யெகோவாவே இரட்சிப்பவர்
‘நம்முடைய தேவன் இரட்சிப்பை அருளும் தேவன்.’—சங்கீதம் 68:20.
1, 2. (அ) யெகோவாவே இரட்சிப்பின் பிறப்பிடம் என ஏன் சொல்லலாம்? (ஆ) நீதிமொழிகள் 21:31-ஐ எப்படி விளக்குவீர்கள்?
யெகோவா தம்மை நேசிப்பவர்களை இரட்சிக்கிறார். (ஏசாயா 43:11) புகழ்பெற்ற இஸ்ரவேல் ராஜாவான தாவீது இதைத் தன் சொந்த அனுபவத்திலிருந்து புரிந்துகொண்டு, “யெகோவாவே இரட்சிப்பவர்” என மனதார பாடினார். (சங்கீதம் 3:8, NW) தீர்க்கதரிசியாகிய யோனாவும் ஒரு ராட்சத மீனின் வயிற்றுக்குள் சிக்கிக்கொண்டபோது இதே வார்த்தைகளைச் சொல்லித்தான் ஊக்கமாக ஜெபித்தார்.—யோனா 2:9, NW.
2 யெகோவாவே இரட்சிப்பின் பிறப்பிடம் என்பதை தாவீதின் மகனான சாலொமோனும் அறிந்திருந்தார். ஆகவேதான், “போர் நாளுக்கென்று குதிரையை ஆயத்தமாக வைத்திருந்தாலும் இரட்சிப்பு கிடைப்பது யெகோவாவினாலேயே” என்றார். (நீதிமொழிகள் 21:31, NW) அந்தக் காலங்களில் மத்திய கிழக்கில், எருதுகள் உழவுக்காகவும், கழுதைகள் பொதி சுமப்பதற்காகவும், கோவேறு கழுதைகள் சவாரிக்காகவும், குதிரைகளோ போருக்காகவும் பயன்படுத்தப்பட்டன. ஆனால் இஸ்ரவேலர்கள் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் நுழைவதற்குமுன் கடவுள் அவர்களுக்கு ஒரு கட்டளை கொடுத்தார். அதாவது, அரசராகப் போகிறவர் ‘தனக்கெனக் குதிரைகளை மிகுதியாக்கிக் கொள்ளக்கூடாது’ என்றார். (உபாகமம் 17:16, பொ.மொ.) யெகோவாவே தம் மக்களைக் காப்பாற்றப்போவதால் போர்க் குதிரைகள் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன!
3. என்ன கேள்விகளை நாம் சிந்திக்கவேண்டும்?
3 சர்வலோகப் பேரரசரான யெகோவா ‘இரட்சிப்பை அருளும் தேவன்.’ (சங்கீதம் 68:20) இது மனதிற்கு எத்தனை தெம்பூட்டுகிறது! சரி, இதுவரை யெகோவா எப்படியெல்லாம் ‘இரட்சிப்பு’ அளித்திருக்கிறார்? யாரையெல்லாம் காப்பாற்றியிருக்கிறார்?
யெகோவா நீதிநேர்மையுள்ளவர்களை இரட்சிக்கிறார்
4. தேவபக்தியுள்ளவர்களை யெகோவா இரட்சிக்கிறார் என நமக்கு எப்படித் தெரியும்?
4 நீதிநேர்மையோடு நடக்கும் கடவுளது ஊழியர்கள் எல்லாருக்கும் இதோ ஆறுதல்: “கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று இரட்சிக்கவும், அக்கிரமக்காரரை ஆக்கினைக்குள்ளானவர்களாக நியாயத்தீர்ப்பு நாளுக்கு வைக்கவும் அறிந்திருக்கிறார்.” இதற்கு ஆதாரம்? இதை எழுதிய அப்போஸ்தலனாகிய பேதுருவே சொல்கிறார்: கடவுள், ‘பூர்வ உலகத்தையும் தப்பவிடாமல், நீதியைப் பிரசங்கித்தவனாகிய நோவா முதலான எட்டுப்பேரைக் காப்பாற்றி, அவபக்தியுள்ளவர்கள் நிறைந்த உலகத்தின்மேல் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணினார்.’—2 பேதுரு 2:5, 9.
5. என்ன நிலைமைகளின் மத்தியில் நோவா ‘நீதியைப் பிரசங்கித்தார்’?
5 நோவாவின் காலத்திற்குச் செல்லலாம். பேய்கள் மனித உருவெடுத்து பூமியில் வாழ்கின்றன. கீழ்ப்படியாத இந்தத் தூதர்களுக்குப் பிறந்த இராட்சதர்கள் மக்களை ஆட்டிப்படைக்கின்றனர். ‘பூமி கொடுமையினால் நிறைந்திருக்கிறது.’ (ஆதியாகமம் 6:1-12) ஆனாலும் நோவா எதற்கும் மசிவதாய் இல்லை. யெகோவாவை தொடர்ந்து சேவித்து, ‘நீதியைப் பிரசங்கிக்கிறார்.’ அவரும் அவரது மனைவி பிள்ளைகளும் ஒரு பேழையைக் கட்டுகிறார்கள். பொல்லாதவர்களின் அழிவை கண்கூடாக பார்க்கப்போவதாய் நம்புகிறார்கள். நோவா விசுவாசத்தால் உலகை கண்டனம் செய்கிறார். (எபிரெயர் 11:7) இன்றும் இதே நிலைமைதான். இப்பொல்லாத உலகின் ஆயுள் முடியப்போகிறது. (மத்தேயு 24:37-39; 2 தீமோத்தேயு 3:1-5) அப்படியென்றால் நீங்களும் நோவாவைப்போல் நீதியைப் பிரசங்கித்து விசுவாசத்தைக் காட்டுவீர்களா? யெகோவாவின் இரட்சிப்பிற்காக காத்திருக்கையில் மற்றவர்களோடு சேர்ந்து அவரை சேவிப்பீர்களா?
6. யெகோவா நீதிநேர்மையுள்ளவர்களை இரட்சிக்கிறார் என்பதை 2 பேதுரு 2:7, 8 எவ்வாறு நிரூபிக்கிறது?
6 யெகோவா நீதிநேர்மையுள்ளவர்களைக் காப்பாற்றுகிறார் என்பதற்கு பேதுரு இன்னுமொரு அத்தாட்சியைத் தருகிறார். ‘அக்கிரமக்காரருக்குள் வாசமாயிருக்கையில் அவர்களுடைய காமவிகார நடக்கையால் வருத்தப்பட்டு [“மனம் வெதும்பி,” NW]; நாள்தோறும் அவர்களுடைய அக்கிரமக்கிரியைகளைக் கண்டு கேட்டு நீதியுள்ள தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்ட நீதிமானாகிய லோத்தை கடவுள் இரட்சித்தார்’ என சொல்கிறார். (2 பேதுரு 2:7, 8; ஆதியாகமம் 19:1-29) இந்தக் கடைசி காலத்தில் கோடிக்கணக்கானோர் ஒழுக்கங்கெட்ட காரியங்களில் ஊறிப்போயிருக்கிறார்கள். லோத்துவைப் போல், இவர்களது ‘காமவிகார நடக்கையைப்’ பார்த்து நீங்களும் ‘மனம் வெதும்புகிறீர்களா’? அதோடு நீதிநேர்மையுடனும் நடந்தால் யெகோவா இந்தப் பொல்லாத உலகை அழிக்கையில் இரட்சிப்பு உங்கள் பக்கம்.
யெகோவா கொடுங்கோலர்களிடமிருந்து காப்பாற்றுகிறார்
7. எகிப்தில் யெகோவா இஸ்ரவேலர்களுக்குத் துணைநின்றது, அவர் எப்போதும் தம் மக்களை அடக்கி ஒடுக்குபவர்களிடமிருந்து காப்பாற்றுவார் என்பதை எப்படி நிரூபிக்கிறது?
7 இந்தப் பொல்லாத உலகத்தில் இருக்கும்வரை யெகோவாவின் மக்களுக்கு துன்புறுத்தலும் எதிரிகளின் ஒடுக்குதலும் கண்டிப்பாக இருக்கும். ஆனால் யெகோவா எப்படியும் இரட்சிப்பார் என ஆணித்தரமாக நம்பலாம். ஏனென்றால் ஒருகாலத்தில் ஒடுக்கப்பட்ட தம் மக்களை அவர் காப்பாற்றினார். இப்போது மோசேயின் காலத்திற்கு போகலாம். இஸ்ரவேலர்கள் எகிப்தியரால் அடக்கி ஒடுக்கப்படுகிறார்கள். அப்படி அவதிப்படுகிறவர்களில் நீங்களும் ஒருவர் என வைத்துக்கொள்ளுங்கள். (யாத்திராகமம் 1:1-14; 6:8) கடவுள் எகிப்தியர்களுக்கு வாதைமேல் வாதை கொண்டுவருகிறார். (யாத்திராகமம் 8:5–10:29) பத்தாவது கொடிய வாதை எகிப்தின் தலைப்பிள்ளைகளை கொன்றுவிடுகிறது; மனமுடைந்த பார்வோன் இஸ்ரவேலர்களை அனுப்பிவிடுகிறான். ஆனால் மறுபடியும் மனம்மாறி படையெடுத்துச் சென்று அவர்களை துரத்துகிறான். இருந்தாலும் விரைவில் அவனையும் அவன் ஆட்களையும் செங்கடல் விழுங்கிவிடுகிறது. (யாத்திராகமம் 14:23-28) மோசேயோடும் இஸ்ரவேலர்களோடும் சேர்ந்து இப்படி கடவுளைப் போற்றிப் பாடுகிறீர்கள்: “யெகோவா யுத்தவீரர்; யெகோவா என்பதே அவர் திருநாமம். பார்வோனின் இரதங்களையும் சைனியத்தையும் சமுத்திரத்திலே போட்டுவிட்டார்; அவனுடைய சிரேஷ்டமான வீரர் சிவந்த சமுத்திரத்தில் அமிழ்ந்துபோனார்கள். ஆழி அவர்களை மூடிக்கொண்டது; கல்லைப்போல ஆழங்களில் ஆழ்ந்துபோனார்கள்.” (யாத்திராகமம் 15:3-5, தி.மொ.) ஆம், அதேவிதமாய் இன்றும் கடவுளின் மக்களை ஒடுக்குபவர்களுக்கு பெரும் அழிவு காத்திருக்கிறது.
8, 9. ஒடுக்கப்படுபவர்களை யெகோவா இரட்சிக்கிறார் என்பதற்கு நியாயாதிபதிகள் புத்தகத்திலிருந்து ஓர் உதாரணம் சொல்லுங்கள்.
8 இஸ்ரவேலர்கள் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் காலடி வைத்தது முதற்கொண்டு நியாயாதிபதிகள் பல ஆண்டுகளுக்கு நீதிநேர்மையின் பாதுகாவலராய் இருந்தனர். சிலசமயம் அயல்நாட்டவரால் ஒடுக்கப்பட்டபோது கடவுள் உண்மையுள்ள நியாயாதிபதிகளைக் கொண்டு அவர்களை விடுவித்தார். அதேவிதமாய் ‘இறுகப்பிடித்து ஒடுக்குகிறவர்களினிமித்தம் தவிக்கும்’ உண்மையுள்ள ஊழியர்களான நம்மையும் யெகோவா காப்பாற்றுவார். (நியாயாதிபதிகள் 2:16-18; 3:9, 15) பைபிள் புத்தகமாகிய நியாயாதிபதிகள் இந்த உறுதியை நமக்குத் தருகிறது. கடவுள் தாம் நியமித்திருக்கும் நியாயாதிபதியான இயேசு கிறிஸ்துவின் மூலம் தரவிருக்கும் மாபெரும் இரட்சிப்பிற்கும் அது உத்தரவாதம் அளிக்கிறது.
9 இப்போது நியாயாதிபதியான பாராக்கின் காலத்திற்குப் போகலாமா? பொய் வணக்கத்தில் ஈடுபட்டதால் யெகோவா இஸ்ரவேலர்களை கைவிட்டுவிட்டார். இதனால் கானானிய ராஜாவான யாபீனின் கொடுங்கோல் ஆட்சியில் 20 வருடங்களாக தவிக்கின்றனர். மாபெரும் கானானிய படைத்தளபதிதான் சிசெரா. ஆனால், “இஸ்ரவேலில் நாற்பதாயிரம் பேர்களுள் எவரிடமும் கேடயமோ ஈட்டியோ இல்லை.” உண்மையில் தேசத்தில் இருப்பவர்களோ சுமார் நாற்பது லட்சம்பேர். (நியாயாதிபதிகள் 5:6-8, NW) இஸ்ரவேலர்கள் மனந்திரும்பி யெகோவாவிடம் மன்றாடுகிறார்கள். கடவுள் தீர்க்கதரிசினியாகிய தெபொராள் மூலம் வழிகாட்டுகிறார். அவர் சொன்னபடியே பாராக் 10,000 பேரை கூட்டிக்கொண்டு தாபோர் மலைக்குச் செல்கிறார். அந்த மகா உயர தாபோர் மலையின் பள்ளத்தாக்கில் எதிரிகளை வரவழைக்கிறார் யெகோவா. சிசெராவின் படைகளும் 900 ரதங்களும் திமுதிமுவென்று கீசோன் ஆற்றின் வறண்ட படுகைக்கு திரண்டு வருகின்றன. திடீரென வானம் பிய்த்துக்கொண்டு ஊற்ற, கீசோனில் வெள்ளம் கட்டுக்கடங்காமல் பெருக்கெடுத்து ஓடுகிறது. புயற்காற்று சுழற்றி சுழற்றி அடிக்க, பாராக்கும் அவருடைய படையும் எதிரியை எதிர்ப்பட தாபோர் மலையிலிருந்து இறங்குகின்றனர். இறங்கினவர்களுக்கு ஆச்சரியம் தாளவில்லை. யெகோவா வெகுண்டு எழுந்ததால் ஏற்பட்ட இயற்கை சீற்றத்தைக் கண்டு ஸ்தம்பித்துவிடுகின்றனர். உடனடியாக சுதாரித்துக்கொண்டு, நடுநடுங்கி ஓட ஆரம்பித்த கானானியர்களை வளைத்துப் பிடித்து கொன்றுபோடுகின்றனர். ஒருவனையும் மீதிவைக்கவில்லை. கடவுளை எதிர்த்து சண்டையிடும் கொடுங்கோலர்களுக்கு என்னே ஓர் எச்சரிக்கை பாடம்!—நியாயாதிபதிகள் 4:3-16; 5:19-22.
10. கடவுள் இன்றும் தம் ஊழியர்களை எல்லாவித ஒடுக்குதல்களிலிருந்தும் காப்பாற்றுவார் என ஏன் நம்பலாம்?
10 ஆபத்துக் காலங்களில் கடவுள் பயமுள்ள இஸ்ரவேலர்களுக்கு கைகொடுத்து உதவிய யெகோவா இன்றும் தம் ஊழியர்களை எல்லா எதிரிகளிடமிருந்தும் இரட்சிப்பார். (ஏசாயா 43:3; எரேமியா 14:8) கடவுள், தாவீதை ‘எல்லாச் சத்துருக்களின் கைக்கும் நீங்கலாக்கி விடுவித்தார்.’ (2 சாமுவேல் 22:1-3) ஆகவே யெகோவாவின் ஜனங்களாக நாம் ஒடுக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டாலும் திடங்கொள்ளலாம். ஏனெனில் அவரது மேசியானிய ராஜா நமக்கு விடுதலை தருவார். ஆம், அவர் “ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார். அவர்கள் உயிரைக் கொடுமையினின்றும் வன்முறையினின்றும் விடுவிப்பார்.” (சங்கீதம் 72:13, 14, பொ.மொ.) அந்த நாள் வெகு தூரம் இல்லை.
கடவுள் தம்மை நம்புவோரை இரட்சிக்கிறார்
11. யெகோவாமீது நம்பிக்கை வைப்பதில் இளம் தாவீது என்ன முன்மாதிரி வைக்கிறார்?
11 யெகோவாவின் இரட்சிப்பைக் காண தைரியமாக அவர்மேல் நம்பிக்கை வைக்கவேண்டும். யெகோவாவின் மேலிருந்த நம்பிக்கையால்தான் தாவீது இராட்சதனான கோலியாத்தை தைரியமாக எதிர்ப்பட்டார். அந்த பெலிஸ்த மாமிச மலைக்கு முன்னால் சித்திரக் குள்ளன்போல் நிற்கும் இளம் தாவீதின் வீராவேசப் பேச்சைக் கேளுங்கள்: “நீ பட்டயத்தோடும் ஈட்டியோடும் எறிவல்லயத்தோடும் என்னிடம் வருகிறாய்; நானோ நீ அவமானமாய்ப் பேசின இஸ்ரவேலருடைய அணிகளின் கடவுளாகிய சேனைகளின் யெகோவாவினுடைய திருநாமத்திலே உன்னிடம் வருகிறேன். இன்றையதினமே யெகோவா உன்னை என் கையில் ஒப்புக்கொடுப்பார்; நான் உன்னைக் கொன்று, உன் தலையை உன்னைவிட்டு வாங்கிப் பெலிஸ்தியர் பாளையத்துப் பிணங்களை இந்நாளில் ஆகாயத்துப் பறவைகளுக்கும் பூமியின் மிருகங்களுக்கும் கொடுப்பேன்; கடவுள் இஸ்ரவேலரோடே இருக்கிறார் என்று பூலோகத்தார் யாவரும் இதினால் அறிந்துகொள்வார்கள். யெகோவா இரட்சிப்பது பட்டயத்தினாலும் ஈட்டியினாலும் அல்ல என்று இந்த ஜனக்கூட்டமெல்லாம் அறிந்துகொள்ளும்; யுத்தம் யெகோவாவினுடையது.” பிறகென்ன, மலைபோல் நின்றவன் மரம்போல் சரிகிறான். தாவீது கோலியாத்தைக் கொல்லுகிறார். பெலிஸ்தர்கள் படுதோல்வி அடைகின்றனர். யெகோவா தம் மக்களைக் காப்பாற்றுகிறார் என்பதற்கு என்னே தெள்ளத்தெளிவான அத்தாட்சி!—1 சாமுவேல் 17:45-54.
12. தாவீதின் மாவீரன் எலெயாசாரின் முன்மாதிரியை நினைவில் வைப்பது ஏன் பிரயோஜனமுள்ளது?
12 நாம் துன்புறுத்தப்படும்போது “தைரியத்தை ஒன்றுதிரட்டி” கடவுளை முன்பிருந்ததைவிடவும் அதிகமாய் நம்பவேண்டும். (ஏசாயா 46:8-13, NW; நீதிமொழிகள் 3:5, 6) இப்போது பாஸ்தம்மீம் என்ற இடத்திற்குப் போகலாம். இஸ்ரவேலர்கள் பெலிஸ்தருக்கு அஞ்சி ஓடுகின்றனர். ஆனால் தாவீதின் மூன்று மாவீரர்களில் ஒருவரான எலெயாசாரோ அவர்களுக்குப் பயப்படுவதாய் தெரியவில்லை. வாற்கோதுமை நிறைந்த வயலில் தன்னந்தனியாக நின்று பெலிஸ்தரை வெட்டி வீழ்த்துகிறார். இவ்வாறு “யெகோவா இஸ்ரவேலர்களுக்கு மாபெரும் இரட்சிப்பைத் தருகிறார்.” (1 நாளாகமம் 11:12-14, NW; 2 சாமுவேல் 23:9, 10) தன்னந்தனியாக நின்று ஒரு படையையே வெல்லவேண்டும் என்று யாரும் நம்மிடம் கேட்கப்போவதில்லை. ஆனாலும் சிலசமயங்களில் நாம் தன்னந்தனியாக எதிரிகளை சமாளிக்கவேண்டியிருக்கலாம். அப்போது இரட்சிப்பை அருளும் தேவனாகிய யெகோவாவின்மீது ஜெபத்தில் சார்ந்திருப்போமா? மற்ற சகோதர சகோதரிகளை எதிரிகளிடம் காட்டிக்கொடுக்காமல் இருக்க அவர் உதவியை நாடுவோமா?
உத்தமத்தைக் காப்பவர்களையே யெகோவா இரட்சிக்கிறார்
13.இஸ்ரவேலின் பத்துக் கோத்திர ராஜ்யத்தில் கடவுளுக்கு உத்தமத்தைக் காத்துக்கொள்வது ஏன் கடினமாக இருந்தது?
13 உயிரே போனாலும் உத்தமத்தைக் காப்பதில் உறுதியாக இருந்தால் யெகோவா நம்மை இரட்சிப்பார். பூர்வ காலங்களில் கடவுளது மக்கள் பல விதமான சோதனைகளை எதிர்ப்பட்டார்கள். இஸ்ரவேலின் பத்து கோத்திர ராஜ்யத்தில் வாழ்ந்ததாக கற்பனை செய்துகொள்ளுங்கள். அங்கே என்னென்ன விதமான பிரச்சினைகளை எதிர்ப்பட்டிருப்பீர்கள்? ரெகொபெயாமின் முரட்டுத்தனத்தால் பத்து கோத்திரங்கள் தங்கள் ஆதரவை விலக்கிக்கொள்ள, ஒரு புதிய வட ராஜ்யம் உருவானது. (2 நாளாகமம் 10:16, 17; 11:13, 14) ஆட்சிபுரிந்த ராஜாக்களிலேயே சிறந்தவர் யெகூ. ஆனால் அவரும்கூட ‘கர்த்தரின் நியாயப்பிரமாணத்தின்படி தன் முழு இருதயத்தோடும் நடக்கவில்லை.’ (2 இராஜாக்கள் 10:30, 31) அதேசமயம் அந்தப் பத்துக்கோத்திர ராஜ்யத்தில் உத்தமத்தைக் காத்துக்கொண்டோரும் இருந்தனர். (1 இராஜாக்கள் 19:18) அவர்கள் கடவுளில் விசுவாசம் வைத்தார்கள்; கடவுளும் அவர்களோடு இருந்தார். உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டாலும் நீங்கள் தொடர்ந்து யெகோவாவிற்கு உத்தமர்களாக இருக்கிறீர்களா?
14. எசேக்கியா ராஜாவின் காலத்தில் யெகோவா எவ்வாறு தம் மக்களை இரட்சித்தார், ஏன் யூதாவை பாபிலோனியர் கைப்பற்றினர்?
14 கடவுளது சட்டங்களை புறக்கணித்ததால் வட ராஜ்யம் அழிவைச் சந்தித்தது. அதை அசீரியர்கள் பொ.ச.மு. 740-ல் கைப்பற்றியபோது, பத்துக் கோத்திரங்களைச் சேர்ந்த சிலர், யெகோவாவை அவரது ஆலயத்தில் சேவிக்க இரண்டு கோத்திர ராஜ்யமாகிய யூதாவுக்குத் தப்பி ஓடினர். தாவீதின் வம்சத்தைச் சேர்ந்த 19 ராஜாக்கள் யூதாவை ஆண்டார்கள். அவர்களில் ஆசா, யோசபாத், எசேக்கியா, யோசியா ஆகிய நால்வரின் பக்தியே ஈடிணையற்றதாய் இருந்தது. உத்தமரான எசேக்கியாவின் நாட்களில் அசீரியர்கள் பலத்த படையோடு யூதாவிற்கு எதிராக வந்தனர். எசேக்கியாவின் வேண்டுகோளுக்கு கடவுள் பதிலளித்தார். ஒரேவொரு தூதனை அனுப்பி 1,85,000 அசீரியர்களை ஒரே இரவில் கொன்று தம் வணக்கத்தாரை இரட்சித்தார்! (ஏசாயா 37:36-38) அதன்பிறகோ மக்கள் கடவுளது சட்டங்களைப் பின்பற்றாமல் அவரது தீர்க்கதரிசிகளின் எச்சரிக்கைகளை அசட்டை செய்ததால் யூதாவை பாபிலோனியர்கள் கைப்பற்றி அதன் தலைநகரான எருசலேமையும் ஆலயத்தையும் பொ.ச.மு. 607-ல் அழித்தனர்.
15. பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்ட யூதர்களுக்கு ஏன் சகிப்புத்தன்மை வேண்டியிருந்தது, கடைசியில் யெகோவா எவ்வாறு இரட்சிப்பை அளித்தார்?
15 நாடுகடத்தப்பட்ட யூதர்கள் பாபிலோனில் சுமார் 70 வருடங்கள் கஷ்டம் அனுபவிக்கையில் கடவுளுக்கு உத்தமத்தைக் காத்துக்கொள்ள சகிப்புத்தன்மை தேவைப்பட்டது. (சங்கீதம் 137:1-6) உத்தமத்தைக் காத்துக்கொண்டோரில் சிறந்த உதாரணம் தீர்க்கதரிசியாகிய தானியேல். (தானியேல் 1:1-7; 9:1-3) பெர்சிய ராஜாவான கோரேசு, யூதர்கள் தங்கள் தாயகத்திற்குத் திரும்பி ஆலயத்தைக் கட்ட பொ.ச.மு. 537-ல் அனுமதி வழங்கியபோது தானியேல் எவ்வளவாய் சந்தோஷப்பட்டிருப்பார் என்பதை கற்பனை செய்து பாருங்கள்! (எஸ்றா 1:1-4) தானியேலும் மற்றவர்களும் பலவருடங்களாக சகித்திருந்ததன் பலனாக பாபிலோனின் வீழ்ச்சியையும் யெகோவாவின் மக்களது இரட்சிப்பையும் கண்கூடாக பார்த்தனர். பொய் மத உலகப் பேரரசாகிய ‘மகா பாபிலோனின்’ அழிவைக் காண காத்திருக்கும் நாமும் சகிப்புத்தன்மையை வளர்த்துக்கொள்ள இது உதவுகிறது.—வெளிப்படுத்துதல் 18:1-5.
யெகோவா எப்போதும் தம் ஊழியர்களை இரட்சிக்கிறார்
16. எஸ்தர் ராணியின் காலத்தில் கடவுள் எவ்வாறு தம் மக்களை இரட்சித்தார்?
16 யெகோவா எப்போதும் தம் ஊழியர்களைக் காப்பாற்றுகிறார், ஏனெனில் அவர் பெயருக்கு அவர்கள் உண்மையுள்ளவர்களாக இருக்கிறார்கள். (1 சாமுவேல் 12:22; ஏசாயா 43:10-12) பொ.ச.மு. ஐந்தாம் நூற்றாண்டுக்கு வருவோம். எஸ்தர் ராணியின் காலம் இது. ஆமான், அகாஸ்வேரு ராஜாவின் (முதலாம் சஷ்டாவின்) பிரதம மந்திரி. யூதனான மொர்தெகாய் அவனுக்கு அடிபணிய மறுத்ததால் ஆத்திரமடைந்து அவனையும் பெர்சிய ராஜ்யமெங்குமுள்ள யூதர்களையும் கொல்ல சதித்திட்டமிடுகிறான். அவர்கள் அரசனது சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதில்லை என குற்றம்சாட்டி, அவர்களை அழிப்பவருக்கு பணம்தருவதாய் ஆசைமூட்டுகிறான். ஆகவே யூதர்களைப் பூண்டோடு அழிப்பதற்கான ஆணையில் முத்திரை பதிக்கும்படி ராஜா தன் மோதிரத்தைக் கழற்றிக்கொடுக்கிறார். எஸ்தர் தைரியமாக தான் யூத வம்சத்தைச்சேர்ந்தவள் என்பதைச் சொல்லி ஆமானின் சதித்திட்டத்தை வெட்டவெளிச்சமாக்குகிறாள். மொர்தெகாயுக்காக தயார்செய்யப்பட்ட அதே தூக்குமரத்தில் ஆமான் தூக்கிலிடப்படுகிறான். மொர்தெகாய் பிரதம மந்திரியாக்கப்படுகிறார். அந்த அதிகாரத்தால், யூதர்கள் தங்களைத் தற்காத்துக்கொள்வதற்கு அனுமதி வழங்குகிறார். யூதர்கள் எதிரிகளை வீழ்த்தி மாபெரும் வெற்றி பெறுகிறார்கள். (எஸ்தர் 3:1–9:19) இன்றும் தமக்குக் கீழ்ப்படியும் ஊழியர்களை யெகோவா இரட்சிப்பார் என்பதில் நம் நம்பிக்கை பலப்படுகிறதல்லவா?
17. யூதேயாவில் வாழ்ந்த முதல் நூற்றாண்டு யூத கிறிஸ்தவர்கள் எவ்வாறு கீழ்ப்படிதலினால் காப்பாற்றப்பட்டனர்?
17 கடவுள் தம் மக்களை காப்பாற்றுவதற்கான இன்னொரு காரணம், அவர்கள் தமக்கும் தம் குமாரனுக்கும் கீழ்ப்படிவதே. இப்போது முதல் நூற்றாண்டுக்கு வருவோம். நீங்களும் இயேசுவின் சீஷர்களில் ஒருவரென வைத்துக்கொள்வோம். அவர் சொல்கிறார்: ‘எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும்போது, அதின் அழிவு சமீபமாயிற்றென்று அறியுங்கள். அப்பொழுது யூதேயாவிலிருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகவேண்டும்.’ (லூக்கா 21:20-22) அவர் சொல்லி பல வருடங்கள் ஆகிவிட்டன. இது எப்போதுதான் நிறைவேறுமோ என யோசிக்கிறீர்கள். திடீரென பொ.ச. 66-ல் யூதர்கள் கலகம் செய்கின்றனர். செஸ்டியஸ் காலஸின் தலைமையில் வந்த ரோம படைகள் எருசலேமை முற்றுகையிட்டு ஆலயத்தின் மதிற்சுவர் வரையாக வந்துவிடுகின்றன. ஆனால் திடீரென ஏதோ அறியாத காரணத்திற்காக திரும்பிவிடுகின்றன. யூத கிறிஸ்தவர்கள் செய்யவேண்டியது என்ன? அவர்கள் எருசலேமிலிருந்தும் யூதேயாவிலிருந்தும் தப்பியோடியதாக எக்லிஸியாஸ்டிகல் ஹிஸ்ட்ரி (புத்தகம் III, அதிகாரம் V, 3)-ல் யூசிபியஸ் சொல்கிறார். இயேசுவின் தீர்க்கதரிசன எச்சரிக்கைக்கு கீழ்ப்படிந்ததால் அவர்கள் காப்பாற்றப்பட்டார்கள். இயேசுவின் ‘உடைமைகளுக்கெல்லாம்’ அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ‘உண்மையுள்ள ஊழியக்காரர்’ தரும் ஆவிக்குரிய வழிநடத்துதலுக்கு ஏற்ப நீங்களும் உடனடியாக செயல்படுகிறீர்களா?—லூக்கா 12:42-44, NW.
நித்திய ஜீவனுக்காக இரட்சிக்கப்படுதல்
18, 19. (அ) இயேசுவின் மரணத்தால் எவ்வித இரட்சிப்பு, யாருக்குக் கிடைக்கும்? (ஆ) அப்போஸ்தலனாகிய பவுல் எதைச் செய்ய தீர்மானமாயிருந்தார்?
18 யூதேயாவிலிருந்த கிறிஸ்தவர்கள் இயேசுவின் எச்சரிக்கைக்குக் கீழ்ப்படிந்ததால் உயிர்தப்பினர். ஆனால் இயேசுவின் மரணம், ‘எல்லா மனுஷரும்’ இரட்சிக்கப்பட்டு நித்திய ஜீவனைப் பெற வழிவகுக்கிறது. (1 தீமோத்தேயு 4:10) ஆதாம் பாவம் செய்து, தன் வாழ்க்கையை இழந்து, மனித இனத்தை பூண்டோடு பாவத்திலும் மரணத்திலும் தள்ளியபோது மீட்கும் பொருளுக்கு தேவை ஏற்பட்டது. (ரோமர் 5:12-19) மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படி செலுத்தப்பட்ட மிருகபலிகள் பாவத்தை முழுமையாக போக்கவில்லை. (எபிரெயர் 10:1-4) மரியாள் கர்ப்பமானது முதற்கொண்டு இயேசுவைப் பெற்றெடுத்தது வரை கடவுளுடைய பரிசுத்த ஆவி அவர்மீது ‘நிழலிட்டது.’ இவ்வாறு இயேசு மனித தகப்பனில்லாமல், எந்தப் பாவத்தையும் அபூரணத்தையும் சுதந்தரிக்காமல் பிறந்தார். (லூக்கா 1:35; யோவான் 1:29; 1 பேதுரு 1:18, 19) உத்தமத்தைக்காத்த பரிபூரண மனிதராய் இயேசு இறந்தார். இவ்வாறு மனிதவர்க்கத்தை பாவத்திலிருந்து மீட்டு விடுதலையளிக்க தம் சொந்த பரிபூரண உயிரையே கொடுத்தார். (எபிரெயர் 2:14, 15) ஆம், கிறிஸ்து ‘எல்லாரையும் மீட்கும்பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்தார்.’ (1 தீமோத்தேயு 2:5, 6) ஆனால் இரட்சிப்பிற்கான இந்த ஏற்பாட்டை எல்லாருமே ஏற்கமாட்டார்கள். அதில் விசுவாசம் வைப்பவர்களுக்கு மட்டுமே அதன் நன்மைகளை கடவுள் கொடுப்பார்.
19 பரலோகத்தில் மீட்கும்பொருளின் மதிப்பை கடவுளுக்குச் செலுத்துவதன் மூலம் கிறிஸ்து ஆதாமின் சந்ததியினரை மீட்டார். (எபிரெயர் 9:24) இதன் காரணமாய் இயேசுவின் மணவாட்டியாக, அபிஷேகம் செய்யப்பட்ட 1,44,000 பேர் பரலோகத்திற்கு உயிர்த்தெழுப்பப்படுகிறார்கள். (எபேசியர் 5:25-27; வெளிப்படுத்துதல் 14:3, 4; 21:9) மேலும், அவரது பலியை ஏற்றுக்கொண்டு பூமியில் நித்திய ஜீவனைப் பெறுபவர்களுக்கு அவர் “நித்திய பிதா” ஆகிறார். (ஏசாயா 9:6, 7; 1 யோவான் 2:1, 2) என்னே ஓர் அன்பான ஏற்பாடு! பவுல் அதற்குக் காண்பித்த போற்றுதல், கொரிந்து கிறிஸ்தவர்களுக்கு அவர் எழுதிய இரண்டாவது கடிதத்தில் தெளிவாய் தெரிகிறது. அடுத்த கட்டுரை இதை கலந்தாலோசிக்கும். நித்திய ஜீவனுக்காக இரட்சிக்கப்பட யெகோவா செய்திருக்கும் அருமையான ஏற்பாட்டை பிரயோஜனப்படுத்திக்கொள்ள பவுல் மற்றவர்களுக்கு உதவ தீர்மானமாயிருந்தார். இதை எதுவும் தடை செய்யாதபடியும் பார்த்துக்கொண்டார்.
எப்படி பதிலளிப்பீர்கள்?
◻ கடவுள் நீதிநேர்மையுள்ளவர்களை இரட்சிக்கிறார் என்பதற்கு என்ன வேதப்பூர்வ அத்தாட்சி இருக்கிறது?
◻ யெகோவா தம்மை நம்பி உத்தமத்தைக் காப்போரை இரட்சிக்கிறார் என நமக்கு எப்படித் தெரியும்?
◻ நித்திய ஜீவனுக்காக இரட்சிக்கப்படுவதற்கு கடவுள் என்ன ஏற்பாட்டை செய்திருக்கிறார்?
[பக்கம் 12-ன் படம்]
‘இரட்சிப்பை அருளும் தேவனாகிய’ யெகோவாவை தாவீது நம்பினார். நீங்கள் நம்புகிறீர்களா?
[பக்கம் 15-ன் படம்]
எஸ்தர் ராணியின் காலத்தில் கடவுள் தம் மக்களைக் காப்பாற்றியதுபோல எப்போதுமே காப்பாற்றுவார்