக்கமாகவே ஒரு குழந்தையோடு செலவிட சில நேரத்தைத் திட்டமிடுவதை உட்படுத்துகிறது. இது பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட செயல் நடவடிக்கையை—உதாரணமாக, விலங்குக் காட்சி சாலைக்குப் போய்வருதல் போன்ற, ஒரு சிறப்பான பொழுதுபோக்குப் பயணத்தை—மனதில்வைத்துத் திட்டமிடுவதாகும். தெளிவாகவே, இந்தக் கருத்துத் தகுதியானதாய் இருக்கிறது. குழந்தைகள் தங்களுக்குக் கிடைக்கக்கூடிய எந்தச் சிறந்த வகை கவனத்தையும் தேவைப்படுத்துகின்றனர். இருப்பினும், தரமான நேரம் என்று பாராட்டப்படும் கருத்தானது, குழந்தை பராமரிப்பு வல்லுநர்களுக்கு மிகத் தெளிவாக ஆகிக்கொண்டிருக்கும் சில குறைபாடுகளைக் கொண்டிருக்கிறது.
தெளிவாகவே, அதிக வேலையுள்ள, வாழ்க்கைப் பணியில் நாட்டம் உள்ள பெற்றோர், ஒரு திட்டமிடப்பட்ட, கால அட்டவணையிடப்பட்ட சிறிது நேரத்தை ஒரு குழந்தையோடு செலவிடுவதுதானே, பெற்றோரின் கவனத்திற்கான குழந்தையின் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்யும் என்ற ஏமாற்றும் கருத்தைக் கைக்கொண்டிருக்கின்றனர். இதன் காரணமாக, நியூ யார்க் டெய்லி நியூஸ், ஐக்கிய மாகாணங்களில் உள்ள கார்னல் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் ஒரு பேராசிரியராக உள்ள டாக்டர் லீ சால்க், “தரமான நேரம் என்ற கருத்து முட்டாள்தனமானது,” என்று கூறியதாக குறிப்பிடுகிறது. அவர் மேலும் விவரிக்கிறார்: “இந்தப் பதம் பெற்றோரின் குற்றவுணர்ச்சியின் காரணமாக உபயோகத்திற்கு வந்தது. தங்களுடைய பிள்ளைகளோடு குறைந்த சமயத்தைச் செலவு செய்ய தங்களுக்கே அனுமதி வழங்கிக்கொண்டனர்.”
ஆனால் குழந்தைமீது ஒருமுகப்படுத்தப்பட்ட பெற்றோரின் சிதறாக் கவனத்தோடுகூடிய அந்த நேரத்தின் தரமானது, அளவின் குறைவை ஈடுகட்டுகிறதில்லையா? இல்லை. இந்த ஓர் எளிய காரணத்தால்—பெற்றோர் தங்கள் முன்மாதிரியால் மிகவும் திறம்பட்டவகையில் பிள்ளைகளுக்குப் போதிக்கின்றனர். இந்த உண்மையின் இருண்ட பக்கம், மக்கள் நெருக்கடி நிறைந்த நகரங்களின் நடுப்பகுதியில் வாழும் இளைஞர்மீது சமீபத்தில் நடத்திய ஆராய்ச்சி ஒன்றினால் பயங்கரமாக விவரிக்கப்பட்டது. தாங்கள் வளரும்போது சிறையில் இருக்கும் குடும்ப அங்கத்தினரைக் கொண்டிருந்தவர்கள், தாங்களும் சிறைபிடிக்கப்படுவதற்கு இருமடங்கு வாய்ப்புகள் இருந்தன. அதேபோல, சாராயம் அல்லது போதை மருந்து துர்ப்பிரயோகிகளின் பராமரிப்பில் வளர்ந்துவருபவர்கள், அத்தகைய மரணத்துக்கேதுவான பழக்கங்களைக் கடைப்பிடிக்க கிட்டத்தட்ட இரண்டு மடங்கு வாய்ப்புகள் இருந்தன.
பெற்றோரின் நல்ல முன்மாதிரி சக்திவாய்ந்ததாக இருக்கக்கூடும். பிரச்னை என்னவென்றால், நல்ல ஒரு முன்மாதிரியை வைப்பதானது நேரத்தை எடுக்கிறது. வெறுமனே சிறிதளவு தரமான நேரமல்ல, ஆனால் நீண்ட காலப்பகுதிகளாகும். நியூ யார்க் டெய்லி நியூஸ் குறிப்பிடுகிறதுபோல: “தரமான நேரம் என்ற கருத்துக் கொள்கையில் உள்ள குறைபாடு என்னவெனில், ஒரு பெற்றோருக்கும் குழந்தைக்கும் இடையேயுள்ள முக்கிய சமயங்கள்—பாதுகாப்பு, மதிப்பீடுகள், தன்மதிப்புப் போன்றவற்றை உட்புகுத்தும் உரையாடல்கள், தீர்மானங்கள் ஆகியவை இயல்பாக வருபவையாகும்.” இயல்பாக அமையும் சமயத்தை யாரும் திட்டமிட முடியாது. ஒரு குழந்தையோடு செலவிட ஒரு பெற்றோர் 15 நிமிட தரமான நேரத்தை ஒதுக்கி வைக்கலாம். ஆனால் அந்த நேரத்தில் பெற்றோரும் குழந்தையும் ஒரு நல்ல தொடர்பைக் கொண்டிருப்பார்களா என்று யாருக்குத் தெரியும்? ஒரு நாளில் அந்த நிமிடங்கள் மட்டுமே ஒரு பெற்றோருடன் செலவிடுகிற நேரமென்றால், குழந்தை முன்மாதிரியிலிருந்து கற்பதெப்படி?
பெற்றோர் செலவிட வெகு குறைந்த நேரத்தையே கொண்டிருப்பதால், பரிகாரம்தான் என்ன? எளிய பதில்கள் கிடையாது. இந்த உலகம் பிள்ளை வளர்த்தலை மிகக் கடினமான ஒரு வேலையாக்கிவிட்டிருக்கிறது என்ற உண்மையை எதுவும் மாற்ற முடியாது. சில பெற்றோர் தங்கள் வேலைக்குக் குறைந்த கவனத்தைக் கொடுக்க முடிந்தவர்களாக இருக்கலாம். அப்படி முடிந்தவர்கள் அதை—வீட்டில் தங்கி குழந்தையுடன் இருப்பதை—மட்டுமாவது செய்யும்படி குழந்தை பராமரிப்பின்பேரிலான சமீப புத்தகத்தின் ஓர் ஆசிரியர் எந்தப் பெற்றோரையும் வற்புறுத்துகிறார். ஆனால் அநேக பெற்றோருக்கு, அதுபோன்ற தெரிவு இருப்பதில்லை. எளிதில் மாற்றத்தக்க ஒரு வேலை அட்டவணையை உடையவர்களும்கூட அல்லது சம்பள வேலையில் இல்லாதவர்களும்கூட தங்களுடைய குழந்தைகளோடு போதுமான நேரம் செலவிடுவதைக் கடினமானதாகக் காண்கின்றனர்.
சுத்தம் செய்தல், சமைத்தல், பராமரித்தல், வாகனங்களைப் பேணுதல், சலவை செய்தல், கடைக்குப்போவது, போன்ற வீட்டு வேலைகளில் எதையாவது தங்களுடைய குழந்தைகளோடு சேர்ந்து செய்ய முடியுமா என்று யோசித்துப் பார்க்கும்படி சில வல்லுநர்கள் பெற்றோரை வற்புறுத்துகின்றனர். மிகச் சாதாரண வீட்டுவேலையையும்கூட சேர்ந்து செய்வது அல்லது வெறுமனே ஒன்றாக சேர்ந்து ஓய்வெடுப்பது ஆகியவை பேச்சுத் தொடர்புகளின் வழிகளைத் திறந்திருக்கச் செய்யவும், நேர்நிலையான ஒரு முன்மாதிரியை வைக்கவும் பெற்றோருக்குத் தேவையான நேரத்தைக் கொடுக்கும். தங்கள் பிள்ளைகளோடு சேர்ந்து செய்ய விரும்பும் மற்ற வேலைகளையும் கிறிஸ்தவ பெற்றோர் கொண்டிருக்கின்றனர். கிறிஸ்தவக் கூட்டங்கள், ஊழியம், குடும்ப பைபிள் படிப்பு, சக கிறிஸ்தவர்களோடு கூட்டுறவுகொள்ளுதல்—இவை யாவும் தங்களுடைய பிள்ளைகளோடு இருப்பதற்கான அதிமுக்கியமான நேரத்தைப் பெற்றோருக்குக் கொடுக்கின்றன.
ஆர்வத்துக்குரிய வகையில், 3,000 ஆண்டுகளுக்கு முன் இஸ்ரவேல் தேசத்துக்குக் கொடுக்கப்பட்ட சட்டம் இதைப் போன்ற ஒரு குறிப்பையே காட்டியது. உபாகமம் 6:6, 7-ல் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக்கடவது. நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்து பேசு.” பூர்வீக காலங்களில் வாழ்க்கை எளிதாக இருந்திருக்கவேண்டும் என்று அவசியமில்லை. வெறுமனே அனுதின அவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான எல்லா நேரத்தையும் நினைத்துப் பாருங்கள்—தன்னுடைய குடும்பத்திற்குத் தேவையானதைக் கொடுக்க தகப்பன் எவ்வளவு வேலை செய்யவேண்டியதாய் இருந்தது. சமைத்தல் அல்லது சலவை செய்தல் போன்ற வேலைகளைச் செய்ய எவ்வளவு உழைப்புத் தேவைப்பட்டிருந்தது! ஆனால் யெகோவாவை நேசிக்கும் பெற்றோர் தங்களால் முடிந்தளவு தங்களுடைய குழந்தைகளோடு சேர்ந்து செய்தனர். அதனால் கடவுளுடைய சட்டங்களைத் தங்கள் பிள்ளைகளின் பிஞ்சு இருதயங்களுக்குக் கற்பிக்க நாளில் பல சமயங்களைக் கண்டனர்.
கிறிஸ்தவப் பெற்றோர் இன்றும் இதையே செய்யவேண்டிய தேவையிருக்கிறது. குழந்தைகளோடு நேரத்தைச் செலவிடுவது என்பது வரும்போது, செய்வதற்கு எளிதாக தோன்றும் காரியங்களை மட்டும் செய்வதை எதிர்க்கவேண்டும். “அளவல்ல, தரமே முக்கியம்,” என்ற பழமொழி பிள்ளை வளர்த்தலுக்குப் பொருந்தாது. முக்கியமாக அவர்களின் உருவாகும் வருடங்களில், குழந்தைகளுக்கு விசேஷித்த நேரம் மட்டுமல்ல, ஆனால் வெறுமனே “சேர்ந்திருக்கும்” நேரமும் தேவைப்படுகிறது. (g93 5/22)
[பக்கம் 27-ன் படம்]
குடும்பம் வீட்டில் வேலையாயிருக்கிறது, குழந்தைகளும் உட்படுத்தப்பட்டிருக்கின்றனர்
[பக்கம் 27-ன் படம்]
யெகோவாவை ஒன்றாக சேர்ந்து சேவித்தல்