வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திலிருந்து நடைமுறையான பாடங்கள்
வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தின் பைபிள் பதிவு நிச்சயமாகவே தனிச்சிறப்பு வாய்ந்தது. ஓரளவுக்குச் சிறியதாக இருக்கும் இந்தப் பிரதேசத்தில், பெரும் வித்தியாசமான புவியியல் தனித்தன்மைகளை நாம் காணலாம். வடக்கே பனிமூடிய மலைகளும், தெற்கே வெப்பமான பிரதேசங்களும் உள்ளன. செழுமையான தாழ்நிலங்களும், வெறுமையான பாலைவன பிரதேசங்களும், பழவிளைச்சலுக்கும் கால்நடை மேய்ச்சலுக்கும் ஏற்ற மலைநாடுகளும் இருக்கின்றன.
உயரங்களில், சீதோஷ்ணநிலையில், மண்ணில் இருக்கும் வித்தியாசங்கள், பல்வேறு விதமான மரங்களும், புதர்செடிகளும், மற்ற செடிகளும்—குளிர்ந்த ஆல்ஃபைன் பிரதேசத்தில் செழித்து வளருபவையும், கடும்வெப்பமான பாலைவனத்தில் வளருபவையும், வண்டல் நிலத்தில் அல்லது பாறை மேட்டுநிலங்களில் செழித்து வளரும் மற்ற செடிகளும் உட்பட—வளர உதவுகின்றன. அந்தப் பிரதேசத்தில் சுமார் 2,600 வித்தியாசமான செடிவகைகளைக் காணமுடியும் என்று ஒரு தாவரவியலாளர் கணக்கிடுகிறார்! தேசத்தை ஆய்வுசெய்த அந்த முதல் இஸ்ரவேலர்கள் அதனுடைய வளத்தின் அத்தாட்சியை உடனே காணக்கூடியவர்களாக இருந்தார்கள். அவர்கள் திரும்பி வரும்போது ஓர் ஆற்று பள்ளத்தாக்கிலிருந்து ஒரு திராட்சக் குலையைக் கொண்டுவந்தார்கள்; அது அவ்வளவு பெரியதாக இருந்ததால் அதை ஒரு தடியில் தொங்கவிட்டு ஆண்கள் இருவர் தூக்கிவரவேண்டியதாயிற்று! அந்தப் பள்ளத்தாக்குப் பொருத்தமாகவே எஸ்கோல் என்று பெயரிடப்பட்டது, அதன் அர்த்தமானது “[திராட்சையின்] குலை].”a—எண்ணாகமம் 13:21-24.
ஆனால், நாம் இப்போது நீண்டு குறுகி இருக்கும் இந்தப் பிரத்தியேகமான தேசத்தின், விசேஷமாக தென்பகுதியின் புவியியல் அம்சங்களைச் சற்று உன்னிப்பாகப் பார்ப்போமாக.
சமநிலநாடு
மத்தியத்தரைக்கடலின் கரையே இந்த வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தின் மேற்குக்கரையாக உள்ளது. சுமார் 40 கிலோமீட்டர் நில உட்பகுதியை உடையது சமநிலநாடு. “சமநிலநாடு” (Shephelah) என்ற வார்த்தையின் அர்த்தம் “தாழ்நிலம்,” ஆனால், நிஜத்தில் அது ஒரு மலைப்பிரதேசம், கிழக்கிலுள்ள யூதாவின் மலைகளோடு ஒப்பிடும்போது மாத்திரம் இது தாழ்நிலமாக அழைக்கப்படலாம்.
கூடவே கொடுக்கப்பட்டுள்ள பக்கப்-பார்வை வரைபடத்தைப் பாருங்கள், சமநிலநாட்டிற்கும் அதனைச் சுற்றியிருக்கும் பிராந்தியங்களுக்கும் உள்ள தொடர்பை கவனிக்கவும். கிழக்கே யூதாவின் மலைகளும் மேற்கே கடற்கரை சமவெளி பெலிஸ்தியாவும் உள்ளன. இவ்வாறாக, சமநிலநாடு இடைத்தடுக்கும் ஓர் எல்லையாகவும், பைபிள் காலங்களில் கடவுளுடைய மக்களை அவர்களது பண்டைய எதிரிகளிடமிருந்து தடுக்கும் ஓர் எல்லையாகவும் சேவித்தது. மேற்கிலிருந்து எல்லைமீறி நுழையும் எந்த ஒரு படையும், இஸ்ரேலின் தலைநகராகிய எருசலேமுக்கு எதிராக முன்னேறுவதற்கு முன் அது சமநிலநாட்டின் ஊடே சென்றாகவேண்டும்.
அத்தகைய ஒரு சம்பவம் பொ.ச.மு. ஒன்பதாம் நூற்றாண்டில் நடந்தது. சீரியாவின் ராஜாவாகிய ஆசகேல், “காத்தூரின்மேல் [அநேகமாக சமநிலநாட்டின் எல்லையில்] யுத்தம்பண்ணி அதைப் பிடித்தான்; அதன்பின்பு எருசலேமுக்கு விரோதமாய்ப் போக ஆசகேல் தன் முகத்தைத் திருப்பினான்” என்று பைபிள் அறிவிக்கிறது. ராஜாவாகிய யோவாஸ், ஆலயத்திலும் அரண்மனையிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பொக்கிஷத்தை ஆசகேலுக்கு இலஞ்சமாக கொடுத்து, அவனை ஒருவழியாக தடுத்துவிட்டார். இருந்தபோதிலும், சமநிலநாடு எருசலேமின் பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருந்தது என்பதை இந்த விவரப்பதிவு காட்டுகிறது.—2 இராஜாக்கள் 12:17, 18.
இதிலிருந்து நடைமுறையான ஒரு பாடத்தை நம்மால் கற்க முடியும். ஆசகேல் எருசலேமை கைப்பற்ற விரும்பினான், ஆனால் முதலில் அவன் சமநிலைநாட்டின் ஊடே சென்றாகவேண்டும். அவ்வாறே, பிசாசான சாத்தானும் கடவுளின் ஊழியர்களை ‘விழுங்கலாமோ என்று வகைத்தேடிக்கொண்டிருக்கிறான்,’ ஆனால், முதலில் அவன் உறுதியான இடைத்தடுக்கும் எல்லையில்—கெட்ட சகவாசம், பொருளாசை போன்ற காரியங்களின்பேரில் அவர்கள் பின்பற்றும் பைபிள் நியமங்களில்—ஊடுருவ வேண்டும். (1 பேதுரு 5:8; 1 கொரிந்தியர் 15:33; 1 தீமோத்தேயு 6:10) பைபிள் நியமங்களை விட்டுக்கொடுத்தலே அடிக்கடி வினைமையான பாவங்களைச் செய்வதற்கான முதல் படியாக இருக்கிறது. ஆகவே அந்த இடைத்தடுக்கும் எல்லையைப் பாதுகாப்பாக வைத்திருங்கள். பைபிள் நியமங்களை இன்று பின்பற்றுங்கள், நாளை நீங்கள் கடவுளுடைய சட்டத்தை மீறாதிருப்பீர்கள்.
யூதாவின் மலைநாடு
சமநிலநாட்டிலிருந்து இன்னும் உள்ளே அமைந்துள்ளது யூதாவின் மலைநாடு. நல்ல தானியங்களையும், ஒலிவ எண்ணெய்யையும், திராட்சரசத்தையும் விளைவித்த ஒரு மலைப் பிரதேசம் இது. அதனுடைய உயரத்தின் காரணமாக, யூதா ஒரு சிறந்த புகலிடமாகவும் இருந்தது. இவ்வாறு, ராஜாவாகிய யோதாம் அங்கே “கோட்டைகளையும் கோபுரங்களையும்” கட்டினான். தொந்தரவான காலங்களில், பாதுகாப்பிற்காக மக்கள் அவற்றினிடமாக ஓடமுடியும்.—2 நாளாகமம் 27:4.
சீயோன் என்றும் அழைக்கப்பட்ட எருசலேம், யூதா மலைநாட்டின் ஒரு முக்கிய பகுதியாக இருந்தது. எருசலேமின் மூன்று பக்கங்களும் ஆழமான பள்ளத்தாக்குகளால் சூழப்பட்டிருந்ததாலும், முதல் நூற்றாண்டு வரலாற்று ஆசிரியர் ஜோசிபஸின் கூற்றின்படி அடுத்தடுத்து மூன்று சுவர்களால் வடக்குப் பக்கம் பாதுகாக்கப்பட்டிருந்ததாலும் அது பாதுகாப்பாக இருந்ததென தெரிகிறது. ஆனால் ஒரு புகலிடத்திற்கு அதன் பாதுகாப்பை காத்துக்கொள்வதில் சுவர்களையும் ஆயுதங்களையும் காட்டிலும் அதிகம் தேவை. அது தண்ணீரையும் கொண்டிருக்கவேண்டும். இது முற்றுகையிடப்படுகையில் மிகவும் அவசியம், ஏனென்றால், தண்ணீர் இல்லையென்றால், கோட்டைக்குள் சிக்கிக்கொண்டிருக்கும் பிரஜைகள் சீக்கிரத்தில் சரணடைய வற்புறுத்தப்படுவர்.
சீலோவாம் குளத்திலிருந்து தண்ணீரை எருசலேம் பெற்றது. இருப்பினும், பொ.ச.மு. எட்டாம் நூற்றாண்டில் அசீரியர்களின் முற்றுகையை எதிர்பார்த்து, ராஜாவாகிய எசேக்கியா சீலோவாம் குளத்தை பாதுகாப்பதற்காக, நகரத்திற்குள்ளே அதை வளைத்துபோடும்படி ஒரு வெளிப்புற சுவற்றைக் கட்டினார். முற்றுகையிடும் அசீரியர்கள் தங்களுக்குத் தண்ணீர் கிடைக்காமல் அதிக கஷ்டப்படும்படிக்கு அவர் நகரத்திற்கு வெளியே இருந்த ஊற்றுகளையெல்லாம்கூட தூர்த்துப்போட்டார். (2 நாளாகமம் 32:2-5; ஏசாயா 22:11) அதுமட்டும் அல்ல. நேராக எருசலேமுக்கு உள்ளேயே அதிகப்படியாக தண்ணீர் கிடைக்கும்படி, அதனைத் திருப்பிவிடுவதற்கான ஒரு வழியையும் எசேக்கியா கண்டுபிடித்தார்!
பண்டைய காலத்தின் பெரும் பொறியியல் சாதனைகளில் ஒன்று என அழைக்கப்படும் ஒரு சுரங்கத்தை, கீகோன் ஊற்றிலிருந்து சீலோவாம் குளம் வரையாக வெட்டினார் எசேக்கியா.b இந்தச் சுரங்கம் உயரத்தில் சராசரியாக 1.8 மீட்டரும், நீளத்தில் 533 மீட்டரும் இருந்தது. அதைச் சற்று கற்பனைசெய்துபாருங்கள்—கிட்டத்தட்ட அரைக் கிலோமீட்டர் நீளமுள்ள சுரங்கம், பாறையைத் துளைத்துச் சென்றது! இன்று, சுமார் 2,700 ஆண்டுகளுக்குப்பின், பொறியியலின் மிகச் சிறந்த சாதனையாக இருக்கும் இதன் வழியே எருசலேமுக்கு விஜயம் செய்பவர்கள் செல்ல முடியும், இது பொதுவாகவே எசேக்கியாவின் சுரங்கம் என்று அறியப்படுகிறது.—2 இராஜாக்கள் 20:20; 2 நாளாகமம் 32:30.
எருசலேமின் தண்ணீர் வழங்கீட்டை பாதுகாக்கவும் அதிகரிக்கவும் எசேக்கியா எடுத்த முயற்சிகள் நமக்கு நடைமுறையான ஒரு பாடத்தைக் கற்பிக்கலாம். யெகோவா ‘ஜீவத்தண்ணீர் ஊற்றாக’ இருக்கிறார். (எரேமியா 2:13) பைபிளில் அடங்கியுள்ள அவரது எண்ணங்கள் ஜீவனைக் காப்பவை. அதனால்தான் தனிப்பட்ட பைபிள் படிப்பு மிகவும் அவசியம். ஆனால், படிப்பதற்கான வாய்ப்பும், பிரதிபலனாக கிடைக்கக்கூடிய அறிவும் உங்களிடமாக தானாகவே வந்துவிடாது. நீங்கள் ஒருவேளை ‘சுரங்கம் தோண்ட’ வேண்டியிருக்கலாம், அதாவது ஓய்வொழிச்சல் இன்றி இருக்கும் உங்களது வழக்கமான அன்றாட வேலைகளின் மத்தியிலும் அதற்கென்று வாய்ப்பை அமைத்துக்கொள்ள வேண்டியிருக்கலாம். (நீதிமொழிகள் 2:1-5; எபேசியர் 5:15, 16) ஒருமுறை நீங்கள் துவங்கிவிட்டீர்களென்றால், உங்களது அட்டவணையைப் பின்பற்றுவதில் குறியாக இருங்கள், உங்களது தனிப்பட்ட படிப்பிற்கு முதலிடம் அளித்திடுங்கள். இந்த அருமையான தண்ணீர் கிடைப்பை அபகரிக்க எவரையும் அல்லது எதையும் அனுமதிக்காதபடி கவனமாக இருங்கள்.—பிலிப்பியர் 1:9, 10.
வனாந்தர பிரதேசங்கள்
யூதாவின் மலைகளுக்குக் கிழக்கே, யூதாவின் வனாந்தரம் இருக்கிறது, எஷிமோன் என்றும்கூட அழைக்கப்படும் இதன் அர்த்தம் “பாலைவனம்.” (1 சாமுவேல் 23:19, NW, அடிக்குறிப்பு) உப்புக் கடல் அருகே, இந்த வனாந்தர பிரதேசம் பாறை இடுக்குகளையும் கரடுமுரடான மலை உச்சிகளையும் சிறப்பாக கொண்டுள்ளது. வெறும் 24 கிலோமீட்டரில் சுமார் 1,200 மீட்டர் சரிந்துள்ள யூதாவின் வனாந்தரம், மேற்கு மழைக் காற்றுகளிலிருந்து தடுக்கப்பட்டிருப்பதால், அது குறைந்தளவான மழையை மாத்திரம் பெறுகிறது. வருடாந்தர பாவநிவிர்த்தி செய்யும் நாளில் அசாசேலுக்கான வெள்ளாட்டுக்கடா இந்த வனாந்தரத்திற்குத்தான் அனுப்பப்பட்டது என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. தாவீதும்கூட சவுலிடமிருந்து தப்பியோடி இருந்ததும் இங்குத்தான். இயேசு இவ்விடத்தில் 40 நாட்கள் உபவாசித்தார், அதன்பிறகு பிசாசால் சோதிக்கப்பட்டார்.—லேவியராகமம் 16:21, 22; சங்கீதம் 63, முகப்புரை; மத்தேயு 4:1-11.
யூதாவின் வனாந்தரத்திற்குத் தென்மேற்கே சுமார் 160 கிலோமீட்டர் தூரத்தில் பாரான் வனாந்தரம் அமைந்துள்ளது. எகிப்திலிருந்து வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்கு செல்வதற்கான 40 வருட பிரயாணத்தின்போது இஸ்ரவேலர் பலரது முகாமிட்ட இடங்கள் இங்கே அமைந்திருந்தன. (எண்ணாகமம் 33:1-49) ‘கொள்ளிவாய்ச் சர்ப்பங்களும் தேள்களும், தண்ணீரில்லா வறட்சியுமுள்ள பயங்கரமான பெரிய வனாந்தரம்’ பற்றி மோசே எழுதினார். (உபாகமம் 8:15) லட்சக்கணக்கான இஸ்ரவேலர்கள் பிழைத்திருந்தது ஆச்சரியமே! இருந்தும், அவர்களை யெகோவா காத்து வந்தார்.
ஆவிக்குரிய வனாந்தரத்தை ஒத்த இந்த உலகிலும், யெகோவா நம்மையும்கூட காத்துவர முடியும் என்பதற்கு இது ஒரு நினைப்பூட்டுதலாக சேவிக்கலாம். ஆம், நாமும்கூட நிஜத்தில் இல்லையென்றாலும், சர்ப்பங்களின் மத்தியிலும் தேள்களின் மத்தியிலும் நடக்கிறோம். மனச்சாட்சி இன்றி விஷமென வார்த்தைகளைக் கொட்டித்தீர்க்கும் ஆட்களோடு நாம் ஒருவேளை தினமும் தொடர்புகொள்ளவேண்டியிருக்கலாம், அது நமது சிந்தனையை எளிதில் கெடுத்துவிடலாம். (எபேசியர் 5:3, 4; 1 தீமோத்தேயு 6:20) இத்தகைய இடர்ப்பாடுகளின் மத்தியிலும் கடவுளை சேவிக்க விடாமுயற்சி செய்பவர்கள் போற்றப்பட வேண்டியவர்கள். யெகோவா அவர்களை உண்மையில் காத்து வருகிறார் என்பதற்கு அவர்களது உண்மைத்தன்மை பலமான ஆதாரமாக இருக்கிறது.
கர்மேல் குன்றுகள்
கர்மேல் என்ற பெயரின் அர்த்தம் “பழத்தோட்டம்.” இந்த வளமான பிரதேசம் வடக்கே சுமார் 50 கிலோமீட்டர் நீளமுள்ளது, திராட்சத் தோட்டங்களாலும், ஒலிவ தோப்புகளாலும், பழ மரங்களாலும் அணிசெய்யப்பட்டிருந்தது. கடலில் புகுந்துள்ள இந்த மலைத்தொடர், அதன் கவர்ச்சியூட்டும் பாங்கிலும் அழகிலும் மறக்கமுடியாததாயுள்ளது. ‘கர்மேலின் அலங்காரம் அதற்கு அளிக்கப்படும்’ என்று ஏசாயா 35:2 இதை, இஸ்ரவேலின் திரும்ப நிலைநாட்டப்பட்ட தேசத்தின் பலன்தரும் மகிமையின் ஓர் அடையாளக் குறியாகப் பயன்படுத்துகிறது.
குறிப்பிடத்தக்க பல சம்பவங்கள் கர்மேலில் நடந்தேறின. இங்கேதான் எலியா பாகால் தீர்க்கதரிசிகளை எதிர்த்துச் சவால்விட்டார், யெகோவாவின் ஈடற்ற உன்னதத்துவத்தின் நிரூபணமாக “யெகோவாவினிடமிருந்து அக்கினி இறங்கி”னது. மேலும் கர்மேல் சிகரத்திலிருந்தே, பெரும் மழையாக மாறி இஸ்ரவேலில் உண்டாயிருந்த வறட்சி நிலையை அற்புதமாக முடிவுக்குக் கொண்டுவந்த சிறிய மேகத்தை எலியா கவனிக்கச் செய்தார். (1 இராஜாக்கள் 18:17-46, திருத்திய மொழிபெயர்ப்பு) சூனேமைச் சேர்ந்த பெண் தன்னுடைய இறந்துபோன குழந்தைக்காக உதவிநாடி வருகையில், எலியாவுக்குப் பின் வந்த எலிசா கர்மேல் மலையில்தான் இருந்தார், பிறகு எலிசா அந்தக் குழந்தையை உயிர்த்தெழுப்பினார்.—2 இராஜாக்கள் 4:8, 20, 25-37.
இந்தக் கர்மேல் மலைச்சரிவுகளில் இன்றும் பழத்தோட்டங்களும், ஒலிவ தோப்புகளும், திராட்ச தோட்டங்களும் இருக்கின்றன. வசந்த காலத்தில் மலர்களின் அற்புதக் காட்சி போர்வையாக இந்த மலைச்சரிவுகளெல்லாம் மூடியிருக்கும். “உன் சிரசு கர்மேல் மலையைப்போலிருக்கிறது” என்று சூலமித்திய குமரியிடம் சாலொமோன் கூறியபோது ஒருவேளை அவளது கூந்தலின் செழுமையை அல்லது வடிவான அவளது தலை கழுத்திலிருந்து கம்பீரமாக எழுந்துள்ள விதத்தை குறிப்பிட்டிருக்கலாம்.—உன்னதப்பாட்டு 7:5.
கர்மேல் குன்றுகளின் சிறப்புத்தன்மையாக இருந்த அதன் மேன்மையான தோற்றம், யெகோவா தம்முடைய வணக்கத்தாரின் நவீன நாளைய அமைப்பின்மீது பொழிந்துள்ள ஆவிக்குரிய அழகை நமக்கு நினைவுபடுத்துகிறது. (ஏசாயா 35:1, 2) யெகோவாவின் சாட்சிகள் உண்மையில் ஆவிக்குரிய பரதீஸில் வாழ்கிறார்கள், தாவீது ராஜாவின் கருத்துக்களை அவர்கள் ஒத்துக்கொள்கிறார்கள், அவர் எழுதினார்: “இன்பமானவைகளில் எனக்குப் பாகம் கிடைத்தது; ஆம், மகிமையான சுதந்தரமே எனக்கு உண்டாயிற்று.”—சங்கீதம் 16:6, தி.மொ.
உண்மைதான், கடவுளுடைய எதிரிகளிடமிருந்து பண்டைய இஸ்ரவேலர்கள் தொடர்ந்து எதிர்ப்பை சந்தித்ததைப்போலவே, கடவுளுடைய இன்றைய ஆவிக்குரிய தேசமும் எதிர்ப்படவேண்டிய இக்கட்டான சவால்கள் இருக்கின்றன. இருப்பினும், யெகோவா அளித்திருக்கும் ஆசீர்வாதங்களை—பைபிள் சத்தியத்தின்பேரில் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டிருக்கும் அறிவொளி, உலகளாவிய சகோதரத்துவம், பரதீஸ் பூமியில் நித்திய வாழ்க்கையை அடையக்கூடிய வாய்ப்பு ஆகியவற்றையும்—உண்மை கிறிஸ்தவர்கள் எப்போதும் மறப்பதில்லை.—நீதிமொழிகள் 4:18; யோவான் 3:16; 13:35.
“யெகோவாவின் தோட்டத்தைப் போல”
வாக்குப்பண்ணப்பட்ட அந்தப் பண்டைய தேசம் கண்ணுக்கு விருந்தாக இருந்தது. அது மிகப்பொருத்தமாகவே ‘பாலும் தேனும் ஓடுவதாக’ விவரிக்கப்பட்டிருந்தது. (ஆதியாகமம் 13:10, தி.மொ.; யாத்திராகமம் 3:8) மோசே அதனை ‘நல்ல தேசம்; . . . அது பள்ளதாக்குகளிலும் மலைகளிலும் பிறக்கும் நீரோட்டங்களும் ஊற்றுகளும் மடுக்களும் உள்ள தேசம்; அது கோதுமையும் வாற்கோதுமையும் திராட்சச்செடிகளும் அத்தி மரங்களும் மாதளஞ்செடிகளுமுள்ள தேசம்; அது எண்ணெய் தரும் ஒலிவமரங்களும் தேனுமுள்ள தேசம்; அது குறைவின்றி ஆகாரம் புசிக்கத்தக்கதும் ஒன்றும் உனக்குக் குறைபடாததுமான தேசம்; அதன் கற்கள் இரும்பு, அதன் மலைகளில் செம்பு வெட்டி எடுப்பாய்’ என்று விவரித்தார்.—உபாகமம் 8:7-10, தி.மொ.
யெகோவா தம்முடைய பண்டையகால மக்களுக்காக அத்தகைய நிறைவான, அழகான சொந்த தேசத்தை அளிக்கக்கூடியவராக இருந்தாரெனில், அவர் பூமி முழுவதும்—மலைகளாலும், பள்ளத்தாக்குகளாலும், ஆறுகளாலும், ஏரிகளாலும்—பரந்துவிரிந்திருக்கும் ஒரு மேன்மை பொருந்திய பரதீஸை தம்முடைய நவீன நாளைய உண்மையுள்ள ஊழியர்களுக்கு நிச்சயம் அளிக்க முடியும். ஆம், பல்வேறு வேறுபாடுகளுடன் இருந்த பண்டைய வாக்குப்பண்ணப்பட்ட தேசம், இன்று அவருடைய சாட்சிகள் அனுபவித்து மகிழும் ஆவிக்குரிய பரதீஸையும் எதிர்காலத்தில் வரவிருக்கும் பரதீஸிய புதிய உலகையும் முன் குறித்துக்காட்டும் ஒன்றாக இருந்தது. சங்கீதம் 37:29-ல் பதிவுசெய்யப்பட்ட வாக்குறுதி அங்கே நிறைவேற்றமடையும்: “நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றென்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.” கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கத்திற்கு யெகோவா அந்தப் பரதீஸ் வீட்டை கொடுக்கும்போது, அதன் எல்லா “அறைகளையும்” சோதித்துப் பார்க்கையிலும், அவ்வாறு செய்வதற்காக அதனை என்றென்றைக்கும் கொண்டிருப்பதிலும் அவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியடைவார்கள்!
[அடிக்குறிப்புகள்]
a இந்தப் பிரதேசத்தின் ஒரு திராட்சக் குலை 12 கிலோகிராமும் மற்றொன்று 20 கிலோகிராமுக்கும் அதிக எடை இருந்ததாகவும் பதிவுசெய்யப்பட்டது.
b எருசலேமின் கிழக்கு எல்லைக்குச் சற்றே வெளியே கீகோன் ஊற்று அமைந்திருந்தது. அது ஒரு குகையால் மறைக்கப்பட்டிருந்தது; எனவே, அது இருந்ததை ஒருவேளை அசீரியர்கள் அறிந்திருக்கமாட்டார்கள்.
[பக்கம் 4-ன் வரைப்படம்]
கலிலேயா
கலிலேயாக் கடல்
கர்மேல் மலை
சமநிலநாடு
சமாரியா
யூதாவின் மலைகள்
உப்புக் கடல்
[படத்திற்கான நன்றி]
NASA photo
[பக்கம் 4-ன் வரைப்படம்]
சமநிலநாடு கடவுளுடைய மக்களுக்கும் கடவுளுடைய எதிரிகளுக்கும் இடைத்தடுக்கும் எல்லையாக சேவித்தது
ML 0 5 10
KM 0 8 16
பெலிஸ்திய சமவெளி
சமநிலநாடு
யூதாவின் மலைநாடு
யூதாவின் வனாந்தரம்
உப்புக் கடல்
இடுக்குப் பள்ளத்தாக்கு
அம்மோனின் மற்றும் மோவாபின் தேசம்
[பக்கம் 5-ன் வரைப்படம்/படம்]
எசேக்கியாவின் சுரங்கம்: 533 மீட்டர் நீளம், பாறையைத் துளைத்துச் சென்றது
சீலோவாம்
தாவீதின் நகரம்
டைரோபோயன் பள்ளத்தாக்கு
கீதரோன் பள்ளத்தாக்கு
கீகோன்
[பக்கம் 6-ன் படங்கள்]
சவுலிடத்திலிருந்து புகலிடத்தை தாவீது நாடிய யூதாவின் வனாந்தரம். பின்னர், இங்கே இயேசு பிசாசால் சோதிக்கப்பட்டார்
[படத்திற்கான நன்றி]
Pictorial Archive (Near EasternHistory) Est.
[பக்கம் 7-ன் படங்கள்]
எலியா பாகால் தீர்க்கதரிசிகளை அவமானமடையச் செய்த கர்மேல் மலை
[படத்திற்கான நன்றி]
Pictorial Archive (Near Eastern History) Est.
[பக்கம் 8-ன் படங்கள்]
“உன் கடவுளாகிய யெகோவா உன்னை நல்ல தேசத்திலே கொண்டுவந்து சேர்க்கிறார்; அது பள்ளத்தாக்குகளிலும் மலைகளிலும் பிறக்கும் நீரோட்டங்களும் ஊற்றுகளும் மடுக்களும் உள்ள தேசம்.”—உபாகமம் 8:7, தி.மொ.