விதவையின் விசுவாசத்திற்கு கிடைத்த வெகுமதி
அந்த ஏழை விதவை தன்னுடைய ஒரே மகனை மார்போடு இறுகத் தழுவிக்கொள்கிறாள். அவளால் தன்னுடைய கண்களை நம்பவே முடியவில்லை. சற்று நேரத்திற்கு முன்புதான், இறந்துபோன தன் மகனின் சடலத்தைக் கைகளில் ஏந்தியிருந்தாள். இப்போதோ, அந்த மகன் மலர்ந்த முகத்தோடு தன்னிடம் வருவதைப் பார்த்து அப்படியே சிலிர்த்துப்போகிறாள். “பார் உன் பிள்ளை உயிரோடிருக்கிறான்” என்கிறார் அந்த விருந்தாளி.
சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்தப் பிரமிப்பூட்டும் உயிர்த்தெழுதலைப் பற்றி 1 இராஜாக்கள் 17-ஆம் அதிகாரத்தில் வாசிக்கலாம். சரி, அந்த விதவையின் வீட்டில் தங்கியிருந்த விருந்தாளி யார்? கடவுளுடைய தீர்க்கதரிசியான எலியாதான் அவர். அந்தத் தாய் யார்? சாறிபாத் ஊரில் வாழ்ந்த பெயர் குறிப்பிடப்படாத ஒரு விதவை. அவளுடைய மகன் உயிர்த்தெழுப்பப்பட்டதுதான் அவளது வாழ்வில் நிகழ்ந்த மறக்கமுடியாத சம்பவம். இது அவளுடைய விசுவாசத்தை வெகுவாக பலப்படுத்தியிருக்கும். இந்த விதவையின் பதிவு பல முக்கியமான பாடங்களை நமக்குக் கற்றுத் தருகிறது.
எலியா ஒரு விதவையைக் காண்கிறார்
இஸ்ரவேலின் கெட்ட ராஜாவான ஆகாபின் ஆட்சிக்குட்பட்ட இடங்களிலெல்லாம் நீண்ட கால வறட்சியைக் கொண்டுவர யெகோவா தீர்மானித்திருந்தார். இதைப் பற்றி எலியா அறிவித்த பிறகு, அவரை ஆகாபின் கண்களில் படாதவாறு மறைத்து வைத்தார். அந்தச் சமயத்தில், யெகோவா காகங்களைக்கொண்டு அவருக்கு அப்பமும் இறைச்சியும் கொடுத்து அற்புதமாக உணவளித்தார். அதன் பிறகு, எலியாவிடம் “நீ எழுந்து, சீதோனுக்கடுத்த சாறிபாத் ஊருக்குப் போய், அங்கே தங்கியிரு; உன்னைப் பராமரிக்கும்படி அங்கே இருக்கிற ஒரு விதவைக்குக் கட்டளையிட்டேன் என்றார்.”—1 இரா. 17:1-9.
சாறிபாத் ஊருக்கு எலியா வந்தபோது, ஓர் ஏழை விதவை விறகு பொறுக்கிக்கொண்டிருந்ததைப் பார்த்தார். ‘எனக்கு உணவளிக்கப்போகும் பெண் இவள்தானா? ஏழ்மையில் வாடும் இவளால் எப்படி எனக்கு உணவளிக்க முடியும்?’ என்றெல்லாம் எலியா யோசித்திருக்கலாம். ஆனாலும், அந்தப் பெண்ணிடம் பேச ஆரம்பித்தார். “நான் குடிக்கிறதற்குக் கொஞ்சம் தண்ணீர் ஒரு பாத்திரத்தில் எனக்குக் கொண்டுவா” என்றார். அவள் தண்ணீர் கொண்டுவர போனபோது, “கொஞ்சம் அப்பமும் . . . எனக்குக் கொண்டுவா” என்றார். (1 இரா. 17:10, 11) முன்பின் தெரியாத அந்த நபருக்கு தண்ணீர் கொடுப்பது ஒன்றும் கஷ்டம் அல்ல, ஆனால் அப்பம் கொடுப்பதுதான் பிரச்சினை.
அதற்கு அவள்: “பானையில் ஒரு பிடி மாவும் கலயத்தில் கொஞ்சம் எண்ணெயுமே அல்லாமல், என்னிடத்தில் ஒரு அடையும் இல்லையென்று; உம்முடைய தேவனாகிய கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; இதோ, நானும் என் குமாரனும் சாப்பிட்டுச் செத்துப்போக, அதை எனக்கும் அவனுக்கும் ஆயத்தப்படுத்துகிறதற்கு இரண்டு விறகு பொறுக்குகிறேன் என்றாள்.” (1 இரா. 17:12) இப்போது, இவர்களுடைய உரையாடலைப் பற்றி ஆழ்ந்து சிந்திப்போம்.
எலியா கடவுள் பயமுள்ள ஓர் இஸ்ரவேலர் என்பதை அந்த ஏழை விதவை புரிந்துகொண்டாள். “உம்முடைய தேவனாகிய கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்” என்று அவள் சொன்னதிலிருந்து இது தெளிவாகிறது. இஸ்ரவேலின் கடவுளைப் பற்றி அவளுக்குக் கொஞ்சம் தெரிந்திருந்தாலும், “என்னுடைய கடவுள்” என்று சொல்லுமளவுக்கு யெகோவாவைப் பற்றி முழுமையாகத் தெரிந்திருக்கவில்லை. ஏனென்றால், அவள் “சீதோனுக்கடுத்த” சாறிபாத் ஊரில் வசித்து வந்தாள். அது கானானியருடைய நகரம்; பாகாலை வணங்கியவர்களே அங்கு குடியிருந்தார்கள். இருந்தாலும், அந்த ஏழை விதவையிடம் ஏதோவொரு நல்ல குணத்தை யெகோவா பார்த்திருக்கிறார்.
பாகாலை வணங்கியவர்கள் மத்தியில் வாழ்ந்து வந்திருந்தாலும், அந்த ஏழை விதவைக்கு விசுவாசம் இருந்தது. அந்த விதவையும் எலியாவும் நன்மை அடைவதற்காகவே, யெகோவா எலியாவை அவளிடம் அனுப்பினார். இதிலிருந்து நாம் ஒரு முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொள்கிறோம்.
சாறிபாத் ஊரைச் சேர்ந்த பாகால் வணக்கத்தார் எல்லோருமே உருவ வழிபாட்டில் ஊறிப்போனவர்கள் அல்ல. அதனால்தான், எலியாவை அந்த விதவையிடம் யெகோவா அனுப்பினார். தம்மை அறியாத நல்மனமுள்ள ஆட்கள் ஒவ்வொருவரையும் யெகோவா கவனித்துக்கொண்டிருக்கிறார் என்பது இதிலிருந்து தெரிகிறது. ஆம், “அவருக்குப் பயந்து நீதியின்படி நடக்கிறவன் எவனோ அவன் எந்தத் தேசத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அவனை அவர் ஏற்றுக்கொள்கிறார்.”—அப். 10:35.
அந்த விதவையைப் போன்ற எத்தனையோ பேர் உங்கள் பிராந்தியத்தில் இருக்கலாம். அவர்கள் பொய் மதத்தவர் மத்தியில் வாழ்ந்தாலும் உண்மையைத் தெரிந்துகொள்ள ஏங்கிக்கொண்டிருக்கலாம். அவர்களுக்கு யெகோவாவைப் பற்றி கொஞ்சம் தெரிந்திருக்கலாம் அல்லது ஒன்றுமே தெரியாமலிருக்கலாம். அவர்கள் உண்மை மதத்தின் பாகமாவதற்கு உதவி தேவைப்படலாம். அப்படிப்பட்ட ஆட்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களுக்கு உதவுகிறீர்களா?
‘முதலில் அதிலே எனக்கு ஒரு சிறிய அடையைப் பண்ணு’
எலியா அந்த விதவையிடம் என்ன செய்யும்படிச் சொன்னார் என்பதைக் கவனியுங்கள். தானும் தன்னுடைய மகனும் சாப்பிடுமளவுக்கே மாவு இருப்பதாகவும் அதைச் சாப்பிட்டு இருவரும் சாகப்போவதாகவும் அப்போதுதான் எலியாவிடம் அவள் சொல்லியிருந்தாள். ஆனாலும், எலியா அவளிடம், “பயப்படாதே; நீ போய் உன் வார்த்தையின்படி ஆயத்தப்படுத்து; ஆனாலும் முதல் அதிலே எனக்கு ஒரு சிறிய அடையைப் பண்ணி என்னிடத்தில் கொண்டுவா; பின்பு உனக்கும் உன் குமாரனுக்கும் பண்ணலாம். கர்த்தர் தேசத்தின்மேல் மழையைக் கட்டளையிடும் நாள்மட்டும் பானையின் மா செலவழிந்துபோவதும் இல்லை; கலசத்தின் எண்ணெய் குறைந்துபோவதும் இல்லை என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்” என்றார்.—1 இரா. 17:11-14.
வேறு யாராவதாக இருந்திருந்தால், ‘எங்ககிட்ட இருக்கிற கொஞ்சநஞ்ச சாப்பாட்டையும் கொடுக்கிறதா?’ என சொல்லியிருப்பார். ஆனால், அந்த விதவை அப்படிச் சொல்லவில்லை. அவளுக்கு யெகோவாவைப் பற்றி ஓரளவே தெரிந்திருந்தாலும் எலியாவை நம்பினாள்; அதனால் அவர் சொன்னபடிச் செய்தாள். அது அவளுடைய விசுவாசத்தை உரசிப்பார்த்தபோதிலும், அவள் ஞானமாகத் தீர்மானம் எடுத்தாள்!
அந்த ஏழை விதவையை கடவுள் கைவிட்டுவிடவில்லை. எலியா சொன்னபடியே, அவளிடமிருந்த மாவும், எண்ணெயும் எடுக்க எடுக்க குறையாதபடி யெகோவா பார்த்துக்கொண்டார். இதனால், அந்த மூவராலும் வறட்சியின் பிடியிலிருந்து தப்பித்துக்கொள்ள முடிந்தது. ஆம், “கர்த்தர் எலியாவைக்கொண்டு சொன்ன வார்த்தையின்படியே, பானையிலே மா செலவழிந்துபோகவும் இல்லை; கலசத்தின் எண்ணெய் குறைந்துபோகவும் இல்லை.” (1 இரா. 17:16; 18:1) ஒருவேளை, எலியா சொன்னதை அந்த விதவை கேட்காமல் போயிருந்தால், அதுவே அவளுடைய கடைசி உணவாக இருந்திருக்கும். ஆனால், அவள் யெகோவாமீது நம்பிக்கை வைத்து, எலியா சொன்னபடியே அவருக்கு முதலில் உணவளித்தாள்.
தம்மீது விசுவாசம் வைப்பவர்களை கடவுள் ஆசீர்வதிக்கிறார் என்ற பாடத்தை நாம் இதிலிருந்து கற்றுக்கொள்கிறோம். உங்களுடைய உத்தமத்திற்கு சோதனை வரும்போது, விசுவாசத்தோடு நடந்துகொண்டால் யெகோவா உங்களுக்கு உதவுவார். ஆம், ஒப்பற்ற கொடைவள்ளலாய், பாசமுள்ள பாதுகாவலராய், உற்ற தோழனாய் இருந்து உதவுவார்.—யாத். 3:13-15.
விதவையின் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடத்தைப் பற்றி, 1898-ல் வெளிவந்த சீயோனின் காவற்கோபுரம் இப்படி விவரிக்கிறது: “கீழ்ப்படியுமளவுக்கு அந்த விதவை விசுவாசம் காட்டியதால், தீர்க்கதரிசியைக்கொண்டு கடவுள் அவளுக்கு உதவினார். ஒருவேளை கீழ்ப்படியாமல் போயிருந்தால், கீழ்ப்படிதலுள்ள மற்றொரு விதவையைத் தேர்ந்தெடுத்திருப்பார். நம் வாழ்க்கையிலும் இதுவே உண்மை. நம் வாழ்க்கையில் ஏதாவதொரு கட்டத்தில் கடவுள் நம்முடைய விசுவாசத்தைச் சோதிப்பார். அப்போது நாம் விசுவாசத்தோடு நடந்துகொண்டால், ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வோம், இல்லையென்றால் அதை இழந்துவிடுவோம்.”
நாம் ஏதாவது சோதனையை சந்திக்கையில், பைபிளிலிருந்தும் பைபிள் பிரசுரங்களிலிருந்தும் யெகோவாவின் ஆலோசனையை நாட வேண்டும். அந்த ஆலோசனை ஏற்றுக்கொள்வதற்கு கடினமாக இருந்தாலும், அதற்கிசைய செயல்பட வேண்டும். “உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்” என்ற இந்த பொன்மொழியை ஏற்று நடந்தால் நாம் நிச்சயம் ஆசீர்வதிக்கப்படுவோம்.—நீதி. 3:5, 6.
‘என் குமாரனைச் சாகப்பண்ணவா என்னிடத்தில் வந்தீர்’?
விதவை மற்றொரு விசுவாசப் பரீட்சையை எதிர்ப்படவிருந்தாள். “இவைகள் நடந்த பின்பு, வீட்டுக்காரியாகிய அந்த ஸ்திரீயின் மகன் வியாதியில் விழுந்தான்; அவனுடைய சுவாசம் போகுமட்டும் அவனுடைய வியாதி அதிகரித்துக்கொண்டே இருந்தது” என்று பைபிள் சொல்கிறது. தனக்கு நேர்ந்த துயரத்திற்கான காரணத்தை யோசித்த அந்தத் தாய், எலியாவிடம்: “தேவனுடைய மனுஷனே, எனக்கும் உமக்கும் என்ன? என் அக்கிரமத்தை நினைக்கப்பண்ணவும், என் குமாரனைச் சாகப்பண்ணவுமா? என்னிடத்தில் வந்தீர் என்றாள்.” (1 இரா. 17:17, 18) அவள் மனங்கசந்து ஏன் அப்படிச் சொன்னாள்?
முன்பு செய்த ஏதோவொரு பாவத்தை நினைத்துப் பார்த்ததாலா? தன் மகனின் சாவுக்குத் தெய்வ தண்டனைதான் காரணம் என்றும் அந்தத் தண்டனையைக் கொடுப்பதற்காகவே எலியாவைக் கடவுள் அனுப்பினார் என்றும் நினைத்ததாலா? அதைப் பற்றி பைபிள் எதுவும் சொல்வதில்லை. ஆனால், தனக்கு நேர்ந்த அநியாயத்துக்கு கடவுளை அவள் குற்றப்படுத்தவில்லை என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.
விதவையின் மகன் இறந்து போனதை கேள்விப்பட்ட எலியா அதிர்ந்துபோயிருப்பார். அதோடு, தான் அங்கு வந்ததால்தான் இப்படி நடந்ததாக அந்தப் பெண் சொன்னபோது அவருடைய மனம் சுக்குநூறாகியிருக்கும். அந்தப் பையனின் சடலத்தை தான் தங்கியிருந்த மேல்வீட்டிற்கு எடுத்துக்கொண்டுபோய், யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டு: “என் தேவனாகிய கர்த்தாவே, நான் தங்கியிருக்க இடங்கொடுத்த இந்த விதவையின் மகனைச் சாகப்பண்ணினதினால் அவளுக்குத் துக்கத்தை வருவித்தீரோ” என்றார். தன்னை அன்போடு உபசரித்த அந்த விதவையை இன்னும் தவிக்கவிட்டால், அது கடவுளுடைய பெயருக்கு நிந்தையை ஏற்படுத்திவிடுமே என்று அவர் பயந்தார். அதனால், எலியா: “என் தேவனாகிய கர்த்தாவே, இந்தப் பிள்ளையின் ஆத்துமா [அதாவது, உயிர்] அவனுக்குள் திரும்பிவரப்பண்ணும்” என்று கெஞ்சினார்.—1 இரா. 17:20, 21.
“பார் உன் பிள்ளை உயிரோடிருக்கிறான்”
எலியா செய்த ஜெபத்தை யெகோவா கேட்டார். அந்த விதவை எலியாவுக்கு உணவளித்ததோடு கடவுள்மீது விசுவாசமும் வைத்திருந்தாள். அந்தப் பையன் வியாதிப்பட்டு இறந்துபோக கடவுள்தான் அனுமதித்திருக்கிறார் என்பது தெரிகிறது. ஏனென்றால், அவனை தாம் உயிர்த்தெழுப்பப்போவதை அவர் அறிந்திருந்தார். பைபிளில் பதிவாகியுள்ள இந்த முதல் உயிர்த்தெழுதல் வருங்காலத் தலைமுறைக்கு நம்பிக்கையை அளிக்கும் என்பதையும் அறிந்திருந்தார். எலியா யெகோவாவிடம் மன்றாடியபோது, அந்தப் பையனை அவர் உயிர்த்தெழுப்பினார். “பார் உன் பிள்ளை உயிரோடிருக்கிறான்” என்று எலியா சொன்னபோது, அந்த விதவை சந்தோஷத்தின் எல்லைக்கே சென்றிருப்பாள். அவள் எலியாவிடம்: “நீர் தேவனுடைய மனுஷன் என்றும், உம்முடைய வாயிலிருந்து பிறக்கும் கர்த்தரின் வார்த்தை உண்மை என்றும், இதினால் இப்போது அறிந்திருக்கிறேன்” என்றாள்.—1 இரா. 17:22-24.
ஒன்று இராஜாக்கள் 17-ஆம் அதிகாரம் இந்தப் பெண்ணைக் குறித்து கூடுதலாக எதுவும் சொல்வதில்லை. ஆனாலும், அந்த விதவையைப் பற்றி இயேசு குறிப்பிட்ட விதத்தைப் பார்க்கும்போது, அவள் வாழ்நாள் முழுவதும் யெகோவாவை உண்மையோடு சேவித்திருப்பாள் எனத் தெரிகிறது. (லூக். 4:25, 26) இந்த விதவையைப் பற்றிய பதிவு, தம்முடைய ஊழியர்களுக்கு உதவி செய்கிறவர்களைக் கடவுள் ஆசீர்வதிக்கிறார் என்பதை காட்டுகிறது. (மத். 25:34-40) இக்கட்டான சூழ்நிலையிலும் தமக்கு உண்மையாக இருப்போரின் தேவைகளை யெகோவா நிச்சயம் கவனித்துக்கொள்வார் என்பதை உறுதிப்படுத்துகிறது. (மத். 6:25-34) இறந்துபோன நம் அன்பானவர்களை உயிர்த்தெழுப்ப யெகோவாவுக்கு விருப்பமும் வல்லமையும் இருப்பதை நிரூபிக்கிறது. (அப். 24:15) சாறிபாத் விதவையை நினைத்துப் பார்க்க எத்தனை அருமையான காரணங்கள்!