அன்னாள் எவ்வாறு மன அமைதி பெற்றாள்?
உண்மையுள்ள ஒரு பெண் சத்தமாகச் செய்த ஜெபத்தில் யெகோவாவைத் துதிக்கிறாள். தன்னை கடவுள் புழுதியிலிருந்து தூக்கியெடுத்து உயர்த்தியிருப்பதாகவும் துக்கத்தைப் போக்கி சந்தோஷத்தைக் கொடுத்திருப்பதாகவும் சொல்கிறாள்.
அந்தப் பெண்ணின் பெயர் அன்னாள். என்ன மாபெரும் மாற்றம் அவளை இவ்வாறு சொல்ல வைத்தது? அவள் ஏன் இப்போது இவ்வளவு மகிழ்ச்சியாய் இருக்கிறாள்? அவளுடைய அனுபவத்திலிருந்து நாம் எப்படிப் பயன் அடையலாம்? இந்தக் கேள்விகளுக்குப் பதில்களைக் கண்டுபிடிப்பதற்கு அன்னாளின் சரிதையை நாம் சிந்திப்போம்.
வேதனையில் வாடிய குடும்பம்
எப்பிராயீம் பிராந்தியத்தில் எல்க்கானா என்ற லேவியன் வசிக்கிறார். இவருக்கு இரண்டு மனைவிகள். அவர்களில் ஒருத்தியின் பெயர் அன்னாள். (1 சாமுவேல் 1:1, 2அ; 1 நாளாகமம் 6:33, 34) பலதார மணம் செய்யும் ஏற்பாடு மனிதர்களுக்கான கடவுளுடைய ஆதி நோக்கமாய் இல்லாவிட்டாலும், நியாயப்பிரமாணத்தின்கீழ் அது அனுமதிக்கப்படுகிறது, சட்டங்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. எல்க்கானாவின் குடும்பம் யெகோவாவை வழிபட்டு வருகிறது; எனினும், இவருடைய வாழ்க்கையில் கவனிப்பதைப்போல பலதார மணம் பெரும்பாலும் சண்டை சச்சரவுகளையே ஏற்படுத்துகிறது.
எல்க்கானாவின் மற்றொரு மனைவியின் பெயர் பெனின்னாள். அன்னாளுக்குப் பிள்ளைகள் இல்லை, பெனின்னாளுக்கோ நிறைய பிள்ளைகள் இருக்கிறார்கள். இந்த பெனின்னாள் அன்னாளின் சக்களத்தியாய் இருக்கிறாள்.—1 சாமுவேல் 1:2ஆ.
இஸ்ரவேலில், பிள்ளை பாக்கியம் இல்லாதிருப்பது பெண்ணுக்குப் பெருத்த அவமானமாகக் கருதப்பட்டது; கடவுளுடைய பார்வையில் தகுதியற்றவள் என்பதற்கான அடையாளச் சின்னமாகவும்கூட கருதப்பட்டது. ஆனால், கடவுளுடைய தயவை இழந்ததாலேயே அன்னாள் பிள்ளைகளைப் பெற்றெடுக்கவில்லை என்பதற்கான எந்தக் குறிப்பும் காணப்படுவதில்லை. எனினும், அன்னாளுக்கு ஆறுதல் வார்த்தை சொல்வதற்குப் பதிலாக, தன்னால் பிள்ளைகளைப் பெற்றெடுக்க முடிந்ததை வைத்து பெனின்னாள் தன் சக்களத்தியின் மனதைப் புண்படுத்துகிறாள்.
யெகோவாவின் ஆலயத்திற்குப் பயணங்கள்
இப்படி வேதனைகள் ஒருபக்கம் இருந்தாலும், சீலோவிலுள்ள யெகோவாவின் ஆலயத்தில் பலிகளைச் செலுத்துவதற்குத் தன் குடும்பத்தாரோடு எல்க்கானா வருடாவருடம் செல்கிறார்.a போக வர சுமார் 60 கிலோமீட்டர் பயணிக்க வேண்டியிருந்தாலும், அவர்கள் பெரும்பாலும் நடந்தே செல்கிறார்கள். இத்தகைய சந்தர்ப்பங்கள் முக்கியமாய் அன்னாளுக்கு அதிக கஷ்டமானதாய் இருந்திருக்க வேண்டும்; ஏனெனில், சமாதான பலியைப் பங்குபோடும்போது பெரும் பங்கு பெனின்னாளுக்கும் அவளுடைய பிள்ளைகளுக்கும் கொடுக்கப்படுகிறது, அன்னாளோ ஒரேவொரு பங்கை மட்டும் பெறுகிறாள். பெனின்னாள் இத்தகைய சந்தர்ப்பங்களைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு அன்னாளை நோகடிக்கிறாள்; யெகோவா ‘அவள் கர்ப்பத்தை அடைத்திருந்தது’ போல் தெரிந்ததால் அவளுடைய மன அமைதியைக் குலைக்கிறாள். இப்படி அவள் குத்திக்காட்டி வேதனைப்படுத்துவது வருடாவருடம் தொடர்கிறது; இதனால், அன்னாள் சாப்பிடாமல் தாரை தாரையாகக் கண்ணீர் வடிக்கிறாள். அவளுக்கு மனமகிழ்ச்சியைத் தரவேண்டிய பயணங்கள், தாள முடியாத வேதனை தரும் பயணங்களாய் மாறுகின்றன. ஆனாலும் யெகோவாவின் ஆலயத்திற்குப் பயணப்பட வேண்டிய போதெல்லாம் அவளும் போகிறாள்.—1 சாமுவேல் 1:3-7.
அன்னாள் நமக்கு அருமையான முன்மாதிரி வைத்திருப்பதை உங்களால் காண முடிகிறதா? துக்கத்தில் மூழ்கிப்போயிருக்கும் சமயத்தில் நீங்கள் எப்படி நடந்துகொள்கிறீர்கள்? தனிமையை நாடி, சக வணக்கத்தாரோடு கூட்டுறவுகொள்ளாமல் விலகிச் செல்கிறீர்களா? அன்னாள் அப்படிச் செய்யவில்லை. யெகோவாவை வழிபடுகிறவர்களின் மத்தியிலிருப்பதை அவளுடைய பழக்கமாக்கியிருந்தாள். வேதனை தரும் சூழ்நிலைகளிலும்கூட நாமும் அதையே செய்ய வேண்டும்.—சங்கீதம் 26:12; 122:1; நீதிமொழிகள் 18:1; எபிரெயர் 10:24, 25.
அன்னாளுக்கு ஆறுதல் அளிக்கவும் அவளுடைய மனக்குமுறல்களைக் கேட்டறியவும் எல்க்கானா முயற்சி எடுக்கிறார். “அன்னாளே, ஏன் அழுகிறாய்? ஏன் சாப்பிடாதிருக்கிறாய்? ஏன் சஞ்சலப்படுகிறாய்? பத்துக் குமாரரைப்பார்க்கிலும் நான் உனக்கு அதிகமல்லவா” என்று கேட்கிறார். (1 சாமுவேல் 1:8) சொல்லப்போனால், அன்னாள் குறைசொல்வதற்குப் பதிலாக வாய் திறக்காமல் சகித்துக்கொண்டிருந்ததால் பெனின்னாள் அவளை ஈவிரக்கமின்றி நடத்துவதை எல்க்கானா அறியாதிருந்திருக்கலாம். எப்படியிருந்தபோதிலும், கடவுள் பக்தியுள்ள அன்னாள் யெகோவாவிடம் ஜெபிப்பதன் மூலம் மன அமைதியைத் தேடிக்கொள்கிறாள்.
அன்னாள் செய்கிற பொருத்தனை
சமாதான பலியாகச் செலுத்தப்பட்டவை யெகோவாவின் ஆலயத்திலேயே சாப்பிடப்பட்டன. அன்னாள் சாப்பாட்டு அறையிலிருந்து வெளியேறி, கடவுளிடம் ஜெபிக்கிறாள். (1 சாமுவேல் 1:9, 10) “சேனைகளின் கர்த்தாவே, தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து, உம்முடைய அடியாளை மறவாமல் நினைந்தருளி, உமது அடியாளுக்கு ஒரு ஆண் பிள்ளையைக் கொடுத்தால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் நான் அவனைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பேன்; அவன் தலையின்மேல் சவரகன் கத்தி படுவதில்லை” என்று உருக்கமாய் வேண்டுகிறாள்.—1 சாமுவேல் 1:11.
அன்னாள் குறிப்பாக ஜெபிக்கிறாள். தனக்கு ஓர் ஆண் குழந்தையைத் தரும்படி கேட்கிறாள்; வாழ்நாள் முழுவதும் நசரேயனாக அவன் யெகோவாவுக்கு ஒப்புக்கொடுக்கப்படுவான் என்றும் பொருத்தனை செய்கிறாள். (எண்ணாகமம் 6:1-5) இத்தகைய பொருத்தனைக்கு அவளுடைய கணவரின் ஒப்புதல் வேண்டும்; தன் அருமை மனைவியின் பொருத்தனைக்கு எல்க்கானா ஒப்புதல் அளிக்கிறார் என்பது, பின்பு அவர் நடந்துகொண்ட விதத்திலிருந்து தெரிகிறது.—எண்ணாகமம் 30:6-8.
அன்னாள் ஜெபிக்கிற விதம் அவள் குடித்திருப்பாளோ என பிரதான ஆசாரியரான ஏலியை எண்ண வைக்கிறது. அவள் இருதயத்திலே பேசிக்கொண்டிருப்பதால், அவளுடைய உதடுகள் அசைந்தபோதிலும் சத்தம் அவருடைய காதுகளில் விழுவதில்லை. அது மிகவும் உருக்கமான ஜெபமாய் இருக்கிறது. (1 சாமுவேல் 1:12-14) அன்னாள் குடித்து வெறித்திருப்பதாகச் சொல்லி ஏலி அவளைத் திட்டுகிறபோது அவளுக்கு எப்படி இருந்திருக்கும் என்பதைச் சற்று எண்ணிப் பாருங்கள்! ஆனாலும் அவள் பிரதான ஆசாரியருக்கு மரியாதையோடு பதில் அளிக்கிறாள். “மிகுதியான விசாரத்தினாலும் கிலேசத்தினாலும்” அன்னாள் ஜெபித்துக்கொண்டிருப்பதை ஏலி அறியவருகிறபோது, ‘இஸ்ரவேலின் தேவன் உன் விண்ணப்பத்தின்படி உனக்குக் கட்டளையிடுவாராக’ என்று சொல்கிறார். (1 சாமுவேல் 1:15-17) அப்போது அன்னாள் எழுந்துபோய் சாப்பிடுகிறாள், ‘அப்புறம் அவள் துக்கமுகத்துடன் இருப்பதில்லை.’—1 சாமுவேல் 1:18.
இவை எல்லாவற்றிலிருந்தும் நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? நம் கவலைகளைக் குறித்து யெகோவாவிடம் ஜெபிக்கும்போது, நம் உணர்வுகளையெல்லாம் அவரிடம் கொட்டி, மனதுருகி மன்றாடலாம்.பிரச்சினையை எந்த விதத்திலும் நம்மால் சரிசெய்ய முடியாவிட்டால், அதை அவருடைய கரங்களில் ஒப்படைத்துவிட வேண்டும். அதைவிட சிறந்த வழி வேறு எதுவுமில்லை.—நீதிமொழிகள் 3:5, 6.
ஊக்கமாய் ஜெபித்த பிறகு அன்னாள் மன அமைதியைப் பெற்றது போலவே யெகோவாவின் ஊழியர்களும் பெரும்பாலும் மன சமாதானத்தைப் பெறுகிறார்கள். ஜெபத்தைக் குறித்து அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.” (பிலிப்பியர் 4:6, 7) யெகோவாமீது நம் பாரத்தையெல்லாம் போட்டுவிடும்போது அவர் நம்மைக் கவனித்துக்கொள்ள நாம் இடங்கொடுக்க வேண்டும். அப்போது, அன்னாளைப் போல நாமும் துக்க முகத்தோடு இருக்கவே மாட்டோம்.—சங்கீதம் 55:22.
யெகோவாவுக்கு அர்ப்பணிக்கப்படுகிற மகன்
கடவுள் இப்போது தம் கவனத்தை அன்னாளிடம் திருப்புகிறார்; அவள் கர்ப்பவதியாகி ஆண் குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். (1 சாமுவேல் 1:19, 20) தம்முடைய ஊழியர்களாகத் தாம் பயன்படுத்தவிருக்கும் சிலரது பிறப்புக்கு கடவுளே பொறுப்பேற்கிறார்; அப்படி அவர் பொறுப்பேற்ற சம்பவங்களில் இதுவும் ஒன்று. எல்க்கானாவுக்கும் அன்னாளுக்கும் பிறக்கிற அவர்களுடைய மகன் சாமுவேல் யெகோவாவுடைய தீர்க்கதரிசியாய் ஆகவிருக்கிறார்; இஸ்ரவேலில் முடியாட்சி ஏற்படுத்தப்படுவதில் இவர் முக்கிய பங்கு வகிக்கவிருக்கிறார்.
சிசுப் பருவத்திலிருந்தே சாமுவேலுக்கு யெகோவாவைப்பற்றி அன்னாள் கற்பிக்க ஆரம்பிக்கிறாள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், தான் செய்த பொருத்தனையை அவள் மறந்துவிடுகிறாளா? இல்லை, மறக்கவே இல்லை! “பிள்ளை பால்மறந்தபின்பு, அவன் கர்த்தரின் சந்நிதியிலே காணப்படவும், அங்கே எப்பொழுதும் இருக்கவும், நான் அவனைக் கொண்டுபோய் விடுவேன்” என்று சொல்கிறாள். ஒருவேளை மூன்று வயதிலோ அதற்குச் சற்று காலம் கழித்தோ, சாமுவேல் பால்மறந்த பின்பு, தான் பொருத்தனை செய்திருந்தபடியே பிள்ளையை யெகோவாவின் ஆலயத்தில் கொண்டுவிடும்படி அன்னாள் அவனை அழைத்துச் செல்கிறாள்.—1 சாமுவேல் 1:21-24; 2 நாளாகமம் 31:16.
யெகோவாவுக்குப் பலி செலுத்திய பிறகு, அன்னாளும் அவளுடைய கணவனும் ஏலியிடம் சாமுவேலை அழைத்துச் செல்கிறார்கள். பெரும்பாலும் அந்தப் பிள்ளையின் கையை அன்னாள் பிடித்திருந்திருக்கலாம், அப்போது பின்வருமாறு ஏலியிடம் அவள் சொல்கிறாள்: “என் ஆண்டவனே, இங்கே உம்மண்டையிலே நின்று கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணின ஸ்திரீ நான்தான் என்று என் ஆண்டவனாகிய உம்முடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன். இந்தப் பிள்ளைக்காக விண்ணப்பம் பண்ணினேன்; நான் கர்த்தரிடத்தில் கேட்ட என் விண்ணப்பத்தின்படி எனக்குக் கட்டளையிட்டார். ஆகையால் அவன் கர்த்தருக்கென்று கேட்கப்பட்டபடியினால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் அவனைக் கர்த்தருக்கே ஒப்புக்கொடுக்கிறேன் [‘அர்ப்பணிக்கிறேன்,’ பொது மொழிபெயர்ப்பு].” இப்படித்தான், காலமெல்லாம் கடவுளுக்கு சாமுவேல் விசேஷ சேவை செய்வது ஆரம்பமாகிறது.—1 சாமுவேல் 1:25-28; 2:11.
காலம் உருண்டோடுகையில், அன்னாள் சாமுவேலை மறக்கவே இல்லை. பைபிள் இவ்வாறு குறிப்பிடுகிறது: “அவனுடைய தாய் வருஷந்தோறும் செலுத்தும் பலியைச் செலுத்துகிறதற்காக, தன் புருஷனோடேகூட வருகிறபோதெல்லாம், அவனுக்கு ஒரு சின்னச் சட்டையைத் தைத்துக்கொண்டு வருவாள்.” (1 சாமுவேல் 2:19) நிச்சயமாய், சாமுவேலுக்காக அன்னாள் தவறாமல் ஜெபிக்கிறாள். வருடாவருடம் அவள் யெகோவாவின் ஆலயத்திற்குச் செல்கிறபோது, கடவுளுக்குச் செய்யும் சேவையில் உண்மையோடு நிலைத்திருக்கும்படி சாமுவேலை அவள் உற்சாகப்படுத்துகிறாள் என்பதில் சந்தேகமில்லை.
இப்படி சாமுவேலின் பெற்றோர் ஆலயத்துக்குச் செல்கிற ஒரு சந்தர்ப்பத்தில் ஏலி அவர்களை ஆசீர்வதித்து எல்க்கானாவிடம் இவ்வாறு சொல்கிறார்: “இந்த ஸ்திரீ கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுத்ததற்குப் [‘அர்ப்பணித்ததற்கு,’ பொ.மொ.] பதிலாகக் கர்த்தர் உனக்கு அவளாலே சந்தானம் கட்டளையிடுவாராக.” அவ்வாறே, அன்னாளும் எல்க்கானாவும் இன்னும் மூன்று மகன்களையும் இரண்டு மகள்களையும் பெற்றெடுக்கும் பாக்கியத்தைப் பெறுகிறார்கள்.—1 சாமுவேல் 2:20, 21.
கிறிஸ்தவப் பெற்றோர்களுக்கு எல்க்கானாவும் அன்னாளும் எப்பேர்ப்பட்ட அருமையான மாதிரியாய் திகழ்கிறார்கள்! சொல்லப்போனால், அநேக தாய்தகப்பன்மார் தங்கள் மகன்களையும் மகள்களையும் யெகோவாவுக்கென்று மனமுவந்து அர்ப்பணித்திருக்கிறார்கள்; அதாவது, ஏதேனும் ஒரு முழுநேர ஊழியத்தில் ஈடுபடும்படி வேறு இடத்திற்குச் செல்ல ஊக்குவித்திருக்கிறார்கள். இத்தகைய தியாகங்களைச் செய்கிற பாசமுள்ள பெற்றோரைப் பாராட்ட வேண்டும். அவர்களை யெகோவா ஆசீர்வதிப்பார்.
மகிழ்ச்சியோடு அன்னாள் செய்கிற ஜெபம்
பிள்ளையில்லாதிருந்த அன்னாள் பிள்ளையைப் பெற்றெடுத்தபோது எவ்வளவாய் சந்தோஷப்படுகிறாள்! பெண்கள் செய்த ஜெபங்கள் அரிதாகவே பைபிளில் காணப்படுகின்றன. எனினும், அன்னாள் செய்த இரண்டு ஜெபங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. மனவேதனையோடும் வருத்தத்தோடும் இருந்த அவளுடைய உணர்ச்சிக் குமுறலே முதலாவது ஜெபமாகும்; நன்றி தெரிவிக்கும் விதத்தில் மகிழ்ச்சி பொங்கக் கடவுளைத் துதித்தது இரண்டாவது ஜெபமாகும். “என் இருதயம் கர்த்தருக்குள் களிகூருகிறது” என அன்னாள் ஆரம்பிக்கிறாள். “மலடியாயிருந்தவள் [பிள்ளை] பெற்றாள்” எனச் சந்தோஷப்படுகிறாள், யெகோவா ‘உயர்த்துகிறவராய்’ இருக்கிறார், அவர் ‘சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து . . . உயர்த்துகிறார்’ எனப் போற்றிப் புகழுகிறாள். ஆம், அவர் ‘எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்.’—1 சாமுவேல் 2:1-10.
கடவுளுடைய ஆவியின் வழிநடத்துதலால் எழுதப்பட்ட அன்னாளைப்பற்றிய பதிவு, மற்றவர்களுடைய அபூரணங்களிலானோ பகைமையினாலோ நாம் புண்படலாம் என்பதைக் காட்டுகிறது. எனினும், அத்தகைய சோதனைகள் யெகோவாவுக்கு மகிழ்ச்சியுடன் சேவை செய்யவிடாமல், அந்த மகிழ்ச்சியை நம்மிடமிருந்து பறிக்க நாம் அனுமதிக்கக் கூடாது. அவர் நம் ஜெபங்களைக் கேட்கிற உன்னதர், உண்மையுள்ள தம் ஊழியர்களின் கூக்குரலுக்குச் செவிகொடுக்கிறவர், துயரத்திலிருந்து அவர்களை விடுவித்து மிகுந்த மனசமாதானத்தையும் இன்னும் பல ஆசீர்வாதங்களையும் அளிக்கிறவர்.—சங்கீதம் 22:23-26; 34:6-8; 65:2.
[அடிக்குறிப்பு]
a உண்மை வணக்கத்திற்கு மையமான இந்த இடத்தை யெகோவாவின் ‘ஆலயம்’ என்று பைபிள் அழைக்கிறது. இஸ்ரவேலரின் சரித்திரத்தில், இந்தக் காலகட்டத்தில் உடன்படிக்கைப் பெட்டி இன்னமும் ஆசரிப்புக் கூடாரத்தில்தான் வைக்கப்பட்டிருக்கிறது. சாலொமோன் ராஜாவின் ஆட்சிக் காலத்தில்தான் யெகோவாவுக்கென நிலையான ஓர் ஆலயம் முதன்முதலாகக் கட்டப்படவிருக்கிறது.—1 சாமுவேல் 1:9; 2 சாமுவேல் 7:2, 6; 1 இராஜாக்கள் 7:51; 8:3, 4.
[பக்கம் 17-ன் படம்]
சாமுவேலை அன்னாள் யெகோவாவுக்கு அர்ப்பணிக்கிறாள்