‘உம் சித்தத்தைச் செய்ய எனக்குப் போதித்தருளும்’
“உமக்குப் பிரியமானதை [அதாவது, உம் சித்தத்தை] செய்ய எனக்குப் போதித்தருளும், நீரே என் தேவன்.” —சங். 143:10.
1, 2. கடவுளுடைய சித்தத்தைத் தெரிந்துகொள்வது நமக்கு எப்படி உதவும், இந்தக் கட்டுரையில் தாவீது ராஜாவைப் பற்றி என்ன தெரிந்துகொள்ளப்போகிறோம்?
நீங்கள் போக வேண்டிய இடத்திற்கான வழியைக் கண்டுபிடிக்க கம்ப்யூட்டர் வரைபடத்தைப் பயன்படுத்தியிருக்கிறீர்களா? அது உயரத்திலிருந்து எடுக்கப்பட்ட படமாக இருப்பதால் நீங்கள் போக வேண்டிய இடத்திற்கான மிகச் சிறந்த வழியைத் தேர்ந்தெடுக்க உங்களுக்கு உதவும். அதுபோலவே, யெகோவாவின் உயர்ந்த கண்ணோட்டத்திலிருந்து விஷயங்களைப் பார்ப்பது, அதாவது அவருடைய சித்தத்தைத் தெரிந்துகொள்வது, முக்கியத் தீர்மானங்களை எடுக்க நமக்கு உதவும்; அவருக்குப் பிரியமான ‘வழியில்’ நடக்கவும் உதவும்.—ஏசா. 30:21.
2 பூர்வ இஸ்ரவேலை ஆண்ட தாவீது ராஜா பெரும்பாலும் கடவுளுடைய கண்ணோட்டத்திலிருந்தே காரியங்களைப் பார்த்தார்; இப்படிச் செய்ததன் மூலம் கடவுளுடைய சித்தத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார்; இந்த விஷயத்தில் அவர் நமக்குத் தலைசிறந்த முன்மாதிரி. யெகோவாவை உத்தம இருதயத்தோடு சேவித்த அவர் கடினமான சூழ்நிலைகளில் எப்படி நடந்துகொண்டார் என்பதை இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்ளப்போகிறோம்.—1 இரா. 11:4.
யெகோவாவின் பெயரை தாவீது மிக உயர்வாக மதித்தார்
3, 4. (அ) கோலியாத்தை எதிர்த்துநிற்க தாவீதை எது தூண்டியது? (ஆ) கடவுளுடைய பெயரை தாவீது எப்படிக் கருதினார்?
3 பெலிஸ்த மாவீரனான கோலியாத்தை தாவீது நேருக்குநேர் எதிர்த்துநின்ற சமயத்தை நினைத்துப்பாருங்கள். ஒன்பதரை அடி (2.9 மீ) உயரமாயிருந்த, சகல போர்க்கவசங்களையும் தரித்திருந்த ஒரு ராட்சதனை எதிர்த்துநிற்க இளம் தாவீதை எது தூண்டியது? (1 சா. 17:4) அவருடைய தைரியமா? கடவுள்மேல் இருந்த விசுவாசமா? இவை இரண்டுமே அவருடைய வீரதீர செயலுக்குக் காரணங்களாக இருந்தாலும், யெகோவாவுக்கும் அவருடைய மாபெயருக்கும் அவர் காட்டிய ஆழ்ந்த மரியாதையே அந்த ராட்சதனை எதிர்த்துநிற்க அவரைத் தூண்டியது. எனவேதான் தாவீது, ‘ஜீவனுள்ள தேவனுடைய சேனைகளை நிந்திக்கிறதற்கு விருத்தசேதனம் இல்லாத இந்த பெலிஸ்தன் எம்மாத்திரம்’? என்று கோபத்துடன் கேட்டார்.—1 சா. 17:26.
4 கோலியாத்தைப் பார்த்து, ‘நீ பட்டயத்தோடும், ஈட்டியோடும், கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய்; நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய யெகோவாவின் நாமத்திலே உன்னிடத்தில் வருகிறேன்’ என்றார். (1 சா. 17:45) உண்மைக் கடவுளைச் சார்ந்திருந்து, ஒரேவொரு கவண் கல்லினால் அந்த ராட்சதனை வீழ்த்தினார். இந்தச் சம்பவத்தின்போது மட்டுமல்ல, தன் வாழ்நாள் முழுவதிலுமே யெகோவாமீது நம்பிக்கை வைத்தார், அவருடைய மாபெயரை மிக உயர்வாக மதித்தார். ‘யெகோவாவுடைய பரிசுத்த பெயரைக் குறித்து மேன்மை பாராட்டுங்கள்’ என்று சக இஸ்ரவேலரையும் அவர் உற்சாகப்படுத்தினார்.—1 நாளாகமம் 16:8-10-ஐ வாசியுங்கள்.
5. கடவுளை கோலியாத் நிந்தித்ததற்கு ஒப்பான என்ன சூழ்நிலையை நீங்கள் எதிர்ப்படலாம்?
5 யெகோவா உங்கள் கடவுளாக இருக்கிறார் என்பதில் பெருமைப்படுகிறீர்களா? (எரே. 9:24) அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், சக பணியாளர்கள், பள்ளித் தோழர்கள், உறவினர்கள் ஆகியோர் யெகோவாவின் பெயரை நிந்தித்து, அவருடைய சாட்சிகளைக் கேலி கிண்டல் செய்யும்போது நீங்கள் என்ன செய்கிறீர்கள்? மற்றவர்கள் யெகோவாவின் பெயரைப் பழித்துப் பேசும்போது, அவருடைய உதவி கிடைக்குமென்ற நம்பிக்கையோடு அவரை ஆதரித்துப் பேசுகிறீர்களா? “மவுனமாயிருக்க ஒரு காலமுண்டு” என்றாலும், யெகோவாவின் சாட்சியாகவும் இயேசுவின் சீடராகவும் இருப்பதைக் குறித்து நாம் வெட்கப்படக் கூடாது. (பிர. 3:1, 7; மாற். 8:38) நற்செய்திக்குச் செவிசாய்க்காதவர்களிடம் நாம் சாதுரியமாகவும் மரியாதையாகவும் நடந்துகொள்ள வேண்டுமே தவிர, கோலியாத்தின் நிந்தனையைக் கேட்டு ‘கலங்கி மிகவும் பயப்பட்ட’ இஸ்ரவேலரைப் போல் நடந்துகொள்ளக் கூடாது. (1 சா. 17:11) யெகோவாவின் பெயரைப் பரிசுத்தப்படுத்துவதில் உறுதியோடு செயல்பட வேண்டும். யெகோவா எப்படிப்பட்ட கடவுள் என்பதை அறிந்துகொள்ள மக்களுக்கு உதவ நாம் விரும்புகிறோம். அதனால்தான், அவரிடம் நெருங்கி வருவது எவ்வளவு முக்கியம் என்பதை அவருடைய வார்த்தையின் மூலம் அவர்களுக்குப் புரிய வைக்க முயற்சி செய்கிறோம்.—யாக். 4:8.
6. கோலியாத்தை எதிர்த்துநின்ற சமயத்தில் தாவீது எதற்காகத் துடித்தார், நாம் என்ன செய்ய விரும்புகிறோம்?
6 கோலியாத்தை தாவீது எதிர்த்துநின்ற சம்பவம் நமக்கு மற்றொரு முக்கியமான பாடத்தைக் கற்றுத்தருகிறது. படைகள் அணிவகுத்து நின்ற இடத்திற்கு ஓடி வந்த தாவீது, “இந்தப் பெலிஸ்தனைக் கொன்று இஸ்ரவேலுக்கு நேரிட்ட நிந்தையை நீக்குகிறவனுக்கு என்ன செய்யப்படும்” என்று கேட்டார். அதற்கு இஸ்ரவேலர், “இவனைக் கொல்லுகிறவன் எவனோ, அவனை ராஜா மிகவும் ஐசுவரியவானாக்கி, அவனுக்குத் தம்முடைய குமாரத்தியைத் தந்து, அவன் தகப்பன் வீட்டாருக்கு இஸ்ரவேலிலே சர்வமானியம் கொடுப்பார்” என்று முன்சொன்ன வார்த்தைகளையே திரும்பச் சொன்னார்கள். (1 சா. 17:25-27) தாவீதோ, பொன்னையும் பொருளையும் பரிசாகப் பெற துடிக்கவில்லை. உண்மைக் கடவுளாகிய யெகோவாவை மகிமைப்படுத்தவே துடித்தார். (1 சாமுவேல் 17:46, 47-ஐ வாசியுங்கள்.) நாம் எதற்காகத் துடிக்கிறோம்? இந்த உலகில் பேரும்புகழும் சம்பாதிக்கவா? சொத்துபத்துகளைக் குவிக்கவா? உண்மையில் நாம் தாவீதைப் போலவே கடவுள்மேல் நம்பிக்கை வைத்து அவருடைய பெயரை உயர்த்த விரும்புகிறோம். அவர் இவ்வாறு பாடினார்: ‘என்னோடே கூட யெகோவாவை மகிமைப்படுத்துங்கள்; நாம் ஒருமித்து அவர் நாமத்தை உயர்த்துவோமாக.’ (சங். 34:3) எனவே, நம்முடைய பெயருக்கு அல்ல, அவருடைய பெயருக்கே முக்கியத்துவம் கொடுப்போமாக.—மத். 6:9.
7. எதிர்ப்பின் மத்தியிலும் ஊழியம் செய்வதற்குத் தேவைப்படுகிற உறுதியான விசுவாசத்தை நாம் எப்படி வளர்த்துக்கொள்ளலாம்?
7 கோலியாத்தைத் தைரியமாக எதிர்த்துநிற்க இளம் தாவீதுக்கு யெகோவாமேல் முழு நம்பிக்கையும் உறுதியான விசுவாசமும் தேவைப்பட்டது. மேய்ப்பனான அவர் தன் அன்றாட வேலையில் கடவுளைச் சார்ந்திருந்தார், இதன் மூலம் தன் விசுவாசத்தை வலுவாக்கிக்கொண்டார். (1 சா. 17:34-37) ஊழியத்தைத் தொடர்ந்து செய்வதற்கு, முக்கியமாக எதிர்ப்பின் மத்தியில் செய்வதற்கு, நமக்கும் உறுதியான விசுவாசம் தேவைப்படுகிறது. நம்முடைய அன்றாட வாழ்க்கையில் கடவுளைச் சார்ந்திருந்தால் அத்தகைய விசுவாசத்தை வளர்த்துக்கொள்ளலாம். உதாரணத்திற்கு, நாம் பயணம் செய்யும்போது அருகில் அமர்ந்திருப்பவர்களிடம் சாட்சி கொடுக்கலாம். அதோடு, வீட்டுக்கு வீடு ஊழியம் செய்யும்போது தெருவில் சந்திக்கும் ஆட்களிடமும் சாட்சி கொடுக்கலாம்.—அப். 20:20, 21.
தாவீது யெகோவாவின் சித்தத்திற்கே முக்கியத்துவம் தந்தார்
8, 9. யெகோவாவின் சித்தத்திற்கு தாவீது முக்கியத்துவம் தந்தார் என்பதை அவருடைய செயல் எப்படிக் காட்டியது?
8 தாவீது யெகோவாமேல் நம்பிக்கையாய் இருந்ததைக் காட்டுகிற மற்றொரு உதாரணம், இஸ்ரவேலின் முதல் ராஜாவாகிய சவுலைப் பற்றிய அவருடைய கண்ணோட்டம் ஆகும். பொறாமையால் பொங்கிய சவுல், மூன்று முறை ஈட்டியால் தாவீதைக் குத்திப்போடப் பார்த்தார். ஒவ்வொரு முறையும் தாவீது விலகி உயிர்தப்பினார், சவுலைத் திருப்பித் தாக்கவில்லை. இறுதியில், அவரிடமிருந்து தப்பியோடினார். (1 சா. 18:7-11; 19:10) பின்பு சவுல், இஸ்ரவேலரில் மூவாயிரம் பேரைக் கூட்டிக்கொண்டு, தாவீதைப் பிடிப்பதற்காக வனாந்தரத்திற்குப் போனார். (1 சா. 24:2) கடைசியில், தாவீதும் அவர் ஆட்களும் ஒளிந்திருந்த குகைக்குள்ளே எதேச்சையாக நுழைந்தார். தாவீது தன் உயிரை வேட்டையாட வந்த சவுலைக் கொல்ல அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தியிருக்கலாம். சவுலை நீக்கிவிட்டு, தன்னை ராஜாவாக்குவது கடவுளுடைய சித்தமென்று அவருக்குத் தெரிந்திருந்ததே! (1 சா. 16:1, 13) ஒருவேளை அவர் தன்னோடிருந்த ஆட்களின் பேச்சைக் கேட்டிருந்தால், சவுலை அப்போதே தீர்த்துக்கட்டியிருப்பார். ஆனால், ‘யெகோவா அபிஷேகம் பண்ணின என் ஆண்டவன்மேல் என் கையைப் போடும்படியான இப்படிப்பட்ட காரியத்தை நான் செய்யாதபடிக்கு, யெகோவா என்னைக் காப்பாராக; அவர் யெகோவாவால் அபிஷேகம் பண்ணப்பட்டவர்’ என்றே அவர் சொன்னார். (1 சாமுவேல் 24:4-7-ஐ வாசியுங்கள்.) சவுல் அந்தச் சமயத்திலும் கடவுளால் அபிஷேகம் செய்யப்பட்டவராக, அதாவது கடவுளால் நியமிக்கப்பட்ட ராஜாவாக, இருந்தார். ராஜாவாக இருக்க அவரைக் கடவுள் இன்னும் அனுமதித்திருந்ததால், அவருடைய சிங்காசனத்தைத் தட்டிப்பறிக்க தாவீது விரும்பவில்லை. சவுலுடைய சால்வையின் நுனிப்பகுதியை வெட்டியெடுத்ததன் மூலம் அவருக்குத் தீங்கு செய்யும் எண்ணம் தனக்குத் துளிகூட இல்லை என்பதை அவர் காட்டினார்.—1 சா. 24:11.
9 தாவீது கடைசி முறை சவுலைப் பார்த்த சந்தர்ப்பத்திலும், கடவுளால் நியமிக்கப்பட்ட அவரிடம் மரியாதையோடு நடந்துகொண்டார். அந்தச் சமயத்தில், சவுல் முகாமிட்டிருந்த இடத்திற்கு தாவீதும் அபிசாயும் வந்தபோது, சவுல் தூங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்தார்கள். சவுலை தாவீதின் கையில் கடவுள் கொடுத்துவிட்டார் என்ற முடிவுக்கு வந்த அபிசாய், ஈட்டியினால் சவுலைக் குத்திப்போட அனுமதி கேட்டார். தாவீதோ மறுத்துவிட்டார். (1 சா. 26:8-11) ஏனென்றால், அவர் எப்போதும் கடவுளின் வழிநடத்துதலையே நாடினார். சவுலைக் கொல்ல அபிசாய் தூண்டியபோதிலும், கடவுளுடைய சித்தத்தின்படி நடக்கவே உறுதியாக இருந்தார்.
10. தனிப்பட்டவர்களாக நாம் என்ன சூழ்நிலையை எதிர்ப்படலாம், அச்சமயங்களில் உறுதியாய் இருக்க எது நமக்கு உதவும்?
10 நாமும்கூட இதுபோன்ற ஒரு சூழ்நிலையை எதிர்ப்படலாம். நம் நண்பர்கள் கடவுளுடைய சித்தத்தைச் செய்ய நம்மை ஊக்கப்படுத்துவதற்குப் பதிலாக, தங்களுடைய கண்ணோட்டத்தில் செயல்படும்படி நம்மை வற்புறுத்தலாம். அல்லது, கடவுளுடைய சித்தத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் சொந்த முடிவெடுக்கும்படி அபிசாயைப் போல் நம்மைத் தூண்டலாம். அச்சமயங்களில் உறுதியாய் இருக்க, கடவுளுடைய கண்ணோட்டத்தை நாம் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதோடு, அவருடைய வழிகளில் நடக்க தீர்மானமாய் இருக்க வேண்டும்.
11. தாவீதைப் போலவே நீங்கள் எவ்வாறு கடவுளுடைய சித்தத்திற்கு முக்கியத்துவம் தரலாம்?
11 யெகோவாவிடம் தாவீது, “உமக்குப் பிரியமானதை [அதாவது, உம் சித்தத்தை] செய்ய எனக்குப் போதித்தருளும்” என்று ஜெபித்தார் (சங்கீதம் 143:5, 8, 10-ஐ வாசியுங்கள்.) தன் சொந்த எண்ணங்களுக்கோ மற்றவர்களுடைய வற்புறுத்தலுக்கோ இடங்கொடுக்காமல், யெகோவாவிடமிருந்து கற்றுக்கொள்வதில்தான் தாவீது ஆர்வம் காட்டினார். ஆம், ‘யெகோவாவின் செய்கைகளையெல்லாம் தியானித்தார்; அவருடைய கரத்தின் கிரியைகளையெல்லாம் யோசித்தார்.’ நாமும்கூட, வேதவசனங்களை ஆழ்ந்து ஆராய்வதன் மூலமும், மனிதர்களை யெகோவா வழிநடத்திய விதத்தைப் பற்றித் தியானிப்பதன் மூலமும் அவருடைய சித்தம் என்னவென்பதைப் பகுத்துணரலாம்.
திருச்சட்ட நியமங்களை நன்கு புரிந்திருந்தார்
12, 13. தன்னுடைய ஆட்கள் கொண்டுவந்த தண்ணீரை தாவீது ஏன் தரையிலே ஊற்றினார்?
12 தாவீது திருச்சட்ட நியமங்களை நன்கு புரிந்திருந்தார், அவற்றின்படி வாழவும் விரும்பினார்; இவ்விஷயங்களிலும் தாவீது நமக்கு முன்மாதிரி! உதாரணத்திற்கு, ‘பெத்லகேமிலிருந்த கிணற்றின் தண்ணீரைக் குடிப்பதற்கான’ தன் ஆசையை அவர் ஒருநாள் வெளிப்படுத்தினார். அச்சமயத்தில் பெத்லகேம் பெலிஸ்தரின் கைவசம் இருந்தது. என்றபோதிலும், தாவீதின் ஆட்களில் மூன்று பேர் துணிந்துபோய் அந்தக் கிணற்றிலிருந்து தண்ணீர் கொண்டுவந்தார்கள். ஆனால், ‘தாவீது அதைக் குடிக்க மனதில்லாமல் அதை யெகோவாவுக்கென்று ஊற்றிப்போட்டார்.’ ஏன்? காரணத்தை அவரே சொன்னார்: ‘நான் இதைச் செய்யாதபடிக்கு, என் தேவன் என்னைக் காத்துக்கொள்ளக்கடவர்; தங்கள் பிராணனை எண்ணாமல் போய் அதைக் கொண்டுவந்த இந்த மனுஷரின் இரத்தத்தைக் குடிப்பேனோ . . . அதைக் குடிக்க மாட்டேன்.’—1 நா. 11:15-19.
13 இரத்தத்தைத் தரையிலே யெகோவாவுக்கென்று ஊற்றிவிட வேண்டும், அதைச் சாப்பிடக் கூடாது என்று திருச்சட்டம் சொன்னதை தாவீது அறிந்திருந்தார். அதற்கான காரணத்தையும் அறிந்திருந்தார். ஆம், “மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது” என்பதை அவர் அறிந்திருந்தார். ஆனால் அது தண்ணீர்தானே, இரத்தம் இல்லையே. பிறகு ஏன் அதைக் குடிக்க மறுத்தார்? அந்தச் சட்டத்தில் பொதிந்துள்ள நியமத்தை அவர் நன்கு புரிந்திருந்தார். அந்த மூன்று ஆட்களுடைய விலைமதிப்பில்லா இரத்தத்திற்குச் சமமாக அந்தத் தண்ணீரை அவர் பார்த்தார். அதனால்தான், அதைக் குடிப்பது பற்றி அவரால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. அதைத் தரையிலே ஊற்றிப்போட்டார்.—லேவி. 17:11; உபா. 12:23, 24.
14. யெகோவாவுக்குப் பிரியமான தீர்மானங்களை எடுக்க தாவீதுக்கு எது உதவியது?
14 கடவுளுடைய சட்டங்களிலேயே மூழ்கியிருக்க தாவீது முழுமுயற்சி எடுத்தார். “என் தேவனே, உமக்குப் பிரியமானதை [அதாவது, உம் சித்தத்தை] செய்ய விரும்புகிறேன்; உமது நியாயப்பிரமாணம் என் உள்ளத்திற்குள் இருக்கிறது” என்று அவர் பாடினார். (சங். 40:8) தாவீது யெகோவாவுடைய சட்டங்களைப் படித்து அவற்றை ஆழ்ந்து தியானித்தார். அவருடைய கட்டளைகள் ஞானமானவை என்று முழுமையாக நம்பினார். அதனால்தான், திருச்சட்டத்தை மட்டுமல்ல அதில் பொதிந்துள்ள நியமங்களையும் கடைப்பிடிக்க அவர் ஆவலாக இருந்தார். நாமும், பைபிளைப் படிக்கும்போது அதிலுள்ள விஷயங்களைத் தியானித்து நம் இருதயத்தில் பதித்துக்கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால், யெகோவாவுக்குப் பிரியமான தீர்மானங்களை நம்மால் எடுக்க முடியும்.
15. சாலொமோன் எவ்வாறு திருச்சட்டத்தை மதித்து நடக்கத் தவறினார்?
15 தாவீதின் மகனான சாலொமோன் யெகோவாவின் தயவைப் பெருமளவு பெற்றிருந்தார். என்றபோதிலும், காலப்போக்கில் திருச்சட்டத்தை மதித்து நடக்கத் தவறினார். ஓர் இஸ்ரவேல் ராஜா “பல மனைவியரைக் கொள்ளலாகாது” என்ற யெகோவாவின் கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் போனார். (உபா. 17:17, பொது மொழிபெயர்ப்பு) பல புறதேசப் பெண்களைத் திருமணம் செய்தார். வயதான காலத்தில், ‘அவருடைய மனைவிகள் அவர் இருதயத்தை அந்நிய தேவர்களைப் பின்பற்றும்படி சாயப்பண்ணினார்கள்.’ சாலொமோன் தன் செயல்களுக்கு என்ன சாக்குப்போக்குகளைச் சொல்லியிருந்தாலும், ‘அவர் தன் தகப்பனாகிய தாவீதைப் போல யெகோவாவைப் பூரணமாய்ப் பின்பற்றாமல், யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதையே செய்தார்.’ (1 இரா. 11:1-6) ஆகையால், நாம் கடவுளுடைய சட்டங்களையும் நியமங்களையும் கடைப்பிடிப்பது எவ்வளவு முக்கியம்! அதுவும், திருமண விஷயத்தில் எவ்வளவு முக்கியம்!
16. நாம் 1 கொரிந்தியர் 7:39-லுள்ள நியமத்தைப் பகுத்துணர்ந்தால் என்ன செய்ய மாட்டோம்?
16 சத்தியத்தில் இல்லாதவர்கள் ஒருவேளை நமக்குக் காதல் வலை வீசினால், தாவீதின் மனநிலையைக் காட்டுவோமா அல்லது சாலொமோனின் மனநிலையைக் காட்டுவோமா? உண்மைக் கிறிஸ்தவர்கள், “எஜமானரைப் பின்பற்றுகிற ஒருவரையே திருமணம் செய்துகொள்ள வேண்டும்” என்று பைபிள் சொல்கிறது. (1 கொ. 7:39) ஆம், ஒரு கிறிஸ்தவர் சக கிறிஸ்தவரையே திருமணம் செய்ய வேண்டும். இந்தச் சட்டத்தில் புதைந்துள்ள நியமத்தை நாம் பகுத்துணர்ந்தால், சத்தியத்தில் இல்லாத ஒருவரைக் கரம்பிடிக்கவும் மாட்டோம், அவர் விரிக்கிற காதல் வலையில் விழவும் மாட்டோம்; சொல்லப்போனால், அவர் நம்மை நெருங்குவதற்குக்கூட அனுமதிக்க மாட்டோம்.
17. ஆபாசம் என்னும் கண்ணியில் சிக்கிக்கொள்ளாதபடி எது நம்மைப் பாதுகாக்கும்?
17 கடவுளுடைய வழிநடத்துதலை ஊக்கமாக நாடிய தாவீதின் உதாரணம், ஆபாசத்தைப் பார்ப்பதற்கான ஆசையைத் தவிர்க்க நமக்கு எப்படி உதவுமென்றும் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள். பின்வரும் பைபிள் வசனங்களைப் படியுங்கள்... அவற்றிலுள்ள நியமங்களைப் பற்றி யோசியுங்கள்... ஆபாசத்தைப் பார்க்கும் விஷயத்தில் யெகோவாவின் கண்ணோட்டம் என்னவென்று கண்டறிய முயற்சி செய்யுங்கள். (சங்கீதம் 119:37-ஐயும், மத்தேயு 5:28, 29-ஐயும், கொலோசெயர் 3:5-ஐயும் வாசியுங்கள்.) ஆம், அவருடைய உயர்ந்த நெறிமுறைகளைக் குறித்து தியானிப்பது ஆபாசம் என்னும் கண்ணியில் சிக்கிக்கொள்ளாதபடி நம்மைப் பாதுகாக்கும்.
கடவுளுடைய கண்ணோட்டத்தை எப்போதும் மனதில் வையுங்கள்
18, 19. (அ) தாவீது அபூரணராக இருந்தபோதிலும், கடவுளுடைய தயவைப் பெற என்ன செய்தார்? (ஆ) உங்களுடைய தீர்மானம் என்ன?
18 தாவீது பல வழிகளில் முன்மாதிரியாகத் திகழ்ந்தாலும், அநேக முறை பெரிய பாவங்களைச் செய்தார். (2 சா. 11:2-4, 14, 15, 22-27; 1 நா. 21:1, 7) என்றாலும், தன் பாவங்களிலிருந்து மனந்திரும்பினார். கடவுளுக்குமுன் ‘உத்தமராய்’ நடந்தார். (1 இரா. 9:4) அவர் உத்தமராய் நடந்தாரென ஏன் சொல்லலாம்? ஏனென்றால், கடவுளுடைய சித்தத்தின்படி வாழவே அவர் முயற்சி செய்தார்.
19 நாம் அபூரணர்களாக இருந்தாலும், யெகோவாவின் தயவைப் பெற முடியும். இதை மனதில் வைத்து, பைபிளை ஊக்கமாய்ப் படிப்போமாக... அதிலுள்ள விஷயங்களை ஆழ்ந்து சிந்தித்து இருதயத்தில் பதிய வைப்போமாக... அவற்றைப் பின்பற்றத் தீர்மானமாய் இருப்போமாக. இப்படியெல்லாம் செய்யும்போது தாவீதைப் போலவே, “உமக்குப் பிரியமானதை [அதாவது, உம் சித்தத்தை] செய்ய எனக்குப் போதித்தருளும்” என்று மனத்தாழ்மையாய் வேண்டிக்கொள்வோம்.