ராகாப்—விசுவாச செயல்களால் நீதியுள்ளவளாக அறிவிக்கப்பட்டாள்
கற்பனை செய்துபாருங்கள்! ஒரு வேசி கடவுளுடைய நோக்குநிலையிலிருந்து நீதியுள்ளவளாக அறிவிக்கப்பட்டாள். “ஒருபோதும் கூடாது!” என்று அநேகர் குரலெழுப்பலாம். ஆனாலும் ஒரு பண்டை கானானிய பட்டணமாகிய எரிகோவிலிருந்த வேசி ராகாபுக்கு அதுவே சம்பவித்தது.
பைபிள் எழுத்தாளர் யாக்கோபு பதிவுசெய்கிறார்: ‘மனுஷன் விசுவாசத்தினாலே மாத்திரமல்ல, கிரியைகளினாலேயும் நீதிமானாக்கப்படுகிறான். அந்தப்படி ராகாப் என்னும் வேசியும் தூதர்களை ஏற்றுக்கொண்டு வேறுவழியாய் அனுப்பிவிட்டபோது, கிரியைகளினாலே அல்லவோ நீதியுள்ளவளாக்கப்பட்டாள்? அப்படியே, ஆவியில்லாத சரீரம் செத்ததாயிருக்கிறதுபோல, கிரியைகளில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது.’ (யாக்கோபு 2:24-26) ராகாப் ஏன் நீதியுள்ளவளாக அறிவிக்கப்பட்டாள்? கடவுளிடம் அத்தகைய சிலாக்கியமான நிலைநிற்கை வழங்கப்படுமளவிற்கு அவள் என்ன செய்தாள்?
இஸ்ரவேலர் வருகின்றனர்!
நாம் பொ.ச.மு. 1473-க்குக் கவனத்தைத் திருப்புவோம். அந்தச் சூழமைப்பைக் கற்பனை செய்துபாருங்கள். எரிகோ அரண்காப்புக்களால் வலுப்படுத்தப்பட்டிருக்கிறது. உயர்ந்த பட்டணத்து மதில்களின்மேல் வேசியாகிய ராகாபின் வீடு இருக்கிறது. இந்தச் சாதகமான இடத்திலிருந்து, அவள் கிழக்குதிசையினிடமாக யோர்தான் ஆற்றின் கரைபுரண்டோடும் வெள்ளத்தைப் பார்ப்பது சாத்தியமாக இருக்கலாம். (யோசுவா 3:15) அதன் கிழக்குக் கரையில், 6,00,000-க்கும் மேலானோரைப் படைபலமாகக் கொண்ட இஸ்ரவேலர் கூடாரமிட்டுத் தங்குவதை அவள் கவனிக்கக்கூடும். அவர்கள் இருப்பது வெறும் சில கிலோமீட்டருக்கு அப்பால்!
போரில் இஸ்ரவேலரின் தீரச்செயல்களைப்பற்றி ராகாப் அறிந்திருக்கிறாள். யெகோவாவுடைய வல்லமையின் வெளிக்காட்டுதல்கள் குறித்தும், குறிப்பாகச் சிவந்த சமுத்திரம் வழியாக இஸ்ரவேலருக்குத் தப்புவதற்கான ஓர் இடைவழியைத் திறந்ததைக்குறித்து கேள்விப்பட்டிருந்தாள். அப்படியானால், நிச்சயமாகவே, யோர்தானின் பொங்கிய வெள்ளம் ஒரு தடையாக இருக்காது. இது ஒரு நெருக்கடியான நேரம்! ராகாப் எப்படிப் பிரதிபலிப்பாள்?
ராகாப் தன் நிலைநிற்கையை எடுக்கிறாள்
விரைவில், ராகாப் எதிர்பாராத இருவரை—இஸ்ரவேல் கூடாரத்திலிருந்து வந்த வேவுகாரரை—ஏற்றுக்கொள்கிறாள். அவர்கள் ஒரு தங்கும் இடத்தைத் தேடுகின்றனர்; அவர்களைத் தன் வீட்டில் அவள் அனுமதிக்கிறாள். ஆனால் அவர்கள் வந்திருப்பதைப்பற்றிய செய்தி எரிகோவின் ராஜாவின் காதுகளைச் சென்றெட்டுகிறது. அவன் உடனடியாக அவர்களைச் சிறைகாவல் செய்யும்படி சட்டத்தைச் செயல்படுத்தக்கூடிய அதிகாரிகளை அனுப்புகிறான்.—யோசுவா 2:1, 2.
அந்த ராஜாவின் அதிகாரிகள் வரும் நேரத்திற்குள், ராகாப் யெகோவா தேவனுக்காகத் தன் நிலைநிற்கையை எடுத்துவிட்டாள். ‘உன்னிடத்தில் வந்த மனுஷரை வெளியே கொண்டுவா,’ என்று அந்த ராஜ அதிகாரிகள் கேட்டார்கள். ராகாப் அந்த வேவுகாரரை, தன் கூரையில் காயவைக்கும்படி பரப்பப்பட்ட சணல் தட்டைகளுக்குள்ளே மறைத்துவைத்திருந்தாள். அவள் சொல்கிறாள்: “மெய்தான், என்னிடத்தில் மனுஷர் வந்திருந்தார்கள்; ஆனாலும் அவர்கள் எவ்விடத்தாரோ எனக்குத் தெரியாது. [பட்டணத்து] வாசலை அடைக்கும் நேரத்தில் இருட்டுவேளையிலே, அந்த மனுஷர் புறப்பட்டுப் போய்விட்டார்கள்; அவர்கள் எங்கே போனார்களோ எனக்குத் தெரியாது; அவர்களைச் சீக்கிரமாய்ப் போய்த் தேடுங்கள்; நீங்கள் அவர்களைப் பிடித்துக்கொள்ளலாம்.” (யோசுவா 2:3-5) அந்த ராஜாவின் மனிதர் அவ்வாறே செய்கின்றனர்—வீணாக.
ராகாப் அந்தப் பகைவரைத் தவறாக வழிநடத்திவிட்டாள். அவள் உடனடியாக யெகோவாவிடமுள்ள தன் விசுவாசத்தைச் செயல்கள்மூலம் வெளிக்காட்டும் மேலுமான படிகளை எடுக்கிறாள். மேலே கூரைக்கு அவள் சென்று அந்த வேவுகாரரிடம் சொல்கிறாள்: ‘யெகோவா உங்களுக்கு நிச்சயமாக தேசத்தைக் கொடுப்பார் என்று நான் அறிவேன்.’ 40 வருடங்களுக்கு முன்னர் கடவுள் இஸ்ரவேலருக்குமுன் “சிவந்த சமுத்திரத்தின் தண்ணீரை வற்றிப்போகப்பண்ணினதை” கேள்விப்பட்டிருப்பதால், தேசத்துக் குடிமக்கள் அனைவரும் திகில்பிடித்திருக்கின்றனர் என்பதை ராகாப் ஒப்புக்கொள்கிறாள். இஸ்ரவேலர் இரு எமோரியரின் ராஜாக்களைச் சங்காரம்பண்ணினதையும் மக்கள் அறிந்திருக்கிறார்கள். நாங்கள் “கேள்விப்பட்டபோது எங்கள் இருதயம் கரைந்துபோயிற்று, உங்களாலே எல்லாருடைய தைரியமும் அற்றுப்போயிற்று; உங்கள் தேவனாகிய கர்த்தரே உயர வானத்திலும் கீழே பூமியிலும் தேவனானவர்,” என்று ராகாப் சொல்கிறாள்.—யோசுவா 2:8-11.
ராகாப் மன்றாடுகிறாள்: ‘இப்போதும், நான் உங்களுக்குத் தயவுசெய்தபடியினால், நீங்களும் என் தகப்பன் குடும்பத்துக்குத் தயவுசெய்வோம் என்று யெகோவாவின்பேரில் எனக்கு ஆணையிட்டு, நீங்கள் என் தகப்பனையும் என் தாயையும் என் சகோதரரையும் என் சகோதரிகளையும் அவர்களுக்கு உண்டான எல்லாவற்றையும் உயிரோடே வைக்கும்படி, எனக்கு நிச்சயமான அடையாளத்தைக் கொடுக்கவேண்டும்.’—யோசுவா 2:12, 13.
அந்த மனிதர் ஒத்துக்கொண்டு, என்ன செய்வதென ராகாபுக்குச் சொல்கின்றனர். அந்த வேவுகாரரை எரிகோவின் மதில்களுக்கு வெளியே இறக்கிவிட அவள் பயன்படுத்திய சிவப்பு நூல் கயிற்றை அவளுடைய ஜன்னலிலிருந்து அவள் தொங்கவிடவேண்டும். அவள் தன்னுடைய குடும்பத்தாரைத் தன் வீட்டிற்குள் கூட்டிச்சேர்க்கவேண்டும்; பாதுகாப்பிற்காக அவர்கள் அங்கேயே நிலைத்திருக்கவேண்டும். விடைபெற்றுச் செல்லும் வேவுகாரர்களுக்கு, அந்த இடத்தின் அமைப்பைப்பற்றி உதவியுள்ள தகவலை ராகாப் அளித்து, அவர்களைப் பின்தொடர்வோருக்குப் பிடிகொடுக்காமல் தப்பித்துக்கொள்வது எப்படி என்று சொல்கிறாள். அந்த வேவுகாரர்கள் அவ்வாறே செய்கின்றனர். ராகாப் அந்த சிவப்பு நூல் கயிற்றை தொங்கவிட்டுவிட்டு, தன் வீட்டு அங்கத்தினர்களைக் கூட்டிச்சேர்த்துக்கொண்டு மேலுமாக நடக்கவிருக்கும் காரியங்களை எதிர்நோக்கி காத்திருக்கிறாள்.—யோசுவா 2:14-24.
ராகாப் என்ன செய்திருக்கிறாள்? ஏன், அவள் தன் விசுவாசம் சர்வவல்லமையுள்ள கடவுளாகிய யெகோவாவின்மேல் இருப்பதாக நிரூபித்திருக்கிறாள்! அவள் அவருடைய தராதரங்களின்படி வாழ்வாள். ஆம், அத்தகைய விசுவாச செயல்களுக்காக அவள் நீதியுள்ளவளாக அறிவிக்கப்படுவாள்.
தகர்ந்து விழுகின்றன மதில்கள்!
சில வாரங்கள் கடந்துசெல்கின்றன. ஆசாரியர்கள் உடன்செல்ல—சிலர் கொம்பு எக்காளங்களுடனும், மற்றவர்கள் பரிசுத்த உடன்படிக்கை பெட்டியை எடுத்துக்கொண்டும்—இஸ்ரவேல யுத்த ஆட்கள் எரிகோவைச் சுற்றிவருகின்றனர். அவர்கள் ஒவ்வொரு நாளும் ஒருமுறையென இப்போது ஆறு நாட்களாக இதைச் செய்திருக்கின்றனர். இருப்பினும், இந்த ஏழாம் நாளில் அவர்கள் ஏற்கெனவே அந்தப் பட்டணத்தைச் சுற்றி ஆறு முறைகள் அணிவகுத்துச் சென்றிருக்கின்றனர். அதோ அவர்கள் திரும்பவும் செல்கின்றனர்!
ஏழாம் முறை அணிவகுத்துச் செல்லுதல் முடிவுபெற்றது; எக்காளங்களிலிருந்து பெரும் முழக்கம் எங்கும் தொனித்தது. இஸ்ரவேலர் இப்போது சத்தமாய் ஆரவாரம் செய்கிறார்கள். அப்போது, யெகோவா எரிகோவின் பாதுகாப்பான மதில்கள் இடிமுழக்கம்போன்ற ஒலிகளுடன் தகர்ந்து விழும்படி செய்தார். ராகாபின் வீட்டைத் தாங்கிநிற்கும் பகுதி மட்டும் தொடர்ந்து நின்றுகொண்டிருக்கிறது. மீதி பட்டணமும் அதன் குடிமக்களும் அழிக்கப்படுகிறார்கள். அவளுடைய விசுவாசம் செயல்களால் நிரூபிக்கப்பட்டு, அந்த மனந்திரும்பிய வேசி தன் வீட்டாருடன் பாதுகாக்கப்படுகிறாள்; அவள் யெகோவாவின் மக்கள் மத்தியில் வாசம்செய்ய துவங்குகிறாள்.—யோசுவா 6:1-25.
ராகாபின் தனிப்பண்புகளிடம் பார்வைசெலுத்துதல்
ராகாப் அதிக செல்லம்கொடுத்து கெடுக்கப்பட்ட ஒரு சோம்பேறி பெண் அல்ல; ஏனென்றால் அவளுடைய கூரையில் வெயிலில் காயவைத்திருக்கும் சணல் தட்டைகள் இருந்தன. சணல் நார்கள் துணிமணி செய்வதற்குப் பயன்படுத்தப்படும். ராகாபின் வீட்டில் சிவப்பு நூலும் கையிருப்பில் இருந்தது. (யோசுவா 2:6, 17) அவள் துணிமணி உற்பத்தியில் ஈடுபட்டிருந்திருக்கக்கூடும்; ஒருவேளை சாயம் தோய்க்கும் கலையைக்கூட அறிந்திருக்கலாம். ஆம், ராகாப் ஒரு கடுமையாக உழைக்கும் பெண்ணாக இருந்தாள். எல்லாவற்றிற்கும் மேலாக அவள் யெகோவாவிடம் ஒரு பக்திக்குரிய பயத்தைக் கொண்டிருக்க ஆரம்பித்திருந்தாள்.—ஒப்பிடவும் நீதிமொழிகள் 31:13, 19, 21, 22, 30.
ராகாபின் மற்ற தொழிலைப் பற்றியென்ன? அவள் ஒரு சத்திரத்தில் வெறுமனே விருந்தினரை உபசரிக்கும் பெண்ணாக இருக்கவில்லை. இல்லை, ஒரு வேசி என்பதைக் குறிக்கும் எபிரேய மற்றும் கிரேக்க வார்த்தைகளைக் கொண்டு வேத எழுத்துக்கள் அவளை அடையாளம் காட்டுகின்றன. உதாரணமாக, எபிரேய வார்த்தை ஸோனா (zoh·nahʹ) எப்போதும் ஒரு கள்ளத்தனமான உறவுடன் தொடர்புடையதாய் இருக்கிறது. தற்செயலான காரியம் என்னவெனில், கானானியர்கள் மத்தியில் வேசித்தனம் ஒரு கெட்ட பெயரைக் கொண்டுவரும் தொழில் அல்ல.
யெகோவா ஒரு வேசியைப் பயன்படுத்தியது அவருடைய பெரிய இரக்கத்தை வெளிக்காட்டுகிறது. வெளித்தோற்றங்கள் நம்மை ஏமாற்றலாம், ஆனால் கடவுள் “இருதயத்தைப் பார்க்கிறார்.” (1 சாமுவேல் 16:7) எனவே, தங்களுடைய வேசித்தனத்தைக் குறித்து மனந்திரும்பக்கூடிய நல்லிருதயமுள்ள வேசிகள் யெகோவா தேவனின் மன்னிப்பைப் பெற முடியும். (ஒப்பிடவும் மத்தேயு 21:23, 31, 32.) ராகாப் தானே பாவத்திலிருந்து தெய்வீக அங்கீகாரத்தை உடைய ஒரு நீதியுள்ள போக்கிற்குத் திரும்பினாள்.
இஸ்ரவேல வேவுகாரர்கள் கடவுளுடைய சட்டத்தின்படி வாழ்ந்தனர்; ஆகவே அவர்கள் ஒழுக்கக்கேடான காரணங்களுக்காக ராகாபின் வீட்டில் தங்கவில்லை. அவர்கள் ஒரு வேசியின் வீட்டில் இருப்பதின்மூலம், சந்தேகத்திற்குக் குறைந்தளவு சாத்தியம் எழுப்பப்படும் என்பது அவர்களுடைய காரணமாக இருந்திருக்கக்கூடும். பட்டணத்து மதிலில் அது அமைந்திருந்ததும் எளிதாகத் தப்பிச்செல்வதற்கு உதவும். இஸ்ரவேலருடன் தெய்வீக செயல்தொடர்புகளின் அறிக்கைகளால் அவள் மனந்திரும்பி தன் வழிகளை மாற்றிக்கொள்ளும் அளவிற்கு அவ்வளவு சாதகமாகப் பாதிக்கப்பட்டிருந்த இருதயத்தை உடைய ஒரு பாவியிடம் தெளிவாகவே யெகோவா அவர்களை வழிநடத்தினார். இஸ்ரவேலர் கானானியரை அவர்களுடைய ஒழுக்கங்கெட்ட நடத்தைகளுக்காக அழித்துவிடுவர் என்ற கடவுளின் கூற்றும், ராகாபின் மீதும் எரிகோமீதான வெற்றியின் மேலுமிருந்த அவருடைய ஆசீர்வாதமும், அந்த வேவுகாரர் ஒழுக்கயீனத்தை நடப்பிக்கவில்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன.—லேவியராகமம் 18:24-30.
வேவுகாரரைப் பின்தொடர்ந்தவர்களிடம் ராகாபின் தவறாக வழிநடத்தும் வார்த்தைகளைப் பற்றியென்ன? கடவுள் அவளுடைய போக்கை அங்கீகரித்தார். (ஒப்பிடவும் ரோமர் 14:4.) தன்னுடைய விசுவாசத்திற்கு அத்தாட்சி அளிக்கும்விதத்தில், அவருடைய வேலையாட்களை பாதுகாப்பதற்காக அவள் தன்னையே ஆபத்திற்குள்ளாக்கினாள். தீய எண்ணத்துடன் பொய் சொல்லுதல் யெகோவாவின் பார்வையில் தவறாக இருக்கிறபோதிலும், உண்மையான தகவலை, அதை அறிந்துகொள்ள தகுதியில்லாதவர்களுக்குத் தெரியப்படுத்தும் கட்டாயத்தில் ஒருவர் இல்லை. இயேசு கிறிஸ்துகூட, முழு விவரங்களையோ நேரடி பதில்களையோ கொடுப்பது தேவையற்ற கெடுதலைக் கொண்டுவந்திருக்கக்கூடிய சமயங்களில் அவ்வாறு செய்யவில்லை. (மத்தேயு 7:6; 15:1-6; 21:23-27; யோவான் 7:3-10) தெளிவாகவே, அந்தப் பகை அதிகாரிகளைத் தவறாக வழிநடத்திய ராகாபின் போக்கு, அந்த நோக்குநிலையிலிருந்தே கருதப்படவேண்டும்.
ராகாபின் வெகுமதி
விசுவாசத்தைக் காண்பித்ததற்காக ராகாப் எவ்வாறு வெகுமதி அளிக்கப்பட்டாள்? எரிகோவின் அழிவின்போது அவள் காக்கப்பட்டது நிச்சயமாக யெகோவாவிடமிருந்து வந்த ஆசீர்வாதமாக இருந்தது. பின்னர், அவள் வனாந்திரத்து பிரபுவாகிய யூதா கோத்திரத்து நகசோனின் மகன் சல்மோனை (சல்மா) திருமணம் செய்தாள். தெய்வ பக்தியுள்ள போவாசின் பெற்றோராக, சல்மோனும் ராகாபும் இஸ்ரவேலின் தாவீது ராஜா வரும் வம்சவழியில் ஒரு தொடர்பை உருவாக்கினர். (1 நாளாகமம் 2:3-15; ரூத் 4:20-22) இன்னும் முக்கியமாக, மத்தேயுவால் பதிவுசெய்யப்பட்ட இயேசு கிறிஸ்துவின் வம்சவரலாற்றில் பெயர் கொடுக்கப்பட்டுள்ள வெறும் நான்கு பெண்களில் முன்னாள் வேசி ராகாபும் ஒருத்தி ஆவாள். (மத்தேயு 1:5, 6) யெகோவாவிடமிருந்து என்னே ஓர் ஆசீர்வாதம்!
இஸ்ரவேலைச் சேர்ந்தவளாக இல்லாதிருந்தும் ஒருகாலத்தில் வேசியாகவே இருந்தவளுமான ராகாப், யெகோவாவில் முழு விசுவாசத்தைக் கொண்டிருந்தாள் என்பதைத் தன்னுடைய செயல்களால் நிரூபித்த ஒரு பெண்ணின் தலைசிறந்த முன்மாதிரி. (எபிரெயர் 11:30, 31) மற்றவர்களைப்போல், ஒரு வேசித்தன வாழ்க்கையை கைவிட்டிருக்கும் அவர்களில் சிலரையும்போல், அவள் மற்றுமொரு வெகுமதியைப் பெறுவாள்—மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து ஒரு பரதீஸிய பூமியில் ஜீவனுக்கு வருதல். (லூக்கா 23:43) செயல்களின்மூலம் திடப்படுத்தப்பட்ட அவளுடைய விசுவாசத்தால், ராகாப் நம்முடைய அன்பான, மன்னிக்கும் பரலோக தந்தையின் அங்கீகாரத்தைப் பெற்றாள். (சங்கீதம் 130:3, 4) மேலும் நிச்சயமாக அவளுடைய சிறந்த முன்மாதிரி, நித்திய ஜீவனுக்காக யெகோவா தேவனை நோக்கியிருக்கும் நீதியை நேசிக்கும் அனைவருக்கும் உற்சாகத்தை அளிக்கிறது.
[பக்கம் 23-ன் படம்]
ராகாபின் செயல்கள் அவளுக்கு விசுவாசம் இருந்ததை நிரூபித்ததால் அவள் நீதியுள்ளவளாக அறிவிக்கப்பட்டாள்
[பக்கம் 24-ன் படங்கள்]
அகழ்வாராய்ச்சியாளர்கள் பண்டைய எரிகோவின் சிதைவுகளைத் தோண்டி எடுத்திருக்கின்றனர், ஒரு பண்டைய மதிலின் ஒரு சிறிய பாகம் உட்பட
[படத்திற்கான நன்றி]
Pictorial Archive (Near Eastern History) Est.