வாசிப்பதில் கருத்தாயிருங்கள்
“நான் வருமளவும் வாசிக்கிறதிலும் புத்திசொல்லுகிறதிலும் உபதேசிக்கிறதிலும் கருத்தாயிரு.”—1 தீமோத்தேயு 4:13, தி.மொ.
1. பைபிளை வாசிப்பதிலிருந்து நாம் எவ்வாறு பயனடையலாம்?
வாசிக்கவும் எழுதவும் கற்றுக்கொள்வதற்கான அற்புதமான திறமையை யெகோவா தேவன் மனிதவர்க்கத்துக்கு அளித்திருக்கிறார். நாம் நன்றாக போதிக்கப்படுவதற்கென அவர் தம் வார்த்தையாகிய பைபிளையும்கூட அளித்திருக்கிறார். (ஏசாயா 30:20, 21) அடையாள அர்த்தத்தில், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு போன்ற கடவுள்-பயமுள்ள கோத்திரப் பிதாக்களோடு “நடப்பதற்கு” அதன் பக்கங்கள் நமக்கு உதவுகின்றன. சாராள், ரெபெக்காள், உண்மையுள்ள மோவாபிய பெண் ரூத் போன்ற தேவபக்தியுள்ள பெண்களை நம்மால் “காண” முடிகிறது. ஆம், இயேசு கிறிஸ்து மலைப்பிரசங்கத்தைக் கொடுப்பதை நம்மால் “கேட்க” முடிகிறது. நாம் நல்ல வாசிப்பாளர்களாய் இருந்தால் பரிசுத்த வேதாகமத்திலிருந்து கிடைக்கப்பெறும் இந்த எல்லா இன்பமும் மகத்தான போதனையும் நம்முடையவையாகிவிடும்.
2. இயேசுவுக்கும் அவருடைய அப்போஸ்தலர்களுக்கும் நன்றாக வாசிக்கத் தெரிந்திருந்தது என்பதை எது குறிப்பிட்டுக் காண்பிக்கிறது?
2 சந்தேகத்துக்கு இடமின்றி, பரிபூரண மனிதராயிருந்த இயேசு கிறிஸ்து மிகச் சிறந்த வாசிக்கும் திறமையைப் பெற்றிருந்தார், அவர் நிச்சயமாகவே எபிரெய வேதாகமத்தை நன்கு அறிந்திருந்தார். ஆகையால், பிசாசானவனால் சோதிக்கப்பட்டபோது, இயேசு திரும்பத்திரும்ப எபிரெய வேதாகமத்தைச் சுட்டிக் காண்பித்து, “எழுதியிருக்கிறதே” என்று கூறினார். (மத்தேயு 4:4, 7, 10) ஒரு சமயம் நாசரேத்தில் இருந்த ஜெப ஆலயத்தில் ஏசாயா தீர்க்கதரிசனத்தின் ஒரு பகுதியை அனைவர் முன்பாகவும் வாசித்து, அதைத் தமக்கே பொருத்தினார். (லூக்கா 4:16-21) இயேசுவின் அப்போஸ்தலர்களைப் பற்றியென்ன? அவர்களுடைய எழுத்துக்களில், அவர்கள் அடிக்கடி எபிரெய வேதாகமத்திலிருந்து மேற்கோள் காட்டினர். பேதுருவும் யோவானும் எபிரெய பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயிலாததன் காரணமாக அவர்களைப் படிப்பறியாத சாதாரண மனிதர்கள் என யூத ஆட்சியாளர்கள் கருதினபோதிலும், அவர்கள் பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டு எழுதிய கடிதங்கள், அவர்களுக்கு வாசிப்பதற்கும் எழுதுவதற்கும் நன்றாக தெரிந்திருந்தது என்பதைத் தெளிவாக நிரூபித்துக் காண்பிக்கின்றன. (அப்போஸ்தலர் 4:13) ஆனால் வாசிக்கும் திறமையைப் பெற்றிருப்பது உண்மையிலேயே முக்கியத்துவமுள்ளதா?
‘சப்தமாய் வாசிக்கிறவன் சந்தோஷமுள்ளவன்’
3. வேதாகமத்தையும் கிறிஸ்தவ பிரசுரங்களையும் வாசிப்பது ஏன் அவ்வளவு முக்கியமானது?
3 வேதாகமத்தின் திருத்தமான அறிவை எடுத்துக்கொள்வதும், பொருத்துவதும் நித்திய ஜீவனில் விளைவடையக்கூடும். (யோவான் 17:3) ஆகையால், பரிசுத்த வேதாகமத்தையும் அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் அடங்கிய உண்மையும் விவேகமுமுள்ள அடிமை வகுப்பார் மூலம் கடவுள் அளிக்கும் கிறிஸ்தவ பிரசுரங்களையும் வாசிப்பதும் படிப்பதும் மிகவும் முக்கியம் என்பதை யெகோவாவின் சாட்சிகள் உணருகின்றனர். (மத்தேயு 24:45-47, NW) உண்மையில், வாசிப்பதற்கென்றே விசேஷமாய் தயாரிக்கப்பட்டிருக்கும் உவாட்ச் டவர் பிரசுரங்களை உபயோகிப்பதன் மூலம், ஆயிரக்கணக்கானோர் வாசிப்பதற்கு கற்றுக்கொடுக்கப்பட்டு இருக்கின்றனர், அதன் மூலம் கடவுளுடைய வார்த்தையின் ஜீவனளிக்கும் அறிவைப் பெற்றிருக்கின்றனர்.
4. (அ) கடவுளுடைய வார்த்தையை வாசிப்பதும், படிப்பதும், பொருத்துவதும் ஏன் மகிழ்ச்சியை விளைவிக்கிறது? (ஆ) வாசிக்கும் விஷயத்தில், பவுல் தீமோத்தேயுவுக்கு என்ன சொன்னார்?
4 கடவுளுடைய வார்த்தையை வாசித்து, படித்து, பொருத்துவதிலிருந்து மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஏனென்றால் இதன் மூலம் நாம் கடவுளை மகிழ்வித்து கனம்பண்ணுகிறோம், அவருடைய ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டு களிகூருகிறோம். யெகோவா தம் ஊழியர்கள் சந்தோஷமாய் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். எனவே, பண்டைய இஸ்ரவேல் ஜனங்களுக்கு தம்முடைய நியாயப்பிரமாணத்தை வாசித்துக் காண்பிக்கும்படி ஆசாரியர்களுக்கு அவர் கட்டளையிட்டார். (உபாகமம் 31:9-12) எஸ்றா என்ற வேதபாரகனும் மற்றவர்களும் எருசலேமில் கூடியிருந்த ஜனங்கள் அனைவருக்கும் நியாயப்பிரமாணத்தை வாசித்துக் காண்பித்தபோது, அதன் அர்த்தம் தெளிவாக்கப்பட்டது, அதனால் “மிகுந்த சந்தோஷம்” ஏற்பட்டது. (நெகேமியா 8:6-8, 12) பின்னர் கிறிஸ்தவ அப்போஸ்தலனாகிய பவுல் தன் உடன்வேலையாளாகிய தீமோத்தேயுவிடம் கூறினார்: “நான் வருமளவும் வாசிக்கிறதிலும் புத்திசொல்லுகிறதிலும் உபதேசிக்கிறதிலும் ஜாக்கிரதையாயிரு.” (1 தீமோத்தேயு 4:13) மற்றொரு மொழிபெயர்ப்பு வாசிக்கிறது: “வேதாகமத்தை அனைவரும் கேட்க வாசிப்பதில் கருத்தாயிருங்கள்.”—நியூ இன்டர்நேஷனல் வர்ஷன்.
5. வெளிப்படுத்துதல் 1:3, வாசித்தலோடு எவ்வாறு சந்தோஷத்தை இணைக்கிறது?
5 கடவுளுடைய வார்த்தையை வாசிப்பதன் பேரிலும் அதைப் பொருத்துவதன் பேரிலும் நம் சந்தோஷம் சார்ந்திருக்கிறது என்பது வெளிப்படுத்துதல் 1:3-ல் தெளிவாக்கப்பட்டிருக்கிறது. “இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள், காலம் சமீபமாயிருக்கிறது” என்று அங்கு நமக்கு சொல்லப்பட்டிருக்கிறது. ஆம், வெளிப்படுத்துதலிலும் வேதாகமம் முழுவதிலும் உள்ள தீர்க்கதரிசன வார்த்தைகளை நாம் சப்தமாக வாசிக்கவும் வேண்டும், கேட்கவும் வேண்டும். உண்மையிலேயே மகிழ்ச்சியாயிருக்கும் நபர், ‘கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷனே.’ அதன் விளைவு? “அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.” (சங்கீதம் 1:1-3) ஆகையால், நம்மில் ஒவ்வொருவரும் யெகோவாவின் வார்த்தையைத் தனிப்பட்டவிதமாகவும் குடும்பங்களாகவும் நண்பர்களோடும் ஒன்றுசேர்ந்து வாசிக்கவும் படிக்கவும் வேண்டும் என்று யெகோவாவின் அமைப்பு நல்ல காரணங்களுக்காகவே நம்மை ஊக்குவிக்கிறது.
ஊக்கமாய் சிந்தியுங்கள், தியானம் செய்யுங்கள்
6. எதை வாசிப்பதற்கு யோசுவாவுக்கு கட்டளைக் கொடுக்கப்பட்டது, இது எவ்வாறு பயனுள்ளதாய் இருந்தது?
6 கடவுளுடைய வார்த்தையையும் கிறிஸ்தவ பிரசுரங்களையும் வாசித்து அவற்றிலிருந்து நீங்கள் எவ்வாறு மிகுதியான பயனடையலாம்? பண்டைய இஸ்ரவேலரின் தேவபயமுள்ள தலைவராயிருந்த யோசுவா செய்ததுபோல் செய்வதை நீங்கள் பெரும்பாலும் அதிக பயனுள்ளதாக காண்பீர்கள். அவருக்கு இவ்வாறு கட்டளையிடப்பட்டது: “இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக் கொண்டிருப்பாயாக; [“அடங்கிய குரலில் வாசிப்பாயாக,” NW] அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்துகொள்ளுவாய்.” (யோசுவா 1:8) ‘அடங்கிய குரலில் வாசித்தல்’ என்பதன் அர்த்தம், தாழ்ந்த குரலில் வார்த்தைகளை உங்களிடமே சொல்லிக்கொள்வது. இது விஷயங்களை மனதில் ஆழப் பதியவைப்பதால் நினைவில் வைப்பதற்கு உதவுகிறது. யோசுவா கடவுளுடைய நியாயப்பிரமாணத்தை “இரவும் பகலும்” அல்லது ஒழுங்காக வாசிக்க வேண்டியவராய் இருந்தார். கடவுள் கொடுத்த பொறுப்புகளை நிறைவேற்றி முடிப்பதில் வெற்றி காண்பதற்கும் ஞானமாக செயல்படுவதற்கும் அதுவே வழியாக இருந்தது. அப்படி கடவுளுடைய வார்த்தையை ஒழுங்காக வாசிப்பது உங்களுக்கும் அதேபோல் உதவி செய்யக்கூடும்.
7. கடவுளுடைய வார்த்தையை வாசிக்கையில், வேகமாய் வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியிருக்கும்படி நாம் ஏன் அனுமதிக்கக்கூடாது?
7 கடவுளுடைய வார்த்தையை வாசிக்கையில், வேகமாய் வாசிக்க வேண்டும் என்று முயலாதீர்கள். பைபிளையோ அல்லது சில கிறிஸ்தவ பிரசுரங்களையோ வாசிப்பதற்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தைச் செலவிட நீங்கள் திட்டமிட்டிருந்தால், அவற்றை மெதுவாக வாசிக்க விரும்பக்கூடும். முக்கியமான குறிப்புகளை நினைவில் வைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு நீங்கள் படித்துக்கொண்டிருந்தால், இது குறிப்பாக முக்கியமாய் இருக்கிறது. மேலும், வாசிக்கும்போது நீங்கள் ஊக்கமாய் சிந்தியுங்கள். பைபிள் எழுத்தாளர்களின் கூற்றுகளைப் பகுத்து ஆராயுங்கள். ‘எழுத்தாளரின் நோக்கம் என்ன? நான் இந்தத் தகவலை வைத்துக்கொண்டு என்ன செய்ய வேண்டும்?’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்.
8. வேதாகமத்தை வாசிக்கையில் தியானம் செய்வது ஏன் பயனுள்ளது?
8 பரிசுத்த வேதாகமத்தை வாசிக்கையில் தியானம் செய்வதற்கு நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். இது பைபிள் பதிவுகளை ஞாபகத்தில் வைப்பதற்கும் வேதப்பூர்வமான நியமங்களைப் பொருத்துவதற்கும் உங்களுக்கு உதவும். கடவுளுடைய வார்த்தையின் பேரில் தியானம் செய்து முக்கிய குறிப்புகளை மனதில் வைப்பதும்கூட இதயத்திலிருந்து பேசுவதற்கு உங்களுக்கு உதவக்கூடும், மேலும், உண்மை மனதோடு கேள்வி கேட்பவர்களிடம் நீங்கள் ஏதோவொன்றைச் சொல்லிவிட்டு பின்னால் வருந்துவதற்குப் பதிலாக, திருத்தமான பதில்களைக் கொடுப்பதற்கு அது உதவும். தேவ ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்ட நீதிமொழி ஒன்று இவ்வாறு சொல்கிறது: “நீதிமானுடைய மனம் பிரதியுத்தரம் சொல்ல யோசிக்கும்.”—நீதிமொழிகள் 15:28.
பழைய குறிப்புகளோடு புதிய குறிப்புகளைத் தொடர்புபடுத்தி பாருங்கள்
9, 10. நீங்கள் ஏற்கெனவே அறிந்திருக்கும் குறிப்புகளோடு புதிய வேதப்பூர்வமான குறிப்புகளைத் தொடர்புபடுத்திப் பார்ப்பதன் மூலம் உங்கள் பைபிள் வாசிப்பை நீங்கள் எவ்வாறு மேம்படுத்தலாம்?
9 கடவுள், அவருடைய வார்த்தை, அவருடைய நோக்கங்கள் ஆகியவற்றைப் பற்றி தாங்கள் ஒரு காலத்தில் மிகவும் குறைவாகவே அறிந்திருந்தனர் என்பதைப் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். ஆனால் இன்று, இந்த கிறிஸ்தவ ஊழியர்கள், சிருஷ்டிப்பிலிருந்தும் மனிதன் பாவத்துக்குள் விழுந்தநிலையிலிருந்தும் ஆரம்பித்து, கிறிஸ்துவின் பலியினுடைய நோக்கத்தை விளக்கமுடியும், இந்தப் பொல்லாத காரிய ஒழுங்குமுறையின் அழிவைப் பற்றி சொல்லமுடியும், ஒரு பரதீஸிய பூமியின்மீது கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கம் எவ்வாறு ஆசீர்வதிக்கப்படும் என்பதை விளக்கி காண்பிக்கமுடியும். யெகோவாவின் இந்த ஊழியர்கள் பைபிளையும் கிறிஸ்தவ பிரசுரங்களையும் படிப்பதன் மூலம் “தேவனை அறியும் அறிவை” எடுத்துக்கொண்டிருக்கிறபடியால் இது பெரும்பாலும் சாத்தியமாகியிருக்கிறது. (நீதிமொழிகள் 2:1-5) ஏற்கெனவே விளங்கியிருந்த பழைய குறிப்புகளோடு புதிதாக கற்றுக்கொண்ட குறிப்புகளை அவர்கள் படிப்படியாக தொடர்புபடுத்திப் பார்த்திருக்கின்றனர்.
10 நீங்கள் ஏற்கெனவே அறிந்திருக்கும் குறிப்புகளோடு புதிய வேதப்பூர்வமான குறிப்புகளைத் தொடர்புபடுத்தி பார்ப்பது, நன்மை பயப்பதாயும் பலனளிப்பதாயும் இருக்கிறது. (ஏசாயா 48:17) பைபிள் சட்டங்கள், நியமங்கள் அல்லது சுலபமாக புரிந்துகொள்ள முடியாத கருத்துக்களும்கூட அளிக்கப்படுகையில், நீங்கள் ஏற்கெனவே அறிந்திருக்கும் குறிப்புகளோடு இவற்றைத் தொடர்புபடுத்திப் பாருங்கள். “ஆரோக்கியமான வசனங்களின் சட்டத்தை” பற்றி நீங்கள் கற்றுக்கொண்டிருப்பவற்றோடு அத்தகவலைப் பொருத்துங்கள். (2 தீமோத்தேயு 1:13) கடவுளோடுள்ள உங்கள் உறவைப் பலப்படுத்துவதற்கோ, உங்கள் கிறிஸ்தவ ஆளுமையை மேம்படுத்துவதற்கோ, அல்லது மற்றவர்களோடு பைபிள் சத்தியங்களைப் பகிர்ந்துகொள்வதற்கோ உங்களுக்கு உதவக்கூடிய தகவலை நாடுங்கள்.
11. நடத்தையைக் குறித்து பைபிள் சொல்லும் ஏதோவொன்றை வாசிக்கையில் நீங்கள் என்ன செய்யலாம்? விளக்குங்கள்.
11 நடத்தையைக் குறித்து பைபிள் சொல்பவற்றை வாசிக்கும்போது, அதில் அடங்கியிருக்கும் நியமத்தைப் பகுத்துணர முயற்சி செய்யுங்கள். அதன் பேரில் தியானம் செய்யுங்கள், அதற்கு ஒத்தாற்போன்ற சூழ்நிலையில் நீங்கள் என்ன செய்வீர்கள் என்பதைத் தீர்மானியுங்கள். யாக்கோபின் குமாரனாகிய யோசேப்பு போத்திபாரின் மனைவியோடே பாலின ஒழுக்கக்கேட்டில் ஈடுபடுவதற்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து, இவ்வாறு கேட்டார்: “நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி?” (ஆதியாகமம் 39:7-9) உணர்ச்சிகளைத் தூண்டும் இந்தப் பதிவில், நீங்கள் ஒரு அடிப்படையான நியமத்தைக் காண்கிறீர்கள்—பாலின ஒழுக்கக்கேடு கடவுளுக்கு விரோதமான பாவம். அப்படிப்பட்ட தவறான நடத்தையில் ஈடுபடும்படி சோதிக்கப்பட்டால், நீங்கள் இந்த நியமத்தைக் கடவுளுடைய வார்த்தையில் காணப்படும் மற்ற கூற்றுகளோடு மனதில் தொடர்புபடுத்திப் பார்த்து அதிலிருந்து பயனடையலாம்.—1 கொரிந்தியர் 6:9-11.
பைபிள் சம்பவங்களைக் கற்பனைசெய்து பாருங்கள்
12. பைபிள் பதிவுகளை வாசிக்கையில் அவற்றை ஏன் நீங்கள் கற்பனைசெய்து பார்க்க வேண்டும்?
12 நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கையில் உங்கள் மனதில் குறிப்புகளை ஆழப் பதியவைப்பதற்கு, என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதைக் கற்பனைசெய்து பாருங்கள். நிலப்பகுதி, வீடுகள், ஜனங்கள் ஆகியவற்றை மனதிலே கற்பனைசெய்து பாருங்கள். அவர்களுடைய குரல்களைக் கேளுங்கள். சூட்டடுப்பில் ரொட்டி சுடும் மணம் வீசுவதை நுகருங்கள். காட்சிகளை மறுபடியும் மனக்கண்களுக்குமுன் கொண்டு வாருங்கள். அப்போது உங்கள் வாசிப்பு உணர்ச்சிகளைத் தூண்டுவதாய் இருக்கும், ஏனென்றால் நீங்கள் பண்டையகால பட்டணம் ஒன்றைக் காணலாம், கம்பீரமான மலையின் மீது உயர ஏறலாம், படைப்பின் அதிசயங்களைக் கண்டு மலைப்படையலாம் அல்லது பெரும் விசுவாசத்தையுடைய ஆண்களோடும் பெண்களோடும் கூட்டுறவு கொள்ளலாம்.
13. நியாயாதிபதிகள் 7:19-22-ல் பதிவுசெய்யப்பட்டிருக்கும் தகவலை நீங்கள் எவ்வாறு விவரிப்பீர்கள்?
13 நீங்கள் நியாயாதிபதிகள் 7:19-22 வரை உள்ள வசனங்களை வாசிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதைக் கற்பனைசெய்து பாருங்கள். நியாயாதிபதி கிதியோனும் அவருடைய முந்நூறு வல்லமை வாய்ந்த இஸ்ரவேல ஆண்களும் மீதியானிய பாளயத்தின் முன்னணியில் தங்கள் ஸ்தானங்களை எடுத்துக்கொள்கின்றனர். அப்போது இரவு சுமார் பத்து மணி. அது “நடுஜாமத்தின்” துவக்கமாய் இருக்கிறது. மீதியானிய படைகளின் மனுஷர் அப்போதுதான் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றனர், இஸ்ரவேலரின் விரோதிகள் உறங்கிக்கொண்டிருக்கின்றனர். அவர்களுடைய பாளயத்தைச் சுற்றிலும் இருள் சூழ்ந்துகொள்கிறது. பாருங்கள்! கிதியோனும் அவருடைய மனிதரும் எக்காளங்களைப் பிடித்திருக்கிறார்கள். இடது கைகளில் பிடித்திருந்த தீவட்டிகளை மூடும் பெரிய தண்ணீர் பானைகளை அவர்கள் வைத்திருக்கின்றனர். திடீரென்று நூறு பேர் அடங்கிய மூன்று படைகள் எக்காளங்களை ஊதி, பானைகளை உடைத்து, தீவட்டிகளை உயரப்பிடித்து, “கர்த்தருடைய பட்டயம் கிதியோனுடைய பட்டயம்!” என்று சத்தமிடுகிறார்கள். இப்போது நீங்கள் பாளயத்தைப் பார்க்கிறீர்கள். மீதியானியர்கள் எல்லாரும் சிதறிக் கூக்குரலிட்டு ஓடிப்போகிறார்கள்! முந்நூறு பேரும் எக்காளங்களை ஊதுகையில், கடவுள் பாளயமெங்கும் மீதியானியர்கள் மத்தியில் ஒருவர் பட்டயத்தை மற்றவருக்கு விரோதமாய் ஓங்கப்பண்ணுகிறார். மீதியானியர்கள் ஓடிப்போகிறார்கள், யெகோவா இஸ்ரவேலருக்கு வெற்றி தருகிறார்.
மதிப்புவாய்ந்த பாடங்களைக் கற்றுக்கொள்ளுதல்
14. தாழ்மையாய் இருக்க வேண்டியதன் அவசியத்தை ஒரு பிள்ளைக்கு கற்பிப்பதற்கு நியாயாதிபதிகள் அதிகாரம் 9 எவ்வாறு பயன்படுத்தப்படலாம்?
14 கடவுளுடைய வார்த்தையை வாசிப்பதன் மூலம் நாம் அநேக பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம். உதாரணமாக, தாழ்மையாய் இருக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றி உங்கள் பிள்ளைகளின் மனதில் நீங்கள் பதிய வைக்க விரும்புகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். கிதியோனின் குமாரனாகிய யோதாமின் தீர்க்கதரிசனத்தில் சொல்லப்பட்டிருந்ததைக் கற்பனைசெய்து பார்த்து அந்தக் குறிப்பை விளங்கிக்கொள்வது சுலபமாய் இருக்க வேண்டும். நியாயாதிபதிகள் 9:8-லிருந்து வாசிக்க ஆரம்பியுங்கள். “ஒருகாலத்திலே மரங்கள் தங்களுக்கு ஒரு ராஜாவை அபிஷேகம்பண்ணும்படி போயின,” என்று யோதாம் சொன்னார். ஒலிவமரமும் அத்திமரமும் திராட்சச்செடியும் அரசாட்சி செய்ய மறுத்தன. ஆனால் தாழ்நிலையிலிருந்த முட்செடி, ராஜாவாக ஆவதற்கு சந்தோஷப்பட்டது. இந்தப் பதிவை உங்கள் பிள்ளைகளிடம் சப்தமாக வாசித்த பிறகு, தங்கள் உடன் இஸ்ரவேலர்கள் மீது ராஜாவாக ஆட்சிசெய்யும் ஸ்தானத்தை நாடாத தகுதிவாய்ந்த ஆட்களை மதிப்புமிக்க செடிகள் அடையாளப்படுத்தின என்பதை நீங்கள் விளக்கலாம். விறகுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்ட முட்செடி பெருமையுள்ள அபிமெலேக்கின் ராஜரீகத்தைப் பிரதிநிதித்துவம் செய்தது, அவன் மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்த விரும்பிய கொலைகாரனாக இருந்தான், ஆனால் யோதாமின் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாக அவன் கொல்லப்பட்டான். (நியாயாதிபதிகள், அதிகாரம் 9) எந்தப் பிள்ளை வளர்ந்து ஒரு முட்செடியைப் போல் ஆக விருப்பப்படும்?
15. ரூத் புத்தகத்தில் உண்மைப்பற்றுறுதியின் முக்கியத்துவம் எவ்வாறு சிறப்பித்துக் காண்பிக்கப்பட்டுள்ளது?
15 ரூத் என்ற பைபிள் புத்தகத்தில் உண்மைப்பற்றுறுதியின் முக்கியத்துவம் தெளிவாக விளக்கப்பட்டிருக்கிறது. உங்கள் குடும்பத்திலுள்ள அங்கத்தினர்கள் வரிசையாக ஒருவர் மாறி ஒருவர் அந்தப் பதிவை சப்தமாக வாசித்து அது சொல்பவற்றைக் கிரகித்துக்கொள்ள முயற்சி செய்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். மோவாபிய பெண்ணாகிய ரூத் கணவனை இழந்துவிட்டிருந்த தன் மாமியார் நகோமியோடு பெத்லகேமுக்கு பிரயாணம் செய்வதை நீங்கள் காண்கிறீர்கள், ரூத் இவ்வாறு சொல்வதை நீங்கள் கேட்கிறீர்கள்: “உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன்.” (ரூத் 1:16) கடுமையாய் உழைக்கும் ரூத் போவாஸின் வயலிலே அரிக்கட்டுகள் நடுவே கதிர் பொறுக்கிக்கொண்டிருப்பதை நீங்கள் காண்கிறீர்கள். போவாஸ் அவளைப் புகழ்ந்து பேசி இவ்வாறு சொல்வதை நீங்கள் கேட்கிறீர்கள்: “நீ குணசாலி என்பதை என் ஜனமாகிய ஊராரெல்லாரும் அறிவார்கள்.” (ரூத் 3:11) விரைவில் போவாஸ் ரூத்தை திருமணம் செய்துகொள்கிறார். நெருங்கின உறவின்முறையான் திருமண ஏற்பாட்டுக்கு இசைவாக, அவள் போவாஸின் மூலம் ‘நகோமிக்கு’ ஒரு குமாரனைப் பெறுகிறாள். ரூத் தாவீதுக்கும் இறுதியில் இயேசு கிறிஸ்துவுக்கும் மூதாதையாக ஆகிறாள். அவள் இவ்வாறு ‘நிறைவான பலனை’ பெற்றுக்கொண்டாள். மேலும், அந்த வேதாகம பதிவை வாசிப்போர் பின்வரும் ஒரு மதிப்புவாய்ந்த பாடத்தைக் கற்றுக்கொள்கின்றனர்: யெகோவாவுக்கு உண்மைப்பற்றுறுதியோடு இருங்கள், அப்போது நீங்கள் அபரிமிதமாய் ஆசீர்வதிக்கப்படுவீர்கள்.—ரூத் 2:12; 4:17-22; நீதிமொழிகள் 10:22; மத்தேயு 1:1, 5, 6.
16. என்ன சோதனையை மூன்று எபிரெயர்கள் எதிர்ப்பட்டனர், இந்தப் பதிவு நமக்கு எவ்வாறு உதவக்கூடும்?
16 சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்ற பெயர்களையுடைய மூன்று எபிரெயர்களின் பதிவு, சோதனையான சூழ்நிலைகளில் கடவுளுக்கு உண்மைத்தன்மையோடு நிலைத்திருப்பதற்கு நமக்கு உதவிசெய்யக்கூடும். தானியேல் 3-ம் அதிகாரத்தைச் சப்தமாக வாசிக்கையில், அந்தச் சம்பவத்தைக் கற்பனைசெய்து பாருங்கள். தூரா என்னும் சமவெளியின் மீது மிகப் பெரிய பொற்சிலை ஒன்று உயர ஓங்கி நிற்கிறது, அங்கே பாபிலோன் தேசத்து அதிகாரிகள் குழுமியிருக்கின்றனர். இசைக்கருவிகளின் சப்தம் கேட்டவுடனேயே கீழே விழுந்து, நேபுகாத்நேச்சார் நிறுத்தி வைத்திருந்த சிலையை அவர்கள் பணிந்துகொள்கிறார்கள். அதாவது, சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களைத் தவிர பிறர் எல்லாரும் பணிந்துகொள்கின்றனர். ராஜாவின் கடவுட்களைச் சேவிப்பதில்லை என்றும் பொற்சிலையை வணங்குவதில்லை என்றும் அவர்கள் ராஜாவிடம் மரியாதையோடு ஆனால் உறுதியாக சொல்கின்றனர். இந்த இளம் எபிரெயர்கள் மிகைப்படியாக சூடாக்கப்பட்டிருந்த அக்கினிச்சூளையின் நடுவிலே போடப்படுகின்றனர். ஆனால் என்ன நடக்கிறது? நல்ல உடல் திடமுடைய நான்கு புருஷரை ராஜா சூளைக்குள்ளே காண்கிறார். அதில் ஒருவர் ‘தேவபுத்திரனுக்கு ஒப்பான சாயல்’ உள்ளவராய் இருக்கிறார். (தானியேல் 3:25) மூன்று எபிரெய புருஷர்களும் அக்கினிச்சூளையிலிருந்து வெளியே கொண்டுவரப்படுகின்றனர், நேபுகாத்நேச்சார் அவர்களுடைய கடவுளை புகழ்கிறார். அப்பதிவைக் கற்பனைசெய்து பார்ப்பது மிகவும் பலனளிப்பதாய் இருந்திருக்கிறது. சோதனையின் கீழ் யெகோவாவுக்கு உண்மைத்தன்மையோடு நிலைத்திருப்பது பற்றி என்னே ஒரு பாடத்தை இது அளிக்கிறது!
குடும்பமாக ஒன்றுசேர்ந்து பைபிளை வாசிப்பதிலிருந்து பயனடையுங்கள்
17. பைபிளை ஒன்றுசேர்ந்து வாசிப்பதன் மூலம் உங்கள் குடும்பம் கற்றுக்கொள்ளக்கூடிய சில பயனுள்ள காரியங்களைச் சுருக்கமாக எடுத்துக்கூறுங்கள்.
17 பைபிளை ஒன்றுசேர்ந்து வாசிப்பதில் ஒழுங்காக நேரத்தைச் செலவழித்தால் உங்கள் குடும்பம் அநேக பயன்களை அனுபவிக்கலாம். ஆதியாகமம் புத்தகத்தில் ஆரம்பித்து, நீங்கள் சிருஷ்டிப்பைக் கற்பனைசெய்து பார்க்கலாம், மனிதனின் முதல் பரதீஸிய வீட்டைக் கூர்ந்து கவனிக்கலாம். உண்மைத்தன்மையோடிருந்த கோத்திரப் பிதாக்களைப் பற்றியும் அவர்களுடைய குடும்பங்களைப் பற்றியும் அனுபவங்களை நீங்கள் பகிர்ந்துகொள்ளலாம், இஸ்ரவேலர் சிவந்த சமுத்திரத்தின் வழியாய் உலர்ந்த தரையினூடே கடந்து செல்கையில் அவர்களைப் பின்பற்றிச் செல்லலாம். சிறுவயது மேய்ப்பனாகிய தாவீது பெலிஸ்திய இராட்சதனாகிய கோலியாத்தை முற்றிலும் வென்று அடக்குவதை நீங்கள் காணலாம். எருசலேமில் யெகோவாவின் ஆலயம் கட்டப்படுவதை உங்கள் குடும்பம் மனதில் கற்பனைசெய்து பார்க்கலாம், அது பாபிலோனிய கும்பல்களால் பாழாக்கப்படுவதைக் காணலாம், அதிபதி செருபாபேலுடைய தலைமையின்கீழ் மறுபடியும் கட்டப்படுவதை நோக்கலாம். பெத்லகேமுக்கு அருகே எளிமையான மேய்ப்பர்களோடுகூட சேர்ந்து இயேசுவின் பிறப்பைப் பற்றிய தேவதூதனின் அறிவிப்பை நீங்கள் கேட்கலாம். அவருடைய முழுக்காட்டுதலைப் பற்றியும் அவருடைய ஊழியத்தைப் பற்றியும் நீங்கள் முழு விவரங்களையும் பெற்றுக்கொள்ளலாம், அவர் தம் மானிட ஜீவனை மீட்கும் பொருளாக அளிப்பதைக் காணலாம், அவருடைய உயிர்த்தெழுதலின் மகிழ்ச்சியில் பங்குகொள்ளலாம். அடுத்து, நீங்கள் அப்போஸ்தலனாகிய பவுலோடு பிரயாணம் செய்து, கிறிஸ்தவ மதம் பரவுகையில் சபைகள் ஸ்தாபிக்கப்படுவதைப் பார்வையிடலாம். பின்னர், வெளிப்படுத்துதல் புத்தகத்தில், கிறிஸ்துவின் ஆயிர வருட ஆட்சி உட்பட, எதிர்காலத்தைப் பற்றி அப்போஸ்தலனாகிய யோவான் கண்ட மகத்தான காட்சியை உங்கள் குடும்பம் கற்பனையில் கண்டு களிக்கலாம்.
18, 19. குடும்ப பைபிள் வாசிப்பைக் குறித்து என்ன ஆலோசனைகள் அளிக்கப்பட்டிருக்கின்றன?
18 நீங்கள் பைபிளைச் சப்தமாக குடும்ப அங்கத்தினர்களோடு ஒன்றுசேர்ந்து வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால், அதைத் தெளிவோடும் ஆர்வத்தோடும் வாசியுங்கள். வேதாகமத்தின் சில பகுதிகளை வாசிக்கையில், ஒரு குடும்ப அங்கத்தினர்—கூடுமானால் தகப்பன்—பொதுவான விவரப்பதிவை வாசிக்கலாம். மற்ற குடும்ப அங்கத்தினர்கள் பைபிள் பாத்திரங்களின் பங்கைப் பாவனைசெய்து, அதற்குப் பொருத்தமான உணர்ச்சிகளோடு பகுதிகளை வாசிக்கலாம்.
19 ஒரு குடும்பமாக ஒன்றுசேர்ந்து பைபிள் வாசிப்பில் நீங்கள் பங்குகொள்கையில், உங்கள் வாசிக்கும் திறமை ஒருவேளை மேம்படலாம். கடவுளைப் பற்றிய உங்கள் அறிவு பெரும்பாலும் அதிகரிக்கும், இது உங்களை அவரிடம் நெருங்கிச் சேரும்படி செய்விக்க வேண்டும். ஆசாப் பாடினார்: “எனக்கோ, தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம்; நான் உமது கிரியைகளையெல்லாம் சொல்லிவரும்படி கர்த்தராகிய ஆண்டவர்மேல் என் நம்பிக்கையை வைத்திருக்கிறேன்.” (சங்கீதம் 73:28) இது உங்களுடைய குடும்பம் மோசேயைப் போல் இருக்க உதவிசெய்யும், அவர் ‘காணமுடியாதவரைக் காண்கிறவர் போல் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருந்தார்,’ அதாவது யெகோவா தேவனைப் பற்றிக்கொண்டிருந்தார்.—எபிரெயர் 11:27.
வாசிப்பும் கிறிஸ்தவ ஊழியமும்
20, 21. நம் பிரசங்கிக்கும் வேலை எவ்வாறு வாசிக்கும் திறமையோடு சம்பந்தப்பட்டிருக்கிறது?
20 “காணமுடியாதவரை” வணங்குவதற்கு நாம் கொண்டிருக்கும் விருப்பம், நல்ல வாசிப்பாளராயிருக்க முயற்சி எடுப்பதற்கு நம்மை உந்துவிக்க வேண்டும். நன்றாக வாசிப்பதற்கு நாம் பெற்றிருக்கும் திறமை, கடவுளுடைய வார்த்தையிலிருந்து சாட்சி பகருவதற்கு நமக்கு உதவிசெய்கிறது. இயேசு தம்மைப் பின்பற்றுகிறவர்களுக்கு கொடுத்த ராஜ்ய-பிரசங்கிப்பு வேலையைத் தொடர்ந்து செய்வதற்கு அது நிச்சயமாகவே நமக்கு உதவிசெய்கிறது, இயேசு சொன்னார்: “நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங் கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள்.” (மத்தேயு 28:19, 20; அப்போஸ்தலர் 1:8) சாட்சி கொடுப்பதே யெகோவாவின் ஜனங்களுடைய முக்கியமான வேலை, வாசிக்கும் திறமை அதை நிறைவேற்றி முடிப்பதற்கு நமக்கு உதவிசெய்கிறது.
21 கடவுளுடைய வார்த்தையின் நல்ல வாசிப்பாளராகவும் திறமையுள்ள போதனையாளராகவும் இருப்பதற்கு முயற்சி தேவைப்படுகிறது. (எபேசியர் 6:17) ஆகையால், ‘கடவுளால் ஏற்கப்படத்தக்கவராய் விளங்குவதற்கும் சத்திய வசனத்தை சரியாய் கையாளுபவராய் இருப்பதற்கும் உங்களால் ஆன அனைத்தையும் செய்யுங்கள்.’ (2 தீமோத்தேயு 2:15, NW) வாசிப்பதில் கருத்தாய் இருப்பதன் மூலம் வேதாகம சத்தியத்தைப் பற்றிய உங்கள் அறிவையும் யெகோவாவுக்கு ஒரு சாட்சியாக இருப்பதில் உங்கள் திறமையையும் அதிகரித்துக்கொள்ளுங்கள்.
உங்கள் பதில்கள் யாவை?
◻ சந்தோஷம் எவ்வாறு கடவுளுடைய வார்த்தையை வாசிப்பதன் பேரில் சார்ந்துள்ளது?
◻ நீங்கள் பைபிளில் வாசிப்பவற்றை ஏன் தியானம் செய்ய வேண்டும்?
◻ வேதாகமத்தை வாசிக்கையில், கருத்துத்தொடர்புகளையும் கற்பனைசெய்து காண்பதையும் ஏன் உபயோகிக்க வேண்டும்?
◻ பைபிள் வாசிப்பிலிருந்து என்ன சில பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?
◻ குடும்பமாக ஒன்றுசேர்ந்து பைபிளை ஏன் சப்தமாக வாசிக்க வேண்டும், கிறிஸ்தவ ஊழியத்தோடு வாசிப்புக்கு என்ன தொடர்பு உள்ளது?
[பக்கம் 13-ன் படங்கள்]
குடும்பமாக ஒன்றுசேர்ந்து பைபிளை வாசிக்கையில், அப்பதிவுகளைக் கற்பனைசெய்து காணுங்கள், அதன் முக்கியத்துவத்தின் பேரில் தியானம் செய்யுங்கள்