வலிமை மிகுந்த பாபிலோன்—மூன்றாவது மகா உலக வல்லரசு
பூர்வ பாபிலோன் நேபுகாத்நேச்சாரின் கீழ் அதன் புகழ் உச்சியை எட்டி, உலகத்துக்கு தன்னுடைய மதத்தைக் கடத்தி ஒரே இரவில் கைப்பற்றப்பட்டது. இந்த நகரத்தைப் பற்றி அதிகத்தைத் தெரிந்துகொள்வது, பைபிளின் திருத்தமான தன்மையிலும் அதன் வியப்பூட்டும் தீர்க்கதரிசனங்களின் தவறாத நிறைவேற்றத்திலும் உங்கள் நம்பிக்கையைப் பலப்படுத்தும்.
வலிமை மிகுந்த பாபிலோன் தென் மெசபொத்தோமியாவிலுள்ள ஐபிராத்து நதியின் இருபக்கங்களிலும் கம்பீரமாக இருந்து ஆட்சி செலுத்திக் கொண்டிருந்தது. அவள் மதசம்பந்தமான, வர்த்தக, மற்றும் இராணுவ மையமாக, “ராஜ்யங்களுக்குள் அலங்கார”மாயிருந்தாள். (ஏசாயா 13:19) அவளிடம் மகா செல்வமும், உயரமான கட்டிடங்களும், உலகப் புகழ் தோட்டங்களும் இருந்தன. அவளுடைய நாளின் உலக வல்லரசாக அவள் இருந்தாள்!
என்றபோதிலும் யெகோவாவின் தீர்க்கதரிசியான எரேமியா இவ்விதமாக எழுதும்படி ஆவியால் ஏவப்பட்டான்: “பாபிலோன் குடியில்லாத மண்மேடுகளும், வலுசர்ப்பங்களின் தாபரமும், பாழும் ஈசல் போடப்படுதலுக்கு இடமுமாய்ப்போகும்.”—எரேமியா 51:37.
இந்த மகா நகரம் முற்றிலும் பாழ்க்கடிக்கப்படுவதா? இப்படிப்பட்ட ஒரு காரியத்தை யாரால் கற்பனை செய்து பார்க்க முடியும்? என்றபோதிலும், ஒரு காலத்தில் மேட்டிமையாக இருந்த பாபிலோன் இப்பொழுது, தென்கிழக்கு ஈராக்கில் பாக்தாத்துக்குத் தெற்கே சுமார் 50 மைல்கள் தொலைவில் பாழான இடிபாடுகளின் மண்மேடாக இருக்கிறது. அவளுடைய வீழ்ச்சிக்கு வழிநடத்தியது என்ன?
உலகின் மிகப் பழமையான நகரங்களில் ஒன்றாகிய பாபிலோன், நோவாவின் கொள்ளுப் பேரனாகவும், யெகோவாவுக்கு முன்பாக பலத்த வேட்டைக்காரனாகவுமிருந்த நிம்ரோதுவினால் ஸ்தாபிக்கப்பட்டது. (ஆதியாகமம் 10:8–10) என்றபோதிலும் நாம் அக்கறையுள்ளவர்களாயிருக்கும் காலப் பகுதி நிம்ரோதுவின் நாட்களுக்கு வெகு காலத்துக்குப் பின்பு வந்தது. எகிப்தும் அசீரியாவும் ஆதிக்கம் செலுத்திய வல்லரசுகளாக இருந்த காலத்துக்குப் பின்பு வந்தது.
நேபுகாத்நேச்சாரின் நாளில் பாபிலோன்
சுமார் 2,600 ஆண்டுகளுக்கு முன்பு பொ.ச.மு. 632-ல் பாபிலோனியர்களும் அவர்களுடைய நேசநாடுகளும் சேர்ந்து அசீரியாவைக் கவிழ்த்தனர்.a அசீரியாவுக்குப் பதிலாக பாபிலோன், பைபிள் சரித்திரத்தின் மூன்றாவது மகா உலக வல்லரசாக ஆனது.
இந்த புதிய பாபிலோனிய சாம்ராஜ்யத்தின் அரியணையைக் கைப்பற்றிய நேபுகாத்நேச்சார் ஒரு வெற்றி வீரன் மட்டுமன்றி ஒரு பட்டணத்தைக் கட்டுபவனாகவும் இருந்தான். பாபிலோனின் பலமான மதில்களுக்கும் கண்கவர் கட்டிடங்களுக்குமான புகழ் பெரும்பாலும் அவனையேச் சேரும். நேபுகாத்நேச்சார் என்று பெயர் தாங்கிய செங்கற்கள் பெரும் எண்ணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. இவன் பைபிள் புத்தகங்களாகிய எரேமியாவிலும் தானியேலிலும் அடிக்கடி குறிப்பிடப்பட்டிருக்கும் அதே நேபுகாத்நேச்சார். இந்த நேபுகாத்நேச்சார்தானே “நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா?” என்பதாக பெருமையடித்துக் கொண்டதாக பைபிள் மேற்கோள் காண்பிக்கிறது.—தானியேல் 4:30.
பாபிலோனைச் சுற்றி இரண்டு பெரிய மதில்கள் அமைந்திருந்தன. அவை இரண்டிற்கும் இடையே இருந்த இடைவெளி இடிந்த கட்டிடக் கற்கூளங்களால் நிரப்பப்பட்டிருந்தது. இவை சேர்ந்து 80 அடிக்கும் மேல் கனமான ஒரு தடைஅரணை உண்டுபண்ணியது. மதில்களுக்கு வெளியே 65-லிருந்து 260 அடி அகலமானதும் உட்புறத்தில் செங்கல் வரியிட்டு நிரப்பப்பட்டதுமான ஓர் அகழி எல்லாவிதமான படகுகளாலும் பயன்படுத்தப்பட்டது.
வடக்கேயிருந்து வரும் நெடுஞ்சாலை 40 அடி உயரமுள்ள இஷ்டார் வாயில் வழியாக பட்டணத்தின் உயிர்நாடிபோன்ற பெருவழியான அகலமான நகர்வலம் வழியைக் கடந்து வந்தது. நேபுகாத்நேச்சாரின் அரண்மனை இஷ்டார் வாயிலுக்கு உட்புறத்தில் வலது பக்கத்தில் அமைந்திருந்தது. அதன் மாபெரும் சிங்காசன அறையின் அளவு 55-ன் கீழ் 170 அடியாக இருந்தது. அதற்கு போகும் வழியிலுள்ள வாயிலும் மதில்களும் சிங்கங்களையும் காளைகளையும் பறக்கும் நாகங்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் பிரகாசிக்கும் வர்ண கண்ணாடி பதிக்கப்பட்ட செங்கல் பொட்டிப்புகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. பாரிஸிலுள்ள லூவ்ர் அருங்காட்சியகத்தில், காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள சிங்கங்களில் ஒன்றைக் காணலாம்.
பாபிலோனிய மதம்
பாபேல் நகரத்துக்குரிய எபிரெய பெயரின் அர்த்தம் “குழப்பம்” என்றிருக்க, அதற்குரிய சுமேரிய மற்றும் அக்கடியப் பெயர்கள் “கடவுளின் வாயில்” என்பதாகும். இரண்டு அர்த்தங்களுமே பாபிலோனை மதத்தோடு சம்பந்தப்படுத்துகிறது. தெய்வமாக்கப்பட்ட நிம்ரோதே பாபிலோனிய கடவுளாகிய மார்துக் (பைபிளில் மெரோதாக்) என்பதாக சில வல்லுநர்கள் நம்புகிறார்கள். பாபிலோனிய மதத்தில் திருத்துவ கடவுட்கள் பலவும்கூட இருந்தன. இவைகளில் ஒரு தொகுதியில் சின் (சந்திரக் கடவுள்) ஷமாஷ் (சூரிய கடவுள்) மற்றும் இஷ்டார் (அன்பு மற்றும் செழுமையின் பெண் தெய்வம்) இடம் பெற்றிருந்தனர்.
வான சாஸ்திரம் செழித்தோங்கியிருந்தது. பாபிலோனியர்கள் அப்போது அறியப்பட்டிருந்த கிரகங்களுக்குத் தங்களுடைய ஐந்து முக்கிய தெய்வங்கள் மற்றும் பெண் தெய்வங்களின் பெயர்களைச் சூட்டினர். நவீன சரித்திர ஏடு ஒன்று விளக்குகிறது: “இந்தக் கிரகங்களை அவற்றின் ரோம பெயர்களால் நாம் குறிப்பிடுகிறோம். ஆனால் ரோமர்கள் பாபிலோனிய பதங்களை ஏற்றுக்கொண்டு அவைகளை அதற்கு சமமான ரோமில் வெறுமென மொழிபெயர்த்திருக்கிறார்கள். இவ்விதமாக, இஷ்டார் கிரகம், அன்பின் தெய்வம் வீனஸாகவும் மார்துக் கடவுள் ஜுப்பித்தராகவும் மாற்றப்பட்டது.b பாபிலோனியர்கள் பயன்படுத்திய “கல்தேயன்” என்ற பெயரும் “சோதிடர்” என்பதும் ஒரே பொருளுடையவையாயின.
பாபிலோன் “விக்கிரக தேசம்” என்றும் “அருக்களிப்பான சிலைகளின்” தேசம் என்றும் பைபிள் சொல்கிறது. (எரேமியா 50:2, 38) என்றபோதிலும் அதனுடைய மதசம்பந்தமான கருத்துக்கள் உலகம் முழுவதிலும் மற்ற மதங்களுக்கு முக்கிய ஊற்றுமூலமாயின. பாபிலோனிய மற்றும் அசீரியாவின் மதம் (The Religion of Babylonia and Assyria) என்ற புத்தகத்தில் பேராசிரியர் மாரீஸ் ஜாஸ்ட்ரோ சொல்வதாவது: “பூர்வீக உலகில், கிறிஸ்தவத்தின் எழுச்சிக்கு முன்னதாக எகிப்து, பெர்சியா மற்றும் கிரீஸ் பாபிலோனிய மதத்தின் செல்வாக்கை உணர்ந்தன.” பின்னால், அதனுடைய அநேக பொய் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு கிறிஸ்தவமண்டல சர்ச்சுகளிலும்கூட கற்பிக்கப்பட்டன. இதன் காரணமாகவே பைபிள் பொய் மத உலக பேரரசை “மகா பாபிலோன்” என்றழைக்கிறது.—வெளிப்படுத்துதல் 17:3–5.
எருசலேம் பாபிலோனால் கைப்பற்றப்பட்டது
ஏசாயா தீர்க்கதரிசி, இரண்டாவது உலக வல்லரசாகிய அசீரியா பூர்வ உலகில் ஆதிக்கம் செலுத்தி வந்த சமயத்தில் வாழ்ந்து வந்தான். எருசலேமானது அப்போது பலமுள்ளவர்களாயிருந்த அசீரியர்களால் அல்ல, ஆனால் பாபிலோனியரால் அழிக்கப்படும் என்பதாக தீர்க்கதரிசனம் உரைக்கும்படியாக கடவுளுடைய ஆவியால் ஏவப்பட்டான். (ஏசாயா 39:6, 7) இந்தத் தீர்க்கதரிசனம் உண்மையாக நிரூபித்ததா? நாம் பார்க்கலாம்.
ஏசாயாவின் காலத்துக்கு ஒரு நூற்றாண்டுக்குப்பின்பு, பாபிலோனும் அவளுடைய நேசநாடுகளும் அசீரியாவைக் கைப்பற்ற, பாபிலோன் புதிய உலக வல்லரசானது. பின்னர், பொ.ச.மு. 617-ல் பாபிலோனிய ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் எருசலேமின் ராஜாவாகிய யோயாக்கீனை பிடித்து அவனையும் “தேசத்தின் பராக்கிரமசாலிகளையும்” பாபிலோனுக்குச் சிறைபிடித்துக் கொண்டுபோனான். நேபுகாத்நேச்சார், எருசலேமின் மீது மத்தனியாவை ராஜாவாக வைத்து “அவனுக்குச் சிதேக்கியா என்று மறுபேரிட்டான்.”—2 இராஜாக்கள் 24:11–17.
புதைப்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் பாபிலோனியரின் சொந்த பதிவும்கூட இந்தச் சம்பவத்தை உறுதி செய்கிறது. முக்கிய சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருந்த பூர்வ களிமண் பலகைகளாகிய பாபிலோனிய தொடர் வரலாறு பாபிலோனிய ராஜா “யூதா [எருசலேம்] நகரத்தை முற்றுகையிட்டு, . . . நகரத்தை பிடித்துக் கொண்டு ராஜாவை சிறைப்படுத்தினான். பின்னர் தன்னுடைய சொந்த விருப்பப்படி ஒரு ராஜாவை அதற்கு நியமித்து கணிசமான கப்பம் பெற்றுக் கொண்டு [அவைகளை] பாபிலோனுக்கு அனுப்பி வைத்தான்” என்பதாகச் சொல்லுகிறது.
மேலுமாக பைபிள், யோயாக்கீன் பாபிலோனில் சிறையிருப்பிலிருந்த சமயத்தில் அவனுக்குக் கொடுக்கப்பட்ட உணவுப்படியைப் பற்றிக் குறிப்பிடுகிறது. (2 இராஜாக்கள் 25:27–30) புதைப் பொருள் ஆராய்ச்சியாளர்கள் “யோயாக்கீன் ராஜா”வுக்கும் “யூதா ராஜாவின் குமாரர்களுக்கும்” கொடுக்கப்பட்ட உணவுப்படியைப் பற்றி குறிப்பிடும் நிர்வாகப் பத்திரங்களை பாபிலோனில் கண்டெடுத்திருக்கின்றனர்.
எருசலேமின் மக்கள் யெகோவா தேவனோடு ஓர் உடன்படிக்கை உறவில் இருந்த போதிலும் அவர்கள் இன்னும் கடவுளுடைய வழிகளை பின்பற்ற அல்லது அவருடைய தீர்க்கதரிசிகளுக்குச் செவி கொடுக்க பிடிவாதமாக மறுத்தனர். அவர்களிடம் “என் வார்த்தைகளைக் கேளாதபடிக்கு உங்கள் கழுத்தைக் கடினப்படுத்தினீர்கள்” என்பதாக யெகோவா சொன்னார். எரேமியாவின் மூலமாக “யூதா அனைத்தையும் நான் பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக் கொடுப்பேன்; அவன் அவர்களைச் சிறைபிடித்துச் சிலரைப் பாபிலோனுக்குக் கொண்டுப்போய்ச் சிலரைப் பட்டயத்தால் வெட்டிப் போடுவான்” என்பதாக எச்சரித்தார்.—எரேமியா 19:15; 20:4.
ஆகவே சிதேக்கியா நேபுகாத்நேச்சாருக்கு எதிராக கலகம் செய்த போது, பாபிலோனியர்கள் திரும்பி வந்து எருசலேமை முற்றுகையிட்டார்கள். அவர்கள் அதன் மதில்களை பொ.ச.மு. 607-ல் தமுஸ் 9-ல் தகர்த்தார்கள். அவர்கள் ஆலயத்தை எரித்து, பட்டணத்தின் மதில்களை இடித்து தள்ளி சிதேக்கியாவையும் பெரும்பாலான மக்களையும் பாபிலோனுக்குச் சிறைபிடித்துக் கொண்டு சென்றார்கள். யெகோவாவின் வார்த்தைகள் நிச்சயமாகவே மெய்யாக நிரூபித்தது: “இந்தத் தேசமெல்லாம் வனாந்தரமும் பாழுமாகும்; இந்த ஜாதிகளோ எழுபது வருஷமாகப் பாபிலோன் ராஜாவைச் சேவிப்பார்கள்.”—எரேமியா 25:11.
நேபுகாத்நேச்சாரின் சொப்பன சிலை
பின்னால், பாபிலோனிய ராஜாவாகிய நேபுகாத்நேச்சார், அவனுடைய நாளிலிருந்த உலக வல்லரசின் தலைவன், அசாதாரணமாக சில தகவல்களைப் பெற்றுக் கொண்டான். கடவுள், அவனுக்கு ஒரு பெரிய சிலையின் சொப்பனத்தைக் கொடுத்தார். சொப்பனம், நேபுகாத்நேச்சாரின் காலம் முதல் அவனுக்குப் பின்வரும் உலக வல்லரசுகளாகிய மேதிய பெர்சியா, கிரீஸ், ரோம் மற்றும் நம்முடைய தற்காலத்துக்கு அப்பாலும் கடவுளுடைய ராஜ்யம் எல்லா மனித அரசாங்கங்களையும் அழிக்கப் போவது பற்றியும் உலக சரித்திரத்தை சுருக்கமாக வெளிப்படுத்தியது. கடவுளுடைய தீர்க்கதரிசியாகிய தானியேல் நேபுகாத்நேச்சாரிடம் சொன்னான்: “இனிமேல் சம்பவிக்கப் போகிறதை மகா தேவன் ராஜாவுக்குத் தெரிவித்திருக்கிறார்; சொப்பனமானது நிச்சயம், அதின் அர்த்தம் சத்தியம்.”—தானியேல் 2:28–45.
இப்படிப்பட்ட உலக விவகாரங்களை கடவுள் கட்டுப்படுத்தமுடியும்—“உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகை செய்து, தமக்குச் சித்தமாயிருக்கிறவனுக்கு அதைக் கொடுக்கிறார்” என்பதையும் நேபுகாத்நேச்சாரும்கூட தனிப்பட்டவனாக, மிகவும் கடினமான ஒரு வழியில் கற்றுக் கொள்ள வேண்டியவனாக இருந்தான்.—தானியேல் 4:25.
பாபிலோன் பாழ்க்கடிப்பு முன்னறிவிக்கப்பட்டது
என்றபோதிலும் பாபிலோன் யெகோவாவின் மக்களை அளவுக்கு மீறி அதிக கொடுமையாக நடத்தியதற்காக தண்டிக்கப்படாமல் விடப்படமாட்டாது. எரேமியாவின் மூலமாக கடவுள் சொன்னதாவது: “பாபிலோனுக்கும் கல்தேயர் தேசத்தின் சகல குடிகளுக்கும் அவர்கள் உங்கள் கண்களுக்கு முன்பாகச் சீயோனில் செய்த அவர்களுடைய எல்லாப் பொல்லாப்புக்காகவும் பழிவாங்குவேன்.” ஏசாயாவின் மூலம் அவர் முன்னறிவித்ததாவது: “நான் அவர்களுக்கு விரோதமாய் மேதியரை எழுப்புவேன்.”—எரேமியா 51:24; ஏசாயா 13:17.
சுமார் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே, பாபிலோனை வீழ்ச்சியடையச் செய்து தம்முடைய ஜனங்களை விடுவிக்கப் போகிற தலைவனின் பெயரை யெகோவா கொடுத்தார்—கோரேசு, இவன் மகா கோரேசு என்றும் அழைக்கப்படுகிறான். கோரேசுவைப் பற்றி தீர்க்கதரிசனம் “அவனுக்கு முன்பாக வாசல்கள் பூட்டப்படாதிருக்க, கதவுகள் திறந்து வைக்கப்”படும் என்பதாகச் சொல்லப்பட்டது. (ஏசாயா 44:26–45:1) இப்படிப்பட்ட காரியம் உண்மையில் சம்பவித்ததா? வரலாறு பதிலளிக்கிறது.
பாபிலோன் வீழ்ச்சியடைகிறது!
யூதர்களின் முன்னறிவிக்கப்பட்ட 70 ஆண்டு கால சிறையிருப்பு முடிவடைய இருந்த தருவாயில், மேதியர்களும் பெர்சியர்களும் அணிவகுத்துச் சென்றனர். பாபிலோனிய ராஜாவாகிய நபோனிடஸ் ஏற்கெனவே கோரேசுவிடமிருந்து போர்களத்திலிருந்து ஓடிவிட்டிருந்தான். பாபிலோனியர்கள் நீண்டகால முற்றுகையை ஈடுகொடுக்கும் அளவுக்குத் தயார் நிலையில் இருந்தனர் என்பதாக கிரேக்க சரித்திராசிரியர் ஹெரோடோட்டஸ் சொல்கிறார். வலிமை மிகுந்த பாபிலோனிய மதில்களில் அவர்களுக்கு அதிகமான நம்பிக்கை இருந்திருக்க வேண்டும்.
பைபிள் பதிவு குறிப்பிடுகிறபடி, பொ.ச.மு. 539 ஆண்டில் அக்டோபர் 5⁄6 இரவின் போது, பெல்ஷாத்சார் பாபிலோனுக்கு உள்ளே பெரிய ஒரு விருந்தை செய்து உயர்பதவியிலுள்ள ஆயிரம் விருந்தினரோடு குடித்தும் புசித்தும் கொண்டிருந்தான். (தானியேல் 5:1–4) பாபிலோனில் அந்த இரவில் ஒரு கொண்டாட்டம் இருந்தது என்பதாக ஹெரோடோட்டஸ் உறுதி செய்கிறார். நகரவாசிகள் “அந்தச் சமயத்தில் நடனமாடிக் கொண்டிருந்தார்கள்” என்பதாக அவர் சொல்கிறார். ஆனால் வெளியே கோரேசு நகரத்தின் நடுப்பகுதி முழுவதிலுமாக பாய்ந்தோடிய ஐபிராத்து நதியின் தண்ணீர்களை வேறு திசையில் திருப்பிவிட்டான். தண்ணீர் மட்டம் குறைந்த போது அவனுடைய சேனை ஆற்றுப்படுகையினூடே கடந்து வந்து உயரமான மதில்களைக் கடந்து, பாபிலோனியர்கள் திறந்து வைத்திருந்த வாசல்கள் வழியாக உள்ளே நுழைந்தார்கள். இதை ஹெரோடோட்டஸ் “ஆற்றுக்கு வழிநடத்திய சிறிய வாசல்கள்” என்று அழைக்கிறார்.
அநேக ஆண்டுகளுக்கு முன்பாக, எரேமியா தீர்க்கதரிசி, பாபிலோனின் வீழ்ச்சியைப் பற்றிய ஒரு விளக்கமான வருணனையை எழுதி வைத்திருந்தான்: “பாபிலோனின் பராக்கிரமசாலிகள் யுத்தம் பண்ணாமல் . . . கடையாந்தர முனை துவக்கி அவனுடைய பட்டணம் பிடிபட்டது என்றும் துறைவழிகள் அகப்பட்டுப் போய், நாணல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டது என்றும் யுத்த மனுஷர் கலங்கியிருக்கிறார்கள் என்றும் பாபிலோன் ராஜாவுக்கு அறிவிக்க, அஞ்சற்காரன் மேல் அஞ்சற்காரனும் தூதன் மேல் தூதனும் ஓடுகிறான்.”—எரேமியா 51:30–32.
இப்பொழுது பிரிட்டிஷ் அருங்காட்சியகத்திலுள்ள நபோனிடஸ் செய்திப்பட்டியல் இந்த வருணனையை உறுதி செய்கிறது. “கோரேசுவின் சேனை யுத்தம் பண்ணாமலே பாபிலோனுக்குள் நுழைந்தது” என்பதாக அது சொல்லுகிறது.
யெகோவாவின் தீர்க்கதரிசனம் நிறைவேற்றமடைகிறது
ஒரே இரவில் பாபிலோன் வீழ்ந்துவிட்டது. பைபிள் சரித்திரத்தின் மூன்றாவது உலக வல்லரசு திடீரென்று முடமானது. கோரேசு, கோரேசு உருளை என்றழைக்கப்பட்ட ஆப்பு வடிவ எழுத்து முறை பத்திரத்தில் பின்வருமாறு பெருமையடித்துக் கொள்ளக்கூடியவனாக இருந்தான்: “நானே கோரேசு, உலகத்துக்கு ராஜா, பெரிய ராஜா, சட்டப்பூர்வமான ராஜா, பாபிலோனின் ராஜா, சுமேரியரின் ராஜா.” அதற்குப் பின் விரைவில் கோரேசு தன்னுடைய பிரபலமான ஆணையைப் பிறப்பித்தான். 50,000 யூத கைதிகள் எருசலேமையும் யெகோவாவின் ஆலயத்தையும் மீண்டும் கட்டுவதற்காக திரும்பி வந்தார்கள். அவர்கள் வந்தது சரியாக முன்னறிவிக்கப்பட்டபடியே 70 ஆண்டு கால சிறையிருப்பின் முடிவில் இருந்தது.—எஸ்றா 1:1–11.
பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர், இயேசுவின் அப்போஸ்தலனாகிய பேதுரு இங்கே செழித்தோங்கியிருந்த யூத சமுதாயத்துக்குக் கற்பிக்க வந்தான். ஆவியால் ஏவப்பட்ட பைபிள் நிருபங்கள் ஒன்றை பாபிலோனிலிருந்து தானே எழுதினான். (1 பேதுரு 5:13) ஆனால் காலப்போக்கில், பின்வரும் இந்த தீர்க்கதரிசனம் நிறைவேறியது: “ராஜ்யங்களுக்குள் அலங்காரமும் கல்தேயருடைய பிரதான மகிமையுமாகிய பாபிலோனானது தேவனால் சோதோமும் கொமோராவும் கவிழ்க்கப்பட்டது போல கவிழ்க்கப்படும். இனி ஒருபோதும் அதில் ஒருவரும் குடியேறுவதுமில்லை, தலைமுறைதோறும் அதில் ஒருவரும் தங்கித் தரிப்பதுமில்லை.”—ஏசாயா 13:19, 20.
இன்று வலிமை மிகுந்த பாபிலோன், தூசியால் மூடப்பட்ட கற்களின் குவியலாக, பாழான இடத்தின் இடிபாடுகளாக—யெகோவாவின் தீர்க்கதரிசன வார்த்தையின் தவறாத திருத்தமான தன்மைக்கு மெளனமான தெளிவான அத்தாட்சியாக இருக்கிறது.—எரேமியா 51:36, 37. (w88 3⁄1)
[அடிக்குறிப்புகள்]
a காலக்குறிப்புகளை பொறுத்தவரையில், பைபிளில் காணப்படும் கால கணக்குகளை நாம் ஏற்றுக் கொள்கிறோம். இது குறைந்த அளவு நம்பத்தக்க உலகப்பிரகாரமான ஆதார ஏடுகளை அடிப்படையாக கொண்ட பூர்வ தேதிகளிலிருந்து சில சமயங்களில் வித்தியாசப்படுகிறது. பைபிள் கால கணக்குகளைப் பற்றிய விவரமான ஆய்வுரைக்கு பைபிளைப் புரிந்துகொள்ள உதவி (Aid to Bible Understanding) பக்கங்கள் 322–48 பார்க்கவும்.
b நாகரீகத்தின் தோற்றமும் பூர்வ கிழக்கில் வாழ்க்கையும் (The Dawn of Civilization and Life in the Ancient East) (1940 பதிப்பு) R. M. எங்பர்க் மற்றும் F. C. கோல் எழுதியது, பக்கங்கள் 230–2.
[பக்கம் 14-ன் வரைப்படம்]
முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
பாபிலோனிய பேரரசின் பரப்பு
மகா சமுத்திரம்
ஐபிராத்து நதி
மேதியா
எருசலேம்
பாபிலோன்
[படத்திற்கான நன்றி]
Based on a map copyrighted by Pictorial Archive (Near Eastern History) Est. and Survey of Israel
[பக்கம் 30-ன் படம்]
பாபிலோனின் இஷ்டார் வாயில் மீண்டும் கட்டப்பட்டது (வலது) இன்று பாபிலோனின் இடிபாடுகள் (கீழே)
[படத்திற்கான நன்றி]
Museum of Western Asiatic Antiquity, East Berlin, GDR
The ruins of Babylon today (below)