உட்பார்வைக்காக யெகோவாவை நோக்கியிருங்கள்
“நான் உன்னை உட்பார்வைக்கொண்டிருக்கச் செய்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்.”—சங்கீதம் 32:8, NW.
1. நாம் செய்யும் தீர்மானங்கள் ஞானமானவையாக இருக்குமா என்பதைத் தீர்மானிக்கும் காரியங்களில் சில யாவை? (உபாகமம் 32:7, 29 ஒப்பிடவும்.)
ஒவ்வொரு நாளும் நாம் தீர்மானங்களை எதிர்ப்படுகிறோம்—அவைகளில் சில வெளித்தோற்றத்தில் சிறியவையாகவும் மற்றவை தெளிவாகவே முக்கியமானவையாகவும் இருக்கின்றன. நம்முடைய தீர்மானங்கள் ஞானமுள்ளவையாக இருக்குமா? அது பெரும்பாலும் நாம் சிந்தியாமல் செயலாற்றுகிறவரா அல்லது நாம் பேசுவதற்கு அல்லது செயல்படுவதற்கு முன்பாக சிந்தனை செய்பவரா என்பதன்பேரில் சார்ந்திருக்கிறது. ஆனால், அநேக சந்தர்ப்பங்களில் ஞானமுள்ள தீர்மானங்களைச் செய்வது, நாம் வெளிப்படையாக தெரிகிறதற்கும் அப்பால் பார்க்க முடிகிறவராயிருப்பதைத் தேவைப்படுத்துகிறது. இது தற்போதைய உலக சம்பவங்களின் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை அறிந்திருப்பதையும் ஆவி மண்டலத்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதைக் குறித்தும்கூட எச்சரிக்கையாயிருப்பதையும் தேவைப்படுத்தலாம். அதை நாம் செய்யமுடியுமா? வெறுமென ஊகிப்பு வேலையாக இல்லாத வண்ணம் இதை எந்த மனிதனாவது செய்வது கூடிய காரியமா?
2. வாழ்க்கையினூடே வெற்றிகரமான போக்கில் திசையறிந்து செல்ல நமக்கு என்ன உதவி தேவை? ஏன்? (நீதிமொழிகள் 20:24)
2 மனிதர்கள், உண்மையில் தனிச்சிறப்புக்குரிய மனத் திறமைகளை இயல்பாய் அமையப்பெற்றிருக்கின்றனர். ஆனால் அவர்கள் மனத்தாழ்மையுடன் கடவுளிடமிருந்து உதவியை ஏற்றுக்கொள்ளாமல், வாழ்க்கையினூடே வெற்றிகரமான ஒரு போக்கில் திசையறிந்து செல்வதற்குரிய திறமையோடு படைக்கப்படவில்லை. ஆவியால் ஏவப்பட்ட எரேமியா தீர்க்கதரிசி எழுதிய வண்ணமே: “யெகோவாவே, மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்லவென்றும், தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்லவென்றும் அறிவேன்.”—எரேமியா 10:23, NW.
3. வழிநடத்துதலுக்காக நாம் யெகோவாவை நோக்கியிருக்கத் தவறினால் விளைவு என்னவாக இருக்கப் போகிறது? (ஆதியாகமம் 3:4–6, 16–24 ஒப்பிடவும்.)
3 அந்த உண்மையைப் புறக்கணித்து, எது ஞானமானது அல்லது ஞானமற்றது, சரி அல்லது தவறு என்ற தீர்மானங்களைச் செய்வதற்கு நம்மீதோ அல்லது மற்ற மனிதர்கள் மீதோ சார்ந்திருப்போமேயானால் விளைவு என்னவாக இருக்கிறது? மாம்சப்பிரகாரமான நியாயங்களால் வழிநடத்தப்படுவதன் காரணமாக, கடவுள் தீமை என்று சொல்வதை நன்மையாக நோக்கவும் கடவுள் முட்டாள்தனமானது என்பதாகக் குறிப்பிடும் ஒரு போக்கை ஞானமானதாக நாம் கருதும் சமயங்களும் இருக்கும். (ஏசாயா 5:20) இதை நாம் வேண்டுமென்றே செய்யாவிட்டாலும் நாம் மற்றவர்கள் இடறுவதற்கு காரணமாகிவிடக்கூடும். (1 கொரிந்தியர் 8:9) வழிநடத்துதலுக்காக யெகோவாவை நோக்கியிருக்கத் தவறுவதில் விடாப்பிடியாக இருப்பவர்களின் முடிவான விளைவைக் குறித்து அவருடைய வார்த்தை சொல்வதாவது: “மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள்.”—நீதிமொழிகள் 14:12.
4. யெகோவா தம்முடைய ஊழியர்களுக்கு என்ன உதவியை தாராளமாக வாக்களிக்கிறார்? (எரேமியா 10:21-ஐ ஒப்பிடவும்.)
4 இதை முன்னிட்டுப் பார்க்கையில் நமக்கு என்ன தேவையாக இருக்கிறது? எளிதாகச் சொல்லவேண்டுமானால், யெகோவா கொடுக்கும் உதவி நமக்குத் தேவையாக இருக்கிறது. உற்சாகமூட்டும் வண்ணமாக அவர் சொல்வதாவது: “நான் உன்னை உட்பார்வைக் கொண்டிருக்கச் செய்து, நீ நடக்க வேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன். உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனைசொல்லுவேன்.”—சங்கீதம் 32:8, NW.
உட்பார்வை எதை உட்படுத்துகிறது
5. உட்பார்வை என்பது என்ன?
5 வேதாகமத்தில் குறிப்பிடப்படும் “உட்பார்வை” என்பது உண்மையில் என்ன? அது ஒரு நிலையின் உள்ளாகக் காணும், வெளிப்படையாகத் தெரிகிறதற்கும் அப்பால் நோக்கும் திறமையாக இருக்கிறது. பழைய ஏற்பாட்டின் இறையியல் சொல் அட்டவணை [Theological Wordbook of the Old Testament] பிரகாரம் “உட்பார்வை” என்பதாக மொழிபெயர்க்கப்படும் எபிரெய சொற்றொடர் காரியங்களுக்கான “காரணத்தைப் பற்றிய புத்திக்கூர்மையுள்ள அறிவோடு” சம்பந்தப்பட்டதாயிருக்கிறது. ஞானமாக நடந்து வெற்றியைக் காண ஒரு நபருக்கு உதவிசெய்யும் விதமான ஓர் அறிவாக அது இருக்கிறது. அடிப்படையான அந்தப் பொருளுக்கு இசைவாகவும் அதே எபிரெய வினைச்சொல்லின் தனிப்பண்பைத் தெரிவிக்கவும் புதிய உலக மொழிபெயர்ப்பு “உட்பார்வைக் கொண்டிருப்பது” என்று மொழிபெயர்ப்பதோடுகூட ‘முன் விழிப்புடன் நடந்து கொள்ளுதல்,’ ‘விவேகமுடன் நடந்து கொள்ளுதல்,’ மற்றும் ‘வெற்றி காண்பது’ போன்ற சொற்றொடர்களைப் பயன்படுத்துகிறது.—சங்கீதம் 14:2.
6 இவ்விதமாக “தன் உதடுகளை அடக்குகிறவன்” “முன்விழிப்புடன் நடந்துகொள்வதாக” அல்லது உட்பார்வையுடன் நடந்துகொள்வதாகச் சொல்லப்படுகிறது. (நீதிமொழிகள் 10:19, NW) அவன், தான் சொல்வதை மற்றவர்கள் எவ்விதமாக புரிந்து கொள்வார்கள், மேலும் மற்ற ஒரு நபரைப் பற்றி தான் சொல்லக்கூடிய காரியம் ஞானமுள்ளதாக, அன்புள்ளதாக அல்லது அவசியமானதாக இருக்குமா என்பதையெல்லாம் கருத்தில்கொண்டு பேசுவதற்கு முன் அவன் யோசிக்கிறான். (நீதிமொழிகள் 12:18; யாக்கோபு 1:19) யெகோவாவின் வழிகளை நேசிப்பதாலும், உடன்மானிடனுக்கு உதவி செய்வதற்கிருக்கும் உண்மையான ஆசையினாலும் தூண்டப்படுவதன் காரணமாக அவன் சொல்லும் காரியங்கள் மற்றவர்களைக் கட்டியெழுப்புவதாக இருக்கிறது.—நீதிமொழிகள் 16:23.
7. விவேகமாக செயலாற்றும் ஒருவன் என்ற நற்பெயரைப் பெற்றுக்கொள்ள தாவீதுக்கு உதவியது எது?
7 ஈசாவின் குமாரனாகிய தாவீதைக் குறித்து, இவ்விதமாக எழுதப்பட்டுள்ளது: “தாவீது, சவுல் தன்னை அனுப்புகிற எவ்விடத்திற்கும் போய் விவேகமாய்க் (NW) காரியத்தை நடப்பித்தான்,” அதாவது, உட்பார்வையுடன் நடப்பித்தான். தாவீது, தன்னுடைய வேலையில், மனிதப் போர்வீரர்களுக்கிடையிலான ஒரு யுத்தத்தைக் காட்டிலும் அதிகம் உட்பட்டிருந்தது என்பதைப் பகுத்துணர்ந்தான். அவனும் அவனோடுகூட இருந்த ஜனங்களும் யெகோவாவின் யுத்தங்களைச் செய்து கொண்டிருப்பதை அவன் உணர்ந்தான். இதன் காரணமாக, தாவீது வழிநடத்துதலுக்காகவும் ஆசீர்வாதத்துக்காகவும் யெகோவாவை நோக்கியிருந்தான். (1 சாமுவேல் 17:45; 18:5; 2 சாமுவேல் 5:19) இதன் விளைவாக தாவீது செய்த போர்கள் வெற்றி கண்டன.
8. கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில், ‘உட்பார்வைக் கொண்டிருத்தல்’ என்பதாக மொழிபெயர்க்கப்படும் வினைச்சொல்லினால் வேறு என்ன கருத்துக்களும் தெரிவிக்கப்படுகின்றன?
8 கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில், ‘உட்பார்வைக் கொண்டிருத்தல்’ என்பதாக மொழிபெயர்க்கப்படும் வினைச்சொல், ‘உணர்வுள்ளவர்களாயிருத்தல்’ மற்றும் ‘உணர்ந்துகொள்ளுகிறவர்களாயிருத்தல்’ என்பதாகவும்கூட மொழிபெயர்க்கப்படுகிறது. (ரோமர் 3:11; மத்தேயு 13:13–15; எபேசியர் 5:17) கடவுள் தம்முடைய ஊழியர்களுக்கு இவைகளைச் செய்ய திறமையளிப்பதாக வாக்களித்திருக்கிறார். ஆனால் அவர் எவ்விதமாக இப்படிப்பட்ட உட்பார்வையை அவர்களுக்குக் கொடுக்கிறார்?
யோசுவா எவ்விதமாக உட்பார்வை கொண்டிருக்கலானான்
9. பூர்வ இஸ்ரவேலில் யெகோவா எவ்விதமாக ஜனங்களுக்கு உட்பார்வையை அளித்தார்?
9 பூர்வ இஸ்ரவேலில் யெகோவா தேசத்துக்கு தம்முடைய பிரமாணங்களைப் போதிக்க லேவியர்களுக்குக் கட்டளையிட்டிருந்தார். (லேவியராகமம் 10:11; உபாகமம் 33:8, 10) பிரமாணம் கடவுளால் ஏவப்பட்டதாக இருந்தது. அதைக் கற்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட அமைப்பு சம்பந்தமான ஏற்பாட்டின் மீது யெகோவாவின் ஆவி கிரியை செய்து கொண்டிருந்தது. (மல்கியா 2:7) இதன் மூலமாக, யெகோவா நெகேமியா 9:20-ல் குறிப்பிடப்பட்டபடியே ‘இஸ்ரவேலரை விவேகமுள்ளவராக்கினார்’ அல்லது உட்பார்வையை அவர்களுக்கு அளித்தார்.
10, 11. (எ) யோசுவா 1:7, 8-ல் காண்பிக்கப்பட்டபடியே உட்பார்வையோடு நடந்துகொள்ள யோசுவாவுக்கு எது உதவி செய்யும்? (பி) போதனைக்காக என்ன ஏற்பாட்டை யோசுவா மதித்துணருவது அவசியமாக இருந்தது? (சி) யோசுவாவின் பங்கில் தனிப்பட்ட என்ன முயற்சியும்கூட தேவையாக இருந்தது?
10 ஆனால் தேசத்திலுள்ள தனிநபர்கள் எவ்விதமாக உட்பார்வையோடு நடந்துகொள்வர்? அவர்கள் அவ்விதமாகச் செய்யவேண்டுமானால், அவர்கள் பங்கில் ஏதோ ஒன்று தேவைப்பட்டது. இஸ்ரவேலை வாக்குப்பண்ணப்பட்ட தேசத்துக்குள் வழிநடத்தும் பொறுப்பை யோசுவாவிடம் ஒப்படைக்கையில் யெகோவா அவனிடம் சொன்னார்: “என் தாசனாகிய மோசே உனக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்தின்படியெல்லாம் செய்ய கவனமாயிருக்க மாத்திரம் மிகவும் பலங்கொண்டு திடமனதாயிரு; நீ போகும் இடமெல்லாம் ஞானமாய் நடந்துகொள்ளும்படிக்கு அதைவிட்டு வலது இடதுபுறம் விலகாதிருப்பாயாக. இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக் கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது ஞானவானாயும் நடந்து கொள்ளுவாய்.” இங்கே “ஞானமாய் நடந்து கொள்ளுதல்” என்பதாக மொழிபெயர்க்கப்படும் எபிரெய வார்த்தை “உட்பார்வையோடு நடந்து கொள்வதையும்”கூட அர்த்தப்படுத்துகிறது.—யோசுவா 1:7, 8.
11 யெகோவா எவ்விதமாக யோசுவாவுக்கு இப்படிப்பட்ட உட்பார்வை அளிப்பார்? ஏதோ அற்புதமாக அறிவு புகட்டுவதன் மூலமாக அல்ல. கடவுளுடைய எழுதப்பட்ட வார்த்தை அதற்குத் திறவுகோலாக இருந்தது. யோசுவா அதை ஒழுங்காக வாசித்து அதன் பேரில் தியானம் செய்வதன் மூலம் தன் மனதையும் இருதயத்தையும் அதனால் நிரப்பிக்கொள்ள வேண்டியவனாக இருந்தான். யோசுவா அறிந்திருந்த வண்ணமே, நியாயப்பிரமாணத்திலிருந்து போதனை லேவியர்களால் கொடுக்கப்படும் என்பதாகக் கடவுளுடைய வார்த்தை சொன்னது. ஆகவே, யோசுவா தேசத்தில் தனக்குப் பொறுப்புள்ள ஒரு ஸ்தானம் இருந்தபடியால், தானாகவே அவைகளையெல்லாம் புரிந்துகொள்ளமுடியும் என்பது போல் தன்னை தனியே பிரித்து வைத்துக்கொள்ளாமல், இதை மதித்துணர வேண்டியவனாக இருந்தான். (நீதிமொழிகள் 18:1) கடவுளுடைய எழுதப்பட்ட வார்த்தையை ஊக்கமாகப் படிப்பது யோசுவாவுக்கு முக்கியமாக இருந்தது. அதனுடைய எல்லாப் பகுதியையும் அசட்டை செய்யாமல் அவன் அதை செய்வானேயானால், அவன் அதற்குக் கீழ்ப்படிவானேயானால் அப்பொழுது அவன் உட்பார்வையோடு நடந்துகொள்வான்.—1 இராஜாக்கள் 2:3-ஐ ஒப்பிடவும்.
யெகோவா இன்று எவ்விதமாக உட்பார்வையளிக்கிறார்
12. நமக்கு யெகோவா கிடைக்கப்பெறச் செய்யும் உட்பார்வையிலிருந்து நன்மையடைய என்ன மூன்று காரியங்கள் தேவைப்படுகின்றன?
12 நம்முடைய காலம் வரையாகவும், யெகோவா தம்முடைய ஊழியர்கள் ஞானமாக நடந்துகொள்ளும் பொருட்டு அவர்களுக்குத் தேவையான வழிநடத்துதலைத் தொடர்ந்து அளித்து வருகிறார். அந்த வழிநடத்துதலிலிருந்து நன்மையடைய தனிப்பட்டவர்களாக நம்மிடமிருந்து பல காரியங்கள் தேவைப்படுகின்றன: (1) யோசுவா செய்தது போல யெகோவாவின் அமைப்பை நாம் மதித்துணருவது அவசியமாகும். நம்முடைய விஷயத்தில், இப்படிப்பட்ட மதித்துணருதல், அபிஷேகம் பண்ணப்பட்டவர்களின் கிறிஸ்தவ சபையாகிய “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை”யோடும் அதனுடைய ஆளும் குழுவோடும் ஒத்துழைப்பதை உட்படுத்துகிறது. (மத்தேயு 24:45–47; அப்போஸ்தலர் 16:4-ஐ ஒப்பிடவும்.) இந்த மதித்துணருதல் கூட்டங்களில் ஒழுங்காக ஆஜராயிருப்பதை உட்படுத்துகிறது. (எபிரெயர் 10:24, 25) (2) கடவுளுடைய வார்த்தையையும் அதைப் புரிந்து கொள்வதற்கு நமக்கு உதவிசெய்யும் “அடிமை” வகுப்பால் அளிக்கப்படும் பிரசுரங்களையும் தனிப்பட்ட வகையில் நாம் ஊக்கமாக படிக்க வேண்டும். (3) நாம் கற்றுக்கொள்ளும் காரியங்கள் எவ்விதமாக நம்முடைய சொந்த வாழ்க்கையில் பொருத்தப்படலாம் என்பதையும் மற்றவர்களுக்கு உதவி செய்ய பயன்படுத்தப்படலாம் என்பதையும் பற்றி தியானிக்க நாம் நேரமெடுத்துக்கொள்வதும்கூட நமக்கு முக்கியமாகும்.
13. எரேமியா 3:15-ல் பதிவு செய்யப்பட்டிருக்கும் வாக்குத்தத்தத்தின் பொருள் என்ன?
13 நம்முடைய காலத்தில் யெகோவா நமக்கு அளிக்கவிருக்கும் வகையான கண்காணிப்பையும் ஆவிக்குரிய போஷிப்பையும் குறித்து, அவர் எரேமியா 3:15-ல் (NW) சொன்னதாவது: “உங்களுக்கு என் இருதயத்துக்கு ஏற்ற மேய்ப்பர்களைக் கொடுப்பேன், அவர்கள் உங்களை அறிவோடும் உட்பார்வையோடும் மேய்ப்பார்கள்.” ஆம், இந்த ஆவிக்குரிய போஷிப்புத் திட்டம் வெற்றியடையும் பொருட்டு நிலைமைகளை உற்று கவனித்து என்ன போக்கை மேற்கொள்வது என்பதைப் பகுத்துணரும் குறிப்பிடத்தக்கத் திறமையை நமக்கு அளிக்கும். அந்த உட்பார்வையின் ஊற்றுமூலம் யார்? யெகோவா தேவன்.
14. ‘உண்மையுள்ள அடிமை’ வகுப்பு ஏன் உட்பார்வையைக் கொண்டிருக்கிறது?
14 ‘உண்மையுள்ள அடிமை’ வகுப்பு ஏன் இப்படிப்பட்ட உட்பார்வையைக் கொண்டிருக்கிறது? ஏனென்றால் அவர்கள் கடவுளுடைய வார்த்தையை மெய்யாக தியானம் செய்து அதன் வழிநடத்துதலை பின்பற்றுகிறார்கள். மேலுமாக யெகோவாவின் வழிநடத்துதலுக்கு அவர்கள் தங்களைக் கீழ்ப்படுத்தியிருப்பதன் காரணமாக அவர் அவர்கள் மீது தம்முடைய ஆவியை வைத்து தம்முடைய நோக்கத்திற்கிசைவாக அவர்களைப் பயன்படுத்தி வருகிறார். (லூக்கா 12:43, 44; அப்போஸ்தலர் 5:32) வெகு காலத்துக்கு முன்பு சங்கீதக்காரன் ஆவியால் ஏவப்பட்டு எழுதிய வண்ணமே: “உம்முடைய நினைப்பூட்டுதல்கள் என் தியானமாயிருக்கிறபடியால், எனக்குப் போதித்தவர்களெல்லாரிலும் அதிக உட்பார்வையுள்ளவனாயிருக்கிறேன்.”—சங்கீதம் 119:99, NW.
15. (எ) “அடிமை” வகுப்பு நமக்கு நிலைவரமாகக் கொடுக்கும் புத்திமதியின் சுருக்கம் என்ன? (பி) அநேக ஆண்டுகளுக்கு முன்பாகவே, இரத்தமேற்றுதலைப் பற்றிய கிறிஸ்தவ நோக்குநிலையின் சம்பந்தமாக எவ்விதமாக “அடிமை” வகுப்பால் தேவையான “அறிவையும் உட்பார்வையையும்” அளிக்க முடிந்தது?
15 செய்வதற்கு சரியான காரியம் எது என்ற கேள்விகளுக்குப் பதிலாக, “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” எப்போதும் அறிவுறுத்தியிருப்பது, ‘பைபிளில் எழுதப்பட்டதைப் பின்பற்றுங்கள். யெகோவா மீது நம்பிக்கையாயிருங்கள்’ என்பதே. (சங்கீதம் 119:105; நீதிமொழிகள் 3:5, 6) இரத்தமேற்றுதல் ஒரு சாதாரணமான மருத்துவ சிகிச்சையாக கருதப்பட்டு, அது யெகோவாவின் சாட்சிகள் எதிர்ப்படும் ஒரு பிரச்னையாக மாறிய போது, 1945, ஜூலை 1, ஆங்கில காவற்கோபுரம் இரத்தத்தின் புனிதத்தன்மையைப் பற்றிய கிறிஸ்தவ நோக்குநிலையை விளக்கியது. மிருக இரத்தம் மற்றும் மனித இரத்தம் ஆகிய இரண்டுமே தெய்வீக கட்டளையில் தடைசெய்யப்பட்டிருந்ததை அது காண்பித்தது. (ஆதியாகமம் 9:3, 4; அப்போஸ்தலர் 15:28, 29) சரீரப்பிரகாரமான பக்கபாதிப்புகள் அந்தக் கட்டுரையில் சிந்திக்கப்படவில்லை; அந்தச் சமயத்தில் இப்படிப்பட்ட அறிவு மிகவும் குறைவாக இருந்தது. உண்மையான பிரச்னையானது கடவுளுடைய சட்டத்துக்குக் கீழ்ப்படிவதாக இருந்தது. இன்னும் அவ்விதமாகவே இருக்கிறது. இன்று அநேக ஆட்கள், இரத்தமேற்றுதலை மறுப்பதிலிருக்கும் நடைமுறையான ஞானத்தை உணர்ந்து அதிகரித்துவரும் எண்ணிக்கையில் அவ்விதமாகச் செய்கிறார்கள். ஆனால் அப்போதுமே யெகோவாவின் சாட்சிகள் உட்பார்வையுடன் நடந்துகொள்ளமுடிகிறவர்களாக இருந்திருக்கிறார்கள். ஏனென்றால் எந்த மனிதனையும்விட இரத்தத்தைப் பற்றி மிக அதிகமாக அறிந்திருக்கும் சிருஷ்டிகரில் அவர்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.
16. பால் சம்பந்தமான ஒழுக்கம், ஒற்றைப் பெற்றோர் குடும்பங்கள், மனச்சோர்வு போன்ற விஷயங்களின்பேரில் காவற்கோபுரம் பத்திரிகையின் புத்திமதி ஏன் சரியாகவே நமக்குத் தேவையான ஒன்றாக நிரூபித்திருக்கிறது?
16 பால் சம்பந்தமான ஒழுக்கத்தைக் குறித்ததில் கட்டுப்பாடற்ற மனநிலைகள் அதிகமதிகமாக முதனிலைப் பெற்று வருகையில், காவற்கோபுரம் பிரபலமான போக்கைப் பரிந்துரை செய்வதற்குப் பதிலாக, சரியான வேத ஆதாரமுள்ள வழிநடத்துதலைக் கொடுத்துவந்திருக்கிறது. இது யெகோவாவோடு தங்களுடைய விலைமதிப்புள்ள உறவை பாதுகாத்துக்கொள்ளவும், கணநேரம் தோன்றி மறையும் சிற்றின்பத்துக்குப் பதிலாக நிலையான மகிழ்ச்சியின் மீது கவனத்தை ஒருமுகப்படுத்தவும் அநேகருக்கு உதவி செய்கிறது. அதேவிதமாகவே ஒற்றைப் பெற்றோர் குடும்பங்களையும் மனச்சோர்வில் போராடிக்கொண்டிருப்பவர்களையும் மனதில் கொண்டு எழுதப்பட்ட காவற்கோபுரம் கட்டுரைகளினால் இவர்கள் உட்பார்வையைப் பிரதிபலித்திருக்கிறார்கள். யெகோவாவின் யோசனைகளை விலைமதிப்புள்ளதாக கருதுகிறவர்களுக்கும் “உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும், நீரே என் தேவன்” என்பதாக ஊக்கமாக ஜெபிப்பவர்களுக்கும் மாத்திரமே இது கூடியகாரியமாகும்.—சங்கீதம் 143:10; 139:17.a
17. (எ) பல பத்தாண்டுகளுக்கு முன்பாக, 1914-ம் வருடத்தைப் பற்றி யெகோவாவின் ஊழியர்கள் என்ன அறிந்திருந்தார்கள்? (பி) கடவுளுடைய மக்கள் 1914-க்கு பின்பு இன்னும் கேள்விகளைக் கொண்டிருந்ததைப் பற்றிய விவரங்கள் இருந்தபோதிலும் அவர்களுடைய வாழ்க்கைக்கு நிறைவான வழிநடத்தலைக் கொடுத்த எதை அவர்கள் அறிந்திருந்தார்கள்?
17 “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை”யின் மூலமாக, 1914-ம் ஆண்டு புறஜாதியாரின் காலங்களின் முடிவைக் குறிப்பதாக இருக்கும் என்பதைப் பல பத்தாண்டுகளுக்கு முன்பாக அறிந்துகொள்ளவும்கூட யெகோவா தம்முடைய ஊழியர்களுக்கு உதவி செய்தார். (லூக்கா 21:24, கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பு) முதல் உலகப்போரைப் பின்தொடர்ந்த காலத்துக்குள் அவர்கள் பிரவேசிக்கையில் அவர்களைக் குழப்பமடையச் செய்த கேள்விகள் நிச்சயமாகவே இருந்தன. ஆனால் அவர்களுக்குத் தெரிந்திருந்தது, ஞானமாக நடந்துகொள்ள அவர்களுக்குப் போதுமானதாக இருந்தது. பழைய ஒழுங்கு அழிக்கப்படுவதற்குரிய கடவுளுடைய குறிக்கப்பட்ட காலம் சமீபித்துவிட்டதை அவர்கள் வேதாகமத்திலிருந்து அறிந்திருந்தார்கள்; ஆகவே அதில் தங்களுடைய நம்பிக்கையை வைப்பதோ அல்லது வெற்றிக்கு அதனுடைய பொருள்சம்பந்தமான தராதரங்கள் தங்களுடைய வாழ்க்கையை கட்டுப்படுத்த அனுமதிப்பதோ முட்டாள்தனமானதாக இருக்கும். மனிதவர்க்கத்தைத் தொல்லைப்படுத்தும் எல்லாப் பிரச்னைகளுக்கும் யெகோவாவின் ராஜ்யமே மெய்யான பரிகாரம் என்பதையும்கூட அவர்கள் அறிந்திருந்தார்கள். (தானியேல் 2:44; மத்தேயு 6:33) யெகோவாவின் அபிஷேகம் பண்ணப்பட்ட ராஜாவாகிய இயேசு கிறிஸ்துவையும் அவருடைய ராஜ்யத்தையும் விளம்பரப்படுத்துவது எல்லா மெய் கிறிஸ்தவர்களின் பொறுப்பாகவும் இருப்பதை அவர்கள் தெளிவாகக் கண்டார்கள். (ஏசாயா 61:1, 2; மத்தேயு 24:14) 1925-ல் “ஒரு ஜனத்தின் பிறப்பு” என்ற காவற்கோபுரம் கட்டுரையின் மூலமாக அவர்கள் வெளிப்படுத்துதல் 12-ம் அதிகாரத்தின் தெளிவான புரிந்துகொள்ளுதலோடு ஊக்குவிக்கப்பட்டவர்களாக இருந்தார்கள்; ஆகவே இப்பொழுது பரலோகங்களில், மனித கண்களுக்குப் புலப்படாமல் நடந்து கொண்டிருந்ததை அவர்கள் புரிந்துகொண்டார்கள். இப்படிப்பட்ட உட்பார்வை அவர்களுடைய வாழ்க்கைக்கு நிறைவான வழிநடத்தலைக் கொடுத்தது.
18. நமக்கு இப்பொழுது என்ன சிலாக்கியமும் பொறுப்புமிருக்கிறது? நம்மைநாமே என்ன கேள்வியைக் கேட்டுக்கொள்ள வேண்டும்?
18 விசுவாசத்தில் செயல்படுகிறவர்களாய் அந்தச் சமயத்தில் யெகோவாவை அவருடைய சாட்சிகளாக சேவித்து வந்த ஒரு சில ஆயிரம் பேர் கடவுளுடைய ஸ்தாபிக்கப்பட்ட ராஜ்யத்தின் நற்செய்தியை உலகின் எல்லா இடங்களிலும் பிரசங்கிப்பதை முன்நின்று செய்தார்கள். இதன் விளைவாக இலட்சக்கணக்கானோர் யெகோவாவை அறிந்து அவரை நேசித்து, நித்திய ஜீவனின் எதிர்பார்ப்பை உடையவர்களாக இருக்கிறார்கள். அவர்களுடைய அன்பின் உழைப்பின் விளைவாக சத்தியத்தைப் பெற்றிருக்கும் நம் அனைவருக்கும் இந்த வேலையில் பங்குகொள்ள நமக்கும்கூட சிலாக்கியமும் பொறுப்பும் இருப்பது உணர்த்தப்பட்டிருக்கிறது. நாம் சென்றெட்டக்கூடிய ஒவ்வொருவரிடமும் முழுமையான சாட்சியைக் கொடுத்து, வேலை முடிந்துவிட்டது என்பதாக யெகோவா சொல்லும்வரை தொடர்ந்து அவ்விதமாகச் செய்துகொண்டிருக்க வேண்டும். (வெளிப்படுத்துதல் 22:17; அப்போஸ்தலர் 20:26, 27 ஒப்பிடவும்.) நீங்கள் உங்கள் வாழ்க்கையைப் பயன்படுத்திவரும் விதமானது, யெகோவா தம்முடைய அமைப்பின் மூலமாக அளித்திருக்கும் உட்பார்வையை நீங்கள் போற்றுகிறீர்கள் என்பதற்குச் சான்று பகருவதாக இருக்கிறதா?
19. (எ) யெகோவா அவருடைய அமைப்பின் மூலமாகக் கொடுக்கும் உட்பார்வைக்குப் போற்றுதலை பிரதிபலிக்கும் ஒருவருடைய வாழ்க்கைக்கு ஓர் உதாரணம் கொடுங்கள். (பி) அந்த உதாரணத்திலிருந்து நாம் என்ன கற்றுக் கொள்ளலாம்?
19 உலகம் முழுவதிலுமுள்ள திரள்கூட்டத்தாரிலுள்ள தனி ஆட்களுடைய வாழ்க்கையின் விஷயத்தில் பதில் ஆம் என்றிருப்பது சான்றளிக்கிறது. உதாரணமாக, ஜான் கட்ஃபோர்த்தைப் பற்றி கவனியுங்கள். 49 ஆண்டுகளுக்கு முன்பாக, “உண்மையுள்ள அடிமை” வகுப்பு இப்பொழுது செய்வது போலவே பின்வரும் வேதப்பூர்வமான புத்திமதிக்குக் கவனம் செலுத்தும்படியாகச் சொன்னபோது, அதை அவர் உள்ளார்ந்த அக்கறையுடன் ஏற்றுக்கொண்டார்: “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும். ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்.” (மத்தேயு 6:33, 34) யெகோவாவின் ஊழியத்தில் பல ஆண்டுகள் அனுபவத்துக்குப் பின்பு, சகோதரர் கட்ஃபோர்த் சொன்னார்: ‘யெகோவா தாம் வழிநடத்தும் ஓர் அமைப்பைப் பூமியின் மீது கொண்டிருக்கிறார். தனிப்பட்டவனாக நான் அந்த அமைப்போடு சேர்ந்து வேலை செய்யக்கூடும், அதனுடைய வழிநடத்துதலையும் அறிவுரைகளையும் நான் முழுமையாகப் பின்பற்றினால் அது எனக்குச் சமாதானம், திருப்தி, மனநிறைவு, அநேக நண்பர்கள் இன்னும் அநேக ஐசுவரியமான ஆசீர்வாதங்களைக் கொண்டுவரும் என்பதே என்னுடைய மனதில் மிகவும் பலமாகப் பதியவைக்கப்பட்ட காரியங்களில் ஒன்றாக இருக்கின்றது.’ அவர் ஐக்கிய நாடுகள், கானடா, ஆஸ்திரேலியா, பாப்புவா நியு கின்னி ஆகிய இடங்களில் தொடர்ந்து ஆவிக்குரிய ஆசீர்வாதங்களில் ஐசுவரியமுள்ள ஒரு வாழ்க்கையை அனுபவித்தபோது, அந்த நம்பிக்கை திரும்பத் திரும்ப பலப்படுத்தப்பட்டிருக்கிறது.b உண்மையாகவே யெகோவா தம்முடைய ஜனங்களுக்கு உட்பார்வை அளிக்கும் ஏதுவுக்குப் போற்றுதலை பிரதிபலிக்கும் போக்கே நம் அனைவருக்கும் ஞானமுள்ளதாக இருக்கிறது.—மத்தேயு 6:19–21.
உட்பார்வை இழந்துவிடுவதற்கு எதிராக எச்சரிக்கையாயிருங்கள்
20, 21. (எ) தாங்கள் ஒரு சமயம் கொண்டிருந்த தெய்வீக உட்பார்வையைச் சில ஆட்கள் எவ்விதமாக இழந்துவிட்டிருக்கிறார்கள்? (பி) இழப்பு உண்டுபண்ணும் போக்குக்கு எதிராக எது நம்மைப் பாதுகாக்க உதவி செய்யும்?
20 யெகோவா அளிக்கும் உட்பார்வை பேணி பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷமாகும். என்றபோதிலும், தெய்வீக உட்பார்வையைப் பெற்றுக்கொள்ள நமக்கு உதவியிருக்கும் பாதையில் நாம் தொடர்ந்து செல்லவில்லையென்றால், நாம் அதை இழந்துவிடக்கூடும் என்பதை உணர்ந்தவர்களாயிருக்க வேண்டும். இதுவே சிலருடைய அனுபவமாக இருந்திருப்பது வருத்தத்திற்குரியதாகும். (நீதிமொழிகள் 21:16; தானியேல் 11:35) தங்களைத் தனிப்பட்ட விதத்தில் பாதித்த சிட்சையை ஏற்றுக்கொள்ள மறுத்து, அவர்கள் தங்கள் செய்கைக்கு நியாயங்கற்பிக்க முயற்சி செய்திருக்கிறார்கள். பெருமை அவர்களுக்கு ஒரு கண்ணியாக இருந்திருக்கிறது. கடவுளுடைய வார்த்தை தீமை என்பதாகக் காண்பிப்பதை அவர்கள் நன்மையானதாகக் கருத ஆரம்பித்து யெகோவாவின் அமைப்பிலிருந்து விலகிக்கொண்டிருக்கிறார்கள். எத்தனை வருத்தத்திற்குரியது!
21 இப்படிப்பட்ட ஒரு நபரின் சூழ்நிலைமைகள் சங்கீதம் 36:1–3-ல் (NW) விவரிக்கப்பட்டிருப்பது போல உள்ளது. அங்கு நாம் வாசிப்பதாவது: “துன்மார்க்கனுடைய துரோகப் பேச்சு அவன் இருதயத்தின் நடுவிலிருக்கும்.” அதாவது, அவனுடய சொந்த யோசனைகளும் ஆசைகளும் அவனை மீறுதலுக்குள் வழிநடத்தும். “அவன் கண்களுக்கு முன் தெய்வபயம் இல்லை” என்று சங்கீதக்காரன் தொடர்ந்து சொல்கிறான். “அவன் தன் அக்கிரமம் அருவருப்பானதென்று காணப்படுமளவும் தன் பார்வைக்கேற்றபடி தனக்குத்தானே இச்சகம் பேசுகிறான். அவன் வாயின் வார்த்தைகள் அக்கிரமமும் வஞ்சகமுமுள்ளது.” அவனுக்கு என்ன விளைவு? அவனுக்கு ‘நன்மை செய்வதற்கு உட்பார்வை இல்லாமல் போகிறது.’ அவன் உண்மையில் தான் செய்வது சரி என்பதாகத் தன்னையே நம்ப வைத்துக்கொண்டு தன்னை பின்பற்றும்படியாக மற்றவர்களைத் தூண்டுகிறான். ஆகவே உட்பார்வைக் கொண்டிருப்பது மட்டுமன்றி அதை நாம் பெற்றுக்கொள்ள யெகோவா பயன்படுத்தும் கருவியை மதித்துணருவதன் மூலம் அதைப் பாதுகாத்துக்கொள்வதும்கூட எத்தனை இன்றியமையாதது! (w89 3/15)
நீங்கள் என்ன நினைவில் வைத்திருக்கிறீர்கள்?
◻ ஞானமான தீர்மானங்களைச் செய்ய எது நமக்கு உதவி செய்யும்?
◻ “உட்பார்வை”யில் உட்பட்டிருப்பது என்ன?
◻ யெகோவா தேவன் எவ்வாறு நம்முடைய காலத்தில் தம்முடைய ஊழியர்களுக்கு உட்பார்வைக் கொடுக்கிறார்?
◻ யெகோவா அளிக்கும் உட்பார்வையிலிருந்து நாம் முழுமையாக நன்மையடைய வேண்டுமானால் நம்முடைய பங்கில் தேவைப்படுவது என்ன?
[அடிக்குறிப்புகள்]
a “விவாகம்,” “குடும்பங்கள்,” “ஒழுக்கச் சீர்குலைவு” மற்றும் “சோர்வு” (மனச்சோர்வு) ஆகிய தலைப்புகளின் கீழ் காவற்கோபுரம் பிரசுரங்கள் இன்டெக்ஸ் 1930–1985-ஐப் பார்க்கவும்.
b ஆங்கில காவற்கோபுரம் ஜூன் 1, 1958 பக்கங்கள் 333–6-ஐப் பார்க்கவும்.
6. “தன் உதடுகளை அடக்குகிறவனை”, முன்விழிப்புடன் அல்லது உட்பார்வையோடு செயலாற்றுகிறவன் என்று ஏன் சொல்லலாம்?
[பக்கம் 28-ன் படம்]
யெகோவா அளிக்கும் உட்பார்வையிலிருந்து நன்மையடைய அவருடைய அமைப்பை மதித்துணருவதும், தனிப்பட்ட படிப்பில் ஊக்கமாக ஈடுபடுவதும் நாம் கற்றுக்கொள்வதை எவ்விதமாகப் பொருத்துவது என்பதன் பேரில் தியானிப்பதும் அவசியம்