ஒன்பதாம் அதிகாரம்
புத்திசாலியாக நடந்துகொண்டாள்
1-3. (அ) அபிகாயிலின் வீட்டார் எப்படிப் பேராபத்தில் சிக்கினார்கள்? (ஆ) அபிகாயிலைப் பற்றி என்ன விஷயங்களைத் தெரிந்துகொள்வோம்?
இளம் வேலைக்காரனுடைய கண்களில் பீதி தெறிப்பதை அபிகாயில் பார்க்கிறாள். பேராபத்து சூழ்ந்திருக்கிறது! சுமார் 400 படைவீரர்கள் திரண்டு வந்துகொண்டிருக்கிறார்கள். அபிகாயிலின் கணவன் நாபாலையும் அவனுடைய வீட்டு ஆண்கள் அனைவரையும் ஒழித்துக்கட்ட வேண்டுமென்ற உறுதியோடு வந்துகொண்டிருக்கிறார்கள். ஏன்?
2 எல்லாவற்றுக்கும் அந்த நாபால்தான் காரணம். அவன் ஈவிரக்கம் இல்லாமல்... மரியாதை இல்லாமல்... நடந்திருக்கிறான். அவனுடைய சுபாவமே அப்படித்தான். இருந்தாலும், இந்தத் தடவை அவன் மோதக் கூடாத ஒருவரிடம் மோதியிருக்கிறான்; விசுவாசமும் வீரதீரமும் மிக்க படைவீரர்களின் தளபதியிடமே மோதியிருக்கிறான். அதனால்தான், நாபாலின் வேலைக்காரன்—ஒருவேளை மேய்ப்பன்—அபிகாயிலிடம் ஓடோடி வந்திருக்கிறான்; அபிகாயில் ஏதாவது செய்வாள்... வரப்போகும் பேராபத்தைத் தடுத்து நிறுத்துவாள்... என்ற நம்பிக்கையோடு வந்திருக்கிறான். ஆனால், ஒரு படையே திரண்டு வரும்போது ஒரு பெண்ணால் என்ன செய்ய முடியும்?
ஒரு படையே திரண்டு வரும்போது ஒரு பெண்ணால் என்ன செய்ய முடியும்?
3 முதலாவது, இந்த அருமையான பெண்ணின் வாழ்க்கைப் பின்னணியைக் கொஞ்சம் பார்க்கலாம். யார் இந்த அபிகாயில்? ஏன் இந்த இக்கட்டான சூழல்? அவளுடைய விசுவாசத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
‘மகா புத்திசாலி, ரூபவதி’
4. நாபால் எப்படிப்பட்டவன்?
4 அபிகாயிலும் நாபாலும் பொருத்தமற்ற ஜோடி. நாபாலுக்கு அபிகாயிலைவிட நல்ல மனைவி வாய்த்திருக்க முடியாது; அபிகாயிலுக்கோ நாபாலைவிட மோசமான கணவன் வாய்த்திருக்க முடியாது. நாபாலிடம் செல்வம் கொட்டிக்கிடக்கிறது, அவன் தன்னைப் பெரிய ஆளாக நினைத்துக்கொள்கிறான்; ஆனால், மற்றவர்கள் அவனை எப்படி நினைக்கிறார்கள்? பைபிளில் மிக மட்டமாக விவரிக்கப்படுகிற ஆள் அவனாகத்தான் இருப்பான். அவனுடைய பெயரின் அர்த்தமே, “மூடன்” அல்லது “முட்டாள்.” இது அவனுடைய பெற்றோர் வைத்த பெயரா, அல்லது பிற்பாடு அவனே தேடிக்கொண்ட பட்டப்பெயரா? எப்படியிருந்தாலும், அந்தப் பெயர் அவனுக்கு ஏகப் பொருத்தமே. அவன் “முரடனாகவும் கேடுகெட்டவனாகவும்” இருக்கிறான். அந்தக் குடிவெறியனை... அடாவடியனை... பார்த்துப் பயப்படாதவர்களே இல்லை, அவனை வெறுக்காதவர்களும் இல்லை.—1 சா. 25:2, 3, 17, 21, 25; NW.
5, 6. (அ) அபிகாயிலின் குணங்களில் உங்களுக்குப் பிடித்தவை எவை? (ஆ) அபிகாயில் ஏன் அந்த உதவாக்கரை மனுஷனைக் கல்யாணம் செய்திருக்கலாம்?
5 ஆனால், அபிகாயில் அவனுக்கு நேர்மாறானவள். அவளுடைய பெயரின் அர்த்தம், “என் தகப்பன் சந்தோஷப்படுகிறார்.” பொதுவாக, அப்பாமார் தங்கள் பெண்ணின் அழகைப் பார்த்துப் பெருமைப்படுவார்கள்; ஆனால், ஞானமுள்ள அப்பாமார் தங்கள் பெண்ணின் அருமையான குணத்தைப் பார்த்து ஆனந்தப்படுவார்கள். பொதுவாக அழகுள்ளவர்கள்... புத்தி, ஞானம், தைரியம், விசுவாசம் போன்ற குணங்களுக்கு அந்தளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆனால், அபிகாயில் அப்படிக் கிடையாது. அவள் ரூபவதி மட்டுமல்ல மகா புத்திசாலி என்று பைபிள் புகழாரம் சூட்டுகிறது.—1 சாமுவேல் 25:3-ஐ வாசியுங்கள்.
6 இப்படியொரு புத்திசாலி பெண் ஏன் அப்படியொரு உதவாக்கரையைக் கல்யாணம் செய்தாள் என இன்று சிலர் யோசிக்கலாம். பைபிள் காலங்களில் பெரும்பாலான திருமணங்கள் பெற்றோரால் ஏற்பாடு செய்யப்பட்டன என்பதை நினைவில் வையுங்கள். அப்படி அவர்கள் ஏற்பாடு செய்யவில்லை என்றாலும், அவர்களுடைய சம்மதம் ரொம்பவே முக்கியம். நாபாலின் செல்வத்தையும் செல்வாக்கையும் பார்த்துதான் அபிகாயிலின் பெற்றோர் அந்தத் திருமணத்துக்குச் சம்மதம் தெரிவித்தார்களா, ஏன் ஏற்பாடுகூட செய்தார்களா? வறுமை வாட்டியதால் அப்படிச் செய்தார்களா? எதுவாக இருந்தாலும் சரி, நாபாலிடம் பணம் இருந்ததே தவிர, கணவனுக்குரிய குணம் இருக்கவில்லை.
7. (அ) திருமணத்தைப் பற்றிச் சரியான கண்ணோட்டத்தைப் பிள்ளைகளுக்குப் புகட்ட வேண்டுமென்றால், பெற்றோர் எதைத் தவிர்க்க வேண்டும்? (ஆ) அபிகாயில் எதைச் செய்யத் தீர்மானித்தாள்?
7 திருமணத்தைப் பற்றிச் சரியான கண்ணோட்டத்தை வளர்த்துக்கொள்ள ஞானமுள்ள பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளுக்குப் பக்குவமாக எடுத்துச் சொல்வார்கள். சொத்துசுகத்துக்கு ஆசைப்பட்டு திருமணம் செய்யும்படியோ பொறுப்புகளைச் சுமக்கும் பக்குவம் வராத இளம் வயதிலேயே எதிர்பாலாரோடு பழகும்படியோ வற்புறுத்த மாட்டார்கள். (1 கொ. 7:36) ஆனால் அபிகாயிலின் விஷயத்தில், காலம் கடந்துவிட்டது. என்ன காரணமோ, அவள் நாபாலைக் கரம்பிடித்துவிட்டாள்; கஷ்டமோ நஷ்டமோ ஒரு நல்ல மனைவியாக இருக்கத் தீர்மானித்திருக்கிறாள்.
‘காட்டுக்கத்தல் கத்தி கேவலமாகத் திட்டினான்’
8. நாபால் யாரைக் கேவலமாகப் பேசியிருந்தான், அது ஏன் பெரிய முட்டாள்தனம்?
8 நாபால் இப்போது அபிகாயிலுக்கு மிகப் பெரிய தலைவலியைக் கொண்டுவந்திருக்கிறான். அவன் தாவீதையே கேவலமாகப் பேசிவிட்டான். அவர் யெகோவாவின் உண்மை ஊழியர்... சவுலுக்குப்பின் அரசனாக ஆட்சிசெய்ய கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்... அதற்கு அடையாளமாக சாமுவேல் தீர்க்கதரிசியால் அபிஷேகம் செய்யப்பட்டவர். (1 சா. 16:1, 2, 11-13) பொறாமையும் கொலைவெறியும் பிடித்த சவுல் ராஜாவிடமிருந்து அவர் தப்பியோடி, தனக்கு விசுவாசமாயிருக்கிற 600 படைவீரர்களுடன் வனாந்தரத்தில் தங்கியிருக்கிறார்.
9, 10. (அ) தாவீதும் அவருடைய ஆட்களும் எப்படிப்பட்ட சூழலில் போராடிக்கொண்டிருந்தார்கள்? (ஆ) தாவீதும் அவருடைய ஆட்களும் செய்த உதவிக்கு நாபால் ஏன் நன்றி காட்டியிருக்க வேண்டும்? (பாரா 10-ன் அடிக்குறிப்பையும் காண்க.)
9 நாபால் மாகோனில் வசிக்கிறான், அருகிலுள்ள கர்மேல்a பகுதியில் தொழில் செய்துவருகிறான்; அங்கு அவனுக்கு நிலபுலன்கள் இருந்திருக்கலாம். இந்த இரு ஊர்களிலும் பசும் புல்வெளிகள் நிறைந்த மேட்டுநிலங்கள் இருக்கின்றன; ஆடுகளை மேய்ப்பதற்கு வசதியாக இருப்பதால், நாபாலுக்குச் சொந்தமான 3,000 ஆடுகளும் இங்குதான் மேய்ந்துகொண்டிருக்கும். சுற்றியுள்ள நிலங்கள் பண்படுத்தப்படாமல் தரிசாகக் கிடக்கின்றன. தெற்கே பாரான் வனாந்தரம் பரந்துவிரிந்திருக்கிறது. கிழக்கே, உப்புக்கடலுக்குச் செல்லும் வழியில், ஆழமான பள்ளத்தாக்குகளும் குகைகளும் நிறைந்த வறண்ட நிலப்பகுதிகள் தென்படுகின்றன. இந்தப் பகுதிகளில்தான் தாவீதும் அவருடைய ஆட்களும் பிழைப்புக்காகப் போராடிக் கொண்டிருந்தார்கள்; உணவுக்காகத் தேடி அலைந்தார்கள், இன்னும் பல கஷ்டங்களையும் அனுபவித்தார்கள். இங்குதான் செல்வச்சீமான் நாபாலின் இளம் மேய்ப்பர்களை அடிக்கடி சந்தித்தார்கள்.
10 கடினமாய் உழைக்கிற தாவீதின் படைவீரர்கள் அந்த மேய்ப்பர்களை எப்படி நடத்தினார்கள்? அவர்கள் நினைத்திருந்தால், அவ்வப்போது நாபாலின் ஆடுகளை அபகரித்திருக்கலாம்; ஆனால், அவர்கள் அப்படிச் செய்யவில்லை. நாபாலின் ஆடுகளையும் வேலைக்காரர்களையும் மதில்போல் காத்துவந்தார்கள். (1 சாமுவேல் 25:15, 16-ஐ வாசியுங்கள்.) ஆடுகளுக்கும் மேய்ப்பர்களுக்கும் நிறைய ஆபத்துகள் வந்தன. கொடிய விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருந்தது. ஆடுமேய்க்கும் இடங்கள் இஸ்ரவேலின் தெற்கு எல்லையருகே அமைந்திருந்ததால் பிற நாட்டு கொள்ளையரின் அட்டகாசம் வேறு இருந்தது. b
11, 12. (அ) நாபாலுக்குச் செய்தி அனுப்பியபோது தாவீது எப்படி மரியாதையையும் சாதுரியத்தையும் காட்டினார்? (ஆ) தாவீதுக்கு நாபால் பதிலளித்த விதம் ஏன் தவறு?
11 வனாந்தரத்தில் தன்னுடன் இருந்த அத்தனை பேருக்கும் உணவளிப்பது தாவீதுக்குப் பெரும்பாடாக இருந்திருக்க வேண்டும். ஆகவே, ஒருநாள் நாபாலிடம் உதவி கேட்டு பத்து ஆட்களை அனுப்பினார். அது ஆடுகளுக்கு மயிர் கத்தரிக்கும் காலம், ஒரு கொண்டாட்டமான காலம்; அப்போது, வாரி வழங்குவதும் விருந்தளிப்பதும் வழக்கம். தாவீது சரியான சந்தர்ப்பத்தில்தான் அவர்களை அனுப்பினார். பார்த்துப் பார்த்து வார்த்தைகளைக் கோர்த்து, மதிப்பும் மரியாதையும் குழைத்து செய்தி அனுப்பினார்; ‘உம்முடைய குமாரன் தாவீது’ என்றும்கூட தன்னைக் குறிப்பிட்டார்; நாபால் ஒருவேளை வயதில் மூத்தவன் என்பதால் அப்படிச் சொல்லியிருக்கலாம். அதற்கு நாபால் எப்படிப் பதிலளித்தான்?—1 சா. 25:5-8.
12 நாபால் கொதித்தெழுந்தான்! “காட்டுக்கத்தல் கத்தி அவர்களைக் கேவலமாகத் திட்டினான்.” கண்டவர்களுக்கெல்லாம் அப்பத்தையும் தண்ணீரையும் இறைச்சியையும் கொடுக்க முடியாதென அந்தக் கஞ்சன் கத்தினான். தாவீதை மட்டம்தட்டிப் பேசினான், கேலி செய்தான்; எஜமானருக்கு அடங்காமல் ஓடிப்போகிற வேலைக்காரரில் ஒருவன் என்பதுபோல் குறிப்பிட்டான். இதைத்தான் அபிகாயிலிடம் அந்த வேலைக்காரன் விவரித்தான். நாபாலின் மனப்பான்மையும் தாவீதை வெறுக்கிற சவுலின் மனப்பான்மையும் ஒன்றுபோலவே இருந்திருக்கலாம். இரண்டு பேருக்கும் யெகோவாவின் கண்ணோட்டம் இல்லை. தாவீதை யெகோவா நேசித்தார்; அடங்காத அடிமையாக அல்ல, இஸ்ரவேலின் அடுத்த அரசனாக அவரைப் பார்த்தார்.—1 சா. 25:10, 11, 14, NW.
13. (அ) நாபாலின் கேலிப்பேச்சைக் கேட்டவுடன் தாவீது எப்படிப் பிரதிபலித்தார்? (ஆ) தாவீது செய்தது தவறு என்பதை யாக்கோபு 1:20-ல் உள்ள நியமம் எப்படிச் சுட்டிக்காட்டுகிறது?
13 தாவீது தூதனுப்பிய ஆட்கள் திரும்பிவந்து விஷயத்தை அவருடைய காதில் போட்டார்கள், அவர் கோபத்தில் பொங்கியெழுந்தார். “எல்லோரும் வாளை எடுத்துக்கொள்ளுங்கள்!” என்று கட்டளையிட்டார். (NW) பின்பு, அவரும் வாளை எடுத்துக்கொண்டு 400 படைவீரர்களுடன் கிளம்பினார். நாபாலின் வீட்டு ஆண்கள் அனைவரையும் அடியோடு அழிப்பதாகச் சபதம் செய்தார். (1 சா. 25:12, 13, 21, 22) தாவீதின் கோபம் நியாயமானதுதான்; அதை அவர் வெளிக்காட்டிய விதம்தான் தவறு. “கோபப்படுகிற மனிதனால் கடவுளுடைய நீதியை நடப்பிக்க முடியாது” என பைபிள் சொல்கிறது. (யாக். 1:20) இப்போது, அபிகாயில் எப்படித் தன்னுடைய வீட்டாரைக் காப்பாற்றப்போகிறாள்?
“நீ விவேகமாய் நடந்ததால் ஆசீர்வதிக்கப்படுவாய்”
14. (அ) நாபால் செய்த தவறுக்குப் பரிகாரம் செய்ய அபிகாயில் முதல் படி எடுத்துவிட்டாள் என்று எப்படிச் சொல்லலாம்? (ஆ) முரண்பட்ட சுபாவமுள்ள இந்த இருவரிடமிருந்தும் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்? (அடிக்குறிப்பையும் காண்க.)
14 நாம் ஆரம்பத்தில் பார்த்தபடி, தன்னுடைய கணவன் செய்த மாபெரும் தவறுக்குப் பரிகாரம் செய்ய அபிகாயில் ஏற்கெனவே முதல் படி எடுத்துவிட்டாள். அதாவது, அவள் காதுகொடுத்துக் கேட்டாள், நாபாலைப் போல் நடந்துகொள்ளவில்லை. அபிகாயிலிடம் விஷயத்தைத் தெரிவித்த அந்த வேலைக்காரன், ‘நாபாலிடம் பேசி எந்தப் பிரயோஜனமும் இல்லை, அவர் ஒரு உதவாக்கரை’ என்று சொன்னான்.c (1 சா. 25:17, NW) நாபால் தன்னைப் பெரிய ஆளாக நினைப்பதால்தான் யார் பேசுவதையும் காதில் போட்டுக்கொள்வதில்லை. இப்படிப்பட்ட தலைக்கனம் பிடித்த ஆட்களை இன்றைக்கும் சர்வசாதாரணமாகப் பார்க்கலாம். ஆனால், அபிகாயில் காதுகொடுத்துக் கேட்பாள் என்பதை அந்த வேலைக்காரன் அறிந்திருந்தான்; அதனால்தான் அந்தப் பிரச்சினையை அவளிடம் கொண்டு போனான்.
அபிகாயில் தன் கணவனைப் போலின்றி நன்கு காதுகொடுத்து கேட்டாள்
15, 16. (அ) அபிகாயில் எப்படி நீதிமொழிகள் புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ள குணசாலியான பெண்ணைப் போல் இருந்தாள்? (ஆ) அபிகாயில் தன் கணவனின் தலைமை ஸ்தானத்தைத் தன் கையில் எடுத்துக்கொள்ளவில்லை என எப்படிச் சொல்லலாம்?
15 அபிகாயில் உடனடியாக யோசித்துச் செயல்படுகிறாள். இந்தப் பதிவில், அபிகாயில் விரைந்து செயல்பட்டதாக நான்கு முறை வாசிக்கிறோம். தாவீதுக்காகவும் அவருடைய ஆட்களுக்காகவும் ஏராளமான பதார்த்தங்களைத் தயார் செய்கிறாள். அப்பம், திராட்சமது, ஆட்டிறைச்சி, வறுத்த பயறு, உலர்ந்த திராட்சப்பழ அடைகள், அத்திப்பழ அடைகள் எனச் சகலத்தையும் கொண்டுபோகிறாள். வீட்டில் என்னென்ன பொருள்கள் இருக்கின்றன என்பதெல்லாம் அவளுக்கு அத்துப்படி... வீட்டுப் பொறுப்புகள் அனைத்தும் அவள் கையில்; சுருக்கமாய்ச் சொன்னால், பிற்பாடு நீதிமொழிகள் புத்தகத்தில் விவரிக்கப்பட்ட குணசாலியான பெண்ணைப் போலவே இருக்கிறாள். (நீதி. 31:10-31) அந்தப் பதார்த்தங்களை எல்லாம் தன் வேலைக்காரர்களிடம் முதலில் கொடுத்து அனுப்பிவிட்டு, பின்னால் அவள் தனியாகச் செல்கிறாள். ஆனால், “தன் புருஷனாகிய நாபாலுக்கு அதை அறிவிக்கவில்லை.”—1 சா. 25:18, 19.
16 அப்படியானால், கணவனின் தலைமை ஸ்தானத்தை அபிகாயில் தன் கையில் எடுத்துக்கொண்டாள் என்று அர்த்தமா? இல்லவே இல்லை. யெகோவாவால் அபிஷேகம் செய்யப்பட்ட ஊழியரையே நாபால் எதிர்த்திருக்கிறான். அதனால், அவன் வீட்டு ஆட்கள் அநியாயமாய்க் கொலை செய்யப்பட்டிருப்பார்கள். அபிகாயில் மட்டும் விரைந்து செயல்படாமல் இருந்திருந்தால், கணவன் செய்த குற்றத்திற்கு அவளும் உடந்தையாகியிருக்க மாட்டாளா? இந்தச் சந்தர்ப்பத்தில், அவள் தன் கணவனுக்கு அல்ல கடவுளுக்கே கீழ்ப்படிய வேண்டியிருக்கிறது.
17, 18. தாவீதை அபிகாயில் எப்படி அணுகினாள், அவரிடம் என்ன சொன்னாள், அவளது வார்த்தைகள் ஏன் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தின?
17 சீக்கிரத்திலேயே, தாவீதையும் அவருடைய ஆட்களையும் அபிகாயில் சந்திக்கிறாள். இந்தச் சமயத்திலும்கூட, அவள் விரைந்து செயல்படுகிறாள்; கழுதையைவிட்டு வேகமாய் இறங்கி, முகங்குப்புற விழுந்து தாவீதைப் பணிந்துகொள்கிறாள். (1 சா. 25:20, 23) பிறகு, தன் மனதில் உள்ளதையெல்லாம் கொட்டி, தன் கணவனுக்கும் தன் வீட்டாருக்கும் இரக்கம் காட்டச் சொல்லி உருக்கமாகக் கெஞ்சுகிறாள். அவள் பேசுகிற வார்த்தைகள் ஏன் தாவீதின் இதயத்தைத் தொடுகின்றன?
18 நடந்த எல்லாவற்றுக்கும் அவள் பொறுப்பேற்றுக்கொண்டு, தன்னை மன்னிக்கும்படி தாவீதிடம் கேட்டாள். நாபால் அவனுடைய பெயருக்கு ஏற்ற மாதிரி ஒரு மூடன்தான் என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டாள்; அப்படிப்பட்ட ஒருவனைத் தண்டிப்பது தாவீதுக்குத்தான் அவமானம் என்பதை மறைமுகமாகத் தெரிவித்திருக்கலாம். தாவீது யெகோவாவின் பிரதிநிதி... ‘யெகோவாவின் யுத்தங்களை நடத்துகிறவர்’... என்பதை ஒப்புக்கொண்டாள். ‘யெகோவா உங்களை இஸ்ரவேலுக்கு அதிபதியாக நியமிப்பார்’ என்று அவரிடம் சொன்னாள்; தாவீது மற்றும் அவருடைய அரசாட்சி சம்பந்தமாக யெகோவா தந்த வாக்குறுதி தனக்குத் தெரியும் என்பதை இதன் மூலம் சுட்டிக்காட்டினாள். இரத்தப்பழியைக் கொண்டுவரும் ஒரு காரியத்தை... பிற்பாடு ‘துக்கப்பட’ வைக்கும் ஒரு காரியத்தை... செய்ய வேண்டாம் என்று சொல்லி தாவீதை வருந்திக் கேட்டுக்கொண்டாள்; ‘துக்கப்பட’ என்ற வார்த்தை மனசாட்சி உறுத்தலால் பிற்பாடு மனம் வருந்துவதை அர்த்தப்படுத்தலாம். (1 சாமுவேல் 25:24-31-ஐ வாசியுங்கள்.) அவள் பேசிய வார்த்தைகள் மனதைத் தொடுகிற வார்த்தைகள்... அன்பான வார்த்தைகள்!
19. அபிகாயில் சொன்னதைக் கேட்டு தாவீது என்ன செய்தார், அவளை ஏன் புகழ்ந்தார்?
19 அபிகாயில் சொன்னதைக் கேட்டு தாவீது என்ன செய்கிறார்? அவள் கொடுத்த பொருள்களை வாங்கிக்கொள்கிறார். அதோடு, “என்னைச் சந்திக்க இன்றைக்கு உன்னை அனுப்பிய இஸ்ரவேலின் கடவுளான யெகோவா புகழப்படுவாராக! நீ விவேகமாய் நடந்ததால் ஆசீர்வதிக்கப்படுவாய்; என்மீது இரத்தப்பழி வராமல் இன்றைக்கு என்னைத் தடுத்ததால் நீ ஆசீர்வதிக்கப்படுவாய்” என்று சொல்கிறார். தன்னைச் சந்திக்கத் தைரியமாகவும் விரைவாகவும் வந்ததற்காக தாவீது அவளைப் பாராட்டுகிறார்; இரத்தப்பழிக்கு ஆளாகாதபடி தன்னைத் தடுத்தது அவள்தான் என்பதையும் ஒப்புக்கொள்கிறார். “நீ சமாதானத்தோடு உன் வீட்டுக்குப் போ” என்று அவளிடம் கூறுவதோடு ‘உன் விருப்பப்படியே செய்கிறேன்’ எனப் பணிவோடு சொல்கிறார்.—1 சா. 25:32-35, NW.
“இதோ! உம் அடிமை”
20, 21. (அ) அபிகாயில் தன் கணவனிடம் திரும்பி வந்ததில் என்ன மெச்சத்தக்க பண்பை நீங்கள் கவனித்தீர்கள்? (ஆ) நாபாலிடம் பேச சரியான சந்தர்ப்பத்தைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் அபிகாயில் எப்படித் தைரியத்தையும் புத்திசாலித்தனத்தையும் காட்டினாள்?
20 அங்கிருந்து விடைபெற்றுச் சென்றபோதிலும், அந்தச் சந்திப்பைப் பற்றி அவள் அசைபோட்டுப் பார்த்திருப்பாள்; விசுவாசத்துடனும் பண்புடனும் நடந்துகொண்ட தாவீதுக்கும் தான் வாழ்க்கைப்பட்ட முரடனுக்கும் உள்ள வித்தியாசத்தைக் கவனித்திருப்பாள். ஆனால், அந்தச் சிந்தனையிலேயே அவள் லயித்திருக்கவில்லை. அதன் பிறகு, ‘அபிகாயில் நாபாலிடத்தில் வந்தாள்’ என நாம் வாசிக்கிறோம். ஆம், ஒரு மனைவியாகத் தன்னுடைய கடமையை மிகச் சிறந்த விதத்தில் செய்ய வேண்டுமென்ற தீர்மானத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் தன் கணவனிடம் வருகிறாள். தாவீதுக்கும் அவருடைய ஆட்களுக்கும் அன்பளிப்புகள் வழங்கியதைப் பற்றி நாபாலிடம் சொல்ல வேண்டியிருக்கிறது. அதைத் தெரிந்துகொள்ளும் உரிமை அவனுக்கு இருக்கிறது. ஒரு பெரிய ஆபத்தைத் தான் தடுத்ததைப் பற்றியும் அவனிடம் சொல்ல வேண்டியிருக்கிறது; இதெல்லாம் வேறொருவர் மூலம் அவன் காதுக்கு எட்டினால் அவனுக்கு இன்னும் பெரிய அவமானமாய் ஆகிவிடுமே என்று நினைக்கிறாள். என்றாலும், அவளால் அதை உடனடியாகச் சொல்ல முடியாத நிலை. காரணம், வீட்டில் ராஜபோக விருந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கிறான், பயங்கரமாய்க் குடித்து வெறித்திருக்கிறான்.—1 சா. 25:36.
21 இந்தச் சந்தர்ப்பத்திலும் அவள் தைரியமாகவும் புத்திசாலியாகவும் நடந்துகொள்கிறாள்; மறுநாள் அவனுக்குப் போதை தெளியும்வரை காத்திருக்கிறாள். அப்போது அவள் சொல்வதைப் புரிந்துகொள்ளும் நிதானத்தில் இருப்பான், என்றாலும் இன்னும் அதிக ஆவேசப்படுவதற்கு வாய்ப்பிருக்கிறது. அப்படியிருந்தும், அவனிடம் சென்று நடந்ததையெல்லாம் சொல்கிறாள். அவன் கத்திக் கூச்சல் போடுவான்... ஒருவேளை தன்னை அடித்து நொறுக்குவான்... என்றெல்லாம் அவள் நிச்சயம் எதிர்பார்த்திருப்பாள். ஆனால், அவன் உட்கார்ந்த இடத்திலேயே அசையாமல் இருக்கிறான்.—1 சா. 25:37.
22. நாபாலுக்கு என்ன நடந்தது, வீட்டில் நடக்கிற கொடுமையையும் கொடூரத்தையும் குறித்து நாம் எதை நினைவில் வைக்க வேண்டும்?
22 அவனுக்கு என்ன ஆனது? “அவன் இருதயம் அவனுக்குள்ளே செத்து, அவன் கல்லைப் போலானான்.” ஒருவேளை அவனுக்கு ஒருவகை பக்கவாதம் வந்திருக்கலாம். எதுவாக இருந்தாலும் சரி, சுமார் பத்து நாட்கள் கழித்து செத்துப்போகிறான். நோய் தாக்கியதால் மட்டும்தான் அவன் இறந்தான் என்று சொல்ல முடியாது. ‘யெகோவா நாபாலை வாதித்ததினால் . . . அவன் செத்தான்’ என்று நாம் வாசிக்கிறோம். (1 சா. 25:38) அவனுக்குத் தக்க தண்டனை கிடைத்தது, இத்தனை காலம் பட்ட கஷ்டத்திலிருந்து இப்போது அபிகாயிலுக்கு விடுதலை! இன்று, யெகோவா இதேபோல் தலையிட்டு அற்புதமாகத் தண்டனை வழங்காவிட்டாலும், வீட்டில் நடக்கிற எந்தக் கொடுமையும் கொடூரமும் அவருடைய கண்ணுக்குத் தப்பாது என்பதற்கு இது ஒரு பொருத்தமான உதாரணம். ஏற்ற சமயத்தில் கண்டிப்பாக அவர் நீதி வழங்குவார்.—லூக்கா 8:17-ஐ வாசியுங்கள்.
23. அபிகாயிலுக்குக் கிடைத்த இன்னொரு ஆசீர்வாதம் என்ன, புது வாழ்வு வந்ததால் தன் குணம் மாறிவிடவில்லை என்பதை அவள் எப்படிக் காட்டினாள்?
23 மகிழ்ச்சியற்ற மணவாழ்விலிருந்து அபிகாயிலுக்கு விடுதலை கிடைப்பதோடு, வேறொரு ஆசீர்வாதமும் கிடைக்கிறது. நாபால் இறந்த செய்தியை தாவீது கேள்விப்பட்டு, அவளை வாழ்க்கைத் துணைவியாக ஏற்றக்கொள்ள விரும்புவதைத் தன் ஆட்களிடம் சொல்லி அனுப்புகிறார். ‘இதோ! உம் அடிமையாகிய நான் என் தலைவரின் பணியாளர்களுடைய பாதங்களைக் கழுவும் பணிப்பெண்ணாக இருப்பேனாக!’ என்று அவர்களுக்குப் பதிலளிக்கிறாள். ஆகவே, தாவீதுக்கு மனைவியாவதைக் குறித்து அவள் அகந்தை அடையவில்லை; சொல்லப்போனால், அவருடைய பணியாளர்களுக்குப் பணிவிடை செய்யவும் முன்வருகிறாள்! இந்தச் சந்தர்ப்பத்திலும்கூட அவள் விரைந்து செயல்பட்டதாக... ஆம், உடனடியாக தாவீதிடம் புறப்பட்டுச் சென்றதாக... வாசிக்கிறோம்.—1 சா. 25:39-42, பொ.மொ.
24. புது வாழ்க்கையில் அபிகாயில் என்னென்ன சவால்களைச் சந்தித்தாள், ஆனால் அவளது கணவரும் கடவுளும் அவளை எப்படிக் கருதினார்கள்?
24 அபிகாயிலின் வாழ்க்கையைப் பொறுத்தவரை, இனி எல்லாம் சுபம் எனச் சொல்லிவிட முடியாது. தாவீதைக் கரம்பிடித்த பிறகும்கூட அவளுடைய வாழ்வில் கஷ்டங்கள் அவ்வப்போது தலைகாட்டத்தான் செய்கின்றன. ஒரு காரணம்... தாவீது ஏற்கெனவே அகினோவாம் என்ற பெண்ணைத் திருமணம் செய்திருந்தார்; பலதார மணம் செய்வதை அன்றைக்கு யெகோவா அனுமதித்தபோதிலும், தேவபக்தியுள்ள பெண்களுக்கு அதனால் வாழ்க்கையில் பெரும் சவால்கள் வந்தன. இன்னொரு காரணம்... தாவீது இன்னும் அரியணை ஏறவில்லை; அரசராவதற்கு முன்னால் அநேக இடையூறுகளையும் இன்னல்களையும் சமாளிக்க வேண்டியிருக்கும். ஆனாலும், அபிகாயில் தன் கணவரை ஆதரிக்கிறாள், அவருக்கு ஒரு மகனைப் பெற்றெடுக்கிறாள்; தன்னை உயர்வாய் மதிக்கிற... பேணிப் பாதுகாக்கிற... ஒரு புருஷன் கிடைத்திருப்பதை உணர்ந்துகொள்கிறாள். அவளுடைய புருஷன் ஒரு சந்தர்ப்பத்தில் கடத்தல்காரர்களிடமிருந்து அவளை மீட்டாரே! (1 சா. 30:1-19) இவ்வாறு, புத்திசாலித்தனமும் தைரியமும் விசுவாசமும் உள்ள பெண்களை யெகோவா நேசிப்பதுபோல்... உயர்வாய் மதிப்பதுபோல்... தாவீதும் அவளை நேசித்தார், மதித்தார்.
a இது, பிற்காலத்தில் பாகாலின் பக்தர்களோடு எலியா தீர்க்கதரிசி நேருக்குநேர் மோதிய இடம் அல்ல, அதாவது வடக்கே தொலைவில் உள்ள புகழ்பெற்ற கர்மேல் மலை அல்ல. (அதிகாரம் 10-ஐப் பாருங்கள்.) ஆனால், தெற்கேயுள்ள வனாந்தரத்தின் விளிம்பில் அமைந்திருக்கிற நகரம்.
b நிலப்பிரபுக்களையும் அவர்களுடைய மந்தைகளையும் பாதுகாப்பதை யெகோவா தேவனுக்குச் செய்யும் சேவையாக தாவீது நினைத்திருக்கலாம். அந்தக் காலத்தில், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரின் சந்ததியார் இஸ்ரவேல் தேசத்தில் குடியிருக்க வேண்டுமென்பது யெகோவாவின் நோக்கமாய் இருந்தது. ஆகவே, அந்நிய நாட்டுப் படையினரிடமிருந்தும் கொள்ளையரிடமிருந்தும் அத்தேசத்தைக் காப்பாற்றுவது ஒருவிதத்தில் பரிசுத்த சேவையாக இருந்தது.
c அந்த இளைஞன் குறிப்பிட்ட வார்த்தையின் நேர்ப்பெயர்ப்பு, “பேலியாளின் மகன் (அதாவது, லாயக்கற்றவன்).” பிற பைபிள் மொழிபெயர்ப்புகள், நாபால் “யாருடைய பேச்சையும் கேட்காதவன்” என்ற விளக்கத்தை இதற்குக் கொடுக்கின்றன; “அவனிடம் பேசி எந்தப் பிரயோஜனமும் இல்லை” என்றும் அந்த விளக்கத்தின் முடிவில் குறிப்பிடுகின்றன.