ஏகூத்—விசுவாசமும் தைரியமுமுள்ள ஒரு மனிதன்
இஸ்ரவேலர்கள் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் முதல் தடவையாக அடியெடுத்துவைத்தது முதற்கொண்டு அநேக வருடங்கள் கடந்துவிட்டிருந்தன. மோசேயும் அவருக்குப்பின் வந்தவரான யோசுவாவும் மரித்து நீண்ட காலமாகியிருந்தன. இப்படிப்பட்ட விசுவாசமுள்ள மனிதர்கள் இல்லாத காரணத்தால், மெய் வணக்கத்துக்கான போற்றுதல் குறைந்துவிட்டிருந்தது. இஸ்ரவேலர் பாகால்களையும் தோப்பு விக்கிரகங்களையும்கூட, a சேவிக்க ஆரம்பித்துவிட்டிருந்தார்கள். இதன் விளைவாக, யெகோவா தம்முடைய ஜனங்களை எட்டு வருடங்களுக்கு சீரியர்களின் கைகளில் ஒப்புக்கொடுத்தார். பின்னர் இஸ்ரவேலர் கடவுளிடமாக உதவிக்காக கூக்குரலிட்டார்கள். அவர் இரக்கத்தோடு அவர்களுக்குச் செவிகொடுத்தார். யெகோவா தம்முடைய ஜனங்களை விடுவிப்பதற்காக ஒரு நியாயாதிபதியை, ஒத்னியேலை எழுப்பினார்.—நியாயாதிபதிகள் 3:7-11.
இந்தச் சம்பவங்கள் இஸ்ரவேலருக்கு ஒரு அடிப்படை உண்மையை கற்றுக்கொடுத்திருக்க வேண்டும்—யெகோவாவுக்கு கீழ்ப்படிதல் ஆசீர்வாதங்களைக் கொண்டுவருகிறது, கீழ்ப்படியாமை சாபங்களில் விளைவடைகிறது. (உபாகமம் 11:26-28) என்றபோதிலும், இஸ்ரவேல் ஜனத்தார் இந்தப் பாடத்தைக் கற்றுக்கொள்ளத் தவறினர். சமாதானமான 40 ஆண்டு காலப்பகுதிக்குப் பின்னர், அவர்கள் மறுபடியுமாக மெய் வணக்கத்தைப் புறக்கணித்தனர்.—நியாயாதிபதிகள் 3:12.
மோவாபினால் பிடிக்கப்பட்டனர்
இந்த முறை யெகோவா தம்முடைய ஜனங்களை எக்லோன் என்னும் மோவாபின் ராஜாவின் கைகளுக்குள் விழும்படியாக அனுமதித்தார். பைபிள் அவனை ‘மிகவும் தடித்த மனிதன்’ என்பதாக வருணிக்கிறது. அம்மோன் மற்றும் அமலேக்கின் உதவியோடு, எக்லோன் இஸ்ரவேலரைத் தாக்கி எரிகோவில் ‘பேரீச்சமரங்களின் பட்டணத்தில்’ தன் அரண்மனையைக் கட்டினான். இஸ்ரவேலரால் முதன் முதலாக கைப்பற்றப்படப் போகிற கானானிய பட்டணம் இப்பொழுது பொய் கடவுளாகிய காமோஸை, b வணங்கிவந்தவனின் படைக்களமாக சேவித்தது எத்தனை முரணாக உள்ளது!—நியாயாதிபதிகள் 3:12, 13, 17.
எக்லோன் அடுத்த 18 வருடங்களுக்கு இஸ்ரவேலரை ஒடுக்கினான், ஒருவேளை பாரமாக இருந்த வரியை அவர்களிடம் வற்புறுத்திப் பெற்றான். அவ்வப்போது கப்பம்கட்டும்படியாக வற்புறுத்துவதன் மூலம் மோவாப் தன்னுடைய சொந்த பொருளாதார நிலைமையை வலுப்படுத்திக்கொண்டது, இஸ்ரவேலரின் வருமானங்களோ குறைய ஆரம்பித்தன. புரிந்துகொள்ளத்தக்கதாக கடவுளுடைய ஜனங்கள் உதவிக்காக கூக்குரலிட்டார்கள், யெகோவா மறுபடியுமாக செவிசாய்த்தார். மற்றொரு இரட்சகனை—இந்த முறை பென்யமீன் கோத்திரத்தாராகிய ஏகூத் என்ற பெயர் கொண்டவரை—அவர் அவர்களுக்காக எழுப்பினார். இஸ்ரவேலரின்மீது எக்லோனின் கொடுங்கோலாட்சிக்கு முடிவைக் கொண்டுவர, ஏகூத் அடுத்துவரும் கப்பம்கட்டும் நாளில் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டார்.—நியாயாதிபதிகள் 3:14, 15.
துணிச்சலான தன்னுடைய நடவடிக்கைக்கு தயார் செய்வதற்காக, ஏகூத் ஒருமுழ நீளமுள்ள இருபுறமும் கருக்குள்ள ஒரு கத்தியை உண்டுபண்ணிக்கொண்டார். இது ஒரு குறுகிய நீளமுள்ளதாக இருந்திருந்தால், அந்தக் கருவி சுமார் 38 சென்டிமீட்டர் நீளமானதாக இருந்திருக்கும். சிலர் அதை ஒரு உடைவாளாக கருதுவர். கத்திக்கும் கைப்பிடிக்கும் இடையில் குறுக்கு துண்டு எதுவும் இல்லை. ஆகவே, ஏகூத்தால் தன்னுடைய சிறிய பட்டயத்தை தன்னுடைய வஸ்திரத்தின் மடிப்புகளுக்குள் ஒளித்து வைக்கமுடியும். மேலுமாக, ஏகூத் இடதுகைப் பழக்கமுள்ளவராக இருந்தபடியால், அவரால் வலதுபக்கத்தில் தன்னுடைய பட்டயத்தைத் தொங்கவிட்டுக் கொள்ள முடியும்—சாதாரணமாக ஒரு ஆயுதத்தை வைப்பதற்குரிய இடமாக அது இல்லை.—நியாயாதிபதிகள் 3:15, 16.
ஏகூத்தின் சூழ்ச்சியில் ஆபத்துக்கள் இல்லாமல் இல்லை. உதாரணமாக, ராஜாவின் பணிவிடைக்காரர்கள் ஏதாவது ஆயுதங்களை அவர் வைத்திருக்கிறாரா என்பதாக சோதனைப்போட்டால் அப்போது என்ன? அவர்கள் அவ்விதமாகச் செய்யாவிட்டாலும்கூட, நிச்சயமாகவே அவர்கள் தங்கள் ராஜாவை ஒரு இஸ்ரவேலனோடு தனித்திருக்கும்படியாக விட்டுவிடமாட்டார்கள்! ஆனால் அவர்கள் அவ்விதமாக அனுமதித்து எக்லோன் கொல்லப்படக்கூடுமென்றால், ஏகூத் எவ்வாறு தப்பித்துக்கொள்ள முடியும்? என்ன சம்பவித்தது என்பதை எக்லோனின் பணிவிடைக்காரர்கள் கண்டுபிடிப்பதற்கு முன்பாக அவர் எவ்வளவு தூரம் ஓடமுடியும்?
சந்தேகமின்றி ஏகூத் இப்படிப்பட்ட விஷயங்களைக் குறித்து சிந்தித்து, ஒருவேளை மோசமான விளைவுகள் பலவற்றைக் கற்பனைசெய்து பார்த்திருக்கலாம். இருந்தபோதிலும், அவர் தைரியத்தை வெளிப்படுத்துகிறவராய் யெகோவாவில் விசுவாசத்தைக் காண்பித்து தன்னுடைய திட்டத்தின்படி செயல்பட ஆரம்பித்தார்.
ஏகூத் எக்லோனைச் சந்திக்கிறார்
அடுத்த கப்பங்கட்டும் நாள் வந்துவிடுகிறது. ஏகூத்தும் அவருடைய மனுஷர்களும் ராஜாவின் அரண்மனைக்குள் பிரவேசித்தார்கள். சீக்கிரமாகவே, எக்லோன் ராஜாவுக்கு முன்பாக அவர்கள் நின்றுகொண்டிருந்தார்கள். ஆனால் தாக்குவதற்கு ஏகூத்துக்கு இன்னும் நேரம் வரவில்லை. கப்பங்கட்டிய பிறகு, ஏகூத் கப்பம் சுமந்து வந்தவர்களை அவர்களுடைய வழியே போகும்படியாக அனுப்பிவைத்தார்.—நியாயாதிபதிகள் 3:17, 18.
ஏகூத் எக்லோனை தாக்குவதில் ஏன் தாமதித்தார்? அவர் பயந்துவிட்டாரா? இல்லவே இல்லை! தன்னுடைய திட்டத்தை நிறைவேற்ற, ஏகூத்துக்கு ராஜாவோடு தனிமையில் சந்திக்க வேண்டியிருந்தது—முதல் சந்திப்பில் அவருக்கு இதற்கு அனுமதி கிடைக்கவில்லை. மேலுமாக, ஏகூத் மிகவும் துரிதமாக தப்பியோடிவிடுவது அவசியமாக இருந்தது. கப்பம் சுமந்துவந்த முழு பரிவாரத்தோடு தப்புவதைவிட ஒரு மனிதன் தப்பியோடுவது மிகவும் சுலபமாக இருக்கும். ஆகவே, ஏகூத் வாய்ப்பான ஒரு சமயத்துக்காக காத்திருந்தார். எக்லோனை சிறிது நேரம் சந்தித்தது, அரண்மனையின் அமைப்போடு பழக்கமாவதற்கும் ராஜாவின் பாதுகாப்பு ஏற்பாடுகளின் அளவை விசாரித்தறிவதற்கும் அவருக்கு உதவியது.
‘கில்காலிலுள்ள சிலைகள் இருக்கும் இடத்தை’ அடைந்தப்பிறகு, ஏகூத் தன்னுடைய மனுஷர்களைவிட்டுவிட்டு எக்லோனின் அரண்மனைக்குத் திரும்பினார். சுமார் இரண்டு கிலோமீட்டர் நடைப்பயணம், ஏகூத்துக்கு தான் செய்யவிருப்பதைக் குறித்து சிந்திப்பதற்கும் யெகோவாவின் ஆசீர்வாதத்துக்காக ஜெபிப்பதற்கும் அவருக்கு சிறிது நேரத்தை அளித்தது.—நியாயாதிபதிகள் 3:19.
ஏகூத் திரும்பிவருகிறார்
ஏகூத் அரண்மனைக்குள் திரும்ப வரவேற்கப்பட்டிருக்க வேண்டும். ஒருவேளை சற்றுமுன்னர் அவர் அளித்திருந்த தாராளமான கப்பம் எக்லோனை கனிவாக இருக்கும்படியாகச் செய்திருக்கலாம். முதல் சந்திப்பு சிறிது நேரமே நீடித்திருந்தபோதிலும், ராஜாவோடு ஒரு பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள ஏகூத்துக்கு போதிய வாய்ப்பை அளித்திருந்தது. எப்படியிருந்தாலும், ஏகூத் எக்லோனின் முன்னிலையில் திரும்பவும் வந்துவிட்டார்.
“ராஜாவே, உம்மிடத்தில் சொல்லவேண்டிய இரகசியமான ஒரு வார்த்தை உண்டு,” என்பதாக ஏகூத் சொன்னார். அவர் இதுவரையாக தடையின்றி வந்ததே யெகோவா அவரை வழிநடத்திவருகிறார் என்பதற்கு அடையாளமாக இருந்தது. இருந்தபோதிலும் ஒரு பிரச்சினை இருந்தது. ஏகூத் கொண்டிருந்த அந்த “இரகசியமான ஒரு வார்த்தை” ராஜாவின் பணிவிடைக்காரர்களின் முன்னிலையில் பேசப்பட முடியாது. யெகோவா தலையிடப் போகிறார் என்றால், ஏகூத்துக்கு அந்த உதவி உடனடியாக தேவைப்பட்டது. “பொறு” என்பதாக ராஜா கட்டளையிட்டார். ‘இரகசியமான வார்த்தை’ பிறரால் கேட்கப்படுவதை எக்லோன் விரும்பாத காரணத்தால், அவன் தன் பணிவிடைக்காரர்களை அனுப்பிவிட்டான். ஏகூத்து எவ்வளவாக நிம்மதிப் பெருமூச்சு விட்டிருப்பார் என்பதைக் கற்பனைசெய்து பாருங்கள்!—நியாயாதிபதிகள் 3:19.
ஏகூத் எக்லோனிடம் வந்து, “உம்மிடத்தில் சொல்லவேண்டிய தேவவாக்கு எனக்கு உண்டு,” என்பதாக சொன்னபோது அவன் தன்னுடைய மேலறையில் உட்கார்ந்துகொண்டிருந்தான். ஏகூத் ‘தேவன்’ என்பதாக சொல்வதன் மூலம் காமோஸை குறிப்பிட்டுக்கொண்டிருந்தாரா? எக்லோன் அவ்விதமாக நினைத்திருக்கலாம். ஆவல் கொண்டவனாய், அவன் எதிர்பார்த்துக் கொண்டே தன்னுடைய சிங்காசனத்திலிருந்து எழுந்து நின்றான். தன்னைத் தாக்கவருவதாக ராஜா சந்தேகங்கொள்ளாத விதமாக ஏகூத் கவனமாக கிட்டே நெருங்கினார். பின்னர் துரிதமாக இயங்கி, “ஏகூத் தன் இடதுகையை நீட்டி, தன் வலதுபுறத்து இடுப்பிலே கட்டியிருந்த கத்தியை உருவி, அதை அவன் வயிற்றுக்குள் பாய்ச்சினார். அலகோடேகூடக் கைப்பிடியும் உள்ளே புகுந்தது; அவனுடைய வயிற்றிற்குள் போன கத்தியை இவர் இழுக்கக் கூடாதபடிக்கு, நிணம் அலகைச் சுற்றிக்கொண்டடைத்தது; அது பின்புறத்திலே புறப்பட்டது.”—நியாயாதிபதிகள் 3:20-22.
சிறிது தொலைவில் நடமாடிக்கொண்டிருந்த ராஜாவின் பணிவிடைக்காரர்கள் அங்கிருந்து அசையவில்லை. ஆனால் ஏகூத் இன்னும் ஆபத்தான நிலையில்தான் இருந்தார். எந்தக் கணத்திலும் எக்லோனின் வேலைக்காரர்கள் உள்ளே பாய்ந்து நுழைந்து கீழே விழுந்துகிடந்த தங்களுடைய ராஜாவின் சடலத்தைக் கண்டுப்பிடித்துவிடலாம். ஏகூத் வேகமாக வெளியேறிவிட வேண்டும்! கதவுகளைத் சாத்திப் பூட்டிப்போட்டு அவர் மேலறையின் மாடத்தின் வழியாக தப்பியோடினார்.—நியாயாதிபதிகள் 3:23, 24அ.
கண்டுபிடிப்பும் தோல்வியும்
சீக்கிரத்தில் எக்லோனின் வேலைக்காரர்கள் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை அறிய ஆவலுள்ளவர்களானார்கள். இருந்தபோதிலும், ராஜாவின் இரகசியமான அந்தச் சந்திப்பில் குறுக்கிடுவதன் மூலம் அவருடைய கோபத்துக்கு ஆளாக அவர்கள் துணியவில்லை. பின்னர் மேலறையின் கதவுகள் பூட்டப்பட்டிருப்பதை அவர்கள் கவனித்தார்கள். “அவர் அந்தக் குளிர்ச்சியான அறையிலே மலஜலாதிக்கிருக்கிறாராக்கும்,” என்பதாக அவர்கள் நினைத்தார்கள். இருந்தபோதிலும் நேரம் செல்லச் செல்ல, அவர்களுடைய வெறும் ஆவல் கவலையாக மாறியது. எக்லோனின் பணிவிடைக்காரர்களால் இனிமேலும் காத்திருக்க முடியவில்லை. “ஆகையால் ஒரு திறவுகோலை எடுத்துத் [மேலறையின் கதவுகளைத்] திறந்தார்கள்; இதோ, அவர்கள் ஆண்டவன் தரையிலே செத்துக்கிடந்தான்.”—நியாயாதிபதிகள் 3:24ஆ, 25.
இதற்கிடையில், ஏகூத் தப்பிவிட்டிருந்தார். கில்காலில் சிலைகளுள்ள இடத்தைக் கடந்து, கடைசியில் எப்பிராயீமின் மலைப்பிரதேசமாகிய சேயிராத்தைச் சென்றடைந்தார். ஏகூத் இஸ்ரவேல் புத்திரரை ஒன்றுக்கூட்டி மோவாபியருக்கு எதிராக செய்த தாக்குதலில் அவர்களை அவர் வழிநடத்தினார். பதிவு “அக்காலத்திலே மோவாபியரில் ஏறக்குறையப் பதினாயிரம்பேரை வெட்டினார்கள்; அவர்களெல்லாரும் புஷ்டியுள்ளவர்களும் பராக்கிரமசாலிகளுமாயிருந்தார்கள்; அவர்களில் ஒருவனும் தப்பவில்லை,” என்பதாகச் சொல்கிறது. மோவாப் கீழ்ப்படுத்தப்பட்ட பின்பு, இஸ்ரவேல் தேசம் எண்பது வருஷம் அமைதலாயிருந்தது.—நியாயாதிபதிகள் 3:26-30.
ஏகூத்தின் முன்மாதிரியிலிருந்து கற்றுக்கொள்ளுதல்
கடவுள்மீது கொண்டிருந்த விசுவாசம் ஏகூத்தை தூண்டி இயக்கியது. எபிரெயர் 11-ஆம் அதிகாரம் ‘விசுவாசத்தினாலே ராஜ்யங்களை ஜெயித்து, . . . யுத்தத்தில் வல்லவர்களாகி அந்நியருடைய சேனைகளை முறியடித்த’ மனிதர்களில் ஒருவராக இவரை திட்டவட்டமாக குறிப்பிடுவது இல்லை. (எபிரெயர் 11:33, 34) இருந்தபோதிலும், ஏகூத் விசுவாசத்தோடு செயல்பட்டு இஸ்ரவேலரை எக்லோன் ராஜாவின் கொடுங்காலாட்சியிலிருந்து விடுவித்தபோது யெகோவா அவருக்குத் துணையாக இருந்தார்.
தைரியம் ஏகூத்தின் குணங்களில் ஒன்றாக இருந்தது. சொல்லர்த்தமான ஒரு பட்டயத்தை திறம்பட உபயோகிப்பதற்கு அவர் தைரியமுள்ளவராக இருக்க வேண்டியிருந்தது. கடவுளுடைய தற்கால ஊழியர்களாக நாம் அப்படிப்பட்ட ஒரு பட்டயத்தை எடுப்பதில்லை. (ஏசாயா 2:4; மத்தேயு 26:52) என்றபோதிலும், நாம் கடவுளுடைய வார்த்தையாகிய ‘ஆவியின் பட்டயத்தை’ நிச்சயமாகவே பயன்படுத்துகிறோம். (எபேசியர் 6:17) ஏகூத் தன்னுடைய ஆயுதத்தைப் பயன்படுத்துவதில் தேர்ச்சிப் பெற்றவராக இருந்தார். நாமும்கூட ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கிக்கையில் கடவுளுடைய வார்த்தையைப் பயன்படுத்துவதில் திறம்பட்டவர்களாக இருப்பது அவசியமாகும். (மத்தேயு 24:14) தனிப்பட்ட பைபிள் படிப்பு, கிறிஸ்தவ கூட்டங்களில் ஒழுங்காக ஆஜராயிருத்தல், ஊழியத்தில் வைராக்கியமாக பங்குகொள்ளுதல், நம்முடைய பரம தந்தையின்மேல் ஜெபசிந்தையோடு சார்ந்திருத்தல் ஆகியவை உண்மையில் விசுவாசமும் தைரியமுமுள்ள மனிதராக இருந்த ஏகூத் வெளிக்காட்டிய குணங்களைப் பின்பற்றுவதற்கு நமக்கு உதவிசெய்யும்.
[அடிக்குறிப்புகள்]
a தோப்பு விக்கிரகங்கள் இலிங்க சின்னங்களாக இருந்திருக்க வேண்டும். இவை படுமோசமான பாலியல் சிற்றின்ப ஈடுபாடோடு சம்பந்தப்பட்டிருந்தன.—1 இராஜாக்கள் 14:22-24.
b காமோஸ் மோவாபியரின் முக்கிய தெய்வமாக இருந்தது. (எண்ணாகமம் 21:29; எரேமியா 48:46) குறைந்தபட்சம் சில சந்தர்ப்பங்களிலாவது, ஒருவேளை இந்த அருவருப்பான பொய் கடவுளுக்கு பிள்ளைகள் பலியிடப்பட்டார்கள்.—2 இராஜாக்கள் 3:26, 27.
[பக்கம் 31-ன் படம்]
ஏகூத்தும் அவருடைய மனிதர்களும் எக்லோன் ராஜாவுக்கு கப்பங்கட்டினர்
[படத்திற்கான நன்றி]
பின்வருவதிலிருந்து எடுக்கப்பட்ட நகல்: Illustrirte Pracht - Bibel/Heilige Schrift des Alten und Neuen Testaments, nach der deutschen Uebersetzung D. Martin Luther’s