பத்தாம் அதிகாரம்
தூய வழிபாட்டுக்குத் தூணாய் நின்றார்
1, 2. (அ) எலியா காலத்தில் வாழ்ந்த மக்கள் எந்த விதத்தில் பாதிக்கப்பட்டிருந்தார்கள்? (ஆ) கர்மேல் மலையில் எலியாவை எதிர்த்து வந்தவர்கள் யார்?
கதிரவன் கிளம்பிவரும் அதிகாலை வேளை. கர்மேல் மலைச்சரிவுகளில் மக்கள் சிரமப்பட்டு ஏறி வருவதை எலியா பார்க்கிறார். அவர்கள் பஞ்சத்தில் அடிபட்டிருப்பது அந்த மங்கிய வெளிச்சத்திலும்கூட பளிச்செனத் தெரிகிறது. மூன்றரை ஆண்டு காலம் நீடித்த பஞ்சம் அவர்களைப் பாடாய்ப்படுத்தியிருக்கிறது.
2 அந்தக் கூட்டத்தின் நடுவே பாகாலின் தீர்க்கதரிசிகள் 450 பேர் ஆணவத்தோடும் அகம்பாவத்தோடும் நடந்து வருகிறார்கள்; யெகோவாவின் தீர்க்கதரிசியாகிய எலியா மீதுள்ள வெறுப்பு அவர்களுடைய உள்ளத்தில் கனன்று கொண்டிருக்கிறது. யெகோவாவின் ஊழியர்கள் பலரை ஏற்கெனவே யேசபேல் ராணி கொலை செய்திருக்கிறாள்; எலியாவோ பாகால் வழிபாட்டை எதிர்த்து உறுதியோடு நிற்கிறார். இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இவன் எதிர்த்து நிற்பான்... இந்த ஒற்றை ஆளால் ஒன்றுமே செய்ய முடியாது... என்றெல்லாம் அந்தப் பாகால் பூசாரிகள் மனக்கணக்கு போட்டிருக்கலாம். (1 இரா. 18:4, 19, 20) ஆகாப் ராஜாவும் தன் ரதத்தில் வந்திருக்கிறான். இவனுக்கும் எலியாவைக் கண்டாலே ஆகாது.
3, 4. (அ) அந்த முக்கியமான நாளில், எலியாவுக்கும் ஓரளவு பயம் வந்திருக்கும் என்று ஏன் சொல்லலாம்? (ஆ) என்னென்ன கேள்விகளை நாம் சிந்திக்கப்போகிறோம்?
3 எலியாவின் வாழ்க்கையில் இது மறக்கமுடியாத நாள்! எலியா பார்த்துக்கொண்டிருக்கையில், நன்மைக்கும் தீமைக்கும் இடையே பயங்கரமான மோதல் நிகழ்வதற்குக் களம் தயாராகிக்கொண்டிருக்கிறது. இந்த உலகம் இதுவரை காணாத மோதல் இது! அந்த நாள் காலையில் அவர் எப்படி உணருகிறார்? ‘நமக்கிருக்கும் உணர்ச்சிகள்தான் அவருக்கும் இருக்கின்றன,’ அப்படியிருக்கும்போது அவர் பயப்படாமல் இருப்பாரா? (யாக்கோபு 5:17-ஐ வாசியுங்கள்.) ஒன்று மட்டும் நிச்சயம்: தெய்வபயம் இல்லாத மக்கள்... விசுவாசதுரோகியாய் மாறிய ராஜா... கொலைவெறி பிடித்த பூசாரிகள்... மத்தியில் தான்மட்டும் தனியொரு ஆளாய் நிற்பது அவருடைய மனதை அலைக்கழித்திருக்கும்.—1 இரா 18:22.
4 சரி, இஸ்ரவேல் தேசம் இப்படியொரு நெருக்கடி நிலைக்கு வரக் காரணம் என்ன? இந்தப் பதிவிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்? இப்போது, எலியா எப்படி விசுவாசம் காட்டினார் என்பதையும் இன்று நமக்கு அது எப்படி உதவியாக இருக்கிறது என்பதையும் கவனிப்போம்.
நீண்ட போராட்டத்தின் உச்சக்கட்டம்
5, 6. (அ) இஸ்ரவேல் தேசம் எந்தப் போராட்டத்தில் சிக்கியிருந்தது? (ஆ) ஆகாப் அரசன் எந்த விதத்தில் யெகோவாவின் இதயத்தைப் புண்படுத்தியிருந்தான்?
5 எலியாவின் தாய்நாட்டுக்கும் அவரது மக்களுக்கும் மணிமகுடமாய் விளங்க வேண்டிய உண்மை வழிபாடு ஓரங்கட்டப்பட்டிருந்தது, ஒடுக்கப்பட்டிருந்தது; இதைப் பல பத்தாண்டுகளாக அவரால் சும்மா பார்த்துக்கொண்டுதான் இருக்க முடிந்தது. இஸ்ரவேல் தேசம் நீண்ட காலமாய் ஒரு போராட்டத்தில் சிக்கித் தவித்துக்கொண்டிருந்தது; ஆம், உண்மை மதத்திற்கும் பொய் மதத்திற்கும் இடையே... யெகோவா தேவனுடைய வழிபாட்டுக்கும் சுற்றியுள்ள தேசத்தாருடைய சிலை வழிபாட்டுக்கும் இடையே... நடக்கும் போராட்டத்தில் சிக்கித் தவித்துக்கொண்டிருந்தது. முக்கியமாய் எலியாவின் காலத்தில், உருவ வழிபாடு உச்சக்கட்டத்தை எட்டியிருந்தது.
6 யெகோவாவின் இதயத்தை ஆகாப் அரசன் மிகவும் புண்படுத்தியிருந்தான். சீதோன் நாட்டு இளவரசியான யேசபேலை அவன் மணம் செய்திருந்தான். இஸ்ரவேலில் பாகால் வழிபாடு ஓங்க வேண்டும்... யெகோவாவின் வழிபாடு ஒழிய வேண்டும்... என்பதில் அவனுடைய மனைவி குறியாக இருந்தாள். சீக்கிரத்திலேயே ஆகாப் அவளுடைய கைப்பாவை ஆகியிருந்தான். பாகாலுக்கு ஒரு கோயிலையும் பலிபீடத்தையும் கட்டியிருந்தான், இந்தப் பொய் மத வழிபாட்டுக்கு மக்களை வழிநடத்தியிருந்தான்.—1 இரா. 16:30-33.
7. (அ) பாகால் வழிபாடு ஏன் வெறுக்கத்தக்கதாய் இருந்தது? (ஆ) எலியாவின் நாட்களில் பஞ்சம் நிலவிய காலத்தைக் குறித்து பைபிளில் எந்த முரண்பாடும் இல்லையென எப்படிச் சொல்லலாம்? (பெட்டியையும் காண்க.)
7 பாகால் வழிபாடு ஏன் வெறுக்கத்தக்க வழிபாடு? இது இஸ்ரவேலர் அநேகரை மோசம்போக்கி, உண்மைக் கடவுளைவிட்டு விலகிப்போகச் செய்திருக்கிறது. அதுமட்டுமல்ல, இது அருவருப்பான மதம், கொடூரமான மதம். பாகாலின் கோயிலில் ஆண்/பெண் விபச்சாரர்கள் இருக்கிறார்கள்... காமக் களியாட்டங்கள் நடக்கின்றன... அதைவிடக் கொடுமை என்னவென்றால், பிள்ளைகள் நரபலி செலுத்தப்படுகிறார்கள். இதனால், நாட்டில் பஞ்சம் நிலவும் என்று ஆகாபிடம் சொல்ல எலியாவை யெகோவா அனுப்பியிருந்தார்; மீண்டும் எலியா அறிவிக்கும்வரை அது நீடிக்கும் என்றும் தெரிவித்திருந்தார். (1 இரா. 17:1) பல ஆண்டுகள் கழித்து எலியா மீண்டும் ஆகாபைச் சந்தித்தார், கர்மேல் மலையில் மக்களையும் பாகால் தீர்க்கதரிசிகளையும் ஒன்றுகூட்டும்படி அவனிடம் சொன்னார். a
பாகால் வழிபாட்டோடு பின்னிப்பிணைந்த பழக்கவழக்கங்கள் ஒருவிதத்தில் இன்றும் மக்கள் மத்தியில் புரையோடிக் கிடக்கின்றன
8. பாகால் வழிபாட்டைப் பற்றிய பதிவினால் இன்று நமக்கு என்ன பிரயோஜனம்?
8 இந்தப் போராட்டத்தைப் பற்றி வாசிப்பதால் இன்று நமக்கு என்ன பிரயோஜனம்? இப்போது நம்மைச் சுற்றி பாகாலின் கோயில்களோ பலிபீடங்களோ இல்லாததால், பாகால் வழிபாடு பற்றிய கதைக்கும் நமக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை எனச் சிலர் நினைக்கலாம். ஆனால், இது வெறும் ஒரு சரித்திரப் பதிவு அல்ல, நமக்குப் பாடம் புகட்டும் ஒரு பதிவு. (ரோ. 15:4) “பாகால்” என்ற வார்த்தைக்கு “உரிமையாளர்” அல்லது “எஜமானர்” என்று அர்த்தம். தம்மையே அவர்களுடைய ‘பாகாலாக,’ அதாவது எஜமானராக, ஆக்கிக்கொள்ளும்படி தம்முடைய மக்களிடம் யெகோவா சொன்னார். (ஏசா. 54:5, NW) இன்றும்கூட சர்வவல்ல தேவனுக்குப் பதிலாக பல்வேறு எஜமானருக்கு மக்கள் சேவை செய்கிறார்கள் என்பதை நீங்களே ஒத்துக்கொள்வீர்கள். உதாரணத்துக்கு, பணத்தை... வேலையை... பொழுதுபோக்கை... பாலியல் இன்பத்தை... பூஜித்தாலும் சரி, யெகோவாவுக்குப் பதிலாக வேறெந்த தெய்வத்தைப் பூஜித்தாலும் சரி, அவற்றைத் தங்களுடைய “எஜமானாக” ஆக்கிக்கொள்கிறார்கள். (மத். 6:24; ரோமர் 6:16-ஐ வாசியுங்கள்.) ஒரு விதத்தில், பாகால் வழிபாட்டோடு பின்னிப்பிணைந்த பழக்கவழக்கங்கள் இன்றும் மக்கள் மத்தியில் புரையோடிக் கிடக்கின்றன என்றே சொல்லலாம். யெகோவாவின் வழிபாட்டுக்கும் பாகாலின் வழிபாட்டுக்கும் இடையே நிகழ்ந்த போராட்டத்தைப் பற்றிச் சிந்தித்துப் பார்க்கும்போது, நாம் யாருக்குச் சேவை செய்வோம் என்பதை ஞானமாய்த் தீர்மானிக்க முடியும்.
‘ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால்’—எந்த விதத்தில்?
9. (அ) பாகால் வழிபாட்டை அம்பலப்படுத்துவதற்கு கர்மேல் மலை சிறந்த இடம் என்பதை அதன் சூழல் எப்படிக் காட்டுகிறது? (அடிக்குறிப்பையும் காண்க.) (ஆ) மக்களிடம் எலியா என்ன சொன்னார்?
9 கர்மேல் மலையிலிருந்து பார்த்தால் இஸ்ரவேல் தேசமே கண்முன் அழகாய்க் காட்சியளிக்கும். கீழே கீசோன் ஆற்றுப் பள்ளத்தாக்குமுதல் அருகிலுள்ள பெருங்கடல் வரையிலும் (மத்தியதரைக் கடல் வரையிலும்), வடக்கே தொலைதூரத்தில் அமைந்திருக்கிற லீபனோன் மலைத்தொடர்கள் வரையிலும் அழகாய்க் காட்சியளிக்கும்.b ஆனால் உச்சக்கட்ட சம்பவங்கள் அரங்கேறும் அந்த நாளில், தேசத்தின் அவலநிலை அப்பட்டமாகத் தெரிகிறது. ஆபிரகாமின் வம்சத்தினருக்குக் கடவுள் தந்த வளமான இந்தத் தேசம், அன்றைக்குப் பொலிவிழந்து பொட்டலாய்க் கிடக்கிறது. சுள்ளெனச் சுட்டெரிக்கும் சூரிய கிரணங்களால் அந்த நிலப்பரப்பு பாளம்பாளமாய் வெடித்துக் கிடக்கிறது. இதற்குக் காரணம் கடவுளுடைய சொந்த மக்களின் முட்டாள்தனமான நடத்தையே. மக்கள் எல்லோரும் ஒன்றாகக் கூடிவந்ததும் எலியா அவர்களைப் பார்த்து, “நீங்கள் எத்தனை நாளைக்குத்தான் ஆற்றில் ஒரு காலும் சேற்றில் ஒரு காலுமாக இருப்பீர்கள்; யெகோவாதான் உண்மைக் கடவுளென்றால் அவரைப் பின்பற்றுங்கள்; பாகால்தான் கடவுளென்றால் அவனைப் பின்பற்றுங்கள்” என்று சொன்னார்.—1 இரா. 18:21, NW.
10. எந்த விதத்தில் இஸ்ரவேல் மக்கள் ‘ஆற்றில் ஒரு காலும் சேற்றில் ஒரு காலுமாக’ இருந்தார்கள், எந்த முக்கியமான உண்மையை அவர்கள் மறந்துவிட்டார்கள்?
10 அவர்கள் ‘ஆற்றில் ஒரு காலும் சேற்றில் ஒரு காலுமாக இருப்பதாய்’ எலியா சொன்னதன் அர்த்தமென்ன? யெகோவாவின் வழிபாடு, பாகாலின் வழிபாடு—இதில் ஒன்றை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை அந்த மக்கள் உணரவில்லை. மாறாக, இரண்டு வழிபாட்டிலுமே ஈடுபடலாமென நினைத்தார்கள்; அதாவது, அருவருப்பான சடங்குகளில் கலந்துகொண்டு பாகாலைப் பிரியப்படுத்தலாம், அதே சமயத்தில் தங்களை ஆசீர்வதிக்கச் சொல்லி யெகோவா தேவனிடமும் கேட்கலாம் என்று நினைத்தார்கள். தங்களுடைய பயிர்களையும் மந்தைகளையும் பாகால் ஆசீர்வதிப்பான் என்றும், ‘சேனைகளுடைய யெகோவா’ தங்களைப் போர்க்களத்தில் பாதுகாப்பார் என்றும் நினைத்திருக்கலாம். (1 சா. 17:45) ஆனால், ஒரு முக்கியமான உண்மையை அவர்கள் மறந்துவிட்டார்கள், இதை இன்றுகூட அநேகர் புரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள். யெகோவா தம்மை மட்டுமே வழிபட வேண்டுமென எதிர்பார்க்கிறார், அதற்கு அவர் தகுதியுள்ளவர். கலப்பு வழிபாட்டை அவர் ஏற்றுக்கொள்ள மாட்டார், சொல்லப்போனால் அருவருக்கிறார்.—யாத்திராகமம் 20:5-ஐ வாசியுங்கள்.
11. எதற்கு முதலிடம் கொடுக்கிறோம், யாரை வழிபடுகிறோம் என்பதை மீண்டும் பரிசீலிக்க எலியாவின் அறைகூவல் நமக்கு எப்படி உதவும்?
11 அந்த இஸ்ரவேலர் செய்த அதே தவறை இன்றும் அநேகர் செய்கிறார்கள், ஆம், ‘ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால்’ வைக்கிறார்கள். வேறு “பாகால்களுக்கு” தங்களுடைய வாழ்க்கையில் கொஞ்சம் கொஞ்சமாக இடமளித்து உண்மைக் கடவுளின் வழிபாட்டை ஓரங்கட்டிவிடுகிறார்கள். ‘ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் வைக்காதீர்கள்’ என அன்று எலியா விடுத்த அறைகூவல் இன்று நம் காதில் ஒலிக்கிறதா? அப்படி ஒலித்தால், வாழ்க்கையில் நாம் எதற்கு முதலிடம் கொடுக்கிறோம்... யாரை வழிபடுகிறோம்... என்பதை மீண்டும் பரிசீலிக்கத் தூண்டப்படுவோம்.
உச்சக்கட்ட பரீட்சை
12, 13. (அ) எலியா முன்வைத்த பரீட்சை என்ன? (ஆ) எலியாவைப் போல் நாமும் நம்பிக்கையுடன் இருக்கிறோம் என்பதை எப்படிக் காட்டலாம்?
12 அடுத்து, எலியா ஒரு பரீட்சையை முன்வைக்கிறார். அது மிக எளிமையான பரீட்சை. பாகாலின் பூசாரிகள் ஒரு பலிபீடம் கட்டி, அதன்மீது ஒரு மிருகத்தைக் கிடத்த வேண்டும்; பிறகு, அதற்கு நெருப்பு மூட்டச் சொல்லி தங்கள் தெய்வத்திடம் மன்றாட வேண்டும். அதையே எலியாவும் செய்யப்போகிறார். “நெருப்பு மூலம் பதிலளிக்கும் கடவுளே உண்மைக் கடவுள்” என்று அவர் சொல்கிறார். உண்மைக் கடவுள் யார் என்பது எலியாவுக்கு நன்றாகத் தெரியும். அவருடைய விசுவாசம் மிக உறுதியாய் இருந்ததால், பாகால் தீர்க்கதரிசிகளுக்கே எல்லாம் சாதகமாக இருக்க விட்டுவிடுகிறார். அவர்களை முதலில் பலிசெலுத்த சொல்கிறார். அதனால் அவர்கள் பலிக்குரிய காளையைத் தேர்ந்தெடுத்து பாகாலுக்குத் தயார் செய்கிறார்கள்.c—1 இரா. 18:24, 25, பொ.மொ.
13 இன்று அற்புதங்கள் எதுவும் நடப்பதில்லை. ஆனால், யெகோவா மாறாதவர். எனவே, எலியாவைப் போல நாமும் அவர்மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைக்கலாம். உதாரணத்திற்கு, பைபிள் கற்பிப்பவற்றை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளாதபோது, தங்களுடைய கருத்துக்களைச் சொல்ல முதலில் நாம் அவர்களை அனுமதிக்கலாம்; எந்தவித பயமோ தயக்கமோ காட்ட வேண்டியதில்லை. அவர்களுடைய தவறான கருத்துக்களைச் சரிசெய்ய நாமும் எலியாவைப்போல் உண்மைக் கடவுளின் உதவியை நாட வேண்டும்; அதாவது, நம்முடைய சொந்த புத்தியின் மீது சார்ந்திருப்பதற்குப் பதிலாக, பைபிளின் மீது சார்ந்திருக்க வேண்டும்; “காரியங்களைச் சரிசெய்வதற்கு” உதவும் விதத்தில் அது எழுதப்பட்டிருக்கிறது.—2 தீ. 3:16.
பாகால் வழிபாடு ஒரு கேலிக்கூத்து என்பதை எலியா அறிந்திருந்தார், அது போலியானது என்பதை மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டுமென விரும்பினார்
14. பாகால் தீர்க்கதரிசிகளை என்ன சொல்லி எலியா கேலி செய்தார், ஏன்?
14 பாகால் தீர்க்கதரிசிகள் அந்தக் காளையைப் பலிபீடத்தில் வைத்து தங்களுடைய தெய்வத்திடம் வேண்டிக்கொள்ள ஆரம்பிக்கிறார்கள். “பாகாலே! பதில் தாரும்” என்று அவர்கள் திரும்பத் திரும்ப சத்தமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். நிமிடங்கள் மணிநேரங்களாக மாறுகின்றன. ‘ஆனால் எந்தக் குரலும் கேட்பதில்லை, எந்தப் பதிலும் வருவதில்லை.’ மதிய வேளையில் எலியா அவர்களைக் கேலி செய்ய ஆரம்பிக்கிறார். பதில் சொல்லக்கூட நேரமில்லாத அளவுக்கு பாகால் அதிக வேலையாய் இருக்கிறானோ, கழிப்பிடத்திற்குப் போயிருக்கிறானோ, தூங்குகிறானோ, எழுப்பினால்தான் எழுந்திருப்பானோ என்றெல்லாம் சொல்லி ஏளனம் செய்ய ஆரம்பிக்கிறார். “இன்னும் உரத்த குரலில் கத்துங்கள்” என அந்தப் பித்தலாட்டக்காரர்களை எலியா உசுப்பிவிடுகிறார். பாகால் வழிபாடு ஒரு கேலிக்கூத்து, மோசடி என்பதை எலியா நன்கு அறிந்திருக்கிறார்; அதைக் கடவுளுடைய மக்கள் புரிந்துகொள்ள வேண்டுமென அவர் விரும்புகிறார்.—1 இரா. 18:26, 27, பொ.மொ.
15. யெகோவாவைத் தவிர வேறொருவரை எஜமானராய் ஆக்கிக்கொள்வது மடத்தனம் என்பதை பாகால் பூசாரிகளின் உதாரணம் எப்படிக் காட்டுகிறது?
15 அவர் சொன்னதைக் கேட்டு, பாகால் பூசாரிகள் இன்னும் அதிக வெறித்தனமாய் நடந்துகொள்கிறார்கள்; அவர்கள் ‘உரத்த சத்தமாய்க் கூப்பிட்டு, தங்கள் வழக்கத்தின்படியே இரத்தம் தங்கள்மேல் வடியுமட்டும் கத்திகளாலும் ஈட்டிகளாலும் தங்களைக் கீறிக்கொள்கிறார்கள்.’ ஆனால் இதுவும் பலிப்பதில்லை! ‘எந்தக் குரலும் கேட்பதில்லை, எந்தப் பதிலும் வருவதில்லை, கவனிப்பார் யாருமில்லை.’ (1 இரா. 18:28, 29; பொ.மொ.) நிஜத்தில் பாகால் என யாருமே இல்லை. யெகோவாவிடமிருந்து தந்திரமாய் மக்களைத் திசைதிருப்ப சாத்தான் உருவாக்கிய கற்பனை கடவுள்தான் அவன். யெகோவாவை விட்டுவிட்டு வேறெந்த எஜமானருக்குச் சேவை செய்தாலும் ஏமாற்றம்தான் மிஞ்சும், சொல்லப்போனால் தலைகுனிவுதான் ஏற்படும்.—சங்கீதம் 25:3-ஐயும் 115:4-8-ஐயும் வாசியுங்கள்.
கடவுள் தரும் பதில்
16. (அ) கர்மேல் மலைமீது இருந்த யெகோவாவின் பலிபீடத்தை எலியா சீரமைத்தது மக்களுக்கு எதை நினைப்பூட்டியிருக்கலாம்? (ஆ) யெகோவாமீது தனக்கு நம்பிக்கை இருந்ததை இன்னும் எந்த விதத்தில் எலியா காட்டினார்?
16 மாலை வேளை நெருங்குகிறது, இப்போது எலியா பலிசெலுத்த வேண்டிய முறை வருகிறது. உண்மை வழிபாட்டின் எதிரிகள் தகர்த்துப்போட்டிருந்த யெகோவாவின் பலிபீடத்தை அவர் சீரமைக்கிறார். அதற்காக 12 கற்களைப் பயன்படுத்துகிறார்; 12 கோத்திரத்தாருக்குக் கொடுக்கப்பட்ட திருச்சட்டத்தின் கீழ்தான் இந்தப் பத்துக் கோத்திர இஸ்ரவேலரும் இருக்கிறார்கள் என்பதை நினைப்பூட்ட இப்படிச் செய்திருக்கலாம். பின்பு பலிக்குரிய மிருகத்தை அதன்மீது கிடத்துகிறார்; எல்லாவற்றின் மீதும் நிறையத் தண்ணீர் ஊற்றச் சொல்கிறார்; இந்தத் தண்ணீர் அருகிலுள்ள மத்தியதரைக் கடலிலிருந்து கொண்டுவரப்பட்டிருக்கலாம். அந்தப் பலிபீடத்தைச் சுற்றி வாய்க்கால் வெட்டி, அதையும் தண்ணீரால் நிரப்பச் சொல்கிறார். முதலில் எல்லாமே பாகால் தீர்க்கதரிசிகளுக்குச் சாதகமாக இருக்கும்படி பார்த்துக்கொண்டது போல், இப்போது எல்லாமே யெகோவாவுக்குப் பாதகமாக இருக்கும்படி பார்த்துக்கொள்கிறார்; எந்தவொரு பாதகத்தையும் யெகோவா சாதகமாக்கிவிடுவார் என்பதில் அவருக்கு அபார நம்பிக்கை!—1 இரா. 18:30-35.
மக்கள்மீது இன்னமும் தனக்கு அக்கறை இருப்பதை எலியாவின் ஜெபம் காட்டியது; யெகோவா அவர்களுடைய ‘இருதயத்தை மறுபடியும் திருப்பப்போவதை’ காண எலியா ஆவலாய் இருந்தார்
17. எலியா எதற்கு முக்கியத்துவம் கொடுத்தார் என்பதை அவரது ஜெபத்திலிருந்து எப்படித் தெரிந்துகொள்ளலாம், நாம் ஜெபம் செய்யும்போது எப்படி அவரைப் பின்பற்றலாம்?
17 எல்லாம் தயாரானவுடன், எலியா ஜெபம் செய்கிறார். எதற்கு அவர் முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பது அவருடைய வலிமையான, எளிமையான ஜெபத்தில் தெளிவாய்த் தெரிகிறது. முதலாவதாக, யெகோவாவே ‘இஸ்ரவேலில் தேவன்,’ பாகால் அல்ல என்பதை எல்லோரும் அறிய வேண்டுமென்பது அவருடைய முக்கியக் குறிக்கோளாக இருக்கிறது. இரண்டாவதாக, தான் யெகோவாவின் ஊழியர் என்பதை எல்லோரும் அறிய வேண்டும்... எல்லாப் புகழும் மகிமையும் யெகோவாவுக்கே சேர வேண்டும்... என அவர் விரும்புகிறார். கடைசியாக, இன்னமும் தன் மக்கள்மீது தனக்கு அக்கறை இருப்பதைத் தெரிவிக்கிறார்; ஆம், யெகோவா அந்த மக்களின் ‘இருதயத்தை மறுபடியும் திருப்பப்போவதை’ காண தான் ஆவலாய் இருப்பதைத் தெரிவிக்கிறார். (1 இரா. 18:36, 37) அந்த மக்கள் விசுவாசமில்லாமல் நடந்து பல பிரச்சினைகளை வரவழைத்திருந்தாலும், அவர்களை எலியா இன்னும் நேசிக்கிறார். நாம் ஜெபம் செய்யும்போது, எலியாவைப் போலவே மனத்தாழ்மை காட்டுகிறோமா, கடவுளுடைய பெயருக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமா, மற்றவர்கள்மீது இரக்கம் காட்டுகிறோமா?
18, 19. (அ) எலியாவின் ஜெபத்திற்கு யெகோவா எவ்வாறு பதிலளித்தார்? (ஆ) என்ன செய்யச் சொல்லி மக்களுக்கு எலியா கட்டளையிட்டார், பாகால் பூசாரிகள் ஏன் இரக்கம் பெற அருகதை இல்லாதவர்கள்?
18 எலியா ஜெபம் செய்வதற்குமுன் அந்தக் கூட்டத்தார், ‘பாகால் வெறும் கற்பனை என்று இப்போது தெரிந்துவிட்டது, யெகோவாவும் அப்படித்தானோ’ என நினைத்திருக்கலாம். ஆனால், அவர் ஜெபம் செய்த பின்பு, அவர்கள் அப்படி நினைப்பதற்கு வாய்ப்பே இல்லாமல் போகிறது. ‘உடனே யெகோவாவின் நெருப்பு கீழே இறங்கி அந்த எரிபலியையும், விறகுக் கட்டைகளையும், கற்களையும், மணலையும் சுட்டெரித்து வாய்க்கால் நீரையும் வற்றச் செய்கிறது.’ (1 இரா. 18:38, பொ.மொ.) எவ்வளவு அற்புதமான பதில்! இப்போது ஜனங்கள் என்ன செய்கிறார்கள்?
19 “யெகோவாவே உண்மையான கடவுள்! யெகோவாவே உண்மையான கடவுள்!” என்று சொல்லி எல்லோரும் ஆரவாரம் செய்கிறார்கள். (1 இரா. 18:39, NW) கடைசியில், உண்மையை உணர்ந்துகொள்கிறார்கள். ஆனாலும், வானத்திலிருந்து நெருப்பை அனுப்பி யெகோவா அற்புதமாய்ப் பதில் தந்த பின்புதான், யெகோவாவே உண்மைக் கடவுள் என அவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்; இது உண்மையான விசுவாசத்திற்கு அடையாளம் அல்ல. எனவே, தங்களுடைய விசுவாசத்தை வேறு விதத்தில் காட்டும்படி அவர்களிடம் எலியா சொல்கிறார். அதாவது, யெகோவா தந்திருக்கிற திருச்சட்டத்திற்குக் கீழ்ப்படியும்படி சொல்கிறார். இதை அவர்கள் அநேக ஆண்டுகளுக்கு முன்பாகவே செய்திருக்க வேண்டும். பொய்த் தீர்க்கதரிசியினரும் சிலை வழிபாட்டினரும் கொல்லப்பட வேண்டுமெனத் திருச்சட்டம் சொன்னது. (உபா. 13:5-9) பாகால் பூசாரிகள் யெகோவா தேவனின் பரம விரோதிகள்; அவருடைய நோக்கங்களுக்கு எதிராக வேண்டுமென்றே செயல்படுகிறவர்கள். இப்படிப்பட்டவர்களுக்கு ஈவிரக்கம் காட்ட முடியுமா? பழிபாவம் அறியாத எத்தனையோ குழந்தைகளை பாகாலுக்குப் பலி கொடுக்க உயிரோடு எரித்து கொன்றார்களே, அப்படியிருக்கும்போது இவர்களுக்கு எப்படி ஈவிரக்கம் காட்ட முடியும்? (நீதிமொழிகள் 21:13-ஐ வாசியுங்கள்; எரே. 19:5) இரக்கத்தைப் பெற இந்தப் பூசாரிகளுக்குத் துளியும் அருகதை இல்லை! எனவே, இவர்களைக் கொன்றுபோடச் சொல்லி எலியா கட்டளையிடுகிறார்; இவர்களும் கொல்லப்படுகிறார்கள்.—1 இரா. 18:40.
20. பாகால் பூசாரிகளை எலியா கொன்றுபோட்டதைப் பற்றி இன்று சிலர் கடுமையாக விமர்சிப்பது ஏன் நியாயமல்ல?
20 கர்மேல் மலையில் நடந்த இந்தப் பரீட்சையின் உச்சக்கட்ட சம்பவத்தை இன்றைய அறிஞர்கள் கடுமையாக விமர்சிக்கலாம். மதவெறியர்கள் வன்முறைகளில் இறங்குவதை நியாயப்படுத்த இந்தச் சம்பவத்தைச் சுட்டிக்காட்டலாமெனச் சிலர் கவலைப்படலாம். சொல்லப்போனால், வன்முறையில் இறங்குகிற மதவெறியர்கள் இன்று ஏராளமானோர் இருக்கிறார்கள். ஆனால், எலியா மதவெறியர் அல்ல. யெகோவாவின் சார்பாகத்தான் இந்த நீதியான தண்டனைத்தீர்ப்பை நிறைவேற்றினார். அதோடு, உண்மைக் கிறிஸ்தவர்கள் எலியாவைப்போல் கெட்டவர்களைக் கொல்ல முடியாது என்பதை அறிந்திருக்கிறார்கள். “உன் வாளை அதன் உறையில் போடு; வாளை எடுக்கிற எல்லாரும் வாளால் சாவார்கள்” என பேதுருவுக்கு இயேசு கொடுத்த அறிவுரையை... ஆம், கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் கொடுத்த நெறிமுறையை... பின்பற்றுகிறார்கள். (மத். 26:52) எதிர்காலத்தில் யெகோவாதான் தமது மகன் மூலம் நீதியை நிலைநாட்டுவார் என்பதில் நம்பிக்கை வைக்கிறார்கள்.
21. இன்று உண்மைக் கிறிஸ்தவர்களுக்கு எலியா எப்படிச் சிறந்த முன்மாதிரி வைத்திருக்கிறார்?
21 விசுவாசத்தை வாழ்வில் காட்ட வேண்டிய கடமை உண்மைக் கிறிஸ்தவர்களுக்கு இருக்கிறது. (யோவா. 3:16) இதற்கு ஒரு வழி, எலியாவைப் போன்ற விசுவாசமுள்ளவர்களைப் பின்பற்றுவதாகும். அவர் யெகோவாவை மட்டுமே வழிபட்டார், அவ்வாறு வழிபட மற்றவர்களையும் ஊக்கப்படுத்தினார். யெகோவாவிடமிருந்து மக்களைத் திசைதிருப்ப சாத்தான் தந்திரமாய்ப் பயன்படுத்திய மதம் போலி மதம் என்பதைத் தைரியமாய் அம்பலப்படுத்தினார். பிரச்சினைகளைத் தீர்க்க தன்னுடைய திறமைகள் மீதோ தீர்மானங்கள் மீதோ நம்பிக்கை வைக்காமல், யெகோவாமீது நம்பிக்கை வைத்தார். ஆம், எலியா உண்மை வழிபாட்டுக்குத் தூணாய் நின்றார். அவருடைய விசுவாசத்தை நாம் அனைவரும் பின்பற்றுவோமாக!
a “எலியாவின் நாட்களில் எவ்வளவு காலம் வறட்சி?” என்ற பெட்டியைக் காண்க.
b பொதுவாக, கர்மேல் மலை பச்சைப் பசேலெனச் செழிப்பாகக் காணப்படும். கடலிலிருந்து வீசுகிற ஈரப்பதமிக்க காற்று மேலெழும்பி மலைச்சரிவுகளுக்கு வரும்போது அடிக்கடி மழை கொட்டும், ஏராளமான பனியும் பொழியும். பாகால்தான் மழை தரும் தெய்வமென அவர்கள் நினைத்ததால், குறிப்பாக இந்த மலை பாகால் வழிபாட்டுக்கு முக்கியத் தலமாய் விளங்கியதாகத் தெரிகிறது. எனவே, வறண்டு பாழாய்க் கிடக்கும் இந்த கர்மேல் மலை, பாகால் வழிபாடு போலியானது என்பதை அம்பலப்படுத்த மிகப் பொருத்தமான இடம்.
c பலிக்குரிய மிருகத்தின்மீது “நெருப்பு மூட்டாதீர்கள்” என்று அவர்களிடம் எலியா சொன்னார், இது கவனிக்க வேண்டிய விஷயம். இப்படிப்பட்ட சிலை வழிபாட்டினர் சில சமயங்களில் பலிபீடத்தின் கீழே ரகசிய குழி தோண்டி, தாங்களே நெருப்பு மூட்டிவிட்டு, கடவுள் நெருப்பு மூட்டியதைப்போல் தோன்றச் செய்தார்களென அறிஞர்கள் சிலர் கூறுகிறார்கள்.