ஒடுக்குகிறவர்களுடைய நுகத்தை ஏகூத் முறிக்கிறார்
தைரியத்திற்கும் உத்திகளை கையாளுவதற்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் ஓர் உண்மை சம்பவம் இது. சுமார் 3,000 வருடங்களுக்கு முன்னர் இது நிகழ்ந்தது. இதைப் பற்றிய வேதாகம பதிவு பின்வரும் வார்த்தைகளுடன் துவங்குகிறது: “இஸ்ரவேல் புத்திரர் மறுபடியும் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தார்கள்; அவர்கள் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தபடியால், கர்த்தர் எக்லோன் என்னும் மோவாபின் ராஜாவை இஸ்ரவேலுக்கு விரோதமாய்ப் பலக்கப் பண்ணினார். அவன் அம்மோன் புத்திரரையும் அமலேக்கியரையும் கூட்டிக்கொண்டு வந்து, இஸ்ரவேலை முறிய அடித்தான்; பேரீச்ச மரங்களின் பட்டணத்தையும் பிடித்தான். இப்படியே இஸ்ரவேல் புத்திரர் எக்லோன் என்னும் மோவாபின் ராஜாவைப் பதினெட்டு வருஷம் சேவித்தார்கள்.”—நியாயாதிபதிகள் 3:12-14.
மோவாபியரின் பிராந்தியம் யோர்தான் நதிக்கும் சவக் கடலுக்கும் கிழக்கே இருக்கிறது. ஆனால் அவர்கள் யோர்தான் நதியைக் கடந்து எரிகோவை, அதாவது ‘பேரீச்சமரங்களின் பட்டணத்தை’ சுற்றியிருந்த பகுதியை ஆக்கிரமித்து, இஸ்ரவேலர் மீது ஆதிக்கம் செலுத்தி வந்தார்கள். (உபாகமம் 34:3) ‘மிகவும் பருத்த மனிதனாக’ விளங்கிய மோவாபிய ராஜாவான எக்லோன் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக இஸ்ரவேலரை ஒடுக்கி, அவர்களிடமிருந்து அநியாயமாக கப்பம் வாங்கி வந்தான். (நியாயாதிபதிகள் [நீதித் தலைவர்கள்] 3:17, பொது மொழிபெயர்ப்பு) ஆயினும், அவன் விதித்த கப்பமே இந்தக் கொடுங்கோலனை ஒழிக்க இஸ்ரவேலருக்கு ஒரு வாய்ப்பை அருளியது.
அந்தப் பதிவு இவ்வாறு கூறுகிறது: “இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டபோது, கர்த்தர் அவர்களுக்குப் பென்யமீன் கோத்திரத்தானாகிய கேராவின் மகன் ஏகூத் என்னும் இரட்சகனை எழும்பப் பண்ணினார்; அவன் இடதுகைப் பழக்கமுள்ளவனாயிருந்தான்; அவன் கையிலே இஸ்ரவேல் புத்திரர் மோவாபின் ராஜாவாகிய எக்லோனுக்குக் காணிக்கை அனுப்பினார்கள்.” (நியாயாதிபதிகள் 3:15) கப்பம் கட்ட அனுப்புவதற்கு ஏகூத் தேர்ந்தெடுக்கப்படும்படி யெகோவா செய்திருக்க வேண்டும். இதற்கு முன்னர் எப்போதாவது இந்த வேலையை அவர் செய்தாரா என்பது குறிப்பிடப்படவில்லை. என்றாலும், எக்லோனின் அரண்மனையையும் அங்கு என்ன எதிர்பார்க்கலாம் என்பதையும் ஏகூத் ஓரளவு அறிந்திருந்திருக்கலாம் என்பது, அந்த அரசனை சந்திக்க ஏகூத் கவனமாக ஆயத்தமான விதமும் அவன் பயன்படுத்திய உத்திகளும் தெரிவிக்கின்றன. இவையனைத்திலும் முக்கியமான விஷயம் என்னவென்றால், ஏகூத் இடதுகை பழக்கமுடையவன் என்பதே.
ஊனமுற்றவனா அல்லது போர்வீரனா?
சொல்லர்த்தமாக, ‘இடதுகைப் பழக்கம்’ என்றாலே ‘வலதுகை அடைக்கப்பட்டதை, ஊனமடைந்ததை, அதாவது கட்டப்பட்டதை’ குறிக்கிறது. இதனால் ஏகூத் முடமானவன், ஒருவேளை வலதுகை சூம்பியவன் என அர்த்தமாகுமா? பென்யமீன் கோத்திரத்திலிருந்து ‘தெரிந்துகொள்ளப்பட்ட இடதுகை வாக்கான எழுநூறு பேரைப்’ பற்றி பைபிள் சொல்வதை சிந்தித்துப் பாருங்கள். “அவர்கள் அனைவரும் ஒரு மயிரிழையும் தப்பாதபடிக்குக் கவண்கல் எறிவார்கள்” என நியாயாதிபதிகள் 20:16 கூறுகிறது. போரில் திறமைசாலிகளாக இருந்ததால் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம். ‘இடதுகைப் பழக்கமுள்ளவர்’ என்பது ‘வலக்கையைப் போல் இடக்கையை பயன்படுத்துகிறவரை,’ அதாவது இரு கைகளையும் நன்கு பயன்படுத்தத் தெரிந்தவரை குறிக்கிறது என பைபிள் அறிஞர்கள் சிலர் கூறுகிறார்கள்.—நியாயாதிபதிகள் [நீதிபதிகள் ஆகமம்] 3:15, தமிழ் கத்தோலிக்க பைபிள்.
சொல்லப்போனால், இடதுகைப் பழக்கத்திற்கு பென்யமீன் கோத்திரத்தார் பெயர்பெற்றவர்களாக விளங்கினர். “யுத்தத்திற்கு ஒத்தாசை செய்த வில் வீரரும், கவண்கல் எறிகிறதற்கும் வில்லினால் அம்பு எய்கிறதற்கும் வலது இடதுகை வாட்டமான பராக்கிரமசாலிகளான மற்ற மனுஷரு”மானவர்கள் பென்யமீன் கோத்திரத்தில் இருந்ததைப் பற்றி 1 நாளாகமம் 12:1, 2 கூறுகிறது. “சிறுபிள்ளைகளுடைய வலது கைகளைக் கட்டிப்போட்டு இடது கையைப் பயன்படுத்துவதற்குப் பயிற்சி அளிப்பதன் மூலம்” இத்திறமை வளர்க்கப்பட்டிருக்கலாம் என ஓர் ஏடு சொல்கிறது. இஸ்ரவேலரின் எதிரிகள் பொதுவாக வலதுகை பழக்கமுடைய போர்வீரர்களை சந்திக்கவே பயிற்றுவிக்கப்பட்டிருப்பார்கள். எதிர்பாராமல் இடதுகை பழக்கமுடைய ஒரு படைவீரனை சந்திக்க நேர்ந்தால், அந்த எதிரிகளின் பயிற்சியெல்லாம் பயனற்றதாக ஆகிவிடும்.
ராஜாவுக்கு “இரகசியமான ஒரு வார்த்தை”
முதலில் ஏகூத் தனக்காக “வாள் ஒன்றைச் செய்துகொண்டார்”—அது தனது ஆடைகளுக்குள் மறைத்து வைப்பதற்கேற்ற இருபுறமும் கருக்குள்ள சிறிய வாள். தான் சோதனை செய்யப்படலாம் என்பதை அவர் எதிர்பார்த்திருக்கலாம். பொதுவாக வாள்களை உடம்பின் இடது பக்கத்தில் அணிவது வழக்கம், அதனால் வலதுகை பழக்கமுடையவர்கள் சட்டென்று அவற்றை எடுக்க முடியும். ஏகூத் இடதுகை பழக்கமுடையவராக இருந்ததால், தனது ஆயுதத்தை “தம் ஆடைகளுக்கு அடியில் வலது தொடையில் கட்டி வைத்துக்கொண்டார்;” பொதுவாக ராஜாவின் சேவகர்கள் உடலின் அந்தப் பகுதியை சோதனை செய்ய மாட்டார்கள். ஆகவே, எந்தத் தடங்கலுமின்றி ‘மோவாபின் மன்னன் எக்லோனுக்குக் கப்பம் செலுத்த’ அரண்மனைக்குள் நுழைய முடிந்தது.—நியாயாதிபதிகள் 3:16, 17, பொ.மொ.
எக்லோனின் அரண்மனையில் ஆரம்பத்தில் நிகழ்ந்த சம்பவங்களைப் பற்றிய விவரங்கள் கொடுக்கப்படவில்லை. ஏகூத் “கப்பத்தைச் செலுத்தி முடித்ததும், கப்பப் பொருள்களைச் சுமந்துவந்த மக்களை அவர் அனுப்பிவிட்டார்” என்று மட்டுமே பைபிள் சொல்கிறது. (நியாயாதிபதிகள் 3:18, பொ.மொ.) ஏகூத் அந்தக் கப்பத்தைச் செலுத்தியபின், எக்லோனின் இருப்பிடத்திலிருந்து பாதுகாப்பான தூரம் வரை கப்பத்தை சுமந்துவந்த ஆட்களுடன் சென்று அவர்களை அனுப்பிவிட்டு, திரும்பவும் எக்லோன் தங்கியிருந்த இடத்திற்கு வந்தார். ஏன்? அவருடன் வந்த ஆட்கள் அவருக்கு பாதுகாப்புக்காக வந்தார்களா, அல்லது கெளரவத்திற்காக வந்தார்களா, அல்லது ஒருவேளை வெறுமனே அந்தக் கப்பத்தை சுமப்பதற்காக வந்தார்களா? தனது திட்டத்தை நிறைவேற்றும் முன் அவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு சென்றுவிடும்படி அவர் விரும்பினாரா? அவருடைய நோக்கம் எதுவாக இருந்திருந்தாலும்சரி, ஏகூத் தனியாக தைரியத்துடன் சென்றார்.
“[ஏகூத்] கில்காலிலுள்ள சிலைகள் இருக்கும் இடத்திலிருந்து திரும்பிவந்து: ராஜாவே, உம்மிடத்தில் சொல்ல வேண்டிய இரகசியமான ஒரு வார்த்தை உண்டு என்றான்.” எக்லோன் இருந்த இடம்வரை எப்படி நுழைந்து வந்தார் என்பது பைபிளில் விளக்கப்படவில்லை. சேவகர்கள் சந்தேகப்பட்டிருக்க வேண்டாமா? ஒரேவொரு இஸ்ரவேலன் வந்ததால் தங்களுடைய பிரபுவுக்கு எந்த ஆபத்துமில்லை என அவர்கள் நினைத்தார்களா? ஏகூத் தனியாக வந்ததால் தனது நாட்டவரை காட்டிக்கொடுக்க வந்திருக்கலாமென்ற எண்ணத்தை உருவாக்கியதா? எதுவாக இருந்தாலும்சரி, ராஜாவை தனியாக சந்திப்பதற்கு விரும்பினார், அந்த வாய்ப்பும் கிடைத்தது.—நியாயாதிபதிகள் 3:19.
கடவுளுடைய ஏவுதலால் எழுதப்பட்ட பதிவு தொடர்கிறது: “ஏகூத் அவன் [எக்லோன்] கிட்டே போனான்; அவனோ தனக்குத் தனிப்புற இருந்த குளிர்ச்சியான அறை வீட்டில் உட்கார்ந்திருந்தான்; அப்பொழுது ஏகூத்: உம்மிடத்தில் சொல்ல வேண்டிய தேவ வாக்கு எனக்கு உண்டு என்றான்.” கடவுளிடமிருந்து வந்த வாய்மொழி செய்தியை ஏகூத் குறிப்பிடவில்லை. எப்படியாவது தனது வாளை உருவி எக்லோனை தீர்த்துவிட வேண்டுமென்பதே ஏகூத்தின் மனதிலிருந்தது. ஒருவேளை தன்னுடைய காமோஸ் தெய்வத்திடமிருந்து ஏதாவது செய்தி கிடைக்குமென எதிர்பார்த்து, ராஜா “தன் ஆசனத்திலிருந்து எழுந்திருந்தான்.” உடனே ஏகூத் மின்னலென பாய்ந்து, தன் வாளை எடுத்து, அதை எக்லோன் வயிற்றிற்குள் பாய்ச்சினான். அந்த வாள் கைப்பிடியில் குறுக்குத்துண்டு இல்லாதிருந்ததாக தெரிகிறது. ஆகவே, “அலகோடேகூடக் கைப்பிடியும் உள்ளே புகுந்தது; . . . நிணம் அலகைச் சுற்றிக் கொண்டடைத்தது; மலஜலம் வெளிப்பட்டது.” இது அந்தக் காயத்தின் வழியாகவோ அல்லது எக்லோனின் குடல்களிலிருந்தோ வந்திருக்கலாம்.—நியாயாதிபதிகள் 3:20-22; திருத்திய மொழிபெயர்ப்பு.
அரவமின்றி தப்பிச் செல்கிறார்
எக்லோனின் உடலில் செருகிக்கொண்ட தனது வாளை உருவுவதற்கு நேரம் செலவழித்துக் கொண்டிருக்காமல், “ஏகூத் [“காற்றுத் துவாரம் வழியாக,” NW] வெளியே கொலுக்கூடத்திற்கு வந்து மேல் அறையின் கதவைச் சாத்திப் பூட்டிப்போட்டு போய்விட்டான். அவன் போன பின்பு ராஜாவின் ஆட்கள் வந்து பார்த்தார்கள்; இதோ, மேல் அறையின் கதவு பூட்டியிருந்தது; அவர் அந்தக் குளிர்ச்சியான அறையிலே காலைக்கடன் கழிக்கிறாராக்கும் என்றிருந்தார்கள்.”—நியாயாதிபதிகள் 3:23, 24, தி.மொ.
ஏகூத் வெளியே வந்த அந்த ‘காற்றுத் துவாரம்’ என்பது எது? “[இந்த எபிரெயு வார்த்தையின்] சரியான அர்த்தம் என்ன என்பது தெரியவில்லை, ஆனால் அது “‘மண்டபம்,’ ‘வீட்டின் முன்கூடம்’ என கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று ஓர் ஏடு கூறுகிறது. கதவுகளை உள்ளே தாழ்ப்பாளிட்டு மற்றொரு வழியாக ஏகூத் வெளியே வந்தாரா? அல்லது செத்துக்கிடந்த ராஜாவிடமிருந்து சாவியை எடுத்து வந்து வெளியே கதவுகளைப் பூட்டினாரா? பிறகு ஒன்றும் நடக்காதது போல மெதுவாக வெளியே வந்து சேவகர்களைக் கடந்து சென்றாரா? வேதவசனங்கள் ஒன்றும் சொல்வதில்லை. ஆனால், ஏகூத் எந்த முறையைக் கையாண்டிருந்தாலும்சரி, அறைகள் பூட்டப்பட்டிருந்ததை எக்லோனின் ஊழியர்கள் பார்த்தபோது, அவர்களுக்கு உடனடியாக எந்த சந்தேகமும் வரவில்லை. ராஜா ‘காலைக்கடன் கழிக்கிறார்’ என்றுதான் நினைத்தார்கள்.
ராஜாவின் ஊழியர்கள் தாமதித்துக்கொண்டிருந்த சமயத்தில் ஏகூத் தப்பிச் சென்றுவிட்டார். பிற்பாடு அவர் தனது நாட்டவரை அழைத்து இவ்வாறு கூறினார்: “என்னைப் பின்தொடர்ந்து வாருங்கள்; கர்த்தர் உங்கள் பகைஞராகிய மோவாபியரை உங்கள் கைகளில் ஒப்புக் கொடுத்தார்.” போர் நடவடிக்கைகளுக்கு சாதகமான யோர்தான் நதித் துறைகளைப் பிடித்து, தலைவனின்றி தவிக்கும் மோவாபியர் தங்களுடைய தாயகத்திற்குத் தப்பிச் செல்லும் வழியை ஏகூத்தின் ஆட்கள் அடைத்துவிட்டனர். “அக்காலத்திலே மோவாபியரில் ஏறக்குறையப் பதினாயிரம் பேரை [இஸ்ரவேலர்] வெட்டினார்கள்; அவர்களெல்லாரும் புஷ்டியுள்ளவர்களும் பராக்கிரமசாலிகளுமாயிருந்தார்கள்; அவர்களில் ஒருவனும் தப்பவில்லை. இப்படியே அந்நாளிலே மோவாப் இஸ்ரவேலுடைய கையின்கீழ்த் தாழ்த்தப்பட்டது: அதனாலே தேசம் எண்பது வருஷம் அமைதலாயிருந்தது.”—நியாயாதிபதிகள் 3:25-30.
நாம் கற்றுக்கொள்ளும் பாடங்கள்
யெகோவாவின் பார்வையில் கெட்ட காரியங்களை நாம் செய்யும்போது மோசமான விளைவுகள் ஏற்படும் என்பதை ஏகூத்தின் நாட்களில் சம்பவித்தது நமக்கு கற்பிக்கிறது. மறுபட்சத்தில், மனந்திரும்பி அவரிடம் வருகிறவர்களுக்கு யெகோவா உதவுகிறார்.
ஏகூத்தின் திட்டங்கள் வெற்றி பெற்றன, அவருடைய சூழ்ச்சியாலும் அல்ல, விரோதியுடைய திறமையின்மையாலும் அல்ல. கடவுளுடைய நோக்கங்கள் நிறைவேற எந்தவொரு மனித சக்தியும் தேவையில்லை. ஏகூத் வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம், தமது ஜனங்களை விடுவிக்க அபார சக்தி படைத்த கடவுளுடைய சித்தத்திற்கு இசைவாக செயல்பட்டபோது அவருடைய துணை அவருக்கு இருந்ததால்தான். கடவுளே ஏகூத்தை எழும்பப் பண்ணினார், ஆகவே ‘கர்த்தர் அவர்களுக்கு [தம்முடைய மக்களுக்கு] நியாயாதிபதிகளை எழும்பப் பண்ணுகிறபோது, கர்த்தர் நியாயாதிபதியோடேகூட இருந்தார்.’—நியாயாதிபதிகள் 2:18; 3:15.