“அடக்கம் எங்கோ ஞானம் அங்கே”
“உன் கடவுளுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் [“அடக்கமாய்,” NW] நடக்கவேண்டுமெனக் கேட்பதேயல்லாமல் வேறே எதை யெகோவா உன்னிடம் கேட்கிறார்.”—மீகா 6:8, தி.மொ.
1, 2. அடக்கம் என்பது என்ன, அது எவ்வாறு அகந்தையிலிருந்து வித்தியாசப்படுகிறது?
பிரபலமான ஓர் அப்போஸ்தலர் மற்றவர்களின் கவனத்தை தன்னிடம் ஈர்க்க மறுத்துவிடுகிறார். தைரியமுள்ள இஸ்ரவேலின் ஒரு நியாயாதிபதி தன் தகப்பன் வீட்டில் மிகச் சிறியவரென தன்னைப் பற்றி குறிப்பிடுகிறார். எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் சர்வ அதிகாரமும் தமக்கு அளிக்கப்படவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறார். இந்த ஒவ்வொருவரும் அடக்கத்தை வெளிக்காட்டுகின்றனர்.
2 அகந்தைக்கு எதிரானது அடக்கம். அடக்கமுள்ளவர் தன் திறமைகளையும் மதிப்பையும் அளவுக்குமீறி மதிப்பிடமாட்டார்; அதனால் அவரிடம் போலி பெருமைக்கு இடமில்லை. அடக்கமுள்ளவர் தன் குறைநிறைகளை அறிந்திருப்பதனால் அகந்தை, வீண்பெருமை, அல்லது பேராசை போன்ற குணங்களைத் தன்னிடம் அண்டவிடமாட்டார். ஆகையால், மற்றவர்களின் உணர்ச்சிகளுக்கும் கருத்துகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து அவற்றை மதிக்கிறார்.
3. எந்த விதத்தில் “அடக்கம் எங்கோ ஞானம் அங்கே” என சொல்லலாம்?
3 “அடக்கம் எங்கோ ஞானம் அங்கே” என பைபிள் குறிப்பிடுவது பொருத்தமானதே. (நீதிமொழிகள் 11:2, NW) அடக்கமுள்ளவர் ஞானமுள்ளவர்; ஏனெனில், கடவுளுக்குப் பிரியமான வழியில் அவர் நடக்கிறார், அவமானத்தை ஏற்படுத்தும் அகந்தை மனப்பான்மையைத் தவிர்க்கிறார். (நீதிமொழிகள் 8:13; 1 பேதுரு 5:5) தாழ்மையுடன் இருப்பது ஞானமான போக்கு என்பதை கடவுளுடைய ஊழியர்களில் அநேகரது வாழ்க்கை நிரூபித்திருக்கிறது. முதல் பாராவில் குறிப்பிடப்பட்ட அந்த மூன்று நபர்களின் முன்மாதிரிகளை நாம் சிந்திப்போம்.
பவுல் —‘ஊழியக்காரனும்’ ‘உக்கிராணக்காரனும்’
4. என்ன விசேஷித்த சிலாக்கியங்களைப் பவுல் பெற்றிருந்தார்?
4 பூர்வ கிறிஸ்தவர்களுக்குள் பவுல் பிரபலமானவர். ஏனென்றால், அவர் ஊழியத்திற்காக கடல் மார்க்கமாகவும் தரை மார்க்கமாகவும் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் பயணம் செய்து எண்ணற்ற சபைகளை ஏற்படுத்தினார். அதுமட்டுமா, தரிசனங்களைக் காணவும், அந்நிய மொழிகளைப் பேசவும் யெகோவா பவுலுக்கு வரமளித்திருந்தார். (1 கொரிந்தியர் 14:18; 2 கொரிந்தியர் 12:1-5) மேலும் தற்போதைய கிறிஸ்தவ கிரேக்க வேதாகமங்களிலுள்ள 14 நிருபங்களை எழுதுவதற்கும் கடவுள் அவரை பயன்படுத்திக் கொண்டார். சந்தேகமின்றி மற்ற எல்லா அப்போஸ்தலர்களைக் காட்டிலும் அதிகத்தை பவுல் சாதித்தார் என்றே சொல்லலாம்.—1 கொரிந்தியர் 15:10.
5. தன் அடக்க குணத்தை பவுல் எப்படி வெளிக்காட்டினார்?
5 கிறிஸ்தவ ஊழியத்தை நிறைவேற்றுவதில் பவுல் முன்னணியில் இருந்தார். எனவே பிரபலமாக இருப்பதன் பெருமிதத்தோடு அதிகார மினுக்குடன் அவர் நடந்திருக்கலாம் என சிலர் யோசிக்கலாம். ஆனால் அதுதான் இல்லை. பவுல் அடக்கமே உருவாக இருந்தார். “நான் அப்போஸ்தலரெல்லாரிலும் சிறியவனாயிருக்கிறேன்; தேவனுடைய சபையைத் துன்பப்படுத்தினதினாலே, நான் அப்போஸ்தலனென்று பேர்பெறுவதற்கும் பாத்திரன் அல்ல” என்று தன்னைப் பற்றி அவர் குறிப்பிட்டார். (1 கொரிந்தியர் 15:9) ஒருகாலத்தில் அவர் கிறிஸ்தவர்களை துன்புறுத்தி வந்தார். ஆகவே கடவுளுடைய தயவினால் மட்டுமே அவருடன் நல்ல உறவை அனுபவிக்க முடிந்தது. அதுவே பெரிய விஷயம் எனும்போது விசேஷ சிலாக்கியங்கள் கிடைத்தது அதைவிட பெரிய விஷயம் என்பதை பவுல் ஒருபோதும் மறக்கவில்லை. (யோவான் 6:44; எபேசியர் 2:8) ஆகையால், ஊழியத்தில் அதிகத்தை சாதித்ததால் மற்றவர்களைப் பார்க்கிலும் தான் மேலானவர் என பவுல் நினைக்கவில்லை.—1 கொரிந்தியர் 9:16.
6. பவுல் கொரிந்தியரிடம் தொடர்புகொண்ட விதத்தில் எவ்வாறு தாழ்மையை வெளிக்காட்டினார்?
6 பவுலின் தாழ்மை, கொரிந்தியர்களிடம் அவர் தொடர்புகொண்ட விதத்தில் முக்கியமாய் தெரிய வருகிறது. அப்பொல்லோ, கேபா, பவுலையும்கூட சிலர் தங்கள் அபிமான கண்காணிகளாய் கருதினர். (1 கொரிந்தியர் 1:11-15) ஆனால் பவுல், கொரிந்தியரிடமிருந்து புகழை எதிர்பார்க்கவும் இல்லை, அவர்களுடைய போற்றுதலை சுயநலத்திற்காக பயன்படுத்திக்கொள்ளவும் இல்லை. அவர்களைச் சந்திக்கையில், ‘சிறந்த வசனிப்பும் சிறந்த ஞானமும்’ தனக்கிருப்பதாக பவுல் காட்டிக்கொள்ளவில்லை. மாறாக, பவுல் தன்னையும் தன் தோழர்களையும் குறித்து இவ்வாறு சொன்னார்: “எந்த மனிதனும் எங்களை கிறிஸ்துவின் ஊழியக்காரரென்றும் கடவுளுடைய இரகசியங்களின் உக்கிராணக்காரரென்றும் எண்ணிக்கொள்ளக்கடவன்.”a—1 கொரிந்தியர் 2:1-5; 4:1, தி.மொ.
7. அறிவுரை கொடுக்கையிலுங்கூட பவுல் எவ்வாறு தாழ்மையைக் காட்டினார்?
7 கண்டிப்புமிக்க அறிவுரையையும் வழிநடத்துதலையும் கொடுக்க வேண்டிய சமயங்களிலும் பவுல் தாழ்மையைக் காட்டினார். அப்போஸ்தலனுக்குரிய அதிகாரத்தினால் அல்ல “தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு” தன் உடன் கிறிஸ்தவர்களிடம் ‘அன்பினால்’ மன்றாடினார். (ரோமர் 12:1, 2; பிலேமோன் 8, 9) பவுல் ஏன் இவ்வாறு செய்தார்? ஏனெனில், அவர் தன் சகோதரர்களின் ‘விசுவாசத்திற்கு அதிகாரியாக’ அல்ல அவர்களது ‘உடன் ஊழியனாகவே’ தன்னைக் கருதினார். (2 கொரிந்தியர் 1:24) பவுல் தாழ்மையானவராக இருந்ததாலேயே முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ சபையினர் அவரை அதிகமாய் நேசித்தனர் என்பதில் சந்தேகமில்லை.—அப்போஸ்தலர் 20:36-38.
நம் உத்தரவாதங்களை அடக்கத்துடன் ஏற்றல்
8, 9. (அ) நம்மைப் பற்றி நமக்கே ஏன் அடக்கமான மனநிலை தேவை? (ஆ) சில பொறுப்புக்களை ஏற்றிருப்பவர்கள் எவ்வாறு தாழ்மையைக் காட்டலாம்?
8 இன்றைய கிறிஸ்தவர்கள் பின்பற்றுவதற்கு பவுல் சிறந்த முன்மாதிரி வைத்தார். எவ்வளவு முக்கிய பொறுப்புகளில் இருந்தாலும்சரி மற்றவர்களைவிட மேலானவர்களாக நம்மை கருதக்கூடாது. “ஒருவன், தான் ஒன்றுமில்லாதிருந்தும், தன்னை ஒரு பொருட்டென்று எண்ணினால், தன்னைத்தானே வஞ்சிக்கிறவனாவான்” என பவுல் எழுதினார். (கலாத்தியர் 6:3) ஏன்? ஏனெனில், ‘எல்லாரும் பாவஞ்செய்து, தேவ மகிமையற்று’ இருக்கிறோம். (ரோமர் 3:23; 5:12) ஆதாமின் சந்ததியாராக நாம் எல்லாரும் பாவத்தையும் மரணத்தையும் சொத்தாக பெற்றிருப்பதை மறக்கவே கூடாது. நமக்கு விசேஷித்த பொறுப்புகள் கிடைக்கையில் பாவமுள்ள தாழ்ந்த நிலையை மறந்து கர்வம் கொள்ளக்கூடாது. (பிரசங்கி 9:2) பவுலைப் போலவே நாமும் நம்மைப் பற்றி நினைக்க வேண்டும்; கடவுளுடைய தயவினால் மட்டுமே மனிதர்கள் அவருடன் நல்ல உறவை அனுபவிக்க முடிகையில் இந்த விசேஷித்த பொறுப்புகள் கிடைப்பதற்கு அதைவிட எவ்வளவு தயவு தேவை!—ரோமர் 3:12, 24.
9 இதை அடக்கமுள்ளவர் புரிந்துகொள்வார்; அவர் பெருமித கண்ணோட்டத்தில் தன் சிலாக்கியங்களைப் பார்ப்பதுமில்லை, தன் சாதனைகளைக் குறித்து பெருமையடித்துக் கொள்வதுமில்லை. (1 கொரிந்தியர் 4:7) அறிவுரையையோ வழிநடத்துதலையோ கொடுக்கையில் எஜமானரைப்போல் அல்ல, தானும் உடன் ஊழியன் என்பதை மனதில் வைத்து செயல்படுகிறார். சில வேலைகளில் திறம்பட்டு விளங்குகையில் உடன் விசுவாசிகளின் புகழ்ச்சியை நாடுவது அல்லது அவர்களுடைய புகழ்ச்சியை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வது நிச்சயமாக தவறு. (நீதிமொழிகள் 25:27; மத்தேயு 6:2-4) மற்றவர்களின் மனமுவந்த பாராட்டு மதிப்புமிக்கது. அவ்வாறு பாராட்டு கிடைக்கையில், நம்மைக் குறித்து எண்ண வேண்டியதற்கு மிஞ்சி எண்ணக்கூடாது.—நீதிமொழிகள் 27:2; ரோமர் 12:3.
10. சபைகளில், இருக்கும் இடம் தெரியாமல் வந்து போகும் சிலர், எப்படி உண்மையில் “விசுவாசத்தில் ஐசுவரியவான்களாக” இருக்கலாம் என்பதை விளக்குங்கள்.
10 நம்மிடம் சில பொறுப்புகள் ஒப்படைக்கப்படுகையில், எல்லாருடைய கவனத்தையும் நம்மிடம் ஈர்க்காமலிருக்கவும், சபையின் வளர்ச்சிக்கு நம்முடைய முயற்சிகளும் திறமைகளுமே காரணம் என்ற எண்ணத்தை உண்டுபண்ணாதிருக்கவும் அடக்கமே நமக்கு உதவும். உதாரணத்திற்கு, போதிப்பது நமக்கு கைவந்த கலை என வைத்துக்கொள்வோம். (எபேசியர் 4:12, 13) சபையில் மிகச் சிறந்த பாடங்களை பேச்சுக்களின் வாயிலாக மட்டுமே நாம் கற்பதில்லை என்பதை தாழ்மை இருந்தால் புரிந்துகொள்வோம். உதாரணமாக, சின்னஞ்சிறுசுகளை உடைய ஒற்றைப் பெற்றோர் தவறாமல் கூட்டத்திற்கு வருவதைப் பார்க்கையில் நீங்கள் உற்சாகத்தைப் பெறவில்லையா? அல்லது, தான் எதற்கும் தகுதியற்றவர் என ஓயாமல் வருந்தும் மனச்சோர்வுற்ற ஒருவர் தவறாமல் கூட்டங்களில் கலந்துகொள்கையில் நீங்கள் ஊக்குவிக்கப்படவில்லையா? அல்லது பள்ளியிலும் மற்ற இடங்களிலும் நிலவும் மோசமான சூழ்நிலையிலும் தொடர்ந்து ஆவிக்குரிய முன்னேற்றம் செய்யும் இளைஞனைக் காண்கையில் உங்கள் உற்சாகம் அதிகரிக்கவில்லையா? (சங்கீதம் 84:10) ஒருவேளை இவர்கள் எல்லாருக்குமே சபையில் முக்கிய பொறுப்பு இருக்காது. ஒவ்வொரு நாளும் உத்தமத்தைக் காக்க இவர்கள் படும்பாட்டை பெரும்பாலும் மற்றவர்கள் கவனியாதிருக்கலாம். இருப்பினும், சபையில் மேம்பட்ட நிலையில் இருப்பவர்களைவிட இவர்களே “விசுவாசத்தில் ஐசுவரியவான்களாக” இருக்கலாம். (யாக்கோபு 2:5) மொத்தத்தில், யெகோவாவின் தயவை பெற வேண்டுமென்றால், உண்மையுள்ளவர்களாய் இருப்பதே மிக மிக அவசியம்.—மத்தேயு 10:22; 1 கொரிந்தியர் 4:2.
கிதியோன்—தன் தகப்பன் வீட்டில் “எல்லாரிலும் சிறியவன்”
11. தேவதூதனிடம் பேசுகையில் கிதியோன் எந்த விதத்தில் தாழ்மையை வெளிக்காட்டினார்?
11 இஸ்ரவேலின் சரித்திரத்தில் கொந்தளிப்பான காலப் பகுதியில் வாழ்ந்தவர்தான் கிதியோன். வீரமும் உடல் வலிமையும் மிக்க வாலிபனான இவர் மனாசே கோத்திரத்தைச் சேர்ந்தவர். அவர் காலத்தில் ஏழு ஆண்டுகள் மீதியானியரின் ஒடுக்குதலில் கடவுளுடைய ஜனங்கள் துன்பம் அனுபவித்திருந்தனர். எனினும், யெகோவா தம்முடைய ஜனங்களை விடுவிப்பதற்கான காலம் வந்தது. எனவே தேவதூதர் ஒருவர் கிதியோனுக்குத் தோன்றி இவ்வாறு சொன்னார்: “பராக்கிரமசாலியே, யெகோவா உன்னோடே இருக்கிறார்.” கிதியோன் அடக்கமிக்கவர், எனவே இந்த எதிர்பாராத வாழ்த்துரையின் பெருமிதத்தில் அவர் உச்சி குளிர்ந்துவிடவில்லை. மாறாக, “என் ஆண்டவனே, ஐயோ, யெகோவா எங்களோடே இருந்தால், இவையெல்லாம் எங்களுக்கு நேரிடுவானேன்?” என்று பணிவுடன் தேவதூதனுக்குப் பதிலளித்தார். “நீ இஸ்ரவேலை மீதியானியரின் கையினின்று விடுவித்து இரட்சிப்பாய்” என அந்தத் தூதன் விவரமாக காரியங்களை அவரிடம் விளக்கினார். கிதியோனின் பதில்? தேசமே புகழும் வீரராக தன்னை ஆக்கிக்கொள்வதற்கான வாய்ப்பாக இந்தப் பொறுப்பை கிதியோன் கருதவில்லை. “ஐயோ: என் ஆண்டவரே, நான் இஸ்ரவேலை எதினாலே இரட்சிப்பேன்; இதோ, மனாசேயில் என் குடும்பம் மிகவும் அற்பமானது; என் தகப்பன் வீட்டில் நான் எல்லாரிலும் சிறியவன்” என பதிலளித்தார். என்னே பணிவு!—நியாயாதிபதிகள் 6:11-15, தி.மொ.
12. தன் பொறுப்பை நிறைவேற்றுவதில் கிதியோன் எவ்வாறு விவேகத்தைக் காண்பித்தார்?
12 கிதியோனை போருக்கு அனுப்பும் முன்பு யெகோவா அவரைப் பரிசோதித்தார். எப்படி? அவருடைய தகப்பன் பாகாலுக்குக் கட்டியிருந்த பலிபீடத்தைத் தகர்த்துப்போடும்படியும் அதற்கருகில் நின்ற புனித கம்பத்தை வெட்டி வீழ்த்தும்படியும் கிதியோனிடம் சொல்லப்பட்டது. இதைச் செய்ய தைரியம் தேவை. ஆனால் இந்தப் பொறுப்பை கையாண்ட முறையில் கிதியோனின் தாழ்மையும் விவேகமும் வெளிப்பட்டன. எல்லாரும் காண்கையில் இதைச் செய்யாமல் யாருமறியா இரவின் இருளில் அதைச் செய்தார். மேலும், அந்த வேலையை முன்னெச்சரிக்கையுடன் செய்ய முற்பட்டார். தன்னோடு பத்து வேலைக்காரர்களை அழைத்துச் சென்றார். ஒருவேளை இவர்களில் சிலரை காவலர்களாக நிறுத்தியிருக்கலாம், மற்றவர்களை அந்தப் பலிபீடத்தையும் புனித கம்பத்தையும் அழிப்பதற்கு உபயோகித்திருக்கலாம்.b எப்படியோ, யெகோவாவின் உதவியோடு கிதியோன் தனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பை நிறைவேற்றினார். காலப்போக்கில் இஸ்ரவேலை மீதியானியரிடமிருந்து விடுவிக்க கடவுள் அவரைப் பயன்படுத்தினார்.—நியாயாதிபதிகள் 6:25-27.
பணிவையும் விவேகத்தையும் காட்டுதல்
13, 14. (அ) ஒரு பொறுப்பு நமக்கு அளிக்கப்படுகையில் நாம் எவ்வாறு தாழ்மையைக் காட்டலாம்? (ஆ) அடக்க உணர்வை வெளிப்படுத்துவதில் சகோதரர் எ. எச். மேக்மில்லன் எவ்வாறு சிறந்த முன்மாதிரி வைத்தார்?
13 கிதியோனின் பணிவான குணத்திலிருந்து நாம் அதிகம் கற்றுக்கொள்ளலாம். உதாரணமாக, ஒரு பொறுப்பு நமக்கு அளிக்கப்படுகையில் நம் மனநிலை என்ன? அதன் பலனாக கிடைக்கும் மேன்மையை அல்லது மதிப்பைப் பற்றி முதலாவது நினைக்கிறோமா? அல்லது அந்த நியமிப்பில் உட்பட்டுள்ளவற்றை நம்மால் செய்ய முடியுமா என தாழ்மையுடனும் ஜெப சிந்தையோடும் யோசிக்கிறோமா? இதற்கு மிகச் சிறந்த முன்மாதிரி சகோதரர் எ. எச். மேக்மில்லன். இவரது பூமிக்குரிய வாழ்க்கை 1966-ல் முடிவற்றது. இவரிடம் உவாட்ச் டவர் சொஸைட்டியின் முதல் பிரெஸிடென்டாக இருந்த சி. டி. ரஸல் ஒருமுறை, தான் இல்லாதபோது இந்த ஊழிய பொறுப்பைக் கையாள யாரை நியமிக்கலாம் என கேட்டார். அந்த சமயத்தில், அந்தப் பொறுப்பை தன்னிடம் ஒப்படைக்கும்படி கேட்க அவருக்கு வாய்ப்பிருந்த போதிலும் சகோதரர் மேக்மில்லன் ஒருமுறைகூட அப்படி சொல்லவில்லை. முடிவில், அந்தப் பொறுப்பை சகோதரர் மேக்மில்லனே ஏற்க முடியுமா என சகோதரர் ரஸல் கேட்டார்; அதைக் குறித்து சிந்தித்துப் பதிலளிக்கும்படியும் அவரிடம் சொன்னார். பல ஆண்டுகளுக்குப் பின்பு அதைப் பற்றி சகோதரர் மேக்மில்லன் எழுதுகையில், “அதைக் கேட்டபோது நான் வாயடைத்து நின்றேன். மறுபடியும் மறுபடியும் ஆழ்ந்து யோசித்தேன், அதற்காக சிறிது காலம் ஜெபித்தேன், அதன் பிறகுதான் அவருக்கு உதவ என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என பதில் சொன்னேன்” என குறிப்பிட்டார்.
14 அதன் பின்பு வெகு சீக்கிரத்திலேயே சகோதரர் ரஸல் இறந்துவிட்டார். இப்போது உவாட்ச் டவர் சொஸைட்டியின் பிரெஸிடென்டாக பொறுப்பேற்க ஒருவர் தேவைப்பட்டார். சகோதரர் ரஸலின் கடைசி பிரசங்க பயணத்தின்போது, அவர் செய்துவந்த வேலைகளை மேக்மில்லன் கவனித்துக் கொண்டதால், சகோதரர் ஒருவர் அவரிடம் இவ்வாறு சொன்னார்: “மேக், நீங்கள் அந்தப் பொறுப்பை ஏற்பதற்கு சரியான சமயம் இதுதான். சகோதரர் ரஸல் இல்லாதபோது நீங்கள் தானே அவருடைய தனிப்பட்ட பிரதிநிதியாக இருந்து கவனித்துக்கொண்டீர்கள். நீங்கள் சொல்கிறதைக் கேட்டு நடக்கும்படி எங்கள் எல்லாருக்கும் சொல்லப்பட்டது. அவரோ இன்று இல்லை, திரும்பி வரப்போவதுமில்லை. தொடர்ந்து எல்லாவற்றையும் பொறுப்பேற்று நடத்த வேண்டியவர் நீங்கள்தான் போல தெரிகிறது.” அதற்கு சகோதரர் மேக்மில்லனின் பதில்: “சகோதரரே, அப்படி மட்டும் நினைக்காதீர்கள். இது கர்த்தருடைய வேலை, நீங்கள் எதை செய்தால் தகுதியாக இருக்குமென்று கர்த்தர் நினைக்கிறாரோ அந்தப் பொறுப்பை மட்டுமே கர்த்தருடைய அமைப்பில் நீங்கள் பெறமுடியும்; அந்தப் பொறுப்புக்கு நான் தகுந்தவனல்ல என்பது எனக்குத் தெரியும்.” பின்னர் அந்தப் பொறுப்பை ஏற்பதற்கு வேறொருவரை சகோதரர் மேக்மில்லன் சிபாரிசு செய்தார். கிதியோனைப்போல், அவருக்கும் தன்னைப் பற்றி அடக்க உணர்வு இருந்தது. அதேபோல் நாம் ஒவ்வொருவரும் நம்மைக் கருதுவது நல்லது.
15. மற்றவர்களுக்குப் பிரசங்கிக்கையில் என்ன நடைமுறையான சில வழிகளில் நாம் விவேகத்தைக் காட்டலாம்?
15 நாமும், நம்முடைய பொறுப்பை நிறைவேற்றும் விதத்தில் தாழ்மையைக் காட்ட வேண்டும். கிதியோன் விவேகத்துடன் செயல்பட்டார்; தன் எதிரிகளை அநாவசியமாக கோபப்படுத்த அவர் விரும்பவில்லை. அவ்வாறே, நம்முடைய பிரசங்க ஊழியத்தில் மற்றவர்களிடம் பேசுகையில் தாழ்மையைக் காட்டுவதோடுகூட விவேகத்துடனும் நடந்துகொள்ள வேண்டும். ‘அரண்களையும்’ ‘தர்க்கங்களையும்’ தகர்த்துப்போடும் ஆவிக்குரிய போரில் நாம் ஈடுபட்டிருப்பது உண்மைதான். (2 கொரிந்தியர் 10:4, 5) ஆனால் மற்றவர்களை மதிப்புக்குறைவாய் நாம் பேசக்கூடாது. நம்முடைய செய்தியை எதிர்க்கும்படியான சூழ்நிலையை உருவாக்கவும் கூடாது. மாறாக, அவர்களுடைய கருத்துக்களுக்கு இடமளிக்க வேண்டும், ஒத்துப்போகும் விஷயங்களை வலியுறுத்த வேண்டும், பின்பு நம் செய்தியில் நம்பிக்கையூட்டும் அம்சங்களிடம் கவனத்தை ஒருமுகப்படுத்த வேண்டும்.—அப்போஸ்தலர் 22:1-3; 1 கொரிந்தியர் 9:22; வெளிப்படுத்துதல் 21:4.
இயேசு—அடக்கத்தின் சிகரம்
16. அடக்கத்தை இயேசு எவ்வாறு வெளிக்காட்டினார்?
16 இயேசு கிறிஸ்துவே அடக்கத்திற்கு மிகச் சிறந்த முன்மாதிரி.c தம்முடைய பிதாவுடன் நெருங்கிய உறவை அவர் அனுபவித்து வந்தாலும் சில காரியங்கள் தம்முடைய அதிகாரத்திற்கு அப்பாற்பட்டது என்பதை ஒப்புக்கொள்ள இயேசு தயங்கவில்லை. (யோவான் 1:14) உதாரணமாக, யாக்கோபும் யோவானும் இயேசுவின் ராஜ்யத்தில் அவருக்கருகில் உட்காருவதற்கு தயை செய்யும்படி அவர்களது தாய் கேட்டபோது, “என் வலது பாரிசத்திலும் என் இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி . . . அருளுவது என் காரியமல்ல” என இயேசு பதிலளித்தார். (மத்தேயு 20:20-23) மற்றொரு சந்தர்ப்பத்தில் இயேசு, “நானாகவே எதையுஞ் செய்ய முடியாது. . . . என் சித்தத்தையல்ல என்னையனுப்பின பிதாவின் சித்தத்தையே நாடுகி[றேன்]” என வெளிப்படையாக சொன்னார்.—யோவான் 5:30, தி.மொ.; 14:28; பிலிப்பியர் 2:5, 6.
17. மற்றவர்களுடன் பழகுகையில் இயேசு எவ்வாறு தாழ்மையைக் காட்டினார்?
17 எல்லா விதத்திலும் இயேசு அபூரண மனிதருக்கு மேலானவரே. மேலும், தம்முடைய பிதாவாகிய யெகோவாவிடமிருந்து எந்த மனிதரும் பெற்றிருக்கும் அதிகாரத்தைக் காட்டிலும் அதிகத்தைப் பெற்றிருந்தார். இருப்பினும் இயேசு, தம்மைப் பின்பற்றினோரிடம் தாழ்மையோடு பழகினார். தமக்குள்ள அறிவை மற்றவர்கள் பார்த்து திகைக்க வேண்டுமென அவர் விரும்பவில்லை. மற்றவர்களின் உணர்ச்சிகளை மதித்தார், இரக்கம் காட்டினார், அவர்களுடைய தேவைகளை மனதில் வைத்து செயல்பட்டார். (மத்தேயு 15:32; 26:40, 41; மாற்கு 6:31) இயேசு பரிபூரணராக இருந்தார். எனினும், அவர் பரிபூரணத்தை மற்றவர்களிடம் எதிர்பார்க்கவில்லை. தம்முடைய சீஷர்கள் செய்ய முடிந்ததற்கும் அதிகமாக அவர் ஒருபோதும் அவர்களிடம் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் புரிந்துகொள்ள முடிந்ததற்கும் அதிகமான விஷயங்களை அவர் ஒருபோதும் அவர்கள்மீது திணிக்கவில்லை. (யோவான் 16:12) அவரைப் புத்துணர்ச்சி அளிப்பவராய் பலர் கருதினதில் ஆச்சரியமில்லை.—மத்தேயு 11:29.
இயேசுவைப் போல் அடக்கமாய் இருங்கள்
18, 19. இயேசுவின் அடக்கத்தை நாம் எவ்வாறு பின்பற்றலாம்: (அ) நம்மை நாம் கருதும் விதத்தில்? (ஆ) மற்றவர்களை நாம் நடத்தும் விதத்தில்?
18 எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதரே அடக்கத்தை வெளிக்காட்டியிருக்கையில் நாம் எந்தளவுக்கு அதை வெளிக்காட்ட வேண்டும். அபூரண மனிதர்கள் தங்களுக்கு முழுமையான அதிகாரமில்லை என்பதை ஒப்புக்கொள்ள பெரும்பாலும் தயங்குகின்றனர். ஆனால், இயேசுவைப் போல் கிறிஸ்தவர்கள் தாழ்மையுள்ளோராக இருக்க கடும் முயற்சி செய்கின்றனர். தகுதியுள்ளவர்களுக்கு பொறுப்புகளை அளிக்காதளவுக்கு அவர்கள் தற்பெருமைமிக்கவர்கள் அல்ல. பொறுப்பில் உள்ளவர்களின் புத்திமதியை ஏற்க மனமில்லாதளவுக்கு அகந்தையுள்ளவர்களும் அல்ல. ஒத்துழைக்கும் மனநிலையோடு, அவர்கள் சபையில் “சகலமும் நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்யப்பட” வழிசெய்கின்றனர்.—1 கொரிந்தியர் 14:40.
19 மற்றவர்களிடம் நியாயமாக எதிர்பார்ப்பதற்கும் அவர்களுடைய தேவைகளுக்குக் கவனம் செலுத்துவதற்கும் தாழ்மை நம்மை தூண்டுகிறது. (பிலிப்பியர் 4:5) மற்றவர்களிடமில்லாத சில திறமைகள், சக்தி, செல்வாக்கு ஒருவேளை நம்மிடம் இருக்கலாம். எனினும், நம்மிடம் தாழ்மை இருந்தால், எதையும் நாம் விரும்புகிற விதத்திலேயே மற்றவர்களும் செய்ய வேண்டும் என எதிர்பார்க்க மாட்டோம். ஒவ்வொருவருக்கும் அவரவருக்குரிய வரம்பு இருப்பதை அறிந்தவர்களாய் தாழ்மையுடன், மற்றவர்களின் குறைபாடுகளைப் பொறுத்துக் கொள்வோம். “எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்; அன்பு திரளான பாவங்களை மூடும்” என பேதுரு எழுதினார்.—1 பேதுரு 4:8.
20. அகந்தை நம்மிடம் எந்த விதத்திலும் தலைதூக்காமலிருக்க நாம் என்ன செய்யலாம்?
20 நாம் கற்றறிந்தபடி, உண்மையில் அடக்கம் எங்கோ ஞானமும் அங்குதான். ஒருவேளை உங்களுக்குள் தாழ்மை மறைய அல்லது அகந்தை தலைதூக்க வாய்ப்பிருப்பதாய் நினைத்தால் என்ன செய்வது? சோர்வடையாதீர்கள். அதற்குப் பதிலாக, தாவீதைப் போல் ஜெபியுங்கள்: “துணிகரமான பாவங்களுக்கு உமது அடியேனை விலக்கிக்காரும், அவைகள் என்னை ஆண்டுகொள்ள ஒட்டாதிரும்.” (சங்கீதம் 19:13) பவுல், கிதியோன், எல்லாருக்கும் மேலாக இயேசு கிறிஸ்து ஆகியோரின் விசுவாசத்தைப் பின்பற்றுகையில் பின்வரும் வார்த்தைகளின் உண்மையை நாமே ருசிப்போம்: “அடக்கம் எங்கோ ஞானம் அங்கே.”—நீதிமொழிகள் 11:2, NW.
[அடிக்குறிப்புகள்]
a ‘ஊழியக்காரன்’ என்று மொழிபெயர்க்கப்பட்ட கிரேக்கச் சொல், பெரிய கப்பலின் அடித்தளத்திலிருந்து துடுப்பு வலித்த அடிமையைக் குறிக்கலாம். ஆனால், ‘உக்கிராணக்காரன்,’ பண்ணையைக் கவனிப்பது போன்ற அதிகப்படியான பொறுப்புகளை ஏற்கிறான். இருப்பினும், பெரும்பாலான எஜமானர்களுக்கு உக்கிராணக்காரனும், கப்பல் அடித்தளத்தில் வேலை செய்யும் அடிமையும் ஒன்றுதான்.
b கிதியோனின் விவேகத்தையும் முன்னெச்சரிக்கையையும் கோழைத்தனத்திற்கு அடையாளமாக தவறாய் நினைத்துவிடக்கூடாது. அதற்கு மாறாக, அவருடைய தைரியம் எபிரெயர் 11:32-38-ல் உறுதிசெய்யப்படுகிறது. “பலவீனத்தில் பலன்கொண்டார்கள்; யுத்தத்தில் வல்லவர்களானார்கள்” என்று அதில் சொல்லப்படுகிறவர்களின் பட்டியலில் கிதியோனும் ஒருவர்.
c அடக்கம் என்பது ஒருவர் தன்னுடைய வரம்புகளை அறிந்திருப்பதை உட்படுத்துவதால், இது யெகோவாவுக்குப் பொருந்தாது. எனினும், அவர் தாழ்மையுள்ளவரே.—சங்கீதம் 18:35, NW.
நினைவிருக்கிறதா?
• அடக்கம் என்றால் என்ன?
• பவுலைப் போல் நாமும் எவ்வாறு தாழ்மையைக் காட்டலாம்?
• கிதியோனின் முன்மாதிரியில் தாழ்மையைப் பற்றி நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
• இயேசு எப்படி அடக்கத்தின் சிகரமாய் திகழ்ந்தார்?
[பக்கம் 15-ன் படம்]
பவுலிடம் இருந்த தாழ்மை குணத்திற்காகவே உடன் கிறிஸ்தவர்கள் அவரிடம் பிரியத்துடன் நடந்துகொண்டனர்
[பக்கம் 17-ன் படம்]
கடவுளுடைய சித்தத்தை நிறைவேற்றுவதில் கிதியோன் விவேகத்துடன் நடந்துகொண்டார்
[பக்கம் 18-ன் படம்]
கடவுளுடைய குமாரனாகிய இயேசு, தம் செயல்கள் அனைத்திலும் தாழ்மையைக் காட்டுகிறார்