இயேசு ராஜ்ய மகிமையில் வரும்போது
“இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனுஷகுமாரன் தம்முடைய ராஜ்யத்தில்
வருவதைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லை.”—மத்தேயு 16:28.
1, 2. பொ.ச. 32-ன் பெந்தெகொஸ்தேக்குச் சிறிது பின் என்ன சம்பவித்தது, அந்தச் சம்பவத்தின் நோக்கம் என்ன?
பொ. ச. 32 பெந்தெகொஸ்தேக்குச் சிறிது பின், இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களில் மூவர், மறக்கமுடியாத ஒரு தரிசனத்தைக் கண்டார்கள். தேவாவியால் ஏவப்பட்டெழுதப்பட்ட பதிவில் இவ்வாறுள்ளது, “இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவனுடைய சகோதரனாகிய யோவானையும் கூட்டிக்கொண்டு தனித்திருக்கும்படி உயர்ந்த மலையின்மேல் போய், அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார்.”—மத்தேயு 17:1, 2.
2 இந்த மறுரூப தரிசனம் நெருக்கடியான ஒரு சமயத்தில் வந்தது. இயேசு, எருசலேமில் தாம் பாடுபட்டு இறக்கப்போவதைக் குறித்து, தம்மைப் பின்பற்றினவர்களுக்குச் சொல்லத் தொடங்கியிருந்தார்; ஆனால் அவருடைய வார்த்தைகளைப் புரிந்துகொள்வது அவர்களுக்குக் கடினமாக இருந்தது. (மத்தேயு 16:21-23) அந்தத் தரிசனம், வரவிருந்த இயேசுவின் மரணத்திற்கும், அதைப் பின்தொடர்ந்து கிறிஸ்தவ சபை அனுபவிக்கவிருந்த கடினமான உழைப்புக்கும் சோதனைக்குமுரிய ஆண்டுகளுக்கும் ஆயத்தம் செய்வதாய் இயேசுவின் அந்த மூன்று அப்போஸ்தலருடைய விசுவாசத்தை உறுதிப்படுத்தியது. அந்தத் தரிசனத்திலிருந்து இன்று நாம் எதையாவது கற்றுக்கொள்ள முடியுமா? முடியும், ஏனெனில் அது நிழலாக முன்குறித்தது நம்முடைய காலத்தில் உண்மையாக நடந்தேறுகிறது.
3, 4. (அ) மறுரூப தரிசனத்திற்கு ஆறு நாட்களுக்கு முன்பாக இயேசு என்ன சொன்னார்? (ஆ) மறுரூப சமயத்தின்போது என்ன நடந்ததென்பதை விவரியுங்கள்.
3 மறுரூபமாவதற்கு ஆறு நாட்களுக்கு முன்பாக, இயேசு தம்மைப் பின்பற்றினவர்களிடம் இவ்வாறு சொன்னார்: “மனுஷகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமைபொருந்தினவராய்த் தம்முடைய தூதரோடுங்கூட வருவார்; அப்பொழுது, அவனவன் கிரியைக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார்.” இந்த வார்த்தைகள், ‘இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவில்’ நிறைவேற்றமடையும். இயேசு மேலுமாக இவ்வாறு சொன்னார்: “இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனுஷகுமாரன் தம்முடைய ராஜ்யத்தில் வருவதைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.” (மத்தேயு 16:27, 28; 24:3, NW; 25:31-34, 41; தானியேல் 12:4) பின்குறிப்பிட்ட இந்த வார்த்தைகளின் நிறைவேற்றமாக இந்த மறுரூப தரிசனம் நடந்தேறியது.
4 திட்டமாக அந்த மூன்று அப்போஸ்தலர்கள் எதைக் கண்டார்கள்? பின்வருவது அந்தச் சம்பவத்தைப் பற்றிய லூக்காவின் விவரிப்பாகும்: “[இயேசு] ஜெபஞ்செய்கையில் அவர் முகரூபம் மாறிற்று, அவருடைய வஸ்திரம் வெண்மையாய் மின்னொளி வீசினது. இதோ, மோசே எலியா என்னும் இரண்டுபேர் மகிமையில் தோன்றி அவரோடு சம்பாஷித்து அவர் எருசலேமிலே நிறைவேற்றப்போகிற அவருடைய மரணத்தைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள்.” பின்பு, “ஒரு மேகம் வந்து அவர்கள் [அந்த அப்போஸ்தலர்கள்] மேல் நிழலிட்டது; அவர்கள் அந்த மேகத்துக்குள் வருகையில் பயந்தார்கள். அப்பொழுது: இவர் என் குமாரன், நான் தெரிந்துகொண்டவர், இவருக்குச் செவி கொடுங்கள் என்று மேகத்திலிருந்து ஒரு சத்தம் பிறந்தது.”—லூக்கா 9:29-31, 34, 35, திருத்திய மொழிபெயர்ப்பு.
விசுவாசம் உறுதிப்படுத்தப்படுகிறது
5. அந்த மறுரூப தரிசனம் அப்போஸ்தலன் பேதுருவை எவ்வாறு பாதித்தது?
5 அப்போஸ்தலனாகிய பேதுரு, இயேசுவை “ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து” என்று ஏற்கெனவே அடையாளம் காட்டியிருந்தார். (மத்தேயு 16:16) அப்படி அடையாளம் காட்டினதை, பரலோகத்திலிருந்து வந்த யெகோவாவின் வார்த்தைகள் உறுதிசெய்தன; மேலும் இயேசு மறுரூபமான தரிசனம், கிறிஸ்து முடிவில் மனிதவர்க்கத்தை நியாயந்தீர்ப்பதற்கு, ராஜ்ய வல்லமையிலும் மகிமையிலும் வருவதன் ஒரு முன் அனுபவமாக இருந்தது. மறுரூபமானதற்கு 30-க்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்குப்பின், பேதுரு இவ்வாறு எழுதினார்: “நாங்கள் தந்திரமான கட்டுக்கதைகளைப் பின்பற்றினவர்களாக அல்ல, அவருடைய மகத்துவத்தைக் கண்ணாரக் கண்டவர்களாகவே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் உங்களுக்கு அறிவித்தோம். இவர் என்னுடைய நேசகுமாரன், இவரிடத்தில் பிரியமாயிருக்கிறேன் என்று சொல்லுகிற சத்தம் உன்னதமான மகிமையிலிருந்து அவருக்கு உண்டாகி, பிதாவாகிய தேவனால் அவர் கனத்தையும் மகிமையையும் பெற்றபோது, அவரோடேகூட நாங்கள் பரிசுத்த பருவதத்திலிருக்கையில், வானத்திலிருந்து பிறந்த அந்தச் சத்தத்தைக் கேட்டோம்.”—2 பேதுரு 1:16-18; 1 பேதுரு 4:17.
6. மறுரூப தரிசனத்திற்குப்பின் சம்பவங்கள் எவ்வாறு படிப்படையாக நிகழ்ந்துவந்தன?
6 அந்த மூன்று அப்போஸ்தலர்களும் கண்ட அந்தக் காட்சியால், இன்று நம்முடைய விசுவாசமும் உறுதிப்படுத்தப்படுகிறது. நிச்சயமாகவே, பொ.ச. 32 முதற்கொண்டு சம்பவங்கள் படிப்படியாய் நிகழ்ந்துவந்திருக்கின்றன. அதைப் பின்தொடர்ந்த ஆண்டில், இயேசு இறந்து உயிர்த்தெழுப்பப்பட்டு, தம்முடைய பிதாவின் வலதுபாரிசத்துக்கு மேலேறிச் சென்றார். (அப்போஸ்தலர் 2:29-36) அந்த ஆண்டின் பெந்தெகொஸ்தே நாளின்போது, ‘தேவனுடைய இஸ்ரவேலரான’ புதிய இஸ்ரவேலர் பிறப்பிக்கப்பட்டார்கள், பிரசங்கிக்கும் ஏற்பாடு தொடங்கப்பட்டது; இது எருசலேமில் தொடங்கி பின்னால் பூமியின் கடைமுனைகள் வரையாகவும் பரவினது. (கலாத்தியர் 6:16; அப்போஸ்தலர் 1:8) இயேசுவைப் பின்பற்றினோரின் விசுவாசம் பெரும்பாலும் உடனடியாகவே பரீட்சிக்கப்பட்டது. பிரசங்கிப்பதை நிறுத்திவிட மறுத்ததால் அப்போஸ்தலர்கள் கைதுசெய்யப்பட்டு கடுமையாக அடிக்கப்பட்டனர். சீக்கிரத்திலேயே ஸ்தேவான் கொலை செய்யப்பட்டார். பின்பு மறுரூப காட்சிக்கு கண்கண்ட சாட்சியாக இருந்த யாக்கோபும் கொல்லப்பட்டார். (அப்போஸ்தலர் 5:17-40; 6:8–7:60; 12:1, 2) எனினும், பேதுருவும் யோவானும், மேலும் பல ஆண்டுகள் யெகோவாவை உண்மையுடன் சேவிப்பதற்கு உயிரோடிருந்தனர். உண்மையில், பொ.ச. முதல் நூற்றாண்டின் முடிவுப்பகுதியில், யோவான், பரலோக மகிமையிலுள்ள இயேசுவைப் பற்றிய மேலுமான தரிசனக் காட்சிகளைப் பதிவு செய்தார்.—வெளிப்படுத்துதல் 1:12-20; 14:14; 19:11-16.
7. (அ) மறுரூப தரிசனம் எப்போது நிறைவேற்றமடைய தொடங்கினது? (ஆ) எப்போது இயேசு, சிலருக்கு அவர்களுடைய நடத்தைக்கு ஏற்றபடி பலனளித்தார்?
7 யோவான் கண்ட தரிசனங்களில் பல, 1914-ல் ‘கர்த்தருடைய நாளின்’ ஆரம்பத்திலிருந்து நிறைவேற்றமடைந்து வந்திருக்கின்றன. (வெளிப்படுத்துதல் 1:10) மறுரூபமாதல் முன்நிழலாக குறிப்பிடப்பட்டபடி இயேசு, ‘தம்முடைய பிதாவின் மகிமையில் வருவதைப்’ பற்றியதென்ன? 1914-ல் கடவுளுடைய பரலோக ராஜ்யத்தின் பிறப்பின்போது இந்தத் தரிசனம் நிறைவேற்றமடைய தொடங்கினது. அப்போது இயேசு, ஒரு விடிவெள்ளியைப்போல், சர்வலோகக் காட்சியில் புதிதாக சிங்காசனத்தில் ஏற்றப்பட்ட அரசராக எழும்பினார். அது, உருவக நடையில் சொல்லப்போனால், ஒரு புதிய நாள் விடிந்ததைப்போல் இருந்தது. (2 பேதுரு 1:19; வெளிப்படுத்துதல் 11:15; 22:16) அந்தச் சமயத்தில் இயேசு, சிலருடைய நடத்தைக்கு ஏற்றபடி அவர்களுக்குப் பலனளித்தாரா? ஆம். அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் பரலோக உயிர்த்தெழுதல் அதற்குச் சற்றுப்பின் தொடங்கினது என்பதற்கு உறுதியான அத்தாட்சி உள்ளது.—2 தீமோத்தேயு 4:8; வெளிப்படுத்துதல் 14:13.
8.மறுரூப தரிசனத்தினுடைய நிறைவேற்றத்தின் முடிவை என்ன சம்பவங்கள் குறிப்பிடும்?
8 எனினும், மனிதவர்க்கம் முழுவதையும் நியாயந்தீர்ப்பதற்கு, சீக்கிரத்தில் இயேசு, “தமது மகிமைபொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட” வருவார். (மத்தேயு 25:31) அந்தச் சமயத்தில், தம்முடைய சிறப்புவாய்ந்த மகிமையில் முற்றிலும் அவர் தம்மை வெளிப்படுத்தி, அவனவன் அல்லது அவளவளுடைய நடத்தைக்குத் தக்கதாக ‘அவரவருக்கு’ நியாயமான பலனளிப்பார். செம்மறியாட்டைப் போன்றவர்கள், அவர்களுக்காக ஆயத்தம் செய்யப்பட்ட ராஜ்யத்தில் நித்திய ஜீவனைச் சுதந்தரிப்பார்கள்; வெள்ளாட்டைப் போன்றவர்கள் ‘நித்திய அழிவுக்குள்’ செல்வார்கள். அந்த மறுரூப தரிசனத்தின் நிறைவேற்றத்திற்கு எத்தகைய சிறப்பான முடிவாக அது இருக்கும்!—மத்தேயு 25:34, 41, 46, NW; மாற்கு 8:38; 2 தெசலோனிக்கேயர் 1:6-10.
இயேசுவின் மகிமைப்படுத்தப்பட்ட தோழர்கள்
9. மறுரூப தரிசனத்தின் நிறைவேற்றத்தில் மோசேயும் எலியாவும் இயேசுவுடன் இருக்கும்படி நாம் எதிர்பார்க்க வேண்டுமா? விளக்குங்கள்.
9 மறுரூப தரிசனத்தில் இயேசு தனிமையாக இல்லை. மோசேயும் எலியாவும் அவரோடு காணப்பட்டார்கள். (மத்தேயு 17:2, 3) உண்மையிலேயே அவர்கள் அங்கு இருந்தார்களா? இல்லை, ஏனெனில் அந்த இரு மனிதரும் வெகு காலத்திற்கு முன்பாகவே இறந்தவர்களாக, ஷியோலில் உயிர்த்தெழுதலுக்காகக் காத்துக்கொண்டு இருந்தனர். (பிரசங்கி 9:5, 10; எபிரெயர் 11:35) பரலோக மகிமையில் இயேசு வரும்போது அவர்கள் அவருடன் இருப்பார்களா? இல்லை, ஏனெனில், மனிதருக்குப் பரலோக நம்பிக்கைக்கான வாய்ப்பு அளிக்கப்பட்ட காலத்திற்கு முன்பாக மோசேயும் எலியாவும் வாழ்ந்தார்கள். ‘நீதிமான்களின் உயிர்த்தெழுதலாகிய’ பூமிக்குரிய உயிர்த்தெழுதலின் பாகமாக அவர்கள் இருப்பார்கள். (அப்போஸ்தலர் 24:15) ஆகையால் மறுரூப தரிசனத்தில் அவர்கள் தோன்றினது, அடையாள அர்த்தமுடையதாக இருக்கிறது. எதற்கு?
10, 11. வெவ்வேறுபட்ட சூழமைவுகளில் எலியாவும் மோசேயும் யாருக்கு முன்நிழலாக இருக்கிறார்கள்?
10 மற்ற சூழமைவுகளில், மோசேயும் எலியாவும் தீர்க்கதரிசனக் கருத்துடைய ஆட்களாக இருக்கிறார்கள். நியாயப்பிரமாண உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய மோசே, புதிய உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவுக்கு முன்நிழலாக இருந்தார். (உபாகமம் 18:18; கலாத்தியர் 3:19; எபிரெயர் 8:6) மேசியாவின் ஒரு முன்னோடியாகிய முழுக்காட்டுபவரான யோவானுக்கு, எலியா முன்நிழலாக இருந்தார். (மத்தேயு 17:11-13) மேலுமாக, வெளிப்படுத்துதல் 11-ம் அதிகாரத்தின் சூழமைவில், முடிவின் காலத்திலுள்ள அபிஷேகஞ்செய்யப்பட்ட மீதிபேருக்கு, மோசேயும் எலியாவும் முன்நிழலாக இருக்கிறார்கள். அது நமக்கு எப்படி தெரியும்?
11 சரி, வெளிப்படுத்துதல் 11:1-6-க்குத் திருப்புங்கள். 3-ம் வசனத்தில் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “என்னுடைய இரண்டு சாட்சிகளும் இரட்டு வஸ்திரமுடுத்திக்கொண்டிருக்கிறவர்களாய், ஆயிரத்திருநூற்றறுபது நாளளவும் தீர்க்கதரிசனஞ்சொல்லும்படி அவர்களுக்கு அதிகாரம் கொடுப்பேன்.” அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் மீதிபேர், இந்தத் தீர்க்கதரிசனம் முதல் உலகப் போரின்போது நிறைவேறிற்று.a ஏன் இரண்டு சாட்சிகள்? ஏனெனில் அபிஷேகஞ்செய்யப்பட்ட மீதிபேர், மோசேயும் எலியாவும் செய்ததைப்போன்ற கிரியைகளை ஆவிக்குரிய முறையில் நடப்பிக்கிறார்கள். தொடர்ந்து வசனங்கள் 5-ம் 6-ம் இவ்வாறு சொல்கின்றன: “ஒருவன் அவர்களைச் [இரண்டு சாட்சிகளை] சேதப்படுத்த மனதாயிருந்தால், அவர்களுடைய வாயிலிருந்து அக்கினி புறப்பட்டு, அவர்களுடைய சத்துருக்களைப் பட்சிக்கும்; அவர்களைச் சேதப்படுத்த மனதாயிருக்கிறவன் எவனோ அவன் அப்படியே கொல்லப்படவேண்டும். அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லிவருகிற நாட்களிலே மழைபெய்யாதபடிக்கு வானத்தை அடைக்க அவர்களுக்கு அதிகாரமுண்டு; அவர்கள் தண்ணீர்களை இரத்தமாக மாற்றவும், தங்களுக்கு வேண்டும்போதெல்லாம் பூமியைச் சகலவித வாதைகளாலும் வாதிக்கவும் அவர்களுக்கு அதிகாரமுண்டு.” இவ்வாறு, எலியாவும் மோசேயும் நடப்பித்த அற்புதங்களைப் பற்றி நாம் நினைப்பூட்டப்படுகிறோம்.—எண்ணாகமம் 16:31-34; 1 இராஜாக்கள் 17:1; 2 இராஜாக்கள் 1:9-12.
12. மறுரூப தரிசனத்தின் சூழமைவில், மோசேயாலும் எலியாவாலும் யார் முன்நிழலாகக் குறிப்பிடப்படுகிறார்கள்?
12 அப்படியானால், மறுரூபக் காட்சியின் சூழமைவில் மோசேயும் எலியாவும் யாருக்கு முன்நிழலாக இருக்கிறார்கள்? அவர்கள் இயேசுவுடன்கூட “மகிமையோடே” காணப்பட்டார்கள் என்று லூக்கா சொல்கிறார். (லூக்கா 9:30) இயேசுவோடு ‘உடன் சுதந்தரராக’ இருக்கும்படி பரிசுத்த ஆவியால் அபிஷேகஞ்செய்யப்பட்டிருக்கிறவர்களும், இவ்வாறு அவரோடுகூட ‘மகிமைப்படும்’ அதிசயமான நம்பிக்கையைப் பெற்றவர்களுமான கிறிஸ்தவர்களுக்கு முன்நிழலாக அவர்கள் இருக்கிறார்கள் என்பது தெளிவாயிருக்கிறது. (ரோமர் 8:17) ‘அவனவன் கிரியைக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிக்க,’ தம்முடைய பிதாவின் மகிமையில் இயேசு வரும்போது, உயிர்த்தெழுப்பப்பட்ட அபிஷேகஞ்செய்யப்பட்டவர்கள் அவருடன் இருப்பார்கள்.—மத்தேயு 16:27.
மோசேயையும் எலியாவையும் போன்ற சாட்சிகள்
13. இயேசுவுடன் மகிமைப்படுத்தப்பட்ட அவருடைய அபிஷேகஞ்செய்யப்பட்ட உடன்சுதந்தரவாளிகளுக்கு மோசேயும் எலியாவும் பொருத்தமான தீர்க்கதரிசன சித்தரிப்புகளாக இருப்பதை எந்த அம்சங்கள் குறிப்பிட்டுக் காட்டுகின்றன?
13 இயேசுவின் அபிஷேகஞ்செய்யப்பட்ட உடன் சுதந்தரருக்குப் பொருத்தமான தீர்க்கதரிசன சித்தரிப்புகளாக மோசேயையும் எலியாவையும் குறிக்கிற கவனிக்கத்தக்க அம்சங்கள் இருக்கின்றன. மோசே, எலியா ஆகிய இருவருமே யெகோவாவின் பிரதிநிதி பேச்சாளர்களாகப் பல ஆண்டுகள் சேவித்தனர். இருவரும் அரசர் ஒருவரின் கோபத்தை எதிர்ப்பட்டனர். தேவையிலிருந்த ஒரு காலத்தில் ஒவ்வொருவரும் அன்னிய குடும்பம் ஒன்றால் ஆதரிக்கப்பட்டனர். இருவரும் அரசர்களிடம் தைரியமாய்த் தீர்க்கதரிசனம் உரைத்தனர், கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எதிராக உறுதியாய் நின்றனர். மோசே, எலியா ஆகிய இருவருமே, யெகோவாவினுடைய வல்லமையின் வெளிக்காட்டுகளைச் சீனாய் (ஓரேப் என்றும் அழைக்கப்படுகிற) மலையில் கண்டனர். இருவரும் யோர்தானின் கிழக்குப் புறத்தில், தங்களுக்குப்பின் பொறுப்பேற்பவர்களை நியமித்தனர். இயேசுவின் வாழ்நாளில் நடந்தவற்றைத் தவிர, (யோசுவாவுடன்) மோசேயின் காலத்திலும் (எலிசாவுடன்) எலியாவின் காலத்திலுமே மிக அதிக எண்ணிக்கையான அற்புதங்கள் நடப்பிக்கப்பட்டன.b
14. அபிஷேகஞ்செய்யப்பட்டவர்கள், மோசேயையும் எலியாவையும் போல், யெகோவாவின் பிரதிநிதி பேச்சாளர்களாக எவ்வாறு சேவித்திருக்கிறார்கள்?
14 இவை யாவும் தேவனுடைய இஸ்ரவேலை நமக்கு நினைப்பூட்டுகிறதல்லவா? ஆம், நிச்சயமாகவே. தம்மை உண்மையுடன் பின்பற்றினவர்களிடம் இயேசு இவ்வாறு சொன்னார்: “ஆகையால், நீங்கள் போய், சகல தேசத்தாரின் ஜனங்களையும் சீஷராக்கி, பிதாவின் குமாரனின் பரிசுத்த ஆவியின் பெயரில் அவர்களை முழுக்காட்டி, நான் உங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிற காரியங்கள் யாவற்றையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்குக் கற்பியுங்கள். இதோ! நான் இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவு வரையிலும் எல்லா நாட்களிலும் உங்களுடன் இருக்கிறேன்.” (மத்தேயு 28:19, 20, NW) இந்த வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிதலாக, அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள், பொ.ச. 33 பெந்தெகொஸ்தே முதற்கொண்டு இப்போது வரையாக யெகோவாவின் பிரதிநிதி பேச்சாளர்களாகச் சேவித்துவந்திருக்கின்றனர். மோசேயையும் எலியாவையும் போல், அதிபதிகளின் கோபாவேசத்தை அவர்கள் எதிர்ப்பட்டு அவர்களுக்குச் சாட்சியும் பகர்ந்திருக்கின்றனர். இயேசு தம்முடைய 12 அப்போஸ்தலர்களிடம் இவ்வாறு சொன்னார்: “அவர்களுக்கும் புறஜாதியாருக்கும் சாட்சியாக என்னிமித்தம் அதிபதிகளுக்கு முன்பாகவும், ராஜாக்களுக்கு முன்பாகவும் கொண்டுபோகப்படுவீர்கள்.” (மத்தேயு 10:18) கிறிஸ்தவ சபையின் சரித்திரத்தின்போது அவருடைய வார்த்தைகள் மறுபடியும் மறுபடியுமாக நிறைவேற்றமடைந்து வந்திருக்கின்றன.—அப்போஸ்தலர் 25:6, 11, 12, 24-27; 26:3.
15, 16. பின்வருவனவற்றில் அபிஷேகஞ்செய்யப்பட்டவர்களுக்கும், மோசேக்கும் எலியாவுக்கும் இடையே என்ன இசைவுப் பொருத்தங்கள் இருக்கின்றன: (அ) பயமில்லாமல் சத்தியத்திற்காக நிலைநிற்கும் காரியத்தில்? (ஆ) இஸ்ரவேலராக இராதவர்களிடமிருந்து உதவி பெறுவதில்?
15 மேலும், அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள், மத பொய்மைக்கு எதிரில், சத்தியத்தின் சார்பாக நிலைநிற்பதில் மோசேயையும் எலியாவையும் போல் தைரியமானவர்களாக இருந்துவந்திருக்கிறார்கள். யூத கள்ளத் தீர்க்கதரிசியாகிய பர்யேசுவை பவுல் எவ்வாறு வெளிப்படையாகக் கண்டனம் செய்தார் என்பதையும், சாதுரியமாய் ஆனால் உறுதியாக அத்தேனியரின் தெய்வங்களின் பொய்மையை எவ்வாறு வெளிப்படுத்தினார் என்பதையும் நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். (அப்போஸ்தலர் 13:6-12; 17:16, 22-31) அபிஷேகஞ்செய்யப்பட்ட மீதிபேர், தற்காலங்களில் கிறிஸ்தவமண்டலத் தவறுகளைத் தைரியமாய் வெளிப்படுத்தியிருப்பதையும், இத்தகைய சாட்சிபகருதல் அதை வாதித்திருப்பதையுங்கூட நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்.—வெளிப்படுத்துதல் 8:7-12.c
16 பார்வோனின் கோபத்துக்குப் பயந்து மோசே தப்பியோடினபோது, எத்திரோ என்றும் அழைக்கப்பட்ட, இஸ்ரவேலனல்லாத ரெகுவேலின் வீட்டில் அடைக்கலத்தைக் கண்டடைந்தார். பிற்பட்ட ஒரு சமயத்தில், ரெகுவேலிடமிருந்து அமைப்புமுறைக்குரிய பயனுள்ள ஆலோசனையை மோசே பெற்றார். அவருடைய குமாரன், ஓபா, வனாந்தரத்தின் வழியாக இஸ்ரவேலரை வழிநடத்தினார்.d (யாத்திராகமம் 2:15-22; 18;5-27; எண்ணாகமம் 10:29) தேவனுடைய இஸ்ரவேலின் அபிஷேகஞ்செய்யப்பட்ட உறுப்பினராக இராத ஆட்கள், தேவனுடைய இஸ்ரவேலின் அபிஷேகஞ்செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு அதைப்போல் உதவியளித்திருக்கிறார்களா? ஆம், இந்தக் கடைசி நாட்களின்போது காட்சியில் தோன்றியிருக்கிற ‘மற்ற செம்மறியாடுகளாலாகிய’ ‘திரள் கூட்டத்தாரால்’ அவர்கள் ஆதரிக்கப்பட்டிருக்கின்றனர். (வெளிப்படுத்துதல் 7:9; யோவான் 10:16, NW; ஏசாயா 61:5) அபிஷேகஞ்செய்யப்பட்ட தம்முடைய சகோதரருக்கு இந்தச் “செம்மறியாடுகள்” அளிக்கப்போகிற உள்ளார்வ அன்புள்ள ஆதரவை முன்னறிவிப்பவராய், இயேசு தீர்க்கதரிசனமாக அவர்களிடம் இவ்வாறு சொன்னார்: “பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தீர்த்தீர்கள்; அந்நியனாயிருந்தேன், என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்; வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு வஸ்திரங்கொடுத்தீர்கள்; வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; காவலிலிருந்தேன், என்னைப் பார்க்கவந்தீர்கள். . . . மிக சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.”—மத்தேயு 25:35-40.
17. ஓரேப் மலையில் எலியாவுக்கு ஏற்பட்டதைப் போன்ற ஓர் அனுபவம், அபிஷேகஞ்செய்யப்பட்டவர்களுக்கு எவ்வாறு ஏற்பட்டது?
17 மேலுமாக, ஓரேப் மலையில் எலியாவுக்கு ஏற்பட்டதைப் போன்ற ஓர் அனுபவம் இந்தத் தேவனுடைய இஸ்ரவேலுக்கும் ஏற்பட்டிருந்தது.e அரசி யேசபேலுக்குப் பயந்து எலியா ஓடிஒளிந்துகொண்டிருந்த சமயத்தைப்போல், பயமடைந்த அபிஷேகஞ்செய்யப்பட்ட மீதிபேர், முதல் உலகப்போரின் முடிவில், தங்கள் வேலை முடிந்துவிட்டது என்று நினைத்தனர். அப்போதும், எலியாவுக்கு ஏற்பட்டதைப்போலவே, யெகோவாவை அவர்கள் எதிர்ப்பட்டார்கள்; ‘தேவனுடைய வீடு’ என்று உரிமை பாராட்டிக்கொண்டிருந்த அந்த அமைப்புகளை நியாயந்தீர்க்க அவர் வந்திருந்தார். (1 பேதுரு 4:17; மல்கியா 3:1-3) கிறிஸ்தவமண்டலம் தகுதியில் குறைவுபட்டதாக காணப்பட்டபோது, அபிஷேகஞ்செய்யப்பட்ட மீதிபேர் ‘உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரனாகத்’ தெரிந்துகொள்ளப்பட்டு, இயேசுவின் பூமிக்குரிய உடைமைகள் எல்லாவற்றின்மீதும் விசாரணைக்காரனாக இருக்கும்படி நியமிக்கப்பட்டனர். (மத்தேயு 24:45-47) ஓரேபில் எலியா, ‘அமர்ந்த மெல்லிய சத்தத்தைக்’ கேட்டார். அது யெகோவாவின் குரலாக இருந்தது, செய்வதற்கு மேலும் அதிகமான வேலையை அவர் எலியாவுக்குத் தந்தார். போருக்குப் பின்னான ஆண்டுகளின் அமைதலான காலப்பகுதியில், யெகோவாவின் அபிஷேகஞ்செய்யப்பட்ட உண்மையுள்ள ஊழியர்கள், பைபிளின் பக்கங்களிலிருந்து அவருடைய குரலைக் கேட்டார்கள். தாங்கள் நிறைவேற்ற வேண்டிய ஒரு பொறுப்பு தங்களுக்கு இருந்தது என்று அவர்களும் உணர்ந்தார்கள்.—1 இராஜாக்கள் 19:4; 9-18; வெளிப்படுத்துதல் 11:7-13.
18. யெகோவாவினுடைய வல்லமையின் முனைப்பான வெளிப்படுத்துதல்கள், தேவனுடைய இஸ்ரவேலின் மூலமாக எவ்வாறு அளிக்கப்பட்டன?
18 கடைசியாக, தேவனுடைய இஸ்ரவேலின்மூலம் யெகோவாவின் வல்லமையின் முனைப்பான வெளிப்படுத்துதல்கள் அளிக்கப்பட்டனவா? இயேசுவின் மரணத்துக்குப்பின், அப்போஸ்தலர்கள் பல அற்புதங்களை நடப்பித்தார்கள், ஆனால் இவை படிப்படியாய் நின்றுவிட்டன. (1 கொரிந்தியர் 13:8-13) தற்காலங்களில், அற்புதங்களை சொல்லர்த்தமான கருத்தில் நாம் காண்கிறதில்லை. மறுபட்சத்தில், இயேசு தம்மைப் பின்பற்றினோரிடம் இவ்வாறு சொன்னார்: “மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; . . . என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்.” (யோவான் 14:12) முதல் நூற்றாண்டில் இயேசுவின் சீஷர்கள் இந்த நற்செய்தியை ரோமப் பேரரசு முழுவதிலும் பிரசங்கித்துவந்தபோது இது முதலாவதாக நிறைவேற்றமடைந்தது. (ரோமர் 10:18) “குடியிருக்கப்பட்ட பூமி முழுவதிலும் சகல ஜனத்தாருக்கும் ஒரு சாட்சியாக” இன்று இந்த நற்செய்தியைப் பிரசங்கிப்பதை அபிஷேகஞ்செய்யப்பட்ட மீதிபேர் முன்நின்று செய்துவருகையில் அதைப் பார்க்கிலும் பெரிய கிரியைகள் நடப்பிக்கப்பட்டு வருகின்றன. (மத்தேயு 24:14, NW) இதன் பலன் என்ன? சரித்திரத்திலேயே, யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்த உண்மையுள்ள ஊழியரின் மிகப் பெரிய எண்ணிக்கை கூட்டிச்சேர்க்கப்படுவதை இந்த 20-வது நூற்றாண்டு கண்டிருக்கிறது. (வெளிப்படுத்துதல் 5:9, 10; 7:9, 10) யெகோவாவின் வல்லமையின் எத்தகைய சிறப்புவாய்ந்த அத்தாட்சி!—ஏசாயா 60:22.
இயேசுவின் சகோதரர் மகிமைப்படுத்தப்படுகிறார்கள்
19. இயேசுவின் அபிஷேகஞ்செய்யப்பட்ட சகோதரர்கள் எப்போது அவருடன் மகிமையில் காணப்படுகிறார்கள்?
19 இயேசுவின் அபிஷேகஞ்செய்யப்பட்ட சகோதரரின் மீதிபேர் தங்கள் பூமிக்குரிய வாழ்க்கையை முடிக்கையில், அவரோடுகூட மகிமைப்படுத்தப்படுகிறார்கள். (ரோமர் 2:6, 7; 1 கொரிந்தியர் 15:53; 1 தெசலோனிக்கேயர் 4:14, 17) இவ்வாறு, பரலோக ராஜ்யத்தில் சாவாமையுடைய அரசர்களும் ஆசாரியர்களுமாக அவர்கள் ஆகிறார்கள். அப்போது இயேசுவுடன் அவர்கள், ‘இருப்புக்கோலால் ஜனங்களை மேய்ப்பார்கள் இவ்வாறு மண்பாண்டங்களைப்போல் அவர்கள் நொறுக்கப்படுவார்கள்.’ (வெளிப்படுத்துதல் 2:27, NW; 20:4-6; சங்கீதம் 110:2, 5, 6) இயேசுவுடன் அவர்கள் சிங்காசனங்களில் வீற்றிருந்து “இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும்” நியாயந்தீர்ப்பார்கள். (மத்தேயு 19:28) ‘தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதன்’ பாகமாக இருக்கிற இந்தச் சம்பவங்களுக்காக, புலம்பும் சிருஷ்டி ஆவலோடு காத்துகொண்டிருந்திருக்கிறது.—ரோமர் 8:19-21; 2 தெசலோனிக்கேயர் 1:6-8.
20. (அ) எந்த எதிர்பார்ப்பைக் குறித்ததில் மறுரூப தரிசனம் பேதுருவின் விசுவாசத்தை உறுதிப்படுத்தினது? (ஆ) மறுரூப தரிசனம் இன்று கிறிஸ்தவர்களை எவ்வாறு உறுதிப்படுத்துகிறது?
20 பவுல் பின்வருமாறு எழுதினபோது, ‘மகா உபத்திரவத்தின்போது’ இயேசு வெளிப்படுவதைப் பற்றி பேசினார். “தம்முடைய பரிசுத்தவான்களில் மகிமைப்படத்தக்கவராயும், . . . விசுவாசிக்கிறவர்களெல்லாரிடத்திலும் ஆச்சரியப்படத்தக்கவராயும் அவர் வரு”கிறார். (மத்தேயு 24:21, NW; 2 தெசலோனிக்கேயர் 1:9) பேதுருவுக்கும், யாக்கோபுக்கும், யோவானுக்கும், ஆவியால் அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் எல்லாருக்கும் எத்தகைய சிறப்பான ஓர் எதிர்பார்ப்பாக அது இருக்கிறது! அந்த மறுரூப தரிசனம் பேதுருவின் விசுவாசத்தை உறுதிப்படுத்தினது. அதைப்பற்றி வாசிப்பது, நிச்சயமாகவே நம்முடைய விசுவாசத்தையும் உறுதிப்படுத்தி, சீக்கிரத்தில் இயேசு, “அவனவன் கிரியைக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார்” என்ற நம்முடைய நம்பிக்கையைத் திடப்படுத்துகிறது. இந்நாள்வரையிலும் உயிர்வாழ்ந்திருக்கிற, அபிஷேகஞ்செய்யப்பட்ட உண்மையுள்ள கிறிஸ்தவர்கள், கிறிஸ்துவுடன் தாங்கள் மகிமைப்படுத்தப்படுவார்கள் என்ற தங்கள் நம்பிக்கை உறுதிசெய்யப்பட்டதைக் காண்கிறார்கள். மற்ற செம்மறியாடுகளுக்கு, இந்தப் பொல்லாதக் காரிய ஒழுங்குமுறையின் முடிவின்போது அவர் தங்களைக் காப்பாற்றி, மகிமையான புதிய உலகத்துக்குள் பிரவேசிக்கும்படி செய்வார் என்ற அறிவில் அவர்கள் விசுவாசம் உறுதிசெய்யப்படுகிறது. (வெளிப்படுத்துதல் 7:14) முடிவு வரையில் உறுதியாய் நிலைநிற்பதற்கு எத்தகைய ஓர் ஊக்கமூட்டுதல்! மேலும் பின்தொடரும் கட்டுரையில் நாம் காணப்போகிறபடி, இந்தத் தரிசனம் இன்னும் அதிகமானவற்றை நமக்குக் கற்பிக்க முடியும்.
[அடிக்குறிப்புகள்]
a உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸையிட்டியால் பிரசுரிக்கப்பட்ட புத்தகங்களாகிய “உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக” (ஆங்கிலம்) பக்கங்கள் 313-14-ஐயும், வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது!, பக்கங்கள் 164-5-ஐயும் காண்க.
b யாத்திராகமம் 2:15-22; 3:1-6; 5:2; 7:8-13; 8:18; 19:16-19; உபாகமம் 31:23; 1 இராஜாக்கள் 17:8-16; 18:21-40; 19:1, 2, 8-18; 2 இராஜாக்கள் 2:1-14.
c வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது! புத்தகத்தில் பக்கங்கள் 133-41-ஐக் காண்க.
d உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி பிரசுரித்த நீங்கள் அர்மகெதோனைத் தப்பிப் பிழைத்து புதிய பூமிக்குள் செல்லலாம் (ஆங்கிலம்) புத்தகம், பக்கங்கள் 281-3-ஐக் காண்க.
e “உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக,” பக்கங்கள் 317-20-ஐக் காண்க.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ மறுரூப தரிசனத்தில் இயேசுவுடன் யார் காணப்பட்டார்கள்?
◻ மறுரூப தரிசனத்தால் அப்போஸ்தலரின் விசுவாசம் எவ்வாறு உறுதிசெய்யப்பட்டது?
◻ மறுரூப தரிசனத்தில் மோசேயும் எலியாவும் இயேசுவுடன்கூட “மகிமையில்” தோன்றினபோது, அவர்கள் யாரைப் பிரதிநிதித்துவம் செய்தார்கள்?
◻ மோசேக்கும் எலியாவுக்கும், தேவனுடைய இஸ்ரவேலுக்கும் இடையே என்ன இசைவுப் பொருத்தங்கள் உள்ளன?
[பக்கம் 10-ன் படம்]
கடந்த காலத்திலும் தற்காலத்திலும் மறுரூப தரிசனம், கிறிஸ்தவர்களின் விசுவாசத்தை பலப்படுத்தியிருக்கிறது