அன்புக் கொடியின் கீழ் ஐக்கியமாயிருத்தல்
“எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்.” —1 பேதுரு 4:8.
அதுபோன்ற அன்பை நாம் இன்று கடவுளுடைய மக்களிடத்தில் காண்கிறோமா? நிச்சயமாகவே காண்கிறோம்! இது தாவீது ஆதரித்தது போல யெகோவாவின் அரசுரிமையை மதித்துணர்ந்து அதை ஆதரிப்பதை மையமாகக் கொண்ட ஓர் அன்பு. குறிப்பிடத்தக்க விதத்தில், 1922 முதல் “தாவீதின் குமாரனாகிய” இயேசு கிறிஸ்துவின் அபிஷேகம்பண்ணப்பட்ட சகோதரர்கள், கடவுளுடைய ராஜ்யம் சமீபத்திலிருக்கிறது என்றும் சாத்தானின் ஒடுக்குதல் மிகுந்த ஆட்சியின் வீரர்கள் கடவுள் நியமித்திருக்கும் நீதிபதியாகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்து ஆக்கினைத்தீர்ப்பை எதிர்ப்படுகிறார்கள் என்றும் பூமியெங்கும் அறிவித்து வந்திருக்கிறார்கள்.—மத்தேயு 21:15, 42–44; வெளிப்படுத்துதல் 19:11, 19–21.
2 தாவீது ‘யெகோவாவின் இருதயத்துக்கு ஏற்ற ஒரு மனிதனாக’ இருந்தான். யெகோவாவின் பேரிலும் அவருடைய நீதியின் பேரிலும் அவனுக்கு இருந்த அன்பில் இது வெளிப்படையாயிருந்தது—இந்தத் தன்மைகள் தாவீதில் இருந்தன என்பதைக் கோழை மன்னன் சவுலும்கூட ஏற்றான்—ஆம், பயப்படாத தன்மை, யெகோவாவுக்கு இருதயப்பூர்வமான பக்திவைராக்கியம், தலைமை ஏற்று நடத்தும் ஆற்றல் மற்றும் தேவாட்சி ஒழுங்குக்கு மனத்தாழ்மையுடன்கூடிய கீழ்ப்படிதல்.—1 சாமுவேல் 13:14; 16:7, 11–13; 17:33–36; 24:9, 10, 17.
3 கோலியாத் மீது வெற்றிகொண்ட தாவீது அதைத் தொடர்ந்து சவுலிடம் அறிக்கை செய்ய வருகிறான். அந்தச் சமயத்தில்தான் நீதியின் பேரில் பிரியமாயிருந்த மற்றொருவன் முன்வந்தான். அவன்தான் யோனத்தான், சவுல் அரசனின் மூத்த மகன். “அவன் [தாவீது] சவுலோடே பேசி முடிந்த பின்பு, யோனத்தானுடைய ஆத்துமா தாவீதின் ஆத்துமாவோடே ஒன்றாய் இசைந்திருந்தது; யோனத்தான் அவனைத் தன் உயிரைப் போலச் சிநேகித்தான்.” (1 சாமுவேல் 18:1) உடல் வலிமையும் கவண் கல் எறிவதில் சிறந்தவனாயிருப்பதும் அல்ல, ஆனால் கடவுளுடைய நாமத்துக்கு ஏற்பட்டிருக்கும் நிந்தனையைப் போக்க வேண்டும் என்பது குறித்து தாவீதுக்குள் பற்றியெறிந்த வைராக்கியம், அவனுடைய தன்னலமற்ற தன்மை, யெகோவாவில் அவன் முழுமையாக சார்ந்திருந்தது ஆகியவையே யோனத்தானின் இருதயப்பூர்வமான பிரியத்தைப் பெற்றுத்தந்தது.—சங்கீதம் 8:1, 9; 9:1, 2-ஐ ஒப்பிடவும்.
4 யோனத்தான் தாவீதைவிட ஏறக்குறைய முப்பது வயது பெரியவனாயிருந்த போதிலும், அவன் இந்த இளம் வீரனுடன் நிலைத்திருக்கும் நட்பில் இணைந்தான். “யோனத்தான் தாவீதைத் தன் ஆத்துமாவைப்போலச் சிநேகித்ததினால், அவனும் இவனும் உடன்படிக்கைப்பண்ணிக்கொண்டார்கள். யோனத்தான் போர்த்துக்கொண்டிருந்த சால்வையைக் கழற்றி, அதையும், தன் வஸ்திரத்தையும், தன் பட்டயத்தையும், தன் வில்லையும், தன் கச்சையையும்கூடத் தாவீதுக்குக் கொடுத்தான்.” (1 சாமுவேல் 18:3, 4) யோனத்தானின் பங்கில் மதித்துணர்வுக்கு என்னே ஒரு வெளிக்காட்டு! இயல்பாகவே யோனத்தான்தான் சவுலின் வாரிசு. என்றபோதிலும் அவன் தாவீதின்பேரில் அனல்கொண்ட, நியமத்தின்பேரில் சார்ந்த அன்பையும், அரசனாக அபிஷேகம்பண்ணப்பட்டிருக்கும் தாவீதுக்கு, யெகோவாவின் நாமத்தையும் அரசுரிமையையும் மகிமைப்படுத்துவதைத் தன் நோக்கமாய்க் கொண்டிருந்தவனுக்குக் கீழ்ப்படிதலையும் வெளிக்காட்டினான்.—2 சாமுவேல் 7:18–24; 1 நாளாகமம் 29:10–13.
5 யோனத்தான் தானே நீதிக்காகப் போரிடும் வீரனாக இருந்தான். “அநேகம்பேரைக் கொண்டாகிலும் கொஞ்சம்பேரைக் கொண்டாகிலும் இரட்சிக்க யெகோவாவுக்குத் தடையில்லை” என்று அறிக்கைசெய்திருந்தான். ஏன்? ஏனென்றால் தேவாட்சிப் போர்களில் வெற்றிபெற்றிட எப்பொழுதுமே தெய்வீக வழிநடத்துதலை நாட வேண்டிய அவசியத்தை யோனத்தான் மதித்துணர்ந்தான். யோனத்தான் அறியாதவனாய் ஒரு தவறிழைத்தபோது சவுல் அவனுக்கு மரணதண்டனை விதித்தான். யோனத்தான் அந்தத் தீர்ப்பைத் தாழ்மையோடு ஏற்றுக்கொண்டான். மகிழ்ச்சிக்குரிய விதத்தில், மக்கள் அவனை மீட்டுக்கொண்டார்கள்.—1 சாமுவேல் 14:6, 9, 10, 24, 27, 43–45.
உத்தம அன்பை வெளிப்படுத்துதல்
6 ஒரு வீரனாக தாவீதுக்குக் கிட்டிய புகழைக் கண்டு சவுல் பொறாமைக்கொண்டதால் அவனைக் கொல்ல வகைதேடினான், ஆனால் யோனத்தானின் உத்தம அன்பு உதவிக்கு வந்தது! பதிவு இப்படியாக வாசிக்கிறது: “சவுலின் குமாரனாகிய யோனத்தானோ, தாவீதின்மேல் மிகவும் பிரியமாயிருந்தான்; அதனால் யோனத்தான் தாவீதுக்கு அதை தெரிவித்து: என் தகப்பனாகிய சவுல் உம்மைக் கொன்றுபோட வகைதேடுகிறார். இப்போதும் நாளைக் காலமே நீர் எச்சரிக்கையாயிருந்து, மறைவான இடத்தில் ஒளிந்துக்கொண்டிரும்.” அந்தச் சமயத்தில் யோனத்தான் சவுலை சாந்தப்படுத்தினான், தாவீதின் உயிர் காக்கப்பட்டது. ஆனால் தாவீது “பெலிஸ்தரோடே யுத்தம்பண்ணி, அவர்களுக்குள் மகா சங்காரம் பண்ணி” பெற்ற கூடுதலான வெற்றிகள் சவுலின் பகைமையை கிளறியது. மீண்டும் தாவீதைக் கொல்ல தீர்மானித்தான், தாவீது தப்பியோடினான்.—1 சாமுவேல் 19:2–10.
7 காலப்போக்கில் நாடோடியாயிருந்த தாவீது யோனத்தானை சந்தித்தபோது, அவன் கூறியதாவது: “உமது மனவிருப்பம் இன்னது என்று சொல்லும், அதின்படி உமக்குச் செய்வேன்.” இருவருமே யெகோவாவுக்கு முன்பு உடன்படிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தினார்கள். யோனத்தானின் வீட்டாருக்குத் தயவாயிருப்பதைத் தான் முறித்துக்கொள்வதில்லை என்று தாவீது உறுதிமொழி கொடுத்தான். அதற்கு அவன் உண்மையுள்ளவனாயுமிருந்தான். “யோனத்தான் தாவீதை மிகவும் சிநேகித்தபடியினால், பின்னும் அவனுக்கு ஆணையிட்டான்; தன் உயிரைச் சிநேகித்ததுபோல அவனைச் சிநேகித்தான்.”—1 சாமுவேல் 20:4–17; 2 சாமுவேல் 21:7.
8 தாவீதைக் கொல்லும் தன் தீர்மானத்தில் சவுல் அரசன் அசையாதவனாயிருந்தான். ஏன், தன்னுடைய சொந்த மகன் யோனத்தான் தாவீதின் சார்பாக பேசிய போது, அவன் மீதே தன் ஈட்டியை எறிந்தான்! எனவே யோனத்தான் தாவீதை வயலில் இரகசியமாக சந்தித்தான். “தாவீது . . . தரையிலே முகங்குப்புற விழுந்து, மூன்றுவிசை வணங்கினான்; அவர்கள் ஒருவரை ஒருவர் முத்தஞ்செய்து அழுதார்கள்; தாவீது மிகவும் அழுதான். அப்பொழுது யோனத்தான் தாவீதை நோக்கி: நீர் சமாதானத்தோடே போம், யெகோவா என்றைக்கும் எனக்கும் உமக்கும், என் சந்ததிக்கும் உமது சந்ததிக்கும், நடுநிற்கும் சாட்சி என்று சொல்லி, யெகோவாவுடைய நாமத்தைக்கொண்டு நாம் இருவரும் ஆணையிட்டுக்கொண்டதை நினைத்துக்கொள்ளும் என்றான்.” இப்படியாக அவர்கள் பிரியாவிடை பெற்றார்கள், தாவீது சீப் வனாந்தரத்தில் ஒரு நாடோடியானான்.—1 சாமுவேல் 20:41, 42.
9 யோனத்தான் தாவீதை அன்போடு தொடர்ந்து உற்சாகப்படுத்தினான். பதிவு இப்படியாகக் குறிப்பிடுகிறது: “அப்பொழுது சவுலின் குமாரனாகிய யோனத்தான் எழுந்து, காட்டிலிருக்கிற தாவீதினிடத்தில் போய், தேவனுக்குள் அவன் கையைத் திடப்படுத்தி: நீர் பயப்படவேண்டாம், என் தகப்பனாகிய சவுலின் கை உம்மைக் கண்டுபிடிக்கமாட்டாது, நீர் இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிருப்பீர்; அப்பொழுது நான் உமக்கு இரண்டாவதாயிருப்பேன்; அப்படி நடக்கும் என்று என் தகப்பனாகிய சவுலும் அறிந்திருக்கிறார் என்றான். அவர்கள் இருவரும் யெகோவாவுக்கு முன்பாக உடன்படிக்கை பண்ணினார்கள்.”—1 சாமுவேல் 23:15–18.
10 அதுதான் தாவீதுக்கும் அவனுடைய உத்தம நண்பனாகிய யோனத்தானுக்கும் கடைசி சந்திப்பாக இருந்தது. பின்பு யோனத்தானும் சவுலும் போரில் பெலிஸ்தருடன் மாண்டுகிடந்தபோது, தாவீது “வில்” என்ற ஒரு புலம்பலை இயற்றினான். அதில் யெகோவாவின் அபிஷேகம்பண்ணப்பட்ட சவுலுக்கு மதிப்பு மரியாதையை வெளிப்படுத்துகிறான், ஆனால் தன்னுடைய பாடலை இந்த வார்த்தைகளால் உச்சக்கட்டத்துக்குக் கொண்டுவந்தான்: “யோனத்தானே, உயரமான ஸ்தலங்களிலே வெட்டுண்டுபோனாயே. என் சகோதரனாகிய யோனத்தானே, உனக்காக நான் வியாகுலப்படுகிறேன்; நீ எனக்கு வெகு இன்பமாயிருந்தாய்; உன் சிநேகம் ஆச்சரியமாயிருந்தது. ஸ்திரீகளின் சிநேகத்தைப்பார்க்கிலும் அதிகமாயிருந்தது. பராக்கிரமசாலிகள் விழுந்துபோனார்களே; யுத்த ஆயுதங்கள் எல்லாம் அழிந்துபோயிற்றே.” (2 சாமுவேல் 1:18, 21, 25–27) பின்பு தாவீது இரண்டாம் முறையாக யூதாவின் மீது அரசனாக அபிஷேகம்பண்ணப்பட்டான்.
நவீன நாளைய இணைப்பொருத்தங்கள்
11 “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது . . . உபதேசத்துக்குப் பிரயோஜனமுள்ள”தாயிருப்பதால், தாவீது, யோனத்தான் ஆகியவர்களைப் பற்றிய விவரப்பதிவிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? (2 தீமோத்தேயு 3:16) “ஸ்திரீகளின் சிநேகத்தைப்பார்க்கிலும் அதிக ஆச்சரியமாயிருக்கும்” ஓர் அன்பு இருக்கிறது என்பதைக் கவனிக்கிறோம். உண்மைதான், விவாகத்தைக் குறித்த யெகோவாவின் சட்டங்களை மதிக்கும்போது “ஸ்திரீகளின் சிநேகம்” இன்பமாயும் நிறைவாயும் இருக்கக்கூடும். (மத்தேயு 19:6, 9; எபிரெயர் 13:4) “இஸ்ரவேலே கேள்: யெகோவாவே நமது கடவுள், யெகோவா ஒருவரே. நீ உன் கடவுளாகிய யெகோவாவிலே உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு பலத்தோடும் அன்புகூரவேண்டும்,” என்ற இந்தக் கட்டளைக்கிணங்க, தாவீதும் யோனத்தானும் அன்பின் ஓர் அருமையான அம்சத்தைச் சிறப்பித்துவிட்டார்கள்.—உபாகமம் 6:4, 5, NW.
12 யெகோவாவுடைய நாமத்தின்மீது பகைவர்கள் கொண்டுவந்த எல்லா நிந்தையையும் நீக்கிப்போட போராடிய அந்தச் சமயத்தில் தாவீதும் யோனத்தானும் அந்த அன்பை வெளிப்படுத்துவதில் ஒன்றுபட்டிருந்தார்கள். இதைச் செய்யும்போது, அவர்கள் ‘ஒருவரிலொருவர் ஊக்கமான அன்பை’ வளர்ப்பவர்களாயும் இருந்தனர். (1 பேதுரு 4:8) இது சம்பந்தமாக அவர்கள் அனுபவித்துவந்த தோழமை லேவியராகமம் 19:18-ல் காணப்படும் கட்டளையையும் கடந்துவிட்டது: “உன்னில் நீ அன்புகூருவதுபோல் பிறனிலும் அன்புகூரு.” ஆம், “நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளை”யில் குறிப்பிடப்பட்டிருக்கும் அன்புக்கு அது முன் நிழலாக இருந்தது. யெகோவாவின் சித்தத்திற்கு முழுமையாகக் கீழ்ப்பட்டிருந்த காரியத்தில் மட்டுமல்ல, ஆனால் “தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக்கொடுக்கிற”தில் மனமுள்ளவராயிருந்ததிலும் இயேசுவின் அன்பு தன்னையே தியாகம் செய்யும் அன்பாக இருந்தது.—யோவான் 13:34; 15:13.
ஐக்கியமான ஒரே “மந்தை”
13 “சிறு மந்தை”யைச் சேர்ந்த அபிஷேகம்பண்ணப்பட்ட கிறிஸ்தவர்கள் நவீன நாளைய கோலியாத்துடன் போரிடுவதில் முதன்மையானவர்களாக இருந்திருக்கிறார்கள். என்றபோதிலும் 1935 முதல், அவர்களை இன்னொரு பெரிய “தொழுவத்திலுள்ள” ராஜ்ய பிரஸ்தாபிகள் சேர்ந்திருக்கிறார்கள். இந்த “வேறே ஆடுகள்” அபிஷேகம்பண்ணப்பட்ட மீதியானவர்களுடன் “தாவீதின் குமாரனாகிய” “ஒரே மேய்ப்பரின்” கீழ் “ஒரே மந்தை”யாக ஓர் உன்னதக் கட்டாகிய அன்பான ஐக்கியத்தில்—யோனத்தானுக்கும் தாவீதுக்கும் இடையிலிருந்ததுபோன்ற ஐக்கியத்தில் ஒன்றுபட்டிருக்கிறார்கள்.—லூக்கா 12:32; யோவான் 10:16; எசேக்கியேல் 37:24.
14 இந்த யோனத்தான் வகுப்பு ஒரு திரள் கூட்டமாகப் பெருக ஆரம்பிக்கும்போது, இரண்டாம் உலக மகா யுத்தம் வெடித்தது. எனவே அபிஷேகம்பண்ணப்பட்டவர்களும் அவர்களுடைய தோழர்களும் கடுமையாக சோதிக்கப்பட்டார்கள். அவை கடுமையான துன்புறுத்துதலின் ஆண்டுகள். அவை அநேகமாக குருவர்க்கத்தினரால் தூண்டப்பட்டவை. அபிஷேகம்பண்ணப்பட்டிருந்த தாவீதையும் அதற்குப் பின்பு அவனிடம் அன்புள்ளவனாகத் தன்னைக் காண்பித்த யோனத்தானையும் கொல்லுவதற்கான சவுலின் கொலை முயற்சிகளுக்கு இது இணைப்பொருத்தமாக இருக்கிறது. இந்தக் காலப்பகுதியின்போது தாவீது மற்றும் யோனத்தான் வகுப்பினர் காண்பித்த ஊக்கமான அன்புதான் என்னே! மத்தேயு 25:35–40-ல் இயேசு கொடுத்த உவமை அநேக சமயங்களில் சொல்லர்த்தமான நிறைவேற்றமுடையதாயிருந்தது.a
15 யெகோவாவின் சாட்சிகள் உத்தமத்தைக் காத்துக்கொள்ளுதல் நவீன சவுல் வகுப்பாருக்கு எவ்வளவு முரணாக இருக்கிறது! இந்த “உலகத்தின் பாகமாயில்லாத” சாட்சிகள் “ஒருவரிலொருவர் அன்புகூருங்கள்” என்ற கட்டளைக்குப் பூகோள அளவில் கீழ்ப்படிந்திருக்கிறார்கள். (யோவான் 15:17–19) மறுபட்சத்தில், இரண்டு உலக மகா யுத்தங்களிலும் இலட்சக்கணக்கான இராணுவ வீரர்கள் மற்ற தேசங்களிலிருந்த தங்களுடைய உடன் மதத்தாரைக் கொன்றுகொண்டிருந்த அதே சமயத்தில் இரண்டு பக்கங்களிலுமிருந்த கிறிஸ்தவமண்டல குருவர்க்கம் வெற்றிக்காகத் தங்களுடைய தெய்வத்திடம் ஜெபித்தது. சவுலை கலங்கப்பண்ணிக்கொண்டிருந்த “யெகோவாவால் வரவிடப்பட்ட ஒரு பொல்லாத ஆவி” வெளிப்படுத்துதல் 8-ம் அதிகாரத்தில் விவரிக்கப்பட்டிருக்கும் தேவதூதன் ஊற்றிய வாதைகளின் விளைவுக்குச் சரியாகப் பொருந்தக்கூடும். கிறிஸ்தவமணநட்லத்தின் குரு வர்க்கம் யெகோவாவின் ஆவியைக் கொண்டில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.—1 சாமு. 16:14; 18:10–12; 19:10; 20:32–34.
16 1918-ல் குருவர்க்கம் யுத்த நெருக்கடி நிலையைப் பயன்படுத்தி உவாட்ச்டவர் சங்கத்தின் பொறுப்பான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், கடைசியில் அவர்களை சிறையிலிடவும் ஐக்கிய மாகாணங்களிலிருந்த அரசியல் அதிகாரங்களைத் தொடர்ந்து ஏவியது. (இந்தப் பைபிள் மாணாக்கர்கள் பின்பு குற்றப்பழிக்கு முழுவதுமாக விலக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்கள்.) இரண்டாம் உலக மகா யுத்தத்தின்போது, வல்லரசுகளின் பிரதேசங்களிலும் பிரிட்டிஷ் குடியரசுப் பிரதேசங்களிலும் மத அழுத்தங்களின் காரணத்தால் யெகோவாவின் சாட்சிகள் தடைவிதிக்கப்பட்டனர். உதாரணமாக, யெகோவாவின் சாட்சிகள் ஆஸ்திரேலியாவில் தடைவிதிக்கப்படுவதற்கு முன்பு சிட்னியின் தலைமைக்குரு (பின்னால் கார்டினலாயிருந்தார்) எழுதிய கடிதத்தின் நேர்ப்படிவத்தைக் கவனியுங்கள். ஆஸ்திரேலியாவின் உயர் நீதிமன்றத்தில் விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டபோது, விசாரணை செய்த நீதிபதி திரு. ஸ்டார்க் அதை “விதிக்கட்டுப்பாடற்றது, ஏறுமாறானது, ஒடுக்குவது,” என்று விவரித்தார். ஜூன் 14, 1943-ல் தடை தளர்த்தப்பட்டது, இழப்பை அரசு ஈடுகட்டுவதற்கான செயல்முறைகள் மேற்கொள்ளப்பட்டது. அண்மை ஆண்டுகளில், ஆப்பிரிக்கா, ஆசியா போன்ற நாடுகளில் அரசுகளின் மீதான மத அழுத்தத்தால் யெகோவாவின் சாட்சிகள் கடுமையாக ஒடுக்கப்படுகிறார்கள். இப்படியாக ஒரு நவீன நாளைய சவுல்—கிறிஸ்தவமண்டலத்தின் குருவர்க்கம்—கடவுளுடைய மக்களை வேட்டையாடுவதில் தொடர்ந்திருக்கிறது.
17 1980-களில் யெகோவாவின் சாட்சிகள் தொடர்ந்துவந்திருக்கும் அரசியல்–மத அழுத்தங்களை எப்படி சந்தித்திக்கிறார்கள்? ஏன், தாவீது கோலியாத்தின் எதிர்ப்பை சந்தித்த விதமாகவே, தாவீதும் யோனத்தானும் சவுலின் எதிர்ப்பை சந்தித்த விதமாகவே சந்தித்தனர்! அவர்களுக்குப் பயமில்லை, அரசுரிமை பிரச்னை சம்பந்தமாக அவர்கள் தங்களுடைய உத்தமத்தைக் காத்துக்கொள்ள தீர்மானமுள்ளவர்களாக இருக்கிறார்கள், ஏனென்றால் கடவுளுடைய ராஜ்யம்தான் வெற்றிபெறும் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். (தானியேல் 2:44) துன்புறுத்துதலை எதிர்ப்படும்போது, அவர்கள் ஐக்கியமாக அதை சந்திக்கிறார்கள், உலகம் கண்டிராத சர்வதேச அன்பின் கட்டில் அவர்கள் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்துகின்றனர். போர்க் காலத்தில் நடுநிலை வகிப்பவர்களாக, மற்ற தேசங்களிலிருக்கும் தங்களுடைய உடன் விசுவாசிகளின் இரத்தத்தைச் சிந்துவதில்லை. (மீகா 4:3, 5) இப்படியாக, “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்,” இயேசு குறிப்பிட்ட அந்தத் தொகுதி இவர்களே என்று தங்கள் செயலில் காண்பிக்கிறார்கள். (யோவான் 13:35) ஒரு பூகோள அளவான சகோதரத்துவத்தில், யெகோவாவின் சாட்சிகள் தங்களைப் ‘பூரணக் கட்டாகிய அன்பால் தரித்துக்கொண்டிருக்கிறார்கள்;’ இந்தக் கட்டு அனைத்து இனம், மொழி, தேசம் ஆகிய தடைகளைக் கடந்ததாயிருக்கிறது.—கொலோசெயர் 3:14.
“ஊக்கமான அன்பைக்” காண்பித்தல்
18 “யோனத்தானுடைய ஆத்துமா தாவீதின் ஆத்துமாவோடே ஒன்றாய் இசைந்திருந்தது; யோனத்தான் அவனைத் தன் உயிரைப் போலச் சிநேகித்தான்,” என்பதை நினைவுக்குக் கொண்டுவாருங்கள். இந்தக் “கடைசி நாட்களில்” இதற்கு என்னே குறிப்பிடத்தக்க இணைப்பொருத்தம் இருந்திருக்கிறது! (2 தீமோத்தேயு 3:1, 14) அர்த்தமற்ற குழப்பம் மிகுந்த வன்முறை காணும் இந்தச் சகாப்தம் முழுவதிலும் அன்பான உலகளாவிய ஐக்கியத்தைக் காத்துவந்திருக்கும் ஒரு தொகுதி இருந்துவந்திருக்கிறது. அதுதான் யெகோவாவின் சாட்சிகள். கிறிஸ்தவ நடுநிலையாளர்களாய் அவர்கள் தங்களுடைய சிருஷ்டிகரை எல்லா மனிதவர்க்கத்துக்கும் பேரரசராக கனம்பண்ணுகிறார்கள். (சங்கீதம் 100:3) ஓ, நவீன நாளைய இராட்சதர்—கோலியாத்தின் அரசியல் உறவினர்—ஆவிக்குரிய இஸ்ரவேலரைத் தொடர்ந்து நிந்தித்துக்கொண்டிருக்கக்கூடும். (2 சாமுவேல் 21:21, 22) நவீன நாளைய சவுல்—கிறிஸ்தவமண்டல குருவர்க்கம்—தாவீது மற்றும் யோனத்தான் வகுப்புக்குத் தொடர்ந்து துன்பம் கொடுத்துக்கொண்டிருக்கக்கூடும். (1 சாமுவேல் 20:32, 33) ஆனால் “யுத்தம் யெகோவாவுடையது.” உன்னதப் பேரரசராக அவர் கடைசியில் தம்முடைய உத்தம ஊழியர்களுக்காக வெற்றியைப் பெற்றிடுவார். தாவீது வகுப்பின் இணங்கிவிடாத நிலைநிற்கையைப் பார்த்து—உலகெங்கிலும்—முன்பு துன்புறுத்தியவர்கள் உட்பட யோனத்தான் வகுப்பைச் சேர்ந்த இலட்சக்கணக்கானோர் கிறிஸ்துவின் ‘அன்புக் கொடி’யின்கீழ் அவர்களைச் சேர்ந்திருக்கின்றனர்.b—1 சாமுவேல் 17:47; சாலொமோனின் உன்னதப்பாட்டு 2:4.
19 இலட்சக்கணக்கான இந்த யெகோவாவின் சாட்சிகளின் விரிவாகிக்கொண்டிருக்கும் நடவடிக்கைகளை 1989 யெகோவாவின் சாட்சிகளின் வருடாந்தர புத்தகம், பக்கங்கள் 34-41-ல் நீங்கள் விமர்சிக்கலாம். 1979–88 ஆகிய பத்தாண்டுகளின் போது, ஸ்தாபிக்கப்பட்ட கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கித்துவந்தவர்களின் எண்ணிக்கை 21,86,075-லிருந்து 35,92,654-ஆக அதிகரித்திருக்கிறது, 64.3 சதவிகித வளர்ச்சி. உலகமுழுவதுமாக இவர்கள் ஒரே பொதுவான நம்பிக்கையையும், கடவுளுக்கு ஒரே பொதுவான சேவையையும், பைபிளின் ஒழுக்க நியமங்களுக்கு இணக்கமான ஒரே பக்திவைராக்கியத்தையும் பகிர்ந்துகொள்வதில் உண்மையிலேயே ஐக்கியமாயிருக்கும் மக்கள். இயேசுவின் இந்த வார்த்தைகள் இன்று இந்த நெருங்கிய ஒற்றுமையான சர்வதேச தொகுதிக்குத்தான் பொருந்துகிறது: “நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல, நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்.”—யோவான் 15:10; 1 கொரிந்தியர் 1:10-ஐ ஒப்பிடவும்.
20 யெகோவாவின் சாட்சிகள் 200-க்கும் அதிகமான மொழிகளில் பிரசங்கிக்கிறவர்களாக இருந்தபோதிலும், இவர்கள் “ஒருமனப்பட்டு” கடவுளை சேவிக்கையில் சத்தியம் என்னும் “சுத்தமான பாஷையை” பேசுகிறார்கள். இதில், அவர்கள் தாவீது, யோனத்தானின் அன்பான முன்மாதிரியைப் பின்பற்றுகிறார்கள். (செப்பனியா 3:9; 1 சாமுவேல் 20:17; நீதிமொழிகள் 18:24) நீங்கள் கடவுளுடைய மக்களுடன் இன்னும் ஐக்கியமாகாதவர்களாயிருந்தால், நவீன நாளைய யோனத்தான் வகுப்பின் பாகமாக இருக்க நீங்கள் விரும்ப மாட்டீர்களா? அதை உங்கள் இலக்காக வைத்துக்கொள்ளலாம், அதை அடைய உங்களுக்கு உதவிசெய்வதில் யெகோவாவின் சாட்சிகள் ஊக்கமான அன்பைக் காண்பிப்பார்கள். (w89 1⁄1)
(கடிதத்தின் மொழிபெயர்ப்பு)
திரு.ஜெனிங்ஸ், M.P. தங்களிடம் பிரதிநிதித்துவம் செய்த காரியம் சம்பந்தமாகத் தாங்கள் அனுப்பிய 9-ம் தேதியிட்ட கடிதத்துக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன்.
உண்மைதான், பிரதிநிதித்துவம் செய்யப்பட்டிருக்கும் காரியம் சம்பந்தமாகத் தாங்கள் கூடியவரை அதிக கவனம் செலுத்தவேண்ம் என்பது மதித்துணரப்படுகிறது.
என்றபோதிலும், உங்களுக்கு இருக்கும் ஒரே சந்தேகம், இந்த மக்கள் கிறிஸ்தவ மதத்தின் கோட்பாடுகளைப் பரப்புவதாக உரிமைபாராட்டுகிறார்கள் என்ற உண்மையிலிருந்து எழுகிறது என்றால், இதை அவர்கள் செய்வதன்பேரிலான உம்முடைய தீர்ப்பு, அவர்கள் உரிமைப்பாராட்டும் காரியத்தின் அடிப்படையிலில்லாமல் உண்மைகளின் அடிப்படையில் இருக்கட்டும் என்று நான் மிக்க மரியாதையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். உண்மைகளுக்கு, நியு செளத் வேல்ஸ் காவல் துறையினர் சான்றொப்பமிட்ட அவர்களுடைய சொந்த பிரசுரங்களையும் அவர்களுடைய சொந்த வார்த்தைகளையும் ஆவணங்களையும் சமர்ப்பிக்கிறேன். கிறிஸ்தவ மதத்துக்கு மிகவும் முரண்பாடான எதையும் கற்பனை செய்துபார்ப்பது கடினமாயிருக்கும்.
விவாதத்தின் கீழுள்ள இந்தச் சமுதாயத்தின்பேரில் காவல் துறை இன்னும் அதிகத் திறம்பட்டவிதத்தில் நடவடிக்கை மேற்கொள்ள, அதைக் காமன்வெல்த் அரசு அதிகாரிகள் சட்டத்துக்குப் புறம்பான ஒரு தொகுதியாக அறிவிப்பார்கள் என்ற நம்பிக்கையை நியு செளத் வேல்ஸ் காவல்துறை ஆணையாளர் வெளிப்படுத்தியிருக்கிறார்.
விமர்சனக் கேள்விகள்
◻யோனத்தான் தாவீதிடம் எவ்விதம் உத்தம அன்பை வெளிக்காட்டினான்?
◻தாவீதுக்கும் யோனத்தானுக்கும் இடையேயிருந்த அன்பு எப்படிப்பட்ட அன்புக்கு முன் நிழலாக இருந்தது?
◻கிறிஸ்தவமண்டல குருவர்க்கம் எப்படி தாவீதை வேட்டையாடுவதில் ஈடுபட்ட சவுலைப் போல செயல்பட்டிருக்கிறது?
◻தாவீதுக்கு யோனத்தான் கொண்டிருந்த அன்பு இன்று எதற்கு ஒப்பாயிருக்கிறது?
◻உலகமுழுவதுமுள்ள சாட்சிகளின் ஐக்கியம் எதை வெளிப்படுத்துகிறது?
1. இன்று கடவுளுடைய மக்களிடத்தில் நாம் எதுபோன்ற அன்பை காண்கிறோம்? அபிஷேகம்பண்ணப்பட்ட கிறிஸ்தவர்கள் 1922 முதல் எதைக் குறித்து அறிவித்துவந்திருக்கிறார்கள்?
2. தாவீது ‘யெகோவாவின் இருதயத்துக்கு ஏற்ற ஒரு மனிதன்’ என்று ஏன் அழைக்கப்படலாம்?
3. தாவீதிடமாக யோனத்தானின் மனநிலை என்னவாக இருந்தது?
4. தாவீது அரசனாயிருப்பதற்கு அபிஷேகம்பண்ணப்பட்டிருக்கிறான் என்பதை மதித்துணருகிறவனாக யோனத்தான் என்ன செய்தான்?
5. தேவாட்சிமுறை சார்ந்த போரைக் குறித்ததில் யோனத்தான் எதை மதித்துணர்ந்தான்?
6. யோனத்தானின் உத்தம அன்பு எவ்விதம் தாவீதின் பாதுகாப்புக்குத் துணை நின்றது?
7. நாடோடியாயிருந்த தாவீதை யோனத்தான் சந்தித்தபோது, ஓர் உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிற விதத்தில் அவர்கள் ஒருவருக்கொருவர் என்ன சொல்லிக் கொண்டார்கள்?
8. யோனத்தானும் தாவீதும் ஏன் வயலில் இரகசியமாக சந்தித்தார்கள்? அந்தச் சமயத்தில் என்ன சம்பவித்தது?
9, 10. (எ) இருவருக்குமே அநேகமாய்க் கடைசி சந்திப்பாக இருந்திருக்கக்கூடிய அந்தச் சமயத்தில் யோனத்தான் எப்படி தாவீதைத் தொடர்ந்து உற்சாகப்படுத்தினான்? (பி) யோனத்தானும் சவுலும் பெலிஸ்தர்களால் கொல்லப்பட்ட போது, தாவீது என்ன புலம்பலை இயற்றினான்? அதை அவன் எப்படி உச்சக்கட்டத்திற்குக் கொண்டுசென்றான்?
11, 12. (எ) தாவீதும் யோனத்தானும் எப்படிப்பட்ட அன்பை சிறப்பாக வெளிப்படுத்தினார்கள்? (பி) தாவீதுக்கும் யோனத்தானுக்கும் இடையிலிருந்த ஊக்கமான அன்பு எதற்கு முன் நிழலாக இருந்தது?
13. குறிப்பாக 1935 முதல் ராஜ்ய பிரஸ்தாபிகளின் எந்தத் தொகுதி காட்சியில் தோன்றியிருக்கிறது? அபிஷேகம்பண்ணப்பட்ட கிறிஸ்தவர்கள் அவர்களுடன் எப்படிப்பட்ட ஐக்கியத்தைக் கொண்டிருக்கிறார்கள்?
14. சவுல் தாவீதைக் கொல்ல முயன்றதும், யோனத்தான் தாவீதுடன் அன்பாய்த் தன்னை அடையாளப்படுத்தினதும் எதற்கு இணைப்பொருத்தமுடையதாயிருந்தது?
15. (எ) சாட்சிகளின் எந்தப் போக்கு நவீன நாளைய சவுல் வகுப்பினரின் போக்குக்கு முரணாக இருக்கிறது? (பி) சவுலை கலங்கப்பண்ணிக்கொண்டிருந்த “யெகோவாவால் வரவிடப்பட்ட ஒரு பொல்லாத ஆவி”க்கு இணைப்பொருத்தமாக நம்முடைய நாளில் எது இருக்கக்கூடும்?
16. (எ) யெகோவாவின் மக்களை ஒடுக்குவதற்குக் குருவர்க்கம் எப்படி இரண்டு உலக மகா யுத்தங்களையும் பயன்படுத்தியது? (பி) அண்மை ஆண்டுகளில், கடவுளுடைய மக்களை வேட்டையாடுவதில் நவீன நாளைய சவுல் தொடர்ந்து ஈடுபட்டுவந்திருக்கிறான் என்று ஏன் சொல்லலாம்?
17. (எ) தொடர்ந்திருக்கும் அரசியல்–மத அழுத்தங்களை யெகோவாவின் சாட்சிகள் எவ்விதம் சந்தித்திருக்கின்றனர்? (பி) சாட்சிகளின் உலகளாவிய ஐக்கியம் வெளிக்காட்டுவது என்ன?
18. (எ) தாவீதின் பேரில் யோனத்தான் காண்பித்த அன்புக்கு இன்று இணைபொருத்தமாக இருப்பது என்ன? இதற்கு அத்தாட்சி எப்படி? (பி) தாவீது வகுப்பாரின் இணங்கிச்செல்லாத நிலைநிற்கையின் விளைவு என்னவாக இருந்திருக்கிறது?
19, 20. (எ) 1989 யெகோவாவின் சாட்சிகளின் வருடாந்தர புத்தகம், பக்கங்கள் 34-41-லுள்ள அட்டவணை எடுத்துக் காட்டும் சாட்சிகளின் நடவடிக்கைகளின் சில முக்கிய குறிப்புகள் என்ன? (பி) 1979-88-ன் பத்தாண்டுகளில் சாட்சிகளின் வளர்ச்சி விகிதம் என்னவாயிருந்திருக்கிறது? (சி) சாட்சிகள் உலகமுழுவதும் உண்மையிலேயே ஐக்கியப்பட்ட ஒரு ஜனம் என்று ஏன் சொல்லப்படலாம்? எனவே என்ன கேள்வி எழும்புகிறது?
a இதற்கு ஓர் அருமையான எடுத்துக்காட்டு 1972 யெகோவாவின் சாட்சிகளின் வருடாந்தர புத்தகம் (1972 Year Book of Jehovah’s Witnesses) பக்கம் 216, பாரா 3 முதல் பக்கம் 217, பாரா 3 வரை விவரிக்கப்பட்டிருக்கிறது.
b 1988 யெகோவாவின் சாட்சிகளின் வருடாந்தர புத்தகம் (1988 Year Book of Jehovah’s Witnesses), பக்கங்கள் 150–4.