வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
கடவுள் தமது இருதயத்திற்கு ஏற்ற மனிதனாகக் கருதிய தாவீது, 2 சாமுவேல் 12:31 மற்றும் 1 நாளாகமம் 20:3 ஆகிய வசனங்களின் அடிப்படையில் சிலர் நினைப்பது போல, சிறைபிடித்தவர்களைக் கொடூரமாக நடத்தினாரா?
இல்லை. கைது செய்யப்பட்ட அம்மோனியரை தாவீது கட்டாய வேலையில் மட்டுமே ஈடுபடுத்தினார். சில பைபிள்கள் தாவீதின் இச்செயலை தவறாக மொழிபெயர்த்திருக்கின்றன.
அம்மோனியரை தாவீது என்ன செய்தார் என்பதை விவரிக்கையில் அந்த மொழிபெயர்ப்புகள் அவரைக் கொடூரமானவராக சித்தரிக்கின்றன. உதாரணமாக, 2 சாமுவேல் 12:31-ல் இவ்வாறு வாசிக்கிறோம்: ‘பின்பு அதிலிருந்த ஜனங்களை அவர் வெளியே கொண்டுபோய், அவர்களை வாள்களுக்கும் [அல்லது இரம்பங்களுக்கும்], இருப்புப் பாரைகளுக்கும், இருப்புக் கோடரிகளுக்கும் உட்படுத்தி, அவர்களைச் செங்கற் சூளையையும் கடக்கப் பண்ணினார்; இப்படி அம்மோன் புத்திரரின் பட்டணங்களுக்கெல்லாம் செய்தார்.’ 1 நாளாகமம் 20:3-ல் உள்ள பதிவும் இதைப் போலவே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
என்றபோதிலும், பைபிள் கல்விமான் சாமுவேல் ரோல்ஸ் டிரைவர் இவ்வாறு குறிப்பிட்டார்: “கொடூரம் என்பது தாவீதின் குணத்திற்கும் சுபாவத்திற்கும் துளியும் பொருத்தமில்லாதது.” அதனால்தான் தி ஆங்கர் பைபிளில் உள்ள குறிப்பு இவ்வாறு கூறுகிறது: “தாவீது தான் கைப்பற்றிய பிராந்தியத்தை வைத்து பொருளாதார லாபம் ஈட்டுவதற்காக, அந்தப் பிராந்தியத்திலிருந்து சிறைபிடித்து வந்தவர்களை குழுக்களாகப் பிரித்து பணிகளில் அமர்த்தினார். வெற்றி பெற்ற அரசர்கள் அனைவரும் பொதுவாக இப்படித்தான் செய்தார்கள்.” இதே கருத்தை ஆதரிக்கும் ஆடம் கிளார்க் என்பவரும் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “தாவீது அந்த ஆட்களை அடிமைகளாக்கி, மரம் அறுக்கவும், பரம்புக் கட்டைகளை இரும்பில் வார்க்கவும், சுரங்க வேலை செய்யவும், . . . மரம் வெட்டவும், செங்கல் சுடவும் பயன்படுத்தினார். மனிதர்களை இரம்பத்தால் அறுப்பது, கடப்பாரையால் வெட்டுவது, கண்டந்துண்டமாக்குவது, கோடாரியால் துண்டிப்பது போன்றவற்றை அவர் செய்ததாக இந்த வசனம் அர்த்தப்படுத்துவதில்லை. அம்மோனியர்களிடம் தாவீது இப்படி நடந்து கொண்டிருப்பார் என எண்ணுவதும் பொருத்தமற்றதாகவே இருக்கிறது.”
பல்வேறு நவீன மொழிபெயர்ப்புகள் இந்தத் திருத்தமான அர்த்தத்தைக் கொடுக்கின்றன; மனிதாபிமானமின்றி நடந்து கொண்டதாக தாவீதைக் குற்றம் சாட்டக் கூடாது என்பதைத் தெளிவாக்கியிருக்கின்றன.a பொது மொழிபெயர்ப்பு பைபிள் இவ்வாறு குறிப்பிடுகிறது: “அங்கிருந்த மக்களையும் அவர் கொண்டுவந்து இரம்பம், கடப்பாரை, கோடரி வேலைகளுக்கும், செங்கல் சூளை வேலைகளுக்கும் அவர்களை அமர்த்தினார். இவ்வாறே அனைத்து அம்மோனிய நகர்களுக்கும் செய்தார்.” (2 சாமுவேல் 12:31) “தாவீது அங்குக் குடியிருந்த மக்களைச் சிறைபடுத்தி, இரம்பம், கடப்பாரை, கோடரி ஆகியவற்றால் அவர்களை வேலை செய்ய வைத்தார். தாவீது அம்மோனியரின் எல்லா நகர் மக்களுக்கும் இவ்விதமே செய்தார்.” (1 குறிப்பேடு [நாளாகமம்] 20:3) புதிய உலக மொழிபெயர்ப்பும் இந்த கல்விமான்களின் குறிப்பை ஆதரிப்பதாகவே உள்ளது.
தோல்வியடைந்த அம்மோனியரை தாவீது காட்டுமிராண்டித்தனமாகத் துன்புறுத்தவுமில்லை, கொடூரமாகக் கொல்லவுமில்லை. ஆம், போர் சம்பந்தமாக அக்காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட ஈவிரக்கமற்ற பழக்கங்களை அவர் பின்பற்றவில்லை.
[அடிக்குறிப்பு]
a அந்த எபிரெய வாசகத்தின் ஒரேவொரு எழுத்து மாறுவதைப் பொறுத்து, “அவர்களை இரம்பத்தால் அறுத்தார்” என்றும் வாசிக்கலாம், “இரம்பத்தைப் பயன்படுத்தி வேலை செய்ய வைத்தார்” என்றும் வாசிக்கலாம். “செங்கல் சூளை” என்ற வார்த்தையைச் “செங்கல் அச்சு” என்றும் புரிந்துகொள்ளலாம். குறுகலான அந்த அச்சில் ஒருவரைக் கடக்கப் பண்ணுவது முடியாத காரியம்.