யெப்தா யெகோவாவுக்குச் செய்த பொருத்தனையை நிறைவேற்றுகிறார்
வெற்றி வீரர் ஒருவர் அடக்குமுறையிலிருந்து தன்னுடைய தாயகத்தை மீட்டு வீடு திரும்புகிறார். அவரது மகள் மகிழ்ச்சியாக நடனமாடிக்கொண்டும் தம்புரு வாசித்துக்கொண்டும் அவரைச் சந்திக்க ஓடோடி வருகிறாள். அவளைப் பார்த்தவுடன் சந்தோஷப்படுவதற்குப் பதிலாக அவர் தன்னுடைய ஆடைகளைக் கிழித்துக்கொள்கிறார். ஏன்? அவர் பத்திரமாக வீடு திரும்பி வந்ததால்தானே அவள் மகிழ்ச்சி அடைந்தாள், அவரும் அதைக்குறித்து சந்தோஷப்படவில்லையா? எந்தப் போரில் அவர் வெற்றி பெற்றார்? யார் அவர்?
அவர் பூர்வ இஸ்ரவேலின் நியாயாதிபதிகளில் ஒருவரான யெப்தா. மேலே கேட்கப்பட்டுள்ள மற்ற கேள்விகளுக்கான பதில்களையும் இந்தப் பதிவு நமக்கு எப்படிப் பொருந்துகிறது என்பதையும் தெரிந்துகொள்வதற்காக, இந்தச் சம்பவத்தின் பின்னணியை நாம் கவனிக்க வேண்டும்.
இஸ்ரவேலில் நெருக்கடி
யெப்தா நெருக்கடி மிகுந்த சூழலில் வாழ்கிறார். சக இஸ்ரவேலர்கள் மெய் வணக்கத்தை விட்டு விலகி, சீதோனியர், மோவாபியர், அம்மோனியர், பெலிஸ்தர் ஆகியோரின் கடவுட்களை வணங்குகிறார்கள். அதனால், யெகோவா தம்முடைய மக்களைக் கைவிட்டுவிடுகிறார்; அம்மோனியர்களும் பெலிஸ்தர்களும் 18 வருடங்களுக்கு அவர்களை நெருக்கி ஒடுக்க அனுமதிக்கிறார். விசேஷமாக, யோர்தான் நதிக்குக் கிழக்கில் உள்ள கீலேயாத்தின் குடிகள் மிகவும் நெருக்கப்படுகிறார்கள்.a இறுதியாக, இஸ்ரவேலர்கள் தங்கள் தவறை உணருகிறார்கள்; மனந்திரும்பி யெகோவாவின் உதவியை நாடுகிறார்கள்; அவருக்குச் சேவை செய்ய ஆரம்பித்து அந்நிய தெய்வங்களை அங்கிருந்து அகற்றுகிறார்கள்.—நியாயாதிபதிகள் 10:6-16.
அம்மோனியர்கள் கீலேயாத்தில் முகாமிடுகிறார்கள்; இஸ்ரவேலர்கள் அவர்களை எதிர்கொள்ள ஒன்றுதிரண்டு செல்கிறார்கள். ஆனால் இஸ்ரவேலர்களுக்கு சேனாபதி இல்லை. (நியாயாதிபதிகள் 10:17, 18) இதற்கிடையே, யெப்தாவுக்குத் தனிப்பட்ட பிரச்சினைகள் இருந்தன. பேராசைமிக்க அவருடைய ஒன்றுவிட்ட சகோதரர்கள் சொத்துக்களை அபகரித்துக்கொள்வதற்காக அவரை விரட்டியடித்து விடுகிறார்கள். அதனால், கீலேயாத்திற்குக் கிழக்கிலிருந்த தோப் தேசத்திற்கு யெப்தா ஓடிப்போகிறார்; அப்பகுதி இஸ்ரவேலின் எதிரிகள் தாக்குவதற்கு எளிதானதாக இருந்தது. அங்கே, “வீணரான மனுஷர்” யெப்தாவோடு சேருகிறார்கள். அவர்கள் தங்களை அடக்கி ஒடுக்கியவர்களால் வேலையை இழந்தவர்களாகவோ அவர்களுக்கு கொத்தடிமைகளாக வேலை செய்வதை எதிர்த்தவர்களாகவோ இருக்கலாம். அவர்கள், ‘அவரோடேகூட யுத்தத்திற்குப் போகிறார்கள்.’ யெப்தா தனது அண்டை நாட்டு எதிரிகள் மீது திடீர் தாக்குதல் நடத்துகையில் அவர்களும் உடன் செல்வார்கள் என்பதை இது ஒருவேளை அர்த்தப்படுத்தலாம். போரிடுவதில் யெப்தா வீரதீரமுள்ளவராக இருந்ததால், வேதாகமம் அவரை “பலத்த பராக்கிரமசாலி” என்று அழைக்கிறது. (நியாயாதிபதிகள் 11:1-3) அம்மோனியர்களுக்கு எதிரான போரில் இஸ்ரவேலை வழிநடத்தப்போவது யார்?
“நீ வந்து . . . எங்கள் சேனாபதியாயிருக்க வேண்டும்”
கீலேயாத்தின் மூப்பர் யெப்தாவை, “நீ வந்து . . . எங்கள் சேனாபதியாயிருக்க வேண்டும்” என்று வற்புறுத்திக் கேட்கிறார்கள். மறுபேச்சின்றி அவர் தன்னுடைய தாயகத்திற்கு வந்துவிடுவார் என அவர்கள் நினைத்திருந்தால் அது அவர்களுடைய தவறுதான். யெப்தா அவர்களை நோக்கி, “நீங்கள் அல்லவா என்னைப் பகைத்து, என் தகப்பன் வீட்டிலிருந்து என்னைத் துரத்தினவர்கள்? இப்பொழுது உங்களுக்கு ஆபத்து நேரிட்டிருக்கிற சமயத்தில் நீங்கள் என்னிடத்தில் ஏன் வருகிறீர்கள்” என்று கேட்கிறார். முதலில் யெப்தாவை ஒதுக்கித்தள்ளியதும் பிறகு, அவருடைய உதவிகேட்டு வந்ததும் எவ்வளவு அநியாயமானது!— நியாயாதிபதிகள் 11:4-7.
கீலேயாத்திற்குத் தலைமை தாங்க யெப்தா ஒரு நிபந்தனை விதிக்கிறார். “கர்த்தர் அவர்களை [அம்மோனியர்களை] என் முன்னிலையாய் ஒப்புக்கொடுத்தால், என்னை உங்களுக்குத் தலைவனாய் வைப்பீர்களா” என்று அவர் கேட்கிறார். வெற்றி பெற்றால் அது யெகோவாவின் ஆதரவு அவர்களுக்கு இருக்கிறது என்பதற்கு அத்தாட்சியாக இருக்கும்; ஆனால், நெருக்கடி தீர்ந்த பிறகு யெகோவாவின் வழிநடத்துதலை புறக்கணித்துவிடக்கூடாது என்பதை உறுதிசெய்து கொள்வதிலும் யெப்தா கவனம் செலுத்துகிறார்.—நியாயாதிபதிகள் 11:8-11.
அம்மோனியர்களுடன் பேச்சுவார்த்தை
யெப்தா, அம்மோனியர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்த முயலுகிறார். போர் நடவடிக்கைக்கான காரணத்தை அறிந்துகொள்ள அவர்களுடைய ராஜாவினிடத்தில் தூதுவர்களை அனுப்புகிறார். அதற்கு அவர்கள் பதிலளிக்கையில், இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து வந்தபோது அம்மோனியர்களின் பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டார்கள் என்று குற்றஞ்சாட்டி, அவற்றை இப்போது திரும்பத்தர வேண்டுமென்று சொல்கிறார்கள்.—நியாயாதிபதிகள் 11:12, 13.
இஸ்ரவேலர்களுடைய சரித்திரத்தைப்பற்றி யெப்தா நன்றாகத் தெரிந்து வைத்திருந்ததன் காரணமாக, அம்மோனியர்கள் சொல்வது தவறென திறமையாக நிரூபிக்கிறார். இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து வந்தபோது அம்மோனியர், மோவாபியர், ஏதோமியர் ஆகியோருக்கு எந்தத் தொந்தரவும் கொடுக்கவில்லை. இஸ்ரவேலர்கள் அவ்வாறு பயணம் செய்த காலத்தில், பிரச்சினைக்குரிய அந்தப் பகுதி அம்மோனியர்களின் வசம் இருக்கவில்லை. அது எமோரியர்களுக்குச் சொந்தமாய் இருந்தது; ஆனால், தேவன் அவர்களின் ராஜாவான சீகோனை இஸ்ரவேலின் கைகளில் ஒப்புக்கொடுத்தார். மேலுமாக, இஸ்ரவேலர்கள் அந்தப் பகுதியில் 300 வருடங்களாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அப்படியிருக்கையில், இப்பொழுது மட்டும் ஏன் அம்மோனியர்கள் அதற்கு உரிமை கொண்டாடுகிறார்கள் எனக் கேட்கிறார்.—நியாயாதிபதிகள் 11:14-22, 26.
மேலும், இஸ்ரவேலர்களின் துன்பத்திற்கு முக்கியமான ஒரு காரணத்திடம் யெப்தா கவனத்தைத் திருப்புகிறார்: உண்மையான கடவுள் யார்? யெகோவாவா அல்லது இஸ்ரவேலர்கள் கைப்பற்றிய நாடுகளின் கடவுட்களா? காமோஸுக்கு ஏதாவது சக்தியிருந்தால் அவனுடைய மக்களுக்கு அந்த இடம் திரும்பக் கிடைக்கும்படி செய்ய மாட்டானா? இது மெய் வணக்கத்திற்கும் அம்மோனியர்களால் ஆதரிக்கப்பட்ட பொய் மதத்திற்கும் இடையிலான போட்டியாக இருந்தது. எனவே, யெப்தா தர்க்கரீதியில் இவ்வாறு முடிக்கிறார்: “நியாயாதிபதியாகிய கர்த்தர் இன்று இஸ்ரவேல் புத்திரருக்கும் அம்மோன் புத்திரருக்கும் நடு நின்று நியாயம் தீர்க்கக்கடவர்.”—நியாயாதிபதிகள் 11:23-27.
யெப்தா திடதீர்மானத்தோடு கொடுத்த விளக்கத்திற்கு அம்மோனியரின் ராஜா செவிகொடுக்கவில்லை. ‘அப்பொழுது கர்த்தருடைய ஆவி யெப்தாவின்மேல் இறங்கியது; அவர் கீலேயாத்தையும் மனாசே நாட்டையும் கடந்துபோனார்.’ ஒருவேளை, அம்மோனியருக்கு எதிராகப் போரிட ஆட்களைத் திரட்ட அவர் சென்றிருக்கலாம்.—நியாயாதிபதிகள் 11:28, 29.
யெப்தாவின் பொருத்தனை
கடவுளுடைய வழிகாட்டுதல் வேண்டுமென்று யெப்தா உள்ளப்பூர்வமாக விரும்புகிறார்; ஆகவே இவ்வாறு பொருத்தனை செய்கிறார்: “தேவரீர் அம்மோன் புத்திரரை என் கையில் ஒப்புக்கொடுக்கவே ஒப்புக்கொடுத்தால், நான் அம்மோன் புத்திரரிடத்திலிருந்து சமாதானத்தோடே திரும்பிவரும்போது, என் வீட்டு வாசற்படியிலிருந்து எனக்கு எதிர்கொண்டு வருவது எதுவோ அது கர்த்தருக்கு உரியதாகும். அதைச் சர்வாங்க தகனபலியாகச் செலுத்துவேன்.” இந்த ஜெபத்திற்குப் பதில் அளிக்கும் விதமாக, அவர் வெற்றிபெற கடவுள் உதவுகிறார். அம்மோனியர்களின் 20 பட்டணங்களை “மகா சங்காரமாய் முறிய அடித்து” நொறுக்க யெப்தாவை அனுமதிக்கிறார்; இவ்வாறு, இஸ்ரவேலின் எதிரிகளைத் தாழ்த்துகிறார்.—நியாயாதிபதிகள் 11:30-33.
யெப்தா யுத்தத்திலிருந்து திரும்பி வரும்போது அவரைச் சந்திக்க வந்ததோ அவருடைய உயிருக்குயிரான ஒரே மகள்! பைபிள் பதிவு இவ்வாறு சொல்கிறது: ‘அவர் அவளைக் கண்டவுடனே தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: ஐயோ! என் மகளே, என்னை மிகவும் மனமடியவும் கலங்கவும் பண்ணுகிறாய்; நான் கர்த்தரை நோக்கி என் வாயைத் திறந்து சொல்லிவிட்டேன்; அதை நான் மாற்றக்கூடாது என்றார்.’—நியாயாதிபதிகள் 11:34, 35.
உண்மையிலேயே யெப்தா தன்னுடைய மகளைப் பலிகொடுக்கப் போகிறாரா? இல்லை. அதைச் செய்ய வேண்டுமென்று அவர் நினைத்திருக்க மாட்டார். கானானியர்களின் பொல்லாத பழக்கங்களில் ஒன்றான நரபலியை யெகோவா அருவருக்கிறார். (லேவியராகமம் 18:21; உபாகமம் 12:31) யெப்தா இந்தப் பொருத்தனையைச் செய்தபோது கடவுளுடைய ஆவி அவர்மேல் செயல்பட்டது; அதுமாத்திரமல்ல அவருடைய முயற்சிகளை யெகோவா ஆசீர்வதிக்கவும் செய்தார். யெப்தாவினுடைய விசுவாசத்தையும் கடவுளுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதில் அவருடைய பங்கையும் வேதவாக்கியங்கள் புகழ்ந்து பேசுகின்றன. (1 சாமுவேல் 12:11; எபிரெயர் 11:32-34) எனவே, கொலைபாதகமான நரபலியைப்பற்றி யெப்தா யோசித்திருக்கவே மாட்டார். அப்படியானால், ஒரு நபரை யெகோவாவுக்கு அளிக்கிறேன் என்று யெப்தா பொருத்தனை செய்தபோது எதை அர்த்தப்படுத்தினார்?
தான் சந்திக்கிறவரை யெகோவாவின் சேவைக்கு முழுமையாக அர்ப்பணிப்பதையே யெப்தா அர்த்தப்படுத்தியிருக்க வேண்டும். யெகோவாவுக்கு மனிதர்களை அர்ப்பணிப்பதாகப் பொருத்தனை செய்ய மோசேயின் நியாயப்பிரமாணம் இடமளித்தது. உதாரணமாக, பரிசுத்த ஸ்தலத்தில் பெண்கள் சேவை செய்தனர்; பொதுவாக, தண்ணீர் எடுத்து வரும் வேலையை அவர்கள் செய்திருக்கலாம். (யாத்திராகமம் 38:8; 1 சாமுவேல் 2:22) அந்தச் சேவையைப்பற்றி அதிகமாகத் தெரியவில்லை; அந்தச் சேவை நிரந்தரமானதாக இருந்ததா என்பதும் தெரியவில்லை. யெப்தா பொருத்தனை செய்தபோது இதுபோன்ற விசேஷ சேவையே அவருடைய மனதில் இருந்திருக்க வேண்டும்; அதோடு, தான் அர்ப்பணிக்கும் நபரை கடவுளுடைய சேவைக்காக நிரந்தரமாய் அளிப்பதாக அவர் வாக்குறுதி கொடுத்ததாகவும் தெரிகிறது.
யெப்தாவுடைய மகளும், பிற்பாடு அதேபோன்று அர்ப்பணிக்கப்பட்ட பிள்ளையான சாமுவேலும் கடவுள் பக்தியுள்ள தங்களுடைய பெற்றோர் செய்த பொருத்தனைகளை நிறைவேற்றுவதில் ஒத்துழைத்தார்கள். (1 சாமுவேல் 1:11) யெப்தாவின் மகளும் யெகோவாவை உத்தமத்தோடு வணங்குபவளாக இருந்தாள். ஆகவே, அந்தப் பொருத்தனையை நிறைவேற்ற வேண்டும் என்பதில் யெப்தாவைப்போல அவருடைய மகளும் தீர்மானமாயிருந்தாள். அவளுடைய தியாகம் மிகப் பெரியது; ஏனென்றால், அவள் திருமணம் செய்துகொள்ளவே முடியாது. அவள் தன்னுடைய கன்னிமையை நினைத்து அழுதாள், ஏனென்றால் ஒவ்வொரு இஸ்ரவேலரும் தங்களுடைய குடும்பப் பெயரும் பரம்பரைச் சொத்தும் நிலைத்திருக்க வேண்டுமென்றே விரும்பினர். யெப்தா செய்ததும் தியாகமே; ஏனெனில், பொருத்தனையை நிறைவேற்றுவதன் மூலம் அவர் தன்னுடைய ஒரே மகளைப் பிரிந்திருக்க நேரிட்டது.—நியாயாதிபதிகள் 11:36-39.
இந்த விசுவாசமுள்ள கன்னியின் வாழ்வு வீணாகிவிடவில்லை. யெகோவாவின் வீட்டில் முழுநேர சேவை செய்வது அவரை மகிமைப்படுத்துவதற்கான சிறந்த, திருப்தியான, போற்றத்தகுந்த வழியாக இருந்தது. எனவே, ‘இஸ்ரவேலின் குமாரத்திகள் வருஷந்தோறும் போய், . . . கீலேயாத்தியனான யெப்தாவின் குமாரத்தியைக்குறித்துப் புலம்புவார்கள் [“பாராட்டுவார்கள்,” NW]. (நியாயாதிபதிகள் 11:40) நிச்சயமாகவே, தன்னுடைய மகள் யெகோவாவுக்குச் செய்யும் சேவையைக் குறித்து யெப்தா மகிழ்ந்திருப்பார்.
இன்றும்கூட கடவுளுடைய மக்களில் அநேகர் முழுநேர சேவையை வாழ்க்கை முழுவதும் செய்யத் தீர்மானிக்கிறார்கள்; அவர்கள் பயனியர்களாக, மிஷனரிகளாக, பயண ஊழியர்களாக, பெத்தேல் குடும்பங்களில் அங்கத்தினர்களாக சேவை செய்கிறார்கள். அவர்கள் தங்களுடைய குடும்பத்தாரை தங்கள் விருப்பம்போல் அடிக்கடி பார்க்க முடியாதுதான். என்றாலும், யெகோவாவுக்கு இவ்வாறு பரிசுத்த சேவை செய்ய முடிந்ததை எண்ணி அவர்களும் அவர்களுடைய குடும்பத்தினரும் மகிழலாம்.—சங்கீதம் 110:3; எபிரெயர் 13:15, 16.
கடவுளுடைய வழிநடத்துதலுக்கு எதிரான கலகம்
யெப்தாவின் காலத்தைத் திரும்பிப் பார்க்கும்போது, அநேக இஸ்ரவேலர் யெகோவாவின் வழிநடத்துதலை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதைக் காண்கிறோம். யெப்தாவை கடவுள் ஆசீர்வதித்தது தெளிவாக இருந்தபோதிலும் எப்பிராயீம் மனுஷர் அவரோடு வாக்குவாதம் செய்கிறார்கள். யுத்தத்திற்கு அவர்களை அழைக்காததற்கான காரணத்தை அறிய விரும்புகிறார்கள். வீட்டோடு சேர்த்து ‘யெப்தாவையும்’ கொளுத்திப்போடத் திட்டமிடுகிறார்கள்.—நியாயாதிபதிகள் 12:1.
எப்பிராயீம் மனுஷரை தான் யுத்தத்திற்கு அழைத்ததாகவும், ஆனால் அவர்கள் வரமறுத்ததாகவும் யெப்தா கூறுகிறார். எவ்வாறாகிலும், கடவுளே யுத்தத்தில் வென்றார். கீலேயாத்தைச் சேர்ந்தவர்கள் யெப்தாவைச் சேனாபதியாகத் தேர்ந்தெடுக்கையில் தங்களோடு கலந்து பேசவில்லை என்பதற்காக எப்பிராயீம் மனுஷர் கோபப்படுகிறார்களா? உண்மையில், எப்பிராயீமர்கள் இப்படி வாக்குவாதம் செய்ததன்மூலம் யெகோவாவுக்கு எதிராகவே கலகம் பண்ணினார்கள்; ஆகவே, அவர்களோடு போரிடுவதைத் தவிர வேறுவழி இருக்கவில்லை. அந்தப் போரில் எப்பிராயீமர்கள் தோற்கடிக்கப்படுகிறார்கள். தப்பியோட முயன்ற எப்பிராயீமர்கள் “ஷிபோலேத்” என்ற வார்த்தையைச் சரியாக உச்சரிக்கத் தெரியாததால் எளிதாக அடையாளம் கண்டுபிடிக்கப்படுகிறார்கள். இந்த யுத்தத்தில் மொத்தம் 42,000 எப்பிராயீமர்கள் அழிக்கப்படுகிறார்கள்.—நியாயாதிபதிகள் 12:2-6.
இஸ்ரவேலருடைய சரித்திரத்தில் என்னவொரு வருத்தகரமான சமயம்! நியாயாதிபதிகளான ஒத்னியேல், ஏகூத், பாராக், கிதியோன் ஆகியோர் போர்களில் வெற்றி பெற்று அமைதியை நிலைநாட்டினார்கள். ஆனால், இந்த சமயத்தில், அமைதிபற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. பதிவு வெறுமனே இவ்வாறு சொல்லி நிறைவடைகிறது: ‘யெப்தா இஸ்ரவேலை ஆறு வருஷம் நியாயம் விசாரித்தார்; பின்பு கீலேயாத்தியனான யெப்தா மரித்து, கீலேயாத்திலுள்ள ஒரு பட்டணத்தில் அடக்கம் பண்ணப்பட்டார்.’—நியாயாதிபதிகள் 3:11, 30; 5:31; 8:28; 12:7.
இவற்றிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? யெப்தாவின் வாழ்க்கை முழுவதும் போராட்டம் நிறைந்ததாக இருந்தாலும், அவர் கடவுளுக்கு உண்மையுள்ளவராக இருந்தார். இந்த வீராதிவீரர், கீலேயாத்தின் மூப்பர்கள், அம்மோனியர்கள், அவருடைய மகள், எப்பிராயீமர் ஆகியோரிடம் பேசும்போதும் தன்னுடைய பொருத்தனையைச் செய்யும்போதும் யெகோவாவைக் குறிப்பிட்டார். (நியாயாதிபதிகள் 11:9, 23, 27, 30, 31, 35; 12:3) அவரையும் அவருடைய மகளையும் மெய் வணக்கத்தை முன்னேற்றுவிப்பதற்கு பயன்படுத்துவதன் மூலம் யெப்தாவின் பயபக்திக்கு யெகோவா வெகுமதி அளித்தார். கடவுளுடைய தராதரங்களை மற்றவர்கள் விட்டுவிட்டபோதிலும், யெப்தா அவற்றை உறுதியாகப் பற்றியிருந்தார். யெப்தாவைப்போல, நீங்கள் யெகோவாவுக்கு எப்பொழுதும் கீழ்ப்படிவீர்களா?
[அடிக்குறிப்பு]
a கொடூரமான செயல்களைச் செய்வதற்கு அம்மோனியர்கள் பேர்போனவர்கள். சுமார் 60 வருடங்களுக்குப் பிறகு, அவர்கள் கீலேயாத்தில் உள்ள ஒரு நகரை முற்றுகையிட்டபோது அங்கிருந்த எல்லாருடைய வலது கண்ணையும் பிடுங்கி விடுவதாகப் பயமுறுத்தினார்கள். கீலேயாத்திலுள்ள கர்ப்பிணிப் பெண்களைக் கீறிப்போட்ட காலத்தைப்பற்றி ஆமோஸ் தீர்க்கதரிசி சொன்னார்.—1 சாமுவேல் 11:2; ஆமோஸ் 1:13.