வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
சவுலின் படைவீரர்கள் இறைச்சியை இரத்தத்துடன் சாப்பிட்டபோது, கடவுளுடைய சட்டத்தில் கொடுக்கப்பட்ட தண்டனையாக அது இருந்தபோதிலும் அவர்கள் ஏன் கொல்லப்படவில்லை?
இந்த மனிதர் இரத்தத்தைக் குறித்த கடவுளுடைய சட்டத்தை மீறினார்கள்; அவர்கள் இரத்தத்திற்கான மதிப்பைக் காண்பிப்பதில் அதிக ஊக்கமாய் இருந்திருக்கவேண்டும் என்றாலும், அப்படிப்பட்ட மதிப்பைக் கொண்டிருந்ததற்காக இரக்கம் காட்டப்பட்டிருக்கக்கூடும்.
அந்த நிலைமையை எண்ணிப்பாருங்கள். சவுல் அரசன் மற்றும் அவருடைய மகன் யோனத்தானின்கீழ், இஸ்ரவேலர் பெலிஸ்தருடன் யுத்தத்தில் இருந்தனர். யுத்தத்தில் ஒரு சமயம் ‘இஸ்ரவேலர் மிகுந்த மனவருத்தம் அடைந்தபோது’ சவுல் அவசரமாக ஓர் ஆணையிட்டார்; அதாவது, பகைவனை முறியடிக்கும் வரை தன்னுடைய ஆட்கள் சாப்பிடக்கூடாது என்பதாகும். (1 சாமுவேல் 14:24) விரைவில் அவருடைய ஆணை ஒரு பிரச்னையை உண்டுபண்ணியது.
அவருடைய ஆட்கள் கடுமையாக போரிட்ட ஒரு யுத்தத்தை ஜெயித்துக்கொண்டிருந்தனர், ஆனால் அந்தத் தளராத முயற்சி கெடுதலான பாதிப்பைக் கொண்டிருந்தது. அவர்கள் கடும்பசியுற்று, சோர்வடைந்தனர். அந்த மட்டுமீறிய நிலையில் அவர்கள் என்ன செய்தார்கள்? “ஜனங்கள் கொள்ளையின்மேல் பாய்ந்து, ஆடுகளையும் மாடுகளையும் கன்றுக்குட்டிகளையும் பிடித்து, தரையிலே போட்டு அடித்து இரத்தத்தோடும் புசித்தார்கள்.”—1 சாமுவேல் 14:32.
சவுலின் மக்களில் சிலர் அவரிடம் இவ்வாறு சொல்லியதுபோல், அது இரத்தத்தைப்பற்றிய கடவுளுடைய சட்டத்தை மீறுவதாய் இருந்தது: “இதோ, இரத்தத்தோடிருக்கிறதைப் புசிக்கிறதினால் ஜனங்கள் கர்த்தருக்கு ஏலாத பாவம் செய்கிறார்கள்.” (1 சாமுவேல் 14:33) ஆம், மிருகங்கள் வெட்டப்படும்போது, அந்த இறைச்சி சாப்பிடப்படுவதற்கு முன் இரத்தம் நன்றாக வடிக்கப்பட்டிருக்கவேண்டும் என்று நியாயப்பிரமாணம் சொன்னது. இரத்தத்தை வடிப்பதற்காக அளவுகடந்த படிகளை எடுக்கவேண்டும் என்று கடவுள் வற்புறுத்தவில்லை. வடிப்பதற்கு நியாயமான படிகளை எடுப்பதன்மூலம், அவருடைய ஊழியர்கள் இரத்தத்தின் முக்கியத்துவத்திற்கு மதிப்பை வெளிக்காட்ட முடியும். (உபாகமம் 12:15, 16, 21-25) மிருக இரத்தம் பலிசெலுத்தும் முறையில் பலிபீடத்தின்மேல் பயன்படுத்தப்படலாம்; ஆனால் அது சாப்பிடுவதற்கானதல்ல. மனப்பூர்வமான மீறுதலுக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டது; ஏனென்றால் கடவுளுடைய மக்கள் இவ்வாறு சொல்லப்பட்டனர்: “எந்த மாம்சத்தின் இரத்தத்தையும் புசிக்கவேண்டாம்; சகல மாம்சத்தின் உயிரும் அதின் இரத்தந்தானே; அதைப் புசிக்கிற எவனும் அறுப்புண்டுபோவான்.”—லேவியராகமம் 17:10-14.
சவுலின் படைவீரர்கள் மனப்பூர்வமாகக் கடவுளுடைய நியாயப்பிரமாண சட்டத்தை மீறினார்களா? இரத்தத்தின்பேரிலான தெய்வீக சட்டத்திற்கு அவர்கள் முழுமையான அவமதிப்பைக் காண்பித்தார்களா?—எண்ணாகமம் 15:30-ஐ ஒப்பிடவும்.
நாம் அந்த முடிவுக்கு வரவேண்டியதில்லை. அவர்கள் ‘அந்த மிருகங்களை தரையிலே போட்டு அடித்து இரத்தத்தோடு புசித்தார்கள்’ என்று பதிவு சொல்கிறது. ஆகவே அவர்கள் இரத்தத்தை வடிப்பதற்காக ஏதாவது முயற்சியை எடுத்திருக்கக்கூடும். (உபாகமம் 15:23) இருப்பினும், அவர்களுடைய சோர்வுற்ற, கடும்பசி நிலையில், கொல்லப்பட்ட உடல்களை தொங்கவிட்டு, இயல்பாக இரத்தம் வடிவதற்குப் போதுமான சமயத்தைக் கொடுக்கவில்லை. அவர்கள் ஆடுகளையும் மாடுகளையும் “தரையிலே போட்டு” அடித்துக்கொன்றனர்; அது வடிவதைக் குறைத்திருக்கக்கூடும். மேலும் அவர்கள் இரத்தத்திலே கிடந்திருக்கிற அந்த உடல்களிலிருந்து வேகமாக இறைச்சியை வெட்டினார்கள். எனவே, கடவுளுடைய சட்டத்திற்குக் கீழ்ப்படிவதைத் தங்களுடைய மனதில் கொண்டிருந்தாலும், அதைச் சரியான முறைகளிலோ போதுமான அளவிற்கோ கடைப்பிடிக்கவுமில்லை.
விளைவு என்னவென்றால் ‘ஜனங்கள் இரத்தத்தோடு புசித்தனர்’; அது பாவமாக இருந்தது. சவுல் இதை உணர்ந்து, ஒரு பெரிய கல் தன்னிடம் உருட்டிக்கொண்டுவரப்படச் செய்தார். அவர் படைவீரர்களிடம் கட்டளையிட்டார்: “இரத்தத்தோடிருக்கிறதைச் சாப்பிடுகிறதினாலே, கர்த்தருக்கு ஏலாத பாவம் செய்யாதபடிக்கு, அவரவர் தங்கள் மாட்டையும் அவரவர் தங்கள் ஆட்டையும் என்னிடத்தில் கொண்டுவந்து, இங்கே அடித்து பின்பு சாப்பிடவேண்டும்.” (1 சாமுவேல் 14:33, 34) குற்ற உணர்ச்சியுடைய படைவீரர்கள் கீழ்ப்படிந்தனர்; “சவுல் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.”—1 சாமுவேல் 14:35.
மிருகங்களைக் கல்லின்மேல் அடித்துக்கொல்வது ஒருவேளை போதுமான இரத்த வடிதலுக்கு உதவியிருக்கலாம். மிருகங்களின் இறைச்சியை அடித்துக்கொல்லப்பட்ட இடத்திலிருந்தே சாப்பிடலாம். பாவம் செய்தவர்களிடம் கடவுளுடைய இரக்கத்தை நாடுவதற்கு, வடிக்கப்பட்ட இரத்தத்தில் கொஞ்சத்தை எடுத்து சவுல் பலிபீடத்தில் பயன்படுத்தியிருக்கக்கூடும். படைவீரர்கள் மிகவும் களைப்பாகவும் பசியோடும் இருந்தபோதும்கூட அவர்கள் எடுத்திருந்த முயற்சிகளை யெகோவா அறிந்ததால், அவர் இரக்கத்தைக் காண்பித்ததாகத் தோன்றுகிறது. சவுலின் அவசரமான ஆணை அந்த மனிதரை அப்படிப்பட்ட இக்கட்டான நிலைமைக்குள் தள்ளியது என்ற காரியத்தையும் கடவுள் கவனத்தில் எடுத்திருக்கக்கூடும்.
தெய்வீக சட்டத்தை அவமதிப்பதற்கு ஓர் அவசர நிலை, ஒரு சாக்குப்போக்காக இல்லை என்பதை இந்தப் பதிவு காண்பிக்கிறது. ஓர் ஆணையை எடுப்பதற்குமுன் கவனமாக சிந்திப்பதன் அவசியத்தை காணவும் இது நமக்கு உதவவேண்டும்; ஏனென்றால் ஓர் அவசரமான பொருத்தனை தனிப்பட்டவிதத்தில் நமக்கும் மற்றவர்களுக்கும் பிரச்னைகளை உருவாக்கலாம்.—பிரசங்கி 5:4-6.